30 June 2010

உங்களுக்கு பதில் தெரியுமா ?

ஒரு சிறிய அறை. ஒரு கம்பெனியில் சேருவதற்காக கடைசி கட்டத் தேர்வில், 8 பேர் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில விதிமுறைகளை விளக்குவதற்கு ஒருவர் அறையினுள் வருகிறார். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

இங்க பாருங்க மக்களே ! உங்களுக்கு முன் ஒரு கொஸ்டியன் பேப்பர் இருக்கு. அதற்கு விடையளிக்க 80 நிமிடங்கள் தரப்படும். 80 நிமிடங்களுக்கு முன், யாராவது இந்த அறையை விட்டு வெளியே போனா, அவங்க அப்படியே வீட்டுக்குப் போய்ட வேண்டியது தான். எந்தக் காரணத்தைக் கொண்டும், கொஸ்டியன் பேப்பரை டேமேஜ் செய்யக் கூடாது. தெரியாம பண்ணிட்டேன். தண்ணிக் கொட்டிடுச்சுன்னு சொன்னாலும், ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எந்தக் காரணம் கொண்டும் என்னோட நீங்க பேச முயற்சி பண்ணக்கூடாது. இந்த ரூம்ல ஒரு காவல்காரன் நிக்கிறான் பாருங்க. அவன் கூடவும் நீங்க பேசக்கூடாது. எதாவது கேள்வியிருக்கா உங்ககிட்ட ?”




இவ்வளவு பேசிய பிறகு, அந்த அறையில் இருந்த யாரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 80 நிமிடத்திற்காக கடிகாரம் தொடங்கப்படுகிறது. ரூல்ஸ் சொன்ன அந்த ஆள், அறையை விட்டு வெளியே போய்விடுகிறான்.

எல்லாரும் அவர்களின் கொஸ்டியன் பேப்பரைப் பார்க்கிறார்கள். அடக் கடவுளே !! ஒன்றுமே இல்லை. வெற்றுத்தாளாக இருக்கிறது. அப்புறம் எப்படி அந்தக் கேள்வியைக் கண்டுபிடிக்கிறார்கள் ? யாராவது விடை கொடுத்தார்களா ?

இப்படி ஒரு டெஸ்ட் வைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? இதனை ஒரு படமாக எடுத்திருக்கிறார்கள்.



படத்தின் பெயர் - EXAM

வெளியான ஆண்டு - 2009.
சுவாரஸ்யமான இந்தப்படம் சரியாக 90 நிமிடங்கள் ஓடுகிறது. ஒரே ஒருவர், என்ன கேள்வி என்று கண்டுபிடிக்கிறார். அதுவும் 79 நிமிடங்கள் 50 வது நொடியில். அந்தக் கேள்வியைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்கிறார்கள் ? எத்தனை பேர் அறையை விட்டு வெளியே போகிறார்கள் ?. இவ்வளவு கடினமான ஒரு தேர்வு எதற்காக ? அந்தக் கம்பெனி என்ன தயாரிக்கிறது?.

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது படம். ஒரே அறைக்குள் எடுக்கப்பட்ட மிகவும் சுவாரஸியமான இந்தப் படத்தை நீங்களும் பாருங்கள்.

27 June 2010

மாறும் ரசனைகள் - தொலைநோக்கி

*--*---*----*
இது ஒரு தொடரில்லாத தொடர் பதிவு. இதன் மற்ற பாகங்களை இங்கு படிக்கலாம்.
*--*---*----*

கி.பி 1013ஆம் வருடம், ஒரு நாள் நள்ளிரவில், ராஜ ராஜ சோழன் உப்பரிகையிலிருந்து, வானத்தைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்கள் வித விதமான வடிவங்களில், பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவன் பார்த்த வானம் இதோ !!


ஆச்சரியமான விஷயம், ராஜ ராஜ சோழன் பார்த்த அதே நட்சத்திரக்கூட்டத்தை, நாமும் இன்று இரவு பார்க்கலாம். மனிதன் வாழ்வில் 1000 ஆண்டுகள் என்பது கற்பனை செய்ய முடியாத பெரிய காலம். ஆனால், பிரபஞ்சத்தில், 1000 ஆண்டுகள் என்பது சில விநாடிப் பொழுது போன்றது.

ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரையிருக்கும் குளிர்காலம் முடிந்து, வெயில் ஏற்படுத்தும் கசகசப்பு, புத்தகம் படிக்கும் பழக்கத்தை சற்றே நிறுத்த செய்யும். ஆற்காட்டார் புண்ணியத்தில் மொட்டை மாடி எங்கிருக்கிறது என்று நாம் தேடும் மே முதல் ஜீலை வரையிலான இந்த மூன்று மாதங்கள், வானத்தைப் பார்க்க சரியான காலம். மேகங்கள் அற்ற தெளிவான வானம் மற்றும் கோடைக் காலத்தில் எளிதில் பார்க்கக் கூடிய வியாழன் (Jupiter) மற்றும் அதன் துணைக்கோள்கள், சனி (Saturn), செவ்வாய் (Mars) மற்றும் அந்தி சாயும் வேளை மட்டுமே பார்க்கக்கூடிய வெள்ளி (Venus) போன்ற கிரகங்கள் தெளிவாகத் தெரிவது ஒரு காரணம்.

5 வருடங்களுக்கு முன், வெறும் கண்களால் விண்வெளியில் உலவும், ISS (International Space Station) மற்றும் இரிடியம் செயற்கைக்கோள்களை பார்க்க முடியும் என்று தெரிந்தது. கண்ணடிக்கும் வானத்து தேவதை என்ற பதிவில் அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். அன்று தொடங்கி வானவியலில் ஒரு ஈடுபாடு.

வெறும் கண்களை விடுத்து, பைனாகுலர் மூலம் நட்சத்திரக் கூட்டங்களையும், நிலவின் மேற்பரப்பையும் நன்றாக பார்க்கமுடியும் என்பதால் Celestron நிறுவனத்தின் 10x50 பைனாகுலர் வாங்கினேன். சிறிது நாட்கள் உபயோகித்த பிறகு, சுற்றுலா செல்லும் போது தொலைவிலுள்ளவற்றைப் பார்ப்பதற்கு மட்டுமே இந்த பைனாக்குலர் உதவும் என்பதை உணர்ந்தேன்.

கண்ணுக்குத் தெரியும், சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களைப் பார்க்க, தொலைநோக்கி கண்டிப்பாக வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்கு இணையதளங்கள் பலவற்றைப் படித்து, தொலைநோக்கிகளைப் பற்றி அறிந்து கொண்டேன். வெளிநாடுகளில் கிடைக்கும் Celestron நிறுவனத்தின் தொலைநோக்கிகள் பல அருமையானவை. ஆனால், அங்கிருந்து வாங்கிவரும் வசதியில்லாததால், இந்தியாவில் எங்கே கிடைக்கும் என்று தேடினேன். கடைசியாக, மும்பாயில் ஒரு நிறுவனத்திலிருந்து, இந்தத் தொலைநோக்கியை வாங்கினேன்.

இதைப் பார்த்தவர்கள் நிறைய பேர் சொன்னது “அடுத்த வீட்டு மொட்டை மாடிய பார்க்குறத்துக்கு எதுக்கு இவ்வளவு பெரிய டெலஸ்கோப் ?”. ”இல்லைங்க, அதுக்கு இல்லைங்க” என்று சொல்லி, சொல்லி சோர்ந்து போனேன். வாங்கிக் கொஞ்ச நாளிலேயே, ஒன்று தெரிந்து போனது. வாங்குவது எளிது. அதனை உபயோகிப்பது கடினம் என்று. அப்பொழுது ஆபத்பாந்தவனாய் வந்தவர், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீராம். எப்படி உபயோகிக்க வேண்டும், எந்த நேரத்தில் எந்த கோள்களைப் பார்க்க வேண்டும், Deep Sky Objects எனப்படும், தொலைதூர கேலக்ஸிகளை எப்படி பார்ப்பது என்று சொல்லிக்குடுத்தார்.முதன் முதலில், பார்ப்பதற்கு எளிதான, சந்திரன். அருகில்..மிக அருகில் அதன் பிரம்மாண்டம்  அசர வைத்தது. எல்லாரும் நினைப்பது போல பெளர்ணமி அன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது. அன்று வெளிச்சம் மிக அதிகமாக இருப்பதால், அதன் மேற்பரப்பு சரியாகத்தெரியாது. அமாவாசை முடிந்து அடுத்த 6வது நாளில் இருந்து 12ஆம் நாள் வரை பார்ப்பது எளிது. நான் எடுத்த ஒரு போட்டோ.



சென்னை போன்ற நகரத்தில் உள்ள பிரச்சினை - வெளிச்சம். மொட்டை மாடியில் சென்று பார்த்தால், அடிவானத்திலிருந்து 30 டிகிரி வரை வெளிச்சமே வியாப்பித்திருக்கும். நட்சத்திரங்கள், அந்த வெளிச்சத்துடன் போட்டியிட முடியாமல் மறைந்திருக்கும்.

வெளிநாடுகளில் வானவியலில் ஆர்வமுடையவர்களின் நலன் கருதி, ஒரு குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்படுகிறது (மேலும் விபரங்களுக்கு http://www.darkskiesawareness.org/ ). மற்ற நாட்களில், அவர்கள், நகரத்திலிருந்து தொலைதூரம் சென்று, வெளிச்சம் சிறிதுமற்ற இடங்களில் இரவு முழுவதும், Messier's Deep Sky Objects எனப்படுகிற 110, வெறும் கண்களால் பார்க்க இயலாத கேலக்ஸிகள், நெபுலாக்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கிறார்கள். இதனை ஒரு போட்டியாகவும் நடத்துகிறார்கள். அந்த Messier's Objects ல் சில இதோ (நன்றி: celestiamotherlode.net).
இரவு நேரத்தில், கடற்கரையில் நின்று, வானத்தைப் பார்த்தால், வெளிச்சமற்ற அந்த நேரத்தில், வழக்கமான நாட்களை விட எவ்வளவு நட்சத்திரங்களை நம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று பாருங்கள். நாம் வசிக்கும் பால்வீதி (MilkyWay Galaxy), வெளிச்சமற்ற இரவுகளில் மட்டுமே காண முடியும்.

நான் பார்த்த கோள்கள் மற்றும் கேலக்ஸிகளைப் பற்றி வரும் பதிவுகளில் ...

26 June 2010

ஜெயிக்குமா இந்த படங்கள் ?

அது ஒரு காலம் - எப்ப வரும் ரஹ்மான் இசையில் வரும் கேசட் என்று தினமும் கேசட் கடைகளில் தொந்தரவு செய்தது. அதே காலகட்டத்தில், மணிரத்தினம் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இரண்டு எதிர்பார்ப்பும் போய் பல வருடங்களாகி விட்டது (படமோ அல்லது இசையோ தரமிழந்துவிட்டது என்று பொருள் கொள்ளாதீர்கள்)

சில வருடங்களுக்கு முன் வந்த சிவாஜி, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே போல, இப்பொழுது ஆர்வத்தைக் கிளப்பியிருக்கும் இரண்டு படங்கள்.

மதராசபட்டினம் மற்றும் ஆனந்தபுரத்து வீடு.


மதராசபட்டினம் டிரெய்லர் அந்த கால சென்னையை கண்முன் நிறுத்தியது. பெரிய (தியேட்டர்) ஸ்கிரீனில் பார்க்கும் போது, கிராபிக்ஸ் என்று நன்றாக தெரியுமளவுக்கு கிராபிக்ஸ் இருக்காது என நம்புவோம். ரொம்ப நாள் கழித்து, அழகான வெளிநாட்டுப் பெண் நடித்திருக்கும் தமிழ் படம் (நாடோடித் தென்றல் படத்து வெளிநாட்டு நாயகி மாதிரி இல்லாதது பெரிய ஆறுதல்) என்று நினைக்கிறேன்.

ஆனந்தபுரத்து வீடு, ஷங்கர் தயாரிப்பு என்ற எதிர்பார்பை விட, “விடாது கருப்பு”, “வானத்து மனிதர்கள்” மற்றும் “ருத்திர வீணை” போன்ற (நிஜமான) மர்மத்தொடர்களை இயக்கிய நாகா அவர்களின் படம் என்பதனால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஜெயிக்கும் தமிழ் படங்கள் தேவையான இந்த நேரத்தில், இவை இரண்டும் வெற்றிபெறுமா என பார்ப்போம்.

எல்லாமே அம்மாதான்

வழக்கம் போல இதுவும் இன்று காலை, சாலையில் பார்த்தது தான். இந்த வண்டி, சிக்னலில் நிற்காமல் போனால், யாருக்கு அபராதம் விதிப்பார்கள் ?.  அல்லது இந்த வண்டிக்கு அபராதம் விதிக்கும் தைரியம் யாருக்காவது வருமா ?.

ஒரு காலத்தில் மத்திய அரசு, எலக்ரானிக் சிப் பொருத்திய நம்பர் ப்ளேட் எல்லா வண்டிக்கும் வைப்பதாக ஒரு திட்டம் இருந்தது. இப்பொழுதும் அது இருக்கிறதா என்று தெரியவில்லை.

50 லட்சம் ரூபாய் போட்டு கார் வாங்குபவர்கள் கூட, நம்பர் ப்ளேட் எழுதும் போது, கஞ்சத்தனமாக, மிகச்சிறிய, கண்ணுக்குத் தெரியாத வகையில் நம்பர் எழுதுகிறார்கள்.

நான் வண்டி ஓட்டும் போது, பின்னால் வரும் ஆம்புலன்ஸீக்கு வழிவிடுகிறேனோ இல்லையோ, கட்சிக்கொடி கட்டிய டாடா சுமோ, பஸ், குடிதண்ணீர் லாரி மற்றும் மஞ்சள் கலர் நம்பர் ப்ளேட் வண்டிகளுக்கு கண்டிப்பாக வழி விட்டுவிடுவேன். எதுக்கு வம்பு ?.

23 June 2010

எல்லாம் விளம்பரம்

இன்று காலை, சாலையில் பார்த்த ஒரு விளம்பரம்.



படத்தில் உள்ள விளம்பரத்தை சரியாக படிக்க முடியாதவர்களின் வசதிக்காக:

வேண்டியது வேண்டியவருக்கு வேண்டியபொழுது கிடைக்கும்.
வனத்திருப்பதி
புன்னை ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்
புன்னை நகர், (கச்சனா விளை இரயில் நிலையம் அருகில்), திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் - 628618
பக்தியுடன் வணங்கி வரவேற்கும் 
ஓட்டல் சரவண பவன்


சென்னை, வடபழனி முருகன் கோவிலுக்கு அருகில் இருக்கும் சரவணபவன் ஓட்டல் போல, இந்தக் கோவிலுக்கு அருகிலும் சரவணபவன் ஓட்டல்.

16 June 2010

கோடு போட்ட சட்டை

ட்டை வாங்க
கடைக்குப் போவோம்
அந்த கோடு போட்ட
துணியில் ஒரு மீட்டர்
என்பார் அப்பா.
நீலக் கலர் துணியில்
அரை டிராயர்
என்பார் அப்பா.

கொஞ்சம் பெரிசாவே
தச்சுடுங்க
வளர்ற பையன்
என்பார் அப்பா.

ருப்பு, சிகப்பு,
ரெண்டு ஸ்பைடர் மேன்
சண்டை போடுற
டி-ஷர்ட்
ஜீன்ஸ் துணியில்
நாலு பாக்கெட் வெச்ச
முக்கால் பேண்ட்
கேட்கிறான்
என் பையன்

15 June 2010

திக்.திக்.பக்.பக் - 4

காலேஜ்ல செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சு, ரிசல்ட் வர்றத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே, பீதியக் கிளப்ப ஆரம்பிச்சுடுவானுங்க. படக் படக் பதிலா திக்.திக்னு (அப்பாடி !!, இந்தப் பதிவோட தலைப்பு வந்துடுச்சு) ஹார்ட் அடிக்க ஆரம்பிச்சுடும். எக்ஸாம் எழுதுறதுல ஒரு டென்ஷன்னா, ரிசல்ட் வர்ற நாளு அதைவிட டென்ஷன்.

”R.E.C ஃப்ரொபசர் பேப்பர் திருத்தியிருக்காராம். நம்ம காலேஜ்ல 4 பேர் தான் எல்லா சப்ஜெக்ட்லயும் பாஸாம்.”

”யூனிவர்சிட்டியில என் சித்தப்பா வேலை பார்க்குறாரு. அவரு மூலமா, என் ரிசல்ட் பார்த்துட்டேன். எதிர்பார்த்த அளவுக்கு மார்க் வரலை (ஏண்டா ! 50 மார்க்குக்கு எக்ஸாம் எழுதிட்டு, என்னடா எதிர்பார்ப்பு வேண்டிக்கிடக்கு ?). உங்க மார்க்கெல்லாம் எனக்குத் தெரியலை (உன் மார்க் வெச்சே எங்க மார்க் எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு).

”இப்பதான் ஆபீஸ் ரூம் போனேன். ரிசல்ட் வந்துடுச்சாம். இன்னைக்கு ஈவினிங் நோட்டீஸ் போர்டுல ஒட்டிடுவாங்க.”

”லெக்சரர் காரிடர்ல என்னைய முறைச்சு பார்த்துகிட்டே போனாங்க. ஐ திங்க், அவங்க எடுத்த சப்ஜெக்ட்ல தான் நிறைய பேர் அவுட் போலயிருக்கு.”

ஒவ்வொருத்தனும் இந்த மாதிரி வாய்க்கு வந்தபடி சொல்லிக்கிட்டே இருப்பானுங்க. கடைசியா லெக்சரர் வந்து “ரிசல்ட் ஒட்டியாச்சே. பார்க்காமா கிளாஸ்ல இருக்கீங்க. அதிசயமா இருக்குன்னு” சொன்ன உடனே, ஓடுவோம்.
 (படத்துல என்ன ஒரு சிரிப்பு பாருங்க. மத்தவன் பெயில் ஆனத பார்க்குறதுல, இவங்களுக்கு ஒரு சந்தோஷம்)


ஒவ்வொரு கிளாஸ்லயும் மூணு குரூப் இருக்கும். 1. யுனிவர்சிட்டி ரேங்க் எடுக்குறவனுங்க. 2. லெக்சரர் உயிரை எடுக்குறவனுங்க. அரியர்ஸ் எழுதரதயே தொழிலா நினைக்குறவங்க. 3. இப்படியும் இல்லாம, அப்படியும் இல்லா, பார்டல பாஸ் ஆகி எஸ்கேப் ஆகுறவங்க. நான் 3 வது குரூப்.

அடிச்சுப் புடிச்சு, நோட்டீஸ் போர்டுல என் பேர பார்த்துட்டு, மார்க் எவ்வளவுன்னு பார்க்க மாட்டேன். Pass. Fail ன்னு ஒரு Column இருக்கும்ல, அத மட்டும் கடகடன்னு ஸ்பீடா, ஒருதடவை பார்ப்பேன். பாஸ்னா, எஸ்கேப். பக்.பக் முடிஞ்சுடும். மார்க் பார்க்குற அளவுக்கு தைரியம் இருக்காது. கிளாஸ்க்கு திரும்பி போன உடனே, கேர்ஸ்கிட்ட, என் மார்க் எவ்வளவுன்னு கேட்பேன். அவங்க நான் கிளாஸ்ல எத்தனாவது ரேங்க் ?? வர்ற செமஸ்டர்ல எவ்வளவு மார்க் எடுத்தா, பர்ஸ்ட் கிளாஸ் கிடைக்கும்ன்னே சொல்லிடுவாங்க. அதுங்களுக்கு வேலையே அதுதான். எல்லாத்துலயும் நல்லா மார்க் வாங்கிட்டு, ரிசல்ட் வந்த உடனே, யாரு ஃபர்ஸ்ட், யாரு செகண்ட்னு ரேங்க் போட்டுருக்குங்க.

ரிசல்ட் பார்த்துட்டு வந்த உடனே, சிலர் முனிவர் ரேஞ்சுக்கு அமைதியா கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்துப்பானுங்க. ஆறுதல் சொல்லலாம்னு நினைச்சோம்னா, நாம நோகற அளவுக்கு திட்டுவானுங்க.

போன செமஸ்டர் க்ளாஸ் எடுத்த லெக்சரர், இந்த தடவையும் வந்துட்டா போச்சு. ”ம்..சொல்லுங்க. என் சப்ஜெக்ட்ல யாரெல்லாம் பாஸ் ? அவங்க மட்டும் எழுந்திருச்சு நில்லுங்கன்னு” வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுவாங்க.

எனக்குத் தெரிஞ்சு, பைனல் இயர் படிக்குற போது, ஒருத்தன், 45 பேப்பர் அரியர்ஸ் பாஸ் பண்ணினான். இன்னைக்கு வரை, அந்த ரெக்கார்ட எவனும் ப்ரேக் பண்ணலைன்னு நினைக்கிறேன். காலைல ஒரு எக்ஸாம், மத்தியானம் ஒரு எக்ஸாம்னு (ஒன் டே மேட்ச்ன்னு கோட் வேர்டு இதுக்கு), வாரத்துல 5 நாளும் எக்ஸாம் எழுதுவானுங்க.  பார்க்கவே ஆச்சரியமா இருக்கும். ஃபர்ஸ்ட் இயர் மேக்ஸ் எக்ஸாம, பைனல் இயர் முடிஞ்சும், ரெண்டு வருஷம் கழிச்சு காலேஜ் வந்து எழுதியிருக்காங்க. அவங்களுக்காக தனியா, அந்த சிலபஸ்ல கொஸ்டியன் பேப்பர் தயார் பண்ணுவாங்க.

14 June 2010

ஊறுகாயும் ஹேர் ஆயிலும்

இப்பல்லாம், டி.வில ப்ரோக்ராம் பார்க்குறத விட, நடுவுல வர்ற விளம்பரம் ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு. ஆனா, அதுலயும் திருஷ்டி மாதிரி சில விளம்பரங்கள் வரத்தான் செய்யுது. இல்ல. !!.இல்ல... !!! ஷேவிங் க்ரீம், பனியன் விளம்பரத்தப் பத்தி சொல்லை. அதுக்கெல்லாம் அப்படித்தான் எடுப்பாங்க. நான் சொல்ல வந்தது சின்னீஸ் ஊறுகாய் மற்றும் கார்த்திகா ஹேர் ஆயில் பத்தி.

சின்னீஸ் ஊறுகாய்.


(சினேகா படம் கிடைக்கலைங்க. அதுனால சிம்ரன்)

சின்ன பசங்க சாப்பிட மாட்டேங்குறாங்களாம். சினேகா வந்து, பசங்களே, சின்னீஸ் ஊறுகாய் சாப்பிடுங்க. ரொம்ப டேஸ்டின்னு சொல்றாங்க. ஊறுகாய் உடம்புக்கு கெடுதலான விஷயம். அதுவும், அதைச் சின்ன பசங்க சாப்பிடும் பொருள் மாதிரி காட்டுறது சரியான்னு தெரியலை. இதப்பாத்துட்டு, குட்டீஸ்ங்க, ஊறுகாய் சாப்பிட்டுட்டு, ஐய்யோ, வாய் எரியுதேன்னு கத்தாம இருந்தா சரி.

கார்த்திகா ஹேர் ஆயில்.

ஹேர் ஆயில் விளம்பரம் எடுக்குறது ரொம்ப சிம்பிளான விஷயம். ஒரு பொண்ணு, ஹேர் ஆயில் போட்டதால, நீளமான தலை முடியோட போகும். அதப் பாத்துட்டு, மயங்கி ஒரு ஆண் பின்னாடியே போகணும். இல்லைன்னா ஷேம்பு விளம்பரம்னா, குழந்தை, அம்மாகிட்ட, எனக்கு ஏன் நீளமான முடியில்லைன்னு ? சண்டை போடணும். இதக் கேட்டுட்டு, அந்த அம்மா, ஒரு போடு போடாம, ஷேம்பு போடணும்.

இதெல்லாம், பழைய டெக்னிக். கார்த்திகா ஹேர் ஆயில் விளம்பரத்துல, ஒரு பொண்ணு போகுது. அதோட தலைமுடிய பார்த்து, ‘ஆ’ன்னு வாய பொளக்குறது, பசங்க படத்துல நடிச்ச ஒரு பையன். அடக்கொடுமையேன்னு பயந்து போய் பார்த்தா, அடுத்த ஷாட்டுல, அந்த பொண்ணு, டீச்சரா வர, அந்தப் பையன், “அட ! அந்த அக்காடான்னு சொல்ல” நமக்கு அக்கடான்னு இருக்கும்.

குட்டீஸ் மனசுல ஒரு பெயரைப் பதிய வெச்சுட்டா, அந்தப் பொருள் விற்பனையாகிடும்னு தெரிஞ்சுக்கிட்டு இவங்க பண்ற டெக்னிக்தான் இது.

சரி ! உனக்கு ஏன் இந்தக் கவலை. யாருக்கும் இல்லாத கவலைன்னு நீங்க கேட்கலாம். ஆம் ! நானே பாதிக்கப்பட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி, என் பையன், சூப்பர் மார்க்கெட் போனப்போ “அம்மா ! கோகுல் சீக்ரெட் கார்டன்” பவுடர் வாங்கித்தான்னு ஒரே அடம். இப்ப, எங்க வீட்டுல, பாண்ட்ஸ் பவுடருக்கு பதிலா “கோகுல் சீக்ரெட் கார்டன்” பவுடர்தான்.

டிஸ்கி: சின்னீஸ் ஊறுகாய் மற்றும் கார்த்திகா ஹேர் ஆயில் கம்பெனிகளிடம் இருந்து வாங்கப்பட தொகை பற்றி யார் கேட்டாலும் சொல்லப்படமாட்டாது.

06 June 2010

நித்தியும் சுயநலமும்

நித்திஷ் !
சுருக்கமாக,
செல்லமாக,
நித்தி !!.
வேற செல்லப்பெயர்
யோசிக்கணும்
மகனுக்கு இப்போ.



"தன்னலம்" கருதா
பொதுநலவாதி
நான்
சனியன் புடிச்ச
மழை
வீடு போனதும்
வந்திருக்கலாம்.

05 June 2010

சாலைகளில் பார்த்தது

எந்தப் புகை ? பகை ?

இரண்டு நாட்களுக்கு முன், கிண்டி மேம்பாலத்தில், முன்னே சென்று கொண்டிருந்த, ஆட்டோவில் பார்த்த வாசகம் (இந்தப் புகைப்படத்தில் பாருங்கள்). சிகரெட் புகை மட்டுமே நமக்குப் பகை என அந்த ஆட்டோ ஓட்டுனர் நினைத்துவிட்டார் போல.


3 ரூபாய்க்கு 30 ரூபாய்

நேற்று, கிண்டியிலிருந்து வேளச்சேரி செல்லும் முக்கிய சாலையில், பயங்கர வாகன நெரிசல். 500 மீட்டரைக் கடக்க, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆனது. அரை அல்லது ஒரு லிட்டர் பெட்ரோல் காலி. மில்லி மீட்டர், சென்டி மீட்டர் கணக்கில், வண்டிகள் நகர்ந்து கொண்டே இருந்ததால், இஞ்சினை நிறுத்திவைக்க முடியவில்லை.  வாகன நெரிசலுக்கு காரணம் ?  பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 3 அதிகமாகப் போகின்றது என்ற செய்தி கேட்டு, எல்லா பெட்ரோல் போடும் இடங்களிலும் நின்ற வாகனங்களினால் ஏற்பட்ட சாலை நெரிசல். 3 ரூபாய் மிச்சம் பிடிப்பதற்காக, அன்று அனைவரும் இழந்தது 30 ரூபாய்.

04 June 2010

புதிய வாகனம்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அலசி ஆராய்ந்து முடிவில் மாருதி ரிட்ஸ் (Ritz) கார் வாங்கினேன். பழைய மாருதி 800க்கு பிரியா விடை கொடுத்துவிட்டு, இந்த புதிய வண்டி. மிகவும் ஆராய்ந்து கடைசியில் கடைக்குப் போய், முடிவு செய்திருந்ததை விட்டு, வேறு பொருள் வாங்குவது என் பழக்கம். அதைப் போலவே, மாருதி வேகன்-R என்று முடிவு செய்துவிட்டு, கடைசியில் வேறு கார். ஜூன் முதல் தேதியிலிருந்து, சாலை வரி அதிகப்படுத்துவதால், கார் வாங்கும் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. நான் வாங்கிய இடத்தில் ஒரே நாளில் 80 வண்டிகளை டெலிவரி தந்திருக்கிறார்கள்.

கீழே, நான் கடந்து வந்த வாகனங்கள்.... (சூரிய வம்சம் சரத்குமார் நியாபகம் வந்தால், நான் பொறுப்பில்லை)


பவர் ஸ்டியரிங் இருப்பதால், பெரிய காராக இருந்தாலும், மிக எளிதாக ஓட்ட முடிகிறது. பெட்ரோல் ரொம்ப குடிக்காது என்கிறார்கள்; பார்ப்போம் !.
Ford Figo, Chevi Beat போன்ற கார்களை ஓட்டிப் பார்த்துவிட்டு, இந்தக் கார் வசதியாக இருப்பதாய் தோன்றியது. மேலும், கொஞ்சம் பணம் குறைத்துக் கொடுத்தார்கள்.

கார்களைப் பற்றிய பல தகவல்களுக்கு TEAM-BHP என்ற வலைத்தளம் பெரிதும் உதவியது. கார் வாங்கும் முன், இந்த வலைத்தளத்தைப் படிப்பது நல்லது.