13 January 2010

சோதனை மேல் சோதனை - துப்பறியலாம் வாங்க

இந்தப் பதிவை முழுவதும் படிப்பவர்களுக்கு ஒரு ஆச்சரியம் இருக்கிறது.
------------------------------------------------------------------------------------

நியூயார்க்,1991ஆம் வருடத்தில் ஒரு நாள்; எரிந்து கொண்டிருந்த அந்த வீட்டை, தீயணைப்பு படையினர் வந்து அணைத்த போது, வீடே சாம்பலாக மாறியிருந்தது. வீட்டில் யாரும் இல்லையா ?. இருந்தார்கள். ஆனால் வீட்டை விட்டு 100 அடி தள்ளி, சடலமாக.

49 வயதான மேரி, உடலின் பல இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்திருந்தார். உயிருடன் இருக்கும் போதே, அவரின் வீடு எரிக்கப்பட்டிருக்கிறது. அவரின் நுரையீரலை ஆரய்ந்த போது இது தெரிந்தது. தீயினால் வீட்டை விட்டு வெளியே வந்த அவரை கொன்றிருக்கிறார்கள்.

சந்தேகம் 2 பேரின் மீது. மேரி விவாகரத்து செய்த அவரின் முன்னாள் கணவர் பீட்டர். சம்பவம் நடந்த அன்று வெளியூரில் இருந்தது நிரூபிக்கப்பட்டது. அடுத்த சந்தேகம், ஜானின் மீது. யார் அந்த ஜான் ?.

மேரிக்கு, குழந்தைகளின் உரிமையைக் காக்கும், அரசாங்க பணியில் வேலை. ஜான், தன் மகளை, தன்னிடம் தராத இந்த அலுவலகத்தின் மேல் ஆத்திரம் கொண்டு, அந்த அலுவலகத்திலுள்ளவர்களைக் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்திருந்தான். இந்த மிரட்டலுக்காக 6 மாத சிறை தண்டனை அனுபவித்துவிட்டு 3 நாட்களுக்கு முன் தான் விடுதலையாகிருந்தான். சம்பவம் நடந்த அன்று இரவு, தன் தோழியுடன் தங்கியிருந்தேன் என்றான். விசாரணையில், அவனின் தோழி, சிறையில் இருப்பது தெரிந்தது. சிம்பிள் !. வீட்டை எரித்த மற்றும் மேரியைக் கொன்ற குற்றத்திற்காக ஜான் கைது செய்யப்பட்டான்.

கோர்ட்டில், அவனின் முன்னாள் மனைவியும், இன்னாள் காதலியும், ஜானுக்கு கோபம் வந்தால் மிகவும் மூர்க்கமாக மாறிவிடுவான்; அந்த நேரத்தில் கடிக்கவும் செய்வான் என்றார்கள். மேரியின் உடலிலும் கடிக்கப்பட்டதற்கான அடையாளம் இருக்கவே, தடயவியல் நிபுணர்கள் ஜானின் பல் மாதிரியை எடுத்து, மேரியின் கடித் தடத்துடன் ஒப்பிட்டார்கள். ஏமாற்றம். ஜானுக்கு முன் பல் இரண்டு கிடையாது. ஆனால், மேரியின் உடலில் இருந்த கடித் தடம் முன் பல் அனைத்தும் இருக்கும் ஒருவனால் ஏற்பட்டது. இருப்பினும், ஜட்ஜ், ஜானை நம்பவில்லை.

மேரியின் துணியில் இருந்த எச்சிலில் DNA இருக்கும். அதை ஜானுடன் ஒப்பிட்டுப் பார்க்க, ஜான் கேட்டுக்கொண்டான். ஆனால் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து ஜானுக்கு 25 வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.


சிறையில், ஜான், தனக்கு ஒதுக்கப்பட்ட கட்டிலில் படுக்கவில்லை. கேட்ட போது, அந்த படுக்கை உண்மையான குற்றவாளியினுடையது என்றும், தான் ஏன் அதில் படுக்க வேண்டும்? என்று கேட்டான். அப்பீல் மேல் அப்பீல் செய்தான். அவனுடைய வழக்கு மறுவிசாரணைக்கு ஏற்கப்படவேயில்லை. ஜான் படிக்காத சட்டபுத்தகங்கள் இல்லை. ஒரு கட்டத்தில், அவன் வக்கீலாகவே மாறி இருந்தான்.
12 வருடங்கள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சி, அவனின் சிறை வாழ்க்கையை மாற்றியது. என்ன அது ?.

ஜானின் பெற்றோர்கள் வசித்து வந்த வீட்டில் தீ விபத்து. அதில், ஜானின் வழக்கு சம்மந்தப்பட்ட 570 பக்க விசாரணைக் குறிப்பு அழிந்து போனது.12 வருடங்களாக சிறையில் வேலை செய்து சிறிது பணம் சேர்த்திருந்தான். அதில் 87 டாலர் செலவு செய்து, மீண்டும் தன் விசாரணைக் குறிப்புகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றான். அதை படிக்கும் போது, 4 சாட்சிகளின் வாக்குமூலம் இருந்தது. வழக்கு நடக்கும் போது ஜான் இதனைப் பார்க்கவில்லை. அதில் ஒரு சாட்சி, மேரியின் வீட்டின் உரிமையாளர்களான ஜிம்-பிரௌன்.

ஜிம், சம்பவம் நடந்த இரவு, பிரௌன், எரிந்து கொண்டிருந்த வீட்டை அடைந்த பிறகு காரை விட்டு இறங்கி, வீட்டின் எதிர் புறத்தில் 100 அடி தள்ளி எதையோ தேடிக்கொண்டிருந்தார். எனக்கு அது வித்தியாசமாகப் பட்டது. என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, எதாவது விட்டுவிட்டேனா என்று பார்த்தேன் என்று கூறினார். இதையடுத்து பிரௌனை விசாரித்த போது, தான் நள்ளிரவு 1.30 மணி வரை, பாரில் இருந்ததாக சொன்னார். ஆனால், பாரில் அவர் 12.00 மணிக்கு கிளம்பி விட்டதாகக் கூறியிருந்தார்கள். இந்த விபரங்கள் எல்லாம் அந்த குறிப்பில் இருந்தது. இதனைப் படித்த ஜான், போலீஸ் எவ்வளவு கவனக்குறைவாக தன் வழக்கை நடத்தியிருக்கிறார்கள் என்று ஆவேசப்பட்டான். அவனால் முடிந்தது, பிரௌனைத் திட்டி கீழ் கண்ட கடிதத்தை எழுதுவதே,
“டேய் பிரௌன். நீ சிறையில் இருக்க வேண்டியவன். கடந்த 12 வருடங்களாக நீ செய்த குற்றத்திற்காக நான் சிறையில் இருக்கிறேன். நீ வெளியே இருக்கிறாய். கூடிய விரைவில், இங்கு நீ வரப் போகிறாய். உனக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். ”

என்று எழுதி அனுப்பினான். ஜானின் திட்டம், இந்த கடிதத்திற்கு, பிரௌன் பதில் கடிதம் எழுதும் போது, அவன் எச்சில் தொட்டு, அந்த கடிதத்தை ஒட்டி அனுப்புவான். அந்த எச்சிலில் இருந்து DNAவை எடுத்து, மேரியின் துணியில் இருந்த எச்சிலின் DNAவுடன் சரிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்று நினைத்தான். ஆனால் நடந்தது ?.

கடிதத்தைப் படித்தவுடன், பிரௌன், ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.


ஜானின் சிறையிலிருந்து வெளி வரும் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து, “நிரபராதிகளுக்கு உதவும்” ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் முறையிட்டான். அந்த நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, DNA பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஜானின் DNAவும், மேரியின் துணியிலிருந்ததும் ஒத்துப் போகவில்லை. தெரிந்ததுதான் இது. சரி ! இப்பொழுது, பிரௌனின் DNAவை சோதிக்கவேண்டும். அவன் தான் போய் சேர்ந்துவிட்டானே ! என்ன செய்வது ?. அந்த நேரத்தில், பிரௌனின், மகள் உதவிக்கு வந்தாள். அவளது DNA எடுக்கப்பட்டது. சோதனையில், கொலை செய்தது பிரௌன் என்று முடிவானது. இந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முறையிட்டனர். நீதிபதி மறுத்துவிட்டார். என்ன காரணம் ?

பிரௌனின் மகள் தான் அவள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ?. அதனால் DNA பரிசோதனை முடிவுகள் செல்லாது என்று நவீன நாட்டாமையாக மாறி மறுத்து விட்டார்.

சோதனை !.. சோதனை மேல் சோதனை !. கடைசியாக, புதைக்கப்பட்ட பிரௌன் தோண்டி எடுக்கப்பட்டு, DNAவை பரிசோதித்ததில், குற்றவாளி ஜான் இல்லை, பிரௌன் தான் என்று உறுதி செய்யப்பட்டது.

15 வருடம், செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருந்த ஜான் விடுதலை செய்யப்பட்டான்.


பிரௌன் எதற்காக மேரியைக் கொன்றான் என்பது இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.

இந்த வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டியது; 15 வருடங்களாக மேரியின் துணி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது; அறிவியல் வளர்ச்சியினால் சாத்தியப்பட்ட DNA பரிசோதனை மற்றும் ஜானின் இடைவிடாத போராட்டம்.




நன்றி: my.biotechlife.net, www.theolivepress.es

19 பின்னூட்டங்கள்:

Mohan said...

ரொம்ப விறு விறுப்பாக எழுதியிருக்கிறீர்கள். பிரௌன் 100 அடி தள்ளி தேடிக்கொண்டிருந்தது 'மேரி'யின் சடலமா?

பின்னோக்கி said...

நன்றி மோகன்.- ஆமாம். நீங்கள் சரி. மெடிக்கல் டிடக்டிவ்ஸ் டி.வி தொடரின், எழுத்தாக்கமே இது. ஒளிபரப்பான பல எபிசோட்களில், வித்தியாசமான சில எபிசோட்களே இது.

Vidhya Chandrasekaran said...

இண்ட்ரெஸ்டிங்..

Vidhoosh said...

:)

S.A. நவாஸுதீன் said...

செம விறுவிறுப்பா இருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க. 15 வருடம் என்பது........... ரொம்ப பாவம்

Chitra said...

Interesting.........

கலையரசன் said...

இந்த கதையை வச்சி படம் எடுக்கலாம் போல...
ஆனா, காசுதான் இல்லை :-)

வால்பையன் said...

ஜானுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார்களா?

ஸ்ரீராம். said...

கேள்வி ஏதோ கேட்கப் போறீங்கன்னு கவனமா படிச்சிட்டே வந்தேன்...ம்..ஹூம்...!

பின்னோக்கி said...

நன்றி
வித்யா
விதூஷ்
நவாஸூதீன்
சித்ரா
கலையரசன் - விடுங்க சீக்கிரம் படம் புடிச்சுடுவோம். கேபிள் சாரிடம் சொல்லி
வால்பையன் - இல்லைங்க. நஷ்ட ஈடு குடுத்த தகவலில்லை.
ஸ்ரீராம் - பதிவ படிக்க வைக்க என்னென்ன வேலை செய்ய வேண்டியிருக்கு பாருங்க :)

Romeoboy said...

மும்பையில் நடந்த அந்த கொடூர தாக்குதலுக்கு பலியான ஒரு இன்ஸ்பெக்டர் யூஸ் பண்ணியது தரமற்ற புல்லேட் ரூப் ஜாக்கெட் என்று எப்படியோ தெரிந்தது இறந்து போன இன்ஸ்பெக்டர் மனைவிக்கு. அதை பற்றி நீதிமன்றத்தில் முறையிட்ட போது, போலீஸ் பக்கத்தில் இருந்து சொல்லிய பதில் "அது தொலைந்து போய்விட்டது". உங்க ப்ளாக் ஓபன் பண்ணுறதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிறது. என்னவென்று பார்க்கவும்

பின்னோக்கி said...

ரோமியோபாய் - கமெண்ட் போடும் போது அதிக நேரம் எடுக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கு ப்ளாக்கில் நிறைய விட்ஜெட்ஸ் இல்லை. இப்பொழுது கமெண்ட்ஸ் தனியாக வருமாறு மாற்றியிருக்கிறேன். பார்ப்போம்.

மாதேவி said...

விறுவிறுப்பான நடை தொடர்ந்து ஒரே மூச்சில் படிக்கவைத்தது.

vasu balaji said...

அருமை எப்பவும் போல.

ஸ்ரீராம். said...

இந்த மாறுதல் மிக அருமை. பின்னூட்ட பெட்டி உடனே வந்து விட்டது. ஒவ்வொரு சமயமும் மிக சிரமப் படுவேன்.
முனைவர் குணா பக்கம், மற்றும் சந்ருவின் பக்கமும் அதே போல ஓபன் ஆகவே லேட் ஆகும்.

Prathap Kumar S. said...

வழக்கம்போல கலக்கல் பின்னோக்கி...
இதுல நல்ல மெசேச் கூட இருக்கு...

kailash,hyderabad said...

விறுவிறுபான நடை . 15 வருடம்ங்கறது ரொம்ப ஜாஸ்திதான்.நம்ம ஊர்ல ஆயுள்தண்டணைகாரர்களே நன்னடத்தைனு 5 வருஷத்தில வெளிய வந்து விடுவார்களாமே ? .அங்கே அப்படியெல்லாம் இல்லையா?

angel said...

ohh u too had an accident same pinch .hehe . get well soon

நட்புடன் ஜமால் said...

விறு விறுப்பாக இருந்தது

15 வருட கஷ்ட்டம் தான் ...