24 September 2009

ஹைய்யா .. போத்தீஸ் போய்ட்டு வந்துட்டேன்...


கடந்த ஞாயிற்றுக்கிழமை, தீபாவளிக்கு துணி எடுக்கலாம் என போத்தீஸ் போனேன். இது வரை நான் போத்தீஸ் போனது கிடையாது. ஆனால் என் மனைவியின் வற்புறுத்தலுக்கு (கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல..போத்தீஸ் போய் துணி எடுக்குற ஆசைய கூட நிறைவேத்த மாட்டேங்குறீங்க..அந்த கடையில நிறைய புது டிசைன் வந்துருக்காம்..அண்ணி சொன்னாங்க...) மறுப்பு சொல்ல இயலாமல், சென்றேன். எனக்கு கூட்டத்தைக் கண்டால் அலர்ஜி. கோவிலுக்கு போகும் போது கூட கூட்டமில்லாத கோவிலுக்கு போகவே விரும்புவேன்.

ஆட்டோவை (காரில் டி.நகர் போக பயம்..ஒரு தடவை பார்க்கிங் கிடைக்காமல், பாண்டி பஜாரை சுற்றி வந்து, என் வீட்டுக்கு அருகில் தான் கடைசியில் பார்க்கிங் கிடைத்தது :-) ) விட்டு இறங்கிய உடன், போத்தீஸ் கூட்டத்தை பார்த்து மிரண்டு, அரண்டு போனேன். வைகுண்ட ஏகாதேசியன்று, சொர்கவாசல் திறக்கும் போது மக்கள் அலை மோதுவது போல ஒரே கூட்டம்.

போத்தீஸ் வாசலில் ஒரு பெரிய கூட்டம் கன்னத்தில் கைவைத்து, குவியல் குவியலாக வாங்கிய துணியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.  வாசலில் போய் நின்றோம்.  கூட்டமே எங்களை கடைக்குள் தள்ளி விட்டது. எனக்கு சந்தேகமாகிவிட்டது, ஒரு வேளை இன்றைக்கு எடுக்குற துணியெல்லாம் இலவசமா ?..அதுக்கு தான் மக்கள் இவ்வளவு குவிந்திருக்கிறார்களா ?. கூட்டத்தில் சின்ன குழந்தைகள் மாட்டி கொண்டு கதறின. பெரியவர்கள், குழந்தையின் முகத்தில், தங்களில் கை பட்டு அவர்களுக்கு வலிக்குமே என்ற கவலையின்றி இடித்துக் கொண்டு போனது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு தீ விபத்து என்றால் மக்கள் என்ன பதட்டத்துடன் தங்கள் உயிர் காக்க பரபரப்பாக ஓடுவார்களோ, அதைவிட மோசமான அவசரத்துடன் ஓடிக்கொண்டிருந்தனர்.

இருந்த 2 லிப்ட்டுக்காக (குழந்தைகள் துணி இருப்பது 3 வது மாடியில்.. பட்டு புடவை முதல் தளத்தில். என்ன யோசனையில் இந்த மாதிரி வடிவமைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.)  60 பேர் காத்திருந்தனர். லிப்ட் வந்தவுடன், என் மனைவி மற்றும் மகன் உள்ளே செல்ல, நான் போக எத்தனிக்கையில் சில பெண்கள் என்னை முந்திச்செல்ல, அவர்கள் மேல் இடிக்க பயமாக இருந்ததால் (எதுக்கு பெண்ணுரிமை வாதிகளிடம் அடி வாங்கனும்..? சொல்லுங்க), நான் பின் தங்க, லிப்ட் மேலேறியது. என் குடும்பத்தை தற்காலிகமாக பிரித்த புண்ணியத்தை போத்தீஸ் கூட்டம் தேடிக்கொண்டது.

பிறகு 3 மாடி ஏறி என் குடும்பத்துடன் இணைந்தேன். என் மனைவி மிரண்டுவிட்டார்.

“என்னங்க இவ்வளவு கூட்டமா இருக்கு..நான் இத எதிர்பார்க்கலை...”
“நான் வேண்டாம்னு சொன்னத இப்பவாவது புரிஞ்சுகிட்டியா...?”
”வேண்டாங்க வீட்டுக்கு போய்டலாம்...நான் புடவைக்கார அண்ணாவை வீட்டுக்கு வர சொல்லி எனக்கு சாரீஸ் எடுத்துக்குறேன்”
“அப்பா !!..i want blue color t-shirt"

வேறு வழியில்லாமல், ஒரு துணி எடுத்துவிட்டு எஸ்கேப் ஆனோம்.

யோசித்து பார்க்கையில், போத்தீஸ், சரவணா ஸ்டோர் போன்றவை, சென்னையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக, வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பார்க்க விரும்பும் இடங்களாக மாறி நிறைய வருடங்களாகி விட்டன. வெளியூரிலிருந்து வரும் என் உறவினர்கள் பலர் கேட்கும் முதல் கேள்வி..
”எப்ப, எப்படி போத்தீஸ், சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன் சில்க்ஸ் போகலாம் ?.”
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க என்ன பண்ணுங்க..நான் ஒரு ஆட்டோ புடிச்சுக் கொடுக்குறேன்..அதுல போய்ட்டு வந்துடுங்க”

சில மாதங்களுக்கு முன் சரவணா ஸ்டோரில் நள்ளிரவு தீ விபத்து நடந்தது. அதற்கு பிறகு இந்த மாதிரி கடைகளில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் எனத்தெரியவில்லை. இது நான் கடைக்கு உள்ளே இருக்கும் போது யோசிச்சது.  நல்ல நேரம் பார்த்த இத யோசிக்குறதுன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது.

கூட்டம் அதிகமா இருக்குன்னு புலம்பறத விட, கூட்டம் கம்மியா இருக்குற கடையில போய் துணி எடுக்கறது தான் சரின்னு புரிஞ்சுகிட்டேன்.

13 பின்னூட்டங்கள்:

சந்தனமுல்லை said...

:-)
/
கூட்டம் அதிகமா இருக்குன்னு புலம்பறத விட, கூட்டம் கம்மியா இருக்குற கடையில போய் துணி எடுக்கறது தான் சரின்னு புரிஞ்சுகிட்டேன். /

உண்மைதான்!

Mohan said...

எனக்கும் கூட இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டிருக்கு.ஆனால், எல்லாருமே கூட்டம் குறைவாக இருக்கிற கடைக்கு போக ஆரம்பிச்சுட்டா,எல்லா கடையுமே கூட்டமாக இருக்குமே :-)

பின்னோக்கி said...

Mohan அப்ப நாம..இன்னம் கூட்டம் குறைவா இருக்குற கடைய தேடனும் :-)

நட்புடன் ஜமால் said...

கூட்டம் அதிகமா இருக்குன்னு புலம்பறத விட, கூட்டம் கம்மியா இருக்குற கடையில போய் துணி எடுக்கறது தான் சரின்னு புரிஞ்சுகிட்டேன்]]

இது தான் உண்மை ...

அமுதா said...

/*கூட்டம் அதிகமா இருக்குன்னு புலம்பறத விட, கூட்டம் கம்மியா இருக்குற கடையில போய் துணி எடுக்கறது தான் சரின்னு புரிஞ்சுகிட்டேன். */
ம்... நானும் ரொம்ப நாளா இந்த டி.நகர் பக்கமே போறதில்லை

geethappriyan said...

கலக்கல் பதிவுங்க, நய்யாண்டியை நன்கு ரசித்தேன்.
எங்க வீட்டுலயும் எவ்வளவு வாங்கி குடுத்தாலும் சரவணா ஸ்டோர்ஸ் போகனும்னே சொல்லுவாங்க.

டீ நகரில் எந்த பெரிய துணி, நகை கடையுமே தீவிபத்து கால திட்டமிடுதல் மற்றும் பார்க்கிங் வசதி , ஒழுங்கான கழிப்பிட வசதி கொண்டது இல்லை.
லைஃப் ஸ்டைல் ,க்லோபஸ் போகலாம்.

லீவில் வரும்போது எனக்கு இந்த கடைகளுக்கு போக இப்போதெல்லாம் பயமே.

அத்திரி said...

எப்படியோ எஸ்கேப் ஆயிட்டீங்க

மாதேவி said...

ஒளி விளம்பரங்கள் ஏற்படுத்தும் மயக்கம்தான் இவை.

Muruganandan M.K. said...

எனக்கும் கூட்டம் என்றால் அலர்ஜிதான். நல்ல காலம் எனது மனைவி துணிக்கடைக்கு என்னைக் கூட்டிப் போவதில்லை தப்பித்தேன்.
"ரில் டி.நகர் போக பயம்..ஒரு தடவை பார்க்கிங் கிடைக்காமல், பாண்டி பஜாரை சுற்றி வந்து, என் வீட்டுக்கு அருகில் தான் கடைசியில் பார்க்கிங் கிடைத்தது" போன்ற வல வரிகள் கலக்கலாக உள்ளன. ரசித்தேன்.

பின்னோக்கி said...

மாதேவி - விளம்பரங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்பதை மறுக்க இயலாது.
Dr.எம்.கே.முருகானந்தன் - வீட்டுக்கு அருகில் இல்லையென்றாலும், 1 கிலோமீட்டர் தொலைவில் கார் பார்க் பண்ணியது உண்மை :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல படியா போய்ட்டு வந்திட்டீங்க.
நையாண்டித்தனம் + சமூக அக்கறை
இரண்டும் இரண்டறக் கலந்திருந்தது.

போத்தீ'ஸ் ஃபோட்டோவெல்லாம்
போட்டு இலவச விளம்பரம்...

ஜோதிஜி said...

இல்லை பின்னோக்கி, ஒரு தடவை சென்னை வந்த போது சரவணா ஸ்டோர் விரும்பி உள்ளே போனேன். என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். விலை, தரம், உள்ளே உள்ள அமைப்பு, குழந்தைகள் விருப்பம், மனைவி விருப்பம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். என் அம்மா எடுத்து வந்த பட்டுப்பாவாடை விலையை இன்று வரையில் நம்ப மாட்டேன் என்கிறார். ஒரு முறை திருப்பூர் சென்னை சில்க்ஸ் வந்து பார்த்தீர்கள் என்றால் என்ன அக்கிரமம் என்று உங்களுக்கு புரியும். இருக்கு ஒரு திட்டம். என்று அமையுமோ? அறிவுத் தேடல் சொன்னதும் உண்மை. என்னுடைய இன்றைய மூட் அவுட் போயே போயிந்து

Prathap Kumar S. said...

போத்தீஸ் போய்ட்டு துணிவாங்கிட்டு வர்றது உண்மையிலேயே பெரிய சாதனைதான்.
எங்கிருந்துதான் இவ்வளவு கூட்டம் வருதுன்னு தெரியாது... இதுக்கு அதோட எதிர்ல இருக்கற ஆர்கேவி-ல் போய் எடுக்கலாம் கூட்டம் சுமாராத்தான் இருக்கும்... செலக்ஷனும் நல்லாத்தான் இருக்கும்...