12 August 2012

ஒரு காமிக்ஸின் கதை


            ஞாயிறு மதியம் மூன்று மணி ரேடியோ நாடகத்தை, ரேடியோ பக்கத்தில் உட்கார்ந்து ரெக்கார்ட் பண்ண வசதியாக கேசட் போட்டுவிட்டு, ரெக்கார்ட் பட்டனை எப்ப அழுத்தணும்னு உட்கார்ந்திருந்த காலம்.   
   திருவிளையாடல் பட வசனக் கேசட் கேட்டு கேட்டு மனப்பாடமாகியிருந்த காலம்.

-      
     
        

         நால்ணா என்று சொல்லப்பட்ட 25 பைசா அப்பா தந்தார்ன்னா அது ரொம்ப அதிகமான பணம். அதுக்கு 5இல் இருந்து 10 மிட்டாய் தரும் காலம்.     25 பைசாவுக்கு ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் கிடைத்த காலம்.

-          
   கருணாநிதியை விடாமல் எம்.ஜி.யார் தேர்தலில் தோற்கடித்த காலம்.

-     ராஜேஷ்குமார் எழுதிய க்ரைம் நாவல் கதைகளை பயந்துகொண்டே படித்த காலம்.

-             
 மளிகைக் கடையில் 25 பைசாவுக்கு வாடகைக்கு ராணிகாமிக்ஸ் புத்தகம் எடுத்து இரண்டு நாட்களில் படித்துவிட்டு திருப்பித் தரும் காலம்.


-       சைக்கிள்களில் வீடுகளுக்கு வந்து லெண்டிங் லைப்ரரி (மங்கையர் மலர், தேவி, கோகுலம் போன்ற புத்தகங்கள்) தந்துகொண்டிருந்த காலம்.

-       பம்பரம், கிட்டிபுல், பட்டம், கோலிகுண்டு போன்ற விளையாட்டுக்களுக்கு தனி சீசன் இருந்த காலம்.

-       தெருவில் விளையாடும் பசங்களுக்கு மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சைக்கிள் ரிக்‌ஷா ஓடிக்கொண்டிருந்த காலம்.

-       ஈசி சேர் என்ற ஒரு அற்புதமான ஓய்வெடுக்கும் சாதனம் இருந்த காலம்.

இப்படியான ஒரு காலத்தில் முதல் முறையாக என் அண்ணன் ஒரு காமிக்ஸ் வாங்கிவந்தான். வித்தியாசமான வடிவில் பாக்கெட் சைசில், போட்டிருந்த டிராயரில் வைத்துக்கொள்ளும் வகையில் இந்த அந்த புத்தகம் உடனடியாக மனதுக்குள் புகுந்தது. சிவகாசியில் இருந்து வந்துகொண்டிருந்த லயன் காமிக்ஸ்தான் அது. ராணிக்காமிக்ஸ் படித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், இதில் வந்த கதைகள், ஹீரோக்கள் மற்றும் மொழிபெயர்ப்பில் ஒரு ரசிக்கும் தன்மை என்று ஒரு அற்புதமான பொழுதுபோக்குக்கு படிக்கும் புத்தகமாக வீட்டில் இடம் பிடிக்கத் தொடங்கியது. ரூ 2. சில நேரங்களில் கேட்ட உடன் கிடைக்கும், பல நேரங்களில் 25பைசா பாக்கெட் மணி சேர்த்து காமிக்ஸ் வாங்குவோம்.

மெயின் ரோட்டில் சைக்கிள் ஓட்டும் உரிமைப் பெற்ற என் அண்ணன் மட்டுமே கடைகளுக்குப் போய் வாங்கிவருவான். முதலில் படிக்கும் உரிமையும் அதனால் அவனுக்கே. அதுவரை சேகரித்து வந்த பொருட்கள் அனைத்திலும் ஈடுபாடு போய், காமிக்ஸ் சேகரிக்கும் காலம் தொடங்கியது.

உடல்நிலை சரியில்லாததால் ஸ்கூலுக்கு லீவு போட்ட ஒரு நாளில், இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை காலையிலேயே வாங்கி வந்து என்னிடம் தந்துவிட்டு ஸ்கூலுக்குச் சென்றான் என் அண்ணன். அந்த புத்தகம் சூப்பர் சர்க்கஸ்”. முதல் முறையாக முழு வண்ணத்தில் வந்த அந்த புத்தகம் மனதைக் கவர்ந்தது. அட்டைப்பட்த்திலேயே, ஒரு கயிற்றின் மேல் வைக்கப்பட்டிருக்கும் பந்து ஒன்றின் மேல் ஒரு குதிரை, குதிரை மேல் ஒருவன், மற்றும் அந்த குதிரை ஸ்கிப்பிங் செய்துகொண்டு என்று அமர்க்களமாக வித்தியாசமாக இருந்தது. மற்றொரு புத்தகம் “பழி வாங்கும் பாவைஎன்ற பெயரில் டெக்ஸ்வில்லர் கதை. அமெரிக்காவில் இருந்த செவ்விந்தியர்களும், கௌபாய்களுடனும் நாங்களும் பயணம் செய்ய ஆரம்பித்தோம்.

காது நீண்ட, ஹெலிகாப்டர் போன்ற ஒரு வாகனத்தில் வலைத்துப்பாக்கியுடம் ஒரு ஹீரோ கம் வில்லன் (ஸ்பைடர்). ஒரு ரோபாட் (ஆர்ச்சி), இரவுக்கழுகு என்று பட்டபெயர் வைத்துக்கொண்டிருந்த ரேஞ்சர் (டெக்ஸ்வில்லர்), லக்கிலூக், ஜாலிஜம்பர், சிக்-பில் போன்ற கார்ட்டூன் கதைகள் என்று ரசனையை வேறு தளத்திற்கு இட்டுச்சென்றது லயன், முத்து, மினி மற்றும் ஜீனியர் லயன் கதை புத்தகங்களே.

நான் எல்லாம் சிம்ரன் போஸ்டரையே ஒரு நாள் பார்ப்பேன் என்பது போல, ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வந்த உடன் காமிக்ஸ் எடுத்து புரட்டுவது, அடுக்கி வைப்பது என்று, படிப்பது மட்டுமல்லாது அதனைப் பார்ப்பதும் ஒரு பொழுதுபோக்காக மாறியது. விடுமுறை நாட்களில் படித்த புத்தகங்களை மீண்டும் மீண்டும் படிப்பது; தீர்ந்து போன நோட்டுப்புத்தகங்களின் அட்டையைப் பிய்த்து, காமிக்ஸ் அளவுக்கு அதை வெட்டி, வீட்டிலேயே பைண்டிங் செய்ய ஆரம்பித்து நேர விரயம் அதிகமானதால், கோபம் கொண்ட என் அம்மா ஒரு நாள் எல்லா காமிக்ஸ்சையும் எடுத்து வெளியே போட்டார். பிறகு போராடி, சில சத்தியங்கள் செய்து மீண்டும் வீட்டுக்குள் வைக்கும் அனுமதி பெற்றோம்.

கால ஓட்டம், அப்பாவுக்கு அடிக்கடி கிடைத்த டிரான்ஸ்ஃபர் மற்றும் டிவியின் அறிமுகம் போன்றவை சேர்த்துவைத்த காமிக்ஸ்களை பத்திரமாக வைக்காமல் அனைத்தையும் இழக்க நேரிட்டது. சில வருடங்களில் காமிக்ஸ் என்ற ஒரு வஸ்து மனதிலிருந்து மறைந்தே போனது.

கிபி 2003 ஆம் ஆண்டு எதோச்சையாக லயன் காமிக்ஸ் வெப்சைட் பார்த்ததில் மீண்டும் தொடங்கியது காமிக்ஸ் ஆர்வம். அப்பொழுதுதான் பலரும் தன் சிறுவயதில் படித்து, பாதுகாக்க மறந்த காமிக்ஸ்களைத் தீவிரமாக தேட மற்றும் சேகரிக்க பலர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. சிறுவயதில் படித்த பல கதைகள் இப்பொழுது படித்தால் ரசிக்க முடியாமல் போனதும் தெரிந்தது (சில ஹீரோக்கள் - ஸ்பைடர் மற்றும் டெக்ஸ்வில்லர் இன்றும் படித்து ரசிக்க முடிகிறது). ஆனால், பழைய காமிக்ஸ்களைப் பார்க்கும் போது வரும் மகிழ்வான சிறுவயது நியாபகங்களை அனுபவிப்பதற்கு 35+ வயதான பலரும் இன்னும் காமிக்ஸ்களை வாங்கிப் படித்து மகிழ்கிறார்கள். அதில் நானும் ஒருவன். இன்று காமிக்ஸ் வாங்கிப் படிப்பதை கேலியாக பார்க்கும், இத்தனை க.வயசு ஆச்சு இன்னும் காமிக்ஸ் படிக்கிறியா போன்ற கேள்விகளும் மத்தியிலும், ஆர்வம் குறையவில்லை.

காமிக்ஸ் என்பது சிறுவர் படித்து மகிழ மட்டுமே என்ற எண்ணம் அதிகம் பேருக்கு இருக்கிறது. ஆனால் XIII, கேப்டன் ப்ளூபெரி போன்ற கதைகளைப் படித்தவர்கள் மற்றும் படித்தவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக கீழே இரண்டு சித்திரங்களை மட்டும் தந்திருக்கிறேன். இந்தக் கதைகள் உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றவைகள். பல இலட்சம் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.

XIII - அமெரிக்காவின் குடியரசுத் தலைவரை கொன்ற பழியை சுமந்து கொண்டு, தன்னைப் பற்றிய நியாபகங்கள் மறைந்த நிலையில், தன்னைப் பற்றி அறிய முற்படும் ஒருவனின் கதை இது. மிகவும் சிக்கலான கதை அமைப்பு, அற்புதமான ஓவியங்கள் என்று மிக பிரம்மாண்டமான கதை இது.
சில வருடங்களுக்கு முன் இந்தக் கதை “இரத்தப் படலம்” என்ற பெயரில் 800+ பக்கங்களுடன், லயன் காமிக்ஸில், ரூ 200 விலையில் வெளியிடப்பட்டது.

கேப்டன் ப்ளூபெரி கௌபாய் கதை வரிசைகளில் மிகவும் அதிக ஆராய்ச்சி செய்யப்பட்டு, வரலாற்று பின்னணிகளுடன், நுணுக்கமான போர் தந்திரங்கள்; செவ்விந்தியர்களின் வாழ்வினைப் பற்றிய உண்மையான பதிவு என்று மிகவும் தத்ரூபமான கதை இது.

     
லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் தற்போது புதுப் பொலிவுடன், சர்வதேச தரத்தில், முழு வண்ணத்தில் புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். சந்தா செலுத்தி வீட்டுக்கே வரவழைக்கலாம். தகவல்களுக்கு இங்கு பார்க்கவும்.

படிக்கும் பழக்கம் அறவே மறந்து போன நம் குழந்தைகளுக்கு, இளைஞர்களுக்கு இந்த புத்தகங்களை அறிமுகம் செய்யலாம். அதன் மூலம் அவர்களின் இளமைக்காலத்தையும் மறக்கவியலா ஒன்றாக மாற்ற முடியும்.

சிறுவர்களை சந்திக்க இவர்களும்

இளைஞர்களை சந்திக்க இவர்களும் 


காத்துக் கொண்டிருக்கிறார்கள் ...

7 பின்னூட்டங்கள்:

Karthik Somalinga said...

ரொம்ப நாளைக்கு பிறகு உங்களிடம் இருந்து ஒரு பதிவு! அடிக்கடி காமிக்ஸ் பதிவிடுங்கள் நண்பரே!

// ஈசி சேர் என்ற ஒரு அற்புதமான ஓய்வெடுக்கும் சாதனம் இருந்த காலம் //
இதில் சாய்ந்து காமிக்ஸ் படித்த சுகம் எதிலும் கிடைப்பதில்லை! :)

King Viswa said...

டெக்னிகல்லி அடுத்தடுத்து காமிக்ஸ் பதிவுகள் (சூப்பர், அட்டகாசம், பிரம்மாதம்), என்ன ஒரு ஏழு மாத இடைவெளியில் (?!#%&!@#$).

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

King Viswa said...

//சிறுவர்களை சந்திக்க இவர்களும்//

அலிபாபா முஸ்தபா கதைகள் அனைத்தையுமே ஆசிரியர் பதிப்பித்து விட்டார். உங்களுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதில் மெயில் அனுப்பி இருந்தேன். அதில் விவரங்களை சொல்லி இருப்பேன்.

Ramesh said...

இதுல செனடோர் கிட் என்ற கதை அங்கிலம? அல்லது பிரெஞ்சா நண்பரே?

Tamil Comics - SoundarSS said...

நல்ல பதிவு அண்ணா. தொடர்ந்து நிறைய காமிக்ஸ் பதிவுகள் இடுங்கள்.

// ஈசி சேர் என்ற ஒரு அற்புதமான ஓய்வெடுக்கும் சாதனம் இருந்த காலம் //
இதில் சாய்ந்து காமிக்ஸ் படித்த சுகம் எதிலும் கிடைப்பதில்லை! :) //

சிறு வயதில் ஈசி சேரில் உட்கார தெரியாமல் உட்கார்ந்து அடிக்கடி கீழே விழுந்ததால் ஈசி சேர் என்றாலே எனக்கு பயம். :)

திண்டுக்கல் தனபாலன் said...

விரிவான விளக்கம்...
படங்கள் மேலும் சிறப்பு...

வாழ்த்துக்கள்... நன்றி…

பின்னோக்கி said...

நன்றிகள்
- கார்த்திக்

- கிங் விஸ்வா - மறுபதிப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் சொல்லியிருக்கிறேன் :-)

-ரமேஷ் - இந்த பேர் எனக்கு கொஞ்சம் கிலி... பார்க்க என்னுடைய பழைய பதிவு :)
http://pinnokki.blogspot.in/2009/12/blog-post_28.html

-சவுந்தர் - ஈஸி சேர் போர் recliner வந்துடுச்சுங்க இப்போ

- திண்டுக்கல் தனபாலன்