26 January 2010

சாலையோரம் - தொடர் பதிவு

(என் வானம் அமுதா, இந்த தொடர் பதிவிற்கு என்னை அழைத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்)

7 வயதில், காரில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் போது, என் 3 வது அண்ணன், தூரத்தில் வரும் வண்டியைப் பார்த்து பயந்து, அவசரமாக அவன் கையை வைத்தே கார் கதவை மூட, விரல் மாட்டி நசுங்கியது. இது தான் எனக்கு நியாபகமிருக்கும் முதல் விபத்து.


முதன் முதலில் நான் கார் ஓட்டியது 9 வயதில். பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய உடன், காரை எடுத்துக்கொண்டு இரண்டு தெரு ஓட்டிவிட்டு, மூச்சிரைக்க வீடு திரும்புவேன். கையில் கருப்பாக டயரின் வண்ணம் ஒட்டியிருக்கும். தேய்ந்து போன பழைய டயரை, கார் என யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் என்ன ?.

2வது அண்ணன் சைக்கிள் வாங்கிய கதையை இந்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

சென்னையில் மவுண்ட் ரோடில் TVS-50 ஓட்டியது ஒரு சாதனையாக இருந்த காலம் அது. ஒரு நாள் இடது பக்கம் சிக்னல் பார்க்காமல் திரும்பிய போது, அங்கு மறைந்து (???) நின்ற காவலர் லபக் என்று கோழி மாதிரி அமுக்கினார். அபராதம் கட்டிய போது, அந்த ரசீதில் எழுத என் அப்பாவின் பெயரை சொன்ன போது, ரொம்ப வருத்தமாக இருந்தது.

பைக் ஓட்டும் போது, சாலையில் இடது புறத்தில், மிகவும் இடப்புறமாக ஓட்டும் பழக்கம். என்றைக்குமே சாலை நடுவில் பெரிய வண்டிகளுடன் போட்டி போட்டுக்கொண்டு ஓட்டியதில்லை. இப்பொழுது கார் ஓட்டும் போதும் 50 கி.மீ வேகத்திற்கு மேல் போவது இல்லை. இதை பலர் கிண்டல் செய்த போதும், நான் கண்டு கொண்டதில்லை. குருதிப்புனல் படத்தில் வரும் வசனம் “ஒவ்வொருத்தருக்கும் ஒரு ப்ரேக்கிங் பாயிண்ட் இருக்கு”. அதுபோல, வண்டி ஓட்டும் ஒவ்வொருவருக்கும், தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய அதிக பட்ச வேகம் என்று ஒன்றிருக்கிறது. அதனை உணர்ந்து ஓட்டினால் நிறைய விபத்துக்களைத் தவிர்க்கலாம். எனக்கு 50 கி.மீ தான்.

ஒரு நாள் அலுவலகம் போகும் போது பார்த்த, சாலையில் சிதறிக் கிடந்த ஒரு பைக்கும், மதிய உணவு அடங்கிய சாப்பாட்டுக் கூடையும் இன்னும் நினைவிலிருக்கிறது. சாலைகளில் சில இடங்களில், விபத்து நடந்த இடத்தில் ஒரு மனித உருவம் வரைந்து வைத்திருப்பார்கள். அந்த இடத்தை கடக்கும் போது அனைத்து வண்டிகளின் வேகம் தானாகவே குறையும். இப்பொழுது அப்படி வரைவது இல்லை ??.

இன்றைய நிலையில், உடலுறுப்பில் சேதாரம் இல்லாமல் வீடு திரும்புவது ஒரு சாதனையாகவே இருக்கிறது.

ஒரு சின்ன பார்முலாவைக் கடைபிடிப்போம். கொஞ்சம் பொறுமை + 100 சதவிகிதம் சாலை விதிகள் கடைபிடித்தல் - மது - செல்போன் = விபத்து குறைவான சாலை.

சுடச்சுட: இன்று காலை (27 ஜனவரி) வரும் போது, என் காரில் பின் விளக்கு, ஒரு பஸ்ஸீக்கு பிடித்துப் போக, மாட்டி இழுத்துவிட்டது. விளக்கோடு போயிற்று. 

25 January 2010

ஏமாற்ற பல வழி - Duplicity ஆங்கிலப் படம்

எப்படித்தான் யோசிப்பாங்களோ ?.
இவங்களால மட்டும் எப்படி நம்புற மாதிரி எடுக்க முடியுது ?
சே ! ஏமாந்துட்டேனே !

மேலே சொன்னவற்றில் எதாவது ஒன்று Duplicity-2009 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு தோன்றுவது 90 சதவிகிதம் நிச்சயம். எனக்கு மூன்றுமே தோன்றியது.


கதை ?. இரண்டு பெரிய மருந்து கம்பெனிகளுக்கு நடுவில் நடக்கும் விற்பனை ரீதியான போட்டி. ஒரு கம்பெனியில் நடப்பதை உளவு பார்த்து தெரிந்து கொள்ள மற்றவர்கள் முயற்சிப்பது. இதற்கு நடுவே கதாநாயகனும், நாயகிக்கும் இடையிலான, யாரை யார் ஏமாற்றுவது என்று போட்டி. கொஞ்சம் காமெடி, ஆக்‌ஷன், த்ரில் மற்றும் ரொமான்ஸ் - இந்த நான்கையும் போட்டு ஒரு குலுக்கு குலுக்கினால் இந்த படம்.

நாயகனாக க்ளைவ் ஓவன், நாயகியாக ஜீலியா ராபர்ட்ஸ்.  இருவருக்கும் இடையில் காதல் என்று நாம் ஒரு காட்சியில் நினைக்க, அடுத்த காட்சியில், நாம் நினைத்தது தவறோ ? என்று நினைக்கும் வகையில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு காதல் !!. 40 மில்லியன் டாலர் சம்பாதித்து விட்டு, தொழிலுக்கு சுபம் போடலாம் என்ற கனவில், இருவரும் கடைசியாக, இந்த மருந்து கம்பெனி உளவில் ஈடுபடுகிறார்கள்.


ஜீலியாவுக்கு மருந்து கம்பெனியில் பாதுகாப்புப் பிரிவில் வேலை. அந்த கம்பெனி ஒரு புதிய தயாரிப்பை அடுத்த 10 நாட்களில் உலகிற்குத் தெரிவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்ததும், அந்த புதிய மருந்து என்னவென்று அவள் கண்டுபிடித்து, அதன் பார்முலாவை போட்டிக் கம்பெனிக்குத் தெரிவிப்பதே கதை.

டபுள் கிராஸிங் எனப்படும் ஒருவனை மற்றொருவன் ஏமாற்றுவது படம் முழுக்க இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் ஒரு கட்டத்தில், எந்த கதாபாத்திரத்தையும் நம்ப முடியாத அளவுக்கு நம்மை நம்ப வைக்கிறார்கள். ஓ! இவன், இவனை ஏமாற்றுகிறான் என்று நாம் நினைக்கையில், அடுத்த காட்சியில் நிலைமை தலைகீழாக மாறுகிறது.

2 மணி நேரம் உங்களுக்கு கிடைத்து, கிளைமேக்ஸில் ஒரு ட்விஸ்ட் உள்ள பொழுது போக்கான படம் ஒன்று பார்க்க நினைத்தால், இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.

கடைசி காட்சியில் அவன் சிரிக்கும் போது, நமக்கு “ஏமாத்திப்புட்டீங்களே அய்யா!” என்று அம்மா தேர்தல் பிரச்சாரத்தின் போது சொன்னது (பாடியது) நினைவுக்கு வரும் ! வரலாம்.

23 January 2010

பெயரில் என்ன இருக்கு ?

                  
பெயரில் என்ன இருக்கு ?

பெயரில் என்னயிருக்கு ?
பிறந்ததிலிருந்து
கஸ்தூரி
பத்து வயதிலிருந்து
மாலதி
இருபது வயதிலிருந்து
ரஞ்சனி
இருபத்தியேழிலிருந்து
ஸ்ரீதேவி
பெயரைக் கேட்கும் போதெல்லாம்
தன்னிச்சையாய் திரும்புது
தலையும் கவனமும்
பெயரில் என்னவோயிருக்கிறது
எல்லாமுமிருக்கிறது

கடலில் கப்பல் போல
நினைவலைக் கடலில்
நீந்தும் கப்பலாய்
பெயர்கள்
எல்லாமுமாய் இருக்கிறது





ஆறறிவும்


ஐந்து கிலோமீட்டர் தொலைவில்
துணை எழுப்பும் ஒலி
குரங்குக்கு புரியும்
பல கிலோமீட்டர் தொலைவில்
துணை எழுப்பும் ஒலி
யானைக்குப் புரியும்
ஒலி எழுப்பும் கைப்பேசி
என்னுடையதா ?
அவனுடையதா ?

21 January 2010

சில (உண்மை) ஜோக்குகள்

3 வது அண்ணன் இன்ஜினியரிங் டிராயிங் கிளாஸ்க்கு தேவையான சில உபகரணங்களை எடுத்துப் போகவில்லை. லெக்சரர் வரிசையாக செக் பண்ணிக்கொண்டே வந்திருக்கிறார். எதாவது எடுத்து வராதவர்களிடம் காரணம் கேட்டுவிட்டு, அவர்களது ரோல் நம்பரை குறித்து வைத்துக்கொண்டார். என் அண்ணனிடம் வந்து நின்றவுடன், அவர் எதுவும் கேட்கும் முன்,

“என் ரோல் நம்பர் E77567" என்றான்.



1993 ஆம் வருடம். இன்ஜினியரிங் காலேஜ், கம்பியூட்டர் லேப்.
என் 3வது அண்ணனின் நண்பர்கள், ஒரு கம்பியூட்டரிலிருந்து இன்னொரு கம்பியூட்டருக்கு டேட்டா அனுப்பும் ஒரு புராஜெக்ட் செய்துகொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒருவர்

“டேய் ! யார்ரா அது, கேபிள்ல கால்ல மிதிக்கிறது ?. இந்த கம்பியூட்டர்ல டேட்டாவே வரலை”

கேபிளை, தண்ணீர் கொண்டு செல்லும் பைப் போல நினைத்த அவர், இன்று அமெரிக்காவில் பெரிய நெட்வொர்க்கிங் கம்பெனியில் பணிபுரிகிறார். இதில் இருந்து ஏட்டுச்சுரக்காய் கறிக்குத் தேவையில்லை என்பது புரிகிறது.



கம்பியூட்டர் லேபுக்கு பரிட்சை அன்று மட்டுமே வருகை தரும் சிலரில் ஒருவருக்கு, கேள்வித்தாள் தரப்பட்டு, அவரும் விடைத்தாளில் எதோ எழுதினார். அதை கம்பியூட்டரில் அடித்து, விடை எடுத்துக்கொடுக்க வேண்டும். கம்பியூட்டரின் முன் அமர்ந்தவர், அரை மணி நேரம் கழித்து,
“சார் ! இந்த கம்பியூட்டர் ரிப்பேர் போலயிருக்கு !”
“ஏன் ? என்ன ஆச்சு”
“கம்பியூட்டர் ஸ்கிரீன் (மானிட்டர்) கருப்பா இருக்கு, கீ போர்டுல என்ன அடிச்சாலும், மானிட்டர்ல ஒன்னும் வரலை”
“டேய் !, மானிட்டருக்கு பின்னால இருக்குற ஸ்விட்ச்ச போடுடா.”
(பழைய கால கம்பியூட்டரின் மானிட்டர்களுக்கு, ஆன் ஸ்விட்ச் பின்னால் இருக்கும் என்பது நாம் அறிந்ததே)




என் அண்ணனின் நண்பர் ஒருவர் இன்ஜினியரிங் டிராயிங் பரிட்சையில் எடுத்த மார்க் 100. இதில் என்ன ஆச்சரியம் ?. அவர் விடை எழுதியது 80 மார்க்குக்கு மட்டுமே. இன்று வரை என்ன நடந்தது என்பது அவருக்கே புரியாத புதிர்.


டிஸ்கி: மேலே சொன்ன அனைத்தும் நீங்க தானே செய்தீர்கள் ? என்று வரும் பின்னூட்டங்கள் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

19 January 2010

(எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் - 19.01.2010

ஒரு வழியாக, ஒரு மாதம் கழித்து, அலுவலத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறேன். இவ்வளவு நாளாக லேப்டாப்பில் வேலை பார்த்ததின் விளைவு; என் கம்பியூட்டரின் மானிட்டர் 70 MM ஸ்கிரீன் அளவுக்கு பெரியதாக தெரிகிறது. நலம் விசாரித்தார்கள். ஒரு சிலர் “என்ன ? உங்களுக்கு கால்ல அடிபட்டுச்சா ? ஒரு மாசமா ஆபீஸ்க்கு வரலையா ?” என்று கேட்டார்கள்.

என் பையன் போன் செய்து, அழுது “நீ ஆபிஸ் போகவேண்டாம் ! வீட்டுக்கு வா” என்றான். இரண்டொரு நாட்களில், அவன் விளையாடுவதற்கு இடையூறு செய்தால்,  “நீ ஆபிஸ்க்கு போ !!” என்று விரட்டுவான்.

************

விண்ணைத்தாண்டி வருவாயா - பாடல்கள் கேட்டேன். வாரணம் ஆயிரம் அளவுக்கு முதலில் கேட்ட உடனேயே ஈர்க்கவில்லை. இசையின் நுட்பம் தெரிந்தவர்கள் சிலாகிக்கக் கூடும். படம் வந்தவுடன் பிடிக்கும் என நினைக்கிறேன்.  எனக்கு என்னவோ, ஹாரிஸ் பாட்டுக்கள் கேட்ட உடனே பிடித்துவிடுகிறது.

************

ரத்த மேகங்கள் - அகதா கிறிஸ்டி, ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன் படித்தாயிற்று. அடுத்து, புத்தகக் காட்சியில் வாங்கப்பட்ட சில காமிக்ஸ்கள் படிக்க வேண்டும்; நேரம் கிடைக்கும் போது. பார்த்த இங்கிலீஷ் படங்களில், State Of Play, Time LineLaw Abiding Citizen  அருமையாக இருந்தது.

*************

பல வருடங்களுக்கு முன் “சிலம்பு’ என்ற தமிழ்ப்படம் வந்தது. கண்ணகியின் உடையாத இன்னொரு சிலம்பு இருக்கும் இடத்தை தேடிப் போகும் கதை. திரைக்கதையில் சொதப்பலான அந்த படத்தை, வரலாற்று ஆராய்ச்சி செய்து யாராவது படமாக எடுக்கலாம். உண்மையிலேயே இன்னொரு சிலம்பு இருக்கிறதா ?. தெரிந்தால் சொல்லுங்கள்.

14 January 2010

எதுவும் மாறவில்லை

விடிந்து சில நிமிடங்களில் முழிப்பு வந்தது. ஓய்வு என்பதே இல்லாமல் போன வாழ்க்கை, காலையில் எழுந்ததிலிருந்து வேலை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய் கழியும் இந்த வாழ்க்கைச் சுழலில் ஏன் சிக்கினோம் என்று சில நேரம் தோன்றுகிறது அவனுக்கு. ஆனால், மங்கிய ஒளியில், சலனமில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி, மகளை பார்க்கும் போது புது சக்தி கிடைக்கிறது. அது தான் அவனை தினமும் போராட வைக்கிறது.

அமைதியான இடத்தில் வீடு. மரங்களடர்ந்த, அருகில் சலசலக்கும் ஆறு என்று இயற்கையை சார்ந்த வாழ்வும் சில நேரங்களில் வெறுத்துப் போகிறது.


வெளியே வந்து பார்த்த போது, சற்று முன் எழும்பி இருந்த சூரியனை மழை மேகங்கள் சூழத் தொடங்கியிருந்தது. இந்த வானிலையில் வெளியே போவது சரியில்லை என நினைத்தான். மீண்டும் கண் மூடித் தூங்க முயற்சித்தான்.

”எழுந்திரிங்க !!, சாப்பிட ஒன்றும் இல்லை” என்ற குரல் கேட்டு முழித்தவனுக்கு தான் வெகு நேரம் தூங்கிவிட்டது போல இருந்தது. கண்ணைக் கசக்கி பார்க்கும் போது, எதிரிலிருந்த அவளின் உருவம் இப்பொழுது தெரிந்தது.

“வெளியே இவ்வளவு மழை பெய்யும் போது எப்படி வெளியே போவது ?” என்றான்.

“வேறு வழியில்லை, சாப்பிட எதாவது வேண்டும். அவளுக்கு மிகவும் பசிக்கிறது. சின்னக் குழந்தை, பசியால் அழ ஆரம்பித்துவிட்டால் கடினம்” என்றாள்.

பெய்யும் மழையில் வெளியே போனவன் ஒரு மணி நேரம் கழித்து, முழுவதும் நனைந்தவாறு, ”மழை நிற்காது போல இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இதையே வைத்துக்கொள்” என்று, அப்போது வேட்டையாடிய காட்டு எருமையின், காலை மட்டும் அவளிடம் தந்துவிட்டு, முப்பத்தியிரண்டாயிரம் வருடங்கள் கழித்தும் குகைச்சுவற்றில் அழியாமல் இருக்கப்போகும் வேட்டைக் காட்சியை வரையத் தொடங்கினான்.

நன்றி: http://images.bidorbuy.co.za/

13 January 2010

சோதனை மேல் சோதனை - துப்பறியலாம் வாங்க

இந்தப் பதிவை முழுவதும் படிப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கிறது.
------------------------------------------------------------------------------------

நியூயார்க்,1991ஆம் வருடத்தில் ஒரு நாள்; எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டை, தீயணைப்பு படையினர் வந்து அணைத்த போது, வீடே சாம்பலாக மாறியிருந்தது. வீட்டில் யாரும் இல்லையா ?. இருந்தார்கள். ஆனால் வீட்டை விட்டு 100 அடி தள்ளி, சடலமாக.

49 வயதான மேரி, உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்திருந்தார். உயிருடன் இருக்கும் போதே, அவரின் வீடு எரிக்கப்பட்டிருக்கிறது. அவரின் நுரையீரலை ஆரய்ந்த போது இது தெரிந்தது. தீயினால் வீட்டை விட்டு வெளியே வந்த அவரை கொன்றிருக்கிறார்கள்.

சந்தேகம் 2 பேரின் மீது. மேரி விவாகரத்து செய்த அவரின் முன்னாள் கணவர் பீட்டர். சம்பவம் நடந்த அன்று வெளியூரில் இருந்தது நிரூபிக்கப்பட்டது. அடுத்த சந்தேகம், ஜானின் மீது. யார் அந்த ஜான் ?.

மேரிக்கு, குழந்தைகளின் உரிமையைக் காக்கும், அரசாங்க பணியில் வேலை. ஜான், தன் மகளை, தன்னிடம் தராத இந்த அலுவலகத்தின் மேல் ஆத்திரம் கொண்டு, அந்த அலுவலகத்திலுள்ளவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்திருந்தான். இந்த மிரட்டலுக்காக 6 மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு 3 நாட்களுக்கு முன் தான் விடுதலையாகிருந்தான். சம்பவம் நடந்த அன்று இரவு, தன் தோழியுடன் தங்கியிருந்தேன் என்றான். விசாரணையில், அவனின் தோழி, சிறையில் இருப்பது தெரிந்தது. சிம்பிள் !. வீட்டை எரித்த மற்றும் மேரியைக் கொன்ற குற்றத்திற்காக ஜான் கைது செய்யப்பட்டான்.

கோர்ட்டில், அவனின் முன்னாள் மனைவியும், இன்னாள் காதலியும், ஜானுக்கு கோபம் வந்தால் மிகவும் மூர்க்கமாக மாறிவிடுவான்; அந்த நேரத்தில் கடிக்கவும் செய்வான் என்றார்கள். மேரியின் உடலிலும் கடிக்கப்பட்டதற்கான அடையாளம் இருக்கவே, தடயவியல் நிபுணர்கள் ஜானின் பல் மாதிரியை எடுத்து, மேரியின் கடித் தடத்துடன் ஒப்பிட்டார்கள். ஏமாற்றம். ஜானுக்கு முன் பல் இரண்டு கிடையாது. ஆனால், மேரியின் உடலில் இருந்த கடித் தடம் முன் பல் அனைத்தும் இருக்கும் ஒருவனால் ஏற்பட்டது. இருப்பினும், ஜட்ஜ், ஜானை நம்பவில்லை.

மேரியின் துணியில் இருந்த எச்சிலில் DNA இருக்கும். அதை ஜானுடன் ஒப்பிட்டுப் பார்க்க, ஜான் கேட்டுக்கொண்டான். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து ஜானுக்கு 25 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.


சிறையில், ஜான், தனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் படுக்கவில்லை. கேட்ட போது, அந்த படுக்கை உண்மையான குற்றவாளியினுடையது என்றும், தான் ஏன் அதில் படுக்க வேண்டும்? என்று கேட்டான். அப்பீல் மேல் அப்பீல் செய்தான். அவனுடைய வழக்கு மறுவிசாரணைக்கு ஏற்கப்படவேயில்லை. ஜான் படிக்காத சட்டபுத்தகங்கள் இல்லை. ஒரு கட்டத்தில், அவன் வக்கீலாகவே மாறி இருந்தான்.
12 வருடங்கள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சி, அவனின் சிறை வாழ்க்கையை மாற்றியது. என்ன அது ?.

ஜானின் பெற்றோர்கள் வசித்து வந்த வீட்டில் தீ விபத்து. அதில், ஜானின் வழக்கு சம்மந்தப்பட்ட 570 பக்க விசாரணைக் குறிப்பு அழிந்து போனது.12 வருடங்களாக சிறையில் வேலை செய்து சிறிது பணம் சேர்த்திருந்தான். அதில் 87 டாலர் செலவு செய்து, மீண்டும் தன் விசாரணைக் குறிப்புகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றான். அதை படிக்கும் போது, 4 சாட்சிகளின் வாக்குமூலம் இருந்தது. வழக்கு நடக்கும் போது ஜான் இதனைப் பார்க்கவில்லை. அதில் ஒரு சாட்சி, மேரியின் வீட்டின் உரிமையாளர்களான ஜிம்-பிரௌன்.

ஜிம், சம்பவம் நடந்த இரவு, பிரௌன், எரிந்து கொண்டிருந்த வீட்டை அடைந்த பிறகு காரை விட்டு இறங்கி, வீட்டின் எதிர் புறத்தில் 100 அடி தள்ளி எதையோ தேடிக்கொண்டிருந்தார். எனக்கு அது வித்தியாசமாகப் பட்டது. என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, எதாவது விட்டுவிட்டேனா என்று பார்த்தேன் என்று கூறினார். இதையடுத்து பிரௌனை விசாரித்த போது, தான் நள்ளிரவு 1.30 மணி வரை, பாரில் இருந்ததாக சொன்னார். ஆனால், பாரில் அவர் 12.00 மணிக்கு கிளம்பி விட்டதாகக் கூறியிருந்தார்கள். இந்த விபரங்கள் எல்லாம் அந்த குறிப்பில் இருந்தது. இதனைப் படித்த ஜான், போலீஸ் எவ்வளவு கவனக்குறைவாக தன் வழக்கை நடத்தியிருக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டான். அவனால் முடிந்தது, பிரௌனைத் திட்டி கீழ் கண்ட கடிதத்தை எழுதுவதே,
“டேய் பிரௌன். நீ சிறையில் இருக்க வேண்டியவன். கடந்த 12 வருடங்களாக நீ செய்த குற்றத்திற்காக நான் சிறையில் இருக்கிறேன். நீ வெளியே இருக்கிறாய். கூடிய விரைவில், இங்கு நீ வரப் போகிறாய். உனக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். ”

என்று எழுதி அனுப்பினான். ஜானின் திட்டம், இந்த கடிதத்திற்கு, பிரௌன் பதில் கடிதம் எழுதும் போது, அவன் எச்சில் தொட்டு, அந்த கடிதத்தை ஒட்டி அனுப்புவான். அந்த எச்சிலில் இருந்து DNAவை எடுத்து, மேரியின் துணியில் இருந்த எச்சிலின் DNAவுடன் சரிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்று நினைத்தான். ஆனால் நடந்தது ?.

கடிதத்தைப் படித்தவுடன், பிரௌன், ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.


ஜானின் சிறையிலிருந்து வெளி வரும் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து, “நிரபராதிகளுக்கு உதவும்” ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் முறையிட்டான். அந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, DNA பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஜானின் DNAவும், மேரியின் துணியிலிருந்ததும் ஒத்துப் போகவில்லை. தெரிந்ததுதான் இது. சரி ! இப்பொழுது, பிரௌனின் DNAவை சோதிக்கவேண்டும். அவன் தான் போய் சேர்ந்துவிட்டானே ! என்ன செய்வது ?. அந்த நேரத்தில், பிரௌனின், மகள் உதவிக்கு வந்தாள். அவளது DNA எடுக்கப்பட்டது. சோதனையில், கொலை செய்தது பிரௌன் என்று முடிவானது. இந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முறையிட்டனர். நீதிபதி மறுத்துவிட்டார். என்ன காரணம் ?

பிரௌனின் மகள் தான் அவள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ?. அதனால் DNA பரிசோதனை முடிவுகள் செல்லாது என்று நவீன நாட்டாமையாக மாறி மறுத்து விட்டார்.

சோதனை !.. சோதனை மேல் சோதனை !. கடைசியாக, புதைக்கப்பட்ட பிரௌன் தோண்டி எடுக்கப்பட்டு, DNAவை பரிசோதித்ததில், குற்றவாளி ஜான் இல்லை, பிரௌன் தான் என்று உறுதி செய்யப்பட்டது.

15 வருடம், செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருந்த ஜான் விடுதலை செய்யப்பட்டான்.


பிரௌன் எதற்காக மேரியைக் கொன்றான் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.

இந்த வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டியது; 15 வருடங்களாக மேரியின் துணி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது; அறிவியல் வளர்ச்சியினால் சாத்தியப்பட்ட DNA பரிசோதனை மற்றும் ஜானின் இடைவிடாத போராட்டம்.




நன்றி: my.biotechlife.net, www.theolivepress.es

12 January 2010

கடைசி நேர புத்தகங்கள்

ஞாயிற்றுக் கிழமை, 4 மணியளவில் ஜாக்கிசேகர் தன் பதிவில், பாரதி பதிப்பகத்தில், சுஜாதா எழுதிய நாவல்கள் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதாக எழுதியிருந்தார்.

என்னென்ன புத்தகங்கள் இருக்கிறது என்று தெரியவில்லை. யார் வாங்கி வருவார்கள் தெரியவில்லை.


பதிவினை மீண்டும் படித்த போது ஒரு ஐடியா. உடனே அந்தப் புகைப்படத்தை பெரிது படுத்திப் பார்த்தேன். அதில், சுஜாதாவின் புத்தகங்கள்
காகிதச் சங்கிலிகள்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
அப்பா, அன்புள்ள அப்பா
மனைவி கிடைத்தாள்
ஹைக்கூ ஒரு எளிய அறிமுகம்

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய

வல்லமை தாராயோ
இப்படித்தான் ஆரம்பிக்கிறார்கள்
நான்கடி சவுக்கு
மிஸ் இந்தியா மிஸ்ஸிங்
எல்லாம் பொய்
ஆரம்பத்தில் அப்படித்தான்

புத்தகங்கள் தெளிவாக தெரிந்தது. சரி, புத்தகங்களின் பெயர் கிடைத்துவிட்டது. யார் வாங்கி வருவார்கள்?. தூண்டிலை வீசினேன். பொறுமையுடன் காத்திருந்தேன். 6 மணியளவில் என் மனைவியின் தம்பி உருவில் 6 அடி மீன் சிக்கியத (பதிவு படிக்கும் பழக்கம் என் மச்சானுக்கு இல்லை. அதனால் தைரியமாக எழுதுகிறேன்).

”எங்க இருக்கு இந்த புத்தகக் காட்சி?”
“பச்சையப்பா காலேஜ் பக்கத்துல. அந்த இடத்துக்கு போய் யார்கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க. கண்டுபிடிக்குறது ரொம்ப ஈஸி”
“சேட்டன் பகத் எழுதுன புத்தகம் இருக்குமா ?”
“நீ வேற, 10 கோடி புக் இருக்கு. சேட்டன் பகத் புக் இல்லாம இருக்குமா ?”
(அட, என்ன சொன்னாலும் வீட்டை விட்டு கிளம்ப மாட்டேங்குறானே ?)
“ஸ்டால் நம்பர் தெரியுமா ?”
“125. நேரா அங்க போ. இந்த புக் லிஸ்ட் காண்பி. அவங்களே எடுத்துக் கொடுப்பாங்க. நீ தேட வேண்டியதிருக்காது”


ஒரு வழியாக 6.30 மணியளவில் கிளம்பி, 7.30 மணிக்கு போய், 8 மணிக்கு “நீங்க சொன்னதுல 4 புக்ஸ் கிடைக்கலை. மத்ததெல்லாம் வாங்கிட்டேன்” என்ற தகவல் கேட்டு, உஸ்... ஒரு வழியா, இந்த புத்தகக் காட்சியை வீட்டிலிருந்தபடியே முடித்த சந்தோஷத்தை அனுபவித்தேன்.

பெரும்பாலான புத்தகங்கள் 1990-களில் பிரிண்ட் ஆனது. அப்பொழுது விற்பனை விலையான ரூபாய் 15-க்கே தந்தார்கள். இதனால் பாரதி பதிப்பகத்திற்கு நஷ்டமா ? தெரியவில்லை. எப்படியிருந்தாலும், புத்தக விலையை மாற்றாமல், பழைய விலைக்கே விற்றது நல்லதாகப் போயிற்று. தகவல் தந்த ஜாக்கிசேகர் அவர்களுக்கு நன்றி (புகைப்படத்திற்காக இன்னுமொரு நன்றி).

11 January 2010

(எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் - 11.01.2010

இன்று காலை மருத்துவரை (பயப்படாதீர்கள் ! என் காலுக்கு வைத்தியம் செய்யும் டாக்டரை), பார்க்க 11 மணிக்கு போய், அவரின் தரிசனம் கிடைத்தது மாலை 5 மணிக்கு. 5 நிமிடத்தில் என் பிரச்சினைகளைக் கேட்டு, அறையின் வெளியே அனுப்பி விட்டார். அந்த 5 நிமிடத்திற்குள், அவரின் ஏர்டெல் டெலிபோன் பில்லை, ஏர்டெல் வலைத்தளத்தின் வழியே கட்டினார். அவரின் கடவுச்சொல் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. அந்தக் கடவுச்சொல் “fracture"

*********

சமீபத்தில் பார்த்த ”ப்ரூ-இரண்டாம் டிகாக்‌ஷன்” விளம்பரம் மிகவும் பிடித்தது. அந்த 30 நொடிகளுக்குள், மருமகளின் முகபாவனைகள், மறுபடியும் பார்க்கத் தூண்டியது. வசனமும், பின்ணனி இசையும் இல்லாத அந்த 10 நொடி மௌனம். ஆஹா !.


*********

பல, பிரபல பதிவர்களின் புரபைலில் இருக்கும் புகைப்படத்திற்கும், சமீபத்தில் வெளியாகி வரும், அவர்களின் பதிவர் சந்திப்பு மற்றும் புத்தகக் காட்சி புகைப்படத்திற்கும் உள்ள வித்தியாசம் அதிகம். மிகவும் வித்தியாசம் தெரிந்த ஒருவர் ”புலம்பல்கள் - ஆதிமூல கிருஷ்ணன்”.


சில மாதங்களுக்கு முன், பெரிய மீசை வைத்த அவரின் படத்தைப் பார்த்த போது 1980 களின், பெரிய பாட்டம் பெல்ஸ்  அணிந்த, ஸ்டெப் கட்டிங் ஹீரோ நியாபகம் வந்தது. அவரது மீசை, கிராமத்தில் வசிப்பவர் போல இருந்தது. தினமும் அந்த புகைப்படத்தைப் பார்த்து, ஒரு பிம்பம் ஏற்பட்டது. சில வாரங்கள் (மாதங்கள் ?)க்கு முன் அவர் மாற்றிய  இந்த படம் வேறு ஒரு பிம்பத்தை (நகரப்புற, ஸ்டைலான) ஏற்படுத்தியது. இன்று பரிசல்காரன் அவர்களின் இந்த பதிவில் இன்னுமொரு வித்தியாசமான தோற்றம்.

**********
ராட்டினத்தில் 7 வயது பையனின் கை சிக்கி உடைந்து, கட்டு போட்டுக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். வலி குறைந்து அழுகை நின்றிருந்தது. அவனின் அம்மா எக்ஸ்-ரே பார்த்துக் கொண்டிருந்தார்.

”ஏம்மா ! முதல் எக்ஸ்-ரேல என் கை எலும்பு  “v" மாதிரி இருந்துச்சு, கட்டு போட்டோன்ன இப்ப “U" மாதிரி இருக்கும்மா” என்றான்

இன்று இரவு அவனுக்கு மயக்கமருந்து கொடுத்து, “u' வடிவில் வளைந்திருக்கும் அவன் கை எலும்பை, நேராக்க சிகிச்சை அளிக்கப் போகிறார்கள்.

நன்றி - புலம்பல்கள் (படத்திற்காக)

09 January 2010

திக்.திக்.பக்.பக் - 3

திக்.திக்.பக்.பக்- சிறுவயதில் என்னை பயத்திலாழ்த்திய, இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போது, சிரிப்பிலாழ்த்தும் சில சம்பவங்களின் தொகுப்பு இது.

*********
என் சிறு வயதில், ஒரு நாள் பெற்றோர்கள் வெளியூர் போயிருந்தார்கள்.ரொம்ப நாளாக அப்பா சாப்பிடும் ஜெம்ஸ் வடிவிலான சிகப்பு நிற மாத்திரை மேல் எனக்கும் என் 3 வது அண்ணனுக்கும் ஒரு கண் வீதம் மொத்தம் இரண்டு கண்கள். இது தான் தக்க சமயம் என்று, 100 மாத்திரைகள் கொண்ட பாட்டிலிலிருந்து ஆளுக்கு 50 மாத்திரை வீதம் பிரித்துக் கொண்டோம். வாயில் போட்டு மூணு சப்.சப்.சப். இனிப்பு சுவை முடிந்து, மாத்திரை கசப்புத் தொடங்கும் அந்த நேரத்தில் ஒரு துப்ப்ப். இதே மாதிரி 100 மாத்திரையையும் சாப்பிட்டு விட்டு, மாத்திரையை, பீரோவுக்கு அடியில் போட்டோம்.


அம்மா வீடு திரும்பி, வீட்டைக் கூட்டும் போது, பீரோவுக்கு அடியிலிருந்த அத்தனை வெள்ளை மாத்திரைகளைப் பார்த்து அலறி, எங்களைக் கேட்க, அடிக்கு பயந்து உண்மையைச் சொன்னோம். அதுவரை தைரியமாக இருந்த நாங்கள், பீதியடைந்து அழ ஆரம்பித்தோம்.
“டேய் ! எப்படா சாப்டீங்க ?”
“காலைலயே சாப்டுட்டோம்மா !!!”
எங்க ரெண்டு பேரையும் மொத்திவிட்டு, அம்மா அழ ஆரம்பித்தார்.

இதன் மூலம் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், மருந்து மாத்திரைகளை குழந்தையின் கைக்கு, வாய்க்கு எட்டும் தொலைவில், உயரத்தில் வைக்காதீர்கள்.

*********
அதே சிறு வயது. நாமக்கல்லில் பெரிய மொட்டை மாடியுடன் கூடிய தனி வீட்டில் இருந்த காலம். குறும்பு செய்ய ஏற்ற, அம்மா, அப்பா வெளியூர் போயிருந்த நேரம். பேய் மழை. மாடியில் போய், மழை நீர் வடிகால் ஓட்டையை அடைத்து விட்டோம். சில மணி நேரத்தில் முட்டி அளவுக்குத் தண்ணீர் வந்துவிட்டது.அதில் குதித்து விளையாடினோம்.

மழை நின்றபின், பக்கத்து வீட்டிலிருந்த என் நண்பன், இந்த மாதிரி தண்ணீர் தேங்கினால், வீடு இடிந்து விடும் என்று பயத்தைக் கிளப்பினான். சில மாதங்களுக்கு முன், இன்னொரு நண்பன், புது வீடு கட்டும் போது, கான்கிரீட் தளத்தில் தண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது நியாபகத்திற்கு வந்தது. அப்பொழுது அந்த மாதிரி தண்ணீர் தேக்கி வைப்பது கட்டிடத்திற்கு வலு கொடுக்கும் என்று அவன் சொல்லியிருந்தான். சிவில் இஞ்சினியரின் பையனா பிறந்துவிட்டு, இதற்கு பயந்தால் என்ன ஆவது ?.

ஆனால் நேரம் ஆக ஆக, இன்னொரு கவலை வந்தது. ஒருவேளை தண்ணீர் தேங்குவது புதிய கட்டிடத்திற்கு வேண்டுமானால் பலம் தரலாம்; ஆனால் நாங்கள் இருந்த பழைய வீட்டிற்கு எதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது. அந்த சின்ன வயதில், வீடு இடிந்தால் என்ன ஆகும் என்று யோசிக்கும் போது ஏற்பட்ட பயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

அம்மா, அப்பா வீடு திரும்பும் நேரமும் வந்தது. மழை நின்று பல மணி நேரமாகியிருந்தது. முடிவு செய்து, அனைத்து அடைப்புகளையும் திறந்து விட்டோம். எங்கள் வீட்டிலிருந்து கொட்டிய தண்ணியை, அந்த தெருவே வேடிக்கைப் பார்த்தது. அடுத்த இரண்டு நாட்கள் வீடு இடிந்துவிடுமோ என்ற பயம் இருந்து கொண்டேயிருந்தது. பள்ளிக்கூடம் முடிந்து வீட்டை நெருங்கும் போது, வீட்டைப் பார்த்தவுடன் தான், நிம்மதியாக இருக்கும். இப்பொழுது நினைக்கும் போது சிரிப்பு வருகிறது. ஆனால் அப்பொழுது ?.

08 January 2010

படிக்க வேண்டிய புத்தகங்கள்

கடந்த ஒரு வாரமாக என்னைத் தொலைபேசி வழியே தொடர்பு கொள்பவர்களிடம் (ரமேஷ் இப்ப என்னைய பொழைச்சு போன்னு விட்டுட்டாரு), நான் கேட்கும் ஒரே கேள்வி
“புத்தக காட்சிக்கு போவீங்களா ?”

ரெண்டு பேரு போவேன்னு சொன்னாங்க. அவங்க கிட்ட சொல்லி வாங்குன புத்தகங்கள்.

கிழக்கு பதிப்பக வெளியீடுகள்
பின்னோக்கின்னு பேர் வெச்சுட்டு வரலாறு படிக்காமல் இருக்க முடியுமா ? அதனால்,

முகலாயர்கள் - முகில் - 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் மாதிரி முதல் 6 பக்கங்கள் மேப் போட்டுருக்கு. ”வந்தார்கள் வென்றார்கள்” மாதிரி சுவாரசியமா இருக்கும்னு நினைக்கிறேன்.

மெகல்லன் - முகில் - 80 பக்க சின்ன புத்தகம். நல்லாயிருந்தா, சாம்ராட் அசோகர், நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர் வாங்கிப் படிக்கலாம்னு இருக்கேன்.

ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன் - இந்த புத்தகத்தப் பற்றி சொல்லத் தேவையில்லை.

முடிவில் ஒரு திருப்பம் - ஜெஃப்ரி ஆர்ச்சர் - பவித்ரா ஸ்ரீனிவாசன் - ட்விஸ்ட் கதைகள் மேல் இருக்கும் ஆர்வத்தால் இதை வாங்கினேன். தமிழில் இந்த புத்தகம் விலை ரூபாய் 195. கண்ணதாசன் பதிப்பகம், பல ஆங்கில நாவல்களை தமிழ் படுத்தி ரூபாய் 110க்கு விற்கிறார்கள். பேப்பர் தரமும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தின் பேப்பர் தரத்திற்கு ரூபாய் 195 ரொம்ப அதிகம். சரி ! கதைகள் நன்றாக இருந்தால் போதும். பார்ப்போம்.


உயிர்மை பதிப்பக வெளியீடுகள்

கொலையுதிர் காலம் - சுஜாதா - நிறைய பேர், இந்த நாவல் கண்டிப்பாக படிக்கப்பட வேண்டிய ஒன்றுன்னு சொன்னதால வாங்குனேன்.

சுஜாதாவின் மர்மக் கதைகள் - சுஜாதா - துப்பறியலாம் வாங்க எழுதுறத்துக்கு இதுல இருந்து எதாவது கிடைக்குமான்னு பார்க்குறேன்.

இந்த இரண்டு புத்தகங்களும் சுடச் சுட தயாராகிற மாதிரி இருக்கிறது. இன்னும் பைண்டிங் சரியாக காயாமல், நிறைய பேப்பர் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கிறது.


மற்ற பதிப்பகங்கள்

மெர்குரி பூக்கள் - பால குமாரன்
24 ரூபாய் தீவு - சுஜாதா
கனவுத் தொழிற்சாலை - சுஜாதா
நடுப்பகல் மரணம் - சுஜாதா
 
இன்னும் லயன், முத்து காமிக்ஸ் வாங்க வேண்டும். ரஃபீக் அவருடைய வலைத்தளத்தில், நிறைய புகைப்படங்கள் போட்டு ஆர்வத்தை தூண்டி இருக்கிறார். இந்த புத்தகங்களை யாரிடம் சொல்லி வாங்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சனி, ஞாயிறுகளில் இந்த காமிக்ஸ்கள் இருக்குமா என்பது சந்தேகமே.

வாங்க நினைக்கும் புத்தகங்கள்
பட்ஜெட்டை விட நிறைய வாங்கி விட்டேன். ஆனாலும் இந்த புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று விருப்பம். பார்ப்போம்.

சந்தியா பதிப்பக வெளியீடான யுவான் சுவாங் – இந்தியப்பயணம்
கிழக்கு பதிப்பக வெளியீடுகளான,
அகம், புறம், அந்தப்புரம் - முகில்
என் பெயர் எஸ்கோபர் - பா.ராகவன்
நெம்பர் 40, ரெட்டைத் தெரு - இரா.முருகன்
மைசூர் மகாராஜா - முகில்

இந்த புத்தகங்கள் எல்லாம் சரி. எப்ப சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதிய புத்தகங்கள் வாங்கிப் படிக்கப் போறன்னு கேட்டீங்கன்னா, என்னோட பதில் “ஹி..ஹீ..ஹீஹீஹீ.”

நன்றி - கிழக்கு பதிப்பக வலைத்தளம் (படத்திற்காக)

05 January 2010

கூகிளாரும் தொடர்கதையும்

கூகிளார்


பிரெஞ்சு புரட்சி
ஆண்டு ?
கூகிளாரைக் கேள்
பிரேம் நசீரின் 60வது
படம்?
கூகிளாரைக் கேள்
அம்மா எங்கே ?
கூகி
என்று சொல்லி
சுதாரித்தேன்


தொடர்கதை



அந்த கால
தொடர்கதை
தைக்கப்பட்டு மொத்தமாக
கிடைத்தது பரணில்
கதையை விட
சுவாரசியம்
துணுக்குகளும்
விளம்பரங்களும்