08 January 2012

லயனின் கம்பேக்கும் புதிய தலைமுறை வாசகரும்

நான்கு நாட்களுக்கு முன், இந்த விளம்பரப் பலகையைப் பார்த்தவுடன் ஆரம்பித்தது புத்தகப்பித்து. ஜனவரி தொடங்கியதும் மனது தேடத்தொடங்குவது முருகன் படம் போட்ட ராணிமுத்து காலண்டருக்கு அடுத்து இந்த புத்தகத் திருவிழாவை மட்டுமே.கத்திப்பாரா ஜிலேபி போலவே புதிய பாலம் கட்டப்பட்டிருக்கும் கோயம்பேடு-பூந்தமல்லி சந்திப்பில், தவறாக ஏறி, நான்கு முறை பாலத்தை சுற்றிப் பார்த்துவிட்டு, ஒரு வழியாக 4 மணிக்கு புத்தகக் காட்சி வளாகம். எது மாறினாலும், புனித ஜார்ஜ் பள்ளி, புழுதி பறக்கும் மண் ரோடு, இரண்டு பக்கமும் எழுத்தாளர்களின் கட்டவுட், சர்க்கஸ் கூடாரம் போன்ற கூரை மற்றும் அதிக பார்க்கிங் கட்டணம் என்று எதுவும் மாறவில்லை. அதிக உணவகங்கள் கண்ணில் பட்டது இந்த வருடம்.

போனவருடத்திற்கு இந்த வருடம் வெயில் அதிகம் என்ற வழக்கமான சொல்லாடல் போல இல்லாமல், இந்த வருடம் உண்மையாகவே அதிகமான கூட்டம். சூரியபகவானின் அதிக உழைப்பினால், புழுக்கத்திற்கும் வேர்வைக்கும் குறைவில்லை. ஆனால் இந்த அசொளகரியங்கள் அனைத்தும், புத்தகங்களைப் பார்க்கத் தொடங்கியதும் ம(ற)றைந்துவிடுகிறது.

2 மாதத்திற்கு முன்பே தயார் செய்த புத்தகப் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்திருந்ததாலும், மனைவியும், மகனும் இந்த முறை வந்திருந்ததாலும், எல்லா ஸ்டாலையும் பார்க்க முடியவில்லை .  மகனுக்கு அவன் பள்ளி அடையாள அட்டையை மாட்டிவிட்டு, "காணா போயிட்டா, பக்கதுல இருக்குற அங்கிள் கிட்ட, இந்த போன் நம்பரைக் காட்டி போன் பண்ண சொல்லு", என்று அறிவுரை சொல்லியிருந்தேன். முதல் ஸ்டாலுக்கு நுழையும் போதே, அவன் பெயர் கொண்ட இன்னொரு பையன் காணாமல் போயிருப்பதாக மைக்கில் அறிவிப்பு வந்ததும், அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டேன்.

ஆப்பிள் புக்ஸ்டாலில் குழந்தைகள் புத்தகங்களை வாங்கிவிட்டு, நேராக மீனாட்சி பதிப்பகத்திற்குப் போனேன். சுஜாதா புத்தகங்கள் என்று ஆரம்பித்த உடனேயே "இன்டர்நெட்டுல போட்டுட்டாங்கள்ள... வந்த எல்லா புத்தகமும் நேத்தே காலியகிடுச்சு.. இன்னும் 4 நாள் கழிச்சு வாங்க" என்றார் அந்த பதிப்பகத்திலிருந்தவர்.


அடுத்து, லயன் காமிக்ஸ் புத்தகஸ்டால். எல்லா புத்தகங்களையும், அதன் கதைக்கு ஏற்றவாறு வகைப்படுத்தி, ஏற்கனவே கட்டிவைத்திருந்ததால், விடுபட்ட காமிக்ஸ் மட்டும் வாங்க முடியவில்லை. சில புத்தகங்கள் உதிரியாக கிடைத்தது. வாங்கிவிட்டு பில் போடுகையில், சற்றே பரபரப்பானது  ஸ்டால். என்ன விஷயம் என்று பார்த்தால், லயன் காமிக்ஸ் உரிமையாளர் விஜயன், ட்ராஸ்கி மருது மற்றும் எஸ்.ரா உள்ளே நுழைந்தனர். எஸ்.ராவை ஒரு அடி தொலைவில் பார்த்ததும் ஒரு சிலிர்ப்பு.. அவரது கைகளைப் பார்த்ததும், தேசாந்திரியிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் மழை வரை கண் முன்னே வந்துபோனது. 25 வருடங்களாக காமிக்ஸ் ஹாட்லைனில் மட்டுமே பரிட்சையமான விஜயன் அவர்களைப் பார்த்ததும் புது அனுபவம்.

லயன் கம்பேக் ஸ்பெஷல் புத்தகத்தை வெளியிட, ட்ராஸ்கி மருதுவும் எஸ்.ராவும் பெற்றுக்கொண்டனர். காமிக்ஸ் புத்தகங்களின் அவசியத்தைப் பற்றி எஸ்.ரா ஒரு நிமிடம் பேசினார்.

அந்த ஐந்து நிமிடங்களில், 6 தடவை, மனைவியிடம், "இவர்தான் எஸ்.ரா, தேசாந்திரி படிச்சுக்கிட்டு இருப்பேனில்லை, அத எழுதுனவரு" என்று சொன்னேன்.

2 வருட லயன் காமிக்ஸ் சந்தா கட்டும் போது, பில் போடுபவர், என் பெயரைக் கேட்டுவிட்டு, அவரிடம் தொலைபேசியில் நான் ஒரு முறை பேசியதை நியாபகமாக சொன்னது ஒரு ஆச்சர்யம். ஸ்டாலை விட்டு சிறிது தூரம் போனதும், என் மனைவி, "நீங்க பரபரப்பானத பார்த்து நான் சூர்யாவோ இல்ல அஜித்தோ வந்திருக்காங்கன்னு நினைச்சேன்" என்றார்.

வழக்கமான உயிர்மை ஸ்டால், என் கைகளில் இருந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு, ஒருவர் "நானே எடுத்து தரேன்" என்று லிஸ்ட்டை வாங்கி, எடுத்துக் கொடுத்தார். ஒரு புத்தகத்தில் பின் அட்டையில் ரூபாய் 90 என்றிருந்தது. புத்தகத்தினுள்ளே ரூபாய் 75. விலைவாசி கடுமையாக ஏறியிருக்கிறது. விசா பதிப்பகத்தின் பல புதிய பதிப்புகள் அதிக விலை.

கிழக்கு மற்றும் காலச்சுவடுகளில் சில புத்தகங்கள் வாங்கிவிட்டு, மறுபடியும் இன்னுமொரு சிறுவர் புத்தக ஸ்டால். இன்னும் பல புத்தகங்கள். எண்ணிக்கையில் எனக்காக வாங்கிய புத்தகங்களை விட, சிறுவர் புத்தகங்கள் மிக அதிகம். இந்த வருடம், புதிய தலைமுறை வாசகரால் என் பட்ஜெட் குறைக்கப்பட்டுவிட்டது.

என்றும் அதிக விற்பனையாவது சுஜாதா மற்றும் பொன்னியின் செல்வன் (ரூபாய் 250லிருந்து 1300 வரைக் கிடைக்கிறது) என்று நினைக்கிறேன். வெளியில் வந்தபோது தா.பாண்டியன் பேச்சைத் தொடங்கியிருந்தார்.அனுபவத்தால் சில அறிவுரைகள்.

குழந்தையுடன் வருபவர்கள், 4 மணிக்கு மேல் வந்தால் வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். நிறைய குடிநீர் எடுத்து வருவது நல்லது. பெரியவர்களும் கோடை கால ஆடைகளை அணிவது உத்தமம். இந்த வருடம் மிக அதிக எண்ணிக்கையிலான ஸ்டால்கள். அதனால் கால் வலியும் அதிகம். நடக்கும் போது சில இடங்களில் மரப்பலகை மேல் அடித்திருக்கும் கம்பளம் எடுத்து வந்திருக்கிறது. கீழே பார்க்காமல் நடந்தால் தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். பின்னோக்கி பார்ப்பதோடு முன்னோக்கி மற்றும் கீழ்னோக்கியும் பார்த்தல் நலம்.

9 பின்னூட்டங்கள்:

Rettaival's Blog said...

Long time no see.... how are you...?

வித்யா said...

we too got the same reply on sujatha books:( missed them

அகஆழ் said...

படித்ததும் ஒரு முறை நேரில் சென்று வந்தது போல இருந்தது !!
வாங்கிய புத்தகங்களை படிப்பதில் மட்டும் இல்லாமல் இங்கேயும் எட்டி பாருங்கள்...

mohandivya said...

வலைச்சரம் மூலம், உங்கள் ப்லாக் பற்றி தெரிந்து கொண்டேன். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

King Viswa said...

நண்பரே,
அதெப்படி கரெக்ட் ஆக புத்தக வெளியீட்டு நேரத்தில் வந்து, ஆனால் ஸ்டாலில் இருந்த என்னை சந்திக்காமல் சென்றுவிட்டீர்கள்?

பின்னோக்கி said...

ரெட்டைவால் - நலம் அறிய ஆவல்.
வித்யா - வாங்க முடியவில்லை :(
அகஆழ் - கண்டிப்பாக
மோகன் - நன்றி
கிங் விஸ்வா - உங்களைப் பார்த்திருப்பேன். ஆனால் உங்கள் புகைப்படத்தைப் பார்த்ததில்லை அதனால் உங்களை அடையாளம் காண முடியவில்லை :)

Anonymous said...

good info!!!

krishy said...

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get the Vote Button

தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

Ram Prakash said...

புத்தாண்டு வாழ்த்துகள் பின்னோக்கி! ரொம்ப நாள் கழித்து எழுதியிறுக்கீர்கள்! தொடரும் என எதிர்பாற்க்கிரேன்...