08 January 2011

காண் என்றது இயற்கை - அனுபவம்

சிறுவயதில் ஓசூரில் இருந்தபோது, அருகிலிருந்த மலை உச்சியில் தெரியும் ஒற்றை ஆலமரத்தை (கீழிருக்கும் படத்தில் தெரியும்) தினமும் பார்ப்பேன். விழுதுகளோடு, கோட்டோவியம் போன்ற அதன் அழகு வசீகரமானது. ஒரு நாள் அந்த மலை உச்சிக்குச் சென்ற போது, அங்கிருந்து, என் வீட்டைப் பார்க்க முயன்று, வீட்டைத் தேடித் தேடி தோற்றேன். வீட்டிலிருந்து மரத்தைப் பார்க்க முடிந்தது, ஆனால் அங்கிருந்து என் வீட்டைப் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம்.

ஓசூர் மலையும் அந்த மரமும்

தற்போது என் வீட்டிலிருந்து தெரியும் செயிண்ட்தாமஸ் குன்றும், இரவு நேரங்களில், விமான நிலையத்தின் விளக்கு ஒளியின் பிண்ணனியில் தெரியும் குன்றின் உச்சியிலும் அதே ஒற்றை மரம்.

செயிண்ட் தாமஸ் குன்றும் மரமும்


ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைகளில் ஏற நேர்க்கோடாக, செங்குத்தாக சாலை இருக்கும் என்று சிறுவயதில் நினைத்திருந்தேன். தூரத்தில் இருந்து பார்க்கும் போது சாலைகள் இல்லாமல்/தெரியாமல் இருப்பதைப் பார்த்து, எப்படி இதன் மேல் வண்டிகள் போகும் என்று வியந்திருக்கிறேன்.

காண் என்றது இயற்கை - எஸ்.ராவின் மற்றுமொரு அருமையான படைப்பு. இதன் முதல் கட்டுரை - மலையைப் பற்றி. அதைப் படித்த உடன் எனக்குத் தோன்றிய மலை அனுபவங்கள்தான் முன் பத்திகளில்.

புத்தகம் ஒன்றைப் படிக்கும் போது “அட இது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறதே !” என்று நம் அனுபவங்களைத் தூண்டுபவையாக இருக்கும். மற்றொரு வகைப் புத்தகம், நாம் அனுபவிக்காத, வாழ்க்கையில் சந்திக்காத விஷயங்களை விவரிப்பதாக இருக்கும். எஸ்.ராவின் இந்தப் புத்தகம் முதல் வகையைச் சேர்ந்தது.

மலை தோன்றுகிறது என்ற கட்டுரையில், விடியலை, மலையின் பிண்ணனியில் அவர் விவரிப்பது அற்புதமாக இருக்கிறது. படிக்கும் போது, ஏ.ஆர்.ரஹ்மானின், “வெள்ளைப் பூக்கள்” பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலில் வரும்

”மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே

மலர்கள் சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே தாயின் கதகதப்பில்”

என்ற வரிகள் விவரிக்கும் விடியலின் இதம், இவரின் இந்தக் கட்டுரையில். மலையிலிருந்து பாயும் காட்டருவிக்கு இவர் தந்திருக்கும் உவமை, இதற்கு முன் படித்திராதது.

மற்ற கட்டுரைகள் ...

சிறு செடி
மழை என்ன செய்யும்
பசித்த மழை
யானை பார்த்தல்
ஆடுகளின் நடனம்
அழைக்கும் நிழல்
மைனா அலையும் பகல்

இன்னும் பிற .....

எஸ்.ராவின் வாசகர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய புத்தகம் இது. மற்றவர்களுக்கு - இவரின் தேசாந்திரி படித்திருக்கிறீர்களா ? பிடித்திருந்ததா ?. பிடித்திருந்தால், இந்த புத்தகமும் மிகவும் பிடிக்கும்.

தலைப்பு   :  காண் என்றது இயற்கை
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
168 பக்கங்கள் - விலை. ரூ 90.

படங்களுக்கு நன்றி : www.uyirmmai.com, http://ta.wikipedia.org/

5 பின்னூட்டங்கள்:

நாஞ்சில் பிரதாப்™ said...

யாரு பின்னோக்கியா? அப்போ இத்தனை நாளா ஊர்ல தான் இருக்கீஙகளா? நான் பர்மாக்கு குடிபுகுந்திட்டீங்களோன்னு நினைச்சேன் :))

தேசாந்திரி ஆ.வி. வந்தபோது தவறாமல் படித்தது. புத்தகம் வாங்கவேண்டும்.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா
நல்ல பகிர்வுக்கும் நன்றி

ஸ்ரீராம். said...

எஸ்ரா புத்தக அறிமுகத்துக்கு நன்றி. ஹோசூர் மலைக்கு சமீபத்தில் சென்றிருந்த ஞாபகம் வந்தது. செயின்ட் தாமஸ் மவுன்ட் மிகப் பழைய படம் போலத் தோன்றுகிறது. இப்போது அங்கு நிறைய கட்டிடங்கள் வந்து விட்டனவே...

cheena (சீனா) said...

அன்பின் பின்னோக்கி - பகிர்வினிற்கு நன்றி - எஸ்ரா புத்தகங்கள் இப்பொழுது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தேசாந்திரியும் இயறகையைப் பற்றிய இப்புத்தகமும் வாங்கி விடுகிறேன்

அமுதா said...

welcome back!!! நல்ல பகிர்வு