இன்று காலையில் எழுந்த போதே சென்னை மேக மூட்டத்துடன் ரம்யமாக இருந்தது. சோம்பலுடன், ஜன்னலை திறந்த உடன் முகத்தில் பட்ட சில்லென்ற காற்று உற்சாகத்தை தந்தது. இந்த வானிலையில் பயணம் மேற்கொள்வது இனிய அனுபவமாக இருக்கும். ஆனால் சோம்பல், வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்காத போது, பயணத்தின் இனிமையை அனுபவிக்க ஒரே வழி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தேசாந்திரி. ஜன்னல் வழியே வழிந்த சிறிய வெளிச்சத்தில், மெத்தென்ற படுக்கையில், அமைதியான சூழ்நிலையில் புத்தகத்தில் மூழ்கினேன். பல முறை படித்திருந்த போதும், ஒவ்வொருமுறை படிக்கும் போது பயணத்தின் சுகானுபவம். இவருக்கு மட்டும் வித்தியாசமான கண்கள். சாதாரணமான விஷயங்களை இவர் எழுத்தின் வழியே படிக்கும் போது, “அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என வியப்பாக இருக்கிறது. இவரின் பல புத்தகங்களை படித்திருந்தாலும், தேசாந்திரி - என் மனதுக்கு நெருக்கமான புத்தகம். புதியதாக இந்த புத்தகத்தை படிக்க விழைபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சப்தங்கள் மிக குறைந்த, இடையூறுகள் இல்லாத நேரத்தில், அமைதியான மன நிலையில் படியுங்கள்.
இங்கு நான் குறிப்பிட்டிருப்பது, தேசாந்திரி புத்தகத்தின் சில துளிகள்..அதுவும் தேன் துளிகள். ரசித்தவற்றை எழுதவேண்டுமென்றால், புத்தகம் முழுவதையும் எழுதவேண்டும்.பலர் பல பதிவுகளில் இப்புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தாலும், எனக்கு பிடித்த சில வரிகள் இவை.
இனி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விழி வழியே இவ்வுலகம்.
-------------
2 - சாரநாத்தில் ஒரு நாள்
இந்தச் சாலைகள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது!
-------------
4 - லோனாவாலாவில் பார்த்த மழை
மழை பெய்யத் துவங்கியதும் மனித சுபாவம் மாறத் துவங்கிவிடுகிறது. யாரும் குரலை உயர்த்திப் பேசிக்கொள்வதிலை. மாறாக, மழை பெய்யும்போது யார் யாரைப் பார்த்தாலும், முகத்தில் மெல்லிய சிரிப்பு கரை தட்டி நிற்பதை உணர முடிகிறது. மழை ஒரு தியானத்தைப் போல மெள்ள நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது.
------------
5 - பாடப் புத்தகங்களுக்கு வெளியே...!
சரித்திரம் நம் உடையில், உணவில், பேச்சில், அன்றாட நடவடிக்கைகளில் தினமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் அணியும் சட்டையில் உள்ள பொத்தான்கள், பெர்சீயாவில் இருந்து வந்ததையும், நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு வெள்ளைக்காரர்கள் நமக்கு அறிமுகம் செய்தது என்பதையும் நாம் சரித்திரம் என்று உணர்வதில்லை.
லண்டனில் ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். ஆனால், பாரதியார் பிறந்த இடத்தை எத்தனை பேர் நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள் ?
--------
6 - கண்ணால் வரைந்த கோடு
மலையின் மீது நடக்கத் துவங்கியதும் நகரம் நம் காலடியில் நழுவிப்போகத் துவங்குகிறது. உயரம் ஒரு அதிசயம் என்பதை, மனது மெல்ல உணரத் துவங்குகிறது. தரையில் இருந்து காணும் பொருட்கள், ஏன் உயரத்துக்குப் போனதும் இத்தனை ஆச்சர்யமாக மாறிவிடுகின்றன என்று வியப்பாக இருக்கிறது.
(தினமும் என் அலுவலகத்தின் ஜன்னல் வெளியே தெரியும் புனித தாமஸ் மலை (செயின்ட் தாமஸ் மவுண்டை) இவர் பார்வையில் பார்க்கும் போது, 20 வருடங்களாக சென்னையிலிருந்தும் இந்த இடத்தை பார்க்கவில்லையென வெட்கமாக இருக்கிறது)
---------
7 - நிலமெங்கும் பூக்கள்
பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.
நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்.... எத்தனைவிதமான மலர்கள்...! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் !.
---------
10 - அருவியாடல்
குற்றாலம் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே அருவியின் சப்தமும், ஈர வாடையும், குரங்குகளும் நினைவில் எழுந்துவிடுகின்றன.
அருவியைப் பார்த்துச் சிரிக்காதவ்ர் எவரும் இருக்கிறார்களா என்ன ? அருவியின் முன்னே வயது கலைந்து போய்விடுகிறது. அருவியின் முன்னே நம் பேச்சுக்கள் யாவும் ஒடுங்கிவிடுகின்றன. அருவி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.
--------
15 - அறிந்த ஊர்
பின்னிரவில் எல்லா ஊர்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அதிலும் பேருந்து நிலையங்களும் அதைச் சுற்றிலும் உள்ள சிறு கடைகளில் எரியும் டியூப் லைட்டுகள் மற்றும் பாதி உறக்கம் பீடித்த பெட்டிக்கடைகள், காலியான நாற்காலிகளுடன் பால் கொதிக்கும் டீக்கடைகள், உறக்கத்தின் பிடியில் சுருண்டுகிடக்கும் வயதானவர்கள், கால்கள் மட்டும் வெளியே தெரிய உறங்கும் ஆட்டோக்காரர்கள்.
--------
25 - ஒரு கோயில்.. சில காட்சிகள்!
முன்பு எல்லா ஊர்களின் ரயில் நிலையத்தின் முன்பாகவும், குதிரை வண்டிக்காரர்கள் நிற்பார்கள். வண்டிக்குள் வைக்கோல் பரப்பி, அதன் மீது சமுக்காளம் விரித்திருப்பார்கள். குதிரை வண்டிகளின் இடத்தை இன்று ஆட்டோக்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.
--------
35- ஒளிரும் எண்கள்
கும்பகோணதில் உள்ள கணித மேதை ராமனுஜத்தின் நினைவு இல்லத்தில் குனிந்து செல்ல வேண்டிய அளவு தாழ்வான கூரை அமைப்பு. வீட்டில் யாரும் இல்லை. ராமானுஜத்தின் மூச்சுக் காற்றும் விரல் ரேகைகளும் மட்டுமே மீதம் இருக்கின்றன. இந்த அறையில் ராமானுஜம் படித்துக்கொண்டு இருந்திருப்பார் என்கிற காட்சி மனதில் கடந்து போனது.
--------
36 - உறங்கும் கடல்
தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.
டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன.
--------
41 - நோக்கும் திசையெல்லாம்
பின்வாங்கியோடும் அலையைப் போல இரவு, தன் இருப்பிடம் திரும்பத் துவங்கி இருந்தது. உலகில் ஒவ்வொரு நாளும் இதே போலத்தான் இரவு விடைபெறுகிறது. சில நிமிடங்களில் வெளிச்சம் உலகின் மீது தன் நிறத்தைத் தீட்டத் துவங்கியது. பனி படர்ந்த இமயமலை கண்ணில் படத் துவங்கியது. இதே சூரியனைத்தான் இத்தனை வருடங்களாகக் காண்கிறேனா ? ஏன் இந்தப் பிரமாண்டம், வசீகரம் என் ஜன்னலைத் திறந்து பார்க்கும் போது கிடைக்கவே இல்லை. எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும், இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்.
-----------
புத்தகம் : தேசாந்திரி
வெளியீடு: ஆனந்தவிகடன்
விலை :ரூபாய் 110.
நன்றி(படங்களுக்காக): examiner.com,ramasundaram.sulekha.com,bloggersbase.com,moxhafinearts.com,pacificbulbsociety.org
15 பின்னூட்டங்கள்:
ராமகிருஷ்ணனைப் படிப்பது தனி சுகம்தான். நன்றி.
//அட ஆமாம் எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் //
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க,நானும் இதுக்காகத்தான் எஸ்.ராவின் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன்.
நல்ல பதிவு.
நன்றாக இருக்கிறது. இதுவரை அவரின் படைப்புகளைப் படித்ததில்லை. இனித் தொடங்குகிறேன்.....
நாம் அன்றாம் பார்க்கும் விசயங்களை அவர் உள்வாங்கி தன்ஸ்டைலில் அழகாக எழுதுவார்.. அதைப்படிக்கும்போது நமக்கு நினைவு வரும் அவர் சொல்வதுதான் சரிதானென்று. நம்மில் எத்தனைபோர் இதுபோல் யோசிக்கிறோம்.
துளிகள் எல்லாம் அருமை..
எஸ்.ராவின் தேசாந்திரியை தொடர் வடிவிலேயே படித்து ரசித்திருக்கிறேன். நீங்கள் தந்திருக்கும் துளிகள் சிறப்பான தெரிவுகள்.
எஸ் ரா படித்ததில்லை...இனி படிக்கிறேன்..
அருமை நண்பர் பின்னோக்கி,
நல்ல தொகுப்பு, மீண்டும் படிக்கும் ஆவலை ஏற்படுத்திவிட்டீர்கள்.படித்துவிட்டு பேசலாம்
ஓட்டுக்கள் போட்டாச்சு.
நல்ல தொகுப்பு பின்னோக்கி.. இவரது எழுத்துக்களை வாசித்தலின் இன்பத்தை வெறுமனே சொல்லில் ஏற்றிவிட்டு நகர முடியாத தனி அனுபவத்தை தந்தவை.. தேசாந்திரி எனக்கு மிகவும் பிடித்த தொகுப்புகளில் ஒன்று.. பகிர்ந்தமைக்கு நன்றி!
நல்ல அறிமுகம் நன்றி நண்பா
/--சாரநாத்தில் ஒரு நாள்--/
நான் அங்கு சென்ற போது கண்களை மூடிக்கொண்டு இதையே தான் யோசித்தேன்.
/--நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்.... எத்தனைவிதமான மலர்கள்...! --/
பாவிங்க... சாலையை விரிவு படுத்துகிறேன் என்று 100 வருட மரங்களை சில நிமிஷங்களில் வெட்டி சாய்க்கும் போது கோவம் வெடித்துக் கொண்டு வருகிறது.
*******************
அவருடைய வார்த்தையே தனி அழகு. பகிர்விற்கு நன்றி...
இவ்வளவு பேர் ரசிப்பார்கள் என்பது நான் எதிர்பாராதது. அனைவருக்கும் நன்றி.
வசந்த், புலிகேசி கண்டிப்பாக படித்து பாருங்கள். ரசிப்பீர்கள்.
நானும் படித்து லயித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. ஆனந்தவிகடனில் வெளிவரும்போது திரும்பத்திரும்பப் படித்தது. புத்தகத்தையும் வாங்கிவிட்டேன். அதிலிருந்து சில வரிகளை இங்கு வாசித்ததும் மீண்டும் அந்த பரவச நிலையை அடைந்தேன். நன்றி பின்னோக்கி.
நண்பரே எனக்கும் பிடித்த புத்தகம் இது . எனக்கு அவர் எழுதிய அனைத்துமே பிடிக்கும்
நல்ல பகிர்வு. எனக்கும் எஸ்ராவின் எழுத்துக்கள் பிடிக்கும்
Post a Comment