07 March 2010

உச்சி முகர்தல்


புரண்டு படுத்து
தூக்கம் தொலைக்கும் இரவுகள்
ஆழ்ந்த உறக்கத்தில்
அருகிலிருக்கும் மகனை
கையிடுக்கில்
அவனை அணைத்து
தலைமுடியும் நெற்றியும்
இணையும் இடத்தில்
என் முகம் புதைத்து
முகர்ந்து பார்க்கையில்
வரும் அவன் வாசம்
சொக்கவைக்கும்

06 March 2010

விஷயம் என்னன்னா !!

முதலில் எனக்கு நடந்த ஒரு கொடுமை.
வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யச் சொல்லி அலுவலகத்தில் நடக்கும் கொடுமை.இந்த கொடுமைகள் கடந்த ஒரு மாதமாக அதிகமாக நடக்கிறது. இது ஒரு காரணம்.


பல முறை அடித்துத் துரத்திய பங்குசந்தை, கடந்த ஒரு வாரமாக இரு கைகள் நீட்டி அழைக்க, அதை தவிர்க்க முடியவில்லை.இது ஒரு காரணம்.


இந்த மாதத்தில் என் மச்சானுக்கு திருமணம். கல்யாணமாகி மச்சான் இருக்கும் அனைத்து ஆண்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், நம் திருமணத்தை விட, மச்சானின் திருமணம் மிக மிக முக்கியமான நிகழ்வு. அதில் சிறிது அலட்சியம் காட்டினால் முன்,பின் மற்றும் பக்க விளைவுகள் பயங்கரமாக இருக்கும். எனவே வார இறுதிகளில் பாண்டிபஜாரில் இருக்கும் அனைத்து கடைகளுக்கும் விஜயம் நடைபெறுகிறது.

பின்னோக்கி எழுதாததால், பதிவுலகம் மிக வேகமாக முன்னேறுவதாக செய்தி வந்தது. அந்த வேகத்தை, பதிவுலகை பின்னோக்கி இழுப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். இதையும் தாண்டி பல லட்சக்கணக்கானவர்களின் அன்பான விசாரிப்புகளும் (??!!!) என்னை எழுதத் தூண்டியது. எழுதலாம் என்று நினைத்த போது தடை, நித்தியானந்தா மூலம் வந்தது. வீடியோ பார்த்த போது சன் டிவி ‘R’ என்ற எழுத்தில் தொடங்கும் நடிகை என்று க்ளூ கொடுத்து, என் துப்பறியும் மூளையைத் தட்டி எழுப்பியது. பல மணி நேர துப்பறிதலுக்குப் பிறகு, ரா* ** என்று கண்டுபிடித்து அடுத்த நாள் அலுவலகத்தில் சொல்ல, அனைவரும் கை கொட்டி சிரித்து என்னை அவமானப் படுத்தினார்கள். நக்கீரன் வெப்சைட்டில் நடிகையின் பெயரை வெளியிட்டு, என் அனுமானம் தவறாகிப் போன, கவலை 3 நாட்களை விழுங்கிவிட்டது.


அப்புறம் விஷயம் என்னன்னா... ம்ம்ம்... வீட்டில் பொரிக்கும் அப்பளம் சைசில் இருக்கும் நிலா, கடந்த சில வாரங்களாக, பொருட்காட்சியில் விற்கும் அப்பளம் சைஸிற்கு தெரிகிறது. இன்னும் சில வாரங்களுக்கு, நிலா, பூமிக்கு மிக அருகில் இருப்பதால், காணத்தவறாதீர்கள்.

The Life Of David Gale (ரொம்ப உருகிட்டேன்), Instinct (இது வேற படங்க), Primer (இதுவரை நான் பார்த்த படங்களில் மிகவும் குழப்பமான படம்), Knowing (எல்லாரும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம்), Up In The Air (போன வருடம் இது நடந்து விடுமோ என்று பயந்ததைப் பற்றிய படம்) படங்களை பார்த்தேன்.