12 February 2010

(எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் - 12.02.2010

இன்று காலை அலுவலகத்திற்கு போய்கொண்டிருக்கும் போது, முன்னால் சென்ற ஆட்டோவின், பின்புறம் எழுதியிருந்த வாசகம் “இந்த ஓட்டுனர் அவசர கால முதல் உதவி செய்வதில் பயிற்சி பெற்றவர்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. விபத்து ஏற்படும் போது, பெரும்பாலும் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுவது ஆட்டோக்கள் என்பதால், இது மிகவும் வரவேற்கத்தக்கது. முதல் உதவி பயிற்சியை, ஓட்டுனர் உரிமம் பெறும் அனைவரும் கற்கவேண்டும் எனக் கட்டாயமாக்கலாம்.


பல காலம் முன் பார்த்த ஒரு விளம்பரம் நியாபகத்திற்கு வருகிறது. “நீங்கள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது இதைப் படித்தால், இந்த விளம்பரம் உங்களுக்கு மிகவும் அவசியமானது”. அந்த விளம்பரம் ஒரு இன்ஸீரன்ஸ் நிறுவனத்தினுடையது.


பெங்களூரைச் சார்ந்த “ஸ்ரீ ராம சேனா” என்ற அமைப்பின் தலைவரின் முகத்தில் சிலர் கருப்பு வர்ணத்தைப் பூசிவிட்டார்கள். இவர் போன வருடம், காதலர் தினத்தன்று, திருமணமாகாத ஜோடிகள் யாராவது கண்ணில் பட்டால், அவர்களுக்கு கட்டாயத்திருமணம் செய்து வைக்கப்படும் என்று எச்சரித்தார்.

சமுக காவலர்களான இந்த அமைப்பினர், போன வருடம் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து, அங்கு நடனமாடிக் கொண்டிருந்த பல பெண்கள் மற்றும் ஆண்களை அடித்து வெளியே தள்ளினார்கள். இந்த வருடமும் இவர் காதலர்களை எச்சரிக்கை செய்து, டி.விக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது, சிலர், இவரின் முகத்தில் கரி பூசிவிட்டார்கள். முதல் தாக்குதல் நம்முடையதாக இருக்கட்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.

கல்யாணமாகாத ஏழை காதல் ஜோடிகள் இலவசமாக திருமணம் செய்துகொள்ள எளிதான ஒரு வழி, 14 ஆம் தேதி, இந்த அமைப்பின் தொ(கு)ண்டர்கள் முன் சென்று நிற்பதே.


நான் வசிக்கும் பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 30 கொலைகள் நடந்து விட்டது. இதனால் போலீசார் வழக்குகளை ஒழுங்கான முறையில் நடத்த வேண்டும் என்று ஒருவர் கோர்ட்டில் கேஸ் போட, இப்பொழுது, எங்கள் சாலையில் எப்பொழுதும் ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. இன்று என் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களின் விபரங்களை (போன் நம்பர், வேலை விபரம், வாட்ச்மேன், வேலைக்காரர்களின் பெயர், கார்/பைக் எண்) போலீசார் சேகரித்துச் சென்றனர். இந்த விபரங்களைத் தர தயக்கமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியதாயிற்று. போலீசார், விபரங்களை பத்திரமாக வைத்திருப்பார்கள் என்று நம்புவோமாக.

10 February 2010

காதலர் தினத்தில் பாபர்

கரிகாலன் காலப் போல ....

எப்படியும் சாமர்கண்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற வெறி என்னுள்...

தமிழ்ப்படம் ஹிட்டுன்னு எங்களுக்கு தெரியும். ஆனா இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை....

எதிரியின் குதிரை மிக அருகில் வந்துவிட்டது. தப்பிக்க வேண்டும். வேறு வழியில்லை....

இப்படி 500 வருடங்களுக்கு முன்னும், பின்னும் சில நொடிகளில் சென்றவாறு, சென்ற வாரம் படித்த புத்தகம்


பாபர்               - தமிழில் ச.சரவணன்
வெளியீடு - சந்தியா பதிப்பகம்

நீண்ட காலமாக வரலாற்றை ஆர்வமுடன் படிப்பவர்கள் எதிர் நோக்கும் கேள்வி “அத எல்லாம் தெரிஞ்சு என்ன பண்ண போற ?”. அதற்கு விடையாக இந்த புத்தகத்தில் ”சாதாரண மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது அரசியல். அரசியலை நிர்ணயிப்பது வரலாறு. எனவே வரலாற்றைத் தெரிந்துகொள்வது முக்கியம்” என்ற விளக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொகலாயப் பேரரசு இந்தியாவில் அமைவதற்கு காரணம் பாபர். பானிப்பட் போரில் இப்ராஹிம் லோடியை வென்று, இந்தியாவிற்குள் நுழைந்தவர் என்ற அளவிலேயே இவரைப் பற்றி படித்திருக்கிறேன்.

பாடபுத்தகங்களில் அரசர்களை, ஒரு தெய்வப்பிறவிக்கு ஒப்பாகவே எழுதியிருப்பதால், அவர்களும் சாதாரண மனிதர்கள் என்ற உணர்வே எழுவதில்லை. ஆனால், இந்த புத்தகம், பாபர் எழுதிய சுய சரிதை நூலைப் பின்பற்றி எழுதியுள்ளதால், தன்னிலையில் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

”எதிரிகள் எங்கு வருகிறார்கள் என்று பார்ப்பதற்கு என் குதிரையிலிருந்து திரும்பி பார்த்தேன். குதிரையின் சேணம் திருப்பிக் கொண்டதால் நான் தலை குப்புற கீழே விழ நேர்ந்தது. “

”பசியின் காரணமாக குதிரையைக் கொன்று பசியாறினோம்”

“நான் என் அம்பினை எடுத்து டாம்பாலின் தலையை நோக்கி எய்தேன். இதே நேரத்தில் எங்கிருந்தோ வந்த அம்பு என் வலது தொடையைக் கிழித்துக்கொண்டு சென்றது. டாம்பால் என்னை நெருங்கி வாளால் என் தலைக் கவசத்தில் அடித்தான். நிலைகுலைந்து போனேன். வேறு வழியின்றி குதிரையைத் திருப்பி, தப்பித்து வந்தேன்.”

இந்த வரிகளைப் படிக்கும் போது, பாபரும் மனிதப் பிறவி; அவரும் போரில்  திரைப்படங்களில் காண்பிக்கப்படும் போர்க்காட்சிகள் போலில்லாமல், தனி ஆளாக சென்று எதிரியிடம் மாட்டிக்கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தப்பித்தது புரிகிறது.

“நீ எழுதிய கடிதங்களை அனுப்புவதற்கு முன் நீ படித்துப் பார்ப்பதில்லை. நீ அதை படிக்க முயற்சித்திருந்தால் உன்னால் முடிந்திருக்காது; உன்னுடைய கிறுக்கலான எழுத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தன் மகன் ஹீமாயூனின் கடிதங்களை விமர்சிக்கிறார்.

இந்த புத்தகத்தின் குறைகள் என்று பார்த்தால், இதன் மொழிபெயர்ப்பு சில இடங்களில் படிப்பதற்கு கடினமாக இருக்கிறது.  மிக நீண்ட, கமா இல்லாத வாக்கியங்கள் குழப்புகிறது. எழுத்துப்பிழைகளையும் அடுத்த பதிப்பில் திருத்திவிடுவார்கள் என்று நம்புகிறேன். ஆரம்ப அத்தியாயங்களில் பாபரின் வம்சா வழியினர் பற்றிய பல பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை அனைத்தையும் மனதில் கொள்வது கடினமாக இருக்கிறது.

வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள் இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.

இந்த பதிவிற்கு ஏன் இந்த தலைப்பு என்ற சந்தேகம் கொள்பவர்களுக்காக: கி.பி 1483 ஆம் வருடம் காதலர் தினத்தன்று பாபர் பிறந்தார்.