24 January 2011

மலை உச்சியில் - துப்பறியலாம் வாங்க


அழகும் ஆபத்தும்

கலிஃபோர்னியா மாநிலத்தில் இருக்கும் பிக் சர் - பசிபிக் கடலோரம் இருக்கும் அழகிய மலைப்பிரதேசம். விடுமுறை நாட்களில் அங்கு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளில் ஒரு சிலர், மலையின் விளிம்பிற்குச் சென்று கடல் அழகை ரசிக்கப் போய், தவறி விழுந்து இறந்து போவது அடிக்கடி நடக்கும் துரதிர்ஷ்டவசமான சம்பவம்.மேரி மற்றும் ஜான் தம்பதியினருடன், பிக் சர்க்கு விடுமுறைக்கு வந்தவர் 21 வயது லிசா. சிறுவயதில் மணமாகி, கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர். அதிக படிப்பறிவும் உலக அறிவும் இல்லாத ஒரு அப்பாவி. தனியே இருந்த லிசா, மேரி மற்றும் ஜானுடைய நண்பரானார். மேரியும் ஜானும், மலை உச்சியைப் பார்த்துவிட்டு, காருக்கு திரும்பும் போது, லிசா மட்டும் அங்கேயே நின்றிருந்தார். சில விநாடிகள் கடந்து இருவரும் திரும்பி பார்க்கும் போது, லிசா அங்கு இல்லை. பதறிக் கொண்டு, விளிம்பிற்குச் சென்று பார்த்தபோது, 500 அடி பள்ளத்தில் லிசா விழுந்து கிடந்தது தெரிந்தது.

உதவி தேடி தகவல் அனுப்பி, ஆம்புலன்ஸ் வந்து சேரும் போது லிசா இறந்துபோயிருந்தார். அதிக உயரத்திலிருந்து விழந்த போது, தலையில் அடிபட்டு உடனடி மரணம். இந்த மாதிரி இறப்புக்கள் அந்த இடத்தில் அதிசயமான ஒன்று இல்லை. ஆகவே, கடமைக்காக போஸ்ட்மார்டம் செய்யப்பட்டு, விபத்து என முடிவு செய்யப்பட்டது.  விபத்து ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாக, லிசா அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் செருப்பு கூறப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் போட்டோ எதுவும் எடுக்கவில்லை. மேரி, தன் காமிராவில், விபத்து நடப்பதற்கு முன் நிறைய போட்டா எடுத்திருப்பதாகவும், அதை போலீசாருக்குத் தருவதாகவும் சொன்னார்.

மகளின் மரணம், வறுமையில் வாடிய லிசாவின் அம்மா, கேத்திக்கு மேலும் துயரத்தை ஏற்படுத்தியது. 2500 டாலர் இன்ஸீரன்ஸ் தொகையையும், இன்ஸீரன்ஸ் கம்பெனி தராமல் இழுத்தடித்தார்கள். 2 வருடங்கள் கழித்து, மேரி, கேத்திக்கு, அவர் மகளின் புகைப்படங்களை அனுப்பி வைத்தார். உடைந்து போன நகங்கள் மற்றும் உள்ளங்கையில் இருந்த காயங்கள், கேத்திக்கு சந்தேகத்தை கிளப்பியது. போலீசிடம் புகார் தந்தார். கீழே இருக்கும் போட்டாவைப் பார்த்த போலீசாருக்கும் சந்தேகம் அதிகமானது.

நீங்களும் பாருங்கள். இதில் சந்தேகப்பட என்ன இருக்கிறது ?

(முதல் போட்டோ - லிசா தனியே. ஹை ஹீல்ஸ் செருப்பை பாருங்கள்)

(2வது போட்டோ - ஜான் மற்றும் லிசா)

முதல் போட்டோவில் சுறுசுறுப்பாக இருக்கும் லிசா, இரண்டாம் போட்டோவில் சோர்ந்து போய், ஒரு வித தூக்கக் கலக்கத்திலிருப்பது போல இருப்பதைப் பாருங்கள். போஸ்ட்மார்டத்தில் சொதப்பிய உள்ளூர் போலீசார் செய்த ஒரே நல்ல விஷயம், லிசாவின் ரத்தத்தை சேகரித்து வைத்தது தான். இரண்டு வருடங்களாக பிரிட்ஜில் இருந்த ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ரத்ததில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தரப்படும் ஒரு மருந்து இருந்தது. லிசாவுக்கு அப்படி எந்த மருந்தையும் டாக்டர்கள் தரவில்லை. ஆனால், ஜான், அந்த மருந்தை எடுத்துக்கொள்பவர். மன அழுத்தம் இல்லாதவர்கள் அந்த மருந்தை சாப்பிட்டால், குழப்பம், சோர்வு மற்றும் தூக்கம் வருவது இயல்பு. இரண்டாம் போட்டோவில் இருக்கும் லிசா அந்த நிலையில் இருந்தார். இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு குளிர்பானம் குடித்தார். அதில் இந்த மருந்து கலக்கப்பட்டிருக்கலாம். இது ஒரு யூகமே. நிரூபிக்க முடியவில்லை.

அடுத்த போட்டோவைப் பாருங்கள். இது தான் லிசா உயிருடன் இருந்த கடைசி தருணங்கள்.
(தள்ளுவதற்கு முன் நோட்டமிடுதல்)

ஜானின் கைகள், லிசாவின் தோளைப் பிடித்தவாறு இருக்க, ஜான், பள்ளத்தைப் பார்க்காமல், யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டமிடுவது போல சுற்றும் முற்றும் பார்ப்பதைப் பாருங்கள். லிசாவின் கால்கள் மடங்கிய நிலையில் இருப்பது; இரண்டு கால்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது (பள்ளத்தை எட்டிப் பார்க்கும் ஒருவர், ஒரு காலை முன்னும் , மற்றொரு காலை பின்னும் வைத்தவாரு எட்டிப் பார்ப்பார்கள். ஜானின் முன்னங்காலைப் பாருங்கள்) மற்றும் குனிந்த முகபாவனை, அவர், சுயநினைவில் இல்லை என்பதை உணர்த்துகிறது.

இந்த போட்டோவிற்கு அடுத்து எடுத்தப் படங்களைப் பாருங்கள்.மேரி எடுத்த அடுத்த நான்கு போட்டோக்களில் இருப்பது, சம்பவம் நடந்த இடத்தின் 360 டிகிரி கோணத்தில் இருந்த பகுதிகளைத்தான். வெறுமனே நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்ப்பதை விட, காமிரா வழியே போட்டோ எடுப்பதைப் போல, யாராவது இருக்கிறார்களா என மேரி பார்த்த போது இந்தப் போட்டோக்களை எடுத்திருக்கிறார்.

விசாரணையின் போது, மேரி ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். அது

“போட்டோ எடுத்தது நான் இல்லை. சம்பவம் நடந்த போது நான் அந்த இடத்திலேயே இல்லை. எந்த போட்டோவிலாவது நான் இருக்கிறேனா பாருங்கள் ?”

ஒரு போட்டோவைப் பார்த்த போலீசாருக்கு, அதில் தெரிந்த, போட்டோ எடுப்பவரின் நிழல் தெரிந்தது. தடயவியல் நிபுணர்களின் முடிவின் படி, அந்தப் போட்டோவை எடுத்தவர் 5 அடி 4 அங்குல உயரம் இருப்பவர் என முடிவு செய்தனர். மேரியின் உயரமும் அதுவே. உயரத்தை எப்படி பிதாகரஸ் தேற்றத்தின் மூலம் கண்டறிந்தனர் என்று கீழே உள்ள படத்தில் பாருங்கள்.


மேரியின் பின்புலத்தை ஆராய்ந்த போது கண்டறியப்பட்டவை

  • லிசா இறப்பதற்கு, இரண்டு நாட்களுக்கு முன் 35000 டாலருக்கு இன்ஸீரன்ஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. இன்ஸீரன்ஸ் ஏஜண்டிடம் விசாரித்த போது, மேரி, இந்தப் பாலிசிதாரர், விபத்தில் இறந்தாலும் இந்தப் பாலிசி செல்லுபடியாகுமா ? என்று கேட்டதாக கூறினார்.

  • பாலிசியின் சாட்சிக் கையெழுத்துப் போட்டிருந்தவர், மேரியின் பக்கத்து வீட்டுக்காரர். ஆராய்ந்ததில் அது போலியாகப் போடப்பட்ட கையெழுத்து எனக் கண்டுபிடிக்கப்பட்டது. காரணம் கையெழுத்தில் இருந்த எழுத்துப்பிழை.

  • லிசா இறந்த இரண்டாம் நாள், மேரி, 35000 டாலர் கேட்டு இன்ஸீரன்ஸ் கம்பெனிக்கு லெட்டர் அனுப்பினாள்.

  • கடந்த காலங்களில், மேரியின் முதல் கணவர் மற்றும் மேரியின் சிறு குழந்தை விபத்தில் இறந்தது தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் இன்ஸூரன்ஸ் செய்யப்பட்ட தொகையும், அதே 35000 டாலர்கள் தான்.

  • மூன்று முறை, மேரி இருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு, அதற்காக இன்ஸீரன்ஸ் பணமும் அளிக்கப்பட்டிருந்தது. மேரி இதை ஒரு தொழில் மாதிரியே செய்து வந்திருக்கிறாள்.

  • ஏன் 35000 டாலர் ?. இன்ஸூரன்ஸ் கம்பெனி, இந்த மாதிரி சிறிய தொகை என்றால் பெரிய விசாரணை நடத்தாமல் பணத்தை தந்துவிடுவார்கள். அதனாலேயே, மேரி அனைத்திற்கும் 35000 டாலர் பாலிசி எடுத்திருந்தாள். கடைசியாக மாட்டிய அப்பாவி லிசா.


இந்த வழக்குக்கு முக்கிய தடயம் மேரி எடுத்த போட்டோக்கள். எல்லாம் சரி ! தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொள்வது போல, மேரி எதற்காக அந்த போட்டோக்களை எடுத்தாள் ?. விளையாட்டில் ஜெயித்த பரிசுக்கோப்பையை வைத்து அழகு பார்ப்பது போல, தான் புத்திசாலித்தனமாக செய்த கொலைக்கு அடையாளமாக வைத்துக்கொள்ள எடுத்த போட்டோக்கள் அவை. மேரிக்கு ஆயுள் தண்டனைக் கிடைத்தது. ஜான், சிறைச்சாலையில் இறந்து போனான். இன்ஸீரன்ஸ் கம்பெனிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

5 பின்னூட்டங்கள்:

Chitra said...

WOW!!! Impressed!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

சூப்பர் மீள்துவக்கம் நண்பரே

ஸ்ரீராம். said...

Interesting...

guna said...

super sir.. அதுவும் அந்த pythagorus theorem use பண்ணியது excellent..

thinaharan natham said...

சூப்பர் . .