30 August 2009

இரண்டு விஷயம் எஃப்.எம்-ல் கேட்டது.

சமீபத்தில், பிக் எஃப்.எம்-ல் கேட்ட துணுக்கு.
கேள்வி வந்து, கொக்கு ஏன் ஒத்த கால்ல நிக்குது ?
- "சார், அது யோகா பண்ணுது."

- "அது ஒத்த கால்ல நின்னு பிச்சைக் கேக்குது."

அடுத்த பதில் கேட்குறத்துக்குள்ள என் ஆபீஸ் வந்துடுச்சு.அப்புறம் யோசிச்சு பார்த்தேன். அறிவியல் பூர்வமா எதாவது காரணம் இருக்கனுமே !! என்னவா இருக்கும்னு.

- கொக்கு தண்ணியில நின்னு மீன புடிக்கனும். ஆன தண்ணியில சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்குறதுனால, கொக்கால மீன பார்க்க முடியாது. அதுனால, ஒத்த கால எடுத்து சூரிய ஓளிய தடுத்து, அதனால ஏற்படுகிற, நிழலை வெச்சு, மீன புடிக்குது.

- சூரிய ஒளிய கால் வெச்சு தடுக்கும் போது ஏற்படுகிற நிழல், மீன்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஏன், அந்த இடம் இருட்டா இருக்குன்னு பார்க்க வர்ற மீன, கொக்கு லபக் பண்ணிடும்.
மேல கூறிய இரண்டு காரணம் எனக்கு தோன்றியது. உங்களுக்கு எதாவது காரணம் தெரிஞ்சா சொல்லுங்க.”டேய் !! ஏன்டா ஒரு வாரமா ஈ-மெயில் அனுப்பல ?”

“எங்க வீட்டுல broadband connection வேலை செய்யல”

“அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், BSNL broadband connection எடுன்னு. இப்போ இன்ஸ்டாலேசன் சார்ஜ் கம்மி பண்ணிட்டாங்க. சூப்பர் fast -அ வேலை செய்யும்”
இது ஒரு BSNL broadband விளம்பரம்.


நீங்க பார்த்தீங்கன்னா, ஒரு வாரமா connection வேலை பார்க்கலைங்கறது தான் பிரச்சினை. ஆனா, BSNL connection எடுத்தா, இந்த மாதிரி பிரச்சினை வந்தா உடனே சரி பண்ணிடுவாங்கன்னு விளம்பரத்துல சொல்லவே இல்லை. அத விட்டுட்டு, இன்ஸ்டாலேசன் சார்ஜ் கம்மி பண்ணிட்டாங்க, அதுனால BSNL connection எடுங்கன்னு சொல்றது எப்படி ஒரு சரியான விளம்பரம்னு தெரியலை.

என் நண்பன் ஒருவன், சென்னைப் புற நகர் பகுதியில் இருப்பவன். அவனுக்கு வேற வழி இல்லாம, BSNL connection, எடுத்தான். ஒரு மாசமா அது வேலை செய்யலை. இவன் குடுக்காத புகார் இல்லை. சரி பண்ணவே இல்லை. ஒவ்வொரு அதிகாரிக்கும் ஈ-மெயில் அனுப்பி அனுப்பு அலுத்து போய், கடைசியில General Manager-க்கு, எல்லா ஈ-மெயிலயும் அனுப்பினான். அதுக்கு அப்புறம், ஒரு அதிகாரி வீட்டுக்கு வந்து 10 நிமிஷத்துல சரி செஞ்சாங்க.

“சார், இனிமேல பிரச்சினைன்னா என்கிட்ட சொல்லுங்க, GM-க்கு சொல்லாதீங்கன்னு” சொல்லிட்டு போனாங்க.

இப்படி ஒரு நிலைமையில, விளம்பரம், வேற எப்படி குடுக்க முடியும் ??

22 August 2009

கண்ணடிக்கும் வானத்து தேவதை.

அந்தி சாயும் வேளை. நீங்கள், உங்கள் குழந்தையுடன், மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்க்கிறீர்கள். அப்பொழுது, வானத்தில், ஒரு சிறு வெளிச்ச புள்ளி தோன்றி மெதுவாக நகர்கிறது. முதலில், அது பறக்கும் விமானம் என்று நினைக்கிறீர்கள். நகர்கிற ஒளி, பளீர் என்று ஒளிர்கிறது. அடுத்த நொடி, அது மறைந்துவிடுகிறது. உங்களுக்கு வியப்பு !!. விமானமாக இருந்தால், உடனே, மறைந்து விடாதே !!. அப்படியானால் என்ன அது ?. ஒரு வேளை, அயல் கிரகவாசிகள் செல்லும் பறக்கும் தட்டா ??. அந்த வெளிச்ச புள்ளியை மறுமுறை பார்க்க முடியுமா ?. அந்த 3 நொடி நிகழ்வு, உங்களை வியப்பிலாழ்த்துகிறது. நீங்கள் பார்த்ததை, மற்றவர்களிடம் சொல்ல மனது துடிக்கிறது. ஆனால், கண்ணில் காட்டாவிட்டால் மற்றவர்கள் நம்பமாட்டார்களே ??.
ஒரு நற்செய்தி !!. உங்களால் அதை அடிக்கடி பார்க்க முடியும். அந்த கண்ணடி(க்கும்)த்த வானத்து தேவதை, ஒரு செயற்கை கோள். அதன் பெயர் ”இரிடியம்”.
உலகம் முழுவதும், செயற்கை கோள் செல்போன் சேவையை வழங்கும் ஒரு நிறுவனத்தால் வானில் ஏவப்பட்ட பல செயற்கை கோளில் ஒன்று தான் நீங்கள் வானில் பார்த்தது. செயற்கை கோள்கள், இயங்க சூரிய ஓளியை கிரகித்து, மின்சாரமாக மாற்றி தர, அதில் solar pannel -கள், இருக்கும். ஓரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கோணத்தில், சூரியன் ஓளியை, solar pannel -கள் பிரதிபலிக்கும் போது, நமக்கு அந்த பளீர் என்ற ஒளி தெரிகிறது. இதை நாம் இருக்கும் இடத்தைக்கொண்டு முன்னமே தெரிந்து கொள்ள http://www.heavens-above.com/ என்ற இணையதளம் உதவுகிறது.


1. நீங்கள் இருக்கும் இடத்தை தேர்வு செய்யுங்கள். இதற்கு கூகுள் மேப் பயன்படுத்தலாம் அல்லது ஊர் பெயர் வைத்து கண்டுகொள்ளலாம்.
from database->india->madras->Neighbours->mylapore (இதை வரிசையாக க்ளிக்குங்கள்)
2. அடுத்த 24 மணி நேரம் அல்லது 7 நாட்களுக்கு, எப்பொழுது தெரியும் என அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள அட்டவணையை பாருங்கள். உங்களுக்கு வசதியான நேரத்தை தேர்ந்து எடுங்கள். எடுத்து காட்டாக, 24 ஆகஸ்டு, 18:37:17 தேர்வு செய்வோம். மாலை 6 மணி, 37 நிமிடம். -2 என்பது, அந்த ஒளி அளவை குறிக்கிறது. -2 வை விட -5 என்பது, அதிக ஒளி. அடுத்து 163 SSE (south south east). வானில் தெற்கு பகுதிக்கும் கிழக்கு பகுதிக்கும் நடுவில், 163 கோணத்தில், 67 உயரத்தில் (உங்கள் தலைக்கு மேல் உயரம் 90 எனக்கொண்டால், 67 என்பது சற்று குறைவான உயரத்தை குறிக்கும்.), மாலை 6 மணி, 37 நிமிடம், அந்த திசையை பாருங்கள், கண்டுகளியுங்கள்.
கீழே சில படங்கள் இருக்கின்றன. இது உலகம் முழுவதும் தெரிந்த, ஒளியை எடுத்த படங்கள்.

- வானவியல் ஒரு அற்புதமான, உபயோகமான, செலவு இல்லாத பொழுதுபோக்கு. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள்.
- இந்த ஒளியை பார்க்க நான் மேற்கொண்ட முதல், 3 முயற்சி தோல்வியில் முடிந்தது. அதற்கு காரணம், என்னால், திசையை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த முறை, சரியான நேரத்தில் பார்க்கவில்லை. அதனால், 10 நிமிடங்களுக்கு முன்பே மாடிக்கு சென்று விடுங்கள். உங்கள் watch சரியான நேரத்தை காட்டுகிறதா என சரி பார்த்து கொள்ளுங்கள். இப்பொழுது, இதை பார்ப்பது எனக்கு எளிதாகி விட்டது. ஆனால், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கிடைக்கின்ற அனுபவம் புதிது.
- இதே முறையில் நீங்கள் , ISS எனப்படும், விண்வெளி ஆராய்சி மையத்தை பார்க்கலாம். முயன்று பாருங்கள்.
- வெறும் கண்களால் பார்க்க கூடிய, mars, jupiter, saturn கோள்களை, உங்கள் குழந்தைகளுக்கு காட்டுங்கள். அதற்கு starcalc எனப்படுகிற மென்பொருளை உபயோகியுங்கள்.
இந்த பதிவுக்கு முன்/பின் , நீங்கள், இரிடியம்/ISS பார்த்திருந்தால், உங்கள், அனுபவத்தை, பின்னோட்டம் இடுங்கள். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

**** வாருங்கள் வானத்தை பார்ப்போம். ****

17 August 2009

சென்னைக்கு வந்துவிட்டது ..... (பன்றி காய்ச்சல் இல்லை)

 • கூவத்தின் மணம் குறைக்க ...
 • மின்வெட்டை அதிகப்படுத்த ...
 • 6 கிலோ மீட்டரை கடக்க 60 நிமிடங்களாக்க ...
 • விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை விற்பனையை அதிகப்படுத்த ...
 • இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை மரத்தின் கீழ் ஒதுங்க வைக்க ...
 • பலரை அன்னியன் விக்ரம் கெட்டப்பில் அலையவைக்க ...
 • சூடான டீ, பஜ்ஜி, சமோசா விற்பனையை அதிகப்படுத்த ...
 • A/C யில் தூசி படிய ...
 • ஊர் முழுவதும் சாலைகளில் சிறு குளம் உருவாக ....
 • உடல் கச கசப்பை போக்க ...
 • சூரியனுக்கு ச்ற்று ஓய்வு கொடுக்க ...
 • சில பல இடங்களின் சாலை வழி போக்குவரத்தை, நீர் வழி போக்குவரத்தாக்க ......

(அப்பா !!! சொல்ல வந்ததை சொல்லுப்பா ....)


வந்துவிட்டது சென்னையில் (மற்றும்) ஒரு மழைக் காலம்.


இந்த மழைக்காலத்தை மேலும் சுகமாக்க, இதோ 3 அருமையான பாடல்கள்.
மாண்டேஜ் என்று சொல்லப்படுகிற, ஹிரோ, ஹீரோயின் பாடாத, காட்சிகளை மையப்படுத்தி படமாக்கப்பட்ட பாடல்கள்.

1. ஒரு வெட்கம் வருதே !! - பசங்க
(இந்த பாடல் முழுவதும் மழைக்காலத்தில் படமாக்கப் பட்டது. மழைசாரலில் நனைகின்ற சுகம் தர கூடிய பாடல்)

2. இது என்ன மாயம் !! - ஏய் ஆட்டோ
(கடல் அலை போல ஏற்ற, இறக்கங்களுடன், பாடலின் ரிதம் அமைந்திருக்கிறது)

3.காதல் வைத்து ...காதல் வைத்து -
(பாவனா வின் நடிப்பு + இசைக்காக இந்த பாடல்)

16 August 2009

ஐய்யோ !!!!! வேண்டாம் அந்த website !!!


ஒரு வெப்சைட். அதை மக்கள் பார்க்க, பார்க்க ஹிட் counter அதிகம் ஆகும். இது வழக்கமான விஷயம் தான். ஆனால், வெப்சைட் counter உடன், ஒரு விஷம், ஆசிட் கக்கும் கருவி பொருத்தி அதன் மறு முனையில் ஒரு மனிதனை கட்டி போட்டிருக்கிறான் வில்லன். FBI சைபர் க்ரைம் வேலை பார்க்கும் ஹீரோயின், எப்படி வில்லனை வீழ்த்துகிறாள் என்பது தான் கதை.


படத்தின் பெயர் : Untraceable
வெளியான ஆண்டு : 2008.


படம் ஒரு சின்ன சைபர் திருடனை கண்டு பிடிப்பதில் தொடங்குகிறது. அப்புறம், வில்லன் ஒருவனை கடத்தி, கட்டி போட்டு, heparin என்ற மருந்தை அவனுக்கு சிறிது சிறிதாக, ஒவ்வொரு வெப்சைட் விசிட்டர் வரும்போது உடலில் செலுத்துமாறு ஏற்பாடு செய்கிறான். இதை லைவ்வாக ஒளிபரப்புகிறான். இந்த செய்தி பரவ பரவ, அதிகம் மக்கள் அந்த வெப்சைட் க்கு வருகிறார்கள், அதனால் பரிதாபமாக இறக்கிறான். கடைசியில் வில்லன், ஹீரோயினை கடத்த, அவள், அவனிடம் இருந்து தப்பித்தாளா ? இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ்.


இந்த படம் நியூஸ் பைத்தியம் பிடித்து அலையும் நியூஸ் டிவி க்களுக்கு ஒரு சவுக்கடி. மக்கள் எந்த அளவுக்கு கொடுரமான விஷயங்களை இன்டர்நெட்டில் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்; ஒரு மனிதன், தான் வெப்சைட் ஒன்றை பார்த்தால், அதனால் ஒருவன் கொல்லபடுவான் என்று தெரிந்தும் குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த படம்.


நம்மில் எத்தனை பேர் ஈராக் போர் நடக்கும் போது பத்திரிக்கையாளர்கள் கழுத்து அறுத்து கொல்லப்பட்டதை பார்த்தோம் ?.
நம்மில் எத்தனை பேர் சதாம் ஹுசைன் தூக்கில் போடுவதை இன்டர்நெட்டில் ஆர்வத்தோடு பார்த்தோம் ?


இப்படி பட்ட ஒரு நிகழ்வுக்கு பழி வாங்க புறப்படுகின்ற வில்லனை பற்றிய படம்.

15 August 2009

காலத்தின் குரல்

கால இயந்திரம், நமக்கு பிடித்த, ஆனால் அனுபவிக்காத ஒரு கருவி. அப்படி ஒரு வேலை அது கண்டுபிடிக்கபட்டால், நீங்கள் எந்த காலத்துக்கு போக விரும்புவீர்கள்? எனது லிஸ்ட் இதோ.
 • கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தருணம்.

நான் தூத்துக்குடியில் இருந்தபோது, பாஞ்சாலம்குறிச்சி சென்று பார்த்தேன். இப்போது, அந்த கோட்டை ஒரு மண்மேடு மாதிரி இருக்கிறது.. ஒரு மாவீரன் வாழ்ந்து மறைந்த இடம் என்ற உணர்வு, நம்மை சிலிர்க்க வைக்கும். முன்னூறு வருடங்களுக்கு முன் நமது மனது சென்று விடும். கட்ட பொம்மனை தூக்கில் இட்ட புளிய மரம் இருந்த இடத்தில், இப்போது ஒரு நினைவு சின்னம் இருக்கிறது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களில், தற்கால காங்கிரீட் கட்டடங்களை கட்டுவது சரியா என்று தெரியவில்லை. இந்த வலை தளம், கட்டபொம்மன் கோட்டை இருந்த இடத்தில், இந்தியா அகழ்வு ஆராய்ச்சி பற்றி விளக்குகிறது. • மொகலாய மன்னர்கள், அக்பர், ஷாஜகான் இருந்த காலம். .தாஜ் மகால கட்டும் போது, நாம் அருகில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கும் ?. ஷாஜகான், தாஜ்மஹால் கட்டியவர்கள் கைகளை வெட்ட ஆணையிட்டது உண்மையா பொய்யா என்று பார்க்கலாம். ஒரு பிரச்சனை, நம்மையும் வேலை செய்ய பிடித்து போனால், டவுசர் கிழிந்து விடும் :-). இந்த மன்னர்கள் பற்றி மதன் அவர்கள் எழுதிய "வந்தார்கள், வென்றார்கள்", ஒரு அருமையான புத்தகம்.


3. சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள்.மாமல்லபுரம் சென்று பார்க்கும் போது, எப்படி அந்த காலத்தில, பல்லவர்களால், குடவறை கோவில் கட்ட முடிந்தது ? எதை வைத்து அவ்வளவு பெரிய பாறையை வெட்டினார்கள் ?. சற்று கூர்ந்து கவனித்தால் அவர்கள் கையாண்ட யுக்தி என்ன என்று கண்டுபிடிக்கலாம். ஒரு பெரிய பாறையில், சிறு துவாரங்கள் இட்டு அதில், மரக்கட்டை வைத்து அடித்துவிடுவார்கள். இப்படியே சிறு சிறு துளையிட்டு, ஒரு நேர் கொடு வரைந்து, பிளக்கவேண்டிய பாகங்களை முடிவு செய்வார்கள். பிறகு, அந்த மரகட்டையில் தண்ணீர் விடுவார்கள். மரகட்டை விரிவு அடையும் போது, பாறை பிளந்துவிடும். இன்று பார்த்தாலும் சில பாறைகளில், அப்படி பட்ட துளைகள் இருப்பதை பார்க்க முடியும்.


கல்கி அவர்கள் எழுதிய "பொன்னியின் செல்வன்" படித்த அனைவரும், சோழ மன்னர்களை பற்றி அறிய ஆவலாக இருப்பார்கள்.


இன்றும் பழங்கால கோவில்களுக்கு போகும்போது, இன்று நாம் நடக்கும் இடத்தில், சில ஆயிரம் வருடங்கள் முன், மன்னர்கள் நடந்திருப்பார்கள் என்ற நினைவு வரும்.


அடுத்த முறை வரலாற்றுக்கு முக்கியத்துவம் பெற்ற இடங்களுக்கு போகும்போது, அந்த காலத்தின் குரல் கேட்கிறதா என்று பார்க்க வேண்டும் (அப்பாடி !!! இந்த பதிவின் தலைப்பை சொல்லியாச்சு :-) ).காலத்தின் குரல் கேட்க்குமான்னு தெரியலை. ஆனா யார், யாரை லவ் பண்றாங்கன்னு நம்ம தற்கால மன்னர்கள், பெயிண்ட் மற்றும் சாக்பீஸ் உதவியுடன், இந்த இடங்களில், தங்களின் முத்திரை பதித்திருக்கிறார்கள் :-(. America போனால், 300 வருட பாரம்பரிய இடங்களை கூட அவர்கள் எப்படி பாதுகாக்கிறார்கள் என்று தெரியும். இன்(நம்) நாட்டு மன்னர்கள் திருந்தினால் வரலாற்றுக்கு சின்னங்களை பாதுகாக்க முடியும்.

!! நம் மனமே கால இயந்திரம். !!

உலகத்தில் தோன்றியது!!! வலையுலக நண்பர்களுக்கு வணக்கம் !!!


நான் கவிதை எழுதுபவன் கிடையாது. அதனால் கவிதை இங்கு தென்படாது.நான் இலக்கியவாதி கிடையாது. அதனால் இலக்கியம் பற்றி ரொம்ப பேச மாட்டேன்.தினம் தோறும் எனக்கு தோன்றுவதை சேமிக்க எனக்கு இந்த வலைப்பதிவு.

நான் பிறந்ததை பற்றி சொல்லி ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்.
என் அப்பா ஒரு பொறியாளர். அம்மா இல்லத்தலைவி. மூன்று மகன்களுடன அமைதியான வாழ்வு. நான்காவதாக நான் பிறந்தேன்.

என் அப்பா, அம்மா ஆசை ஒரு பெண் குழந்தை. நள்ளிரவில் பிறந்தேன். அந்த செய்தியை என் அப்பாவிடம் அவர் அலுவலக பணியாளர் வந்து சொன்னார். நான்காவது பையன் என்று தெரிந்ததும், அப்பா சொன்னது "அப்படியா !! சரி" . என் மூன்றாவது அண்ணன் என் அப்பாவை கட்டி கொள்ள, இருவரும் தூங்கிவிட்டார்கள். அடுத்தநாள் காலை தான் அப்பா என்னை வந்து பார்த்ததாக பிறகு என் பாட்டி சொன்னதுண்டு. அம்மாவும் , பெண் பிள்ளை இல்லை என்று தெரிந்து வருத்தப்பட்டதாக பிற்காலத்தில் சொல்ல கேட்டேன். இது நடந்தது 1975 -ஆம் வருடம். அப்பவே பெண் குழந்தைக்கு ஆசை பட்ட என் அப்பா, அம்மாவுக்கு ஒரு ஷொட்டு.

"நட்ட நடு ராத்திரி, கன்னங்கரேர்னு இருந்த நீ. நர்ஸ் உன்னை வெறும் கட்டில்ல போட்டுட்டா. நீ கத்த ஆரம்பிச்சுட்ட. நான் தான் ராத்திரி முழுக்க உன்னை தூக்கி வெச்சுருந்தேன் தெரியுமா ?" - இது நான் வாலுத்தனம் பண்ணும்போது பாட்டி சொல்வது.

இப்படியாக நான்காவது பையனாக வாழ்க்கையை தொடங்கினேன். ம்ம்..ம்ம் மூன்று அண்ணன்களை எப்படி சமாளித்தேன்னு பிறகு சொல்றேன்.

விரைவில் வருகிறேன் !!!.