30 October 2009

கி.பி 642-ல் சிறு மாற்றம்

(வரலாற்று பிழை இருக்கலாம். மன்னியுங்கள்)


கி.பி 626 வருடத்தில் ஒரு நாள்.

வணிகர்கள் நடமாடும் அந்த சிறிய புகழ் வாய்ந்த துறைமுக நகரான மகாபலிபுரத்தில், வழக்கத்திற்கு மாறாக, பல்லவ அரசின் சின்னத்தை ஏந்திய காவல் வீரர்கள் குதிரையில் வந்தார்கள்.


அதோ வருவது மகேந்திரவர்ம பல்லவன். கடற்கரை எழிலை ரசித்துக் கொண்டிருக்கும் போது, அடிவானத்தை தொடும் அவசரத்துடன் ஓடிய மேகத்தை பார்த்தவனுக்கு ஒரே ஆச்சர்யம்.

அமைச்சரே ! அங்கே பாருங்கள், அந்த மேகக்கூட்டம் ஒரு சிங்கத்தை ஒத்திருக்கிறது

ஆம் அரசே ! இது சிறு பிள்ளைகள் விளையாட்டாயிற்றே. அவர்கள் மேகக் கூட்டத்தினை பல்வேறு விதமான உருவங்களாக நினைத்து பார்த்து ரசிப்பார்கள்

இல்லை அமைச்சரே ! எனக்கு இங்கு இருக்கும் பாறையில், இந்த மிருகங்களை மற்றும் கோவில்களை வடித்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகிறது. நாம் ஏற்கனவே திருமயம் மற்றும் நாமக்கல்லில் கட்டிய கோவில்களை போன்றே, மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல்,  வெறும் பாறைகளை வெட்டி இக்கோவில்களும் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம்

ஆகட்டும் அரசே ! தங்களின் விருப்பப்படியே நடக்கட்டும்

அங்கிருந்த பல பாறைகள், அழகிய கோவில்கள் மற்றும் சிற்பங்களாக உருமாறிக்கொண்டிருந்தது.

கி.பி 640 வருடத்தில் ஒரு நாள்.

மகாபலிபுரத்தில் நரசிம்மவர்ம பல்லவன், தன் தந்தை ஆர்வம் கொண்டு உருவாக்கிய சிற்பங்களை பார்த்த படி நடந்து வந்தான். அவனது கனவு, அர்ஜீனன் தவம், பஞ்ச பாண்டவர் ரதங்கள், குடவறை கோவில்கள் கட்ட வேண்டும்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை, வந்த செய்தி ஆத்திரமூட்டியது. இரண்டாம் புலிகேசி, தன் தந்தையை வீழ்த்தியவன், மறுபடியும் எல்லையில் தொல்லை தர ஆரம்பித்துவிட்டான்.

கி.பி 642 வருடத்தில் ஒரு நாள்.

”மன்னா ! நீங்கள் போரிலே பல வருடங்களை கழித்துவிட்டீர்கள். நீங்கள் வாதாபியை தீக்கிரையாக்கி, புலிகேசியை வென்றதை கொண்டாடும் விதமாக, 2 வருடங்களுக்கு முன்பு நீங்கள் விருப்ப பட்டபடி, கடற்கரை சிற்பங்களை செதுக்க சொல்லட்டுமா ?”

”வேண்டாம் அமைச்சரே ! அந்த ஆசை போய்விட்டது. என் தந்தை கட்டிய அந்த கோவில்களே போதும்”

கி.பி 1300 வருடத்தில் ஒரு நாள்.
மகாபலிபுரத்தில், அமைதியாக இருக்கும் கடல் அன்று சற்று உள்வாங்கியது. சிறு மணித்துளிகளில், ஆழிப்பேரலை வந்து, மகேந்திரவர்மன் கடலையொட்டி கட்டிய கோவில்களை கடலுக்குள் கொண்டு சென்றது. எஞ்சியது ஒரு கோவில் தான்.

கி.பி 2004, டிசம்பர் 30.

சுனாமியால் மகாபலிபுரத்தில், கடல் உள் வாங்கியது. அப்போது பல சிற்பங்கள் கண்ணில் பட்டதாக பார்த்தவர்கள் கூறினார்கள். இப்பொழுது அந்த சிற்பங்கள் மறுபடியும் கடல் நீருக்கு அடியில் சென்று விட்டது. இதனை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அச்சிற்பங்கள் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தை சேர்ந்தது எனவும், கி.பி 620ஆம் ஆண்டுகளில், கடல் இப்பொழுது இருந்ததை விட தொலைவில் இருந்ததாகவும், அதனால், அப்பொழுது கடற்கரைக்கு அருகில் கட்டப்பட்ட கோவில்கள், கால மாற்றத்தினால், கடலுக்குள் சென்றிருக்கலாம் எனவும் கூறினார்கள்.

கி.பி 2009. ஒரு ஞாயிற்றுக்கிழமை.

”மகாபலிபுரம் போய்ட்டு அப்படியே பாண்டிச்சேரி போகலாம் வர்றியா ?”
”மகாபலிபுரத்துல பார்க்குறத்துக்கு ஒரு கோவில தவிர வேற என்னடா இருக்கு? அது தான் அங்கு இருந்த சிற்பங்கள் எல்லாம் கடலுக்குள்ள போய்டுச்சாமில்ல. நேரா பாண்டிச்சேரி போய்ட்டு வந்திடலாம்”

29 October 2009

வினோத ஐடியாக்கள்

கொஞ்ச நேரம் மூளைய கசக்கி யோசிச்சதுல சில ஐடியாக்கள் வந்துச்சு. காப்புரிமை எதுவும் இல்லைங்கறதால, தேவைப்பட்டவங்க இந்த ஐடியாக்கள யூஸ் பண்ணிக்கோங்க.

ஐடியா - 1

நீங்க பார்த்தீங்கன்னா, ரோட்டோரம் காம்பவுண்டு சுவர் இருக்குற வீட்டுக்காரங்களுக்கு பிரச்சினை, நிறைய பேரு காம்பவுண்டு சுவர்கிட்ட வந்து உச்சா போய்டுவாங்க. அந்த இடமே இலவச டாய்லெட் மாதிரி ஆகும். இதை தடுக்க “இங்கு உச்சா போகாதீர்கள்”னு எழுதிப்போட்டா, அதுமேலயே உச்சா போய்டுறாங்க. என்ன பண்றது ?. ஒரு சின்ன கேமிராவ காம்பவுண்ட் சுவர்ல பதிச்சு வெச்சுடுங்க. உங்க வீட்டுக்கு மேல நிறைய பேர் பார்க்க கூடிய இடத்துல, ஒரு எல்.சி.டி ஸ்கிரீன் வெச்சுடுங்க. உச்சா மேல பட்ட உடனே ஆக்டிவ் ஆகுற மாதிரி ஒரு சென்சார கேமிரால பிக்ஸ் பண்ணிடுங்க. அப்புறம் என்ன ? யாரவது வந்து அசிங்க பண்ணுனா, சுட சுட ??!!! போட்டோ எடுத்து, எல்.சி.டி ஸ்கிரீன்ல போடுங்க. தலைப்பு “இன்றைக்கு உச்சா போனவர்கள்”. ஐடியா நல்ல இருக்குல்ல ? ஒரே நாள்ல நிறைய பேரு வந்துட்டா ? கவலை வேண்டாம் ஸ்லைடு ஷோ மாதிரி போட்டுவிடுங்க.

ஐடியா - 2

ஐடியா-1ன படிச்சுட்டு..இங்க பாரேன், இந்த பையனுக்குள்ள இத்தனை திறமையான்னு யோசிக்கிறீங்கன்னு மட்டும் புரியுது. என்னைய பாராட்டுறத்துக்கு முன்னாடி இந்த ஐடியாவ படிச்சுடுங்க.

பஸ்ல போற லேடீஸ்க்கு இடி மன்னர்களால தொல்லை. தனிப்பட்ட முறையில வடிவமைக்கப்பட்ட புடவையில, சரிகைமாதிரி இருக்கக் கூடிய சின்ன சின்ன கம்பிகளை வெச்சு, அதுல அதிகம் இல்லை ஜென்டில்மென் ! ஒரு 10 அல்லது 20 வோல்ட் கரெண்ட் பாயுறமாதிரி செட்டப் செஞ்சுட வேண்டியது. இடி மன்னர்கள் பக்கத்துல இருக்குற மாதிரி தெரிஞ்சா, கண்ட்ரோல் பட்டனை ஆன் பண்ணவேண்டியது தான், கரெண்ட் பாய வேண்டியதுதான், இடி மன்னர்கள், திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி கத்த வேண்டியது தான்.

ஐடியா - 3

இது உண்மையாலுமே தமாசு ஐடியா இல்லை. ரொம்ப சீரியஸ். கேர்புல்லாக் கேட்டுக்கோங்க. சிவப்பு விளக்க பார்த்த உடனே நிக்கனும்னு நம்மில் பல பேருக்கு புரியறதில்லை. அப்பதான் ஸ்பீடா சிக்னல தாண்டி போகணும்னு நினைப்போம். இதை தடுக்க, ரோடுல நிற்கன்னு எழுதியிருக்குற கோட்டுல, சின்ன சின்ன கத்தி மாதிரி செஞ்சு வெச்சுடனும். ரெட் சிக்னல் விழுந்தவுடனே, அந்த கத்தி எல்லாம் ரோட்டுல இருந்து மேல வர்ற மாதிரி ஒரு செட்டப். அதை தாண்டி வந்தா டயர் பஞ்சர் ஆகிடும்.

*******

இந்த ஐடியாக்கள் எல்லாம் படிச்சுட்டு டென்ஷன் ஆனவங்களோட டென்ஷன குறைக்க என்கிட்ட இன்னொரு ஐடியா இருக்கு..அது என்னன்னா ...............

28 October 2009

வேலை காலி-இல்லை

இது நாள் வரை பேப்பர் மற்றும் டி.விக்களின் வழியே கேள்விப்பட்ட விஷயம் “கணினித்துறையில் ஆட்குறைப்பு”. நம்ம கம்பெனியில அது மாதிரி எதுவும் நடக்காது. நாம வேலை செய்யுறது தொலைதொடர்புத் துறை. அது இந்த பொருளாதார வீழ்ச்சியில பாதிக்கப்படலை” போன்ற எங்களின் நம்பிக்கையை தகர்த்து,  நான் வேலை பார்க்கும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கம்பெனியில், போன வெள்ளிக்கிழமை, நிறைய பேரை வெளியே அனுப்பிவிட்டார்கள். இந்தியாவில் வேலை செய்ததால் நான் தப்பினேன்.


50 பேர் வேலை செய்த இடத்தில் இப்பொழுது 5 பேர். பலவருடங்களாக ஒன்றாக வேலை பார்த்தவர்கள், சில மணி நேரத்தில் வெளியேறியது ஒரு பெரிய அதிர்ச்சி. 6 மாதத்திற்கு முன்பிருந்ததை விட இப்பொழுது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. அதனால், வேலையிழந்ததில் 50 சதவிகிதத்தினர் உடனடியாக வேறு கம்பெனியில் சேர்ந்துவிட்டார்கள். வேலையிலுள்ளவர்கள், தங்கள் வேலை எப்பொழுது போகுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள்.

அரசாங்க வேலையை விட அதிக சம்பளம், ஆனால் வேலை அவர்களைப் போல 58 வயதுவரை இருக்கும் என்பது நிரந்தரமில்லை.  பெரும்பாலோனோர் ஐ.டி வேலையிலிருப்பவர்கள் மேல் கொண்டுள்ள வெறுப்பை பற்றி இந்த பதிவில் எழுதியிருந்தேன். அரசாங்க வேலையிலிருப்பவர்கள் 58 வயது வரை வேலையிலிருந்து, சம்பாதித்தை வைத்து கட்டிய வீட்டை வாடகைக்கு விட்டு, அதன் வருமானத்தில் எஞ்சிய நாட்களை கழிப்பவர்கள். அவர்கள் கேட்ட வாடகையை குடுத்து வசித்தவர்களில் பெரும்பாலோனோர் ஐ.டி துறையில் வேலை பார்த்தவர்கள் தான். இப்பொழுது உள்ள நிலைமையில், வாடகைகள் குறைய கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. பொருளாதாரம் என்பது ஒரு வட்ட வடிவ சங்கிலி. அதில் ஒரு இடம் அறுபடும் போது, சமூகத்திலுள்ள அனைவரும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். இதை பலர் உணர்வதில்லை.

இந்தியாவில் ஆட்குறைப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த கம்பெனியில் வேலை தேடும்போது, அவர்களை திறமைகுறைவினால் வேலையிழந்தவர்களாகவே பார்க்கிறார்கள். கம்பெனியில் ஒரு பிரிவு லாபகரமாக இயங்காவிட்டால் அந்த பிரிவில் உள்ள அனைவரும் வேலை இழக்கிறார்கள். அமெரிக்காவில் ஆட்குறைப்பினால் வேலை இழந்தவர்களை திறமை குறைந்தவர்களாக அங்கு பார்ப்பதில்லை. அதனால் அடுத்த வேலை கிடைப்பது சற்று எளிதாக இருக்கிறது. இந்தியாவிலும் இத்தகைய மனப்பான்மை வரவேண்டும்.

முதல் ரவுண்டில் வேலையை தக்கவைத்துக் கொண்டாகிவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி...

22 October 2009

போய்விடு அம்மா என் நினைவிலிருந்து


 (1949 - 1999)
யாருக்குத்தான் பிடிக்காது ?. உயிருடன் இருக்கையில் பாசத்துடன், இறந்தவுடன் அழுகையுடன் நினைவுகூற அம்மா.

“ஏம்மா !! அவன் வயித்துல இருக்கும் போது குங்குமப்பூ சாப்டியாம். ஏன் நான் வயித்துல இருக்கும் போது சாப்பிடல ? பாரு !! அதனால தான் நான் கருப்பா இருக்கேன்’ எனச் சிணுங்கியபோது, ”அப்பா கலர்டா நீ” என சொல்லி அணைத்துக்கொண்டவள்.

சிறுவயதில், எங்களை கண்டிக்க கைக்கு கிடைத்ததை வைத்து அடிக்க, நாங்கள் அழ, பிற்காலத்தில் நீ அழுது எங்களை கண்டித்தாய்.

நான்கு ஆண் பிள்ளைகளுடன் ஐந்தாவதாய் அப்பாவையும் பார்த்துக் கொண்டவள் நீ.

”சே !! எங்க பார்த்தாலும் ஆண்கள் கூட்டம். உடல் உபாதைகளை சொல்லக்கூட ஒரு பெண் பிள்ளை இல்லை” என அடிக்கடி நீ சலித்துக்கொண்டது, அப்பொழுது சிரிப்பை  வரவழைத்தாலும், மணமாகி மனைவி வந்தவுடன், உன் சலிப்பின் அர்த்தம் புரிகிறது.

உன் வயது அம்மாக்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க, உன் வாழ்க்கை எங்களுக்காக என வாழ்ந்தவள் நீ.

8 வது வரை மட்டுமே படித்த நீ, உலக அறிவை கடைசி வரை கற்றுக் கொண்டவள், கொடுத்தவள்.

எனக்கு முதலில் உயிர் கொடுத்து, பல முறை என் உயிரைக் காப்பாற்றியது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை, 2 நாள் காய்ச்சல் சரியான நிலையில், ஒரு மாலைப் பொழுது சூரியனை நான் பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில், என் கண்களை பார்த்து, மஞ்சளாக இருக்க, அடுத்த 20 நாட்கள் நீ என் உயிரைக் காப்பாற்ற எடுத்த போராட்டத்தை என்னவென்று சொல்வது ?. கணவனை எமனிடமிருந்து காப்பாற்றியவள் சாவித்திரி என்றால், மகனை எமனிடமிருந்து காப்பாற்றியவளுக்கு பெயர் என்ன ? நீ !!.

6 மாதத்திற்கு  ஒரு முறை அலுவலக காரணங்களுக்காக அப்பாவிற்கு பணிமாற்றம் வர, இடமாற்றம் அலுப்பில்லாமல் செய்தவள் நீ. வீடு மாறுவதிலுள்ள கடினம் இப்பொழுது புரிகிறது எனக்கு. மலைப்பு  ! எப்படி நீ அத்தனை மாற்றங்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்தினாய் என்று.

5 வயது குழந்தைகளிடம் உன்னால் அவர்கள் பாஷையில் பேசமுடிந்தது. அடுத்த சில மணிகளில் 18 வயது  இளையவர்களிடம், சற்று நேரம் கழித்து 60 வயதானவர்களிடம். பேச தெரிந்த ஒரு மொழியை பல அலைவரிசைகளில்  உபயோகித்தவள் நீ. இதனால் தான் நீ போன நாளில் “பாட்டி !!!! ஆண்டீ !!! அம்மா !!” என பல கதறல்கள் கேட்டது.

உன் அண்ணனுடனான சண்டையில், நாங்கள் மரியாதை இல்லா சில வார்த்தைகளால் உன் அண்ணனை நாங்கள் குறிப்பிட “என்ன கெட்ட பழக்கம் இது ?. பெரியவங்களுக்குள்ள பிரச்சினையில் நீங்க தலையிடக்கூடாது, மரியாதையில்லாமல் பேசக்கூடாது” என அந்த நேரத்தில் எங்களை கண்டித்தது, எங்களுக்கு இன்றும் உறவுகளை பராமரிப்பதில் உதவியாக இருக்கிறது.


முதல் நாள் போனில் பேசி, மறுநாள் யாருடனும் பேசாமல் உலகை விட்டு அப்பா சென்ற நாளில் நீ  “18 வயசுல அவர் கூட வந்தேன். இன்னைக்கு வரை என் உலகம் அவரு தான், என்ன செய்ய நான் இனி” எனக் கதற நாங்கள் அன்று உனக்காக மட்டுமே அழுதது அதிகம்.

அண்ணன்களுக்கு மணமாகி அண்ணிகள் வந்த உடன், உன் மகன்களை, அவர்களின் கணவர்களாக மாற்றி, அவர்களிடம் நீ சேர்ப்பித்த விதத்தில், உன், மற்றவர்களின் மனதை படிக்கும் திறன் தெரிந்தது. மகன்களை விடிவித்து, அண்ணிகளை, மகள்களாக மாற்றியவிதம் உனக்கே உரிய திறமை.

உனக்கு இன்னும் சில மாதங்கள் என மருத்துவர் நாள் குறித்த அறையிலிருந்து வெளிவந்து, “பசிக்குதும்மா ! சாப்பிட எதாவது வெச்சுருக்கியா ?” எனக் கேட்ட நாளில் உன் மன உறுதி.

நோயின் பிடியில் சிக்கி, காலையிலிருந்து 50 தடவை வயிற்றுப் போக்காகி, ”என்னால முடியலப்பா ! ரொம்ப கஷ்டமா இருக்குப்பா” என போனில் நீ கூறிய வார்த்தைக் கேட்டு நான் அழுத அழுகை.

கடைசி தருணங்களில் “ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணிவெச்சுட்டேன். உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போறேன். உடனே யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்கடா..பார்த்துட்டு போய்டுறேன்” என நீ சொன்ன அந்த வார்த்தைகள் தான், பிற்காலத்தில், எங்கள் மண நாளில், மணமகனின் அழுகையை பிறர் ஆச்சரியத்துடன் பார்ப்பதற்கு காரணமானது.

நாளை தான் முடிவு எனத் தெரியாமல் முதல் நாள் உன்னை கட்டியணைத்து கட்டிலிலிருந்து, கைத்தாங்களாக எழுப்பி உட்கார வைத்து “போயிட்டு வர்றேன்மா” எனக் கூறி, மறு நாளே உன்னை பார்க்க ஓடி வந்த போது நீ இல்லை.

பல மாத எங்கள் அழுகை வற்றிப் போக, நீ போன நாளில் எங்களிடம் வெற்று மவுனம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

சிறுவயதில் நீ இல்லாத தருணங்களில், உன் புடவையின் அரவணைப்பில் தூங்கிய நாட்கள். இப்போது புடவையும் இல்லை, நீயும் !.

உன் மேல் உள்ள எனக்கான ஒரே கோபம், நீ எங்களை இளகிய மனம் படைத்தவர்களாகவே வளர்த்தது. இந்த உலகை எதிர்கொள்ளும் போது பல நேரங்களில் இப்பொழுது எங்களுக்கு கடினமாக இருக்கிறது.

இப்பொழுது, உன் நினைவுகள் வந்தால், புறந்தள்ளி பிற காரியங்களில் ஈடுபடுகிறேன். உன் புகைப்படத்தை பார்க்க தவிர்க்கிறேன்.

நீ இறந்த நாளில் அழாத என் அழுகையின் மிச்சம், இன்னும் என்னுள் உன் நினைவாக இருக்க, அதை வெளியிட்டு உன்னை என்னிலிருந்து வெளியேற்ற விருப்பமில்லை.

அம்மா என்ற நினைவுகள் வரிசைப் படுத்த முடியாதது. அதனால் தானோ, இப்பொழுது இதை கோர்வையாக எனக்கு எழுத வரவில்லை.

21 October 2009

திக்.திக்.பக்.பக் - 1


மண்டபம் கேம்ப். இது ராமேஸ்வரத்துக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன ஊர். இங்க இலங்கையில இருந்து வர்றவங்களை தங்க வெச்சுரு(ப்பாங்க)க்காங்க. பாம்பன் கடல் பிரிட்ஜ் கட்டுன இஞ்சினியர்கள் தங்குவதற்காக குவார்ட்டர்ஸ் இருந்துச்சு. எங்கப்பாவுக்கு அந்த ஊருக்கு டிரான்ஸ்வர் ஆச்சு. எங்கப்பா அதுல ஒரு இஞ்சினியர்.

இரவு 8 மணியிருக்கும், அந்த ஊருக்கு பஸ்ல வந்து இறங்குனோம். பஸ்ஸ்டாண்டுலயிருந்து புது வீடு பக்கம் . நடந்து போய்க்கிட்டு இருக்கும் போது, எங்க அப்பா ஒரு வயசானவர்கிட்ட பேசுனாரு. எங்கப்பா கைய பிடிச்சுக்கிட்டு நான்.

அப்பா: “வணக்கம் சார்”
அவர்: “வணக்கம். இப்பதான் வர்றீங்களா”
அப்பா: ”நேத்து வந்து பார்த்தேன். நீங்க வெளியில போயிருக்குறதா சொன்னாங்க”
அவர்: ”நேத்து இன்ஸ்பெக்சன். அதுனால வெளிய போயிருந்தேன்”
நான்: அப்பா !! அம்மா, அண்ணன் அவ்வளவு தூரம் போயிட்டாங்க. சீக்கிரம் போகலாம்.

அப்பா: “நாளைக்கு உங்களை வந்து பார்க்கிறேன்”
அவர்: “வாங்க. நீங்க சொன்ன மாதிரி பண்ணிடலாம்”

அவர் போனதும்..
”யாருப்பா இவரு ?”
”உங்க புது ஸ்கூல் ஹெட்மாஸ்டர்டா ! நாளைக்கு உங்களை (நான் 5 வது என் அண்ணன் 7 வது) ஸ்கூல்ல சேர்க்குறத்துக்காக சொல்லியிருந்தேன். இப்ப நியாகப்படுத்தினேன்.”

இதக் கேட்டவுடனயே பேயறைஞ்ச மாதிரி ஆனவன்தான். வீடு வர்ற வரை ஒண்ணும் பேசலை. கப்சிப். இது தெரிஞ்சு இருந்தா ஒரு வணக்கம் போட்டுருக்கலாம், இல்லைன்னா, நடுவுல பேசாமயாவது இருந்திருக்கலாம்

5ஆம் வகுப்பு. ஸ்கூல் ஹெட்மாஸ்டர் தான் என் கணக்கு வாத்தியார். தினமும் வீட்டுப்பாடம் குடுப்பாரு. அடுத்த நாள், ஒவ்வொருத்தரயும் கூப்பிட்டு செக் பண்ணுவாரு. கணக்கு போடலைன்னா, இல்ல தப்பா போட்டுருந்தா பூஜை தான்.

அப்படி ஒரு நாள் கணக்கு நோட்ட செக் பண்ணிக்கிட்டிருந்தார். நான் 4 வது வரிசைல உட்காருவேன். முதல் வரிசையில செக் பண்ணிட்டு, ரெண்டு பேருக்கு பொளேர்ன்னு கன்னத்துல குடுத்தாரு. அதப்பாத்து என்னக்கு வயிறு கலங்கிடுச்சு. நான் போட்ட கணக்கு சரியா தப்பான்னு தெரியலை. பக்கத்துல இருந்தவன்கிட்ட பார்த்தா, அவன் வேற ஆன்ஸர் போட்டுருக்கான். நான் போட்டத, அப்படியே குறுக்கால கோடு போட்டு அடிச்சுட்டு, அவன் போட்டுருந்தத அப்படியே பாத்து போட்டுட்டேன்.

எங்க வரிசை வந்துச்சு. என் பக்கத்துல இருந்தவன் நோட்ட பார்த்துட்டு அவனுக்கு ஒன்னு பொளேர்ன்னு குடுத்தாரு. ஐய்யய்யோ !! அப்ப நான் போட்டது சரி. அவன் போட்டது தான் தப்பு போல. மாத்தி எழுதவும் நேரம் இல்லை. என்ன பண்ணுறது ?. என் நோட்ட பார்த்தாரு.

”என்னடா கணக்கு தப்பா போட்டுருக்க”
“இல்ல சார். இது தப்பு, இதுக்கு முதல் பக்கத்துல கரெக்ட்டா போட்டுருக்கேன்”
முதல் பக்கத்த திருப்பி பார்த்துட்டு
“என்னடா ? இது அடிச்சுருக்கு”
“கை தவறி அடிச்சுட்டேன் சார்”
பொளேர் !!!!

20 October 2009

துடிக்கும் இதயம் - துப்பறியலாம் வாங்க

குற்றவாளிகளை கோர்ட்டில் நிறுத்தும் போது, போலீசார், குற்றம் நடந்த நேரத்தில், குற்றவாளி அந்த இடத்திலிருந்தான் என நிரூபிக்க வேண்டும். குற்றவாளிகள் இதை சாதகமாக பயன்படுத்தி, குற்றம் நடக்கும் போது, தான் பிறிதோர் இடத்திலிருந்த மாதிரி (alibi) நிரூபிக்க முயல்வார்கள். அறிவியல் துணையுடன் குற்றவாளி அந்த இடத்திலிருந்தான் என நிரூபித்த ஒரு கொலை வழக்கு இது. இதில் ஒரு வித்தியாசமான கருவியும் போலீசாருக்கு உதவி செய்தது. என்ன அந்த கருவி ?. வாருங்கள் ! பார்ப்போம்.

******

ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகான இடம். அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் முதுமைக் காலத்தை அமைதியாக கழிப்பவர்கள். டாஸ்மேனியாவிலுள்ள ஒரு சிறு நகரத்தில் சுமார் 40 முதல் 50 பேர் இருந்தார்கள்.

ஒரு நாள் காலை சுமார் 7 மணியளவில், ஜான், பீட்டரின் வீட்டிற்கு வந்து, தன் பெற்றோரை பார்பதற்காக, பீட்டர் தன்னை பக்கத்து ஊருக்கு அவன் காரில் அழைத்து செல்ல முடியுமா ? எனக் கேட்டான். பீட்டர் அதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது, ஜான், பீட்டரின் நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

சிறிது தூரம் சென்ற பிறகு அவன் கண்ட காட்சி நெஞ்சை உறைய வைத்தது. வயதான ஒருவர், தன் வீட்டு தோட்டத்தில் விழுந்து கிடந்தார். போலீசார் வந்து சேர்ந்த போது, 72 வயதான, தனியாக வசித்துக் கொண்டிருந்த கிறிஸ், இறந்து போனது முடிவானது.

போஸ்ட்மார்டத்தில், கிறிஸ் ஒரு பெரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அதிக ரத்த இழப்பு காரணமாக அவர் இறந்திருக்கிறார். இறந்தது சுமார் விடியற்காலை 3 மணியிலிருந்து 7.30 மணிக்குள் என முடிவானது. எப்படி டாக்டர்கள் ஒருவர் இறந்த நேரத்தை கண்டுபிடிப்பார்கள் ?

ஒருவர் இறந்த உடன் ரத்தம் ஓட்டம் நிற்பதால், உடலின் வெப்பம் குறைய ஆரம்பிக்கும். அப்படி குறையக்கூடிய வேகம் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒரு கட்டத்தில், உடலின் வெப்பம், வெளிப்புற வெப்பத்திற்கு சமமாக மாறும். இப்படி வெப்பம் குறையக்கூடிய வேகத்தை வைத்து, இறந்து எவ்வளவு நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த முறை அவ்வளவு துல்லியமானது கிடையாது.
.


வீட்டு தோட்டத்தை ஆராய்ந்த போது, ரத்தக் கறை ஒரு இடத்தில் இருந்தது. அந்த இடத்தில் லூமினால் (luminol) திரவம் தெளிக்கப்பட்டது. (இந்த லூமினால் என்ற ரசாயன பொருள், மனித ரத்ததுடன் கலக்கும் போது ஒளிரும் தன்மை கொண்டது. ரத்தத்தை நன்றாக துடைத்திருந்தாலும் அல்லது பல நாட்களாகியிருந்தாலும் கூட, மிகச்சிறிய அளவில் ரத்தம் இருந்தால் கூட கண்டுபிடிக்கக்கூடியது லூமினால். அருகிலுள்ள படத்தில், சாதாரணமாக தோற்றமளிக்க கூடிய ஒரு இடம் லூமினால் தெளிக்கப்பட்டவுடன் அங்குள்ள ரத்தத்தை எப்படி எடுத்து காட்டுகிறது பாருங்கள்). இரவில் வெளிச்சமில்லாத நேரத்தில் ஆராய்ந்த போது, அந்த ரத்தக் கறை ஒரு சிறிய கோடாலி வடிவிலிருந்தது. போலீசார், கிறிஸ தாக்கப்பட்டது கோடாலியால் என உறுதி செய்தனர். 
               யார் கொன்றது ? ஏன் கொன்றார்கள் ?.

அந்த பகுதியில் வாழ்ந்த வயதானவர்கள், நிறைய பணத்தை வீட்டில் வைத்திருக்கும் பழக்கமுடையவர்கள். கிறிஸ் வீட்டிலிருந்த பணம் காணாமல் போயிருந்தது. ஆனால் வீட்டினுள் எந்த விதமான சண்டை நடந்த அறிகுறியில்லை. அதனால், கிறிஸ் தாக்கப்பட்டதற்கு பிறகு கொலையாளி பணத்தை திருடியிருக்கலாம்.

இவ்வளவு நடந்த போது அருகிலுள்ள வீட்டிலிருப்பவர்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லையா ?. கேட்டிருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சுமார் 4 மணியளவில், நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டதாகவும், ஆனால் அந்த பகுதியில் கங்காருக்கள் நடமாடுவதால், நாய்கள் குரைத்ததை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லையென்றார்கள்.

அடுத்து போஸ்ட்மார்டம் செய்த டாக்டர், கிறிஸ், இதய நோய் உள்ளவர் என்றும், அதற்காக “பேஸ் மேக்கர்” என்ற இதயத்துடிப்பை சீராக்கக் கூடிய கருவி பொருத்தியிருந்தார் எனச் சொன்னார். பேஸ் மேக்கர் என்பது ஒரு 2 இன்ச் அகலமுள்ள மிகச்சிறிய எலக்ட்ரானிக் கருவி. இதை உடலின் உள்ளே, தோள்பட்டைக்கு அருகில் வைத்து தைத்துவிடுவார்கள். இது, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், சுமார் 2 முதல் 5 வோல்ட் மின்சாரத்தை இதயத்தில் செலுத்தும். இதன் மூலம் இதயம் சீராக துடிப்பதை உறுதி செய்யும். அதே நேரம், அது இதயத்துடிப்பை பற்றிய தகவல்களையும் சேமித்து வைக்கும். இத்தகவல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்பட்டு மீண்டும் எழுதப்படும். போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது, கிறிஸ் இறந்து சுமார் 30 மணி நேரம் கழித்து. அதனால் உடனடியாக அக் கருவியில் இருந்த தகவல்களை, கம்பியூட்டர் உதவியுடன் சேகரித்தனர். இன்னும் 2 மணி நேரம் தாமதித்திருந்தால் அனைத்து தகவல்களும் அழிந்து போயிருக்கும்.பேஸ்மேக்கர் கருவியில் இருந்து கிடைத்த தகவல்

இரவு             10.05
கிறிஸ் தூங்கியிருக்கிறார்
அதிகாலை  4.46
தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார்
அதிகாலை  4.54
இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100க்கு மேல் போனது. இது கிறிஸ் எழுந்து வேகமாக நடந்த்திருக்கிறார் என்பதைக்காட்டுகிறது.
 அதிகாலை   5.34
 இதயத் துடிப்பு நின்றது.

கிறிஸ் இறந்தது அதிகாலை 5.34 நிமிடங்கள்.

போலீசார் காலை மணி 5-6 யார் யார் எங்கிருந்தார்கள் என்பதை கண்டறிய முற்பட்டனர்.

முதலில் பீட்டர் (கிறிஸ் வீட்டுக்கு அருகில் வசித்தவன்)

காலை 5 முதல் 6 மணி வரை எங்கு இருந்தீர்கள் ?
இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.
அதற்கு ஆதாரம் இருக்கிறதா ?
நான் தனியாக வசிப்பவன் எந்த ஆதாரமும் இல்லை.
உங்களிடம் கோடாலி இருக்கிறதா ?
இருக்கிறது. ஆனால் அதை இரண்டு நாட்களாக காணவில்லை.
வேறு யார் மீதாவது சந்தேகமிருக்கிறதா ?
எனக்கு ஜான் மீது சிறிது சந்தேகமாக இருக்கிறது.
ஏன்?
அன்று காலை சுமார் 7 மணியளவில் என் வீட்டிற்கு வந்து, அவனை காரில், அடுத்த ஊருக்கு கூட்டிபோக முடியுமா எனக் கேட்டான். அது மாதிரி அவன் கேட்டது இல்லை. மேலும், அவ்வளவு காலை என் வீட்டிற்கு இது வரை அவன் வந்தது இல்லை.


மேரி (ஜானின் சகோதரி, கிறிஸ் வீட்டிலிருந்து 10 வீடு தள்ளி வசித்தவள்)

காலை 5 முதல் 6 மணி ஜான் எங்கிருந்தான் ? 
இரவு 11 மணியிலிருந்து அவன் வீட்டிலிருந்தான். அதிகாலை சுமார் 3 மணியளவில் என்னிடம் சிகரெட் கேட்டான். சுமார் 6 மணியளவில் அவன் குளிக்கும் சத்தம் கேட்டது.

ஜானின் வீட்டை ஆராய்ந்தபோது கருப்பு நிற டார்ச் லைட் கிடைத்தது. அது ஜான், மேரி, பீட்டருடையது இல்லை. எந்த வித கைரேகையும் அதிலில்லை. பரிசோதனையில், டார்ச் லைட்டை ஆன்/ஆஃப் ஸ்விட்ச்சில் சில இறந்த தோல் செல்கள் இருப்பதை கண்டுபிடித்தார்கள். டி.என்.ஏ பரிசோதனையில் அது கிறிஸ்சினுடையது எனத் தெரிந்தது. ஜான் கைது செய்யப்பட்டான்.


நடந்தது என்ன ?
கிறிஸ் வீட்டிற்கு எதிரிலிருந்த,  நண்பர் வெளியூர் செல்லும் போது வீடடை பார்த்துக் கொள்ளும் படி கிறிஸ்ஸிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த ஜான், கொள்ளையடிக்கும் நோக்கில், பீட்டரின் வீட்டிலிருந்த கோடாலியை எடுத்துக் கொண்டு, வீட்டினுள் செல்ல முயன்றிருக்கிறான். அந்த நேரம் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த கிறிஸ், டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, ஜான், தனது நண்பர் வீட்டினருகில் நின்றிருப்பதை பார்த்து கிறிஸ் சந்தேகம் கொண்டு விசாரிக்க, பயந்து போன ஜான், கிறிஸ்ஸை கோடாலியால் தாக்கியிருக்கிறான். பிறகு, கிறிஸ் வீட்டினுள் புகுந்து அவரது பர்ஸ், டார்ச்லைட் மற்றும் கோடாலியை எடுத்துச் சென்று, பர்ஸ் மற்றும் கோடாலியை யாரும் பார்க்காத இடத்தில் மறைத்திருக்கிறான். ஆனால் என்ன காரணத்தினாலோ டார்ச் லைட்டை வீட்டிற்கு எடுத்துச்சென்றிருக்கிறான். காலை 6 மணியளவில் தான் வீட்டிலிருந்தது போல காண்பிப்பதற்காக, மேரி கேட்குமாறு குளித்திருக்கிறான். பிறகு 7 மணியளவில் பீட்டரின் வீட்டிற்கு வந்து, கிறிஸ் பிணத்தை தான் முதலில் பார்ப்பது போல நடித்திருக்கிறான். இதன் மூலம் போலீசார் தன்னை சந்தேகப்படமாட்டார்கள் என நினைத்திருக்கிறான்.

இந்த கொலை வழக்கில், பேஸ் மேக்கர் உதவிகொண்டு கிறிஸ் இறந்த நேரத்தை துல்லியமாக கண்டுபிடித்ததால், ஜானை குற்றவாளி என போலீசார் கோர்ட்டில் நிரூபிக்க முடிந்தது. இல்லையேல், அதை சாதகமாக பயன்படுத்தி ஜான் தப்பித்திருப்பான்.

மேலும் அவன் செய்த இரண்டு தவறுகள்
1. டார்ச் லைட்டை வீட்டுக்கு எடுத்துச்சென்றது.
2. 7.15 ம்ணியளவில் கிறிஸ் இறந்து கிடந்ததை பார்த்தது போல நடித்தது. இன்னும் 2 மணி நேரம் அவன் தாமதித்திருந்தால், பேஸ்மேக்கர் தகவல்கள் அழிந்து போயிருக்கும்.

வாழும் போது கிறிஸ்சுக்கு உதவிய பேஸ்மேக்கர், இறப்புக்கு காரணமானவனை சட்டத்தின் முன் நிறுத்த உதவியாயிருந்தது.

19 October 2009

பதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 3


ஜன்னலருகில் சிறுவன்
பசியில் காகம்
பள்ளி திறந்தாச்சு

மேலே தொடர்ந்தது
கீழே முடிந்தது பயணம்
பேருந்தினடியில் அவன்

வெயில் சுட்டெரிக்கிறது
அணைக்க யாருமில்லை
தெருவோர விளக்கு
பட்டாசு வெடிக்கும் குழந்தைகள்
மெதுவாக வரலாம்
மழை

15 October 2009

அடிபணிந்தது அராஜக அரசு

செய்தி: 10 எம்.பி குழு இலங்கை சென்று வந்ததையடுத்து, இலங்கை அரசு 58,000 தமிழர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டது.

-----
இதில் முதல் தவணையாக 10 பேரை , இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் உடனடியாக விடுவித்துள்ளது. அவர்கள் பெயர் பின்வருமாறு
1. டி.ஆர். பாலு
2. கனிமொழி
..
..
..

மீதமுள்ள 57990 தமிழர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்.
இவங்க அடிக்குற ஜோக்குக்கு எல்லையில்லாம போய்டுச்சு.

இந்த பதிவு எழுதி நான்கு நாட்கள் கழித்து ........

1000 தடவை சொல்லியாச்சு

”அருண் !! எத்தனை தடவை சொல்லியிருக்கேன் நீங்க எழுந்து வரும் போது, கதவை சாத்திட்டு வாங்கன்னு ?. சத்தம் கேட்டு இப்ப கார்த்தி எந்திரிச்சுடப் போறான். இன்னமும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். ஏசி கொஞ்சம் கம்மி பண்ணி வெச்சுட்டு வாங்க..நைட் ரெண்டு தட்வை இருமினான்”

”கார்த்தி ! அம்மா என்ன சொல்லியிருக்கேன் ? early in the morning..brush your teeth . போடா குட்டி, குட் பாய்தானே..பிரஷ் பண்ணிட்டு வந்து காம்பிளான் குடி”

கார்த்தி, மார்னிங் .டிவி போடாத. ஸ்கூலுக்கு போகணும். ஈவினிங் வந்தோன்ன டோரா போடுறேன்.happy ? good boy.

"அருண், ஹீட்டர் போட்டுருக்கேன். பச்சைத் தண்ணியில ஹாட் வாட்டர் மிக்ஸ் பண்ணி வெச்சுடுங்க.கார்த்தி குளிக்கிறத்துக்கு”

“கார்த்தி, அம்மாவுக்கு வேலை இருக்கு. இன்னைக்கு அப்பாகிட்ட குளிச்சுட்டு வா”

“அருண், நேத்து மாதிரி, நம்ம சோப் போடாதீங்க அவனுக்கு. தனியா டவ் சோப் வெச்சுருக்கேன் பாருங்க. அதப் போட்டு குளிப்பாட்டி விடுங்க”

“வாவ்..குட் பாய் ஆகிட்டான் கார்த்தி. Very neat boy. இனிமே அப்பா கிட்ட்யே டெய்லி குளிக்கிறியா ?”

"எத்தனை தடவ சொல்றது, அவனுக்கு பிடிச்சு வெச்சுருக்குற வாட்டர் பாட்டில்ல இருந்து தண்ணி எடுத்து குடிக்காதீங்கன்னு. அவனுக்கு தண்ணி சூடு பண்ணி வெச்சுருக்கேன். நீங்க வாட்டர் கேன்ல இருந்து எடுத்துக்கோங்க”

“கார்த்தி, இங்க பாரு அம்மா ஸ்நாக்ஸ் வெச்சுருக்கேன். கீதா ஸ்நாக்ஸ் எடுத்து சாப்பிடக்கூடாது. அடுத்தவங்க வாட்டர் பாட்டில்ல தண்ணி குடிக்கக் கூடாது”

“அருண், நெக்ஸ்ட் டைம், கார்த்திக்கு சாக்ஸ் வாங்கும் போது நல்ல பிராண்டு வாங்கனும். இது காலை ரொம்ப புடிக்குது. பிளட் சர்க்குலேஷன் கம்மி ஆகிடப் போகுது”

“கடவுளே !!, கார்த்தி சீப்ப எடுத்து நீங்க ஏன் யூஸ் பண்றீங்க ?. இப்ப புது சீப்பு தான் அவனுக்கு வாங்கனும். 1000 தடவ சொன்னாலும் அதயே தான் பண்ணுவேண்ணா நான் என்ன பண்றது ?”

“கார்த்தி டாட்டா சொல்லு. அருண் ! கார்ல ஏறுன உடனே அவனுக்கு சீட் பெல்ட் போட்டுவிடுங்க”

“ஏசி போடுங்க..பொல்யூஷன் தாங்க முடியலை. டாக்டர் சொன்னாரு, இவனுக்கு வண்டி புகை ஒத்துக்க மாட்டேங்குது..அதுனால தான் அடிக்கடி சளி புடிக்குதுன்னு. இவன் மாஸ்க் போட்டுக்கோன்னாலும் கேட்க மாட்டேங்குறான்”

“டாடி...அந்த பிரிட்ஜ் மேல போகும் போது பாஸ்ட்டா போ டாடி”

“அந்த ரிவர் பேரு நேத்து சொன்னேனில்ல..என்னன்னு சொல்லு பார்ப்போம்”

“ம்ம்ம்..அடையாறு ரிவர்.கரெக்ட்டா ?”

“வெரி குட்..கரெக்ட்”

“ஐய்ய !  வாட்டர் ரொம்ப டர்ட்டியா இருக்கு. டாடி அங்க பாரேன் !!..ஒரு அண்ணா அதுல நீச்சல் அடிச்சுகிட்டு இருக்கான்”

13 October 2009

பெண்ணும் சாஃப்ட்வேர் இஞ்சினியரும்


வழக்கமா பெங்களூர் போகனும்னா, 2வது கிளாஸ், சேர் கார்ல தான் போவேன். அந்த தடவை ஏசில போய் பார்க்கணும்னு ஆசை, போனேன். முதல்ல கொஞ்ச நேரம் புதுசா இருந்துச்சு. புதுவிதமான மனுஷங்க. கொஞ்சம் அந்நியமா உணர்ந்தேன். வழக்கம் போல கேண்டீன்க்கு போய் சாப்ட்டுட்டு வந்தா, என் சீட்டுல ஒரு பொண்ணும் பையனும், ஒரே கம்பளி போர்த்தி சுருண்டு போய் உட்கார்ந்திருந்தாங்க. அந்த பொண்ண பார்த்தேன், என் சீட் நம்பர் பார்த்தேன். நம்பர் கரெக்ட்தான். ஆனா அந்த பொண்ணுக்கிட்ட எந்த முக மாற்றமும் இல்ல. ஓ !, ஒரு வேளை, கேண்டீன்ல இருந்து வரும்போது தப்பா கணக்கு போட்டு, வேற கோச்சுக்கு வந்துட்டேனோ ? தப்பா வந்ததும் இல்லாம அந்த பொண்ண வேற பார்த்து, அவங்கள வேற கடுப்பாக்கிட்டோமேன்னு நினைச்சுகிட்டு, அடுத்த கோச் போய் கேட்டா, c3 ன்னாங்க. என்னோடது c2. ஓ ! அப்ப பசி மயக்கத்துல ரொம்ப தூரம் வந்துட்டோம் போல, அடுத்த கோச் போகலாம்னா, அது தான் கடைசி ஏசி கோச். இந்த தடவை என் டிக்கெட்ட ஒரு தடவை பார்த்துட்டு, திருப்பி அந்த பொண்ணு உட்கார்ந்துருக்குற சீட் என்னோடதுன்ற முடிவுல வந்தா, அந்த பொண்ணு, போர்வையில இருந்து தலைய நீட்டி “சாரி !!, நீங்க ஒரு தடவை வந்து பார்த்துட்டு போனீங்க, இது உங்க சீட்டுன்னு தெரியலை, எங்களுக்கு தனித்தனியா சீட் கிடைச்சுருக்கு, நீங்க எங்க சீட்ல உட்கார முடியுமா ? நாங்க இங்க உட்கார்ந்துக்குறோம்”. நல்லா இரும்மான்னு மனசுக்குள்ள சொல்லிட்டு, அந்த பொண்ணு சீட்டுல வந்து உட்கார்ந்தேன்.

*****

கொஞ்ச நாள் முன்னாடி குருவாயூர் போனப்ப, அப்பர் பெர்த். ஏறி படுத்துட்டேன். கீழ் சீட்டுல 4 வயசானவங்க (60 வயசு இருக்கும்). குரூப்பா வந்துருப்பாங்க போல. அவங்க பேசறத கேட்டுக்கிட்டே படுத்திருந்தேன்..
.....
.....
.....
“சார் !! இந்த சின்ன பசங்க தொல்லை தாங்கலை”
“ஏன் அப்படி சொல்றீங்க ?”
“பின்ன என்ன சார்..நாம 25 வருச சர்வீஸ் பண்ணி வாங்குற சம்பளத்த, இவனுங்க முதல் மாசத்துல வாங்குறாங்க”
“விடுங்க சார்... இப்ப பார்த்தீங்கள்ள ?...சத்யம் கம்பியூட்டர்ல வேலை பார்த்தவன் எல்லாம் நடுத் தெருவுக்கு வந்துட்டானுங்க”
“கார் என்ன, செல் போன் என்ன..அவனுங்க போட்ட ஆட்டம் ஆண்ட்வனுக்கே பொறுக்கலை”
“கம்பியூட்டர்..கம்பியூட்டர்ன்னு படிச்சவங்க யாருக்கும் இனிமே வேலை கிடைக்க போறதில்லை”
“ஆமாம்..அமெரிக்கா, ஆப்பிரிக்கான்னு பிளைட்லயே பறந்துகிட்டு இருந்தானுங்க..இப்பதான் தரையில இறங்கிருக்காங்க”

அப்ப 4 ரொம்ப ரொம்ப சின்ன மனசுக்காரங்க பேசிக்கிட்டு இருக்காங்கன்னுட்டு...கண்ண மூடி தூங்க ஆரம்பிச்சேன்.

12 October 2009

தீப்பிழம்பு - துப்பறியலாம் வாங்க

உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றங்களை போலீசார் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், குற்றவாளி, போலீசாருக்கு மறைமுகமாக விடுக்கும் சவால். எவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டாலும், சிறிய தவறுகள் இருக்கும். அதனை கண்டுபிடிக்க பல துறையை சேர்ந்த வல்லுனர்களின் உதவி தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு வழக்குதான் இது.

*****

1996 வருடம், அமெரிக்காவிலுள்ள போர்ட்லேண்ட். இது ஒரு மரங்களடர்ந்த அமைதியான பிரதேசம்.

ஒரு நாள் மதியம் 2 மணியளவில், வீடு ஒன்று பற்றி எரிவதைப் பார்த்த மக்கள், திகைத்து போனார்கள். தீயணைப்புப் படையினர் வந்து சேரும் போது, தீ வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது. தீயை அணைக்க முயற்சி செய்தபோது, ஜான் அலறி அடித்துக் கொண்டு அங்கு வந்தார். அப்பொழுதுதான் அந்த வீட்டினுள் யாரோ மாட்டிக் கொண்டுள்ளார்கள் எனப் புரிந்தது. ஆனால் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது.

ஜான் பயந்தபடியே, வீட்டினுள், கருகிய நிலையில், மேரி பிணமாக இருந்தார். உடல் முற்றிலுமாக கருகியதால் அது, மேரிதான் என உறுதி செய்ய முடியவில்லை. உடலுக்கு அருகில் அவரது கைத்துப்பாக்கி இருந்தது.

ஜான், மேரி இருவரும் கம்பியூட்டர் வல்லுனர்கள். வேலை பளு காரணமாக, அவர்கள் வாழ அமைதியான இடம் தேவைப்பட்டது. அதனால் போர்ட்லாண்டிற்கு இடம் பெயர்ந்தனர். மேரி, பொழுதுபோக்குக்காக குதிரை வளர்த்தார். அவர்கள் அங்கு ஒரு இடம் வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். 90 சதவிகித வீடு கட்டிமுடியும் தருவாயில் இந்த கோர தீ விபத்து.

ஜானிடம் போலீஸ் விசாரணை செய்தபோது  
”நான் வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக 2 மணி நேரத்திற்கு முன் கடைக்கு போயிருந்தேன். கிளம்பும் முன், துணிகளை காயவைக்க பயன்படும் டிரையர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த டிரையர், ப்ரோபனால் (Propanol) எனப்படும் இரசாயனப் பொருளால் இயங்கும். ஒரு வேளை தீ அதன் மூலம் ஏற்பட்டிருக்கலாம்”.

“உங்கள் முகத்தில் என்ன காயம் ?”

“இன்று காலை, வீட்டிற்கு அருகில் இருந்த முட்புதர்களை அகற்றும் போது இந்த காயம் ஏற்பட்டது”

“நீங்கள் அணிந்திருக்கும் டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் விசாரணைக்கு தேவைப்படுகிறது”. (இப்படி வாங்குவது  விசாரணையின் வழக்கமான ஒரு அம்சம்)

போலீசார், ஜான் வாங்கிய பொருட்களின் பில்களை பார்த்து, தீ விபத்து நடந்த நேரம், அவர், கடையினில் இருந்ததை உறுதி செய்தனர்.

மேரியின் எலும்பை உபயோகித்து டி.என்.ஏ பரிசோதனை செய்ததில், இறந்தது மேரி தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் எப்படி இறந்தார் ? தீ விபத்தினாலா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? எப்படி கண்டுபிடிப்பது ?.

போஸ்ட்மார்டம் அறிக்கையில் இருந்த விபரங்கள் இவை
 • மேரியின் ரத்தத்தில் கார்பன் மோனாக்ஸைடு காணப்படவில்லை (அவர் மூச்சுவிடுவதை நிறுத்திய பிறகு அதாவது  இறந்தபிறகு தான் வீடு தீப்பிடித்திருக்கிறது).
 • மேரியின் உடல் முற்றிலும் எரிந்து போனதால் உடலில் துப்பாக்கிச்சூடு காயங்கள் இருந்ததா என கண்டுபிடிக்கமுடியவில்லை.
 • மேரியின் மூச்சு குழாயில் ரத்தம் இருந்தது. (மேரி கடைசி முறையாக மூச்சை உள்ளிழுக்கும் போது காற்றோடு ரத்தமும் இருந்திருக்கிறது. அதற்கு ஒரே வாய்ப்பு, பலமாக தாக்கப்பட்டதால், உடலின் உள் உறுப்புகளிலிருந்து வந்த ரத்தம்)
இந்த காரணங்களை வைத்து மேரி இறந்தது தற்கொலையில்லை, கொலை என ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டது.

தீ விபத்துக்களில் முக்கியமாக தெரியவேண்டியது, எந்த இடத்திலிருந்து தீ உருவானது ? தீ ஆரம்பிக்க உதவிய பொருள் எது ? விபத்தா அல்லது மனிதனால் எழுப்பப்பட்ட தீயா ?. போலீசார் இதைக் கண்டுபிடிக்க முயன்றார்கள்.

ஜான் சொன்னபடி, ப்ரோபனால் வாயுவால் இயங்கும் துணி டிரையர் அல்லது மேரியின் காரில் இருந்த பேட்டரி இதில் ஏதோ ஒன்று தான் தீக்கு காரணம். ஆனால், பேட்டரியின் வயர்கள் இணைக்கப்படவில்லை. அதனால் தீ அங்கிருந்து உருவாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்து டிரையர். அதை ஆராய்ந்த போது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

ஆமாம் ! ஜான் சொன்னது போல டிரையர் ஓடிக்கொண்டிருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ப்ரோபனால் வாயுக்குழாய், டிரையருடன் இணைந்திருக்கவில்லை.  

ஜான் சொன்னது பொய் ???. ம்ம்.ம்ம்..அப்படியும் சொல்ல முடியாது. தீயணைப்பு படையினர் ஒருவேளை குழாயை எடுத்துவிட்டிருக்கலாமில்லையா ? இருக்கலாம் ! ஏனென்றால், அவர்களது ஒரே நோக்கம், தீயை அணைப்பது மற்றும் யாராவது சிக்கியிருந்தால் அவர்களை மீட்பது. அவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் எதையும் மாற்ற/தொடக்கூடாது என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

ஜான் சொன்னது நிஜமா ? அல்லது தீயணைப்பு படையினர் அதை கழட்டிவிட்டார்களா ?. அந்த குழாய் தடயவியல் நிபுணரிடம் அளிக்கப்பட்டது. ஆராய்ந்த போது 2 விஷயங்களை கண்டுபிடித்தார்

1. குழாய், டிரையரோடு இணையும் இடத்தில் ஆக்ஸிடேஷன் எனப்படுகிற ரசாயன மாற்றம் நிகழ்ந்திருந்தது. அதாவது, தீ எரியும் போது, குழாய் டிரையரோடு இணைந்திருக்கவில்லை.(மேலே உள்ள படத்தில் கருப்பாக இருக்கும் குழாய் ஆக்ஸிடேஷன் ஆனது. அருகிலிருக்கும் மற்றொன்று, தீ ஏற்படும்போது குழாய் இணைக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி, தீயால் பாதிக்கப்படாமல் வெள்ளையாக இருந்திருக்கும்)2. குழாய் இணையும் இடத்தில்  ஒரு துளி உலோகம் ஒட்டியிருந்தது. அந்த உலோகம், குழாயோடதில்லை. அது குழாய்க்கு மேலே இருந்த ப்ரோப்பனாலின் அளவை ஒழுங்குபடுத்தும் குமிழின் ஒரு பகுதி. இதன் மூலம் தீ அந்த இடத்தில் ஆரம்பித்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட அதிக வெப்பத்தால், அந்த குமிழ் உருகி, கீழேயிருந்த குழாயின் மேலே விழுந்திருக்கிறது (படத்தில் வட்டமிடப்பட்ட இடத்திலுள்ள மஞ்சள் நிற சிறு துளியை பாருங்கள்).

இந்த 2 ஆதாரங்களை வைத்து ஜான் சொன்னது பொய் என்பதை நிரூபித்தார்கள். மேலும், ஜானின் ஜீன்ஸில் இருந்த சின்ன கறை, ரத்தக் கறை, அதுவும் மேரியின் ரத்தமென்பதை டி.என்.ஏ சோதனை உறுதி செய்தது.

என்ன நடந்தது ?
ஜான், இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவனது வேலை, போர்ட்லேண்டிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்றப்பட்டது. மேரியும் தன்னுடன் வரவேண்டுமென நினைத்தான். ஆனால் மேரிக்கு போர்ட்லேண்டை விட்டு வர மனமில்லை. மேலும், மேரி, குதிரை வளர்ப்புக்காக அதிக செலவு செய்திருக்கிறார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை நடந்திருக்கிறது. அந்த சம்பவம் நடந்த நாளில், வாக்கு வாதம் முற்றி, மேரியை ஜான் தாக்க, அப்பொழுது ஏற்பட்ட சண்டையில் ஜானின் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது, அந்த சண்டையின் முடிவில் மேரி இறந்துபோயிருக்கிறார். இதனை விபத்தாக மாற்ற முடிவு செய்த ஜான், வீட்டிற்கு வெளியே இருந்த ப்ரோபனால் சிலிண்டரை மூடிவிட்டு, வீட்டுக்குள் வந்து வாயுக்குழாய் இணைப்பை துண்டித்துவிட்டு, தீயை மூட்டிவிட்டு, பிறகு வீட்டுக்கு வெளியே வந்து ப்ரோபனால் சிலிண்டரை திறந்து விட்டிருக்கிறான். அப்பொழுது ஏற்பட்ட அதிக வெப்பத்தால் உலோகம் உருகி, குழாயின் மேல் பட்டிருக்கிறது.

ஜூரிகள், ஜான் குற்றவாளி என முடிவு செய்தனர். மனைவியைத் தாக்கியது (கொலை செய்தான் என ஜூரிகள் நம்ப மறுத்துவிட்டனர்) மற்றும் தீ மூட்டியது, இந்த 2 குற்றங்களுக்காக தண்டனை பெற்றான்.

ஜான் எவ்வளவோ திட்டமிட்டு, செய்த குற்றத்தை மறைக்க நினைத்தாலும், அறிவியல் வளர்ச்சியின் உதவியால், அவன் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

09 October 2009

நிலவுக்கு மேலும் இரண்டு வடுக்கள்

சந்திராயன் -1 நிலவில் தண்ணீரை கண்டுபிடித்ததையடுத்து, இன்று (9 அக்டோபர்) மாலை 5.00 அளவில், நாசா இரண்டு விண்கலங்களை, நிலவின் மீது மோத வைக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த மோதலில் கிளம்பும் தூசியை ஆராய்ந்து அதில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டறிய திட்டம்.


இந்த இரண்டு மோதல்கள், சுமார் 6.6 மீட்டர் விட்டமுள்ள வட்டமான பள்ளங்களை ஏற்படுத்தும். பல வருடங்களுக்கு முன் வியாழன் கிரகத்தின் மேல் ஷீமேக்கர் லெவி என்ற விண்மீன் மோதியதையடுத்து எழுந்த பிரகாசமான ஒளி பூமியிலிருந்து பார்க்க முடிந்தது. அதுபோல இந்த மோதல் அந்த அளவு ஒளியை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த ஆராய்ச்சிகள் இன்னம் 50 வருடம் கழித்து நிலவில் மனிதன் குடியேற உதவும். போகிற போக்கில், பூமியை மனிதன் 50 வருடங்களில் அழித்துவிடுவான். அதனால் இந்த ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெறுகிறது.

உங்களிடம் தொலை நோக்கி அல்லது பைனாக்குலர் இருந்தால், 5 மணிக்கு அதை நிலவின் பக்கம் திருப்புங்கள்.

சுடச்சுட செய்தி (மாலை 5.15 மணி)

சற்று முன், 2 நாசா விண்கலங்கள் நிலவில் மோதியுள்ளன. இதனை ஹப்புள் தொலைநோக்கி பதிவு செய்துள்ளது. விரைவில் நாசா இது குறித்த புகைப்படங்களை வெளியிடும்.

08 October 2009

வயதை கண்டுபிடிக்கும் முறை

மனிதன், விலங்குகள், மரம் மற்றும் உயிரற்ற கல், மண் போன்றவற்றின் வயதைக் கண்டுபிடிப்பது கடினமான விஷயம்.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், அயல் நாட்டவரின் உருவ அமைப்பை பார்த்து நாம் கணிக்கும் வயது பெரும்பாலும் தவறாகவே இருக்கும் என்பது புரியும். விலங்குகள் என்றால் மிகவும் கடினம். அது சரி யார் விலங்குகளின் வயதை ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள் ??. மரத்தின் வயது ? அதை எப்படி கண்டுபிடிப்பது ? கண்டுபிடிப்பது சாத்தியமா ?. சாத்தியமே !!.

கார்பன் டேட்டிங் என்ற முறைப்படி மரத்தின் வயதை கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கு பரிசோதனை கூடம் தேவைப்படும். அதை விடுத்து எளிதான முறை ஒன்று உண்டு. அது அந்த மரத்தையே கேட்டு விடுவது தான். நடிகைகள் போல மரம் தன் வயதை குறைத்து/மறைத்து சொல்லாது.
 
 மனிதன் தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை, அவன் மூளை பதிவு செய்வது போல, மரங்களும், தன் வாழ்நாளை பற்றிய குறிப்புக்களை, மற்றவர்கள் பார்ப்பதற்காக சேகரித்துவைக்கிறது.

ஒரு மரம் வெட்டப்பட்ட உடன், அதன் அடிப்பாகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை பாருங்கள். வயதான மனிதனின் முகத்தை போல பல வட்ட வடிவமான வரிகள் காணப்படும். ஒவ்வொரு வட்டமும் ஒரு வருடத்தை அல்லது வளர்ச்சி பருவத்தை குறிக்கிறது. மொத்த வட்டங்களின் எண்ணிக்கை, அதன் வயதை குறிக்கிறது. கீழே உள்ள படத்தைப் பார்ப்போம்.


படத்தில் அம்புகுறி (C), இந்த மரம் வளர தொடங்கிய ஆண்டை குறிக்கிறது.

(B) ஒரு வளையத்துக்கும் அடுத்த வளையத்துக்கும் நடுவில் உள்ள இடைவெளி, ஒரு வருடத்தில் இந்த மரம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. இந்த இடைவெளி ஒரே மாதிரி இல்லாதது, ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சியில் இருந்த மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை குறிக்கிறது.

(A) இந்த கருவளையம், அந்த ஆண்டில் காட்டுத்தீ அல்லது கடும் பஞ்சம் ஏற்பட்டதை குறிக்கிறது.

கணக்கின் படி இந்த மரம் சுமார் 42 வயதுடையது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உயிரோடு இருக்கும் மரங்களில், சிறு துளையிட்டு, அதன் மூலம் கிடைக்கிற மர வளையங்களை வைத்து வயதைக் கண்டறிவார்கள்.

கீழே உள்ள படம் அமெரிக்கா, கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள மரம். இதன் வயது 1392 வருடங்கள். இந்த மரம் பார்த்த (??) வரலாற்று நிகழ்வுகளை குறித்து வைத்திருக்கிறார்கள்.
 


விக்கி (wiki) தகவல் படி, உலகிலேயே மிக அதிக வயதான இன்னும் உயிரோடு இருக்கும் மரத்தின் வயது சுமார் 4844 வருடங்கள். இலங்கையில் உள்ள ஒரு ஆலமரத்தின் வயது 2293 வருடங்கள். இதுவே மனிதனால் நடப்பட்ட (கி.மு 288-ல் நடப்பட்டது), மிக பழமையான மரம்.

இதே போல ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகளில் காணப்படும் படிவங்கள் (layer) வைத்து பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த தட்ப வெட்ப நிலை பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள்.

கனடா நாட்டில், குழந்தைகளின் பாடத்திட்டத்தில் இந்த செயல்முறை கூடிய பயிற்சி இருக்கிறது. நமது வீட்டுக்கு அருகிலுள்ள மரங்களின் வயதை கண்டுபிடிப்போம்; குழந்தைகளுக்கு இதனை கற்றுக்கொடுப்போம்.

                               மரங்கள் மனிதனுக்கு கிடைத்த வரங்கள்.


காரை மறைய வைக்க மேஜிக்

இங்க இருக்குற முதல் போட்டா மாதிரி ஒண்ணு எடுத்துக்கோங்க.

இப்ப கீழ இருக்குற மாதிரி இன்னொரு போட்டா எடுத்துக்கோங்க

இந்த மேஜிக்ல இப்ப நான் சொல்ல போறது தான் முக்கியம்  கவனமா கேட்டுக்கோங்க.

உங்களால எவ்வளவு வேகமா, முதல் போட்டாவையும், ரெண்டாவது போட்டாவையும் மாறி மாறி பார்க்க முடியும்னு பாருங்க...அப்படி பார்த்தீங்கன்ன கார் டக்குன்னு மறைஞ்சுடும்.

என்ன நான் சொன்ன மாதிரி கார் மறைஞ்சுடுச்சா ??. பரவாயில்லைங்க 3 லட்ச ரூபாய் கார ஒரு செகண்ட்ல மறைய வெச்சுட்டீங்க..

இதுக்கே இவ்வளவு டென்ஷன் ஆனா, ஜாம் பஜார் ஜக்குன்னு ஒருத்தர் இதயே தொழிலா பண்றார்..அவர என்ன சொல்லுவீங்க ?

07 October 2009

முட்டை எதுக்கு எடுக்க ?


கொஞ்சம் நாள் முன்னாடி அரியலூர்ல நிறைய டைனோசர் முட்டை கண்டுபிடிச்சாங்க. நம்ம பய புள்ளைங்க நேத்து என்ன பண்ணிருக்காங்கன்னா, அங்க போய், இவனுங்களும் முட்டைய தோண்டி எடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க.


சரி எதுக்கு இப்படி முட்டைய எடுத்துட்டு போறாங்கன்னு யோசிச்சு சில காரணம் கண்டுபிடிச்சுருக்கேன்.

 • கோழி முட்டையில ஒரு ஆம்ப்லெட் தான் போடலாம். டைனோசர் முட்டையில எக்கச்சக்க ஆம்ப்லெட் போடலாம்.
 • பாடி பில்டப் பண்றவங்க, கோழி முட்டைய குடிக்குறாங்க. அதுக்கு பதிலா டைனோசர் முட்டை குடிச்சா சீக்கிரம் 60 பேக் வந்துடும்னு நினைச்சிருக்கலாம்.
 •  கோழி முட்டைய எடுக்க போனா, கோழி நம்மள கொத்த வரும். ஆனா, டைனோசர் கடிக்க வராதுன்ற தைரியம் தான்.
 • சத்துணவுல போடுறத்துக்கு இந்த முட்டைய யூஸ் பண்ணிட்டு, பொய் கணக்கு எழுதிடலாம்.
 • குழந்தைங்க கோழி குஞ்சு வளர்க்க ஆசைப்படற மாதிரி டைனோசர் குட்டி வளர்க்க ஆசைப்பட்டிருக்கலாம்.
வேற எதாச்சும் காரணம் தெரிஞ்சா பின்னூட்டத்துல போடுங்க..

நெசமாத்தான் சொல்றீங்களா ?

இங்கே இருப்பது , இயேசுவை சிலுவையில் அறைய, அழைத்துச் செல்லும் போது, ஒரு பெண்மணி, துணியால், அவரது முகத்தை துடைத்தாள். அப்பொழுது அவரது முகம் துணியில் பதிவானது. இது பல காலங்களாக இயேசுவின் முகம் என நினைத்திருந்தனர்.
1988-ல் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்த துணியை ஆராய்ச்சி செய்தபோது, சுமார் 1260-1390 வருடம் தான் இந்த துணி நெய்யப்பட்டது, அதனால் இது இயேசுவின் உருவம் கிடையாது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

தற்போது, இத்தாலியில் உள்ள ஓவியர், 12 ஆம் நூற்றாண்டில் கிடைத்திருக்க கூடிய பொருட்களை வைத்து, அதே மாதிரி ஓவியத்தை படைத்திருக்கிறார். இதன் மூலம் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் தான் இயேசு உருவத்தை வரைந்திருக்கிறார்கள் என உறுதி செய்துள்ளனர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு டம்ளர் பால் குடித்தால், நம் உடலில் 0.02 சதவிகிதம் ஆல்கஹால் ரத்தத்தில் ஏறிவிடுமாம். அமெரிக்காவில் சில மாநிலங்களில், இந்த அளவு ஆல்கஹால், 21 வயதுக்கு குறைவான வண்டியோட்டியிடம் காணப்பட்டால், அவர்களில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமாம்.

இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால், அமெரிக்காவில், பனை மரத்துக்கு கீழே உட்கார்ந்து பால் குடிச்சாலும், அது ”கள்” தான். நம்ம பெரியவங்க இதெல்லாம் ஆராய்ச்சி செய்து தான் சொல்லிருக்காங்க போல.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நன்றி-டைம்ஸ் ஆஃப் இந்தியா

06 October 2009

04 October 2009

பச்சை நிற விஷம் - துப்பறியலாம் வாங்க


ஜூன் 1986 ஆம் வருடம், வீட்டில் உட்கார்ந்திருந்த புரூஸ், மயங்கி கீழே விழுந்தார். மனைவி ஸ்டெல்லா, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லாமல் இறந்துபோனார்.

போலீசிடம்,  புரூஸ் இறப்பதற்கு முன் எக்ஸ்டிரின் எனப்படும் வலி முறிவு மருந்து எடுத்துக் கொண்டதாக, ஸ்டெல்லா கூறினார். போஸ்ட்மார்டத்தின் முடிவில், நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினையினால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என முடிவானது.

இது நடந்து 6 நாட்கள் கழித்து, ஸ்னோ என்ற 40 வயது பெண்மணி, தன் குளியலறையில் மயங்கி விழுந்து இறந்தார்.போஸ்ட்மார்டத்தில் சயனைட் என்ற விஷம் தான் இறப்புக்கு காரணமென கண்டுபிடித்தனர். ஆனால், அவர் எப்படி உட்கொண்டார் ?. விசாரணையில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம் !! ஸ்னோ, இறப்பதற்கு முன் எக்ஸ்டிரின் மாத்திரை எடுத்துக் கொண்டார் எனத் தெரிந்தது. அந்த மருந்தை சோதித்துப் பார்த்த போது, அதில், சயனைட் சேர்க்கப்பட்டிருந்தது தெரிந்தது.

எப்படி இது சாத்தியம் ?. எக்ஸ்டிரின் மாத்திரை தயாரிப்பிலேயே தவறு இருக்கிறதா ?. அமெரிக்கா முழுவதும் இருந்த லட்சக்கணக்கான மாத்திரைகள் திருப்பி அழைக்கப்பட்டது. அந்த மாத்திரை தயாரித்த நிறுவனம் உடனடியாக தயாரிப்பை நிறுத்தியது. இந்த செய்தியை படித்த ஸ்டெல்லாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை, புரூஸ் இறந்ததும் சயனைடால் தானா ?.

உடனடியாக, தன் வீட்டில் இருந்த 2 பாட்டில்களை எடுத்துக் கொண்டு, போலீசிடம் போனார். பரிசோதனையில், ஸ்டெல்லாவின் சந்தேகம் உறுதியானது. ஆமாம் !! அந்த 2 பாட்டிலிலும் சயனைட் இருந்தது.

எக்ஸ்டிரின் என்ற மருந்து குரோசின் போல, மருத்துவர் அனுமதியில்லாமல், எளிதாக, கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி. உடனடியாக, சுமார் 15,000 பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் மொத்தம் 5 பாட்டில்களில் சயனைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2 பாட்டில் ஸ்டெல்லாவிடம், 1 பாட்டில் இறந்து போன ஸ்னோவிடம், 1 பாட்டில் இன்னொரு கடையில் இருந்தது.

மக்களிடையே பெரிய பயத்தை ஏற்படுத்திய இந்த வழக்கு F.B.I  யிடம் ஒப்படைக்கப்பட்டது. மருந்து தயாரிப்பில் இந்த சயனைட் சேர்க்கப்படவில்லை. இறந்த புரூஸ்க்கும் ஸ்னோக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கூட கிடையாது.பொது எதிரி யாரும் இல்லை.

ஸ்டெல்லாவிடம் விசாரித்ததில் அந்த 2 பாட்டில்களையும் வெவ்வேறு கடைகளில், வெவ்வேறு காலங்களில் வாங்கியதாக கூறினார்.

முதல் சந்தேகம், ஸ்னோவின் கணவர் மேல் திரும்பியது. அவர் விசாரணை செய்யப்பட்டார். உண்மையறியும் சோதனை (lie detector) யின் முடிவில் அவர் குற்றமற்றவர் என முடிவானது.


வேறு யாரை சந்தேகப்படுவது ?. ஸ்டெல்லா ?. புரூஸ் பெயரில் 1 லட்சம் டாலருக்கு இன்ஸீரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது அந்த பணம் ஸ்டெல்லாவுக்கு கிடைக்கும். புரூஸ் இன்ஸீரன்ஸை சோதித்ததில், இறப்பு ஒரு விபத்து எனில் இன்னும் ஒரு லட்சம் டாலர் கூடுதலாக கிடைக்கும் என்பது போன்ற ஷரத்துகள் காணப்பட்டது. ஸ்டெல்லாவின் வீடு சோதனை செய்யப்பட்டது. ஸ்டெல்லா, மீன் வளர்ப்பு தொழில் செய்துவந்தார். அவருக்கு 20 வயது மகள். விசாரணையில் வேறென்றும் தெரியவில்லை/கிடைக்கவில்லை.

மருந்து கம்பெனிகள் சங்கம், இந்த வழக்கில் துப்புக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் டாலர்களை பரிசுத்தொகையாக அறிவித்தது. (பின்னே என்ன ! இந்த பிரச்சினையினால் மக்கள் மாத்திரைகளை சாப்பிடுவதற்கே பயப்படும் நிலை ஏற்பட்டது. அவர்கள் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியும், உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக அளவு மருந்துகள் விற்பனையாகிறது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ளது அங்குள்ள மருந்து கம்பெனிகள்)

இதற்கிடையில், மாத்திரைகளை பரிசோதனை செய்த ஆய்வுக்கூடம் ஒன்றை கண்டுபிடித்தது. அது ! மாத்திரைகளில் தடவப்பட்டிருந்த சயனைடில், பச்சை நிற சிறு சிறு துகள்கள் இருந்தன. சயனைட் பச்சை நிறத்திலிருக்காது. அப்படியென்றால் என்ன அது ? பரிசோதனையில், அது, பாசிகளை நீக்கும் ஒரு பொருள் என்றார்கள்.

இத்தகவலைக் கேள்விப்பட்ட F.B.I , நேராக ஸ்டெல்லா வீட்டுக்குச் சென்றார்கள். முன்பு விசாரணையின் போது, அந்த பச்சை நிற, பாசி நீக்கும் ஒரு பொருளை, ஸ்டெல்லா, மீன் தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்காக வைத்திருந்ததை பார்த்திருந்தார்கள்.

வீட்டில், அந்த பொருள் மற்றும், அதை அரைக்க வைத்திருந்த சின்ன கிண்ணம் போன்ற பொருளையும் கைப்பற்றினார்கள். ஸ்டெல்லாவை, உண்மையறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். முடிவு ? ஆமாம் !! ஸ்டெல்லா அந்த சோதனையில் தோல்வியடைந்தார். இத்தகவலைக் கேள்விப்பட்ட ஸ்டெல்லாவின் மகள், தன் அம்மாவைப் பற்றி போலீசிடம் சொன்னது.
என் அம்மா, பல வருடங்களாக கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காக, விஷங்கள் பற்றி நிறைய புத்தகம் படித்தார்”. இந்த வாக்குமூலம், ஸ்டெல்லாவைக் கைது செய்ய உதவியாக இருந்தது.

கோர்ட்டில், ஸ்டெல்லாவின் வழக்கு இவ்வாறாக விவரிக்கப்பட்டது.
ஸ்டெல்லா, தன் கணவரைக் கொல்ல சயனைட் என்ற விஷத்தை உபயோகித்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது, கணவர் இறந்தபின் அதன் மூலம் கிடைக்கும் 2 லட்சம் டாலர் கொண்டு தன் தொழிலை விரிவுபடுத்தலாம் என்பதாகும். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக, புரூஸ் இறந்தது இயற்கை காரணங்களால் என முடிவானதால், 2 லட்சத்திற்கு பதிலாக, 1 லட்சம் டாலர் தான் கிடைத்தது. அதனால் ஏமாற்றமடைந்த ஸ்டெல்லா, புரூஸ் இறந்தது விபத்து தான் என நிரூபிக்கும் பொருட்டு சயனைட் கலந்த மாத்திரைகளை கடைகளில் வைத்துவிட்டார். அவர் எதிர்பார்த்த மாதிரி ஸ்னோ இறந்த பிறகு, போலீசை அணுகி, தன் கணவரும் இந்த மாதிரி விஷத்தினால் இறந்ததாக மாற்ற நினைத்தார். அதன் மூலம் மேலும் 1 லட்சம் டாலர் கிடைக்கும் என நம்பினார். அவர் செய்த தவறு, பாசி நீக்கும் பொருளை அரைத்த அதே கிண்ணத்தில், சயனைடையும் அரைத்தது தான்”.

ஆதாரங்கள்:
1. முன்பே சொன்ன மாதிரி பச்சை நிற சிறு சிறு துகள்கள். (இதை ஸ்டெல்லா கடையில் வாங்கியதை, கடைக்காரர் உறுதிசெய்தார்).

2. ஸ்டெல்லா, நூலகத்தில் விஷங்கள் பற்றி படித்தது. அந்த புத்தகங்களில் இருந்த ஸ்டெல்லாவின் கைரேகை.(”புரூஸ் விஷத்தால் இறந்ததால், விஷத்தைப் பற்றிய புத்தகங்களைப் படித்தேன்” - ஸ்டெல்லா)

3. 15000 பாட்டில்களை சோதித்ததில் 5 பாட்டிலில் விஷம் இருந்தது. அதில் 2 பாட்டில்கள், ஸ்டெல்லாவிடம் இருந்தது நம்பும்படி இல்லை. மேலும் அவர் அந்த மருந்துகளை 2 வார இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வாங்கியிருக்கிறார். இந்த அளவுக்கு தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை.

4. உண்மையறியும் பரிசோதனையில் ஸ்டெல்லாவின் தோல்வி.

5.மகளின் வாக்குமூலம். (”அவள் மருந்து கம்பெனிகள் அறிவித்திருந்த பரிசுப் பணத்திற்காக பொய் சொல்கிறாள்” - ஸ்டெல்லா)

6. இன்ஸீரன்ஸ் பாலிசியில் புரூஸின் கையெழுத்துக்கும் அவரின் மற்ற கையெழுத்துக்கும் இருந்த வித்தியாசம்.

கோர்ட்டில் ஸ்டெல்லா குற்றத்தை ஒப்புக்கொள்ளவேயில்லை.
90 வருடம் ஜெயில் தண்டனை. 2017 ஆம் வருடம், ஸ்டெல்லா பரோல் என்ற முறைப்படி சிறையிலிருந்து வெளியே வரலாம். ஸ்டெல்லாவின் பேராசை பெரும் நஷ்டமானது.

இந்த வழக்குக்குப் பிறகு, மருந்து பாட்டில்கள் பேக் பண்ணப்படும் விதங்களை கம்பெனிகள் மாற்றியது.

ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன். இவ்வளவு ஆதாரங்கள் கோர்ட்டில் தரப்பட்டும், ஸ்டெல்லா, இப்பொழுது ஜெயிலில் இருப்பது, கொலைக் குற்றத்திற்காக இல்லை. பிறகு என்ன குற்றத்திற்காக ???
1983 ஆம் வருடம் FDA நிறைவேற்றிய “Anti-Tampering Law" வின் படி, ஸ்டெல்லா, மருந்து பொருட்களில் மாற்றங்கள் (சயனைட் கலந்தது) செய்த குற்றத்திற்காக 90 வருட தண்டனை. 2017 ஆம் வருடம் ஸ்டெல்லா பரோலில் வந்தால், அவர் மேல் கொலை வழக்கு தொடரப்படலாம்.

------இது வரை, Medical Detectives -ல் ஒளிபரப்பானது-----
 
இந்த பதிவை எழுதும் முன்பு, இணைய தளங்களில் தகவல் தேடிய போது சில வித்தியாசமான விஷயங்கள் கிடைத்தது.

2001 ஆம் வருடம், இரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், இந்த வழக்கில் சில தவறுகள் இருக்கிறது எனக் கண்டுபிடித்தனர்.

1. ஸ்டெல்லா விஷம் வைத்திருந்தால், எதற்காக, 2 பாட்டிலை வீட்டில் வைத்திருக்க வேண்டும் ? எதற்காக 2 பாட்டிலையும் போலீசாரிடம் தரவேண்டும் ?

2. F.B.I யின் 1000 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கைப் பற்றிய ஆவணங்களில், ஸ்னோ வாங்கிய பாட்டிலில் இருந்த சில சந்தேகப்படக் கூடிய கைரேகைகள் இருந்ததை கண்டுகொள்ளவில்லை. அந்த கைரேகைகள் யாருடையது என்று போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை.

3.ஸ்டெல்லாவின் நண்பர் ரைடர் என்பவள், ஸ்டெல்லா இந்த மருந்துகளை கடையில் வாங்கும் போது கூடவே இருந்திருக்கிறார். ஆனால், அவரது வாக்குமூலத்தை, இந்த வழக்கில் சேர்க்கவில்லை.

4. ஸ்டெல்லா, அந்த 2 பாட்டில்களை எப்பொழுது வாங்கியது என்று நியாபகம் இல்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால், போலீசார், அதை சில கால இடைவெளிகளில், வெவ்வேறு கடைகளில் வாங்கியதாக பதிவு செய்திருக்கிறார்கள். இது தவறு.ரைடர் வாக்குமூலம், அந்த 2 பாட்டில்களையும், ஒரே கடையிலிருந்து ஒரே நேரத்தில் வாங்கியதை நிரூபித்திருக்கும். இது நடந்திருந்தால், 15000 பாட்டில்களில், எப்படி 2 பாட்டில், வெவ்வேறு காலங்களில் வாங்கியதில் விஷமிருந்திருக்கிறது என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைத்திருக்கும்.

5. ஸ்டெல்லா, பாசி நீக்கும் பொருளை வாங்கியதாக சொன்ன கடைக்காரர், இந்த வழக்கின் மூலம், 15000 டாலர் பரிசு பணம் பெற்றிருக்கிறார்.இதனால், அவர் பொய் சொல்ல வாய்ப்பிருந்திருக்கிறது. மேலும், ஸ்டெல்லா, அந்த பொருள்களை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் போலீசிடம் இல்லை.

6. இந்த வழக்கு விரைவில் முடிய வேண்டுமென மிகப் பெரிய மருந்து கம்பெனிகள் முயன்றிருக்கின்றன. அதிக அளவு பணம் இந்த வழக்கில் நடமாடியிருக்கிறது.

7. ஸ்டெல்லா விஷச்செடிகளைப் பற்றி நூலகத்தில் படித்திருக்கிறார். தன் பிள்ளைகளுக்கும், வளர்ப்பு பிராணிகளுக்கும், தன் வீட்டு தோட்டத்திலிருக்கும் செடிகளினால் எதாவது பாதிப்பு ஏற்படுமா, எனத் தெரிந்து கொள்ளவே அந்த புத்தகங்களைப் படித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார்.

சட்டத்தில் உண்மையறியும், தப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் அமைப்பு, இந்த வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டுமெனெ நடவடிக்கை எடுத்துவருகிறது.

உண்மை
ஸ்டெல்லாவும் கடவுளும் மட்டுமே அறிந்தது.

03 October 2009

ஆண்களுக்கு அநீதி

அன்றாடம் பேப்பரைப் பார்த்தால் பெண்கொடுமை, பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றிய செய்திகள் தவறாமல் இருக்கும். அதை இங்கிலீஷ் பேப்பரில் படித்தவுடன், இல்லத்தரசிகள் 2 சொட்டு கண்ணீர் விடுவார்கள். அதற்கு பிறகு தன் வாழ்க்கையிலும் நடக்கும் கொடுமைகளை, பேப்பரில் வந்த செய்தியுடன் ஒப்பிட்டு, தான் இடம் பெற்றிருக்கும் மாதர் சங்கம் மற்றும் பக்கத்துவீட்டாரிடம் விவாதிப்பார்கள்.

பதிவர்கள், இந்த செய்திக்காகவே காத்திருந்து, உடனே ஒரு பதிவு இடுவார்கள். பாருங்கள் !!! பெண்கள் அடிமை/கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதே போல தான் பார்த்த கொடுமைகளை பதிவில் கொட்டுவார்கள். இப்பதிவிற்கு, பதிவர்களின், நண்பர்கள் உடனே வந்து, மிகவும் அற்புதமான பதிவு, இந்த மாதிரி பெண்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய சில பதிவர்கள் இருப்பதால் தான் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறைந்துவருகிறது என்பார்கள். இது ஒரு சம்பிரதாயம்.


ஆனால் இவர்களின், பார்வையில், ஆண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் நடைபெறும் கொடுமைகளை, மருந்துக்குக் கூட எழுத மாட்டார்கள். அப்படி எழுதினால் யார் படிப்பார்கள் ?. அழுவார்கள் ?

இப்பொழுது பிரபு தேவா சிக்கியிருக்கிறார். நயன்தாரவை எதிர்த்து எழுதும் பத்திரிக்கைகள், பிரபு தேவாவை பாராட்டுகின்றன என்பது இவர்கள் குற்றச்சாட்டு. பிரபுதேவாவை குறைசொல்லி எழுதும் பத்திரிக்கைகளை இவர்கள் படிக்க மாட்டார்கள். படித்தாலும் வசதியாக மறந்துவிடுவார்கள்.

சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

 • சில மாதங்களுக்கு முன், மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவல் படி, 50 சதவிகித, ஆண்களுக்கு எதிரான புகாரில், உண்மையில்லை என்றும், ஆண்களை பழிவாங்கும் எண்ணத்தில் பெண்கள் குடுத்த புகார்கள் எனச் சொல்லி, இதனைக் குறைக்க, ஆண்களின் மேல் புகார் வந்தால், உடனே கைது என அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இறங்குவதை தடைசெய்திருக்கிறார்கள். இந்த செய்திவந்த உடன் எவரும், எந்த பதிவையும் இடவில்லை. எப்படி எழுதமுடியும் ?. அதற்கு பதிலாக, உண்மையான குற்றத்தை செய்த ஆண்களைப் பற்றி எழுதினால், சில கண்ணீர் துளிகள் கிடைக்கும்.
 • பிரசாந்த், கிரஹலஷ்மியின் விவாகரத்து வழக்கில், பிரசாந்தை எவ்வளவு கேவலமாக எழுதமுடியுமோ, அவ்வளவு எழுதினார்கள். பத்திரிக்கையை பெண்கள் ஆர்வம் + கவனமுடன் படித்தார்கள். கிரஹலஷ்மியின் முந்தைய திருமண செய்திகள் வந்த உடன்,  பெண்ணுரிமைவாதிகளுக்கு ஷாக் அடித்த மாதிரி ஆகிவிட்டது. அந்த மேட்டரில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள். பாவம் பிரசாந்த், அதற்கு பிறகு கொடுக்கும் பேட்டிகளை வெளியிட கூட பத்திரிகைகள் இல்லை.
 • ஒரு மணமான பெண் இறந்துவிட்டால், உடனே கணவர் கைது செய்யப்படுவான். ஏன் ?. ஏனென்றால், அவனைத்தவிர வேறு யார் அக்குற்றத்தை செய்திருக்க முடியும் ? . இந்த செய்தியை அரைகுறையாக பத்திரிக்கை செய்திகளில் படித்தவுடன், அடுத்த நாள் பதிவு வந்துவிடும். ஆ !!! இன்னொரு பெண் கொடுமைக்கு பலியாகிவிட்டாள் என. விசாரணை முடிவில் வேறு பல தகவல் வரும் போது பத்திரிக்கைகளுக்கும், பதிவர்களுக்கும் இன்னொரு ஷாக் அடித்த மாதிரி ஆகிவிடும். என்ன செய்வது?. சிம்பிள். அடுத்தடுத்து வரும் செய்திகளை கண்டும் காணாதது போல விட்டுவிடலாம்.
கொஞ்சம் யோசித்து பார்த்தால், பெண்ணுரிமை பற்றி கவலை படுபவர்கள் யார் எனத் தெரியும். மாதர் சங்கங்கள், வலைப்பதிவர்கள், பெண் எழுத்தாளர்கள். இதில் என்ன கொடுமையென்றால், சமூகத்தில் நடைபெறும் பெண்கொடுமைகளால் 99 சதவிகிதம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. அவர்களைப் பற்றி எழுதி, போராடி, இவர்கள் பெறும் பல சலுகைகள், சம உரிமைகள், அடித்தட்டு மக்களை சென்றடைவது இல்லை. அதற்கு பதிலாக பயன்பெறுவது வேறொருவர்.

எடுத்துக்காட்டாக, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது போடப்பட்ட பட்ஜெட்டில், ஊதியம் பெறுபவர்களில், பெண்களுக்கு மட்டும் கூடுதலான சிறப்பு வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது. இதை அறிந்து, பாராட்டி எழுதினார்கள் பலர். காரணம் இது பெண்ணுரிமை வேண்டுபவர்களை திருப்தி படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மேலும், பெண்ணுரிமைக்காக போராடுபவர்கள் இதன் மூலம் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்ற தங்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் அடிபணிந்துவிட்டது என மகிழ்ந்தார்கள். இதனால் பயன் பெறுபவர்களில் பலர் வருடத்திற்கு 5 லட்சம், 10 லட்சம் வருமானமாக பெறுபவர்கள். ஒரே வேலையை செய்யும் போது பெண்ணுக்கு மட்டும் ஏன் வரிச்சலுகை. இவ்வரிச்சலுகை, இன்று வரை தொடர்கிறது. காங்கிரஸ் அரசு மேலும், வரிச்சலுகையை அதிகரித்திருக்கிறது. எதற்காக ? இதனால் ஏழைப் பெண்களுக்கு லாபம் ? இதை சரி செய்ய என்ன செய்யலாம் ?
 • அரசாங்கம் உடனடியாக இந்த வரிச்சலுகைக்கான வரம்பை குறைக்க வேண்டும் (இது நடக்கப் போவது இல்லை). குறைத்தால், அதன் மூலம், உண்மையான ஏழைப் பெண்களுக்கு இதன் பலன் போய் சேரும்.
 • பெண் கொடுமைகளை எதிர்த்து போராடும், எழுதும் பலர், இந்த சலுகையை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் கூடுதலாக பெறும் அப்பணத்தை ஏழைப் பெண்களுக்காக செலவு செய்யலாம்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஊதிய ஏற்றத்தாழ்வுகள் எந்த நிறுவனங்களில் இருக்கிறது ?. கண்டிப்பாக அரசாங்கத்துறையில் இல்லை. தனியார் துறையில் (கட்டிட வேலை, டீ, காப்பி எஸ்டேட், ஆடை ஏற்றுமதி) வேலை செய்பவர்களிடம் இருக்கிறது. அதை அரசாங்கம் தன் ஆணையின் மூலம் நீக்கலாம். அதை விடுத்து இந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத துறைகளான மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற ஊழியர்களுக்கு வரிச்சலுகைகள் கொடுப்பது மடத்தனமானது.

ஆண் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ஆண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள், பெண்ணுரிமை என்ற பெயரில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதனால், ஆண்களுக்கு ஏற்படும் அநீதிகளைப் பற்றி எழுதுங்கள். இலங்கையில் ஒரு இனம் அழிக்கப்படுகிறது. ஆனால், உலக அளவில் இன்னும் 50 ஆண்டுகளில் ஆண் இனம் பெரும் கொடுமைகளுக்கு ஆளாகும் என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகிறது. அதனால் தயவு செய்து ஆண்களுக்கு எதிரான பெண்களின் கொடுமைகள் பற்றியும் எழுதுங்கள்.

01 October 2009

ஒரு பாடம் ?தேக்கடியில் அநியாயமாக பல உயிர்கள் போயிருக்கிறது. உயிர்காக்கும் டியூப்கள் அனைவரும் அணிந்திருந்தார்களா எனத் தெரியவில்லை. சில வெளிநாட்டுப் பயணிகள் நீந்தி உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள தனியாரால் நிர்வாகிக்கப்படும் “லும்பினி பார்க்” -ல், படகிலேறும் அனைவருக்கும் நெஞ்சில் மாட்டக்கூடிய டியூப் கொடுக்கிறார்கள். இதனை, அரசால் நிர்வாகிக்கப்படும் ஒரு படகுகுழுமத்தில் செய்ய முடியாதா ?. இத்தனைக்கும், அது ஒரு 150 ரூபாய் மதிப்புடையது.

இனியாவது
 • படகில் பயணிப்பவர்கள் அனைவரும் லைஃப் ஜாக்கெட் போடவேண்டியது கட்டாயமாக்கப்படவேண்டும்
 • சிறுவயதிலேயே பள்ளிகளில், அனைவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த மாதிரி இனி உயிரிழப்புகள் நேரக் கூடாது என இறைவனை வேண்டிக்கொள்வோம்.

2 நாட்களுக்கு முன் என் அத்தையும், மாமாவும் அங்கு சென்று வந்தார்கள்.

கல் தோன்றி மண் தோன்றா


இடம்: மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகம்.
கடந்த வருடம் சென்ற போது எடுத்த படங்கள் இவை.

அத்திரம்பாக்கம் என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது கிடைத்த ஆதி கால மனிதன் உப்யோகித்த கருவிகள். இது சுமார் 1 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என வல்லுனர்கள் மதிப்பிட்டிருக்கிறார்கள.

இது முதுமக்கள் தாழி எனப்படுகிற, பழந்தமிழர்கள் இறந்தவர்களை, இறக்கும் தருவாயிலுள்ளவர்களை புதைக்க உருவாக்கிய மண் குடம். அறிவியல் சோதனையில் சுமார் 2500 வருடங்களுக்கு முற்பட்டது என கண்டுபிடித்துள்ளனர். எகிப்து மம்மிகள் போல இவைகள் பிரபலபடுத்தப் படவில்லை.


கடந்த காலங்களில் தமிழ் எழுத்துக்கள் எந்த மாதிரி உருமாறி இருக்கிறது என்பதனை, மேலே உள்ள படம் நமக்கு காட்டுகிறது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி என்பதனை நிரூபிக்க உதவும் சான்றுகள் இவை.