30 July 2010

பதிவுலகில் நான் எப்படிப்பட்டவன் ? - ஆச்சரியமூட்டும் தகவல்கள்

”ப்ளீஸ்ப்பா !! என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க”, ன்னு கேட்குற மாதிரி இந்த தொடர் அழைப்புக்காக காத்திருந்தேன். ப்ரியமுடன் வசந்த் அழைத்துவிட்டார். மிக்க நன்றி. வாங்க பதிவுக்குள் செல்லலாம்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பின்னோக்கி


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் *****. என்னது ? ஒரே * ஆ தெரியுதா ?. அப்ப நீங்க ஒழுங்கா இன்கம்டாக்ஸ், இந்த வருஷம் அல்லது எந்த வருஷமும் கட்டலைன்னு தெரியுது. ஒழுங்கா கட்டுனவங்களுக்கு இது * ஆ தெரியாது. இப்ப சொல்லுங்க, என் உண்மையான பெயர் தெரியுதா ? தெரியலையா ?. தெரியலைன்னு சொல்றவங்க, அவங்களோட முழு விலாசத்தையும் எனக்கு அனுப்பி வைங்க. ஹலோ... இதுக்கெல்லாம் மிரண்டு போய், பதிவ படிக்காம போய்டாதீங்க..

சின்ன வயசு அனுபவங்களைப் பத்தி எழுத வேண்டும்னு தோணுச்சு. அதுனால பின்னோக்கின்னு பெயர் வெச்சுக்கிட்டேன். இப்ப, ரோடுல போனா, எல்லாரும் பின்னோக்கி !! பின்னோக்கின்னு ரொம்ப பாசமா கூப்பிடுறாங்க (பின்னாடி பார்த்து வண்டி ஓட்டாத ! முன்னாடி பார்த்து ஓட்டுன்னு திட்டுறாங்கன்னு, யாரும் பின்னூட்டம்... அட ! பாருங்க இதக் கூட பின்னூட்டம்னுதான் சொல்றோம். முன்னூட்டம்னு சொல்றதில்லை.) போதும் என் பெயர்க்காரணம்னு நினைக்கிறேன். நெக்ஸ்ட் கொஸ்டியன் ப்ளீஸ் !!


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

ம்ம்.. அது ஒரு பெரிய கதை. ஒரு டவுட்டு. எதுக்கு எல்லாரும் உண்மைய சொல்றத்துக்கு முன்னாடி அத கதைன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க ?.  சரி விஷயத்துக்கு வருவோம். ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் பையனுக்கு ஸ்கூல்ல, தமிழ் கட்டுரை எழுத சொன்னாங்க. தமிழ்ல டைப் பண்றத்துக்கு nhm writer டவுன்லோடு பண்ணி, டைப்படிக்க கத்துக்கிட்டு, அப்புறமா ஏன் நம்மோட எண்ணங்களை, எல்லாருக்கும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். எழுத ஆரம்பிச்சேன். அப்ப ஆரம்பிச்சது இந்தப் பயணம். (யார் அங்க ?? டிக்கெட் வாங்கியாச்சான்னு கேட்குறது ?)



4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

முதல் பதிவு போட்ட உடனே, தமிழ்மணத்துல சேர்த்தேன். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு, தமிழிஸ்ல சேர்த்தேன். யாரும் இல்லாத கடைக்கு டீ ஆத்துறது ரொம்ப கஷ்டம் தெரியுமா. நாம ஒரு பதிவு எழுதி, அத நாம மட்டுமே படிக்குறது ரொம்பக் கொடுமைங்க. அப்புறம் என் ஆபீஸ்ல இருக்குறவங்கள மிரட்டி என் பதிவ படிக்க வெச்சேன். கொஞ்ச நாள் கழிச்சு, எல்லாரும் என்கிட்ட பேசவே பயந்தாங்க. எங்க ! பேசுறத எல்லாம் எடுத்து பதிவா போட்டுடப்போறானோன்னு.

ரொம்ப பிரபலமான உடனே, கொஞ்சம் நாள் முன்னாடி ஞானோதயம் (யாரால ? என்னது ! நித்தின்னு யாரோ சொல்ற மாதிரி இருக்கே. அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க) வந்தது. இப்ப பேஜ் கவுண்டர்ர என் ப்ளாக்குல இருந்து எடுத்துட்டேன். (ஏய் ! ரொம்ப நடிக்காத, இப்பத்தான் ப்ளாக்கர்லயே எத்தனைப் பேர் வந்தார்கள் ! சென்றார்கள்னு குடுக்குறாங்களே..) சே..இந்த மனசாட்சியோட தொல்லைத் தாங்கலை. அப்ப அப்ப வந்து தொல்லைக் குடுக்குது.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஒரு பத்து பதிவு தவிர, மத்ததெல்லாம், சொந்த விஷயம் தான். வேற யோசிச்சு எழுத அளவுக்கு சரக்கு இல்லைங்க. வீட்டுல திட்டுவாங்க, எல்லாத்தையும் எழுதறீங்களேன்னு. நண்பர்கள் என்னையப் பார்த்தாலே தெரிச்சு ஓடுறாங்க. பேச பயப்படுறாங்க. மொத்தத்துல ஒரு டெரர்ர பார்க்குறமாதிரி பார்க்குறாங்க. இது தாங்க பக்க விளைவு.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என்னது ?? எழுதறத்துக்கு காசு குடுக்குறாங்களா ?.  நான் எழுதறதயெல்லாம் படிக்குறத்துக்கு, படிக்குறவங்களுக்கு காசு குடுக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். எழுதறாதல, நாலு பேரு ஓட்டு போடுறாங்க. நல்லா எழுதறன்னு சொல்றாங்க. எல்லா மனசும் ஒரு சின்ன பாராட்டுக்குத்தான் ஏங்கிக்கிட்டு இருக்குன்னு விமல் சொன்னார் இல்லையா ? அதுக்காகத்தான் எழுதறது.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ஒன்று மட்டுமே. இதுல எழுதவே, மேட்டர் எதுவும் சிக்க மாட்டேங்குதுங்க.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபம் வந்ததில்லைங்க. பொறாமை வந்துருக்கு. கொஞ்சம் வயித்தெரிச்சல் கூடப் பட்டிருக்கேன். அந்த லிஸ்ட் கீழே...



ஒரு ஐடியா கிடைச்சாலே அத ஒரு பதிவா போட்டுடுவேன். ஆனா இவரு, ஒரே பதிவுல 10 ஐடியா எழுதுறாரு. ரூம் போட்டு யோசிக்கிறாருன்னு நினைக்கிறேன்.






10 வரி யோசிச்சு எழுதறத்துக்குள்ள நாக்குத் தள்ளிடுது. இவரு, எழுத ஆரம்பிச்சாருன்னா, கதையாக் கொட்டுது.




இப்பல்லாம், மனசுல கவிதையாக் கொட்டுது. ஆனா, அந்த எழுத்துதான், வார்த்தை சிக்க மாட்டேங்குது. இவங்களுக்கு மட்டும் எங்க இருந்து வார்த்தை சிக்குதுன்னு தெரியலை.








வயசு ஏற ஏற அனுபவம் கூடும்னு சொல்லுவாங்க. எனக்கு அப்படி எதுவும் இதுவரை தெரியலை. ஆனா, இவரு வாழ்க்கையில பார்த்த மக்கள் எத்தனை பேரு பாருங்க. (இவருக்கு ரொம்ப கூச்ச சுபாவம். அதுனால, அவரோட போட்டோவ போடலை)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


தொடர்புகொண்டு பாராட்டுனது இல்லை. ஆனா, முதல்ல பின்னூட்டமிட்டவங்க ஈஸ்வரி. அவங்களுக்கு ரொம்ப நன்றி.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

இது நல்லக் கதையா இருக்கே. இங்கயே எல்லாத்தையும் சொல்லிட்டா, அப்புறம் பதிவு எப்படி போடுறது ?. அதுனால, தினமும் வந்து, என் பதிவ படிங்க. அதுல பதிவுலகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை சொல்றேன்.

28 July 2010

தொங்கு பாலத்தின் நடுவில் ...

ராசரியாக ஒரு இந்தியனின் ஆயுட்காலம் 65 முதல் 70 வருடம் என்றால், அதில் பாதி வயதில் இப்பொழுது இருக்கிறேன்.

வாழ்க்கை என்ற, 65 பலகைகளால் கட்டப்பட்ட தொங்கு பாலத்தின் பாதியைக் கடந்த உணர்வு. . இங்கிருந்து நடந்து வந்த பாலத்தை திரும்பிப் பார்க்கும் போது, முதல் 15 அடிகள் மிக எளிதாக, மனதில் பயம் என்பதே தெரியாமல் கடந்திருக்கிறேன்.

டந்து வந்த போது, இரண்டு புறமும் இருந்த கயிற்றை பிடிமானத்திற்காகக் கூட தொடாமல் சர்வ சாதாரணமாக வந்து விட்டேன். அங்கிருந்த போது காலின் அருகிலேயே தரையிருந்தது. விழுந்தாலும் அடி படாது என்ற உணர்வு. அதனால், கீழே பார்க்காமல், இருமருங்கிலும் இருந்த இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி வந்தாகிவிட்டது.

20வது அடியை வைக்கும்போது பாலம் சிறிது ஆட ஆரம்பித்தது. காலின் கீழே சில பலகைகள் உதிர்ந்து விழுந்த போது, முதன் முதலில் பயமும் கவலையும் வந்தது. கடக்கும் பாதையின் முக்கியத்துவமும், அதில் இருக்கும் ஆபத்தும், சவால்களும் புரிய ஆரம்பித்தது.


24வது அடியில், பிடிமானத்திற்கு இருந்த கயிறு வழுவிழந்து அறுந்த போது,  சுற்றி பாதுகாப்புக்காக எதுவும் இன்றி தனியே நிற்கும் உணர்வு. இனி என் வாழ்வு என் நடவடிக்கைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்ற பொறுப்புணர்ச்சி வந்தது.

27-28 வது அடியில், கைப்பிடித்து அழைத்துச் செல்ல ஒருவர், தோளில் சுமந்து இன்னொருவர் என்று மேலும் இரண்டு நபர்கள் என் வாழ்வில். அவர்களுக்கு நான் பிடிமானமா ? இல்லை எனக்கு அவர்களா ?. தெரியவில்லை. ஆனால் புது உற்சாகமும், நம்பிக்கையும் வந்தது.

லையில் சிறுபான்மையாக இருந்த வெள்ளை முடி, அதிக இடங்களைப் பிடித்து பெரும்பான்மையாக மாறத் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் தாமதாக வந்தாலும், நானும் இருக்கிறேன் என்று தாடையிலும் சில வெள்ளை முடிகள்.

ப்பாவின் தொப்பையைத் தொட்டு விளையாடின அந்த நாட்களின் நியாபகம் மறுபடியும். ஒரு மாற்றம்; அப்பாவின் தொப்பைக்கு பதிலாக என்னுடையது தொட்டு விளையாடும் என் பையன்.

”நாமெல்லாம் இப்படியா இருந்தோம் ?”
”நாங்க எல்லாம் படிக்கும் போது ....”
”சின்ன வயசுல நான் ....”
”உலகம் ரொம்ப மாறிடுச்சுல்ல ....”
போன்ற வரிகள் அடிக்கடி பேச்சில் இடம் பிடிக்கத்தொடங்கியிருக்கிறது.

“நீ பெரியவனான உடனே, என்னைப் பார்த்துக்குவியா ?" என்ற அசட்டுத்தனமான கேள்வியை, 6 வயது மகனிடம் கேட்கக்கூடாது என்று மனதினுள் வைக்கிறேன். வரும் வருடங்களில் வாய்விட்டு அவனிடம் கேட்டுவிடுவேனோ என்று தோன்றுகிறது.

கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா எழுதிய “70 வயது பிறந்த நாள் அனுபவங்கள்” படித்தவுடன், அவர் சொன்ன ஒரு சில விஷயங்கள் 35 வயதிலேயே நடப்பதைக் கண்டு அதிசயமாக இருக்கிறது. முக்கியமாக அந்த ரம்யா கிருஷ்ணன் விஷயம்.

இது வரை எடுத்த தவறான முடிவுகளைத் திருத்திக் கொள்ள அவகாசம் அதிகமாக இருந்தது. இனி எடுக்கும் முடிவுகள் சரியானவைகளாக எடுக்கப்பட வேண்டும் என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.

தொங்கு பாலத்தின் மீதியையும் சுகமாகக் கடக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.

( ***** )

மேலே சொன்ன மாதிரி ஃபீலிங்கோட எழுதலாம். இல்லைன்னா, இன்னைக்கு எனக்கு பிறந்த நாளுன்னு சிம்பிளா சொல்லிடலாம். வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றிகள்.

25 July 2010

கனவே கலையாதே

சென்னை - மிக அழகான, அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் ஒரு நகரம். இதன் சிறப்பு, இங்கு நிலவும் வெப்ப நிலை. குளிர்காலத்தில் 15 டிகிரியாகவும், வெயில் காலத்தில் 28 டிகிரியாகவும் இருக்கிறது.

குண்டு குழியில்லாத சாலைகள்; கட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து; குறைந்த மக்கள்தொகை என்று இந்தியாவிலேயே முதன்மையான, வாழத்தக்க நகரமாகத் திகழ்கிறது.

( **** )

நேற்று நடந்த தேர்தலில் சுமார் 98 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்தியாவின் அடுத்த பிரதமராக ******** தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் தொகுதியில், இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

( **** )

கடந்த ஆண்டு, இந்தியாவிலேயே அதிக வருமான வரி கட்டியவர் தொழிலதிபர் பின்னோக்கி. தன் வருமானத்தின் பெரும்பகுதியை அறக்கட்டளையின் மூலம் ஏழை எளியவர்களின் முன்னேற்றத்திற்காக செலவழிக்கிறார்.

( ****** )

இப்படியெல்லாம் மனசுல தோணுச்சுன்னா, அதுக்கு பேருதாங்க கனவு.

தூங்கும் போது மட்டும் கனவு காண்றவன் சோம்பேறி. முழிச்சுக்கிட்டும் கனவு காணுறவன் தான், தலைவன் - எப்படி இருக்கு இந்த பன்ச் டயலாக் ?

கனவு வேட்டை படம் பார்த்ததால, கனவ பத்தி எழுதலைங்க. CHELLA நாய்குட்டி தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருந்தாங்க.  அதுனால தான் இந்தப் பதிவு.

”பரிட்சையில கொஸ்டியன் பேப்பர் குடுத்துடுவாங்க. நானும் பேனாவ எடுத்து பதில் எழுத ஆரம்பிச்சா - கடவுளே !! எழுதவே வராது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகியும், ஒரு வரி கூட எழுதியிருக்க மாட்டேன். சூப்ரவைஸ்சர், இன்னும் 10 நிமிஷம் தான் நேரமிருக்குன்னு சொல்லுவாரு. எனக்கு படபடப்பா இருக்கும்” - அந்த நிமிஷத்துல முழிப்பு வரும். ஸ்ஸ்.. கனவு !!!. பெரும்பாலும் இந்தக் கனவு, பரிட்சை முடிஞ்சு 2 அல்லது 3 நாட்களுக்கு அப்புறம் தான் வரும். என்னக் காரணம்னு தெரியலை.

நமக்கு புடிச்ச மாதிரி ஒரு சம்பவம் கனவா வரணும்னா, தூக்கம் வர்றத்துக்கு முன்னாடி, அதாவது, மூளை தூக்கத்த தொடங்குறத்துக்கு முன்னாடி உள்ள நிலையில அந்த சம்பவத்தை நினைக்க வேண்டுமாம். கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, கரெக்ட்டா மூளை தூங்கத் தொடங்குற நேரத்துல எப்படி நினைக்குறதுன்ற டெக்னிக் யாருக்காவது தெரியுமா ? தெரிஞ்சா சொல்லுங்க.

மத்தபடி, நிறைவேறாத ஆசைகள் தான் கனவா வருதுன்னு சில பேரும், கனவு என்பது உணர்ச்சிகளின் வடிகால்னு சில பேரும் ( இப்ப நீ என்ன சொல்ற சண்முகமணின்னு சுந்தரகாண்டம் பட டயலாக் மாதிரி கேட்காதீங்க) சொல்றாங்க.

ஒவ்வோரு கனவுக்கும் ஒவ்வொரு பலன் இருக்காம். கனவு ஜோசியம்னு பெரிய சைஸ் புஸ்தகம் எல்லாம் இருக்கு. நேரம் இருந்தா படிச்சு பாருங்க.

கனவு காணுங்கள் !!

24 July 2010

ஆண்களுக்கு நீலம் ! பெண்களுக்கு ?

பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விருப்பமான நிறம் என்ன ? என்று ஒரு உலகளாவிய அளவில் ஆராய்ச்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள், வெவ்வேறு நாட்டிலிருந்து கலந்து கொண்டனர்.

முடிவில் பெரும்பான்மையான ஆண்களுக்கு நீலம் மற்றும் அதனைச்சார்ந்த நிறங்களும் பிடித்தமானவையாக இருந்தது. பெண்களுக்கு இளஞ்சிவப்பு நிறம்.


இந்த முடிவின் அடிப்படையில், பல நிறுவனங்கள், தங்களின் தயாரிப்பு பொருட்களின் நிறத்தை முடிவு செய்தனர்.

எப்படி உலகம் முழுவதும் இப்படி நிறத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயான ஒற்றுமை ?. பதில்.பரிணாம வளர்ச்சியில் இருந்தது.

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில், ஆண்களுக்கு வேட்டையாடுதலும், பெண்களுக்கு குழந்தைகளை பேணும் கடமையும் இருந்தது. வேட்டையாட நல்ல காலநிலை அவசியம். அதனால், கருமையான மழை மேகங்கள் இல்லாத நீல வானம், அவனுக்குப் பிடித்த மற்றும் அவசியமான ஒன்றாக இருந்தது.

பெண்கள், உணவுத்தேவைகளுக்காக, நன்றாக பழுத்த சிவப்பு நிற பழங்களை சேகரிப்பதில் ஈடுபட்டனர். இந்த இரண்டு நிறங்களும் வாழ்வியல் சார்ந்த நிறங்களாக, மரபணுக்களில் பதிந்தது.  அது இன்றும் தொடர்கிறது.

எனக்குப் பிடித்த நிறம் நீலம். சட்டையில் இருந்து கார் வரை இந்த நிறத்தையே தேர்ந்தெடுப்பேன்.

உங்களுக்குப் பிடித்த நிறம் எது ?

நன்றி: இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்ட, காபி குடிப்போர் சங்கப் பிரதிநிதிகளுக்கு.

22 July 2010

மூழ்கிப் பார்க்கப் போறாங்க

கி.பி 2010

தமிழ் செம்மொழி மாநாடு முடிந்ததும், இன்று தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. சங்க கால இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள துறைமுக நகரான பூம்புகார் அல்லது காவேரிபூம்பட்டினம், கடலுக்கு அடியில் மூழ்கி இருப்பதால், அதனை ஆராய்ந்து, புதைந்து கிடக்கும் பழங்காலப் பொருட்களை வெளியே எடுத்து வர திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.


கோவாவைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனமும் இந்தப் பணியை மேற்கொள்ள இருக்கிறது. மாமல்லபுரம் மற்றும் துவாரகை போன்ற இடங்களில், கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொண்டதில் இந்த நிறுவனங்களுக்கு அனுபவம் இருக்கிறது.





ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில், சோழர்கள் காலத்தில், பூம்புகார் நகரம், கடல் கொந்தளிப்பால் (சுனாமி ?) கடலுக்கடியில் சென்று விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 




கி.பி 2200

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம், கடலுக்கு அடியில் காணாமல் போன, சேது சமுத்திரக் கால்வாய் (??? !!!) கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. சற்றே ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன் இந்தக் கால்வாய் கடலில் தோண்டப்பட்டது. காலப்போக்கில், அது கடலுக்கு மிக ஆழத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

17 July 2010

சில சுவாரஸ்யங்கள் - களவாணி

திரைப்படம் வெற்றியடைய கதை மிக முக்கியமானது என்ற பொதுவான கருத்தை பல படங்கள் பொய்யாக்கியிருக்கிறது. அப்பாவைக் கொன்ற வில்லன்களைக் கொல்லும் மகன் - ’அபூர்வ சகோதரர்கள்’. எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணைக் காதலிக்க விரும்பும் இளைஞர்கள் - ’இன்று போய் நாளை வா'. இந்த வரிசையில் பருத்திவீரன் கதையை கொஞ்சம் சிரிப்புடன் சொல்லியிருக்கும் - களவாணி.

இனி புதிதாக சொல்ல எந்தக் கதையும் உலகில் இல்லை. அதனால் புதிய கதை கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட்டு, திரைக்கதையில் வித்தியாசத்தைக் காட்டி நிறைய தமிழ் படங்கள் வெற்றியடைவது நல்லது.

சில படங்கள் மட்டுமே பார்த்த உடன், அடுத்த நாளே மறுமுறை பார்த்திருக்கிறேன். நாயகன், சின்னத்தாயி, கதாநாயகன், ஆட்டோகிராஃப் மற்றும் பசங்க. அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தாராளமாக சேர்க்கலாம்.


சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் படம் முழுவதும் இருக்கிறது.


படத்தின் ஆரம்பத்தில் வரும் ஒரு காட்சியில், ”கட்டிக்கிறேன்னு சொல்லு” என்று கதாநாயகன் அந்த சின்ன பெண்ணிடம் வற்புறுத்தும் போது, சிணுங்கிக்கொண்டே சொல்லும் அந்தப் பெண்ணின் முகபாவனை.

நொந்து போய் உட்கார்ந்திருக்கும் இளவரசுவிடம், ”ஏய்யா ! வெளிநாட்டுல இருந்து வந்திருக்கன்னு சொன்னாங்க. நல்லாயிருக்கியா ?. என்ன கோடாலி தைலமா கொண்டு வந்த ?” என்று ஒரு கிழவி கேட்க, அப்பொழுது அவரது முகபாவனை.

டிராஃபிக் கான்ஸ்டபிளிடமே, கிரிக்கெட் பந்தயத்திற்கு நன்கொடை வசூலிப்பது.

பாஸ்போர்ட் எடுக்க மகன் பணம் கேட்க, அப்பா தர மறுக்க, சரண்யா “சரிடா, இந்த தாலி 7 பவுன். அத அடகு வெச்சு பணம் வாங்கிக்க” என்று சொல்லும் போது, பதைபதைப்புடன் “வேண்டாண்டி. கொண்டு போய் வித்துடுவாண்டி” என்று புலம்பும் இளவரசு.


அண்ணே ! குடத்துல தண்ணி கொண்டு வந்து கை வலிக்குது” என்று சொல்லும் தங்கையிடம், “எங்க போற ? போ ! போ ! நாலு குடத்த கொண்டு வந்து வெயிட்டிங்ல போடு” என்று அலட்சியமாக சொல்லும் கதாநாயகன்.

பிரைவேட்ல வெச்சுருக்குற நகைய எடுத்து சொசைட்டியில வெச்சுடணும். ஒரு நல்ல நேரம் வந்து கடன தள்ளுபடி பண்ணிட்டா நல்லாயிருக்கும்” என்று மாடு வண்டியில் அமர்ந்து வரும் அந்த பெண்கள் பேசுவது.

செல்போனில் சிக்னல் சரியாக கிடைக்காததால், கதாநாயகன் மாட்டு வண்டியை விட்டு இறங்க, மாடு வயல்வெளியை நோக்கி போக, அடுத்த முறை செல்போனில் கால் வரும் போது, ”ஏண்டி மறுபடியும் குதிச்சுடப் போறாண்டி... அய்யயோ, குதிச்சுட்டாண்டி” என்று மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்கள் அலறுவது.


உங்க வீட்டு விசேஷத்துல எல்லாம் வந்து வேலை செஞ்சுருக்கேன். என் வீட்டு விசேஷத்துல நல்லா வேலை செய்யுங்க” என்று சரண்யா, தன் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு வந்திருப்பவர்களிடம் சொல்வது.

இத்தனை பேர் நிக்கிறோமே, யார்கிட்ட வந்து நிக்குறா பார்த்தீங்களா” என்று, கதாநாயகி சரண்யாவிடம் வந்து நிற்கும் போது கூட்டதிலிருக்கும் பெண்கள் சொல்வது.

எனக்கு சேலையா எடுத்துக் குடுத்த ?” என்று கேட்கும் கிழவியிடம்,
ஆத்தா ! என் மகன் கல்யாணத்துக்கு எடுத்துக் குடுக்குறேன்” என்று இளவரசு சொல்லி முடிப்பதற்குள்,”அப்பா ! அண்ணன் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வாசல்ல வந்து நிக்குதுப்பா” என்று அவரது மகள் ஓடிவந்து சொல்வது.

இதோ ! சண்டை வரப்போகுது. அருவாள எடுத்துக்கிட்டு, நாக்கை கடிச்சுகிட்டு சண்டை போடப்போறாங்க என்று நினைக்கும் போது, அந்தக் காட்சி, காமெடியாய் முடிவது.

இந்தப் படத்தில், மிக இயல்பான நடிப்பில் முதலில் இருப்பவர் இளவரசு. தவமாய் தவமிருந்து படத்தை விட, அருமையாக செய்திருக்கிறார்.

 ”பசங்க” படத்தை அடுத்து எல்லாரும் பார்க்கக்கூடிய படம் இது.

16 July 2010

கேட்ட நியாபகம் இருக்கிறதா ?

வாசனை மற்றும் இசை. இவை இரண்டிற்கும், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை, நியாகப்படுத்தும் ஆற்றல் உண்டு. இங்கே நாம் என்றோ கேட்ட சில இசைக்கோர்வைகளை தந்திருக்கிறேன். முதலில் இவைகளைக் கேட்டு பழைய நினைவுகளில் மூழ்குங்கள். பிறகு அது எந்த படம்/நாடகம்/தொலைக்காட்சியில் பார்த்தது என்று கண்டுபிடியுங்கள். (கேட்பதற்கு முன் உங்கள் கணினியின் சப்தத்தைக் குறைத்துக் கொள்ளவும்).

முதலாவது,

நான் சிறுவயதில் மிகவும் விரும்பி பார்த்த ஒரு நிகழ்ச்சியின் துவக்கத்தில் வரும் இசை இது. அமைதியான இரவு நேரத்தில்இதனைக் கேட்கும் போது, மனது ஒரு சிறு ஊரையும் அதனையொற்றிய வாழ்வியலையும் நினைவுபடுத்தும்.

||


இரண்டாவது,

இது ஒரு தொலைக்காட்சித் தொடரின் பாடலின் இசை. இதனைக் கேட்கும் போது, சிறு பய உணர்ச்சியத் தூண்டக்கூடியது. கூடவே தாளம் போட வைக்கும் துள்ளலான மெட்டு. கேளுங்கள்.

||


மூன்றாவது,

காலை 6 மணியே விடியல் காலை என்று எண்ணிய சிறு வயதில், இந்த பாட்டுச் சத்தம் கேட்டபடி, கண்ணைக் கசக்கியபடி படுக்கையை விட்டு எழுந்தது நினைவிலிருக்கிறது. சில நேரங்களில் சீக்கிரம் எழுந்திருக்கவில்லை என திட்டு விழும்.

| |

நான்காவதாக,

Earth TV யில் உலகின் முக்கியமான நகரங்களின் தற்போதைய நேரம் மற்றும் வெப்ப நிலை, அந்தந்த நகரங்களின் முக்கியமான இடத்தில் நிறுவப்பட்டிருக்கும் கேமிரா மூலமாக காண்பிக்கப்படும். CNBC TV-18 தொலைக்காட்சியில் அதனை ஒளிபரப்பும் போது, அதன் பின்ணனியில் ஒலிக்கும் இசையும், உலகின் வெவ்வேறு இடங்களின் காட்சிகளும் மனதிற்கு இதமாக இருக்கும். எவ்வளவு தேடியும், அது எனக்குக் கிடைக்கவில்லை. அதனால் இங்கு பகிர இயலவில்லை.