15 April 2010

நம்மால் முடியும் !!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முக்கியமான நாள் இன்று. அணுகுண்டு சோதனை நடத்தியதையடுத்து, இந்தியாவுக்கு க்ரையோஜெனிக் ராக்கெட் இன்ஜின் தொழில் நுட்பத்தைத் தர சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மறுத்து விட்டது. திறமையானவர்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில், நம்மவர்கள் முயன்று அந்த இன்ஜினை வடிவமைத்து விட்டனர்.

தகவல் தொழில்நுட்பத்திற்கு உதவும் செயற்கைக் கோள்கள் 36,000 கிலோமீட்டர் உயரத்திற்கு செலுத்தப்படவேண்டும். அதற்கு க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் இன்றியமையாதது.

இன்று அந்திசாயும் வேளையில், GSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அது வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். கிரிக்கெட் மற்றும் போர் சமயத்தில் மட்டும் காட்டும் தேசபக்தியை, இந்த அறிவியல் தொழில் நுட்பம் வெற்றியடைய வேண்டும் என்பதிலும் காண்பிப்போம்.

All the Best ISRO.

தற்போதைய செய்தி

ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ராக்கெட் கிளம்பி 500 விநாடிகள் கழித்து, அதில் இருந்து தகவல்கள் வரவில்லை. இந்த முயற்சியின் மூலம் விஞ்ஞானிகள் கற்றது, அடுத்த முயற்சியை வெற்றியடையச் செய்ய வேண்டும். நம்புவோம்.

14 April 2010

தனி வீட்டில் - துப்பறியலாம் வாங்க

சிறிது நேரத்திற்கு முன் பெய்த மழை வீட்டைச் சுற்றிலும் இருந்த மண்ணைச் சேறாக்கியிருந்தது. வீட்டின் உள் அறையில் டேவிட் உறங்கிக்கொண்டிருக்கும் போது, டேவிட்டின் மகன் ஜான், ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அருகிலிருந்த சோபாவில் ஜானின் தம்பி மேத்யூஸ் தூங்கிக்கொண்டிருந்தான்.

பின்னிரவு நேரத்தில், இடி இடிக்கும் ஓசைக்கு நடுவில் கேட்ட துப்பாக்கி சத்தத்தில் ஜான் அதிர்ந்து போனான். அப்பா உறங்கும் அறையிலிருந்து அந்த சத்தம் வந்தது. என்ன செய்வது ?. அறையின் உள்ளே சென்று பார்க்கலாமா ? ஒருவேளை, திருடன்/கொலைகாரன் அங்கே இருந்தால் என்ன செய்வது ?. அறைக்கதவைத் திறக்கப் பார்த்தபோது, உள்ளே தாழ்பாள் போட்டிருப்பது தெரிந்தது. வேறு வழியில்லை போலீசுக்கு போன் செய்யவேண்டியதுதான். அதற்கு முன், மேத்யூஸை பக்கத்து வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும். அனுப்பினான். அதற்குப் பின் போலீசுக்கு போன் செய்தான்.

“ஹலோ ! என் பெயர் ஜான். என் அப்பா தூங்கிக் கொண்டிருக்கும் அறையில், துப்பாக்கி சத்தம் கேட்டது”
“பதப்படாதீர்கள் !. உங்களையும், உங்கள் அப்பாவையும் தவிர வேறு யார் உங்கள் வீட்டில் இருக்கிறார்கள் ?”
“என் தம்பி இருக்கிறான். அவனைத் துப்பாக்கி சத்தம் கேட்டதும், பக்கத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டேன்”
“வீட்டினுள் நுழைந்தவன், இப்பொழுது அந்த அறையினுள் இருக்கிறானா ? “
“ அது தெரியவில்லை. சீக்கிரம் போலீசை அனுப்புங்கள்.”

போலீஸ் வந்த போது எல்லாம் முடிந்திருந்தது. எதிர்பார்த்தது போல டேவிட், தலையில் சுடப்பட்டு, கட்டிலில் சரிந்திருந்தார். வீட்டை முழுவதுமாக ஆராய்ந்ததில், கொலைகாரன், டேவிட் படுத்திருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை, பெரிய கல் ஒன்றினால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்திருப்பது தெரிந்தது. கல் அறையின் உள்ளே கிடந்தது. விசாரணைக்காக, ஜானின் உடைகள் சேகரிக்கப்பட்டது.

டேவிட்டின் எதிரி யாராவது இருக்கிறார்களா ?. அவர் வக்கீலாக பணிபுரிந்தவர். மிக ’நல்லவர்களுக்கு ?!’ மட்டுமே ஆஜராகக் கூடியவராக இருந்ததால், யார் வேண்டுமானாலும் இந்தக் கொலையை செய்திருக்கலாம்.

டுத்தது, ஜன்னலை உடைக்க உதவிய கல். முதல் மாடியில் இருந்த ஜன்னலை உடைக்க, தரையிலிருந்து அதை எறிந்திருக்க வேண்டும் என முடிவு செய்தார்கள். கல்லின் எடையைப் பரிசோதித்ததில், அவ்வளவு உயரத்திற்கு எறிவதற்கு ஒருவனால் முடியாது என்பதை உணர்ந்தார்கள். கல்லின் எடையையும், தரையிலிருந்து ஜன்னல் இருந்த தூரத்தையும் கணக்கில் கொண்டால், ஒலிம்பிக்கில் குண்டு எறிதல் போட்டியின் ஜெயித்தவர்கள் எறிந்த தூரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், வீட்டின் அருகில் எந்த மரமும், முதல் மாடிவரை ஏறுவதற்கு வசதியாக இல்லை.

வீட்டின் வெளிப்புறத்திலிருந்து, மாடிக்கு ஏறியதற்கான தடையம் எதுவும் இல்லை. அன்று மழை பெய்ந்திருந்தது ஆனால் சேறு வீட்டின் எந்தப் பகுதியிலும் தென்படவில்லை. வெளியிலிருந்து ஒருவன் வந்து இந்தச் செயலை செய்திருப்பதற்கு சாத்தியங்கள் இல்லை.

டைந்திருந்த கண்ணாடியின் சில்லுகள் அறையின் வெளிப்புறத்திலும் கிடந்தது. தடயவியல் வல்லுனர்கள் உடைந்த கண்ணாடியின் வடிவமைப்பை நுண்ணோக்கி வழியே பார்த்த போது, கண்ணாடி, அறையின் உள்ளிருந்து உடைக்கப்பட்டிருக்கிறது என்பதனை உறுதி செய்தார்கள்.

ப்பொழுது சந்தேகம் அந்த நேரம் வீட்டில் இருந்த ஜானின் மேல் திரும்பியது. பக்கத்து வீட்டில் விசாரித்ததில், இரவு 11 மணியளவில் அவன் தம்பியை கொண்டு வந்துவிட்டது உண்மை என்றார்கள். போலீசுக்கு போன் செய்த நேரம் 11.20. ஆக, சத்தம் கேட்டப் பிறகு, பாதுகாப்புக்காக தம்பியை பக்கத்து வீட்டிற்கு அனுப்பியது பொய். மேலும், மனவியல் நிபுணர்களிடம் ஜானின் பேச்சை தந்து பரிசோதித்ததில், குரலில் உண்மையான பதட்டம் இல்லை என்று உறுதிசெய்தனர்.

டையைப் பரிசோதித்ததில், துப்பாக்கி சுடும் போது வெளியான, மிக நுண்ணிய வெடிமருந்து ஒட்டியிருந்தது. துப்பாக்கி சுடும் போது, அவன் மிக அருகில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

விசாரணையில் ஜான், டேவிட்டைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டான். என்ன நடந்தது ?. டேவிட் தூங்கியதும், இடிச்சத்தத்தை வீட்டினுள் கேட்ட சத்தம் என தம்பியை நம்ப வைத்து, அவனை பக்கத்து வீட்டிற்கு கொண்டு விட்டுவிட்டு வந்தான். அறையினுள் புகுந்து, துப்பாக்கியால் கொன்று விட்டு, கல்லால் ஜன்னலை உடைத்திருக்கிறான். அறையின் உள்தாழ்ப்பாள் போட்டுவிட்டு, ஜன்னல் வழியே வெளியே சென்றுவிட்டான். பிறகு போலீசுக்கு போன் செய்திருக்கிறான்.

காரணம் என்ன ? நெடுநாட்களாக தான் கேட்டுக்கொண்டிருந்த ஸ்போர்ட்ஸ் மாடல் காரை வாங்க அப்பா பணம் தராததால், அவருடன் சண்டை. சம்பவம் நடந்த இரவு, சண்டை தொடர்ந்திருக்கிறது. அதனால் ஏற்பட்ட கோபம் இச்செயலைச் செய்யக் காரணமாக இருந்திருக்கிறது. வளர்த்த கடா மார்பில் ... இல்லை இல்லை, தலையில் பாய்ந்தது.

12 April 2010

பிரயோஜனம்


னி பிரயோஜனமில்லை !!!
முடிவானதும்
அடுத்த மாநிலத்துக்கு
அடி மாடுகள்
முதியோர் காப்பகத்திற்கு
பெரிசுகள்

நன்றி: www.ronitbaras.com

10 April 2010

ஹேவல்ஸ் மற்றும் ஐ10

விளம்பரங்களில், கருப்பு நிறமுடையவர்களை நடிக்க வைக்க மாட்டார்களா என்ற கவலையைப் போக்கியது, இந்த புதிய (எனக்கு புதிய) ஹேவல்ஸ் CFL விளக்கு விளம்பரம். தூக்கு தண்டனையை நிறைவேற்றி விட்டு, தண்ணீரில் முகம் கழுவி, சாப்பாட்டை சாப்பிட முடியாத அந்த பெரியவரின் முகப் பாவனைகள் அருமை. அந்த வாழ்க்கையின் விரக்தியை அவர் வெளிப்படுத்திய விதமும், விளம்பரத்தின் கடைசியில் வரும் அந்த கிராமப்புற வயல் வெளியின் ஒதுக்குப்புறமான வீடும் மனதை என்னவோ செய்வது உண்மை. காணி நிலம் வேண்டிய பாரதி, அப்படி ஒரு வீட்டைத்தான் நினைத்திருப்பாரோ ?.

அந்த விளம்பரம் இங்கே

சிந்தனைக் குதிரையை சுரண்டி எழுப்பியதில் மாட்டியது ஐ10 விளம்பரம். ஷாருக்கான் நடித்த அந்த விளம்பரத்தில், ஒரு படத்தில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் போது, அந்த கதாநாயகியை வர்ணிக்கும் விதமாக, தன் காரை நினைத்து வர்ணிப்பார். முடிவில், ஐ10 என்று சொல்ல, டைரக்டர் கட் செய்வதுடன் விளம்பரம் முடிகிறது. விளம்பரத்தில் நம்பகத்தன்மை இருக்கிறதா எனத் தெரியவில்லை. அந்த விளம்பரத்தில் நடித்த நாட்களைத் தவிர, மற்ற நேரங்களில், ஷாருக்கான், ஐ10 என்ற ஒரு காரைப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே.

ஷாருக்கானே ஐ10 உபயோகிக்கிறார் என்று நம்பி அந்த ஒரே காரணத்திற்காக யாரும் அந்த காரை வாங்காதிருப்பார்கள் என்று நம்புவோமாக.

இதே போல அமீர்கான் நடித்த Samsung Guru என்ற மொபைல் போன் விளம்பரம். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.


ரசிக்கவைத்த மற்றோரு விளம்பரம், இரண்டு மெமரிக் கார்டுகளை ஒரே மொபைல் போனில் உபயோகிக்கலாம் என்ற அந்த விளம்பரம். அக்பர் பற்றிய ஹிந்தி படத்தை மொபைல் போனில் பார்க்கும் போது, மெமரிக்கார்டை எடுத்துவிட, கோபம் கொண்ட அக்பர், நேரில் அவரது படை வீரர்களுடன் வந்து ரகளை செய்வது அற்புதமான கற்பனை.


அலுவலக காபி குடிப்போர் சங்கத்தில் போன வாரம் பேசிக்கொண்டிருந்த போது, “SAVE OUR PLANET" என்ற விளம்பர வாக்கியங்கள் சரியானவையா என்ற விவாதம் நடந்தது.

பூமிப்பந்தின் வாழ்க்கையில், மனித குலம் தோன்றியதும், மறையப் போவதும், ஒரு நொடி நேர நிகழ்வு. வெப்பமயமாதல் மற்றும் சுற்றுபுறம் மாசு அடைவதால், அழியப்போவது மனிதர்கள் மட்டுமே. பூமி, இதை விட மோசமான பனியுகங்களைக் கடந்து வந்திருக்கிறது.

SAVE OURSELVES என்பது சரியான வாசகமாக இருக்கும் என்று எங்கள் சங்கத்தில் முடிவு செய்தோம்.

02 April 2010

நீ நல்லவன்டா - இப்படி சொல்லியேஏஏஏஏ....

மீன்துள்ளியான் பதின்ம வயது அனுபவங்களைப் பற்றி தொடர் பதிவு எழுத அழைத்திருந்தார். தாமதத்திற்கு மாப்பு கேட்டு தொடர்கிறேன்.

-----

1990 - காலை 5 மணிக்கு, திருவள்ளுவர் பஸ்ஸில் வந்திறங்கிய இடம் சைதாப்பேட்டை. சோடியம் விளக்கு ஒளியால் நிரப்பப்பட்ட பெரிய சாலைகளைப் பார்த்தபோது முதல் ஆச்சரியம். அப்பாவிடம், மெட்ராஸ் முழுவதுமே இப்படித்தான் இருக்குமா ? என்ற கேள்விக்கு, அவரிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.

அடுத்த 15 நாட்கள், மெட்ராஸில் இருக்கிறோம் என்ற உணர்வே பெருமிதத்தைக் கொடுத்தது. 10 ஆம் வகுப்பு, அரசினர் உயர் நிலைப்பள்ளியில். முதல் முறையாக காக்கி கலர் பேண்ட் (9 வது வரை டவுசர் தான்), வெள்ளை சட்டைப் போட்டு, இருபாலர் படிக்கும் பள்ளிக்குச் சென்றேன்.

10


எந்த ஊருக்கு மாற்றலாகி போனாலும், என் அப்பா, வீடு எங்களது ஸ்கூலுக்கு பக்கத்தில் பார்ப்பார். அதனால், பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை, பஸ்ஸில் ஸ்கூலுக்கு சென்றதில்லை (சந்தன முல்லை அவர்கள் பஸ் அனுபவத்தை எழுத சொல்லியிருந்தார். அவருக்கு நன்றி. அனுபவமில்லாததால், பஸ் அனுபவங்களை எழுத முடியவில்லை.).

புதிய ஊர், புதிய பள்ளிக்கூடம் - எதுவுமே புதியதில்லை எனக்கு. வகுப்பறையில் தரையில் உட்கார வேண்டிய நிலை. பெஞ்ச் இல்லை. கீழே நோட்டை வைத்து எழுத முடியாது என்பதால், பரிட்சை அட்டை ஒன்றை தினமும் எடுத்துச்செல்வேன். இரண்டே வாரங்களில் என் கணக்கு ஆசிரியர், என்னை அழைத்து, என் அப்பாவை அழைத்து வரச்சொன்னார். என் வகுப்பில் இருந்த 20 சொச்ச பெண்களிடம் (20 பேரா வகுப்பில் இருந்தார்கள் ? நினைவில்லை என்று சொன்னால் நம்புவீர்கள்) பேசியது கூட இல்லை. பிறகு எதற்கு அப்பாவை வர சொன்னார் என்ற திகில் கிளம்பியது.

அடுத்த இரண்டு நாட்களில் திடீர் திருப்பம். ஸ்கூலுக்கு வந்த அப்பாவிடம், “சார் !! பையன் நல்லா படிக்கிறான். மேத்ஸ்ல 100 க்கு 100 எடுத்துடுவான். நல்லா கோச்சிங் குடுங்க. இவன் ஒருத்தன் தான், கையெழுத்து நல்லா வரணும்னு, தினமும் பரிட்சை அட்டை எடுத்துகிட்டு வர்றான். ரொம்ப நல்ல பையன்” என்று சொன்னார். ம்ம்ம்..நல்லா கிளப்புனாங்க பீதிய.

அடுத்த நாள், மாத பரிட்சை மார்க் வரும் தினம். ஒருவர் வந்து ஆசிரியர்கள் ரூமுக்கு என்னை கூப்பிடுவதாக சொல்ல, இது என்னடா !! அடுத்த சோதனை என்று நினைத்தவாறு போனேன். என் பரிட்சை நோட்டை எல்லாருக்கும் என் வகுப்பு ஆசிரியர் காட்டினார். என் கையெழுத்து அவர்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஒரே பாராட்டு. அந்த பள்ளியின் 10 ஆம் வகுப்பு நம்பிக்கை நட்சத்திரமாக மாறிப் போனேன். அப்புறம் என்ன ?

வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்தால்...
இண்டர்வெல் முடிந்து சிறிது நேரம் கழித்து வந்தால்...
ஸ்கூல் முடிந்து மற்ற பசங்களுடன் கிரிக்கெட் விளையாடினால்...
நோட்டு புக் எடுத்து வராமல் இருந்தால்....

நீயுமாடா ? இப்படி ??
ஆசிரியர்களிடமிருந்து, இந்த கேள்வி/பார்வைக்கு பயந்து பயந்து 10 ஆம் வகுப்பு ஓடியது. இந்த நிலையில் ஒரு சின்ன சுவாரசியம், ரீனா என்ற பெண்ணால். அவள் 9ஆம் வகுப்பு வரை படித்தெல்லாம் பெரிய பள்ளியில். ஒரு பெண்ணிடம் பேசுவதே பெரிய சாதனையாக நினைத்த நாட்களில், அவள் ரொம்ப இயல்பாக எங்களிடம் பேசியது (பெரும்பாலும் இங்கிலீஷில்) ஆச்சரியமாக இருந்தது.எப்படியாவது இங்கிலீஷ் நன்கு அவளிடம் தெரிந்து கொள்ளலாம் என்ற நினைப்பில் மணல், ஜல்லி எல்லாம் விழுந்தது. அவள் அப்பாவுக்கும் மாற்றல் கிடைக்க, 1 மாதம் மட்டுமே படித்துவிட்டு வேறு ஊருக்கு போனாள். வகுப்பறையின் சின்ன சுவாரஸ்யமும் அவளுடனே போனது.

அறிவியல் பாடத்திற்கு ஆசிரியரே கடைசி வரை நியமிக்கப்படாத நிலையில், 90 பேர் அரசுத்தேர்வு எழுதினோம். 5 பேர் மட்டுமே பாஸானோம். மாநில அளவில் மார்க் எடுப்பேன் என்ற சிலரது கனவு, கனவாகவே போக, பள்ளியில் முதல் மார்க் எடுத்ததோடு சாதனை நிறைவுற்றது.

+2


அடுத்து வந்த இரண்டு வருடங்களை பெரிய அழி ரப்பர் வைத்து அழிக்க முடிந்தால் உடனே செய்துவிடுவேன். தமிழ் மீடியத்திலிருந்து +1 இங்கிலீஷ் மீடியத்திற்கு மாறியது, குளத்து மீனை, கடலில் விட்டது மாதிரி இருந்தது. வாழ்நாளில் முதல் தடவையாக ஒரு பாடத்தில் ஃபெயில் ஆனது, இங்கிலீஷ் டீச்சர் என் நோட்டை எடுத்து, என் ஆங்கில எழுத்தை வகுப்பறையில் கிண்டல் செய்தது (சேர்த்து எழுதாமல் தனித்தனி எழுத்துக்களாக எழுதுவேன்), கடைசி வரை கெமிஸ்ட்ரி ஃபார்முலாவை மனப்பாடம் செய்ய முடியாமல் போனது, முத்தாய்ப்பாக, 10 ஆம் வகுப்பில் 100/100 வாங்கிய கணக்கு பாடத்தில் அதே 100 மார்க், 200க்கு வாங்கியது மற்றும் இம்ரூவ்மென்ட் எழுதி இஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்தது என அந்த 2 வருடங்கள்......ம்ம்ம்ம். வடிவேல் பாஷையில்... முடியலை !!!!

காலேஜ்


மூன்றாவது அண்ணன் படித்துக்கொண்டிருந்த அதே காலேஜ். சென்னையிலிருந்து திருச்சிக்கு பயணமானேன். இரண்டு நாள் லீவ் கிடைத்தால் சென்னைக்கு பஸ் ஏறிவிடுவேன். அவ்வளவு வீட்டு ஏக்கம். காலேஜ் ராகிங் அனுபவம் இந்த பதிவில். எங்கள் கிளாஸில் இருக்கும் பசங்க, எலக்ட்ரானிக்ஸ் டிபார்ட்மெண்ட் போய் சைட் அடிக்கும் நிலையில், எங்கள் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் இருந்தது. அதனால் பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் போனது. முதல் இரண்டு வருடங்களில் படிப்பாளி பட்டம் வந்து சேர, முதல் பெஞ்ச் மாணவனானேன். மறுபடியும் “நீயுமாடா இப்படி” என்ற பிரச்சினை, லெக்ச்சரர்களிடமிருந்து.

பெண்களிடம் (வேற டிபார்ட்மெண்ட்தான்) பேசினால், பிராட்டிக்கல் மார்க்கில் கை, கால் வைப்பார்கள் (எல்லாம் பொறாமைதான்). அதையும் துச்சமாக எண்ணி, சில காதல் ஜோடிகள் சிறகடித்தன. ஆனால் அதில் ஒன்று கூட வாழ்வில் இணையவில்லை என்பது சோகமான பின்குறிப்பு. காலேஜ்க்கு லேட்டாக வந்தால் அடையாள அட்டையை வாட்ச்மேனிடம் தந்துவிட்டு போகவேண்டும். மதியம், பிரின்ஸிபால் ரூமிற்கு சென்று அவரிடம் பேசி வாங்கிக்கொள்ளவேண்டும். கிளாஸ் நடக்கும் நேரத்தில், கேண்டீனில் யாரும் இருக்க கூடாது. இப்படிபட்ட சூழ்நிலையில் அந்த 4 வருடங்கள் ஒரு பெரிய ஸ்கூலில் படித்த அனுபவமே ஏற்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசை, நண்பர்களுடன் அரட்டை, மாதத்தில் இரண்டு தடவை திருச்சியில் புது சினிமா போன்ற சில விஷயங்கள் பொழுது போக உதவியது.

என்னுடைய பெரிய பிரச்சினை-படிப்பை முடிக்கும் வரை வீட்டு நியாபகம் மறக்காதது. முதல் வருடத்தில் சென்னையிலிருந்து திருச்சி வரும்போது இருந்த பஸ் பயண அழுகை, மூன்றாம் ஆண்டிலும் விம்மலுடன் தொடர்ந்தது வேடிக்கையான விஷயம்.

 70% எடுத்தால் தான் வேலை கிடைக்கும் என்ற நிலையில், அதை நோக்கியே சென்றதில், காலேஜ் கடைசி தினத்தில் எல்லாரும் அழ, ஆளைவிட்டால் போதுமென்று எஸ்கேப் ஆன என்னை, வித்தியாசமாக பார்த்தார்கள். கௌதம் மேனன் படங்களில் என் காலேஜ் பெயர் வரும்போது மட்டுமே, காலேஜ் படிப்பு நியாபகத்திற்கு வருகிறது.

இன்றும்.. வாழ்வில் மறக்க முடியாதது, காலேஜ் வாழ்க்கை என்று எல்லாரும் சொல்ல, எனக்கு முதல் 15 வருட வாழ்க்கை மட்டுமே மறக்க இயலாத ஒன்றாகிப் போனது.

மொத்தத்தில், என் பதின்ம வயது பெரிய சுவாரசியங்கள் இல்லாமல், பிரச்சினைகள் இல்லாமல் போயே போச்சு....