26 September 2009

ரத்தத்துளிகள் - துப்பறியலாம் வாங்க.


பிரிட்டனில் உள்ள ஒரு  கிராமத்தில் இருந்தவர்கள் ஜான், மேரி. ஜானுக்கு தொழில் விவசாயம். அமைதியான வாழ்க்கை.

ஒரு நாள் மேரி பக்கத்து நகரத்துக்கு போவதற்காக, காரில் ஏறி, இஞ்சினை ஸ்டார்ட் செய்ததும் ...பூம் !!!...கார் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு ஓடி வந்த ஜான், மேரி பலத்த தீக்காயங்களுடன் தரையில் தூக்கி வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மருத்துவமனையில் சேர்த்த பின் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் யார் இந்த பாம் வைத்தது ?. யார் அவருக்கு எதிரி ?. போலீஸ் விசாரணையில் அந்த பாம் துப்பாக்கித் தோட்டாக்களில் இருந்த வெடி மருந்துப் பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சீட்டுக்கு அடியில் பொருத்தப்பட்டிருந்ததால், கொலையாளியின் நோக்கம், காரை ஒட்டுபவரைக் கொல்வது. போலீஸ் விசாரணையில் ஜான் கையைக் காட்டியது, பக்கத்து வீட்டுக்காரரான டேவிட்டை. ஜானுக்கும் டேவிட்டுக்கும் இடையில் வேலி பிரச்சினை இருந்தது, அதன் பொருட்டு சில நேரம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் டேவிட் இந்த குற்றத்தை செய்யவில்லையென நிரூபணமாகியது.

இந்நிலையில் ஒரு நாள் விடியற்காலையில், வீட்டுக் கதவை திறந்த ஜானுக்கு அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருந்தது.

வீட்டு வாசலில், வெட்டப்பட்ட ஒரு ஆட்டின் தலை மாட்டியிருந்தது. கூடவே “அடுத்தது நீ தான்” என்ற எச்சரிக்கை கடிதம். இதனைத் தொடர்ந்து மேலும் மிரட்டல் கடிதங்கள் வரவே, ஜானுடைய பாதுகாப்புக்காக சில போலீஸ்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள். நாட்கள் ஓடியது. இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 30 ஆம் தேதி, 1984ஆம் வருடம், போலீசுக்கு போன் வந்தது. பேசியது ஜான். “என்னை பக்கத்து வீட்டு டேவிட் கத்தியால் கொல்ல வந்தான். வேறு வழியில்லாமல், தற்காப்புக்காக, டேவிட்டை சுட்டுக் கொன்றுவிட்டேன்.” 


வீட்டுக்கு வந்து சேர்ந்த போலீஸார், வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வீடு முழுவதும் சொட்டு சொட்டாக ரத்தம். முன்னறையில் டேவிட், தோட்டா காயத்துடன் செத்துக்கிடந்தார். கையில் கத்தியிருந்தது. ஒரு பெரிய சண்டை நடந்த தடயங்களாக, அங்கு இருந்த சேர், டேபிள் முதலானவை கவிழ்ந்து கிடந்தது. ஜான், வீட்டு சமையலறையின் பக்கத்தில் இருந்த வாஷ்பேசினில் தலையை சாய்த்தவாறு கிடந்தார். பக்கத்தில் அவரின் துப்பாக்கியிருந்தது. உடல் முழுவதும் ரத்தம். கைகளில் காயம் எதுவும் இல்லை, ஆனால் இடுப்பின் இடது முனையில் இருந்து குறுக்கே வலது தோள்பட்டை வரை ஒரு பெரிய கத்தி வெட்டு, முகத்தில் வாயில் இருந்து காது வரை வெட்டப்பட்டு, பார்க்கவே கொடூரமாக இருந்தது. பிறகு மருத்துவமனையில் 80 தையல் போடப்பட்டது என்றால் எந்த அளவுக்கு பெரிய காயமாக இருக்கவேண்டும் என கற்பனை செய்துகொள்ளுங்கள் (இப்பொழுது ஜானின் புகைப்படத்தை மறுபடியும் பாருங்கள், குறிப்பாக அவரது வலது காதிலிருந்து வாய் வரை உள்ள தழும்பு).

“என்ன நடந்தது ?”
“அன்று இரவு, என் மனைவி வெளியே போயிருந்தாள். அப்பொழுது பக்கத்து வீட்டு டேவிட் என்கிட்ட பேசனும்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வந்தார். நான் போலீஸ்கிட்ட அவரைப் பற்றி ஏன் புகார் குடுத்தேன்னு கேட்டு சண்டை போட்டார். ஒரு கட்டத்துல அவர் கத்திய எடுத்து என்னை தாக்க ஆரம்பிச்சுட்டார்”

”அவர் உங்களை தாக்கும் போது நீங்க  தடுக்க முயற்சி பண்ணுனீங்களா ?”.

ஆமாம், அவர்கிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்க எவ்வளவோ முயற்சி பண்ணுனேன் ஆனா அது முடியாம, என்னோட உடம்புல இவ்வளவு நீளத்துக்கு கீறிட்டார், என் முகத்துலயும் குத்திட்டார். அப்போ நான் தட்டு தடுமாறி பக்கத்து ரூம்க்கு ஓடிப்போய் என் துப்பாக்கிய எடுத்து சுட்டேன்”

போலீஸ் வீட்டை முழுவதுமாக சோதனை செய்து பல தடயங்களை சேகரித்தார்கள். ஜான் சொன்னது மாதிரியே வீடு முழுவதும் ரத்த காயங்களுடன் ஒடியதில், ரத்தம் பல இடங்களில் தெறித்திருந்தது. தடயவியல் நிபுணர்கள் நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னது

“ஜானை அரெஸ்ட் பண்ணுங்க. ”என்னென்ன தடயங்களை வைத்து ஜானை குற்றவாளி என சொன்னார்கள் ?

முதலாவதாக, சம்பவ இடத்தை பார்வையிட்ட, ரத்தங்கள் உண்டாக்கும் வடிவங்களை பற்றி படித்த நிபுணர்கள், வீட்டிலிருந்த ரத்த துளிகள் மேலே படத்தில் உள்ள சாம்பிள் A மாதிரி உருண்டை வடிவில் இருந்தது என்பதை பார்த்தார்கள். இந்த மாதிரி வடிவம் இருந்தால், ரத்தம் உடலிலிருந்து வரும்போது அந்த நபர் ஓரிடத்திலேயே நின்றிருக்கிறார் என்பது உறுதி. அப்படி இல்லாமல் சாம்பிள் B மாதிரி இருந்தால், அந்த நபர் ரத்தம் வடியும் போது நடந்து/ஓடிக் கொண்டிருக்கிறார் என்பது உறுதி. சாம்பிள் B-ல் உள்ள ரத்தம் உண்டாக்கிய வால் போன்ற வடிவம் முக்கியமானது. அதை வைத்து, அந்த நபர் எந்த வேகத்தில் நகர்ந்திருக்கிறார் எனக் கண்டுபிடிக்கலாம். இதன் மூலம், ஜான் சொன்னது போல, அவன் டேவிட்டிடம் இருந்து விலகி ஓடிக்கொண்டிருக்கவில்லை என்று முடிவு செய்தனர். ஜான்,  தன்னை தானே அறுத்துக்கொண்டிருக்கிறான்.

இரண்டாவதாக, டேவிட்டின் கையிலிருந்த ஜான் ஜோடனை செய்த கத்தியில், டேவிட்டின் ரத்தம் கொஞ்சம் கூட இல்லை. ஆனால், அவரில் கை முழுவதும் அவர் ரத்தம் இருந்தது.இதை வைத்து, ஜானை டேவிட் தாக்கவில்லை என முடிவு செய்தனர்.கத்தியை ஜான், டேவிட் இறந்தபிறகு வைத்திருக்கிறான்.

மூன்றாவதாக, ஜானின் கையில் கத்தியினால் ஏற்பட்ட எந்த காயமும் இல்லை. ஒருவன் நம்மை தாக்க வரும் போது, நம்மையறியாமல், நம் கைகள் தடுக்க முயற்சிக்கும். அப்படி ஜான் செய்திருந்தால், கண்டிப்பாக அவன் கைகளில் காயம் இருந்திருக்க வேண்டும். இதன் மூலம் ஜான் சொன்னது பொய் என நிரூபித்தனர்.

நான்காவதாக, ஜானின் உடலிலிருந்த காயத்தை பார்த்த டாக்டர்கள் “அவன் உடலில் இருந்த காயம் ஒரு நேர் கோட்டை, இடது இடுப்பிலிருந்து வலது தோள் பட்டை வரை வரைந்த மாதிரி இருக்கிறது. ஒருவனை கத்தியால் காயப்படுத்தும் போது, அவன் கண்டிப்பாக அசைவான். அப்படி அசைந்திருந்தால், இந்த மாதிரி நேர் கோடு போட்டது போல காயம் இருக்காது. அதனால், ஜானே, தன்னை கத்தியால் கிழித்திருக்கிறான்.”
மேலும், வீட்டின் வாஷ் பேஷினிடம் தேங்கியிருந்த ரத்தத்தின் அளவை வைத்து, ஜான், அதன் அருகில் நின்று தன்னை காயப்படுத்திக் கொண்டிருக்கிறான் எனக் கண்டுபிடித்தனர்.

ஐந்தாவதாக, தரையில் கவிழ்ந்துகிடந்த டேபிளுக்கு கீழே ரத்த துளிகள், சம்பவம் நடந்தபிறகு டேபிளை, ஜான் கவிழ்த்திருக்கிறான் என உணர்ந்தனர்.

ஆறாவதாக, டேபிளில் ரத்தக்கறையை பார்த்தார்கள். அது ஜானுடையது. ஆனால், அவன் டேவிட்டை சுட்ட துப்பாக்கியில், ரத்தக்கறை எதுவும் இல்லை. இந்த ஆதாரம், டேவிட், ஜானை தாக்குவதற்கு முன்பே, ஜான், டேவிட்டை சுட்டிருக்கிறான் என்பதை உறுதி செய்தது. நடந்தது என்னவென்றால், ஜான், டேவிட்டை, பேசவேண்டுமென வீட்டுக்கு கூட்டி வந்து, எதிர்பாராத தருணத்தில், சுட்டுக் கொன்றிருக்கிறான்.

ஜட்ஜ்க்கு இத்தனை ஆதாரம் போதுமானதாக இருந்தது. இரண்டு ஆயுள் தண்டனை, அவன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும், ஜெயிலில் கழிக்கப் போவதை உறுதி செய்தது. நீங்கள் இதை படிக்கும் போது, அவன் பிரிட்டனில் உள்ள ஒரு ஜெயிலில், தான் தப்பு தப்பாக செய்த தப்பை எண்ணி வருந்திக்கொண்டிருப்பான்.

இவ்வளவும் எதற்காக செய்தான் ?. பணம் !!!. அவன் பெரிய பணப்பிரச்சினையிலிருந்தான். அதிலிருந்து தப்பிக்க, தன் மனைவியைக் கொல்வதன் மூலம் கிடைக்கும் இன்ஸீரன்ஸ் பணத்தை உபயோகிக்க நினைத்திருந்தான். ஆனால், பாம் வெடித்ததில், தன் மனைவி தப்பியது பெரும் பிரச்சினையாக இருந்தது. அதனால், மிரட்டல் கடிதங்களை தனக்கு தானே அனுப்பி, பக்கத்து வீட்டுக்கார டேவிட்தான் மேரியைக் கொல்ல திட்டம் போட்டார் எனப் பொய்யாக நிரூபித்து, டேவிட்டை தீர்த்துக் கட்டுவதன் மூலம், டேவிட்டை குற்றவாளியாக ஆக்கிவிடலாம் என நினைத்ததின் விளைவு, இந்த கொலை, மற்றும் அதனைத் தொடர்ந்த நாடகம். ஒரு குற்றத்தை மறைக்க அவன் இன்னொரு குற்றத்தை உபயோகிக்க நினைத்தது தவறாக போய்விட்டது.

இந்த கேஸில், ரத்தத்தை ஆராயும் நிபுணர்கள் மற்றும் குற்றம் நடந்த இடத்தை ஆராய்ச்சி செய்யும் தடயவியல் நிபுணர்கள் பெரும் பங்குவகித்தனர்.

4 பின்னூட்டங்கள்:

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

நண்பர் பின்னூக்கி பட்டய கிளப்பிட்டீங்க பாஸ். நல்ல விவரிப்பு.டாகுமெண்டரி பார்தாமாதிரி இருந்ததுங்க.
இவ்வளவு உழைப்புக்கு பலன் உண்டு
ஓட்டுக்கள் போட்டாச்சு

பின்னோக்கி said...

நன்றி கார்த்திக். இந்த பதிவு பெரியதாக இருந்தது. ஆனால் என்னால் சுருக்க இயலவில்லை ஏனெனில், இந்த தொடரின் நோக்கமே, சின்ன சின்ன தடயங்களை குற்றவாளிகள் எப்படி விட்டுச் சென்றார்கள் அதை போலீசார் எப்படி கண்டுபிடித்தனர் என்பது தான். அதனால் அனைத்து தடயங்களையும் நுணுக்கமாக விவரிக்க வேண்டியிருந்தது. தாங்கள் இவ்வளவு பெரிய பதிவை படித்து ரசித்ததற்கு நன்றி.

தோழி said...

excellent and very interesting to read. Keep introducing more.

செ.சரவணக்குமார் said...

நல்லா எழுதியிருக்கீங்க நண்பா. விறுவிறுப்பான தொகுப்பு.