13 October 2012

திரும்பி வந்த சிங்கம்

லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வருடமாகிறது.

கடந்த ஒரு வருடத்தில் வந்த இதழ்களின் ஒரு கழுகுப் பார்வை இதோ :

டிசம்பர் - 2011 -ல் புத்தகக் காட்சியில் வெளியான இதழ் இது. முதல் முறை பெரிய சைஸில்; வண்ணத்தில் வந்த இதழ். பார்க்க மற்றும் படிக்க நன்றாக இருந்தாலும், தொடர்ந்து இது போல இதழ்களை மாதம் ஒரு முறை லயன் காமிக்ஸ் நிர்வாகியால் வெளியிட முடியுமா என்ற ஒரு கேள்வி மனதில் நிலவியது.


அந்த சந்தேகத்தைப் பொய்யாக்கி அடுத்தடுத்து சொன்ன தேதிக்கு காமிக்ஸ்கள் வர ஆரம்பித்தன.


வழக்கமாக கார்டூன் மற்றும் கௌபாய் கதைகளே லயன் மற்றும் முத்துகாமிக்ஸை ஆக்கிரமித்திருந்த சமயம் வந்த இதழ் “என் பெயர் லார்கோ”. படித்த உடன் மிகவும் பிடித்துப்போன கதாநாயகர்களுள் ஒருவராக லார்கோ மாறிப்போனார். சித்திரங்களா ? இல்லை போட்டோவா என்று ஒன்றுக்கு இருமுறைப் பார்க்கவைக்கும் அளவுக்கு அற்புதமாக வண்ணச் சித்திரங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களே தோல்வியடையும் வகையில் பிரம்மிக்க வைக்கும் கதைசொல்லும் திறன் என்று மிகப் பெரிய மாறுதலை தமிழ் காமிக்ஸ் உலகில் இந்த இதழ் கொண்டுவந்தது.

சற்றே ஏறக்குறைய 30-40 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு கதை, இன்று படித்தாலும் ரசிக்கவைக்கும் வகையில் இருக்குமா ? என்ற கேள்வியினைத் தகர்ந்தெறியும் கார்டூன் ஹீரோ - லக்கி லூக். நகைச்சுவையை கதைகளில் கொண்டுவருவது அதுவும் படிக்கும் போது வாய்விட்டு சிரிக்கவைப்பது என்பது மிக மிகக் கடினமான ஒரு விஷயம். ஆனால் இந்த இதழில் வந்த வண்ணமயமான இரண்டு கதைகளும் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இருந்தது.

ரிப்போர்டர் ஜானி என்ற கதாநாயகனின் கதைகள் பெல்ஜியம் நாட்டில் மிகவும்  பிரபலமான ஒன்று. சிக்கலான துப்பறியும் கதைகள். ஒவ்வொரு இதழும் 5 லட்சங்கள் விற்பனையாகும். அந்தக் கதைகளை வண்ணத்தில், தமிழில் படிக்க இந்த புத்தகம் உதவியது.

இந்த வருடத்தில் வந்த கதைகளில் மிகச் சிறந்தது இந்த இரண்டு கதைகள். ஒன்று மிகவும் சாமன்யமான ஒரு கௌபாயின் வாழ்வில் நடக்கும் கதை. மற்றொன்று கௌபாய் கதைகளில் மிகவும் பிரபலமான கேப்டன் ப்ளூபெரி (தமிழில் கேப்டன் டைகர்). சித்திரங்கள், மனதை கனக்கச் செய்யும் கதையமைப்பு என்று இரண்டு கதைகளும் சூப்பர் ஹிட் ரகம். காமிக்ஸ் பற்றி பெரிய ஆர்வம் இல்லாதவர்களும் இந்த இரண்டு கதைகளைப் படித்தால் உடனடியாக ரசிகராக மாற்றும் வல்லமைப் படைத்தக் கதைகள் இவை. இந்தக் கதைகளைப் பற்றிய மிகச் சிறந்த விமர்சனங்கள் இதோ :





இளம்பிராயத்தில் படித்த இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர் மற்றும் இரும்பு மனிதன் ஆர்ச்சி என்ற மூன்று கதாநாயகர்கள் தோன்றும் கருப்பு - வெள்ளை இதழ் இது.


கேப்டன் டைகரின் மெகா ஹிட் கதை மறுபதிப்பாக முழு வண்ணத்தின் நவம்பர் மாதம் வெளிவர இருக்கிறது - தங்கக்கல்லறை.

மேலே குறிப்பிட்டிருந்தக் கதைகளில் பல ஆங்கிலத்தில் கிடைக்கிறது. ஒவ்வொரு கதையின் விலை ரூ 250 - ரூ 500. அந்த வகையில் தமிழில் ரூ 100 விலையில் வெளியாகும் இந்தக் கதைகள் ஒரு அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். சென்னையில் டிஸ்கவரி பேலஸ் மற்றும் ebay-ல் கிடைக்கிறது.

லயன் காமிக்ஸ் பற்றி மேலும் அறிய மற்றும் வாங்க இந்தத் தளத்தைப் பாருங்கள். லயன் - முத்துகாமிக்ஸ்

2012 வருடம் போலவே 2013ஆம் வருடமும் பல தரம் உயர்ந்த காமிக்ஸ்கள் வெளிவரும் நம்பிக்கையிருக்கிறது.

26 August 2012

தேசாந்திரியிலிருந்து சில துளிகள்


மீள் பதிவு:

இன்று காலையில் எழுந்த போதே சென்னை மேக மூட்டத்துடன் ரம்யமாக இருந்தது. சோம்பலுடன், ஜன்னலை திறந்த உடன் முகத்தில் பட்ட சில்லென்ற காற்று உற்சாகத்தை தந்தது. இந்த வானிலையில் பயணம் மேற்கொள்வது இனிய அனுபவமாக இருக்கும். ஆனால் சோம்பல், வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்காத போது, பயணத்தின் இனிமையை அனுபவிக்க ஒரே வழி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தேசாந்திரி. ஜன்னல் வழியே வழிந்த சிறிய வெளிச்சத்தில், மெத்தென்ற படுக்கையில், அமைதியான சூழ்நிலையில் புத்தகத்தில் மூழ்கினேன். பல முறை படித்திருந்த போதும், ஒவ்வொருமுறை படிக்கும் போது பயணத்தின் சுகானுபவம். இவருக்கு மட்டும் வித்தியாசமான கண்கள். சாதாரணமான விஷயங்களை இவர் எழுத்தின் வழியே படிக்கும் போது, “அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என வியப்பாக இருக்கிறது. இவரின் பல புத்தகங்களை படித்திருந்தாலும், தேசாந்திரி - என் மனதுக்கு நெருக்கமான புத்தகம். புதியதாக இந்த புத்தகத்தை படிக்க விழைபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சப்தங்கள் மிக குறைந்த, இடையூறுகள் இல்லாத நேரத்தில், அமைதியான மன நிலையில் படியுங்கள்.

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது, தேசாந்திரி புத்தகத்தின் சில துளிகள்..அதுவும் தேன் துளிகள். ரசித்தவற்றை எழுதவேண்டுமென்றால், புத்தகம் முழுவதையும் எழுதவேண்டும்.பலர் பல பதிவுகளில் இப்புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தாலும், எனக்கு பிடித்த சில வரிகள் இவை.

இனி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விழி வழியே இவ்வுலகம். 
------------- 
2 - சாரநாத்தில் ஒரு நாள்
இந்தச் சாலைகள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது!

-------------
4 - லோனாவாலாவில் பார்த்த மழை
மழை பெய்யத் துவங்கியதும் மனித சுபாவம் மாறத் துவங்கிவிடுகிறது. யாரும் குரலை உயர்த்திப் பேசிக்கொள்வதிலை. மாறாக, மழை பெய்யும்போது யார் யாரைப் பார்த்தாலும், முகத்தில் மெல்லிய சிரிப்பு கரை தட்டி நிற்பதை உணர முடிகிறது. மழை ஒரு தியானத்தைப் போல மெள்ள நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது.

------------
5 - பாடப் புத்தகங்களுக்கு வெளியே...!
சரித்திரம் நம் உடையில், உணவில், பேச்சில், அன்றாட நடவடிக்கைகளில் தினமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் அணியும் சட்டையில் உள்ள பொத்தான்கள், பெர்சீயாவில் இருந்து வந்ததையும், நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு வெள்ளைக்காரர்கள் நமக்கு அறிமுகம் செய்தது என்பதையும் நாம் சரித்திரம் என்று உணர்வதில்லை.

லண்டனில் ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். ஆனால், பாரதியார் பிறந்த இடத்தை எத்தனை பேர் நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள் ?

--------
6 - கண்ணால் வரைந்த கோடு
மலையின் மீது நடக்கத் துவங்கியதும் நகரம் நம் காலடியில் நழுவிப்போகத் துவங்குகிறது. உயரம் ஒரு அதிசயம் என்பதை, மனது மெல்ல உணரத் துவங்குகிறது. தரையில் இருந்து காணும் பொருட்கள், ஏன் உயரத்துக்குப் போனதும் இத்தனை ஆச்சர்யமாக மாறிவிடுகின்றன என்று வியப்பாக இருக்கிறது.
(தினமும் என் அலுவலகத்தின் ஜன்னல் வெளியே தெரியும் புனித தாமஸ் மலை (செயின்ட் தாமஸ் மவுண்டை) இவர் பார்வையில் பார்க்கும் போது, 20 வருடங்களாக சென்னையிலிருந்தும் இந்த இடத்தை பார்க்கவில்லையென வெட்கமாக இருக்கிறது)

---------
7 - நிலமெங்கும் பூக்கள்
பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்.... எத்தனைவிதமான மலர்கள்...! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் !.

---------
10 - அருவியாடல்
குற்றாலம் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே அருவியின் சப்தமும், ஈர வாடையும், குரங்குகளும் நினைவில் எழுந்துவிடுகின்றன.

அருவியைப் பார்த்துச் சிரிக்காதவ்ர் எவரும் இருக்கிறார்களா என்ன ? அருவியின் முன்னே வயது கலைந்து போய்விடுகிறது. அருவியின் முன்னே நம் பேச்சுக்கள் யாவும் ஒடுங்கிவிடுகின்றன. அருவி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.

--------
15 - அறிந்த ஊர்
பின்னிரவில் எல்லா ஊர்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அதிலும் பேருந்து நிலையங்களும் அதைச் சுற்றிலும் உள்ள சிறு கடைகளில் எரியும் டியூப் லைட்டுகள் மற்றும் பாதி உறக்கம் பீடித்த பெட்டிக்கடைகள், காலியான நாற்காலிகளுடன் பால் கொதிக்கும் டீக்கடைகள், உறக்கத்தின் பிடியில் சுருண்டுகிடக்கும் வயதானவர்கள், கால்கள் மட்டும் வெளியே தெரிய உறங்கும் ஆட்டோக்காரர்கள்.

--------
25 - ஒரு கோயில்.. சில காட்சிகள்!
முன்பு எல்லா ஊர்களின் ரயில் நிலையத்தின் முன்பாகவும், குதிரை வண்டிக்காரர்கள் நிற்பார்கள். வண்டிக்குள் வைக்கோல் பரப்பி, அதன் மீது சமுக்காளம் விரித்திருப்பார்கள். குதிரை வண்டிகளின் இடத்தை இன்று ஆட்டோக்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.

--------
35- ஒளிரும் எண்கள்
கும்பகோணதில் உள்ள கணித மேதை ராமனுஜத்தின் நினைவு இல்லத்தில் குனிந்து செல்ல வேண்டிய அளவு தாழ்வான கூரை அமைப்பு. வீட்டில் யாரும் இல்லை. ராமானுஜத்தின் மூச்சுக் காற்றும் விரல் ரேகைகளும் மட்டுமே மீதம் இருக்கின்றன. இந்த அறையில் ராமானுஜம் படித்துக்கொண்டு இருந்திருப்பார் என்கிற காட்சி மனதில் கடந்து போனது.


--------
36 - உறங்கும் கடல்
தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன.

--------
41 - நோக்கும் திசையெல்லாம்
பின்வாங்கியோடும் அலையைப் போல இரவு, தன் இருப்பிடம் திரும்பத் துவங்கி இருந்தது. உலகில் ஒவ்வொரு நாளும் இதே போலத்தான் இரவு விடைபெறுகிறது. சில நிமிடங்களில் வெளிச்சம் உலகின் மீது தன் நிறத்தைத் தீட்டத் துவங்கியது. பனி படர்ந்த இமயமலை கண்ணில் படத் துவங்கியது. இதே சூரியனைத்தான் இத்தனை வருடங்களாகக் காண்கிறேனா ? ஏன் இந்தப் பிரமாண்டம், வசீகரம் என் ஜன்னலைத் திறந்து பார்க்கும் போது கிடைக்கவே இல்லை. எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும், இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்.

 -----------
புத்தகம்     : தேசாந்திரி
வெளியீடு: ஆனந்தவிகடன்
விலை       :ரூபாய் 110.
நன்றி(படங்களுக்காக): examiner.com,ramasundaram.sulekha.com,bloggersbase.com,moxhafinearts.com,pacificbulbsociety.org

15 August 2012

October Sky (அக்டோபர் ஸ்கை)

ஒரு சினிமாவைப் பார்த்தவுடன் பிடித்துப் போக அந்த சினிமாவில் எதோ நாம் முன்பு பார்த்த அல்லது பார்க்காத, ஆனால் பிடித்த விஷயம் இருக்கவேண்டும். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், சிலருக்கு தன்னம்பிக்கையும் கொடுத்தால் அந்த சினிமாக்கள் காலத்தை வென்றவையாக க்ளாசிக் வரிசையில் இடம் பிடிக்கிறது. அந்த வரிசையில், நான் பார்த்து ரசித்த படம் இது.

October Sky - 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம். மிகவும் எளிமையான கதை. 1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன், ஸ்புட்னிக் என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தியது. அந்த செய்தி கேட்ட பிறகு, பலருக்கு (சிறுவர்களுக்கு) வானவியலில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவில்   உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு சிறிய ராக்கெட் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்ற பெரிய ஆர்வம். அவனது அப்பா, அந்த கிராமத்திலிருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களில் ஒருவர். வழக்கம் போல தன் மகனின் இந்த ஆசையை பெரிதாக விரும்பாதவர்.

ராக்கெட் மேல் அவன் கொண்ட ஆர்வத்தை பலர் கேலி செய்ய, சில நண்பர்களுடன் சேர்ந்து அவன் எப்படி ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கிறான் என்பதே கதை.

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த விஷயங்கள்:

1957 ஆம் வருடம் நடக்கும் கதை. ஒரு நிலக்கரி சுரங்கள்; அதனையொட்டி இருக்கும் சிறு குடியிருப்பு என நம்மை 1957ஆம் வருடத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு சின்ன அறிவியல் விஷயத்தை நிஜமாக்க அவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்.

சிறிது சிறிதாக அவர்கள் செய்யும் ஆராய்ச்சிகள்; அவர்கள் தயாரிக்கும் முதல் ராக்கெட்டுக்கும், படத்தின் இறுதியில் வரும் ராக்கெட்டுக்கும் இடையில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி.

அவர்கள் அதைச் செய்ய தரும் விலை; யாரெல்லாம் அவனுக்கு உதவுகிறார்கள்; நேரிடும் தடங்கல்கள் என்ன ?;

விளையாட்டாய் அவர்கள் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டால் ஏற்படும் விளைவுகள்;  சோகங்கள், சிரிப்புகள், சந்தோஷ தருணங்கள் ; தன்னம்பிக்கைகள்  என இந்தப் படம் கற்றுத்தரும் பாடம் நிறைய.

சிறியவர்களும், பெரியவர்களும், அறிவியலில் ஆர்வம் கொண்டவர்களும், தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல சோர்வில்லாமல் தன் கனவுகளைத் தேடிச் சொல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது.

12 August 2012

ஒரு காமிக்ஸின் கதை


            ஞாயிறு மதியம் மூன்று மணி ரேடியோ நாடகத்தை, ரேடியோ பக்கத்தில் உட்கார்ந்து ரெக்கார்ட் பண்ண வசதியாக கேசட் போட்டுவிட்டு, ரெக்கார்ட் பட்டனை எப்ப அழுத்தணும்னு உட்கார்ந்திருந்த காலம்.



   
   திருவிளையாடல் பட வசனக் கேசட் கேட்டு கேட்டு மனப்பாடமாகியிருந்த காலம்.

-      




     
        

         நால்ணா என்று சொல்லப்பட்ட 25 பைசா அப்பா தந்தார்ன்னா அது ரொம்ப அதிகமான பணம். அதுக்கு 5இல் இருந்து 10 மிட்டாய் தரும் காலம்.     25 பைசாவுக்கு ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் கிடைத்த காலம்.

-          




   கருணாநிதியை விடாமல் எம்.ஜி.யார் தேர்தலில் தோற்கடித்த காலம்.

-  



   ராஜேஷ்குமார் எழுதிய க்ரைம் நாவல் கதைகளை பயந்துகொண்டே படித்த காலம்.

-       



      
 மளிகைக் கடையில் 25 பைசாவுக்கு வாடகைக்கு ராணிகாமிக்ஸ் புத்தகம் எடுத்து இரண்டு நாட்களில் படித்துவிட்டு திருப்பித் தரும் காலம்.


-       சைக்கிள்களில் வீடுகளுக்கு வந்து லெண்டிங் லைப்ரரி (மங்கையர் மலர், தேவி, கோகுலம் போன்ற புத்தகங்கள்) தந்துகொண்டிருந்த காலம்.

-       பம்பரம், கிட்டிபுல், பட்டம், கோலிகுண்டு போன்ற விளையாட்டுக்களுக்கு தனி சீசன் இருந்த காலம்.

-       தெருவில் விளையாடும் பசங்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சைக்கிள் ரிக்‌ஷா ஓடிக்கொண்டிருந்த காலம்.

-       ஈசி சேர் என்ற ஒரு அற்புதமான ஓய்வெடுக்கும் சாதனம் இருந்த காலம்.

இப்படியான ஒரு காலத்தில் முதல் முறையாக என் அண்ணன் ஒரு காமிக்ஸ் வாங்கிவந்தான். வித்தியாசமான வடிவில் பாக்கெட் சைசில், போட்டிருந்த டிராயரில் வைத்துக்கொள்ளும் வகையில் இந்த அந்த புத்தகம் உடனடியாக மனதுக்குள் புகுந்தது. சிவகாசியில் இருந்து வந்துகொண்டிருந்த லயன் காமிக்ஸ்தான் அது. ராணிக்காமிக்ஸ் படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், இதில் வந்த கதைகள், ஹீரோக்கள் மற்றும் மொழிபெயர்ப்பில் ஒரு ரசிக்கும் தன்மை என்று ஒரு அற்புதமான பொழுதுபோக்குக்கு படிக்கும் புத்தகமாக வீட்டில் இடம் பிடிக்கத் தொடங்கியது. ரூ 2. சில நேரங்களில் கேட்ட உடன் கிடைக்கும், பல நேரங்களில் 25பைசா பாக்கெட் மணி சேர்த்து காமிக்ஸ் வாங்குவோம்.

மெயின் ரோட்டில் சைக்கிள் ஓட்டும் உரிமைப் பெற்ற என் அண்ணன் மட்டுமே கடைகளுக்குப் போய் வாங்கிவருவான். முதலில் படிக்கும் உரிமையும் அதனால் அவனுக்கே. அதுவரை சேகரித்து வந்த பொருட்கள் அனைத்திலும் ஈடுபாடு போய், காமிக்ஸ் சேகரிக்கும் காலம் தொடங்கியது.

உடல்நிலை சரியில்லாததால் ஸ்கூலுக்கு லீவு போட்ட ஒரு நாளில், இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை காலையிலேயே வாங்கி வந்து என்னிடம் தந்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றான் என் அண்ணன். அந்த புத்தகம் சூப்பர் சர்க்கஸ்”. முதல் முறையாக முழு வண்ணத்தில் வந்த அந்த புத்தகம் மனதைக் கவர்ந்தது. அட்டைப்பட்த்திலேயே, ஒரு கயிற்றின் மேல் வைக்கப்பட்டிருக்கும் பந்து ஒன்றின் மேல் ஒரு குதிரை, குதிரை மேல் ஒருவன், மற்றும் அந்த குதிரை ஸ்கிப்பிங் செய்துகொண்டு என்று அமர்க்களமாக வித்தியாசமாக இருந்தது. மற்றொரு புத்தகம் “பழி வாங்கும் பாவைஎன்ற பெயரில் டெக்ஸ்வில்லர் கதை. அமெரிக்காவில் இருந்த செவ்விந்தியர்களும், கௌபாய்களுடனும் நாங்களும் பயணம் செய்ய ஆரம்பித்தோம்.

காது நீண்ட, ஹெலிகாப்டர் போன்ற ஒரு வாகனத்தில் வலைத்துப்பாக்கியுடம் ஒரு ஹீரோ கம் வில்லன் (ஸ்பைடர்). ஒரு ரோபாட் (ஆர்ச்சி), இரவுக்கழுகு என்று பட்டபெயர் வைத்துக்கொண்டிருந்த ரேஞ்சர் (டெக்ஸ்வில்லர்), லக்கிலூக், ஜாலிஜம்பர், சிக்-பில் போன்ற கார்ட்டூன் கதைகள் என்று ரசனையை வேறு தளத்திற்கு இட்டுச்சென்றது லயன், முத்து, மினி மற்றும் ஜீனியர் லயன் கதை புத்தகங்களே.

நான் எல்லாம் சிம்ரன் போஸ்டரையே ஒரு நாள் பார்ப்பேன் என்பது போல, ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வந்த உடன் காமிக்ஸ் எடுத்து புரட்டுவது, அடுக்கி வைப்பது என்று, படிப்பது மட்டுமல்லாது அதனைப் பார்ப்பதும் ஒரு பொழுதுபோக்காக மாறியது. விடுமுறை நாட்களில் படித்த புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிப்பது; தீர்ந்து போன நோட்டுப்புத்தகங்களின் அட்டையைப் பிய்த்து, காமிக்ஸ் அளவுக்கு அதை வெட்டி, வீட்டிலேயே பைண்டிங் செய்ய ஆரம்பித்து நேர விரயம் அதிகமானதால், கோபம் கொண்ட என் அம்மா ஒரு நாள் எல்லா காமிக்ஸ்சையும் எடுத்து வெளியே போட்டார். பிறகு போராடி, சில சத்தியங்கள் செய்து மீண்டும் வீட்டுக்குள் வைக்கும் அனுமதி பெற்றோம்.

கால ஓட்டம், அப்பாவுக்கு அடிக்கடி கிடைத்த டிரான்ஸ்ஃபர் மற்றும் டிவியின் அறிமுகம் போன்றவை சேர்த்துவைத்த காமிக்ஸ்களை பத்திரமாக வைக்காமல் அனைத்தையும் இழக்க நேரிட்டது. சில வருடங்களில் காமிக்ஸ் என்ற ஒரு வஸ்து மனதிலிருந்து மறைந்தே போனது.

கிபி 2003 ஆம் ஆண்டு எதோச்சையாக லயன் காமிக்ஸ் வெப்சைட் பார்த்ததில் மீண்டும் தொடங்கியது காமிக்ஸ் ஆர்வம். அப்பொழுதுதான் பலரும் தன் சிறுவயதில் படித்து, பாதுகாக்க மறந்த காமிக்ஸ்களைத் தீவிரமாக தேட மற்றும் சேகரிக்க பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. சிறுவயதில் படித்த பல கதைகள் இப்பொழுது படித்தால் ரசிக்க முடியாமல் போனதும் தெரிந்தது (சில ஹீரோக்கள் - ஸ்பைடர் மற்றும் டெக்ஸ்வில்லர் இன்றும் படித்து ரசிக்க முடிகிறது). ஆனால், பழைய காமிக்ஸ்களைப் பார்க்கும் போது வரும் மகிழ்வான சிறுவயது நியாபகங்களை அனுபவிப்பதற்கு 35+ வயதான பலரும் இன்னும் காமிக்ஸ்களை வாங்கிப் படித்து மகிழ்கிறார்கள். அதில் நானும் ஒருவன். இன்று காமிக்ஸ் வாங்கிப் படிப்பதை கேலியாக பார்க்கும், இத்தனை க.வயசு ஆச்சு இன்னும் காமிக்ஸ் படிக்கிறியா போன்ற கேள்விகளும் மத்தியிலும், ஆர்வம் குறையவில்லை.

காமிக்ஸ் என்பது சிறுவர் படித்து மகிழ மட்டுமே என்ற எண்ணம் அதிகம் பேருக்கு இருக்கிறது. ஆனால் XIII, கேப்டன் ப்ளூபெரி போன்ற கதைகளைப் படித்தவர்கள் மற்றும் படித்தவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக கீழே இரண்டு சித்திரங்களை மட்டும் தந்திருக்கிறேன். இந்தக் கதைகள் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றவைகள். பல இலட்சம் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.

XIII - அமெரிக்காவின் குடியரசுத் தலைவரை கொன்ற பழியை சுமந்து கொண்டு, தன்னைப் பற்றிய நியாபகங்கள் மறைந்த நிலையில், தன்னைப் பற்றி அறிய முற்படும் ஒருவனின் கதை இது. மிகவும் சிக்கலான கதை அமைப்பு, அற்புதமான ஓவியங்கள் என்று மிக பிரம்மாண்டமான கதை இது.
சில வருடங்களுக்கு முன் இந்தக் கதை “இரத்தப் படலம்” என்ற பெயரில் 800+ பக்கங்களுடன், லயன் காமிக்ஸில், ரூ 200 விலையில் வெளியிடப்பட்டது.

கேப்டன் ப்ளூபெரி கௌபாய் கதை வரிசைகளில் மிகவும் அதிக ஆராய்ச்சி செய்யப்பட்டு, வரலாற்று பின்னணிகளுடன், நுணுக்கமான போர் தந்திரங்கள்; செவ்விந்தியர்களின் வாழ்வினைப் பற்றிய உண்மையான பதிவு என்று மிகவும் தத்ரூபமான கதை இது.

     
லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் தற்போது புதுப் பொலிவுடன், சர்வதேச தரத்தில், முழு வண்ணத்தில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். சந்தா செலுத்தி வீட்டுக்கே வரவழைக்கலாம். தகவல்களுக்கு இங்கு பார்க்கவும்.

படிக்கும் பழக்கம் அறவே மறந்து போன நம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு இந்த புத்தகங்களை அறிமுகம் செய்யலாம். அதன் மூலம் அவர்களின் இளமைக்காலத்தையும் மறக்கவியலா ஒன்றாக மாற்ற முடியும்.

சிறுவர்களை சந்திக்க இவர்களும்

இளைஞர்களை சந்திக்க இவர்களும் 


காத்துக் கொண்டிருக்கிறார்கள் ...

08 January 2012

லயனின் கம்பேக்கும் புதிய தலைமுறை வாசகரும்

நான்கு நாட்களுக்கு முன், இந்த விளம்பரப் பலகையைப் பார்த்தவுடன் ஆரம்பித்தது புத்தகப்பித்து. ஜனவரி தொடங்கியதும் மனது தேடத்தொடங்குவது முருகன் படம் போட்ட ராணிமுத்து காலண்டருக்கு அடுத்து இந்த புத்தகத் திருவிழாவை மட்டுமே.



கத்திப்பாரா ஜிலேபி போலவே புதிய பாலம் கட்டப்பட்டிருக்கும் கோயம்பேடு-பூந்தமல்லி சந்திப்பில், தவறாக ஏறி, நான்கு முறை பாலத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, ஒரு வழியாக 4 மணிக்கு புத்தகக் காட்சி வளாகம். எது மாறினாலும், புனித ஜார்ஜ் பள்ளி, புழுதி பறக்கும் மண் ரோடு, இரண்டு பக்கமும் எழுத்தாளர்களின் கட்டவுட், சர்க்கஸ் கூடாரம் போன்ற கூரை மற்றும் அதிக பார்க்கிங் கட்டணம் என்று எதுவும் மாறவில்லை. அதிக உணவகங்கள் கண்ணில் பட்டது இந்த வருடம்.

போனவருடத்திற்கு இந்த வருடம் வெயில் அதிகம் என்ற வழக்கமான சொல்லாடல் போல இல்லாமல், இந்த வருடம் உண்மையாகவே அதிகமான கூட்டம். சூரியபகவானின் அதிக உழைப்பினால், புழுக்கத்திற்கும் வேர்வைக்கும் குறைவில்லை. ஆனால் இந்த அசொளகரியங்கள் அனைத்தும், புத்தகங்களைப் பார்க்கத் தொடங்கியதும் ம(ற)றைந்துவிடுகிறது.

2 மாதத்திற்கு முன்பே தயார் செய்த புத்தகப் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்ததாலும், மனைவியும், மகனும் இந்த முறை வந்திருந்ததாலும், எல்லா ஸ்டாலையும் பார்க்க முடியவில்லை .  மகனுக்கு அவன் பள்ளி அடையாள அட்டையை மாட்டிவிட்டு, "காணா போயிட்டா, பக்கதுல இருக்குற அங்கிள் கிட்ட, இந்த போன் நம்பரைக் காட்டி போன் பண்ண சொல்லு", என்று அறிவுரை சொல்லியிருந்தேன். முதல் ஸ்டாலுக்கு நுழையும் போதே, அவன் பெயர் கொண்ட இன்னொரு பையன் காணாமல் போயிருப்பதாக மைக்கில் அறிவிப்பு வந்ததும், அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டேன்.

ஆப்பிள் புக்ஸ்டாலில் குழந்தைகள் புத்தகங்களை வாங்கிவிட்டு, நேராக மீனாட்சி பதிப்பகத்திற்குப் போனேன். சுஜாதா புத்தகங்கள் என்று ஆரம்பித்த உடனேயே "இன்டர்நெட்டுல போட்டுட்டாங்கள்ள... வந்த எல்லா புத்தகமும் நேத்தே காலியகிடுச்சு.. இன்னும் 4 நாள் கழிச்சு வாங்க" என்றார் அந்த பதிப்பகத்திலிருந்தவர்.


அடுத்து, லயன் காமிக்ஸ் புத்தகஸ்டால். எல்லா புத்தகங்களையும், அதன் கதைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தி, ஏற்கனவே கட்டிவைத்திருந்ததால், விடுபட்ட காமிக்ஸ் மட்டும் வாங்க முடியவில்லை. சில புத்தகங்கள் உதிரியாக கிடைத்தது. வாங்கிவிட்டு பில் போடுகையில், சற்றே பரபரப்பானது  ஸ்டால். என்ன விஷயம் என்று பார்த்தால், லயன் காமிக்ஸ் உரிமையாளர் விஜயன், ட்ராஸ்கி மருது மற்றும் எஸ்.ரா உள்ளே நுழைந்தனர். எஸ்.ராவை ஒரு அடி தொலைவில் பார்த்ததும் ஒரு சிலிர்ப்பு.. அவரது கைகளைப் பார்த்ததும், தேசாந்திரியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் மழை வரை கண் முன்னே வந்துபோனது. 25 வருடங்களாக காமிக்ஸ் ஹாட்லைனில் மட்டுமே பரிட்சையமான விஜயன் அவர்களைப் பார்த்ததும் புது அனுபவம்.

லயன் கம்பேக் ஸ்பெஷல் புத்தகத்தை வெளியிட, ட்ராஸ்கி மருதுவும் எஸ்.ராவும் பெற்றுக்கொண்டனர். காமிக்ஸ் புத்தகங்களின் அவசியத்தைப் பற்றி எஸ்.ரா ஒரு நிமிடம் பேசினார்.

அந்த ஐந்து நிமிடங்களில், 6 தடவை, மனைவியிடம், "இவர்தான் எஸ்.ரா, தேசாந்திரி படிச்சுக்கிட்டு இருப்பேனில்லை, அத எழுதுனவரு" என்று சொன்னேன்.

2 வருட லயன் காமிக்ஸ் சந்தா கட்டும் போது, பில் போடுபவர், என் பெயரைக் கேட்டுவிட்டு, அவரிடம் தொலைபேசியில் நான் ஒரு முறை பேசியதை நியாபகமாக சொன்னது ஒரு ஆச்சர்யம். ஸ்டாலை விட்டு சிறிது தூரம் போனதும், என் மனைவி, "நீங்க பரபரப்பானத பார்த்து நான் சூர்யாவோ இல்ல அஜித்தோ வந்திருக்காங்கன்னு நினைச்சேன்" என்றார்.

வழக்கமான உயிர்மை ஸ்டால், என் கைகளில் இருந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு, ஒருவர் "நானே எடுத்து தரேன்" என்று லிஸ்ட்டை வாங்கி, எடுத்துக் கொடுத்தார். ஒரு புத்தகத்தில் பின் அட்டையில் ரூபாய் 90 என்றிருந்தது. புத்தகத்தினுள்ளே ரூபாய் 75. விலைவாசி கடுமையாக ஏறியிருக்கிறது. விசா பதிப்பகத்தின் பல புதிய பதிப்புகள் அதிக விலை.

கிழக்கு மற்றும் காலச்சுவடுகளில் சில புத்தகங்கள் வாங்கிவிட்டு, மறுபடியும் இன்னுமொரு சிறுவர் புத்தக ஸ்டால். இன்னும் பல புத்தகங்கள். எண்ணிக்கையில் எனக்காக வாங்கிய புத்தகங்களை விட, சிறுவர் புத்தகங்கள் மிக அதிகம். இந்த வருடம், புதிய தலைமுறை வாசகரால் என் பட்ஜெட் குறைக்கப்பட்டுவிட்டது.

என்றும் அதிக விற்பனையாவது சுஜாதா மற்றும் பொன்னியின் செல்வன் (ரூபாய் 250லிருந்து 1300 வரைக் கிடைக்கிறது) என்று நினைக்கிறேன். வெளியில் வந்தபோது தா.பாண்டியன் பேச்சைத் தொடங்கியிருந்தார்.



அனுபவத்தால் சில அறிவுரைகள்.

குழந்தையுடன் வருபவர்கள், 4 மணிக்கு மேல் வந்தால் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். நிறைய குடிநீர் எடுத்து வருவது நல்லது. பெரியவர்களும் கோடை கால ஆடைகளை அணிவது உத்தமம். இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான ஸ்டால்கள். அதனால் கால் வலியும் அதிகம். நடக்கும் போது சில இடங்களில் மரப்பலகை மேல் அடித்திருக்கும் கம்பளம் எடுத்து வந்திருக்கிறது. கீழே பார்க்காமல் நடந்தால் தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். பின்னோக்கி பார்ப்பதோடு முன்னோக்கி மற்றும் கீழ்னோக்கியும் பார்த்தல் நலம்.