09 January 2011

7 மணி நேரத்தில் வாங்கிய புத்தகங்கள்

போன வருடம் இந்தக் காரணத்தினால், புத்தகக்காட்சிக்கு போக முடியாதது பெரிய சோகம். இந்த வருடம், புத்தகக்காட்சி இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் வகையில் விளம்பரங்கள் இல்லாமல் இருந்தது. எஃப்.எம் கேட்கும் ஒரு நண்பர், 4ஆம் தேதி புத்தகக்காட்சி தொடங்கி விட்டது என்ற செய்தி சொன்னதிலிருந்து, வெள்ளிக்கிழமைக்காக காத்திருந்தேன்.

7 ஜனவரி 2011 - வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை 4 மணியளவில் ஆபீஸில் 2 மணி நேரம் பர்மிஷன் போட்டுவிட்டு, நண்பர்களுடன், புத்தகக்காட்சிக்கு போனபோது மணி 5. இந்த வருடம் கூட்டம் ரொம்ப கொஞ்சமே. 2 வருடங்களுக்கு முன்பிருந்த திருவிழாக் கோலம் மிஸ்ஸிங். மற்றபடி அதே செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலப் பள்ளி; புழுதி பறக்கும் வாகனம் நிறுத்துமிடம்; ரூபாய் 5 நுழைவுக் கட்டணம்; 10 கவுண்டர் இருந்தும் ஒரே ஒரு கவுண்டரில் மட்டும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கும் புத்திசாலித்தனம்; குறிப்பிட்ட புத்தக ஸ்டால் இருக்குமிடம் தெரியாமல் தேட வைத்தல்; அவசரத்துக்கு ஒதுங்கும் இடம் ரொம்ம்ம்ப தூய்மை; என்று வேறெந்த மாற்றமும் இல்லை.

சுஜாதாவின் புத்தகங்கள், எஸ்.ராவின் புதிய சில புத்தகங்கள் மற்றும் போன வருடம் வாங்காமல் விடுபட்ட, “வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்” கட்டுரைத் தொகுப்பு. அவ்வளவு தான் என் லிஸ்ட்.

யிர்மையில் நுழைந்து “காண் என்றது இயற்கை”  மற்றும் “அது அந்தக் காலம்” வாங்கினேன். அங்கிருந்த நர்சிமைப் பார்த்தேன். அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசலாம் என்று நினைத்தேன். “பின்னோக்கியா ? ஓ ! அப்படின்னு ஒரு ப்ளாக் எழுதுறீங்களா ?” என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து அந்த நினைப்பை விட்டேன்.

டுத்து கிழக்குப் பதிப்பகத்தில் வைஸ்ராயைத் தேடினேன். அங்கிருந்தவரிடம் கேட்ட போது ஸ்டாக் இல்லை என்று சொன்னார் (பிறகு தான், வைஸ்ராய், உயிர்மைப் பதிப்பக வெளியீடு என்பது நியாபகம் வந்தது. கூடவே “ஸ்டாக் இல்லை” என்று சொன்ன கிழக்கில் வேலை செய்பவரும் நியாபகம் வந்தார்).

கிழக்கில் செம கூட்டம். நிறைய புத்தகங்கள். டாலர் தேசமும், அகம்.புறம்.அந்தப்புறம் எடுத்துப் பார்த்தேன். விலை எடுத்த இடத்தில் திருப்பி வைக்க சொன்னது. நிறைய சுஜாதா புத்தகங்கள். அந்த தலைப்புகள் பாரதி பதிப்பகம் மற்றும் விசா பதிப்பகங்களில் கம்மியான விலையில் கிடைப்பதால், முதலில் அங்கு பார்த்துவிட்டு, அங்கு கிடைக்காத தலைப்புகளை இங்கு வாங்கலாம் என முடிவுசெய்தேன்.

தினத்தந்தியின் காலச்சுவடுகள் வாங்கலாமா என்று நினைத்தேன். ராஜீவ் காந்தி கொலையுண்ட கோரமான அந்தப் படத்தைப் பார்த்து நினைப்பைக் கைவிட்டேன்.

பாரதி பதிப்பகத்தில் சில சுஜாதா புத்தகங்கள் (பூக்குட்டி, மனைவி கிடைத்தாள்) நிறைய பட்டுக்கோட்டை பிரபாகர் புத்தகங்கள் 1990ஆம் வருட விலையில் அள்ளினேன். பாரதியின் வாழ்வைப் போலவே, பதிப்பகமும் அதிக புத்தகங்கள் இல்லாமல் பொலிவில்லாமல் இருந்தது. சுஜாதா புத்தகங்களின் மறு பிரசுரம் செய்யும் உரிமை அவர்களிடம் இல்லை என்று சொன்னார்கள்.

ணி 7.30 ஆன போது, கால் வலி பின்னியெடுத்தது. கவனம் புத்தகங்களிலிருந்து காலுக்கு மாறியது. வயசானதால்தான் கால் வலிக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். மீன் பிடிக்க கொக்கு நிற்பது போல, பலர், தங்கள் கால்களில், கைகள் வைத்தபடி நின்றதைப் பார்த்து மனம் அமைதியடைந்தேன். அதற்குள் நண்பர்கள் அவர்கள் வாங்கிய புத்தகங்களுடன் (ஓஷோவின் அனைத்து புத்தகங்களும்) வர, வெளியிலிருந்த அரங்கில் வைரமுத்து பேச ஆரம்பித்திருந்தார். சிறிது நேரம் பேச்சைக் கேட்டுவிட்டு கிளம்பினோம்.

வீட்டிற்கு வந்த முதல் வேலையாக எஸ்.ராவின் புத்தகம் படித்துவிட்டு, சுடச்சுட, பதிவு போட்டேன்.

 8 ஜனவரி 2011 - சனிக்கிழமை


பையனிடம், புத்தகம் வாங்கிவிட்டு 1 மணி நேரத்தில் வந்துவிடுவோம் என்று சொல்லி, அண்ணன் வீட்டில் விட்டு விட்டு நானும், என் மனைவியும், புத்தகக்காட்சிக்கு போன போது, மணி 4.

நேற்று போல இல்லாமல், கூட்டம் அதிகமாக இருந்தது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. விளம்பரங்கள் (அதிகமாக) செய்யாமலேயே மக்கள் வருவது நல்லதே. செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில், நீர் சேமிப்புக்காக ஆங்காங்கே, சிறு சிறு கிணற்றை இயற்கையே கட்டிவைத்திருக்கிறது. இயற்கையை பாழ்படுத்த விருப்பமில்லாமல், பள்ளங்களை அப்படியே பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வழியாக காரை நிறுத்திவிட்டு வந்தால், டிக்கெட் வாங்குமிடத்தில் மலைப்பாம்பு போல பெரிய க்யூ நின்றிருந்தது. ஒரு கவுண்டரில் மட்டுமே டிக்கெட் தந்து கொண்டிருந்தார்கள்.

நேற்று, ஒவ்வொரு வரிசைக்கும் முன் ஒட்டியிருந்த ஸ்டால் பெயர்கள் அடங்கிய போஸ்டர் கிழிக்க (??) / நீக்கப்பட்டிருந்தது. ஸ்டால்களைக் கண்டுபிடிப்பதற்கு ஷெர்லாக் ஹோம்ஸ் உதவியை நாட வேண்டியிருந்தது.

குழந்தைகளுக்கான புத்தகங்கள் விற்கும் ஸ்டால்களை நோக்கி என் மனைவி போக, நான் உயிர்மைக்கு வந்தேன்.

னுஷ்யபுத்திரனிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டிருந்தனர். நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். எஸ்.ராவின் ”பதினெட்டாம் நூற்றாண்டின் மழை” வாங்கும் போது கார்க்கி தன் நண்பர்களுடன் வந்திருந்தார். எஸ்.ராவின் “உறுபசி” ஸ்டாக் இல்லையென்றார்கள். ஹிந்திக்காரர்கள் போல இருந்த இருவர், சுஜாதா போட்டோ போட்ட புத்தகங்களைப் பார்த்து, பில்கேட்ஸா? என்று ஹிந்தியில் கேட்டுக்கொண்டிருந்தனர். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, தலைவர் இன்னொரு பில்கேட்ஸ் என்பதில் சந்தேகமில்லையே.

திஷா, கண்ணதாசனின் சுயசரிதமான வனவாசம் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. கண்ணதாசன் பதிப்பகத்தில், வனவாசம் மற்றும் அகதா கிறிஸ்டியின் இரு புத்தகங்கள் வாங்கிவிட்டு, பில் போடும் இடத்திற்கு வந்தேன். பில் போடுபவர் (பதிப்பக உரிமையாளர் ??), அங்கு வேலை செய்பவர்களிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு, பார்க்கவே பயமுறுத்திக்கொண்டிருந்தார்.விசா பதிப்பகத்தில் நிறைய சுஜாதா புத்தகங்களை வாங்கிவிட்டு, ஐந்தாவது அத்தியாயம் மற்றும் ”கிளியோபாட்ரா”, கிழக்கில் வாங்கிய போது, நேற்று வந்த கால் வலி, இந்த முறை அரைமணி முன்னரே வந்துவிட்டது. 1 நாளில் அவ்வளவு வயசாகுமா என்ன ?. அதற்கு மேல் புத்தகங்கள் வாங்க பொறுமையில்லை. பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்துக்கொண்டு (அரங்கில் வாலியைப் பற்றி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். வாலி பேச ஆரம்பிக்கும் வரைக் காத்திருக்க முடியாததால்) 1 மணி நேரம் ட்ராபிக்கில் ஊர்ந்து வந்தபோது, அண்ணன் வீட்டில் இருந்த என் பையன் அழ ஆரம்பித்திருந்தான்.

வாங்கிய எல்லா புத்தகங்களையும், அதன் புத்தக வாசனையோடு, அவற்றின் முன்னுரைகளையும் படிப்பதே ஒரு ஆனந்தம் தான்.

ந்த வருடம் தேடியும் கிடைக்காத ஒரு புத்தகம் - இந்திரா சௌந்தர்ராஜனின் “வானத்து மனிதர்கள்” (எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்).

அனைவருக்கும் புத்தகங்களோடும், கரும்போடும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

11 பின்னூட்டங்கள்:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

King Viswa said...

// இந்த வருடம், புத்தகக்காட்சி இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் வகையில் விளம்பரங்கள் இல்லாமல் இருந்தது//

நண்பரே,
ஒன்றாம் தேதி முதல் தமிழின் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும், ரேடியோக்களிலும், விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுவுமில்லாமல் அவர்களின் தளத்திலும் போதிய விவரங்கள் அளித்துக்கொண்டு (ரெகுலராக அப்டேட் செய்து) வருகிறார்கள்.

புத்தக கண்காட்சி ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

பின்னோக்கி said...

நன்றிகள் ராமலஷ்மி
நன்றிகள் கிங் விஷ்வா - போன வருடத்தை கம்பேர் செய்து சற்று அதிகமாக எதிர்பார்த்ததன் விளைவு என்று நினைக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் பின்னோக்கி - புத்தகக் கண்காட்சியில் ஒரு நேரடி ஒளி பரப்பு - நன்று நன்று. வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் படித்து இடுகை இடுக. எஸ்ராவின் சுடச்சுட இடுகை போலவே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அமுதா said...

நல்ல பகிர்வு. நானும் நேற்று சென்றிருந்தேன். கால்வலியால் இரண்டு மணி நேரம் தான் சுற்ற முடிந்தது. அதற்குள் முடிந்தவற்றை அள்ளி விட்டு வந்துவிட்டோம்.

ஸ்ரீராம். said...

இரண்டு முறையா.... வாயிலேருந்து புகை...

King Viswa said...

//போன வருடத்தை கம்பேர் செய்து சற்று அதிகமாக எதிர்பார்த்ததன் விளைவு என்று நினைக்கிறேன்//

இந்த வருடமும் கலைஞர் வந்து இருந்தால் விளம்பரம் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்து இருக்கலாம்.

முதலில் கலைஞர் வருவதாக இருந்தது. அதனால் தான் இருபத்தி ஏழாம் தேதியில் இருந்து நான்காம் தேதி என்று ஆரம்பிக்கும் நாளே மாற்றப்பட்டது. பின்னர் ஏனோ தெரியவில்லை, திடீரென்று கலைஞர் வரவில்லை. அதனால் முதல் இரண்டு நாட்கள் அந்த அளவுக்கு போஸ்டர்களோ, விளம்பர அதிரடிகளோ காணப்படவில்லை.

சிவாஜி சங்கர் said...

:) Gud Selections... :)

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நல்ல பகிர்வு

கிருபாநந்தினி said...

பொங்கல் வாழ்த்துக்கள் பின்னோக்கி! புத்தகச் சந்தையில் வாங்கிய நல்ல புத்தகம் பற்றிப் பதிவு போடுங்ணா!

ஜோதிஜி said...

சொகமாயிருக்கீகளா?