26 January 2011

வட்டம்

(90 சதவிகித உண்மை 10 சதவிகித கதை இது)பைக்கை சைட் ஸ்டாண்டு போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், மோகன்.

சொல்லு, பரணி ! என்ன விஷயம் ?”.
மாப்ளே, நம்ம ஜெய் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ராஜா ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்கடா”.

மோகன் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்த போது, எல்லாம் முடிந்திருந்தது. ஜெய் ! போயே போய்விட்டான். காலையில் பார்த்து கலாய்த்த ஜெய் இப்பொழுது இல்லை என்பதை நம்பவே முடியவில்லை.

கொடுமை பரணி. கல்யாணமாகி ஒண்ணரை வருஷம், மூணு மாசத்துல ஒரு குழந்தை. இப்ப போய் சேர்ந்துட்டான். எல்லாத்துலயும் அவசரம்” தலையில் கையை வைத்துக்கொண்டு சொன்னான் மோகன்.

நம்ம சுந்தர் கல்யாண விருந்துக்காக, தண்ணி வாங்கிட்டு, ஃபுல்லா ஏத்திக்கிட்டு வண்டி ஓட்டியிருக்கான். குடிச்சுட்டு வண்டி ஓட்டுனதால இப்ப இன்ஸூரன்ஸ் பணமும் வராதுடா” என்றான் ரமணி.

ஹாஸ்பிடல்ல எல்லாம் முடிந்து, வீட்டுக்கு எடுத்துப் போகப்பட்டான் ஜெய். என்ன நடந்தது என்று இன்னும் புரியாத நிலையில் ஜெய்யின் மனைவி. அழுதபடி அவன் குழந்தை.

”டேய் ! கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கணும்டா. சிங்கம் மாதிரி இருக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். ரெண்டு சிங்கம்; நடுவுல அவன் சேர்ல உட்கார்ந்திருக்குற மாதிரி போட்டோ போட்டுடலாம்”.

காலையில் பைக்கில் போனவன், அன்று சாயங்காலத்தில், நாலு பேர் தூக்க, போய் சேர்ந்தான்.

டேய் ! இப்பத்தான்டா கொஞ்சம் கொஞ்சமா, அவன் இல்லைங்கிறதே உறைக்குதுடா. எனக்கு ஒரு கிளாஸ் ஊத்துடா” என்றான் மோகன்.

போதும்டா ! ரொம்ப ஓவராய்டுச்சு உனக்கு. நீ வீட்டுக்கு கிளம்பு. வண்டி ஓட்டிடுவ இல்ல !” என்றான் பரணி.

”என்னைய என்ன கண்ட்ரோல் இல்லாதவன்னு நினைச்சியா ! போடா”, என்று தள்ளாடியபடி, மோகன் பைக்கை கிளப்பினான்.

பைக்கை சைட் ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, அழைத்த செல்போனை எடுத்தான், முரளி.


மாப்ளே, நம்ம மோகன் இருக்கானில்ல, அவன் 1 மணி நேரத்துக்கு முன்னாடி, பைக்ல போய்கிட்டிருந்தப்போ, திருப்பத்துல வந்த பஸ்ல மோதி, ஆக்ஸிடண்ட். ஸ்பாட்லயே போய்ட்டான்டா” என்றான் பரணி.

24 January 2011

மலை உச்சியில் - துப்பறியலாம் வாங்க


அழகும் ஆபத்தும்

கலிஃபோர்னியா மாநிலத்தில் இருக்கும் பிக் சர் - பசிபிக் கடலோரம் இருக்கும் அழகிய மலைப்பிரதேசம். விடுமுறை நாட்களில் அங்கு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிலர், மலையின் விளிம்பிற்குச் சென்று கடல் அழகை ரசிக்கப் போய், தவறி விழுந்து இறந்து போவது அடிக்கடி நடக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்.மேரி மற்றும் ஜான் தம்பதியினருடன், பிக் சர்க்கு விடுமுறைக்கு வந்தவர் 21 வயது லிசா. சிறுவயதில் மணமாகி, கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர். அதிக படிப்பறிவும் உலக அறிவும் இல்லாத ஒரு அப்பாவி. தனியே இருந்த லிசா, மேரி மற்றும் ஜானுடைய நண்பரானார். மேரியும் ஜானும், மலை உச்சியைப் பார்த்துவிட்டு, காருக்கு திரும்பும் போது, லிசா மட்டும் அங்கேயே நின்றிருந்தார். சில விநாடிகள் கடந்து இருவரும் திரும்பி பார்க்கும் போது, லிசா அங்கு இல்லை. பதறிக் கொண்டு, விளிம்பிற்குச் சென்று பார்த்தபோது, 500 அடி பள்ளத்தில் லிசா விழுந்து கிடந்தது தெரிந்தது.

உதவி தேடி தகவல் அனுப்பி, ஆம்புலன்ஸ் வந்து சேரும் போது லிசா இறந்துபோயிருந்தார். அதிக உயரத்திலிருந்து விழந்த போது, தலையில் அடிபட்டு உடனடி மரணம். இந்த மாதிரி இறப்புக்கள் அந்த இடத்தில் அதிசயமான ஒன்று இல்லை. ஆகவே, கடமைக்காக போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு, விபத்து என முடிவு செய்யப்பட்டது.  விபத்து ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக, லிசா அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் செருப்பு கூறப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் போட்டோ எதுவும் எடுக்கவில்லை. மேரி, தன் காமிராவில், விபத்து நடப்பதற்கு முன் நிறைய போட்டா எடுத்திருப்பதாகவும், அதை போலீசாருக்குத் தருவதாகவும் சொன்னார்.

மகளின் மரணம், வறுமையில் வாடிய லிசாவின் அம்மா, கேத்திக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியது. 2500 டாலர் இன்ஸீரன்ஸ் தொகையையும், இன்ஸீரன்ஸ் கம்பெனி தராமல் இழுத்தடித்தார்கள். 2 வருடங்கள் கழித்து, மேரி, கேத்திக்கு, அவர் மகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார். உடைந்து போன நகங்கள் மற்றும் உள்ளங்கையில் இருந்த காயங்கள், கேத்திக்கு சந்தேகத்தை கிளப்பியது. போலீசிடம் புகார் தந்தார். கீழே இருக்கும் போட்டாவைப் பார்த்த போலீசாருக்கும் சந்தேகம் அதிகமானது.

நீங்களும் பாருங்கள். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது ?

(முதல் போட்டோ - லிசா தனியே. ஹை ஹீல்ஸ் செருப்பை பாருங்கள்)

(2வது போட்டோ - ஜான் மற்றும் லிசா)

முதல் போட்டோவில் சுறுசுறுப்பாக இருக்கும் லிசா, இரண்டாம் போட்டோவில் சோர்ந்து போய், ஒரு வித தூக்கக் கலக்கத்திலிருப்பது போல இருப்பதைப் பாருங்கள். போஸ்ட்மார்டத்தில் சொதப்பிய உள்ளூர் போலீசார் செய்த ஒரே நல்ல விஷயம், லிசாவின் ரத்தத்தை சேகரித்து வைத்தது தான். இரண்டு வருடங்களாக பிரிட்ஜில் இருந்த ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ரத்ததில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரப்படும் ஒரு மருந்து இருந்தது. லிசாவுக்கு அப்படி எந்த மருந்தையும் டாக்டர்கள் தரவில்லை. ஆனால், ஜான், அந்த மருந்தை எடுத்துக்கொள்பவர். மன அழுத்தம் இல்லாதவர்கள் அந்த மருந்தை சாப்பிட்டால், குழப்பம், சோர்வு மற்றும் தூக்கம் வருவது இயல்பு. இரண்டாம் போட்டோவில் இருக்கும் லிசா அந்த நிலையில் இருந்தார். இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு குளிர்பானம் குடித்தார். அதில் இந்த மருந்து கலக்கப்பட்டிருக்கலாம். இது ஒரு யூகமே. நிரூபிக்க முடியவில்லை.

அடுத்த போட்டோவைப் பாருங்கள். இது தான் லிசா உயிருடன் இருந்த கடைசி தருணங்கள்.
(தள்ளுவதற்கு முன் நோட்டமிடுதல்)

ஜானின் கைகள், லிசாவின் தோளைப் பிடித்தவாறு இருக்க, ஜான், பள்ளத்தைப் பார்க்காமல், யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிடுவது போல சுற்றும் முற்றும் பார்ப்பதைப் பாருங்கள். லிசாவின் கால்கள் மடங்கிய நிலையில் இருப்பது; இரண்டு கால்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது (பள்ளத்தை எட்டிப் பார்க்கும் ஒருவர், ஒரு காலை முன்னும் , மற்றொரு காலை பின்னும் வைத்தவாரு எட்டிப் பார்ப்பார்கள். ஜானின் முன்னங்காலைப் பாருங்கள்) மற்றும் குனிந்த முகபாவனை, அவர், சுயநினைவில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

இந்த போட்டோவிற்கு அடுத்து எடுத்தப் படங்களைப் பாருங்கள்.மேரி எடுத்த அடுத்த நான்கு போட்டோக்களில் இருப்பது, சம்பவம் நடந்த இடத்தின் 360 டிகிரி கோணத்தில் இருந்த பகுதிகளைத்தான். வெறுமனே நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்ப்பதை விட, காமிரா வழியே போட்டோ எடுப்பதைப் போல, யாராவது இருக்கிறார்களா என மேரி பார்த்த போது இந்தப் போட்டோக்களை எடுத்திருக்கிறார்.

விசாரணையின் போது, மேரி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அது

“போட்டோ எடுத்தது நான் இல்லை. சம்பவம் நடந்த போது நான் அந்த இடத்திலேயே இல்லை. எந்த போட்டோவிலாவது நான் இருக்கிறேனா பாருங்கள் ?”

ஒரு போட்டோவைப் பார்த்த போலீசாருக்கு, அதில் தெரிந்த, போட்டோ எடுப்பவரின் நிழல் தெரிந்தது. தடயவியல் நிபுணர்களின் முடிவின் படி, அந்தப் போட்டோவை எடுத்தவர் 5 அடி 4 அங்குல உயரம் இருப்பவர் என முடிவு செய்தனர். மேரியின் உயரமும் அதுவே. உயரத்தை எப்படி பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் கண்டறிந்தனர் என்று கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


மேரியின் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்டறியப்பட்டவை

  • லிசா இறப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன் 35000 டாலருக்கு இன்ஸீரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்ஸீரன்ஸ் ஏஜண்டிடம் விசாரித்த போது, மேரி, இந்தப் பாலிசிதாரர், விபத்தில் இறந்தாலும் இந்தப் பாலிசி செல்லுபடியாகுமா ? என்று கேட்டதாக கூறினார்.

  • பாலிசியின் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்தவர், மேரியின் பக்கத்து வீட்டுக்காரர். ஆராய்ந்ததில் அது போலியாகப் போடப்பட்ட கையெழுத்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது. காரணம் கையெழுத்தில் இருந்த எழுத்துப்பிழை.

  • லிசா இறந்த இரண்டாம் நாள், மேரி, 35000 டாலர் கேட்டு இன்ஸீரன்ஸ் கம்பெனிக்கு லெட்டர் அனுப்பினாள்.

  • கடந்த காலங்களில், மேரியின் முதல் கணவர் மற்றும் மேரியின் சிறு குழந்தை விபத்தில் இறந்தது தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் இன்ஸூரன்ஸ் செய்யப்பட்ட தொகையும், அதே 35000 டாலர்கள் தான்.

  • மூன்று முறை, மேரி இருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, அதற்காக இன்ஸீரன்ஸ் பணமும் அளிக்கப்பட்டிருந்தது. மேரி இதை ஒரு தொழில் மாதிரியே செய்து வந்திருக்கிறாள்.

  • ஏன் 35000 டாலர் ?. இன்ஸூரன்ஸ் கம்பெனி, இந்த மாதிரி சிறிய தொகை என்றால் பெரிய விசாரணை நடத்தாமல் பணத்தை தந்துவிடுவார்கள். அதனாலேயே, மேரி அனைத்திற்கும் 35000 டாலர் பாலிசி எடுத்திருந்தாள். கடைசியாக மாட்டிய அப்பாவி லிசா.


இந்த வழக்குக்கு முக்கிய தடயம் மேரி எடுத்த போட்டோக்கள். எல்லாம் சரி ! தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொள்வது போல, மேரி எதற்காக அந்த போட்டோக்களை எடுத்தாள் ?. விளையாட்டில் ஜெயித்த பரிசுக்கோப்பையை வைத்து அழகு பார்ப்பது போல, தான் புத்திசாலித்தனமாக செய்த கொலைக்கு அடையாளமாக வைத்துக்கொள்ள எடுத்த போட்டோக்கள் அவை. மேரிக்கு ஆயுள் தண்டனைக் கிடைத்தது. ஜான், சிறைச்சாலையில் இறந்து போனான். இன்ஸீரன்ஸ் கம்பெனிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

09 January 2011

7 மணி நேரத்தில் வாங்கிய புத்தகங்கள்

போன வருடம் இந்தக் காரணத்தினால், புத்தகக்காட்சிக்கு போக முடியாதது பெரிய சோகம். இந்த வருடம், புத்தகக்காட்சி இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் வகையில் விளம்பரங்கள் இல்லாமல் இருந்தது. எஃப்.எம் கேட்கும் ஒரு நண்பர், 4ஆம் தேதி புத்தகக்காட்சி தொடங்கி விட்டது என்ற செய்தி சொன்னதிலிருந்து, வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்தேன்.

7 ஜனவரி 2011 - வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை 4 மணியளவில் ஆபீஸில் 2 மணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு, நண்பர்களுடன், புத்தகக்காட்சிக்கு போனபோது மணி 5. இந்த வருடம் கூட்டம் ரொம்ப கொஞ்சமே. 2 வருடங்களுக்கு முன்பிருந்த திருவிழாக் கோலம் மிஸ்ஸிங். மற்றபடி அதே செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலப் பள்ளி; புழுதி பறக்கும் வாகனம் நிறுத்துமிடம்; ரூபாய் 5 நுழைவுக் கட்டணம்; 10 கவுண்டர் இருந்தும் ஒரே ஒரு கவுண்டரில் மட்டும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் புத்திசாலித்தனம்; குறிப்பிட்ட புத்தக ஸ்டால் இருக்குமிடம் தெரியாமல் தேட வைத்தல்; அவசரத்துக்கு ஒதுங்கும் இடம் ரொம்ம்ம்ப தூய்மை; என்று வேறெந்த மாற்றமும் இல்லை.

சுஜாதாவின் புத்தகங்கள், எஸ்.ராவின் புதிய சில புத்தகங்கள் மற்றும் போன வருடம் வாங்காமல் விடுபட்ட, “வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்” கட்டுரைத் தொகுப்பு. அவ்வளவு தான் என் லிஸ்ட்.

யிர்மையில் நுழைந்து “காண் என்றது இயற்கை”  மற்றும் “அது அந்தக் காலம்” வாங்கினேன். அங்கிருந்த நர்சிமைப் பார்த்தேன். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசலாம் என்று நினைத்தேன். “பின்னோக்கியா ? ஓ ! அப்படின்னு ஒரு ப்ளாக் எழுதுறீங்களா ?” என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து அந்த நினைப்பை விட்டேன்.

டுத்து கிழக்குப் பதிப்பகத்தில் வைஸ்ராயைத் தேடினேன். அங்கிருந்தவரிடம் கேட்ட போது ஸ்டாக் இல்லை என்று சொன்னார் (பிறகு தான், வைஸ்ராய், உயிர்மைப் பதிப்பக வெளியீடு என்பது நியாபகம் வந்தது. கூடவே “ஸ்டாக் இல்லை” என்று சொன்ன கிழக்கில் வேலை செய்பவரும் நியாபகம் வந்தார்).

கிழக்கில் செம கூட்டம். நிறைய புத்தகங்கள். டாலர் தேசமும், அகம்.புறம்.அந்தப்புறம் எடுத்துப் பார்த்தேன். விலை எடுத்த இடத்தில் திருப்பி வைக்க சொன்னது. நிறைய சுஜாதா புத்தகங்கள். அந்த தலைப்புகள் பாரதி பதிப்பகம் மற்றும் விசா பதிப்பகங்களில் கம்மியான விலையில் கிடைப்பதால், முதலில் அங்கு பார்த்துவிட்டு, அங்கு கிடைக்காத தலைப்புகளை இங்கு வாங்கலாம் என முடிவுசெய்தேன்.

தினத்தந்தியின் காலச்சுவடுகள் வாங்கலாமா என்று நினைத்தேன். ராஜீவ் காந்தி கொலையுண்ட கோரமான அந்தப் படத்தைப் பார்த்து நினைப்பைக் கைவிட்டேன்.

பாரதி பதிப்பகத்தில் சில சுஜாதா புத்தகங்கள் (பூக்குட்டி, மனைவி கிடைத்தாள்) நிறைய பட்டுக்கோட்டை பிரபாகர் புத்தகங்கள் 1990ஆம் வருட விலையில் அள்ளினேன். பாரதியின் வாழ்வைப் போலவே, பதிப்பகமும் அதிக புத்தகங்கள் இல்லாமல் பொலிவில்லாமல் இருந்தது. சுஜாதா புத்தகங்களின் மறு பிரசுரம் செய்யும் உரிமை அவர்களிடம் இல்லை என்று சொன்னார்கள்.

ணி 7.30 ஆன போது, கால் வலி பின்னியெடுத்தது. கவனம் புத்தகங்களிலிருந்து காலுக்கு மாறியது. வயசானதால்தான் கால் வலிக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். மீன் பிடிக்க கொக்கு நிற்பது போல, பலர், தங்கள் கால்களில், கைகள் வைத்தபடி நின்றதைப் பார்த்து மனம் அமைதியடைந்தேன். அதற்குள் நண்பர்கள் அவர்கள் வாங்கிய புத்தகங்களுடன் (ஓஷோவின் அனைத்து புத்தகங்களும்) வர, வெளியிலிருந்த அரங்கில் வைரமுத்து பேச ஆரம்பித்திருந்தார். சிறிது நேரம் பேச்சைக் கேட்டுவிட்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்த முதல் வேலையாக எஸ்.ராவின் புத்தகம் படித்துவிட்டு, சுடச்சுட, பதிவு போட்டேன்.

 8 ஜனவரி 2011 - சனிக்கிழமை


பையனிடம், புத்தகம் வாங்கிவிட்டு 1 மணி நேரத்தில் வந்துவிடுவோம் என்று சொல்லி, அண்ணன் வீட்டில் விட்டு விட்டு நானும், என் மனைவியும், புத்தகக்காட்சிக்கு போன போது, மணி 4.

நேற்று போல இல்லாமல், கூட்டம் அதிகமாக இருந்தது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. விளம்பரங்கள் (அதிகமாக) செய்யாமலேயே மக்கள் வருவது நல்லதே. செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில், நீர் சேமிப்புக்காக ஆங்காங்கே, சிறு சிறு கிணற்றை இயற்கையே கட்டிவைத்திருக்கிறது. இயற்கையை பாழ்படுத்த விருப்பமில்லாமல், பள்ளங்களை அப்படியே பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வழியாக காரை நிறுத்திவிட்டு வந்தால், டிக்கெட் வாங்குமிடத்தில் மலைப்பாம்பு போல பெரிய க்யூ நின்றிருந்தது. ஒரு கவுண்டரில் மட்டுமே டிக்கெட் தந்து கொண்டிருந்தார்கள்.

நேற்று, ஒவ்வொரு வரிசைக்கும் முன் ஒட்டியிருந்த ஸ்டால் பெயர்கள் அடங்கிய போஸ்டர் கிழிக்க (??) / நீக்கப்பட்டிருந்தது. ஸ்டால்களைக் கண்டுபிடிப்பதற்கு ஷெர்லாக் ஹோம்ஸ் உதவியை நாட வேண்டியிருந்தது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களை நோக்கி என் மனைவி போக, நான் உயிர்மைக்கு வந்தேன்.

னுஷ்யபுத்திரனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டிருந்தனர். நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். எஸ்.ராவின் ”பதினெட்டாம் நூற்றாண்டின் மழை” வாங்கும் போது கார்க்கி தன் நண்பர்களுடன் வந்திருந்தார். எஸ்.ராவின் “உறுபசி” ஸ்டாக் இல்லையென்றார்கள். ஹிந்திக்காரர்கள் போல இருந்த இருவர், சுஜாதா போட்டோ போட்ட புத்தகங்களைப் பார்த்து, பில்கேட்ஸா? என்று ஹிந்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, தலைவர் இன்னொரு பில்கேட்ஸ் என்பதில் சந்தேகமில்லையே.

திஷா, கண்ணதாசனின் சுயசரிதமான வனவாசம் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் பதிப்பகத்தில், வனவாசம் மற்றும் அகதா கிறிஸ்டியின் இரு புத்தகங்கள் வாங்கிவிட்டு, பில் போடும் இடத்திற்கு வந்தேன். பில் போடுபவர் (பதிப்பக உரிமையாளர் ??), அங்கு வேலை செய்பவர்களிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு, பார்க்கவே பயமுறுத்திக்கொண்டிருந்தார்.விசா பதிப்பகத்தில் நிறைய சுஜாதா புத்தகங்களை வாங்கிவிட்டு, ஐந்தாவது அத்தியாயம் மற்றும் ”கிளியோபாட்ரா”, கிழக்கில் வாங்கிய போது, நேற்று வந்த கால் வலி, இந்த முறை அரைமணி முன்னரே வந்துவிட்டது. 1 நாளில் அவ்வளவு வயசாகுமா என்ன ?. அதற்கு மேல் புத்தகங்கள் வாங்க பொறுமையில்லை. பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்துக்கொண்டு (அரங்கில் வாலியைப் பற்றி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். வாலி பேச ஆரம்பிக்கும் வரைக் காத்திருக்க முடியாததால்) 1 மணி நேரம் ட்ராபிக்கில் ஊர்ந்து வந்தபோது, அண்ணன் வீட்டில் இருந்த என் பையன் அழ ஆரம்பித்திருந்தான்.

வாங்கிய எல்லா புத்தகங்களையும், அதன் புத்தக வாசனையோடு, அவற்றின் முன்னுரைகளையும் படிப்பதே ஒரு ஆனந்தம் தான்.

ந்த வருடம் தேடியும் கிடைக்காத ஒரு புத்தகம் - இந்திரா சௌந்தர்ராஜனின் “வானத்து மனிதர்கள்” (எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்).

அனைவருக்கும் புத்தகங்களோடும், கரும்போடும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

08 January 2011

காண் என்றது இயற்கை - அனுபவம்

சிறுவயதில் ஓசூரில் இருந்தபோது, அருகிலிருந்த மலை உச்சியில் தெரியும் ஒற்றை ஆலமரத்தை (கீழிருக்கும் படத்தில் தெரியும்) தினமும் பார்ப்பேன். விழுதுகளோடு, கோட்டோவியம் போன்ற அதன் அழகு வசீகரமானது. ஒரு நாள் அந்த மலை உச்சிக்குச் சென்ற போது, அங்கிருந்து, என் வீட்டைப் பார்க்க முயன்று, வீட்டைத் தேடித் தேடி தோற்றேன். வீட்டிலிருந்து மரத்தைப் பார்க்க முடிந்தது, ஆனால் அங்கிருந்து என் வீட்டைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம்.

ஓசூர் மலையும் அந்த மரமும்

தற்போது என் வீட்டிலிருந்து தெரியும் செயிண்ட்தாமஸ் குன்றும், இரவு நேரங்களில், விமான நிலையத்தின் விளக்கு ஒளியின் பிண்ணனியில் தெரியும் குன்றின் உச்சியிலும் அதே ஒற்றை மரம்.

செயிண்ட் தாமஸ் குன்றும் மரமும்


ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைகளில் ஏற நேர்க்கோடாக, செங்குத்தாக சாலை இருக்கும் என்று சிறுவயதில் நினைத்திருந்தேன். தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாலைகள் இல்லாமல்/தெரியாமல் இருப்பதைப் பார்த்து, எப்படி இதன் மேல் வண்டிகள் போகும் என்று வியந்திருக்கிறேன்.

காண் என்றது இயற்கை - எஸ்.ராவின் மற்றுமொரு அருமையான படைப்பு. இதன் முதல் கட்டுரை - மலையைப் பற்றி. அதைப் படித்த உடன் எனக்குத் தோன்றிய மலை அனுபவங்கள்தான் முன் பத்திகளில்.

புத்தகம் ஒன்றைப் படிக்கும் போது “அட இது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறதே !” என்று நம் அனுபவங்களைத் தூண்டுபவையாக இருக்கும். மற்றொரு வகைப் புத்தகம், நாம் அனுபவிக்காத, வாழ்க்கையில் சந்திக்காத விஷயங்களை விவரிப்பதாக இருக்கும். எஸ்.ராவின் இந்தப் புத்தகம் முதல் வகையைச் சேர்ந்தது.

மலை தோன்றுகிறது என்ற கட்டுரையில், விடியலை, மலையின் பிண்ணனியில் அவர் விவரிப்பது அற்புதமாக இருக்கிறது. படிக்கும் போது, ஏ.ஆர்.ரஹ்மானின், “வெள்ளைப் பூக்கள்” பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலில் வரும்

”மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே

மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்”

என்ற வரிகள் விவரிக்கும் விடியலின் இதம், இவரின் இந்தக் கட்டுரையில். மலையிலிருந்து பாயும் காட்டருவிக்கு இவர் தந்திருக்கும் உவமை, இதற்கு முன் படித்திராதது.

மற்ற கட்டுரைகள் ...

சிறு செடி
மழை என்ன செய்யும்
பசித்த மழை
யானை பார்த்தல்
ஆடுகளின் நடனம்
அழைக்கும் நிழல்
மைனா அலையும் பகல்

இன்னும் பிற .....

எஸ்.ராவின் வாசகர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம் இது. மற்றவர்களுக்கு - இவரின் தேசாந்திரி படித்திருக்கிறீர்களா ? பிடித்திருந்ததா ?. பிடித்திருந்தால், இந்த புத்தகமும் மிகவும் பிடிக்கும்.

தலைப்பு   :  காண் என்றது இயற்கை
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
168 பக்கங்கள் - விலை. ரூ 90.

படங்களுக்கு நன்றி : www.uyirmmai.com, http://ta.wikipedia.org/