30 September 2009

தோசை 25000 ரூபாய்


வழக்கம் போல, எங்கள் காபி குடிப்போர் சங்கத்தை, ஆபீஸ் கேண்டீனில் கூட்டினோம். ஒருத்தர் “வி.ஜி.பி ல ஒரு போட்டி வெச்சுருக்காங்க. 1000 ரூபாய் கட்டிட்டு, 8 அடி தோசைய ஒருத்தர் சாப்பிடனும். பந்தயப் பணம் 25000 ரூபாய்” -ன்னு சொன்னார். சொன்னவரை பத்தி எனக்கு நல்லா தெரியும். அவரு, நான் ஆபீஸ்ல சேர்ந்த புதுசுல, ஒரு பஃபே பார்ட்டியில 8 தடவை பிளேட்டு முழுசா ஐட்டங்களை நிறைச்சு வெச்சு சாப்பிட்டத (என்னால 2 பிளேட்டுக்கு மேல சாப்டமுடியலை) பார்த்துருக்கேன். கபாப் பேக்டரிக்கு போனார்ன ஒரு 25 பன்னீர் டிக்கா சாப்டுவாரு. அதுவும், ஆர்டர் பண்றதுக்கு வெட்கப்பட்டு நிறுத்துவாரு. இல்லைன்னா எவ்வளவு சாப்டுவாருன்னு சொல்ல முடியாது.


அவரு தொடர்ந்தாரு “ஏன்டா ! 8 அடி தோசைன்னா இவ்வளவு பெரிசு இருக்குமா ?”
ன்னு தரையில போட்டிருந்த டைல்ஸ் அளவ வெச்சு கேட்டார். அதுக்கு நான், ஒரு 20 நார்மல் சைஸ் தோசை அளவுக்கு இருக்கும்னேன். அவ்வளவு தானா ? நான் நிறைய தடவை 25 தோசை சாப்பிட்டிருக்கேன். இது பெரிய மேட்டர் இல்லைன்னாரு. என்ன 2 வாளி சாம்பார் குடுத்து அது முழுசா குடிக்கனும்னு தோசை சாப்பிடும் போது சொல்ல மாட்டாங்கள்ள ? ன்னு கேட்டு பீதிய கிளப்புனாரு.

அப்புறம் அவர் தன்னோட சாப்பாட்டு பராக்கிரமங்களை சொல்ல ஆரம்பிச்சாரு. நீங்களே படிச்சு பாருங்க.

 • நான் காலேஜ்ல படிக்கும் போது, கொஞ்சம் லேட்டா மெஸ்க்கு போனேன். அப்ப இருந்த  பிரியாணி எல்லாத்தயும், என் தட்டுல போட்டுட்டு சாப்பிட ரெடியா இருந்தேன். அங்க வந்த பிரண்டு  என் தட்ட பார்த்துட்டு அதுல தான் பிரியாணி வைச்சுருக்காங்க, எடுத்துப் போட்டு சாப்பிடனும்னு நினைச்சு “மச்சி, அந்த பிரியாணி தட்ட என்கிட்ட தள்ளு..நான் கொஞ்சம் போட்டுக்குறேன்னான்”. அதுக்கு நான், “டேய்..இது என் தட்டுடா..நான் சாப்டுறதுக்கு வெச்சுருக்கேன்னு” சொன்னேன். அப்ப அவன் முகத்த பார்க்கனுமே..என்ன ஒரு அதிர்ச்சி ? !!
 • கொஞ்சம் வருசம் முன்னே சென்னையில, பாட்டம் லெஸ் கோக்ன்னு ஒரு கான்செப்ட் பீட்ஸா கார்னர்ல இருந்துச்சு. 25ரூபாய் கொடுத்து வாங்கிட்டா, டம்ளர் காலியாக ஆக, கோக் ஊத்திகிட்டே இருப்பாங்க. நார்மலா நான் ஒரு 12 டம்ளர் குடிப்பேன். அடிக்கடி அந்த கடைக்கு போறதால, என்னைப் பத்தி அங்க இருக்குறவங்களுக்கு தெரியும். ஒரு தடவை போய் கேட்கும் போது, சார் ! கோக் விலையேத்திட்டோம். இப்ப 40 ரூபாய்”.அதுக்கு நான் “ஒரு டீல் போட்டுக்குவோம். எனக்கு பழைய விலையான 25 ரூபாய்க்கு குடு, நான் ஒரு 4 டம்ளரோட நிறுத்திக்கிறேன்”. “இல்ல சார், கம்பெனி ரூல் அதுக்கு ஒத்துக்காது. 40 ரூபாய்க்கே வாங்குங்க”. நான் சரின்னு சொல்லிட்டு ஆர்டர் பண்ணி ஒரு 18 கிளாஸ் குடிச்சேன். எனக்கு சர்வ் பண்றவன். “சார்..இந்த மாதிரி எல்லாம் இருந்தா எங்களுக்கு கட்டுபிடியாகாது”. அதுக்கு நான் “ஆரம்பத்துலயே உங்ககிட்ட சொன்னேன்..நீங்க கேட்கலை. நான் என்ன பண்றது ?” கொஞ்சம் நாள் கழிச்சு அந்த பாட்டம்லஸ் கோக் நிறுத்திட்டானுங்க.
 • சங்கீதா ரெஸ்டாரண்ட் பக்கத்துல இருந்த தோசா கார்னர்ல அன்லிமிடெட் தோசை 125 ரூபாய்ன்னாங்க. வழக்கம் போல போய் ஒரு 18 தோசை தின்னேன். மேனேஜர், எனக்கு சர்வ் பண்றவங்களை கூப்பிட்டு “அவரு..தோசைய சாப்பிடுறாரா ? இல்ல வேஸ்ட் பண்றாரான்னு பாருங்கன்னாரு”. அதுக்கு சர்வர் “சார் !இவரு வேஸ்ட் எல்லாம் பண்றது இல்லை. முழுசா சாப்பிடுறார்ரு”ன்னு நொந்துபோய் சொன்னான.
 • இதே மாதிரி சென்னையில ரொம்ப நாள் முன்னாடி அன்லிமிடட் பீஸான்னு சொல்லியிருந்தானுங்க. நானும் என் பிரண்ட்ஸ்சும் போனோம்.ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி, சர்வர் கோக் வெச்சுட்டு “சார் ! முதல்லயே கோக் குடிச்சுடாதிங்க, வயிறு நிரம்பிடும், பீட்ஸா சாப்பிட முடியாது”. “நாங்க அத பாத்துக்குறோம், நீ பீட்ஸா கொண்டுவாங்க”. சொன்னா நம்ப மாட்ட, 12.30 க்கு ஆரம்பிச்சோம், 2.45 சுமாருக்கு வந்து “சார் ! கிச்சன் மூட போறோம். நீங்க கடைசியா எதாவது ஆர்டர் பண்ணனும்னா பண்ணுங்க” “3 லார்ஜ் பீஸா”ன்னு சொன்னதும், அவன் தலையில அடிச்சுக்கிட்டு போய் கொண்டுவந்தான்.
இதனால் அறியப்படுவது, நீங்கள், வி.ஜி.பி தீம் பார்க் போகும் போது யாராவது ஒருவர் 25000 ரூபாய் தோசை போட்டியில வின் பண்ணியிருந்தா, அது இவராத்தான் இருக்கும் :).

29 September 2009

துப்பறியலாம் வாங்க பதிவர்களின் வெற்றி

எனது ஒவ்வொரு “துப்பறியலாம் வாங்க” பதிவையும், ஆயிரக்கணக்கான மக்கள் படிப்பது, வலையுலகினர் அனைவரும் அறிந்ததே !!.

இந்நிலையில் தமிழக அரசு என்னை, என் சேவைகளை கெளரவிக்கும் வகையில் புதியதாக “தனியார் தடயவியல் பரிசோதனைக் கூடம் (Private Forensic Laboratory)" தமிழகத்தில் தொடங்க அனுமதியளித்துள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவர்கள் இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மகத்தானது. இப்பொழுது அரசும், நம் பதிவுகளை படிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இக்கணத்தில் மூத்த பதிவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

இத்தொடரை முன்பே படிக்காமல் போனோமே என கவலை கொள்பவர்களின் நலன் கருதி இதோ முன்பு வெளியான 2 பதிவுகள்

ரத்தத்துளிகள் - துப்பறியலாம் வாங்க.

இல்லை,ஆமாம், இல்லை - துப்பறியலாம் வாங்க


ரொம்ப ஓவரா இருக்கா ??? என்னங்க பண்றது. காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையா, நான் “துப்பறியலாம் வாங்க” எழுதற நேரம் பார்த்து , தமிழக அரசு உண்மையாகவே இப்படி ஒரு தனியார் ஆராய்ச்சி கூடத்துக்கு அனுமதி குடுக்க முடிவு செஞ்சு இருக்கு..அத நான் பயன்படுத்திக்கிட்டேன் :-).

வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக்கனும். என்ன நான் சொல்றது ??

28 September 2009

பல ஊரு தண்ணி

நாம மத்தவங்ககிட்ட நமக்கு அவங்களை விட அதிகம் அனுபவம் இருக்குன்னு சொல்றத்துக்கு நாம யூஸ் பண்ற வாக்கியம் “நான் பல ஊரு தண்ணி குடிச்சவண்டா !!..என்கிட்டயே வா ?”.

ஆனா நான் உண்மையிலேயே பல ஊர் தண்ணி குடிச்சவன். சந்தேகம் இருந்தா, நான் பள்ளிக்கூடம் படிச்ச ஊரு லிஸ்ட் கீழே குடுத்திருக்கேன், பாருங்க.1 - பாதி புதுக்கோட்டை - மீதி கரூர்2 - நாமக்கல்
3 - நாமக்கல்
4 - நாமக்கல்5 - மண்டபம் கேம்ப் (ராமேஸ்வரம்)6 - பாதி மண்டபம் கேம்ப் - மீதி திருச்செந்தூர்7 - தூத்துக்குடி
8 - பாதி தூத்துக்குடி - மீதி கரூர்                                    9 - ஓசூர்
                                   10 - சென்னை
                                  11,12 - சென்னை
                                  காலேஜ் - திருச்சி
                                    முதல் வேலை - பெங்களூர்
                                    தற்போது வேலை - சென்னை.

26 September 2009

ரத்தத்துளிகள் - துப்பறியலாம் வாங்க.


பிரிட்டனில் உள்ள ஒரு  கிராமத்தில் இருந்தவர்கள் ஜான், மேரி. ஜானுக்கு தொழில் விவசாயம். அமைதியான வாழ்க்கை.

ஒரு நாள் மேரி பக்கத்து நகரத்துக்கு போவதற்காக, காரில் ஏறி, இஞ்சினை ஸ்டார்ட் செய்ததும் ...பூம் !!!...கார் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த ஜான், மேரி பலத்த தீக்காயங்களுடன் தரையில் தூக்கி வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் சேர்த்த பின் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் யார் இந்த பாம் வைத்தது ?. யார் அவருக்கு எதிரி ?. போலீஸ் விசாரணையில் அந்த பாம் துப்பாக்கித் தோட்டாக்களில் இருந்த வெடி மருந்துப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சீட்டுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்ததால், கொலையாளியின் நோக்கம், காரை ஒட்டுபவரைக் கொல்வது. போலீஸ் விசாரணையில் ஜான் கையைக் காட்டியது, பக்கத்து வீட்டுக்காரரான டேவிட்டை. ஜானுக்கும் டேவிட்டுக்கும் இடையில் வேலி பிரச்சினை இருந்தது, அதன் பொருட்டு சில நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் டேவிட் இந்த குற்றத்தை செய்யவில்லையென நிரூபணமாகியது.

இந்நிலையில் ஒரு நாள் விடியற்காலையில், வீட்டுக் கதவை திறந்த ஜானுக்கு அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருந்தது.

வீட்டு வாசலில், வெட்டப்பட்ட ஒரு ஆட்டின் தலை மாட்டியிருந்தது. கூடவே “அடுத்தது நீ தான்” என்ற எச்சரிக்கை கடிதம். இதனைத் தொடர்ந்து மேலும் மிரட்டல் கடிதங்கள் வரவே, ஜானுடைய பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள். நாட்கள் ஓடியது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி, 1984ஆம் வருடம், போலீசுக்கு போன் வந்தது. பேசியது ஜான். “என்னை பக்கத்து வீட்டு டேவிட் கத்தியால் கொல்ல வந்தான். வேறு வழியில்லாமல், தற்காப்புக்காக, டேவிட்டை சுட்டுக் கொன்றுவிட்டேன்.” 


வீட்டுக்கு வந்து சேர்ந்த போலீஸார், வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீடு முழுவதும் சொட்டு சொட்டாக ரத்தம். முன்னறையில் டேவிட், தோட்டா காயத்துடன் செத்துக்கிடந்தார். கையில் கத்தியிருந்தது. ஒரு பெரிய சண்டை நடந்த தடயங்களாக, அங்கு இருந்த சேர், டேபிள் முதலானவை கவிழ்ந்து கிடந்தது. ஜான், வீட்டு சமையலறையின் பக்கத்தில் இருந்த வாஷ்பேசினில் தலையை சாய்த்தவாறு கிடந்தார். பக்கத்தில் அவரின் துப்பாக்கியிருந்தது. உடல் முழுவதும் ரத்தம். கைகளில் காயம் எதுவும் இல்லை, ஆனால் இடுப்பின் இடது முனையில் இருந்து குறுக்கே வலது தோள்பட்டை வரை ஒரு பெரிய கத்தி வெட்டு, முகத்தில் வாயில் இருந்து காது வரை வெட்டப்பட்டு, பார்க்கவே கொடூரமாக இருந்தது. பிறகு மருத்துவமனையில் 80 தையல் போடப்பட்டது என்றால் எந்த அளவுக்கு பெரிய காயமாக இருக்கவேண்டும் என கற்பனை செய்துகொள்ளுங்கள் (இப்பொழுது ஜானின் புகைப்படத்தை மறுபடியும் பாருங்கள், குறிப்பாக அவரது வலது காதிலிருந்து வாய் வரை உள்ள தழும்பு).

“என்ன நடந்தது ?”
“அன்று இரவு, என் மனைவி வெளியே போயிருந்தாள். அப்பொழுது பக்கத்து வீட்டு டேவிட் என்கிட்ட பேசனும்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வந்தார். நான் போலீஸ்கிட்ட அவரைப் பற்றி ஏன் புகார் குடுத்தேன்னு கேட்டு சண்டை போட்டார். ஒரு கட்டத்துல அவர் கத்திய எடுத்து என்னை தாக்க ஆரம்பிச்சுட்டார்”

”அவர் உங்களை தாக்கும் போது நீங்க  தடுக்க முயற்சி பண்ணுனீங்களா ?”.

ஆமாம், அவர்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்க எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் ஆனா அது முடியாம, என்னோட உடம்புல இவ்வளவு நீளத்துக்கு கீறிட்டார், என் முகத்துலயும் குத்திட்டார். அப்போ நான் தட்டு தடுமாறி பக்கத்து ரூம்க்கு ஓடிப்போய் என் துப்பாக்கிய எடுத்து சுட்டேன்”

போலீஸ் வீட்டை முழுவதுமாக சோதனை செய்து பல தடயங்களை சேகரித்தார்கள். ஜான் சொன்னது மாதிரியே வீடு முழுவதும் ரத்த காயங்களுடன் ஒடியதில், ரத்தம் பல இடங்களில் தெறித்திருந்தது. தடயவியல் நிபுணர்கள் நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னது

“ஜானை அரெஸ்ட் பண்ணுங்க. ”என்னென்ன தடயங்களை வைத்து ஜானை குற்றவாளி என சொன்னார்கள் ?

முதலாவதாக, சம்பவ இடத்தை பார்வையிட்ட, ரத்தங்கள் உண்டாக்கும் வடிவங்களை பற்றி படித்த நிபுணர்கள், வீட்டிலிருந்த ரத்த துளிகள் மேலே படத்தில் உள்ள சாம்பிள் A மாதிரி உருண்டை வடிவில் இருந்தது என்பதை பார்த்தார்கள். இந்த மாதிரி வடிவம் இருந்தால், ரத்தம் உடலிலிருந்து வரும்போது அந்த நபர் ஓரிடத்திலேயே நின்றிருக்கிறார் என்பது உறுதி. அப்படி இல்லாமல் சாம்பிள் B மாதிரி இருந்தால், அந்த நபர் ரத்தம் வடியும் போது நடந்து/ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது உறுதி. சாம்பிள் B-ல் உள்ள ரத்தம் உண்டாக்கிய வால் போன்ற வடிவம் முக்கியமானது. அதை வைத்து, அந்த நபர் எந்த வேகத்தில் நகர்ந்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்கலாம். இதன் மூலம், ஜான் சொன்னது போல, அவன் டேவிட்டிடம் இருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கவில்லை என்று முடிவு செய்தனர். ஜான்,  தன்னை தானே அறுத்துக்கொண்டிருக்கிறான்.

இரண்டாவதாக, டேவிட்டின் கையிலிருந்த ஜான் ஜோடனை செய்த கத்தியில், டேவிட்டின் ரத்தம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால், அவரில் கை முழுவதும் அவர் ரத்தம் இருந்தது.இதை வைத்து, ஜானை டேவிட் தாக்கவில்லை என முடிவு செய்தனர்.கத்தியை ஜான், டேவிட் இறந்தபிறகு வைத்திருக்கிறான்.

மூன்றாவதாக, ஜானின் கையில் கத்தியினால் ஏற்பட்ட எந்த காயமும் இல்லை. ஒருவன் நம்மை தாக்க வரும் போது, நம்மையறியாமல், நம் கைகள் தடுக்க முயற்சிக்கும். அப்படி ஜான் செய்திருந்தால், கண்டிப்பாக அவன் கைகளில் காயம் இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஜான் சொன்னது பொய் என நிரூபித்தனர்.

நான்காவதாக, ஜானின் உடலிலிருந்த காயத்தை பார்த்த டாக்டர்கள் “அவன் உடலில் இருந்த காயம் ஒரு நேர் கோட்டை, இடது இடுப்பிலிருந்து வலது தோள் பட்டை வரை வரைந்த மாதிரி இருக்கிறது. ஒருவனை கத்தியால் காயப்படுத்தும் போது, அவன் கண்டிப்பாக அசைவான். அப்படி அசைந்திருந்தால், இந்த மாதிரி நேர் கோடு போட்டது போல காயம் இருக்காது. அதனால், ஜானே, தன்னை கத்தியால் கிழித்திருக்கிறான்.”
மேலும், வீட்டின் வாஷ் பேஷினிடம் தேங்கியிருந்த ரத்தத்தின் அளவை வைத்து, ஜான், அதன் அருகில் நின்று தன்னை காயப்படுத்திக் கொண்டிருக்கிறான் எனக் கண்டுபிடித்தனர்.

ஐந்தாவதாக, தரையில் கவிழ்ந்துகிடந்த டேபிளுக்கு கீழே ரத்த துளிகள், சம்பவம் நடந்தபிறகு டேபிளை, ஜான் கவிழ்த்திருக்கிறான் என உணர்ந்தனர்.

ஆறாவதாக, டேபிளில் ரத்தக்கறையை பார்த்தார்கள். அது ஜானுடையது. ஆனால், அவன் டேவிட்டை சுட்ட துப்பாக்கியில், ரத்தக்கறை எதுவும் இல்லை. இந்த ஆதாரம், டேவிட், ஜானை தாக்குவதற்கு முன்பே, ஜான், டேவிட்டை சுட்டிருக்கிறான் என்பதை உறுதி செய்தது. நடந்தது என்னவென்றால், ஜான், டேவிட்டை, பேசவேண்டுமென வீட்டுக்கு கூட்டி வந்து, எதிர்பாராத தருணத்தில், சுட்டுக் கொன்றிருக்கிறான்.

ஜட்ஜ்க்கு இத்தனை ஆதாரம் போதுமானதாக இருந்தது. இரண்டு ஆயுள் தண்டனை, அவன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும், ஜெயிலில் கழிக்கப் போவதை உறுதி செய்தது. நீங்கள் இதை படிக்கும் போது, அவன் பிரிட்டனில் உள்ள ஒரு ஜெயிலில், தான் தப்பு தப்பாக செய்த தப்பை எண்ணி வருந்திக்கொண்டிருப்பான்.

இவ்வளவும் எதற்காக செய்தான் ?. பணம் !!!. அவன் பெரிய பணப்பிரச்சினையிலிருந்தான். அதிலிருந்து தப்பிக்க, தன் மனைவியைக் கொல்வதன் மூலம் கிடைக்கும் இன்ஸீரன்ஸ் பணத்தை உபயோகிக்க நினைத்திருந்தான். ஆனால், பாம் வெடித்ததில், தன் மனைவி தப்பியது பெரும் பிரச்சினையாக இருந்தது. அதனால், மிரட்டல் கடிதங்களை தனக்கு தானே அனுப்பி, பக்கத்து வீட்டுக்கார டேவிட்தான் மேரியைக் கொல்ல திட்டம் போட்டார் எனப் பொய்யாக நிரூபித்து, டேவிட்டை தீர்த்துக் கட்டுவதன் மூலம், டேவிட்டை குற்றவாளியாக ஆக்கிவிடலாம் என நினைத்ததின் விளைவு, இந்த கொலை, மற்றும் அதனைத் தொடர்ந்த நாடகம். ஒரு குற்றத்தை மறைக்க அவன் இன்னொரு குற்றத்தை உபயோகிக்க நினைத்தது தவறாக போய்விட்டது.

இந்த கேஸில், ரத்தத்தை ஆராயும் நிபுணர்கள் மற்றும் குற்றம் நடந்த இடத்தை ஆராய்ச்சி செய்யும் தடயவியல் நிபுணர்கள் பெரும் பங்குவகித்தனர்.

25 September 2009

அசடு வழிதல் என்றால் என்ன ? இது தான் !!

அசடு - 1

நான் காலேஜ் படிக்கும் போது, தினமும் 30 கிலோமீட்டர் பஸ்ல போகவேண்டியிருந்தது. பெரும்பாலும் உட்கார சீட் கிடைக்காது. அதனால் டிரைவர் சீட் பக்கத்துல இருக்குற இடத்துல போய் நின்னுக்குவேன்.அந்த இடத்துல நின்னா “முன்னால போ ! அவ்வளவு இடம் இருக்குல்ல ! உன் ஸ்டாப் வர்றப்போ நானே சொல்றேன்”. இந்த மாதிரி கண்டக்டர்கிட்ட திட்டு வாங்காம போகலாம்.

ஒரு நாள், காலேஜ்க்கு இன்னமும் 5 கிலோமீட்டர் தான் இருந்துச்சு. தூரத்துல ஒரு சின்ன பையன், ஒரு 10 வயசு இருக்கும், பரிட்சை அட்டைய கையில வெச்சுகிட்டு நின்னான். அந்த இடத்துல பஸ் ஸ்டாப் எதுவும் கிடையாது. நான் டிரைவர் கிட்ட “அண்ணே ! ஒரு சின்ன பையன் அங்க நிக்குறான். பரிட்சைக்கு நேரம் ஆச்சுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் நின்னு அவன ஏத்திக்கிட்டு போகலாம்”. அன்னைக்கு டிரைவர் நல்ல மூட்ல இருந்தனால, அங்க நிறுத்துனார்.

அப்பதான் ஒன்ன கவனிச்சேன். அந்த பையன் ஒரு மரத்துக்கு அடியில நின்னுகிட்டு இருந்தான். அவன் பக்கத்துல கொஞ்சம் மறைவா, ஒரு வயசான அம்மா நின்னுகிட்டு இருந்தது. அது அவன் ஆயான்னு நினைக்கிறேன். பஸ் நின்னோன்ன, அவன், ஆயாவ ஏத்திவிட்டுட்டு..போகலாம் ரைட்..ரைட்ன்னான். அடக் குட்டிச்சாத்தான் !!! அவனுக்கு பாவம் பார்க்க போய், அவன் மாஸ்டர் பிளான் தெரியாமா, நான் மாட்டிகிட்டேனே !. பின்னாடி திரும்பி டிரைவர் என்ன பார்த்த பார்வையிருக்கே..அப்ப என் முகத்துல வழிஞ்சுது பாருங்க..அதுக்கு பேரு தான் அசடு.


அசடு - 2
போத்தீஸ்ல பர்சேஸ் பண்ணமுடியாம தோல்வியடைஞ்ச நான், சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் மாதிரி, RmKv க்குள்ளே நுழைஞ்சேன். போத்தீஸ் அளவுக்கு கூட்டமில்லை. பையனுக்கு பனியன் எடுக்கனும்னு பிளான். செலக்ட் பண்ணிட்டு, எங்க பில் போடனும்னு அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட கேட்டேன். அப்பத்தான் அந்த பொண்ண பார்த்தேன். ஜீன்ஸ் பேண்ட், ஷர்ட், போட்டுகிட்டு, பார்க்குறத்துக்கு காலேஜ் படிக்குற பொண்ணுமாதிரி இருந்தா. சரி ! இப்ப எல்லாம், இந்த மாதிரி பொண்ணுங்களைத்தானே சேல்ஸ் கேர்ள்ளா போடுறாங்கன்னு நினைச்சுகிட்டே, பில் எங்க போடனும்னு கேட்டேன். ஆனா ! அவ அந்த டைம், இன்னொருத்தங்களுக்கு, துணிய காட்டிக்கிட்டு இருந்தா. நான் 2வது தடவைக் கேட்டதும், that counter sir !! ன்னு சொல்லிட்டு, வேலைய பார்த்தா !. நான் பில்லக் கட்டிட்டு, துணிய கலெக்ட் பண்ண போனா, அந்த சேல்ஸ் கேர்ள், கஸ்டமர் பக்கம் நிக்குறா !. அந்த பக்கம், RmKv uniform போட்டுகிட்டு இன்னொரு பொண்ணு நிக்குது.  என்கிட்ட சேல்ஸ் கேர்ள் மாதிரி ஆக்ட் குடுத்த பொண்ணு, அவ பிரண்ட்ஸ்கிட்ட, சும்மா, அப்படி நடிச்சுகிட்டு இருந்துருக்கு. அது தெரியாம, நான் அவ கிட்ட கேட்டுட்டேன். அப்புறம், கடைய விட்டு வெளிய வர்ற வரை (சுமார் 10 நிமிஷம்), அந்த பொண்ணும், அது பிரண்ட்ஸ்சும், சிரிச்சுகிட்டே இருந்துச்சுங்க. அதுங்க சும்ம சிரிச்சாலே என்னய பார்த்து கிண்டல் பண்ணி சிரிச்ச மாதிரியே இருந்தது. பொது வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தானே ?.. நீங்களே சொல்லுங்க ?? !!!

24 September 2009

ஹைய்யா .. போத்தீஸ் போய்ட்டு வந்துட்டேன்...


கடந்த ஞாயிற்றுக்கிழமை, தீபாவளிக்கு துணி எடுக்கலாம் என போத்தீஸ் போனேன். இது வரை நான் போத்தீஸ் போனது கிடையாது. ஆனால் என் மனைவியின் வற்புறுத்தலுக்கு (கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல..போத்தீஸ் போய் துணி எடுக்குற ஆசைய கூட நிறைவேத்த மாட்டேங்குறீங்க..அந்த கடையில நிறைய புது டிசைன் வந்துருக்காம்..அண்ணி சொன்னாங்க...) மறுப்பு சொல்ல இயலாமல், சென்றேன். எனக்கு கூட்டத்தைக் கண்டால் அலர்ஜி. கோவிலுக்கு போகும் போது கூட கூட்டமில்லாத கோவிலுக்கு போகவே விரும்புவேன்.

ஆட்டோவை (காரில் டி.நகர் போக பயம்..ஒரு தடவை பார்க்கிங் கிடைக்காமல், பாண்டி பஜாரை சுற்றி வந்து, என் வீட்டுக்கு அருகில் தான் கடைசியில் பார்க்கிங் கிடைத்தது :-) ) விட்டு இறங்கிய உடன், போத்தீஸ் கூட்டத்தை பார்த்து மிரண்டு, அரண்டு போனேன். வைகுண்ட ஏகாதேசியன்று, சொர்கவாசல் திறக்கும் போது மக்கள் அலை மோதுவது போல ஒரே கூட்டம்.

போத்தீஸ் வாசலில் ஒரு பெரிய கூட்டம் கன்னத்தில் கைவைத்து, குவியல் குவியலாக வாங்கிய துணியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.  வாசலில் போய் நின்றோம்.  கூட்டமே எங்களை கடைக்குள் தள்ளி விட்டது. எனக்கு சந்தேகமாகிவிட்டது, ஒரு வேளை இன்றைக்கு எடுக்குற துணியெல்லாம் இலவசமா ?..அதுக்கு தான் மக்கள் இவ்வளவு குவிந்திருக்கிறார்களா ?. கூட்டத்தில் சின்ன குழந்தைகள் மாட்டி கொண்டு கதறின. பெரியவர்கள், குழந்தையின் முகத்தில், தங்களில் கை பட்டு அவர்களுக்கு வலிக்குமே என்ற கவலையின்றி இடித்துக் கொண்டு போனது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு தீ விபத்து என்றால் மக்கள் என்ன பதட்டத்துடன் தங்கள் உயிர் காக்க பரபரப்பாக ஓடுவார்களோ, அதைவிட மோசமான அவசரத்துடன் ஓடிக்கொண்டிருந்தனர்.

இருந்த 2 லிப்ட்டுக்காக (குழந்தைகள் துணி இருப்பது 3 வது மாடியில்.. பட்டு புடவை முதல் தளத்தில். என்ன யோசனையில் இந்த மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.)  60 பேர் காத்திருந்தனர். லிப்ட் வந்தவுடன், என் மனைவி மற்றும் மகன் உள்ளே செல்ல, நான் போக எத்தனிக்கையில் சில பெண்கள் என்னை முந்திச்செல்ல, அவர்கள் மேல் இடிக்க பயமாக இருந்ததால் (எதுக்கு பெண்ணுரிமை வாதிகளிடம் அடி வாங்கனும்..? சொல்லுங்க), நான் பின் தங்க, லிப்ட் மேலேறியது. என் குடும்பத்தை தற்காலிகமாக பிரித்த புண்ணியத்தை போத்தீஸ் கூட்டம் தேடிக்கொண்டது.

பிறகு 3 மாடி ஏறி என் குடும்பத்துடன் இணைந்தேன். என் மனைவி மிரண்டுவிட்டார்.

“என்னங்க இவ்வளவு கூட்டமா இருக்கு..நான் இத எதிர்பார்க்கலை...”
“நான் வேண்டாம்னு சொன்னத இப்பவாவது புரிஞ்சுகிட்டியா...?”
”வேண்டாங்க வீட்டுக்கு போய்டலாம்...நான் புடவைக்கார அண்ணாவை வீட்டுக்கு வர சொல்லி எனக்கு சாரீஸ் எடுத்துக்குறேன்”
“அப்பா !!..i want blue color t-shirt"

வேறு வழியில்லாமல், ஒரு துணி எடுத்துவிட்டு எஸ்கேப் ஆனோம்.

யோசித்து பார்க்கையில், போத்தீஸ், சரவணா ஸ்டோர் போன்றவை, சென்னையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக, வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பார்க்க விரும்பும் இடங்களாக மாறி நிறைய வருடங்களாகி விட்டன. வெளியூரிலிருந்து வரும் என் உறவினர்கள் பலர் கேட்கும் முதல் கேள்வி..
”எப்ப, எப்படி போத்தீஸ், சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன் சில்க்ஸ் போகலாம் ?.”
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க என்ன பண்ணுங்க..நான் ஒரு ஆட்டோ புடிச்சுக் கொடுக்குறேன்..அதுல போய்ட்டு வந்துடுங்க”

சில மாதங்களுக்கு முன் சரவணா ஸ்டோரில் நள்ளிரவு தீ விபத்து நடந்தது. அதற்கு பிறகு இந்த மாதிரி கடைகளில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் எனத்தெரியவில்லை. இது நான் கடைக்கு உள்ளே இருக்கும் போது யோசிச்சது.  நல்ல நேரம் பார்த்த இத யோசிக்குறதுன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது.

கூட்டம் அதிகமா இருக்குன்னு புலம்பறத விட, கூட்டம் கம்மியா இருக்குற கடையில போய் துணி எடுக்கறது தான் சரின்னு புரிஞ்சுகிட்டேன்.

23 September 2009

எனக்கு 100 உனக்கு 80

எதோ சினிமாவ பத்தின்னு நினைச்சு இங்க வந்தவங்க வசமா மாட்டுனீங்க.


இது சினிமாக் கதை இல்லை என் சொந்தக் கதை. 4 வது படிச்சுகிட்டு இருந்த போது நடந்த சம்பவம். நான் 1ஆவதுல இருந்து 10 வது வரை முதல் ரேங்க் தான் எடுத்தேன்.(+1, +2 என்னாச்சுன்னு கேட்குறவங்க, உங்க மெயில் ஐடிய எனக்கு குடுங்க. பத்தாவதுக்கு அப்புறம் நான் படிச்சதெல்லாம் பெரிய சோகக் கதை. அதை இந்த பதிவுல எழுதி அவமானப் பட முடியாது. தனியா உங்களுக்கு மட்டும் மெயில் பண்றேன். என்னது..? மெயில் ஐடி குடுக்க மாட்டீங்க, ஆனா இங்கயே சொல்லனுமா ?.  சரி ரொம்ப சுருக்கமா சொல்லிடுறேன். 10 வது கணக்குல நான் 100க்கு 100 எடுத்தேன். அதே 100 மார்க் தான் நான் +2வுலயும் எடுத்தேன். இப்ப திருப்திதானே ?).

முதல் ரேங்க் மேல அப்படி ஒரு வெறி எனக்கு. எந்த காரணம் கொண்டும் அதை விட்டு கொடுக்க மாட்டேன். ஆன என் நண்பர்கள் 2 பேர், அவங்க பாஸ் ஆகனும்கறத்துக்காக, என்ன பரீட்சையில காண்பிக்க சொன்னாங்க. உட்கார்ந்து யோசிச்ச போது, நண்பர்கள் முக்கியம்னு பட்டுச்சு, ஆனா அதே சமயத்துல ஈயடிச்சான் காப்பி மாதிரி என்ன பார்த்து அப்படியே எல்லாத்தையும் எழுதிட்டானுங்கன்ன, என் 1வது ரேங்க்குக்கு பிரச்சினை வந்துடுமே ? என்ன பண்றது ?.

இங்க உங்களுக்கு ஒரு டவுட் வந்துருக்கும். என்னடா இவன், பாஸ் ஆகிற வழி தெரியாம கேட்குற பசங்க, எப்படி இவன் 1வது ரேங்க்குக்கு பிரச்சினையாக முடியும்னு. குட் டவுட்தான். எங்க மாத பரீட்சையில, மொத்தமே 10 கோடிட்ட இடங்களை நிரப்புங்கறது தான் கொஸ்டியன் பேப்பரே. நான் காண்பிக்கும் போது சில புத்திசாலிங்க 10க்கும் விடைய எழுதிட்டா, அவன்களும் 100, நானும் 100. அது சரிவராது.

ரொம்ப நேர யோசிப்புக்கு அப்புறம், ஒரு ஒப்பந்தத்துக்கு அவனுங்களை ஒத்துக்க வெச்சேன். ஒப்பந்தம் என்னென்னா, அவனுங்க 8 கொஸ்டியனுக்கு கரெக்ட்டா ஆன்சர் எழுதிடலாம். ஆனா கடைசி ரெண்டு கொஸ்டியனுக்கு அவங்க தப்பாத்தான் ஆன்சர் எழுதனும். ஆனா இதுலயும் ஒரு பிரச்சினையிருக்கு. அவனுங்க தப்பான பதில்னு நினைச்சு, சரியான பதில தெரியாத்தனமா எழுதிட்டானுங்கன்னா நான் அம்பேல். அதுனால, ஒப்பந்தத்துல ஒரு சின்ன கண்டிஷன் சேர்த்தேன். அதாவது, அவங்களேட பேப்பர நான் பார்த்து ஒ.கே சொல்லனும்.

இங்க உங்களுக்கு ஒரு டவுட் வந்துருக்கும். நான் எப்படி அவங்களோட பேப்பர பார்க்க முடியும் ? டீச்சர் அதுவரை சும்மா இருப்பாங்களா ?. இந்த டவுட் வந்தவங்களுக்காக என்னோட கிளாஸ் ரூம் பத்தி சொல்லனும். 10 க்கு 10 சைஸ்ல சிமெண்ட் தரை, எங்க கிளாஸ்க்கும் அடுத்த கிளாஸ்க்கும் நடுவுல ஒரு சின்ன தடுப்பு. இந்த ரூம்ல 40 பேர் உட்கார்ந்து படிக்கனும். என் பரீட்சை அட்டைய கொஞ்சம் நீட்டினா, அது அடுத்தவன் வயித்த குத்தும். அப்படின்னா,  எந்த அளவுக்கு ஒவ்வொருத்தன் நடுவிலயும் இடம் இருக்கும்னு பார்த்துக்கோங்க.

கிளைமேக்ஸ்: நான் சொன்ன மாதிரியே பசங்க என்னைப் பார்த்து எழுதிட்டானுங்க. கடைசி கொஸ்டியன்: அக்பரின் மகனின் பெயர் என்ன ?. நான் ஒருத்தனுக்கு பாபர், இன்னொருத்தனுக்கு அவ்ரங்கசீப்னு சொல்லி (அந்த ரெண்டு பேரும் ஒரே மாதிரி தப்பான விடை எழுதுனா, டீச்சர் கண்டுபிடிச்சுடுவாங்க இல்லை. அந்த சின்ன வயசுலயே, என்ன ஒரு உலக அறிவு பாருங்க எனக்கு), அவனுங்க அத எழுதிட்டானுங்களான்னு செக் பண்ணி பார்த்துட்டு, கொடுத்தேன்.

இப்படியெல்லாம் பண்ணி 1வது ரேங்க் வாங்கனுமான்னு நீங்க கேட்கப்பிடாது. 1வது ரேங்க் வாங்கிறது ஒரு விதமான போதை. அனுபவிச்சவங்களுக்கு தான் அதோட அருமை தெரியும். இந்த 1வது ரேங்க் வாங்கும் படலம், நான் 8வது படிக்கிற வரை தங்குதடையில்லாம நிறைவெறுச்சு. 8வதுல வந்தான் ஒரு பெரிய வில்லன். அவன் பெயர் ராஜ்குமார். காலாண்டு பரீட்சையில, ரொம்ப ஈஸுயா அவன் என்ன முந்திட்டான். பின்னாடி ரொம்ப கடுமையா உழைச்சு ??? !!! அரையாண்டு பரீட்சையில 1வது ரேங்க் எடுத்தேன்.

22 September 2009

இல்லை,ஆமாம், இல்லை - துப்பறியலாம் வாங்க


ஜீலை, 2000 வது வருடம், ஜான் மற்றும் ரெட் மீன் பிடிப்பதற்காக, லூசியானவில் உள்ள கடலுக்கு சென்றார்கள். ஜான், ரெட்டிடம் வேலை பார்த்து வந்தான்.அன்று வீசிய புயலில் சிக்கி, அவர்கள் பயணம் செய்த போட் கவிழ்ந்ததில் ரெட் இறந்து போனார். போட் கவிழ்ந்து 15 மணி நேரம் கழித்து, ஜானை, ஒரு கப்பல் காப்பாற்றியது. கடந்த 15 மணி நேரங்களாக, மூழ்கிய படகின், மிச்சங்களை பிடித்தபடி மிதந்ததால் மிகவும் சோர்வுற்றிருந்தான்.

பிறகு போலீஸ் என்ன நடந்தது எனக் கேட்டபோது,
நானும், ரெட்டும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பாராத வகையில் படகு, சூறாவளியில் மாட்டிக் கொண்டது. ரெட்டின் கால்களில், நாங்கள் வீசிய வலை மாட்டிக்கொண்டது. நான், அவரது கால்களை விடுவிக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.ஆனால், ரெட்டால் தப்பிக்க முடியவில்லை. படகு மூழ்கிவிட்டது. நான் படகின் பாகத்தைப் பிடித்தவாறு தப்பித்தேன்”.

போலீசார் உடனே ரெட்டை கடலில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மூன்று நாட்கள் கழித்து, ரெட்டின் உடல் நீரில் மிதந்தது. அதனை போஸ்மார்டம் செய்த டாக்டர்,
ரெட்டின் கையில் 5 இடங்களில் சிராய்ப்பு இருக்கிறது. அது கத்தியினால் தாக்கப்பட்ட போது, தற்காத்துக் கொள்ளும் போது ஏற்பட்ட காயம் போல இருக்கிறது. மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரெட் இறந்தது, இயற்கையான மரணம் கிடையாது”.

இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதும், ஜான், மேலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டான். அவன் மேல் அனைவருக்கும் சந்தேகம் வழுத்தது. ஒரு வேளை, ஜான் கொலை செய்திருப்பானோ ?.

ஜானை முதல் நாள் தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை செய்தார்கள். அவன் சொன்னதையே திருப்பி, திருப்பி சொன்னான். நடந்தது ஒரு விபத்து. நான் கொல்லவில்லை.

அடுத்த நாள் 3 மணி நேரம் தொடர்ந்த விசாரணையின் முடிவில், ஜான், ரெட்டை கொன்றதாக ஒத்துக்கொண்டான். அந்த சிறு நகரத்தில் இருந்த அனைவரும் கொண்ட சந்தேகம் சரி என முடிவானது. ஆனால், என்ன நடந்தது ? எதற்காக கொன்றான் ?.

படகு, புயலில் மாட்டி, மூழ்கும் நிலையில் இருந்தது. ஒரே ஒரு லைப்சேவிங் டியூப் தான் படகில் இருந்தது. நான் முதலில் அதை எடுக்க முயற்சித்தேன். அப்போது, ரெட்டும், தனக்கு வேண்டும் என்று சொல்லி என்னருகில் வந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் என்னிடம் இருந்த கத்தியால் அவரை தாக்கினேன். அப்படியும், தொடர்ந்து சண்டை போட்டதால் பக்கத்தில் இருந்த இரும்பு கழியால், அவரை தலையில் தாக்கினேன்” என போலீஸ் விசாரணையில் சொன்னான்.

ஜான் கைது செய்யப்பட்டான். அவன் சார்பில் வாதாட வந்த வக்கீல், ஒரு சந்தேகம் கொண்டார். லைப்சேவிங் டியூப் க்காக, அவன் கொலை செய்தான் என வைத்துக் கொண்டால், அவனைக் காப்பாற்றும் போது, அவன் லைப்சேவிங் டியூப் அணியவில்லை என்பது தெரிந்தது.அவனிடம் உண்மையைக் கூறுமாறு கேட்ட போது, அவன் “நான்  கொலை செய்யவில்லை” என்றான்.

என்ன இவன் போலீசிடம் ஒத்துக் கொண்டான், இப்பொழுது இல்லை என்கிறான். இதில் எதோ பெரிய குழப்பம் இருக்கிறது. 8 மணி நேரம் போலீஸ் அவனை விசாரணை செய்த வீடியோ டேப், மன நல மருந்துவரிடம் அனுப்பப்பட்டது. ஏன் இவன் மாற்றி, மாற்றி சொல்கிறான் ?. டேப்பை பார்த்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். முதல் 5 மணி நேர விசாரணையில் அவன், தான் ரெட்டை கொல்லவில்லை என்று கூறினான். அதற்குள் போலீசார், போஸ்மார்டம் அறிக்கையை நம்பி, அவனை குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி மிரட்டினார்கள். அவன் மிகவும் பயந்து போனது டேப்பில் தெரிந்தது. அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என போலீசார் சொன்னதும், அடுத்த 3 மணி நேரத்தில், அவன் போலீஸ் என்ன சொன்னாலும் அதனை ஒத்துக்கொள்ளும் மன நிலை அடைந்தான்.

போலீஸ்: “போஸ்மார்டத்தில் ரெட் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்ததாக இருக்கு. உண்மையை சொல்லிவிடு”
ஜான்   : “ஆமாம் நான் தான் கொன்றேன்”
போலீஸ்: “தலையில் பெரிய காயம் இருக்கிறது. நீ தானே அடித்தாய் ?”
ஜான்   : “ஆமாம், அங்கு இருந்த இரும்புக்குழாயால் அடித்தேன்”
(படகில் அவன் கூறிய மாதிரி இரும்புக் குழாயே இருக்கவில்லை என பிறகு விசாரணையில் தெரிந்தது)

மேலும் மனநல மருத்துவர், ஜானைப் பற்றி பார்க்கையில், அவனது I.Q 70, அதாவது சராசரிக்கும் குறைவானது. அவனது நியாபகம் வைத்திருக்கும் திறன் குறைவு என கண்டறிந்தனர். போலீஸ், விசாரணை என்ற பெயரில் கொடுத்த டார்ச்சரில் இருந்து தப்பிக்க அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இந்த மாதிரி விசாரணைக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வது நடக்க கூடியது என இன்னொரு கேஸில் இருந்து அறிந்து கொண்டார்கள். மேலும், அமெரிக்க குற்றவியல் சட்டப்படி, பாதி விசாரணை நடக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையில் இருந்து வெளி நடப்பு செய்யலாம். ஆனால், ஜானுக்கு இந்த மாதிரி இருக்கும் சட்டம் பற்றி தெரியவிலலை. டாக்டர், ஜானிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையே தவறு என தன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டார். ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை, என்ன நடந்தது என அறியும் வகையில் போலீஸ் விசாரணை நடக்க வேண்டும். ஆனால், போலீஸ், குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே விசாரணை செய்தது தவறு.(They expected a confession from him and not what happened there).

நீதிபதி மற்றும் ஜுரிகள், ஜானை நிரபராதி எனக் கூறி வழக்கிலிருந்து விடுவித்தனர்.

எல்லாம் சரி, ஆனால் அந்த போஸ்மார்டம் ரிப்போர்ட். அதை என்ன செய்வது ?

ரெட்டின் உடல் தண்ணீரில் மிதக்கும் போது, அதை கவனிக்காத சிறிய படகு, உடல் மேல் மோதியிருக்கலாம். கையில் இருந்த சிராய்ப்பு, உடலை தண்ணீரில் இருந்து மீட்கும் குழுவினரால் ஏற்பட்டிருக்கலாம். உடலை தண்ணீரில் இருந்து எடுத்த மீட்பு படகினர் இதை உறுதி செய்தனர். மேலும், ரெட்டின் உடலில் இருந்த காயங்கள், கடலில் விபத்தினால் உயிரிழப்பவர்களின், உடலில் ஏற்பட கூடிய பொதுவான காயங்கள் என கண்டுபிடித்தார்கள். மேலும் போஸ்மார்டம் செய்த டாக்டர், தடயவியலில், பயிற்சி பெற்றவர் இல்லை. அவர், கத்தியினால் உடலில் ஏற்பட்ட காயம்தானா என உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் மேலோட்டமாக ரிப்போர்ட் கொடுத்திருப்பது அறியப்பட்டது.

ஒரு நிரபராதி தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டான். இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது, தடயவியல் பயிற்சி பெற்ற மன நல மருத்துவர்கள்.

21 September 2009

துப்பறியலாம் வாங்க - ஒரு அறிமுகம்.

மனிதனுக்கு சஸ்பென்ஸ் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற சஸ்பென்ஸ் தான் ஜோதிடம் பக்கம் இழுத்துச் செல்கிறது.

நான் சிறுவயது முதல் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுபா எழுதிய துப்பறியும் நாவல்களை, 80 பக்க கதையை, சஸ்பென்ஸை அவிழ்க்கும் கடைசி ஒரு பக்கத்திற்காக ஆர்வமுடன் படிப்பேன். தற்போது அகதா கிறிஸ்டி படித்துக் கொண்டிருக்கிறேன்.


2000-வது வருடம் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மெடிக்கல் டிடக்டிவ்ஸ்” தொடர், மிகவும் பயனுள்ள, ஆர்வத்தை தூண்டக்கூடிய நிகழ்ச்சி.

தொடர் பற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு குற்றம் (கொலை, கொள்ளை, நோய்) பற்றி முதல் 10 நிமிடங்களுக்கு, ஒரு நாடக பாணியில் நடிகர்கள் நடிப்பதின் மூலம் காண்பிப்பார்கள். அடுத்த 10 நிமிடங்களுக்கு, அந்த குற்றத்தை போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் எப்படி துப்பறிந்து, குற்றவாளியைக் கண்டுபிடித்தார்கள் என்பதை பற்றி விவரிப்பார்கள். கடைசி 5 நிமிடங்கள், அந்த குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரின் உண்மையான தோற்றத்தை போட்டோவில் காண்பிப்பார்கள்.

இத்தொடர், மிகவும் பயங்கரமான, சிக்கலான குற்றங்களை நிகழ்த்தியவர்கள் எப்படிப்பட்ட தடயங்களை விட்டுச் சென்றார்கள் ?, அதை மருத்துவ பூர்வமாக எப்படி கண்டுபிடித்து, கோர்ட்டில் நிரூபித்து, தண்டனை வாங்கிக் கொடுத்தார்கள் என்பதை மிகவும் அருமையாக விளக்கியது.

இந்த மாதிரி வழக்குகளை நிரூபிக்க அமெரிக்க சட்டங்கள் சில கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வருகிறது (இந்திய சட்டங்களும் இப்படித்தான் என நினைக்கிறேன்). அந்த சட்டங்கள் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பதை முக்கியமாக கருதுகிறது. எடுத்துக்காட்டாக, போலீசார் பின்வருபவற்றை சந்தேகத்துகிடமில்லா வகையில் கோர்ட்டில் எடுத்துரைக்க வேண்டும்.
 • கொலை வழக்குகளில், கொலை செய்யப்பட்டவரின் உடல் மற்றும் கொலைக்கு உதவிய ஆயுதம்
 • கொலை நடந்த நேரம் மற்றும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த இடத்தில் இருந்தார் அல்லது அவர்தான் அந்த கொலையை செய்ய சொன்னார் என்பதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம்.

மேல் கூறியவற்றில் எதையாவது ஒன்றை நிரூபிக்க தவறினால், குற்றவாளி தப்பித்துவிடுவான். இந்த விஷயங்களை தெரிந்து, அதில் மாட்டிக் கொள்ளாமல் குற்றம் செய்தவர்கள் பலர், ஆனால், அனைவரும் மாட்டிக் கொண்டது வேறு கதை. சில குற்றங்கள் 20 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டனை அடைந்ததும் உண்டு. மரணமடைந்தவர்களை எரிக்காமல், புதைக்கும் பழக்கம் பெரும்பாலும் அங்கு பின்பற்ற படுவது போலீசாருக்கு, போஸ்ட்மார்டம் செய்து, குற்றத்தை நிரூபிக்க உதவியாக இருக்கிறது.

இத்தொடரில் ஒளிபரப்பான சில சிக்கலான வழக்குகளைப் பற்றி, எழுதலாம் என நினைக்கிறேன். 10 வருடங்களுக்கு முன்பு பார்த்ததால், எனக்கு பெயர்கள் மறந்துவிட்டது. அதனால் எனக்கு நியாபகம் இருக்கும் அனைத்து தகவல்களையும், வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.வாருங்கள் துப்பறியலாம் !!!

தொடரும் ...

20 September 2009

இரவு 11 மணி 14 நிமிடங்கள்


11:14 என்பது ஒரு இங்கிலீஷ் படத்தின் பெயர். பெயரைப் போலவே 1 மணி 20 நிமிடங்களில் படம் முடிந்துவிடுகிறது.

கதை என்ன ?. காரை ஓட்டிவருபவன், ஒருவன் மேல் இடித்துவிடுகிறான். இந்த  சம்பவம் நடக்கும் 15 நிமிடங்களுக்கு முன்னால், காரை ஓட்டுபவனிடம் ஒரு கேமிரா அதே போல கார் இடித்து இறந்தவனிடம், இன்னொரு கேமிரா வைத்து காண்பித்தால் எப்படி இருக்கும் ? .

கொஞ்சம் யோசியுங்கள் ! காரை ஓட்டி வருபவன் ஒரு 10 நொடி தாமதமாக கிளம்பி இருந்தால், அந்த விபத்து நடந்திருக்காது. நம்ம தமிழ் படம் சரோஜா, ஆய்த எழுத்து போன்றவற்றில் இடம் பெற்ற அதே யுக்தி தான்.

படத்தில் 2 விபத்துக்கள், 11:14 நிமிடங்களுக்கு  நடக்கிறது. 5 தனிப்பட்ட சம்பவங்களில் சம்மந்தபட்டவர்கள் தான், அந்த 2 விபத்துக்களிலும் சம்மந்தபட்டிருக்கிறார்கள். இதை எடுத்தவிதத்தில் டைரக்டர், பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு, கொஞ்சம் அசந்தால் சீட்டைவிட்டே விழ வைக்கிறார். திரைக்கதை அமைப்பது எப்படி என்று ஒரு பாடமே நடத்தலாம் இந்த படத்தை வைத்து.

முதல் 5 நிமிடப் படத்தை மட்டும் பார்ப்போம்.


குடிபோதையில், தன் காதலியிடம் செல் போனில் பேசிக்கொண்டு வருபவன், 11:14 நிமிடங்களுக்கு ஒருவன் மேல் மோதி விடுகிறான். ஆள் காலி. காரை விட்டு கீழே இறங்கி பார்க்கும் போது, இன்னொரு கார் வருகிறது. அதைப் பார்த்து, பயந்து, இறந்தவனை, காரின் ட்ரங்கில் மறைக்கிறான். அந்த காரை ஓட்டி வருபவள், காரை நிறுத்தி ”என்ன ஆச்சு, மான் மேல மோதிட்டியா ?” எனக் கேட்கும்போது தான், அது மான்கள் நடமாடும் இடம் என அவனுக்குப் புரிகிறது.

அவன் உதவி எதுவும் தேவையில்லை என்று சொல்லியும் கேட்காமல், அவள், போலீஸ்க்கு சொல்லிவிட்டு, கிளம்புகிறாள். இவன், அந்த இடத்தை விட்டு போய்விடலாம் என நினைத்து காரை எடுக்கும் போது போலீஸ் வந்துவிடுகிறது.

”என்ன குடிச்சுட்டு வண்டி ஓட்டுனியா ?”
“இல்லை”
“பரவாயில்லை. வண்டியை விட்டு கீழே இறங்கு”
அவன் இறங்கியவுடன்
“abcd ரிவர்ஸில் சொல்லு”
“zyx...."

அதற்குள் அவன் டிரைவிங் லைசன்ஸை செக் பண்ணி பார்த்துவிட்டு, அது 3 மாதங்களுக்கு முன்னே வேறோரு குற்றத்திற்காக, நீக்கப்பட்டுவிட்டதை அறிந்து, அவனுக்கு கைவிலங்கிடுகிறார்.

வண்டியின் ட்ரங்கை திறந்து பார்க்கும் போது, ரத்தக் கறையைப் பார்த்து
“மானை அடிச்சதும் இல்லாம தின்றதுக்கு எடுத்துட்டு போறியா ?”
“இல்லை”
அதற்குள் போர்வையை விலக்கி, அது மான் இல்லை, ஆண் எனத்தெரிந்து, தகவல் கொடுக்கிறார்.

போலீஸ் காரில் அவனை உட்காரச் சொல்லும் போது, அங்கே, ஏற்கனவே கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேர் இருப்பதைப் பார்க்கிறான்.
அவன், போலீசை விட்டு ஓடப்பார்க்க, போலீஸ் அவனைத் துரத்த, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த இரண்டு பேரும் தப்பித்து போகிறார்கள்.

அந்த இரண்டு பேரும் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் எனப் பிறகு காண்பிக்கிறார்கள்.

திரில்லர் படப்பிரியர்கள் இந்த படத்தை மறக்காமல் பாருங்கள்.

பின்குறிப்பு:

ஆங்கிலப்படங்களை, டிவிடி வாடகைக் கடைகள் அல்லது தெருவோரங்களில் டிவிடி விற்பவர்களிடம் இருந்து வாங்கிப்பார்க்கலாம். <பலரின் எச்சரிக்கையினால் இந்த பகுதி நீக்கப்பட்டது>

18 September 2009

ஆத்தாடி !! இது காத்தாடி !!


(விஜய டி. ராஜேந்தர் என்கிற டி.ராஜேந்தர், நடித்த சில பாடல்களை சமீபத்தில் பார்த்ததின் விளைவு, இந்த தலைப்பு)

விடுமுறைக்கு, கரூரில் இருந்த என் தாத்தா வீட்டுக்கு எல்லா பேரப்பிள்ளைகளும் (மொத்தம் 16 தேறும்) வந்துடுவோம். ஒவ்வொரு வயசு ரேஞ்சுலயும் ஒரு 3 பேர் இருப்பாங்க.பட்டம் செய்யிறத்துக்குன்னு அங்க ஒரு பெரிய இன்ஜினியர் குரூப்பே இருந்தது. இருக்குறதுலயே சிறியவர்கள் குரூப்ல நான். என் 3 வது அண்ணன் ஒரு குரூப்ல இருந்தான். என் 2 அண்ணன் இன்னொரு குரூப். இதுல எங்க குரூப்பின் முக்கிய வேலை, பேப்பர், கோந்து, விளக்குமாற்றுக் குச்சி சேகரிக்கறது. அடுத்த 2 குரூப்பும், கொஞ்சம் பெரிய மற்றும் ஆபத்தான, கஷ்டமான வேலைகளான, கத்திரிக்கோலால் பேப்பர் கட் பண்றது, ஒட்றது பார்த்துக்குவாங்க. சிறுவர்களை, அந்த மாதிரி ஆபத்தான (??!!) வேலைகளுக்கு அலவ் பண்ண மாட்டாங்க. பட்டம் தயார் செய்யறத்துக்கு மொட்டை மாடியில வேலை நடக்கும். எங்க குரூப், மாடிஅடிக்கடி ஏறி, இறங்கி, அவங்க கேட்குற பேப்பர், கோந்து, குடிக்க தண்ணி கொண்டு வரணும். இவ்வளவு வேலையும் ஒரு மிலிட்டரி கட்டுபாட்டோட நடக்கும்.

பேப்பர்ல தமிழ் பேப்பர் வேலைக்கு ஆகாது, ஏன்னா அது சாணித்தாள் எனப்படுகிற மட்டமான பேப்பர்ல பிரிண்ட் ஆகியிருக்கும். பட்டம் சரியா பறக்காது. அதனால, பக்கத்து வீட்டுல இருந்த வக்கீல் அங்கிள்கிட்ட போய் இங்கிலீஷ் பேப்பர் வாங்கி, பெரியவர்கள் கூட்டத்துல கொடுத்துட்டு, அவங்க பண்றத ”ஆ” ன்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருப்போம்.

பேப்பர சதுரமா கட் பண்ணி, ஒரு ஈர்குச்சிய நேரா, இன்னொரு குச்சிய வில்லு மாதிரி வளைச்சு, பிளாஸ்திரி சைஸ்ல கட் பண்ண பேப்பர வெச்சு நல்லா ஒட்டணும். பட்டத்தோட வால் ரெடி பண்ணி அதோட ஒட்டிட்டு, ஒரு 2 மணி நேரம் மொட்டை மாடியில காய வெச்சு எடுத்தா பட்டம் தயார். அதுக்கு சூஸ்திரம் போடணும், அதுக்கு எங்க தாத்தா தான் சரியான ஆளு. அவ்வளவு சூப்பரா தயார்பண்ணி கொடுப்பார்.

சாயந்திரம் ஒரு 5 மணிவாக்குல பட்டம் பறக்க விட ஆரம்பிப்போம். பட்டத்தோட வால தூக்கிக்கிட்டு வர்றது எங்க குரூப். பெரியவன் ஒருத்தன் கையில நூல் இருக்கும், அந்த குரூப்ப சோந்த இன்னொருத்தன் பட்டத்த தூக்கி உயரத்துல போடுவான். அந்த டைம் கரெக்ட்டா காத்து அடிச்சா, பட்டம் சல்லுன்னு மேல பறக்க ஆரம்பிச்சுடும். அப்புறம் சுண்டி, சுண்டி விட்டு, பட்டத்த மேல் காத்துல சேர்க்கறது வரை ஆண்டவன வேண்டிக்குவோம். அப்புறம் நூல்கண்டு தீர்ற வரை நூலை விட வேண்டியது தான்.

நல்ல உயரத்துக்கு போய் பட்டம் ஸ்டடி ஆன பின்னாடி, ஒரு தந்தி தயார் பண்ணுவோம். தந்தின்றது ஒரு சின்ன சதுரமான, நடுவுல ஓட்டைப் போட்ட பேப்பர். அதுல எங்க பேர் எல்லாம் எழுதி, நூல்ல கனெக்ட் பண்ணிவிட்டு, சுண்டி விட்டா, தந்தி மெதுவா பட்டம் நோக்கி போகும். சந்திரனுக்கு ராக்கெட் விடுறதுல கடைசிக் கட்டம் மாதிரி, இந்த தந்தி விடுறது. தந்தி பட்டத்து பக்கம் போனா மிஷன் வெற்றி. எங்க குரூப் ஆளுங்க கைத்தட்டணும். பெரியவர்கள் குரூப் விசில் அடிக்கும்.

அடுத்தது, பட்டத்த செய்கூலி சேதாரம் இல்லாம இறக்கணும். பட்டம் கீழே வந்த பின்னாடி, வால சுருட்டி (பட்டத்து வாலுங்க...எங்க வால இல்ல), பத்திரப்படுத்திட்டு, மாடிய விட்டு கீழே இறங்கிடணும். பெரியவர்கள் கூட்டம், தாத்தா கிட்ட போய், மிஷன் எவ்வளவு தூரம் வெற்றி, தந்தி ஒழுங்கா போச்சா ? இல்லையா ?, சூஸ்திரம் ஒழுங்கா வொர்க் ஆச்சா ?, இல்ல என்ன என்ன மாற்றங்கள் பண்ணணும்னு சொல்லுவாங்க.

கொஞ்சம் நாள் கழிச்சு, எதிர்த்த வீட்டு பசங்க பட்டம் விட ஆரம்பிக்க, எங்களுக்கும், அவங்களுக்கும், இந்தியா, பாகிஸ்தான் போர் ரேஞ்சுக்கு போட்டி நடந்தது. யார் பட்டம் ரொம்ப தூரம் போகுதுன்னு போட்டி. டீல் விடுறது அதாவது, அவங்க பட்டத்த, நூல்ல மாஞ்சா தடவி, நடுவானத்துல அட்டாக் பண்ணி, கட் பண்றதுன்ற அளவுக்கு எல்லாம் போட்டி போகலை. எங்க போறது ?, நிறைய நாள், ஒரு பத்து அடி பட்டம் பறந்தாலே பெரிய விஷயம் தான்.


நான் 6வ்து, என் 3 வது அண்ணன் 8 வது படிக்கும் போது, திருச்செந்தூர்ல இருந்தோம். அங்க பட்டம் எல்லாம் வேற ரேஞ்சுல பண்ணுவாங்க. சின்ன சின்ன மூங்கில் பட்டைய வெச்சு, கலர் காகிதத்துல, கோயில் கோபுரம் ஷேப்ல எல்லாம் பண்ணுவாங்க. நூலுக்கு பதிலா, மீன் வலை பின்றதுக்கு யூஸ் பண்ற நைலான் நூல், பட்டத்தோட வாலுக்கு பதிலா, கிணத்துல வாளி கட்டி தண்ணி எடுக்க யூஸ் பண்ற கயிறு, அதோட முனையில வெயிட்டுக்காக, சின்ன செடிகள் எல்லாத்தயும் வெச்சு பட்டம் வேற மாதிரி இருக்கும். கடற்கரை இருக்குறதால காத்துக்கு பஞ்சமே இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறத்துல போய் பட்டம் விடுவோம். மேல் காத்துல ஏத்திவிட்டுட்டா, சாயங்காலம் வரை பட்டம் ஜம்முன்னு வானத்துல அப்படியே நிக்கும். நாங்க பெரிய கம்பத்துல நூல கட்டிவிட்டுட்டு, வீட்டுக்கு வந்து எங்க அப்பா, அம்மாகிட்ட பறக்குற பட்டத்த காண்பிப்போம். பட்டத்த சாயங்காலம் இறக்குறது ரொம்ப கஷ்டம், ஏல .. ஏலோ ஐலசான்னு மூச்ச தம் கட்டி நூல இழுத்து பட்டத்த இறக்குவோம்.

அதுக்கு அப்புறம் சமீபத்துல மெரீனா பீச்சுல காசு கொடுத்து பட்டம் வாங்கி அங்கயே கொஞ்சம் நேரம் விட்டதோட சரி.

16 September 2009

இன்னொரு பில் கேட்ஸ்

ஆடம் ஆஸ்போர்ன் (Adam Osborne) - இவரின் கம்பெனி ஆஸ்போர்ன் கம்பியூட்டர் கார்ப்பரேஷன், 1981 வருடம், ஒரு மாதத்துக்கு, சுமார் 10,000 கம்பியூட்டர் விற்றது. இதே வேகத்தில் இவர் கம்பெனி நடத்தியிருந்தால், இன்று பில் கேட்ஸ் விட பெரிய பணக்காரராக இருந்திருப்பார். இவருடைய கம்பெனி IBM யை விட மிகப் பெரியதாக இருந்திருக்கும்.


ஆனால், 1983 வருடம், ஒரு பார்ட்டியில், இவர் சொன்ன ஒரு தகவலால், சில மாதங்கள் கழித்து கம்பெனி திவால் ஆகிவிட்டது.

அந்த பார்ட்டியில் இவர், இன்னம் சில மாதங்களில், தன் கம்பெனி வெளியிடப்போகும் அடுத்த மாடல் கம்பியூட்டர் பற்றி புகழ்ந்து பேசினார். விளைவு, அப்போது மார்க்கெட்டில் இருந்த “Osborne 1”னை யாரும் வாங்கவில்லை. எல்லோரும், “Osborne 2”க்காக, காத்திருக்க ஆரம்பித்தார்கள். இதனால், ஏற்கனவே தயாரித்துவைத்தது விற்காமல், கம்பெனி மூடப்பட்டது.

அன்று இருந்த கம்பியூட்டர் மார்க்கெட் நிலவரப்படி, இந்த மாதிரி தகவல்களை அவர் சொல்லியிருக்க கூடாது. இப்பொழுது உள்ள நிலை வேறு. பெரிய நிறுவனங்கள், இன்னம் 1 வருடத்திற்கு பிறகு வரும் மாடல் பற்றி தற்போதே சொல்லுகின்றன.

இவர், அதற்கு பிறகு பெரிய அளவில் வர்த்தகத்தில் முன்னேற முடியவில்லை. 2003 ஆம் ஆண்டு, கொடைக்கானலில் மரணம் அடைந்தார்.

திருவள்ளுவர் சொன்ன “நா காக்க” எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.

15 September 2009

பார்க்க கூடாத படம் !

எச்சரிக்கை -1 : கதையல்ல நிஜம்


1982 ஆம் வருடம், நாமக்கல், 30 வீடுகள் கொண்ட பழைய முன்சீப் கோர்ட் தெரு.
இரண்டு சின்ன பசங்க, ஒருத்தன் 8 வயசு, இன்னொருத்தனுக்கு 10 வயசு. தெரு முனையில, சுவத்துல ஒட்டியிருக்குற சினிமா பட போஸ்டர என்ன பண்றாங்கன்னு பார்ப்போம் வாங்க.

அந்த ரெண்டு பேரும் வேற யாரும் இல்லை. நானும், என் 3 வது அண்ணனும் தான். போஸ்டர்ல சென்சார் சர்டிபிகேட் “A” வ, என் அண்ணன் ப்ளேட வெச்சு, வெட்டி எடுத்துட்டான். இதை மேற்பார்வை பார்த்தது நான்.

நானும், அவனும், ரஜினி ரசிகர்கள். எந்த ரஜினி படம் வந்தாலும் எங்கள் அப்பாவிடம் சொல்லி கூட்டி போக சொல்லுவோம். அவரும், மறுப்பு சொல்லாமல் கூட்டி போவார். ஆனால் இந்த படத்திற்கு வீட்டில் தடா போட்டுவிட்டார்கள். காரணம், சின்ன பசங்க பார்க்க தேவையில்லாத படம். அதுனால முடிவு பண்ணி போஸ்டர்ல இருந்த சென்சார் சர்டிபிகேட்ட கட் பண்ணிட்டு ("A" சர்டிபிகேட் தான் காரணம்னு எப்படி முடிவு பண்ணுனோம்னு எனக்குத்தெரியலை. ஆன அந்த வயசுலயே உலக அறிவு எங்களுக்கு அதிகம்) மறுபடியும் அப்பா கிட்ட போய் படம் நல்ல படம்னு சொல்லி கூட்டிக்கிட்டு போக சொல்லி கேட்கலாம்னு ஐடியா.

வீட்டுக்கு போனதும் தான் தெரிஞ்சது, எங்க போஸ்டர் கிழிப்பு வேலைய, எங்க பள்ளிக்கூட வாத்தியார் பார்த்திட்டு, வீட்டுல போட்டுக்குடுத்துட்டார். அப்புறம் என்ன “ஏன்டா !! இஞ்சினியரோட பையன்கள் தெருவுல போஸ்டர் கிழிக்குறாங்கன்னு கேட்குற மாதிரி வெச்சுட்டீங்களே” ன்னு சரி டோஸ் வீட்டுல. கெட்டதுலயும் ஒரு நல்லது என்னன்னா, எங்க வாத்தியார் நாங்க "A" வ வெட்டி எடுக்குறத பார்த்தவர், நாங்க மொத்த போஸ்டரையும் கிழிக்குறதா நினைச்சுட்டார்.

இதனால் அறியப்படுவது என்னன்னா
 • வீடு, ஸ்கூல், வாத்தியார் வீடு, கிழிக்கப்போகும் போஸ்டர் எல்லாம் ஒரே தெருவுல இருக்கக் கூடாது.
 • நம்ம வீடு, வாத்தியாருக்கு தெரியக் கூடாது.
 •  நாம கிழிக்குற போஸ்டர் இருக்குற ஏரியா, நம்ம வீட்டுல இருந்து ரொம்ப தொலைவுல இருக்கணும்.

அப்புறம் என்ன, அந்த படத்தை, ஒரு வருடம் முன்பு (2008)ல் தான் பார்த்தேன். நல்ல படம். ஆனா 8,10 வயசுல பார்க்கத் தேவையில்லாத, பார்த்தாலும் புரியாத படம்.


சரி..சரி..படம் பேர இன்னம் சொல்லலைன்னு பயங்கர கடுப்பில் இருப்பவர்களின் நலம் கருதி சொல்கிறேன்.

ராட்டினம் உணர்த்துவது என்ன ?

ராட்டினத்தில் உட்காரப்போகும் குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா ?. ஏற்கனவே அதில் உட்கார்ந்து, சுற்றிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் பயம் கலந்த சந்தோஷத்தைப் பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு, தானும் அதுபோல விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு.

ராட்டினத்தில் உட்கார்ந்த பிறகு முதல் முறையாக மேல் எழும்போது, உச்சந்தலையில் ஜிவ் என்ற உணர்வு. உயரமான இடத்திற்கு போன உடன் சிறிது நேரம் கூட அங்கு நிற்காமல், உடனே கீழ் நோக்கி பயணம். அப்போது அடிவயிற்றில் ஏற்படும் ஜிவ் என்ற உணர்வு. பல குழந்தைகள், இந்த அனுபவத்தை ரசித்து கைத்தட்டி ரசிக்கும்.
சில குழந்தைகள் பயத்தினால் அழ ஆரம்பித்துவிடும். நடுவிலே கீழே இறங்க தயாராகிவிடும். ராட்டினத்திலிருந்து இறங்கும் இரு விதமான குழந்தைக்கும் சந்தோஷமே மிஞ்சும். சில குழந்தைகள் போதும்டா சாமி என ராட்டினத்தில் ஏறாமலே அந்த இடத்தை விட்டு நகரும். பல குழந்தைகள் உடனே மறுமுறை ஏற ஆர்வம் காட்டும்.

வாழ்க்கையும் அப்படித்தான். வளரும் குழந்தைகளுக்கு வாழ்க்கை ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் புதிர். என்ன இருக்கும் என்ற பரபரப்பு. வாழ்க்கையில் மேல் எழும்போது சந்தோஷம். கீழே வரும் போது வருத்தம். சிலருக்கு இந்த வாழ்க்கையே போதும் என பாதி வழியில் இறங்கி விடுகிறார்கள். பலர், இந்த ஒரு அனுபவம் போதும் என முடிவெடுக்கிறார்கள். ஒரு சிலரே அடுத்த வாழ்க்கைப் பயணத்திற்கு தயாராக இருக்கிறார்கள்.

நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் ???

14 September 2009

வானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.


அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு மலைக்கிராமம். அங்குள்ள பழங்குடி மக்கள், அந்த காட்டுக்குள் இருக்கும் மரங்களை தன் முன்னோர்களாக பார்க்கிறார்கள். இறப்பவர்கள், அந்த காட்டினுள், மரமாக மாறி விடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

அங்கு புதிதாக வரும் பாரஸ்ட் ஆபிஸர், வன விலங்குகளைப் பற்றி ஆவணப்படம் எடுக்கும் அவரின் தம்பி ஆகியோருக்கு, அந்த காட்டில் இருப்பதாக நம்பப்படும், நினைப்பது எதையும் கொடுக்கும், நடமாடும் கற்பக மரத்தைக் காண ஆவல்.

கற்பகதரு மரத்தை அடையாளம் கண்டு கொள்ள, அந்த காட்டுக்குள் இருக்கும், வயதான தோற்றத்தில், சிலர் கண்ணுக்கு மட்டுமே தென்படுகிற வானத்து மனிதர்கள் எனப்படுகிற சித்தர்கள் உதவி வேண்டும்.

இந்த கதைக்களத்தை அற்புதமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் நாகா . மர்மத்தொடர் எடுப்பது இவருக்கு கை வந்த கலை. மர்ம தேசம், விடாது கருப்பு போன்றவை, இவர் இயக்கிய மற்றத் தொடர்கள்.

மர்மத்தொடர் என்றால் பார்ப்பவர்களை, திடீரென எழும்பும் இசை மற்றும், கதாப்பாத்திரங்களின் பயம் கலந்த கதறல் ஆகியவற்றின் மூலம் பயப்பட வைக்க வேண்டும் என்ற வழக்கமான பார்முலாவை தொடாமல், காட்சி அமைப்பு மற்றும் கதை சொல்லும் யுக்தி வழியே, பார்ப்பவர்களின் மனதில் பய உணர்ச்சியை, ஆர்வத்தைக் கிளப்ப வைப்பார்.

 • மூப்பர் என்ற கதாபாத்திரத்தில் 100 வயது கிழவராக பூவிலங்கு மோகன் (பல வாரங்களுக்கு இவர் தான் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அற்புதமான நடிப்பு)
 • சித்த வைத்தியராக சுபலேகர் சுதாகர்
 • வளையல், பொட்டு போன்ற பொருள்களை விற்பவராக ராஜேஷ்வர். என்ன ஒரு இயல்பான நடிப்பு !!
 •  ஆவணப்படம் எடுப்பவராக மோகன் வைத்யா
 • அருமையான, அமானுஷ்யமான, அடர்ந்த, பசுமையான காடு இந்த காட்டிற்காகவே இந்த தொடரைப் பார்க்கலாம்.
 •  மறக்காமல் டைட்டில் இசையைக் கேளுங்கள்.

நாகாவின் பலத் தொடர்கள், RAJSHRI.COM  என்ற இணையதளத்தில் இலவசமாக பார்க்கலாம். வழக்கமான மெகா சீரியல் பார்த்து பாழான கண்களுக்கு இத்தொடர் ஒரு அரு மருந்து.

நாகா இப்பொழுது இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ஒரு திரைப்படம் எடுத்து வருகிறார். காத்திருப்போம்.

13 September 2009

“ஹாய்” என்றாள் அவள்.
லால்பாக் எக்ஸ்பிரஸ் தனது அடுத்த பயணத்தை தொடங்க தயாராக இருந்தது. ரயில் நிலையம் ஒரு தனி உலகம். பல தரப்பட்ட மக்கள். ஒரே தூரத்தை, ஒரே நேரத்தில் கடக்க 10 மடங்கு அதிக பணம் குடுக்கும் சிலர். 5 மணி நேரப்பயணத்திற்கு 90 நாட்களுக்கு முன்பதிவு செய்து, 1 மணி நேரத்திற்கு முன் வந்து காத்திருக்கும் சிலர். 5 நிமிடத்திற்கு முன் வந்து 100 பேர் நிற்கும் வரிசையில் நின்று, டிக்கெட் வாங்கி, முன்பதிவு செய்யப்படாத கோச்சில், பேப்பர் விரித்து தரையில் உட்கார்ந்து பயணிக்கும் சிலர். 2 நிமிடத்திற்கு ஒரு முறை டிக்கெட்டை எடுத்து, நாம் உட்கார்ந்திருக்கும் ரயில், கோச் சரியா எனப் பார்க்கும் பலர். டிக்கெட் பரிசோதகர் வந்து கேட்கும் வரை, டிக்கெட் ஒன்றை தேடாத சிலர். நான் ஒரு கலவை இதில். 90 நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்து, 5 நிமிடத்திற்கு முன் ரயில் நிலையம் அடையும், சிலரில் ஒருவன்.

வழக்கம் போல 5 நிமிடத்திற்கு முன் வந்து, அந்த வார குமுதம் மற்றும் ஜூனியர் விகடனை வாங்கிக் கொண்டு, என் s6 கோச் எங்கிருக்கிறது என தேடத் தொடங்கினேன். "கோச் எங்க இருக்குன்னு தேடுங்க ! இதுக்குத்தான் சீக்கிரம் கிளம்பளாம்னு சொன்னேன். அப்படி என்ன தான் இருக்கோ தெரியலை. கிளம்புற நேரம் வரை நியூஸ் பார்த்துகிட்டு, இப்ப அவசர அவசரமா ஓட வேண்டி இருக்கு. கார்த்திக் கையா புடிச்சுக் கூட்டிக்கிட்டு வாங்க.
நீ மேக் அப் பண்ண 1 மணி நேரம் எடுத்துக்கிட்டு, இப்ப என்னய குறை சொல்லு. நான் எத்தனை பேக் எடுத்துக்கிட்டு, அவனையும் என்னால புடிக்க முடியாது, நீ அவன் கைய புடிச்சுக்கோ. கார்த்திக் !! அம்மா கைய புடிச்சுக்க !! டேய் காமிக்ஸ் வண்டியில போய் உட்கார்ந்த பின்னாடி வாங்கி தர்றேன்டா !! " என்ற டி என்னைத்தாண்டி ஒரு குடும்பம் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தது.

பெரும்பாலும் ரயில் பயணங்கள், பத்திரிக்கை படிப்பதில் போய் விடும். இந்த பிஸ்கட் திருடர்கள் கைவரிசை காட்டத்தொடங்கியதிலிருந்து, சினேகமான புன்னகைகள் குறைந்து போயிருந்தது. இவன், அவர்களில் ஒருவனோ? என்ற பார்வைகளை, குமுதத்தில் தலை நுழைத்து தவிர்த்து வந்தேன்.

ஹும்..இந்த தடவையும் ஜன்னலோர சீட் கிடைக்கவில்லை. ஓர சீட்டில் உள்ள பிரச்சினை, அடிக்கடி எழுந்து மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். சிலர் நம் கால்மேல் நடப்பார்கள்.

ஏம்பா, கொஞ்சம் காலை எடுத்துக்கிட்டா, அந்த பக்கம் போக வசதியா இருக்கும் என்ற கோரிக்கைகள், சற்று கண்ணயரும் போது வந்து, தூக்கத்தைக் கெடுக்கும்.

சார், பிளீஸ், இந்த டீய அவங்ககிட்ட கொடுங்க என்ற குரலுக்கு செவி சாய்த்து, சூடான டீயை, சின்ன கப்பில், நடுங்கும் கைகளால், அதனிடத்தில் சேர்க்க வேண்டும்.

இந்த பிரச்சினைகளினால் பெரும்பாலும், பயணத்தில் பாதி கதவோரம் நின்று கொண்டே கழியும். வேற வழியில்லை, இன்றைக்கும், கதவோரம் போய் நிற் வேண்டியதுதான்.

ரயில் வேகமெடுக்கத் தொடங்கியிருந்தது. காற்று முழுவேகத்தில் முகத்தில் அறைந்தது. நாளை, சனிக்கிழமையாதலால், எல்லா சீட்டும் நிறைந்திருந்தது. சூடான பஜ்ஜி விற்க தொடங்கியிருந்தார்கள். கேண்டீன் போய் 2 பஜ்ஜியை உள்ளே தள்ளிவிட்டு (சாதரண நாட்களை விட பயணம் செய்யும் போது பசி அதிகரிப்பது ஏன் எனத்தெரியவில்லை), கதவோரம் வந்து நின்றேன். எல்லா சீட்டுகளில் உள்ளவர்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த 4 வது வரிசையில், என்னைப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த பெண்ணின் மேல் பார்வை நின்றது. 20 வயது இருக்கும்.
 
காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்த முடிகளை விலக்கும் போது, அவள் போட்டிருந்த வட்டமான காதணி நன்கு தெரிந்தது. அது என்னவோ தெரியவில்லை, அந்த வட்ட வடிவமான, பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளான, காதணி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த நீளமான முகத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தது. தோள் வரை நீண்டிருந்த, பின்னலிடாத முடி, அவளை மேலும் அழகாக்கியது. ரோஸ் கலர் சுடிதார் அவள் கலருடன் போட்டி போட்டது.

மெலிதான மையிட்ட அலைபாயும் கண்கள், தனக்கு முன் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் அடிக்கடிப் பேசி சிரிக்கும் போது, அந்த பல் வரிசை, அந்த கன்னத்தில் விழும் சிறு குழி, அந்த சிரிப்பை அழகாக்கியது. அவளையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது நன்றாகவும் இருக்காது. சிறு இடைவெளி விட்டு விட்டு, எல்லோரையும் பொதுவாக பார்ப்பது போல பார்க்க வேண்டியிருந்தது. இரண்டொரு முறை, அவளும் என்னைப் பார்த்தாள். அது பொதுவான பார்வை மாதிரிதான் இருந்தது.

ரயில் அரக்கோணம் சந்திப்பில் நின்றது. கதவருகில் நின்றதால், இறங்கினேன். அவளும் இறங்குவாளா ?. ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அந்த பக்கமாக போவதைப் போல போய் அவளை அருகில் பார்த்திருக்கலாம். இந்த யுக்தி தோன்றாமல் போய்விட்டது. பரவாயில்லை, இன்னமும் 3 மணி நேர பயணம் மீதி இருக்கிறது. ஒரு வேளை, அவள் பாதியில் இறங்கிவிட்டால் ?.


அவள் இறங்குமிடம், பயணிகளின் பட்டியல் பார்த்தால் தெரிந்துவிடும். சீக்கிரம் பார்க்க வேண்டும் இல்லையென்றால் மற்றவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள். அவசர அவசரமாக பட்டியலில் வயதுகளை பார்த்தவாறே தேடத்தொடங்கினேன். இதோ இருக்கிறது, s6 - 56, வயது நான் நினைத்ததை விட 1 அதிகம், 21. பேர் ஆர்த்தி. ஆர்த்தி அழகான பெயர். ரயில் மறுபடியும் புறப்பட, ஏறிக்கொண்டேன்.

அவள் இப்போது எதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். சே ! அந்த பக்கம் போகலாம் எனப்பார்த்தால், அரக்கோணத்தில் ஏறியவர்கள், பலர் வழியில் நின்று கொண்டிருந்தார்கள். ரிசர்வேசன் கோச்சில் எப்படி இவ்வளவு பேர் ஏறினார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. சரி கொஞ்சம் நேரம் போகட்டும். பக்கத்திலிருந்து பார்த்து என்னாகப் போகிறது ?. என் சீட்டில் போய் உட்காரலாம் என்றால், அங்கிருந்து பார்க்க முடியாது. அதனால், ஏங்க என் சீட்டுல நீங்க உட்காருங்க என சீட்டைத் தாரை வார்த்து விட்டு மறுபடியும் கதவருகில் நின்றேன்.

இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அவள் சற்றே கண்ணயர்ந்திருந்தாள். அப்பொழுது, லேசாக அடித்த சாரல் தோய்ந்த ஈரக்காற்று, முகத்தில் பட, நின்று கொண்டிருந்த எனக்குப் பக்கத்தில், சூர்யா நின்று கொண்டு நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடுவது போல இருந்தது. இந்த பயணம், தொடர்ந்து கொண்டே இருக்காதா ?, அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோமா ? என்ற எண்ணம் ஏற்பட்டது.

ரயில் பெங்களுரை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அவள் இறங்கிச் சென்று விடுவாள் என்று ஏக்கமாக இருந்தது. இது என்ன பைத்தியக்காரத்தனமான சிந்தனைகள் ?. இன்னம் 10 நிமிடத்தில், நான் யாரோ, அவள் யாரோ. அவளை மறுமுறை தன் வாழ்நாளில் பார்ப்பது கூட உசிதமில்லை. அப்படி இருக்க, ஏன் இந்த மாதிரி மெல்லிய சோகம் மனதைக் கவ்வுகிறது ?. சரி இனியும் பொருப்பது சரியில்லை. கடைசி முறை அவளை அருகில் இருந்து பார்த்துவிட வேண்டும். என் பேக்கை எடுத்துக் கொண்டு, மெதுவாக அவளை நோக்கி நடந்தேன். நெருங்க நெருங்க இதயம் படபடக்கத் தொடங்கியது. 5 மணி நேரமாக பார்த்தவளை, இன்னமும் சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும். அவளும், தனது பேக்கை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளருகே வந்தாயிற்று.

என்னை யாரே தொடுவது போல இருந்தது. திருமப எத்தனிக்கும் போது, டேய்!! அருண் நீயும் இந்த ட்ரெயின்ல தான் வர்றியா ? இவ்வளவு நேரம் பார்க்கவேயில்லை எனக் குரல் கேட்டது. அட பெரியம்மா !! ”ஆஹா !! அவளுக்கு எதிர்த்தார்ப் போல உட்கார்ந்திருந்தது பெரியம்மாவா ? 5 மணி நேரம் வேஸ்டாப் போச்சே !!”.

இங்க உட்காருடா !! என்னடா இப்படி இளைச்சுப் போய்ட்ட ? இவள பார்த்திருக்கியா ? இவ ஆர்த்தி, நம்ம விமலா இருக்கா இல்ல ? என்னடா இப்படி முழிக்குற, விமலா நம்ம தூரத்து சொந்தம்டா உனக்கு சித்தியாகனும், இவ அவளோட பொண்ணு

ஆர்த்தி என்னைப்பார்த்துஹாய்என்றாள்.