06 December 2009

நிஜமான கதை - துப்பறியலாம் வாங்க

1981 வருடம், ப்ளோரிடா மாகாணம். ஜான், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு, தன் காரை நெருங்கும் போது,

”சார்.. நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகணும், லிப்ட் தருவீங்களா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். 25 வயது மதிக்கத்தக்க கருப்பு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
”நான் அவ்வளவு தூரம் போக மாட்டேன். ஆனால் வழியிலே உங்களை இறக்கி விடுகிறேன்” என்றார் ஜான்.

“சரி சார். தேங்க்ஸ்”என்றான் அவன்.

3 கிலோ மீட்டர் வந்தவுடன், ஜான், அவனை அங்கே இறங்கச் சொன்னார். தன் வீடு வரை வெளியாள் ஒருவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்ற பாதுகாப்புணர்ச்சியினால், மெயின் ரோட்டிலேயே வண்டியை நிறுத்தினார்.

அது வரை அமைதியாக வந்தவன் ஜானுடன் சண்டை போட ஆரம்பித்தான். சண்டை வலுக்கவே, வண்டியிலிருந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து ஜானை தாக்க ஆரம்பித்தான்.அவனிடமிருந்து தப்பிக்க வண்டியை விட்டு கீழே இறங்கிய ஜான்,  ஓட எத்தனிக்கும் பொழுது, அவன் எட்டிப் பிடித்தான். இனி தப்பிக்க முடியாது என்ற நிலையில், ஜான், அவனை வண்டியில் ஏற சொன்னார். அவன் ஏறுவதற்கு முன், வண்டியை ஸ்டார்ட் செய்து, மிக வேகமாக ஓட்டினார். அவன் பார்வையிலிருந்து மறைந்த பிறகும் பயம் குறையவில்லை. அந்த இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலிருக்கும் தன் வீட்டுக்கு உடனே சென்றால், அவன் வீட்டைக் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில், 20 நிமிடம் வண்டியை வெவ்வேறு திசையில் செலுத்திவிட்டு பிறகு வீட்டை நோக்கி வந்தார்.

வீட்டுக்கு சற்று தொலைவில் வரும் பொழுது, வீட்டு ஜன்னலருகில் ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவன் வேறு யாருமில்லை, சற்று முன் ஜானைத் தாக்கியவன். எப்படி அவன் வீட்டைக் கண்டுபிடித்தான் என்று ஜானுக்கு புரியவில்லை. உடனே போலீசுக்கு போன் செய்தார்.


போலீஸ் வந்து பார்க்கும் போது, வீட்டின் அருகில் யாருமில்லை. வீட்டுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது, ஜானின் 70 வயதான அம்மா,மேரி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிந்தது.

போஸ்ட்மார்ட அறிக்கையில், மேரி, 28 முறை ஸ்குரூ டிரைவர் போன்ற கூர்மையான ஒரு பொருளினால் தாக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையில், ஜான் சொன்னதை போலீசார் நம்ப மறுத்துவிட்டனர். 1 கி.மீக்கு முன் இறக்கிவிடப்பட்டவன், எப்படி மிகச்சரியாக ஜான் வீட்டைக் கண்டுபிடித்திருக்க முடியும் ?. ஜான் உண்மையறியும் சோதனைக்கு (lie detector test) ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் விசாரணையில், ஜானுக்கு பண நெருக்கடி இருப்பதையும், மேரி இறப்பதற்கு முன், அவர் பேரில் இன்ஸீரன்ஸ் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். இது ஜானின் மேல் சந்தேகத்தை அதிகரித்தது.


கொலை செய்தவன், மேரியின் வயதைக் கூட பொருட்படுத்தாமல், மிக அதிகமான வன்முறையைக் கையாண்டிருக்கிறான். இதன் மூலம், இது முன் விரோதத்தினால் நடந்த கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர். போலீசாருக்கு கிடைத்த இரண்டு தடயங்களில் ஒன்று, மாடிப் படிக்கட்டின் கைப்பிடியில் இருந்த, கொலையாளியின் ரத்தம் படிந்த, உள்ளங்கை பதிவு. இன்னொன்று, ஸ்விட்ச் போர்டில் இருந்த கொலையாளியின் ரத்தக் கறை.



ஜானின் கைரேகை ஒத்துப் போகவில்லை.ஸ்விட்ச் போர்டில் இருந்தது, ஜானின் ரத்தமில்லை. ஜான், ஆள் வைத்துக் கொலை செய்திருப்பானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஒரு வேளை ஜான் சொன்ன கதை உண்மையா ?. ஜான் சொன்ன அடையாளங்களை வைத்து கொலையாளியின் உருவம் வரையப்பட்டது. சில குற்றவாளிகளின் புகைப்படங்களை காட்டிய போது, ஜான் ஒருவனை அடையாளம் காட்டினான்.சூப்பர் மார்க்கெட்டில் அந்த நேரத்திலிருந்தவர்களிடம் விசாரித்த போது, அன்று ஒருவன் லிப்ட் கேட்டது உண்மைதான் என்றும் மேலும், அவர்கள் ஜான் அடையாளம் காட்டிய ஒருவனின் புகைப்படத்தைதான் அவர்களும் காட்டினார்கள். அவனை விசாரணை செய்த போது, கொலை நடந்த நேரத்தில் அவன் அந்த ஊரிலேயே இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
 
கொலை செய்தவன் யார் ?. அவன் எப்படி ஜானின் வீட்டைக் கண்டுபிடித்தான் ?.
 
10 வருடங்களுக்குப் பிறகு ....
 
1981 வருடம் டி.என்.ஏ டெஸ்டிங் வசதியில்லை. 1984-1987ஆம் வருடங்களில் டி.என்.ஏ பரிசோதனையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, குற்றவாளிகளை கண்டறிவதற்கு இந்த பரிசோதனையை போலீசார் பயன்படுத்த தொடங்கினர். 1990ஆம் வருடம், அமெரிக்க அரசாங்கம் CODIS (COmbined DNA Index System) எனப்படுகிற, குற்றவாளிகளின் டி.என்.ஏ விபரங்களை சேமித்துவைக்கும் திட்டத்தை தொடங்கினர்.



மேரியின் கொலை வழக்கில், ஸ்விட்ச் போர்டில் எடுக்கப்பட்ட குற்றவாளியின் ரத்தத்திலிருந்து டி.என்.ஏவை எடுத்து, அதை CODIS உதவியுடன், ஏதாவது குற்றவாளியின் டி.என்.ஏவுடன் பொருந்துகிறதா எனப் பார்த்தார்கள். 2 நாட்களுக்கு பிறகு, பீட்டர் என்ற ஒருவனின் டி.என்.ஏவுடன் பொருந்தியது. விசாரணையில், 10 வருடங்களுக்கு முன் பீட்டர், ஜான் வசித்த அதே ஊரில் இருந்ததையும் மேரியைக் கொன்றதையும் ஒத்துக்கொண்டான்.

நடந்தது என்ன ?

பீட்டருக்கு போதை பழக்கம் இருந்தது. அன்று ஜானிடம் லிப்ட் கேட்டு, பாதி வழியில் ஜானை தாக்கி, பிறகு ஜான், அவனை விட்டு சென்றவுடன், போதை மயக்கத்தில், அன்று இரவு எதாவது பூட்டியிருக்கும் வீட்டினுள் நுழைந்து ஓய்வு எடுப்பதற்காக வீடு எதாவது இருக்கிறதா என்று தேடியிருக்கிறான். சில வீடுகளில் விளக்கு வெளிச்சம் இருந்ததால், வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்த மேரியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். யாரும் இல்லை என நினைத்தவன், சத்தம் கேட்டு எழுந்த மேரியை பார்த்து பயந்து போய், ஜானின் வண்டியிலிருந்து எடுத்த ஸ்க்ரூ டிரைவரால் மேரியை தாக்கி கொன்று விட்டு தப்பியிருக்கிறான். ஜான், பீட்டரை பார்த்த உடன் பயந்து போய் போலீசைக் கூப்பிடாமல், வீட்டிற்கு சென்றிருந்தால், மேரியைக் காப்பாற்றியிருக்கலாம். மேலும் விசாரணையில், ஜானுக்கும், பீட்டருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முடிவானது.

யாரும் நம்ப முடியாத அளவுக்கு தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தை, CODIS என்கிற மென்பொருளின் உதவியினால் போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்.

13 பின்னூட்டங்கள்:

Karthick Chidambaram said...

நண்பரே -

உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/

Unknown said...

I have seen many cases using this CODIS in CSI/Law and order/NCIS shows. Nice

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்லாயிருக்கு

பின்னோக்கி said...

நன்றி - வானம்பாடிகள்
நன்றி - இமயவரம்பன் - உங்களின் கதையை படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.
நன்றி - முகிலன். நீங்கள் மெடிக்கல் டிடக்டிவ்ஸ் பார்த்திருந்தால், இந்த வழக்கை பார்த்திருக்கலாம்.
ஞானசேகரன் - நன்றி தங்களின் வருகைக்கு.

Chitra said...

interesting......எழுத்து நடையில், படிப்பவரின் ஆர்வம் குறையாமல் கொண்டு போயி இருக்கீங்க.

அமுதா said...

சுவாரசியம்

Romeoboy said...

இந்த மாதிரியான சிஸ்டம் நம்ம ஊருல இருந்த நல்ல இருக்கும் தல .

Unknown said...

வேட்டையாடு விளையாடு...

சென்ஷி said...

suuppeer...:)

கமலேஷ் said...

உங்களுடைய எழுத்து நடை மிகவும்...அருமை...
பதிவு அழகு வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

எங்க தல பார்த்திங்க!

என்னை மாதிரியே டிஸ்கவரி தானா!?

பின்னோக்கி said...

வால்பையன் - டிஸ்கவரி சேனல் தான் :)
நன்றி - கமலேஷ்
நன்றி - சென்ஷி தலைவரே (ஜட்ஜ் இல்லயா. அது தான் இவ்வளவு மரியாதை :)
நன்றி - பேநா மூடி
நன்றி - ரோமியோ பாய்
நன்றி - அமுதா
நன்றி - சித்ரா

அன்புடன் மணிகண்டன் said...

நம்ம இன்னும் முன்னேறனும் போலயே?!?!
நெறைய கொலை, கொள்ளை எல்லாம் இன்னும் கண்டே புடிக்காம இல்ல கெடக்கு?!?!