2009 ஐ நியாபகப்படுத்தி பார்ப்பது மிகக் கடினமான செயலாகப் படுகிறது. கணினித்துறையில் வேலை பார்ப்பவர்களிடம் பெரும்பாலும் என்ன தேதி என்று கேட்டால், தவறாகவே பதில் வரும். வேலை என்ற சக்கரம் பெரிய வட்டமாக சுழல, கடந்து போன நாட்கள் மறுபடியும் மாற்றமில்லாமல் வந்து, நாட்களையும் தேதிகளையும் பெரிய மாற்றங்கள் இல்லாமல் மறக்க அடிக்கச் செய்கிறது.
- வழக்கம் போல ஆண்டு ஆரம்பம் புத்தகக்கண்காட்சியில் தொடங்கியது. இன்னமும் போன புத்தகக்கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிப்பதற்குள் அடுத்தது வந்துவிட்டது. மொகரம் பண்டிகை போல, இரண்டு புத்தகக்கண் காட்சிகள்.
- என் மகனை புதிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன். புதிய சீருடை என்ற சந்தோஷத்துடன் அடம்பிடிக்காமல் பள்ளிக்குச் சென்றான். புதிய வார்த்தைகள், பாடங்கள் மற்றும் நண்பர்கள் (பல நண்பிகள்) அவனுக்கு.
- ஜீலை மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடும் போது, தலையில் இருந்த வெள்ளை முடிகளில் சில, கன்னத்திற்க்கும் வந்திருப்பது தெரிந்தது.
- என் மகனுக்கு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்று தெரியாது. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி, பள்ளிக்கூடத்தில், சுதந்திரப் போராட்டம் பற்றி தமிழில் ஒரு கட்டுரை பிரிண்ட் அவுட் எடுத்து வரச் சொன்னார்கள். விக்கிப்பீடியாவில் தேடிய போது ஆங்கிலத்தில் தகவல்கள் கிடைத்தது. வேறு வழியில்லாமல் தமிழில் மொழி பெயர்த்து, NHM Writer மென் பொருளை நிறுவி, தட்டுத்தடுமாறி இரண்டு நாட்களில், இரண்டு பக்கங்கள் அடித்துக் கொடுத்தேன். அப்பொழுது தோன்றியது இந்த ப்ளாக். அதற்குப் பின் நடந்தது சரித்திரம் (???!!!). அது அனைவரும் அறிந்ததே. ஆரம்ப நாட்களில் எழுத நிறைய விஷயங்கள் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளைப் போட்டு, இப்பொழுது எதைப் பற்றி பதிவு எழுத எனத் தெரியாமல், இது போல பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறேன். ”இந்த அளவுக்கு உனக்கு எழுதத் தெரியுமா” என்று பலருக்கு ஆச்சரியம். எனக்கும். டைரி எழுதும் பழக்கமில்லாத எனக்கு ப்ளாக் நல்ல டைரியாக இருக்கிறது.
- 2008 ஆம் ஆண்டு அளவுக்கு இல்லாமல், மழைக் காலங்கள் நிம்மதியாக கழிந்தது.
- உலகளாவிய பொருளாதார நெருக்கடி மனதில் கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
- நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்தேன். பாலகுமாரனின் “இரும்புக் குதிரைகள்”. அகதா கிறிஸ்டியின் சில துப்பறியும் நாவல்கள், லயன், முத்து காமிக்ஸ், ஆங்கிலத்தில் வெளிவந்த லக்கிலூக் காமிக்ஸ் தவிர வேறு எதுவும் இந்த ஆண்டு படிக்கவில்லை.
- டிசம்பர் மாத இறுதியில் என் மாமா (அம்மாவின் தம்பி) மறைந்து போனார். அடுத்த சில நாட்களில், காலை உடைத்துக் கொண்டதால், பார்க்க வேண்டிய “அவதார்” திரைப்படமும், போய்வர விரும்பிய “புத்தகக் கண்காட்சி” யையும் தவற விட்டேன், விடுகிறேன்.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

