02 April 2010

நீ நல்லவன்டா - இப்படி சொல்லியேஏஏஏஏ....

மீன்துள்ளியான் பதின்ம வயது அனுபவங்களைப் பற்றி தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். தாமதத்திற்கு மாப்பு கேட்டு தொடர்கிறேன்.

-----

1990 - காலை 5 மணிக்கு, திருவள்ளுவர் பஸ்ஸில் வந்திறங்கிய இடம் சைதாப்பேட்டை. சோடியம் விளக்கு ஒளியால் நிரப்பப்பட்ட பெரிய சாலைகளைப் பார்த்தபோது முதல் ஆச்சரியம். அப்பாவிடம், மெட்ராஸ் முழுவதுமே இப்படித்தான் இருக்குமா ? என்ற கேள்விக்கு, அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.

அடுத்த 15 நாட்கள், மெட்ராஸில் இருக்கிறோம் என்ற உணர்வே பெருமிதத்தைக் கொடுத்தது. 10 ஆம் வகுப்பு, அரசினர் உயர் நிலைப்பள்ளியில். முதல் முறையாக காக்கி கலர் பேண்ட் (9 வது வரை டவுசர் தான்), வெள்ளை சட்டைப் போட்டு, இருபாலர் படிக்கும் பள்ளிக்குச் சென்றேன்.

10


எந்த ஊருக்கு மாற்றலாகி போனாலும், என் அப்பா, வீடு எங்களது ஸ்கூலுக்கு பக்கத்தில் பார்ப்பார். அதனால், பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை, பஸ்ஸில் ஸ்கூலுக்கு சென்றதில்லை (சந்தன முல்லை அவர்கள் பஸ் அனுபவத்தை எழுத சொல்லியிருந்தார். அவருக்கு நன்றி. அனுபவமில்லாததால், பஸ் அனுபவங்களை எழுத முடியவில்லை.).

புதிய ஊர், புதிய பள்ளிக்கூடம் - எதுவுமே புதியதில்லை எனக்கு. வகுப்பறையில் தரையில் உட்கார வேண்டிய நிலை. பெஞ்ச் இல்லை. கீழே நோட்டை வைத்து எழுத முடியாது என்பதால், பரிட்சை அட்டை ஒன்றை தினமும் எடுத்துச்செல்வேன். இரண்டே வாரங்களில் என் கணக்கு ஆசிரியர், என்னை அழைத்து, என் அப்பாவை அழைத்து வரச்சொன்னார். என் வகுப்பில் இருந்த 20 சொச்ச பெண்களிடம் (20 பேரா வகுப்பில் இருந்தார்கள் ? நினைவில்லை என்று சொன்னால் நம்புவீர்கள்) பேசியது கூட இல்லை. பிறகு எதற்கு அப்பாவை வர சொன்னார் என்ற திகில் கிளம்பியது.

அடுத்த இரண்டு நாட்களில் திடீர் திருப்பம். ஸ்கூலுக்கு வந்த அப்பாவிடம், “சார் !! பையன் நல்லா படிக்கிறான். மேத்ஸ்ல 100 க்கு 100 எடுத்துடுவான். நல்லா கோச்சிங் குடுங்க. இவன் ஒருத்தன் தான், கையெழுத்து நல்லா வரணும்னு, தினமும் பரிட்சை அட்டை எடுத்துகிட்டு வர்றான். ரொம்ப நல்ல பையன்” என்று சொன்னார். ம்ம்ம்..நல்லா கிளப்புனாங்க பீதிய.

அடுத்த நாள், மாத பரிட்சை மார்க் வரும் தினம். ஒருவர் வந்து ஆசிரியர்கள் ரூமுக்கு என்னை கூப்பிடுவதாக சொல்ல, இது என்னடா !! அடுத்த சோதனை என்று நினைத்தவாறு போனேன். என் பரிட்சை நோட்டை எல்லாருக்கும் என் வகுப்பு ஆசிரியர் காட்டினார். என் கையெழுத்து அவர்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஒரே பாராட்டு. அந்த பள்ளியின் 10 ஆம் வகுப்பு நம்பிக்கை நட்சத்திரமாக மாறிப் போனேன். அப்புறம் என்ன ?

வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்தால்...
இண்டர்வெல் முடிந்து சிறிது நேரம் கழித்து வந்தால்...
ஸ்கூல் முடிந்து மற்ற பசங்களுடன் கிரிக்கெட் விளையாடினால்...
நோட்டு புக் எடுத்து வராமல் இருந்தால்....

நீயுமாடா ? இப்படி ??
ஆசிரியர்களிடமிருந்து, இந்த கேள்வி/பார்வைக்கு பயந்து பயந்து 10 ஆம் வகுப்பு ஓடியது. இந்த நிலையில் ஒரு சின்ன சுவாரசியம், ரீனா என்ற பெண்ணால். அவள் 9ஆம் வகுப்பு வரை படித்தெல்லாம் பெரிய பள்ளியில். ஒரு பெண்ணிடம் பேசுவதே பெரிய சாதனையாக நினைத்த நாட்களில், அவள் ரொம்ப இயல்பாக எங்களிடம் பேசியது (பெரும்பாலும் இங்கிலீஷில்) ஆச்சரியமாக இருந்தது.எப்படியாவது இங்கிலீஷ் நன்கு அவளிடம் தெரிந்து கொள்ளலாம் என்ற நினைப்பில் மணல், ஜல்லி எல்லாம் விழுந்தது. அவள் அப்பாவுக்கும் மாற்றல் கிடைக்க, 1 மாதம் மட்டுமே படித்துவிட்டு வேறு ஊருக்கு போனாள். வகுப்பறையின் சின்ன சுவாரஸ்யமும் அவளுடனே போனது.

அறிவியல் பாடத்திற்கு ஆசிரியரே கடைசி வரை நியமிக்கப்படாத நிலையில், 90 பேர் அரசுத்தேர்வு எழுதினோம். 5 பேர் மட்டுமே பாஸானோம். மாநில அளவில் மார்க் எடுப்பேன் என்ற சிலரது கனவு, கனவாகவே போக, பள்ளியில் முதல் மார்க் எடுத்ததோடு சாதனை நிறைவுற்றது.

+2


அடுத்து வந்த இரண்டு வருடங்களை பெரிய அழி ரப்பர் வைத்து அழிக்க முடிந்தால் உடனே செய்துவிடுவேன். தமிழ் மீடியத்திலிருந்து +1 இங்கிலீஷ் மீடியத்திற்கு மாறியது, குளத்து மீனை, கடலில் விட்டது மாதிரி இருந்தது. வாழ்நாளில் முதல் தடவையாக ஒரு பாடத்தில் ஃபெயில் ஆனது, இங்கிலீஷ் டீச்சர் என் நோட்டை எடுத்து, என் ஆங்கில எழுத்தை வகுப்பறையில் கிண்டல் செய்தது (சேர்த்து எழுதாமல் தனித்தனி எழுத்துக்களாக எழுதுவேன்), கடைசி வரை கெமிஸ்ட்ரி ஃபார்முலாவை மனப்பாடம் செய்ய முடியாமல் போனது, முத்தாய்ப்பாக, 10 ஆம் வகுப்பில் 100/100 வாங்கிய கணக்கு பாடத்தில் அதே 100 மார்க், 200க்கு வாங்கியது மற்றும் இம்ரூவ்மென்ட் எழுதி இஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்தது என அந்த 2 வருடங்கள்......ம்ம்ம்ம். வடிவேல் பாஷையில்... முடியலை !!!!

காலேஜ்


மூன்றாவது அண்ணன் படித்துக்கொண்டிருந்த அதே காலேஜ். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணமானேன். இரண்டு நாள் லீவ் கிடைத்தால் சென்னைக்கு பஸ் ஏறிவிடுவேன். அவ்வளவு வீட்டு ஏக்கம். காலேஜ் ராகிங் அனுபவம் இந்த பதிவில். எங்கள் கிளாஸில் இருக்கும் பசங்க, எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட் போய் சைட் அடிக்கும் நிலையில், எங்கள் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் இருந்தது. அதனால் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் போனது. முதல் இரண்டு வருடங்களில் படிப்பாளி பட்டம் வந்து சேர, முதல் பெஞ்ச் மாணவனானேன். மறுபடியும் “நீயுமாடா இப்படி” என்ற பிரச்சினை, லெக்ச்சரர்களிடமிருந்து.

பெண்களிடம் (வேற டிபார்ட்மெண்ட்தான்) பேசினால், பிராட்டிக்கல் மார்க்கில் கை, கால் வைப்பார்கள் (எல்லாம் பொறாமைதான்). அதையும் துச்சமாக எண்ணி, சில காதல் ஜோடிகள் சிறகடித்தன. ஆனால் அதில் ஒன்று கூட வாழ்வில் இணையவில்லை என்பது சோகமான பின்குறிப்பு. காலேஜ்க்கு லேட்டாக வந்தால் அடையாள அட்டையை வாட்ச்மேனிடம் தந்துவிட்டு போகவேண்டும். மதியம், பிரின்ஸிபால் ரூமிற்கு சென்று அவரிடம் பேசி வாங்கிக்கொள்ளவேண்டும். கிளாஸ் நடக்கும் நேரத்தில், கேண்டீனில் யாரும் இருக்க கூடாது. இப்படிபட்ட சூழ்நிலையில் அந்த 4 வருடங்கள் ஒரு பெரிய ஸ்கூலில் படித்த அனுபவமே ஏற்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, நண்பர்களுடன் அரட்டை, மாதத்தில் இரண்டு தடவை திருச்சியில் புது சினிமா போன்ற சில விஷயங்கள் பொழுது போக உதவியது.

என்னுடைய பெரிய பிரச்சினை-படிப்பை முடிக்கும் வரை வீட்டு நியாபகம் மறக்காதது. முதல் வருடத்தில் சென்னையிலிருந்து திருச்சி வரும்போது இருந்த பஸ் பயண அழுகை, மூன்றாம் ஆண்டிலும் விம்மலுடன் தொடர்ந்தது வேடிக்கையான விஷயம்.

 70% எடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலையில், அதை நோக்கியே சென்றதில், காலேஜ் கடைசி தினத்தில் எல்லாரும் அழ, ஆளைவிட்டால் போதுமென்று எஸ்கேப் ஆன என்னை, வித்தியாசமாக பார்த்தார்கள். கௌதம் மேனன் படங்களில் என் காலேஜ் பெயர் வரும்போது மட்டுமே, காலேஜ் படிப்பு நியாபகத்திற்கு வருகிறது.

இன்றும்.. வாழ்வில் மறக்க முடியாதது, காலேஜ் வாழ்க்கை என்று எல்லாரும் சொல்ல, எனக்கு முதல் 15 வருட வாழ்க்கை மட்டுமே மறக்க இயலாத ஒன்றாகிப் போனது.

மொத்தத்தில், என் பதின்ம வயது பெரிய சுவாரசியங்கள் இல்லாமல், பிரச்சினைகள் இல்லாமல் போயே போச்சு....

22 பின்னூட்டங்கள்:

Madurai Saravanan said...

நல்ல அனுபவம் சுவைப்பட சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

ம்ம்.....ரொம்ப நல்லவரா
இருந்திருக்கீங்க.

ஜோதிஜி said...

அதென்ன சாதனையாளர்களின் சரித்திரமெல்லாம் மிகச் சாதாரணமாகவே இருக்கிறது?

Chitra said...

மொத்தத்தில், என் பதின்ம வயது பெரிய சுவாரசியங்கள் இல்லாமல், பிரச்சினைகள் இல்லாமல் போயே போச்சு....


......அதுவே பெரிய விஷயம்தானே!

ஆளையே காணோம், ரொம்ப நாளா?
Welcome back!

~~Romeo~~ said...

பதிவு அருமை . உங்களின் எழுத்துகளில் சிறிய மாற்றம் தெரிகிறது .. இதே பாணியில் தொடரவும் .

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

MCE Student டா? சந்தேஷம். கொஞ்சம் நாட்கள் நான் அங்கே வேலைப்பார்த்தேன். அதனால ஒரு பாசம்!!!!!

பின்னோக்கி said...

நன்றி - மதுரை சரவணன்

நன்றி - நாஞ்சில் - ரொம்ப அப்பாவிங்க நானு. சொன்னா நம்புங்க. சுவாரஸ்யம் இல்லை என்றாலும், பிற்காலத்துல வர்ற சந்ததிகளுக்கு, இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான்னு தெரியனும் இல்லையா. அதுக்கு தான் இந்த பதிவு :)

பின்னோக்கி said...

நன்றி - வானம்பாடிகள் சார். பேசாம 70 துலயே படிச்சுருக்கலாம். சீக்கிரம் கல்யாணமாவது ஆகியிருக்கும் :) உங்க காலத்துல சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுவாங்க இல்லை ? :).

பெரிய எழுத்தாளர்கள் சிறிது காலம் எழுதாமல், அவர்களுக்கு ஒரு வெற்றிடம் ஏற்படும்னு சொல்லுவாங்க. எனக்கும் அது ஏற்பட்டுச்சுன்னு நினைக்கிறேன் :)

பின்னோக்கி said...

நன்றி - சைவகொத்துப்பரோட்டா

நன்றி - ஜோதிஜி :-).

நன்றி - சித்ரா - என்ன எழுதன்னு யோசிச்சே காலம் போயிடுச்சு. இனி ரெகுலரா வருவேன்.

நன்றி - ரோமியோ - எழுத்தில் மாற்றமா ?. நல்ல வகையில் இருப்பதாக சொன்னதற்கு நன்றி

நன்றி - ஜெ.ஜெயமார்த்தாண்டன் - ஐய்யோ.. அங்க வேலை பார்த்தீங்களா... நல்ல காலேஜ்ங்க நான் தான் வேஸ்ட் பண்ணிட்டேன் :). இப்ப நிறைய மாறியிருக்கும்னு நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமாகவும், நேர்மையாகவும்....அருமை.

ரோஸ்விக் said...

சுவாரஸ்யம் இல்லாத அந்த காலத்தை பின்னோக்கி பார்க்கிறதுக்கு பின்னோக்கி ஒரு பேரு வேற... ம்ஹிக்கூம்... :-))

தமாசுக்கு தலைவா...

என்னைய மாதிரியே ரொம்ப நல்லவனா இருந்துருக்கீங்க... (டேய் யாருடா அது இப்புடி சொன்னதுக்கு கல்லை கொண்டு எறிவது... நம்புங்கடா)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என்னுடைய பெரிய பிரச்சினை-படிப்பை முடிக்கும் வரை வீட்டு நியாபகம் மறக்காதது. முதல் வருடத்தில் சென்னையிலிருந்து திருச்சி வரும்போது இருந்த பஸ் பயண அழுகை, மூன்றாம் ஆண்டிலும் விம்மலுடன் தொடர்ந்தது வேடிக்கையான விஷயம்.//

:)
ரொம்பவே நல்லவரா இருப்பீங்க போலயெ

தாராபுரத்தான் said...

பள்ளி பருவ நினைவலைகளை ரொம்ப நல்லா பகிர்ந்துமள்ளீர்கள்.

பின்னோக்கி said...

நன்றி - ரோஸ்விக் - நாமெல்லாம் ரொம்ப நல்லவைய்ங்க :)

நன்றி - ஸ்ரீராம்

நன்றி - முத்துலெட்சுமி

நன்றி - தாராபுரத்தான்

கிருபாநந்தினி said...

\\மொத்தத்தில், என் பதின்ம வயது பெரிய சுவாரசியங்கள் இல்லாமல், பிரச்சினைகள் இல்லாமல் போயே போச்சு....// அச்சச்சோ! :))

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பர் பின்னோக்கி,
வெல்கம் பேக்.
கால் பூரண்மாக குணமாகிவிட்டதா?
மிக அழகாக மலரும் நினைவுகளை பகிர்ந்தீர்கள்.நேரம் கிடைக்கயில் தொடர்ந்து எழுதவும்.

அமுதா said...

சுவாரசியமாகக் கூறியுள்ளீர்கள்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ரசிக்கும் வகையில் சொல்லி இருக்கீங்க அருமை. பகிர்வுக்கு நன்றி !

அகஆழ் said...

//மொத்தத்தில், என் பதின்ம வயது பெரிய சுவாரசியங்கள் இல்லாமல்//

சுவாரசியம் இல்லாமலே சுவாரசியமாக எழுதியுள்ளீர்கள்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அழகா எழுதி இருக்கீங்க..:))

// இப்படி சொல்லியேஏஏஏ//
ரொம்ப நல்ல புள்ளையாவே இருந்துருக்கீங்க போல..:))

சிவன். said...

என்னங்க நீங்களும் அப்பப்ப நம்மள மாதிரி காணாம போயிடுறீங்க ?

அண்ணாமலையான் said...

கலக்கிட்டீங்க தலைவா... (போதுமா?)