29 November 2009

தொடராதே - துப்பறியலாம் வாங்க

துப்பறிதல் என்பது பெரிய புதிர் கட்டத்தைப் போன்றது. சின்ன சின்ன க்ளூக்களை சேகரித்து, அதனதன் இடத்தில் சரியாக பொருத்தினால் புதிரை விடுவிக்கலாம். அந்த மாதிரி சின்ன சின்ன தடயங்களை அதனதன் இடத்தில் பொருத்தி குற்றவாளியைக் கண்டுபிடித்த ஒரு வழக்கு தான் இது.

----
48 வயதான மேரிக்கு ஒரு நாள் வந்த கடிதத்தில், அவரின் புகைப்படம் மற்றும் மிரட்டல் கடிதம் வந்தது.இந்த வயதில் அப்படி ஒரு புகைப்படம் யாருக்கு எப்படி கிடைத்தது என்று அதிர்ச்சி.

“உன்னால் என் மனைவிக்கும் எனக்கும் பிரச்சினை. அதற்கு காரணமானவள் நீ. உயிருடன் இருக்கத் தகுதியில்லாதவள்”

பயந்து போன மேரி, கணவர் ஜானுடன், போலீசுக்கு சென்று, தனக்கு பாதுகாப்புக் கோரினார். பாதுகாப்பு கொடுத்த காலத்தில் எந்த மிரட்டல் கடிதமும் வரவில்லை.

மேரியும், தனக்கு ஏன் அந்த மாதிரி கடிதம் வந்தது என்று தெரியவில்லை என ஜானிடம் கூறினார். இந்நிலையில் வந்த இன்னொரு கடிதத்தில்

“போலீசால் உனக்கு பிரயோஜனம் இல்லை. உன் வீட்டு பாதுகாப்பு அலாரத்தின் சீக்ரெட் கோட் 7805. உனது பிள்ளைகளின் நடவடிக்கை கூட எனக்குத் தெரியும்.”

இவ்வளவு தகவல் ஒருவனுக்கு தெரிந்திருக்கிறது என்றதும், ஜானுக்கும் மேரிக்கும் இடையில் சிறிய பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு நாள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் வீட்டை விட்டு வெளியேறிய மேரி, பிறகு வீடு திரும்பவே இல்லை.

ஒரு நாள் கழித்து மேரியின் கார், சூப்பர் மார்கெட் பார்க்கிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. கார் மட்டுமல்ல, உயிரற்ற மேரியும். போஸ்மார்டத்தில் தெரிந்த தகவல்கள்.
- கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம்.
- மேரியின் பேண்ட் முன் பக்கம் பின் பக்கமாக தவறாக போடப்பட்டுள்ளது.
- மேரியின் பேண்ட்டில் இருந்த ஈரம், காரில் இல்லை. அதனால் காரில் அவர் கொல்லப்படவில்லை
- மேரி, மரணமடைந்த பிறகு, உடல் நகர்த்தப்பட்டிருக்கிறது. உடலில் இருந்த சிராய்ப்பின் தன்மை இதனை உறுதி செய்தது.

மேரியின் காரை சூப்பர் மார்க்கெட்டில் நிறுத்தியது கொலையாளிதான். சூப்பர் மார்கெட்டில் காரை நிறுத்தி விட்டு அப்படியே கொலையாளி சென்றிருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் அப்படி சென்றிருந்தால் அது பார்ப்பவர்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால், கொலையாளி, சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. கடையிலிருந்த வீடியோ காமிராவை ஆராய்ந்ததில், தொப்பி, கருப்பு நிற ஜெர்க்கின் அணிந்த ஒருவன் மேல் சந்தேகம் வந்தது. காலை 6 மணிக்கு வந்த அவன் வாங்கியது நாய் பிஸ்கெட் மட்டுமே. மேலும், காமிராவில் தன் உருவம் விழக்கூடாது என்பதற்காக பதுங்கி பதுங்கி நடந்திருப்பது தெரிந்தது.

அந்த உருவத்தை அடையாளம் காண மேற்கண்ட முயற்சி வெற்றியடையவில்லை. காரணம், வீடியோ குவாலிட்டி நன்றாக இல்லை. முகமும் தெளிவாக பதிவாக வில்லை. போட்டோகிராமெட்ரி எனப்படுகிற 2D போட்டாவை வைத்து 3Dயாக மாற்றக்கூடிய நிபுணர்கள், வீடியோவை ஆராய்ந்தார்கள்.வீடியோ காமிராவை நிலையான இடத்தில் பொருத்தியிருந்ததால் அவர்களின் வேலை எளிதானது. முதல் படத்தில் தெரிபவன் தான் கொலையாளி (இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனினும் இப்போதைக்கு இவனை நாம் சந்தேகப்படுவோம்). அவன் பின் புறம் இருக்கும் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ்சின் அளவுகளை கண்டறிந்தனர். அதே இடத்தில் உயரத்தை அளக்கும் கருவி ஒன்றை நிறுவி அதைப் புகைப்படம் எடுத்து ஆராய்ந்ததில் அவனது உயரம் 5 அடி 6 அங்குலம் என முடிவானது.

மேரியின் பேண்டில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஆராய்ந்ததில், கார்பரண்டம், மேக்னடைட் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் காணப்பட்டது. மேரியின் வீடு மற்றும் 5 இடங்களில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில், மேரியின் வீட்டு வாசலில் எடுக்கப்பட்ட மண், பேண்டிலிருந்த மண்ணுடன் ஒத்துப்போனது. இப்பொழுது போலீசுக்குத் தெரிந்த இரண்டு தகவல்கள் 1. மேரி கொல்லப்பட்டது அவரின் வீட்டு வாசலில் 2. கொலையாளி 5 அடி 6 அங்குல உயரமானவன்.

மேரியின் வீட்டை ஆராய சர்ச் வாரண்ட் வாங்கப்பட்டது. வீட்டை ஆராய்ந்த போது, நாயைக் கட்டிப் போடும், நைலான் கயிற்றில் காணப்பட்ட குமிழ் போன்ற அமைப்பு, மேரியின் கழுத்தில் காணப்பட்ட காயத்தின் அடையாளத்துடன் ஒத்துப் போனது. ஜானை விசாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதை போலீசார் உணர்ந்தனர்.

போலீஸ்: கடைசியாக உங்கள் மனைவியை எப்பொழுது பார்த்தீர்கள் ?
ஜான் : இரவு 10 மணி, பிள்ளைகள் வெளியே போயிருந்தனர். எனக்கும் மேரிக்கும் சிறிய வாக்குவாதம். அதில் கோபமடைந்து மேரி வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள்.
போலீஸ்: உங்கள் மனைவி கொல்லப்பட்டது, நாயைக் கட்டி போடும் நைலான் கயிற்றினால் எனக் கண்டுபிடித்திருக்கிறோம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
ஜான்: உண்மையை சொல்லி விடுகிறேன். மேரியைக் கொன்றது நான் இல்லை. எனது மூத்த மகன் டேவிட். மேரியுடன் சண்டையிடும் போது, கொன்று விட்டான்.

போலீஸ் இதனை நம்பத் தயாராகயில்லை. விசாரித்த வரை, மேரியின் மூன்று பிள்ளைகளும் அவருடன் மிகவும் பாசமாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள்.

இந்நிலையில் போலீசுக்கு இன்னொரு கடிதம் வந்தது. அதில்
“பாவம் ஜானை சந்தேகப்படுகிறீர்கள். மேரியைக் கொன்றது நான் தான். அவள் எனது உறவை முறிக்க விரும்பினாள், நான் அவளது கழுத்தை முறித்து விட்டேன். இவளோடு சேர்த்து 5 பெண்களைக் கொன்றிருக்கிறேன். கொலை செய்வதில் நல்லத் தேர்ச்சி வந்துவிட்டது எனக்கு”

இக்கடிதத்தை ஆராய லிங்குவிஸ்ட்டிக் நிபுணரிடம் கொடுத்தனர். அவர் இதுவரை வந்த மூன்று கடிதங்களையும் ஆராய்ந்து முடிவில் தனது அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார்.

“ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் வேவ்வேறு பொருள் படும் படி எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக “she BREAK my relationship, i BROKE her neck". இது கடைசிக் கடிதத்தில் காணப்பட்டது. இதே போல மற்ற இரண்டு கடிதங்களிலும் இருக்கிறது”

“நேர்மறை வார்த்தைகளையும் எதிர் மறை வார்த்தைகளையும் வித்தியாசமாக எழுதும் பழக்கம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ”she is there. i have been following her" போன்ற நேர்மறைக் கருத்துக்களை எழுதியவன் எதிர் மறைக்கருத்துக்களை ”she isn't there. i don't know" போன்று சுருக்கி எழுதி இருக்கிறான்”

ஜான் எழுதிய சில கடிதங்களை ஆராய்ந்த போது இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை கண்டுபிடித்தனர்.

ஜானின் உயரம் 5 அடி 6 அங்குலம். அவன் வீட்டில் கருப்பு நிற ஜெர்க்கின் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், நாய் பிஸ்கெட் வாங்கியதற்கான ரசீது இருந்தது. இந்த ஆதாரங்களை வைத்து ஜானைக் குற்றவாளி எனக் கோர்ட்டில் நிறுத்தினார்கள்.

என்ன நடந்தது ?
ஜானுக்கும் மேரிக்கும் திருமண வாழ்வில் பிரச்சினை. மேரி, ஜானை விட்டு பிரிய தயாராக இருந்தார். அந்த நிலையில் மிரட்டல் கடிதம் வந்தால், மேரியைக் காப்பாற்றும் ஹீரோ போல செயல்பட்டு, அவரிடம் நல்ல பெயர் வாங்கலாம். அதன் மூலம் மண வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருக்கும் என ஜான் நினைத்தான். அதனால் தான் அந்த மிரட்டல் கடிதங்களை எழுதினான். அன்று இரவு ஏற்பட்ட சண்டையில், ஜான் ஆத்திரமடைந்து, அருகில் இருந்த நாயைக் கட்டிப்போடும் நைலான் கயிற்றை வைத்து மேரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். மேரிக்கு பேண்ட் அணிவிக்கும் போது தவறுதலாக முன், பின் பக்கங்களை மாற்றி அணிவித்து, உடலை வீட்டு வாசலில் இழுத்து வந்து காரில் ஏற்றி, வீட்டுக்கு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் காரை நிறுத்தி விட்டு, சந்தேகத்தை தடுக்க, சூப்பர் மார்க்கெட் உள் சென்று வந்திருக்கிறான்.

இந்த வழக்கில் மூன்று விதமான தடய நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஜானுக்கு ஆயுள் தண்டணை கிடைக்க உதவியாக இருந்தார்கள்.

28 November 2009

சர்வேசன் நச் - வோட்டிங் ஆரம்பிச்சாச்சு

சர்வேசன் “நச்” கதைப் போட்டியில் முதல் கட்டமாக 20 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

நான் எழுதிய (??!!!) கதையும் 20-ல் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த வலைத்தளத்திற்கு சென்று 20 கதைகளையும் படித்துவிட்டு, உங்களுக்கு பிடித்தமான கதைக்கு ஓட்டு போடுங்கள்.

.
$70 உதவும் கரங்களுக்கு இந்த போட்டியின் மூலம் தரப்படும். நல்ல விஷயம். ஆதரவு அளியுங்கள்.

-----
24 டிசம்பர் 2009

முதல் பரிசு நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி
இரண்டாம் பரிசு அப்பா சொன்ன நரிக்கதை
பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

26 November 2009

மாறும் ரசனைகள் - புத்தகங்கள்

ஜனவரி முதல் ஏப்ரல் வரை

ஜனவரி மாதம் பொங்கலையொட்டி ஆரம்பிக்கும் புத்தகக் கண்காட்சிக்குப் போவதிலிருந்து தொடங்கும் என் வாசிப்பு பழக்கம். எல்லாரும் சாரு நிவேதிதா, ஜெயமோகன் எழுதுன புத்தகம் எல்லாம் படிச்சுருக்கியான்னு  கேட்கக் கேட்க, அப்படி என்ன தான் அவங்க எழுதுறாங்கன்னு வாங்கி பார்த்துடுவோம்னு புத்தகக் கண்காட்சிக்குப் போனேன்.
 

வழியில் “பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம்” புத்தகங்களை வாங்குறவங்களப் பார்த்தப்ப, மலை மேல ஏறிட்டு இறங்கி வர்றப்ப, அப்ப ஏறுறவங்கள பார்க்கும் போது தோணுமே, ”இப்பத்தான் ஏற ஆரம்பிச்சுருக்கீங்களான்னு” அது மாதிரி ”ம்ம்..இப்பத்தான் இந்த புத்தகமெல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கீங்களான்னு” ஒரு அலட்சியப் பார்வை பாத்துட்டு, சாரு நிவேதிதா எழுதுன சில புத்தகத்த எடுத்து ஒரு ரெண்டு பக்கம் படிச்சேன். தமிழ்ல தான் எழுதியிருந்தாரு. ஆனா இதுவரை நான் கேள்விப்படாத வார்த்தைகள். அப்படியே புத்தகங்களை வைத்துவிட்டு,சைலண்டா, சுஜாதாவின் நைலான் கயிறு, பாலகுமாரனின் இரும்புக்குதிரை, அகதா கிறிஸ்டியின் ஸ்டேல்ஸில் நடந்தது என்ன மற்றும் சா.கந்தசாமி எழுதிய தொலைந்து போனவர்கள் வாங்கிட்டு வந்து, பரீட்சைக்குப் படிக்குற மாதிரி மாங்கு மாங்குன்னு படிச்சு முடிச்சேன்.
 
அடுத்த ரெண்டு வாரத்துக்கு பார்க்குறவங்க கிட்ட எல்லாம்
“நைலான் கயிறு படிக்காதவன் துப்பறியும் நாவலே படிக்கக்கூடாது”
“.90 வருஷத்துக்கு முன்னாடி அகதா கிறிஸ்டி எப்படி எழுதியிருக்காங்க பாரு.”
“இரும்புக்குதிரையில லாரி கம்பெனி நடக்குறதப் பத்தி நாம உட்கார்ந்து பார்க்க்குற மாதிரி என்னமா எழுதியிருக்காரு ?” ன்னு பந்தா பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
 
என் ஃப்ரண்டு “நீ கார்ல் மார்க்ஸ் எழுதுன நவீன தொழில் கொள்கை படிச்சுருக்கியான்னு” கேட்டப் பிறகுதான் அடங்குனேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் தான் தெரிஞ்சது, அவரு அந்த மாதிரி புத்தகம் எதுவும் எழுதலைன்னு.
 
இன்னும் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், அகதா கிறிஸ்டியின் பிற நாவல்கள் படிக்காமல் அப்படியே இருக்கிறது. ஏப்ரல் மாத முடிவில் படிப்பு தாகம் அடங்கிய பிறகு புத்தகத்தின் பக்கமே போக மாட்டேன். இதோ வந்துடுச்சு அடுத்த புத்தகக்கண்காட்சி. பாலகுமாரன் எழுதிய ”உடையார்” புத்தகம் வாங்கி அடுத்த ஒரு வருஷத்துக்குள்ளயாவது படிச்சு முடிக்கணும். இன்னும் நிறைய புத்தகம் வாங்கணும்.

22 November 2009

த்ரில்லர்-டிவிஸ்ட்-திருட்டு-வாழ்க்கை படங்கள்

3 வருடங்கள் முன்பு வரை நான் பார்த்திருந்த ஆங்கிலப்படங்களின் எண்ணிக்கை கை-கால் விரல்கள் தான். அதிலும் வசனமே தேவைப்படாத அல்லது வசனம் இருந்தாலும் புரியாத ஜாக்கிசான்,புரூஸ்லீ, இயற்கை பேரழிவு, ஸ்பைடர், சூப்பர் மேன் படங்கள் தான் அதிகம்.நான் ஞானம் பெற்றது 3 வருடங்களுக்கு முன் தற்செயலாக பார்த்த Panic room படத்தினால். பஸ் டிக்கட்டின் பின்புறம் எழுத முடிகிற கதையை வைத்து, நம்மை நகம் கடிக்க வைத்த, திரைக்கதையின் அறிமுகம் கிடைத்த உடனே imdb.com வெப்சைட் போய் அது மாதிரி த்ரில்லர் படங்களைத் தேடிப் பார்த்தது Phone booth, Cellular, Ransom, Dejavu, Flightplan, Se7en, Transsiberian, Runaway Train. இந்தப் படங்களை ரசிப்பதற்கு வசனம் புரிய வேண்டிய அவசியமில்லையென்றாலும், காட்சி அமைப்புகளில் பின்னியிருப்பார்கள். அப்படியும் படம் பார்த்து முடித்த உடன், விக்கிப் (wiki) போய் படத்தின் முழுக்கதையையும் ஒழுங்காக படித்துப் புரிந்து கொள்வேன்.

6 மாதம் கழித்து vlc மீடியா ப்ளேயர் மற்றும் சப்-டைட்டில்கள் அறிமுகம் கிடைத்த உடன், இன்னும் அதிகமான வசனமுள்ள படங்களைப் பார்ப்பதற்கு தைரியம் (??!!!) வந்தது.
Sixth Sense பார்த்த பிரம்மிப்பில், அந்த படம் மாதிரி, முடிவில் டிவிஸ்ட் உள்ள படங்களைப் பார்ப்பது என்று தீர்மானித்து, அது போன்ற படங்களான The Prestige, The Game, The Mist, Usual Suspects, The Departed, The Others, Momento, The Illusionist, Fight Club, The Village, Skeleton Key, Stay, Saw 1, Unforgettable, The Spannish Prisoner, Identity, Matchstick Men, Next  பார்த்தேன். நேற்று அந்த மாதிரி பார்த்த டிவிஸ்ட் படம் Orphan.


திருடுவதற்கு உகந்த வைரம், தங்கம், பணம். நுணுக்கமான திட்டம். அதை செயல்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினை. இது போல வந்த படங்களில் நான் பார்த்தது Italian Job, Inside Man, The Bank Job, The Score, Flawless, The First Great Train Robbery, Dog Day Afternoon, A Perfect Murder, Femme Fatale, Ocean's Eleven.


தமிழ் படங்களைப் போல பாசம், சோகம் போன்ற உணர்வுகளை மையமாக வைத்து, 2 மணி நேரங்கள் ஓடும், நிறைய வசனங்களுடன் கூடிய சில நான் பார்த்த ஆங்கிலப் படங்கள் The Shawshank Redemption, Casino, Heat, A Beautiful Mind, Flash Of Genius, Zodiac,  The Curious Case of Benjamin Button , Forest Gump, Cast Away, Blood Diamond, Arlington Road , Troy, Before SunRise, Before Sunset, Mystic River, Hotel Rwanda, The Lost King of Scotland

மேலே குறிப்பிட்டுள்ள பல படங்கள் வெவ்வேறு காலங்களில் நடக்கும் கதை. பீரியட் படங்களை அவர்கள் எடுக்கும் நேர்த்தி பிரம்மிப்பூட்டுகிறது. ஆங்கிலப்படங்கள் நன்றாக இருந்தாலும், அதை தமிழ் படங்களுடன் ஒப்பிட்டு, தமிழ் படங்களை மட்டம் தட்டுவது எனக்கு தேவையில்லாத செயலாகப் படுகிறது. அவர்களின் கதைக்களன், வாழ்வியல், செலவழிக்கும் பணம் மற்றும் உலகலாவிய ரசிகர்கள் என்று வேறுபாடுகள் மிக அதிகம்.

ரசிப்பதற்கு The Shawshank Redemption னும் வேண்டும் குத்துப்பாட்டுக்களுடன் கூடிய தமிழ் படங்களும் வேண்டும்.

நன்றி:
கீதப்ப்ரியன்
ஹாலிவுட் பாலா
மச்சான்ஸ்
imdb.com

13 November 2009

உடனே தப்பிக்கணும் !!!

எங்கே இருக்கிறேன் என்றேத் தெரியவில்லை. ஒரே இருட்டு. சத்தம் துளி கூட இல்லை. சத்தமே இல்லையென்றால் ங்கொய்ங்ங்... என்ற சத்தம் கேட்குமே அனுபவித்திருக்கிறீர்களா ?. நான் அனுபவிப்பது இது தான் முதல் முறை.

கொஞ்சம் முயன்று எழுந்து உட்கார முடிந்தது. நிற்கலாம் என்றால் தலை இடித்தது. அடித்துப் போட்டது போல உடலில் வலி. கொஞ்சம் நகர்ந்து, இந்த அறையின் கதவு எங்கே என்று தேட வேண்டும். கதவு இல்லாத அறை என்று ஒன்று இருக்காது என்ற நம்பிக்கைதான்.

அட..மெதுவாக நகர முடிகிறது இப்போது. இருட்டில் இலக்கில்லாமல் மெதுவாக நகர்ந்து கொண்டே இருக்கிறேன். என் பின் புறத்தில் சிறிய வெளிச்சம் தெரிகிறது. திரும்ப கடினமாக இருந்தது, திரும்பினேன். வெளிச்சத்தைப் பார்த்து மெல்ல நகர்ந்தேன்.

எதோ சத்தம் கேட்கிறது. யார் என்னை அடைத்து வைத்திருப்பது ?. அவர்களின் நோக்கம் என்ன ? என்னை என்ன செய்யப் போகிறார்கள். பயம் அதிகமானது.


“ஒரு நாள் பொறுத்துக்கலாம். இவன் அப்பனுக்கு போன் பண்ணுனியா ?”

“போன் பண்ணுனேன் !. பணத்த நாளைக்கு கொண்டு வர வேண்டிய இடத்த சொல்லிட்டேன். போலீசுக்கு போனா, உன் மகன பொணமாத்தான்
பார்ப்பன்னு மிரட்டினதுல பயந்த மாதிரி தான் இருந்தது”

“எனக்கும் நம்பிக்கை இருக்கு. அவன் போலீசுக்குப் போக மாட்டான். ஒரே பையன். அவனுக்கு இல்லாத பணமா ? நாம கேட்டது அவனுக்கு ஒரு தூசு”

“சரி ! நாளைக்கு பணம் கைக்கு வந்த உடனே சொல்லு. இவனக் கொன்னு, நாம ஏற்கனவே பார்த்த இடத்துல புதைச்சுட வேண்டியது தான்”

”எதுக்கு நாளைக்கு வரை காத்திருக்கணும். இப்பவே இவன முடிச்சுட்டா என்ன ?”

“அட முட்டாள் !. இவன் அப்பன் திடீர்ன்னு பையன்கிட்ட பேசுனாத்தான் பணம் குடுப்பேன்னு முரண்டு புடிச்சான்னா என்ன பண்றது ?”

“ஆமாம் ! நீ சொல்றது சரிதான்”

அடப்பாவிங்களா கொல்லவே திட்டமா ? எனக்குத் தலை சுற்றுகிறது மயக்கம் வருகிறது. இறுதி முயற்சி, கதவை முட்டி திறக்க முடியுமா ? முயன்று பார்க்கி....

“நார்மல் டெலிவரி. பையன். ஹெல்தியா இருக்கான். நர்ஸ் கொண்டு வருவாங்க” - என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றார்.

“ரொம்ப தேங்ஸ் டாக்டர்” - என்றாள் திலகம்.
.
.
.

”கீதா ! ஏண்டி என் பேரன் அழுதுகிட்டே இருக்கான் ?”

”என்னன்னு தெரியலைம்மா. திடீர்ன்னு கத்த ஆரம்பிச்சுட்டான்.”

”இதுக்குத் தான் சொன்னேன். இவன் வயித்துல இருக்கும் போது கொலை, கொள்ளைன்னு மெகா சீரியலா பார்த்துக்கிட்டு இருக்காத, கந்த சஷ்டி கவசம் கேளுன்னு. நீ கேட்டாத்தானே” - என்று தன் மகளைத் திட்டினாள் திலகம்.

11 November 2009

வெள்ளை உருவத்தில் வில்லன் [சர்வேசன்500 - நச் கதை 2009 - போட்டிக்கு]

கமலாவுக்கு புது இடத்திற்கு வந்த பின் உற்சாகமாக இருந்தது. முன்பு இருந்த இடம் 10 க்கு 10 என்ற கணக்கில் சிறிய இடம். நிறைய குடும்பங்கள் இருந்தன. எப்பொழுதும் ஒரே கூச்சல், குழப்பம், எங்கு பார்த்தாலும் அழுக்கு என்று நரகமாக இருந்தது. புதிய இடத்தில், இவளும், இரண்டு குழந்தைகள் மட்டுமே. அவர்களுக்கு விளையாட நிறைய இடம் கிடைத்தது.

“அம்மா ! இந்த இடம் நல்லாயிருக்கு. ஆனா விளையாடுறதுக்கு பழைய பிரண்ட்ஸ் மீனா, சந்தோஷ் இல்லை” என்றாள் பெரியவள் ரம்யா.

சின்னவள் கீதாவுக்கு, கமலா பின்னாடி சுற்றுவதிலேயே பொழுது போய்விடும்.

அன்று ரம்யா, கீதா சாப்பிடுவதை உறுதி செய்துவிட்டு, கமலா சற்று இளைப்பாறினாள். என்னவோ ரொம்ப சோம்பலாக உணர்ந்தாள். உணவு கூட சரியாக சாப்பிடமுடியவில்லை. தன் கணவன் ரவியை இழந்த அந்த நொடிகள் திரும்ப மனதில் ஓடியது. அவன் இருந்த போது என்னவொரு சந்தோஷம் குடும்பத்தில் ?. விதிதான் அவளை, அவனிடமிருந்து பிரித்தது. ரம்யாவும், கீதாவும் வளர்ந்த பின் அப்பா எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று நினைக்கும் போதே கண்ணீர் எட்டிப்பார்த்தது. ம்ம்..அழுதால் தெரியவா போகிறது !.

ஒரு நாள் சாயங்கால நேரம், ஜன்னலருகே கமலா பார்த்த போது யாரோ நின்று கொண்டிருப்பதைப் போல இருந்தது.

“யார் அங்க நிக்கிறது ?” என்று கேட்டுக்கொண்டே ஜன்னலருகே வந்தாள். யாரும் இல்லை. ஆனால் ஒரு உருவம் அங்கிருந்து போனதை மட்டும் பார்க்க முடிந்தது. அது கண்டிப்பாக ஒரு ஆண் தான். வெள்ளை மீசை மற்றும் நீலக் கண்கள்.

பயத்தில் “ரம்யா, கீதா” என்று கத்தினாள்

“இங்கதாம்மா விளையாடிக்கிட்டு இருக்கோம்” என்ற பதில் கேட்டு கமலாவுக்கு சற்று பதற்றம் குறைந்தது.

கமலாவுக்கு வயதானாலும் பள பளப்பான மேனி. யாரும் பார்த்தவுடன் வயதை குறைத்து தான் சொல்லுவார்கள். ரவிக்கு அவளிடம் பிடித்தது அவளது கண்களும், உடல் நிறமும் தான். பல முறை புகழ்ந்திருக்கிறான். இப்பொழுது அதுவே அவளது பயத்திற்கு காரணமாக இருந்தது. தனியாக வாழும் பெண், பாதுகாப்புடன் வாழ முடியுமா என்ற கவலை.

காலை வேளை கீதா இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள். ரம்யாவும் கமலாவும் ஜன்னலருகே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அது நிகழ்ந்தது !. ரவியை, அவளிடம் பிரித்த அதே வெள்ளை உருவம், பின்னாலே வந்து ரம்யாவை தூக்கியது. கமலா, ”ரம்யா ! ரம்யா” எனக் கத்த ஆரம்பித்தாள்.

“அம்மா ! அந்த குட்டி மீன வலையில எடுத்துட்டேன்”

“சீக்கிரம் அந்த பக்கெட் தண்ணியில போடு கிஷோர், இல்லைன்னா செத்துடும். மத்த ரெண்டு மீனையும் நான் எடுக்கிறேன். டேங்க் கிளீன் பண்ணிட்டு உன்னை கூப்பிடுறேன். அப்புறம் வந்து பாரு.”

”அம்மா ! அன்னைக்கு டாமி டேங்க் வெச்சுருக்குற டேபிள் மேல நின்னு, மீன பார்த்துகிட்டே இருந்துச்சும்மா ! நான் வந்தவுடனே என்ன பார்த்துட்டு ஓடிடுச்சு”

“பூனைங்க, மீன தின்னுடும். நான் டேங்க் கிளீன் பண்ற வரை, டாமிய பக்கத்துல கொண்டு வராத”

09 November 2009

இப்படியும் சிலர்

(இது கதையில்லை)

நான் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டும் போது, கட்டுமான பொருட்களை பாதுகாக்கும் பணியிலிருந்த தம்பதிகளையே, எங்கள் வீட்டு காவலர்களாக நியமித்தோம்.

அந்த தம்பதியினர், எங்கள் கார்களை வைக்கும் இடத்தில் இருந்த ஒரு காலியான இடத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஒரு பையன். சுமார் 20 வயது அவனுக்கு. கடினமாக படித்து, போரூருக்கு அருகிலிருந்த ஒரு தொழிற்சாலையில் வேலை. வாரத்திற்கு ஒரு முறை இவர்களை வந்து பார்ப்பான்.

ஒரு நாள் லிப்ட்காக காத்திருக்கும் போது
“வாங்க சார் ! சாப்பிட்டு போகலாம்” என்ற குரல் கேட்டு திரும்பினேன். அந்த பையன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அருகில் அவனின் பெற்றோர்கள். அப்பொழுதுதான் முதல் முறையாக அந்த பையனைப் பார்த்தேன்.
“பரவாயில்லை ! நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லி விட்டு லிப்ட்டில் ஏறினேன்.

சிறிது நாட்கள் கழித்து, வழக்கம் போல சென்னையில் பேய் மழை. நான்கு நாட்கள் கழித்து மழை சற்று ஒயவே, அலுவலகத்திற்கு சென்று விட்டு வந்தேன். காரை நிறுத்தி விட்டு லிப்ட்டுக்கு அருகில் வரும் போது, எங்கள் குடியிருப்பை சேர்ந்த சிலர் அங்கு கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்கு நடுவில் அழுதுகொண்டே அந்த அம்மா.

”என்னாச்சுங்க. எதாவது பிரச்சினையா ?” - நான்
“இவங்க பையன் வேலை முடிஞ்சு, கம்பெனி கதவ சாத்தி சாவி எடுத்துட்டு, மழை அதிகமா இருந்தனால, இங்க வரலாம்னு கிளம்பியிருக்கான். வழியில இருந்த சின்ன வாய்க்கால்ல நிறைய தண்ணி ஓடிக்கிட்டிருந்திருக்கு. பிரிட்ஜ் மேல ஏறாம, அடியிலயே நடந்து போய்டலாம்னு போகும் போது, சாவிய தவற விட்டுட்டான். குனிஞ்சு அத எடுக்கும் போது, தண்ணி அடிச்சுகிட்டு போய்டுச்சு” என்றார் ஒருவர்.

இரண்டு நாட்கள் கழித்து அவன் உடலை கண்டுபிடித்தனர். நாங்கள் அரசாங்கம் அறிவித்திருந்த உதவித்தொகையை வாங்க விண்ணப்பம் பூர்த்தி செய்து, எங்கள் குடியிருப்பின் சார்பாக ஒரு தொகை அளித்தோம்.

அடுத்த ஒரு மாதம், அந்த பையனின் சரிவர பார்க்காத முகத்தின் நியாபகம் வந்து கொண்டேயிருந்தது.

மகனை இழந்த சோகத்தில், எங்கள் குடியிருப்பு வேலை வேண்டாம் என்று சொல்லி, சொந்த ஊருக்கு போய்விட்டார்கள். அவர்களின் சில பொருட்கள் இங்கு இருந்தது.

ஒரு மாதம் கழித்து அவர்கள் வந்து, பொருட்களை எடுத்து போக வண்டி எடுத்துவந்திருந்தனர்.

அப்பொழுது தான் கவனித்தோம் அந்த அம்மாவின் கழுத்திலிருந்த புதிய தங்கச்சங்கிலியையும், காதிலிருந்த புதிய தோட்டையும்.

”அரசாங்கம் அறிவித்திருந்த இழப்பீட்டுப்  பணம் வந்துடுச்சு போலயிருக்கு சார்” - என்றார் அருகிலிருந்தவர்.

06 November 2009

அக்கா-அலாரம்-மகன்-நெல்


இளவரசன் என்ன ஆனான் ?
பூதத்தின் உயிர் எங்கே ?
அக்காவுக்கு கல்யாணம்


பேப்பர் போடும் பையன்
பக்கத்து வீட்டு சுப்ரபாதம்
தப்பாய் வைத்த அலாரம்

டோரா புஜ்ஜியை நிறுத்தலாம்
மின்னஞ்சல் படிக்கலாம
தூங்கிவிட்டான் மகன்
நாளை நெல் அறுவடை
உணவுக்கு கடும் பஞ்சம்
எலி வளையில்படங்களுக்கு நன்றி:wildlifetrust.org.uk,chandamama.com,hiren.info,worldofstock.com

05 November 2009

வருமான வரியில் மாற்றம்

நவம்பர் 05, ஜார்கண்ட்: 
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. மது கோடா, ரூபாய் 4000 கோடி ஊழல் வழக்கில் சிக்கி, ரத்த அழுத்தம் அதிகமான காரணத்தால் தற்பொழுது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது நாம் அறிந்ததே.


நேற்று பலத்த பாதுகாப்பையும் மீறி, காவலுக்கு இருந்த ஒரு கான்ஸ்டபிளுக்கு ரூபாய் 10 லஞ்சம் கொடுத்து, நமது நிருபர், கோடாவை பேட்டி கண்டார். அப்பொழுது கோடா மனம் வருந்தி, கண் கலங்கி தெரிவித்ததை கீழே கொடுத்திருக்கிறோம்.

இனி மது கோடா
“நான் 4000 கோடி ஊழல் செய்துவிட்டதாக அனைவரும் கூறுகிறார்கள். அது உண்மைதான். ஆனால் இந்த சமூகம் ஊழல் செய்பவர்களின் மேல் எப்படி ஓர வஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என்பதனை அனைவரும் உணர வேண்டும். உதாரணமாக சாதாரண வேலையில் இருக்கும் ஒரு அரசாங்க அதிகாரிக்கு வரும் வருமானத்தில் ரூபாய் 1,50,000 க்கு வருமான வரி விலக்கு இருக்கிறது. ஆனால் எங்களை மாதிரி ஊழல் செய்பவர்களுக்கு இந்த மாதிரி வருமான வரி விலக்கு இல்லை. இதை யாரும் கண்டித்ததாக தெரியவில்லை. நான் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்ததும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ஊழல் செய்பவர்களுக்கு வருடம் ரூபாய் 4000 கோடி வரை வருமான வரி விலக்கு அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப் போகிறேன். அத்துடன் 100 எம்.பிக்கள் கையெழுத்துப் போட்ட மனு ஒன்றையும் அளிக்க இருக்கிறேன். அந்த மனுவில் திரு.ராசா, திரு.லல்லு பிரசாத் யாதவ் போன்ற பிரபல ஊழல்வாதிகள் கையெழுத்திட்டிருக்கிறார்கள்”

இந்த செய்தியை தெரிந்து கொண்ட உளவுத்துறையினர், பிரணாப் முகர்ஜியிடம் இத்தகவலை தெரிவித்ததாகவும், திரு. மது கோடாவின் கதறலில் உள்ள உண்மையை புரிந்து கொண்டு, கூடிய விரைவில் வருமான வரி முறைகளில் மாற்றம் செய்யப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இனிவரும் பட்ஜெட்களில் இந்த ஊழல் வருமான உச்ச வரம்பு சிறிது சிறிதாக உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.

சற்று முன் கிடைத்த செய்தி:
இத்தகவலை கேள்விப்பட்ட பலர், ரூபாய் 4000 கோடி என்பது திரு. மது கோடாவின் தனிப்பட்ட வேண்டுகோள் எனவும். எம்.பிக்கள் கலந்து பேசி ரூபாய் 8000 முதல் 9000 கோடி வரை வரி விலக்கு கேட்போம் எனத் தெரிவித்தனர்.

04 November 2009

கப்புன்னு பிடிச்சவங்க...பிடிக்காம விட்டவங்க

நர்சிம் எழுதிய இந்த பதிவ, ஹாயா படிச்சு, ரசிச்சுக்கிட்டு இருந்தேன். கடைசியில யாரை தொடர அழைக்கப் போறார்ன்னு பார்த்த போது, என் பெயர் இருந்துச்சு. ஒருதடவைக்கு ரெண்டுதடவை பார்த்தேன் (1000 தடவை பார்த்தாலும் அது தான் தெரியும்..அடுத்த லைன் எழுதுன்னு பலர் திட்டுவதால்) எனக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் லிஸ்ட் எழுதிடலாம்னு முடிவு பண்ணி, நர்சிம் மனசு மாற்றத்துக்குள்ள பதிவு போட்டுடலாம்னு
..
..
..
போட்டுட்டேன்.
திட்டி பின்னூட்டமிட யாராவது விரும்பினால் அதை, பதிவுகளின் எண்ணிக்கையில் ஒன்று கூட்டிக்கொள்ள உதவியாக இருந்த நர்சிம் அவர்களின் ப்ளாக்கில் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. அரசியல்வா(வியா)திகள்


பிடித்தவர்      : ஜெ.ஜெயலலிதா (மழை நீர் சேகரிப்பு, புதிய வீராணம், பொதுமக்களுக்கு தொல்லை குடுக்கும் அரசியல் சாரா ரொளடிகளை அடக்கினது)
பிடிக்காதவர்:  Doctor. Ramadoss (எல்லாரையும் தமிழ் படிக்க சொல்லிட்டு, பேரப்புள்ளைகளை கான்வென்ட்ல படிக்க வைக்குறத்துக்காக + ஹை ஜம்ப் + லாங் ஜம்ப் தேர்ச்சிக்காக)

2.இயக்குனர்


பிடித்தவர்        : சேரன் (வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், த.தவம். ஆண்களும் அழுவார்கள் என்ற உண்மையை சொன்னதற்காக)

பிடிக்காதவர் : பாலு மகேந்திரா (ஹீரோக்களின் சட்டையை அவிழ்க்க வைத்ததற்காக)

3. நடிகர்


பிடித்தவர்     : கமல்ஹாசன் (காலத்தை மீறி கனவு கண்டு படங்கள் எடுப்பதினால். மைக்கேல்.மதன.காமராஜன் இப்பொழுது வந்திருக்க வேண்டிய படம்)
பிடிக்காதவர்: விஷால் (படத்தை பார்க்கவருபவர்கள் முகத்தில் குத்தி, காதில் கத்தி கொயந்த மாதிரி வசனம் பேசுவதற்காக)

4. நடிகை


பிடித்தவர்     : பாவனா (முதலில் அடித்த ரசிகர் மன்ற ஆள் சேர்ப்பு விண்ணப்பம் தீர்ந்து போனதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரசிகர் மன்ற ஆள் சேர்ப்பு, இப்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது)

பிடிக்காதவர் : நயன்தாரா (1 கோடி ரூபாய் கொடுத்து எதுக்கு இவங்கள நடிக்க வைக்குறாங்கன்னு தெரியலை)

5. எழுத்தாளர்


பிடித்தவர்    : பட்டுக்கோட்டை பிரபாகர் (எழுதியது மாத நாவல்கள் என்றாலும் அதில் பல புதுமைகளை புகுத்தியது [வர்ணனைகள் இல்லாமல் ஒரு நாவல், நகைச்சுவை நாவல்])

பிடிக்காதவர்: ராஜேஷ்குமார் (நாவல் படிக்க ஆரம்பித்தது இவரால் என்றாலும், தற்பொழுது, கடைசி பக்கத்தை படிக்கும் போதே முதல் பக்க கதை மறந்துவிடக்கூடிய அளவில் தரத்துடன் [இப்பொழுது] எழுதுவதால்)

6. பாடகர்


பிடித்தவர்      : ஜேசுதாஸ் (தாலாட்டுவதால்)
பிடிக்காதவர்: கவிதை குண்டர் (கையை வைத்து கண்ணை குத்துவதால்)

7.இசையமைப்பாளர்


பிடித்தவர்      : இளையராஜா (வயசு 30 க்கு மேல் ஆகி, பக்கத்து வீட்டு பையன் அங்கிள் என்று கூப்பிடத் தொடங்கியதிலிருந்து)

பிடிக்காதவர் : ஏ.ஆர்.ரஹ்மான் (ஹிந்தி பக்கம் போனதிலிருந்து இவர் மேல் கோபம்)

---
தொடர நான் அன்புடன், பாசத்துடன், கனிவுடன் (கெஞ்சி) அழைப்பது
1. கீதப்ப்ரியன்
2. அமுதா (என் வானம்)

இந்தப் பதிவோட விதிகள்:
1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

03 November 2009

திக்.திக்.பக்.பக் - 2

 +1 அரையாண்டு பரிட்சை முடிஞ்சு லீவு விடற நாளு, என் கிளாஸ் பிஸிக்ஸ் வாத்தியார், லீவு முடிஞ்சு வரும் போது 2 தடவை கொஸ்டியன் பேப்பர்க்கு விடை எழுதிட்டு வரசொன்னாரு. நான் தான் நல்ல பையனாச்சே, லீவுல முக்கி முக்கி 1 தடவை எழுதி முடிச்சோன்ன நோட் தீந்து போச்சு. புது நோட் வாங்கி இன்னொரு தடவை எழுதி முடிச்சேன்.

ஸ்கூல் தொறந்த உடனே முதல்ல அவரு பீரியட் தான். என் நோட்ட செக் பண்ணிட்டு, முதல் நோட்டுல கையெழுத்து போட்டுட்டாரு. ரெண்டாவது நோட்டுல போடலை. உங்களுக்கே தெரிஞ்சுருக்குமே கிளாஸ்ல எழுதாம வர்றத்துக்குன்னு ஒரு கோஷ்டி இருக்கும். அதுல ஒருத்தன், என்னோட புது நோட்டுல கையெழுத்து போடாதத கவனிச்சுட்டு (இதெல்லாம் கரெக்ட்டா பார்ப்பானுங்க), என்கிட்ட கெஞ்சி, நோட்ட வாங்கிட்டு (புடுங்கிட்டு) க்யூல போய் நின்னான். இங்க எனக்கு கை கால் உதற ஆரம்பிச்சுடுச்சு. கண்டுபிடிச்சுட்டா அவ்வளவு தான். நேரா ஹெட்மாஸ்டர்கிட்ட தான் விஜயம் பண்ணனும்.

அவன்(என்) நோட்ட பார்த்தாரு, அவன பார்த்தாரு
“உண்மைய சொல்லு இது உன் நோட்டா ?”
எனக்கு மயக்கம் வராத குறை தான். போச்சு. பொண்னுங்க முன்னாடி மானம் போகனும்னு இருக்கு என்ன பண்ண ?
“என் நோட்டு தான் சார்”
“உண்மைய சொல்லிட்டா விட்டுடறேன்”
“உண்மையாலுமே என் நோட்டு தான் சார்”
“சரி. நீ எழுதலைன்னு தெரியும். யார் எழுதிக் கொடுத்தது”
“என் அக்கா சார்”
“அதுதானே பார்த்தேன். என்ன ஏமாத்த முடியாதுடா. இன்னொரு தடவை ஏமாத்த பார்த்த நடக்குறதே வேற. நாளைக்கு வரும் போது 2 தடவை நீ எழுதிட்டு வா”
“சரி சார்”

போன உயிர் திரும்பி வந்துச்சுடா சாமி. அவன் பீரியட் முடிஞ்ச உடனே
“என்னவோ ரொம்ப பயந்தியே ? எப்படி அவர ஏமாத்துனேன் பார்த்தில்ல”
“டேய் அவரு மட்டும் கண்டுபிடிச்சுக் கேட்டிருந்தா ? என் நோட்ட அப்பத்தான் தேடுற மாதிரி ஆக்ட் குடுத்துருப்பேன்......போடாங்க !!”

----------------

என் ஆபீஸ்ல வேலை செய்யுறவரு, ஹோண்டா சிட்டி கார் வாங்குனாரு. வாங்கி 10 நாள்ல, கார் முன் பக்க கதவுல இருந்து பின் பக்க கதவு வரை, சாவி வெச்சு கோடு போட்ட மாதிரி, ஒரு பெரிய கோடு, கார் பெயிண்ட்ட எடுத்துடுச்சு. அவர் விசாரிச்ச போது பல பேரு, ஹோண்டா சிட்டி கார் வெச்சுருக்கவங்களும் இதே மாதிரி சொல்லியிருக்காங்க. இதை சரி பண்ணனும்னா 20,000 ரூபாய்க்கு மேல கூட ஆகுமாம். இதை பண்றது யார்னு தெரியலை. சில பேர் சொல்றாங்க, கார் சர்வீஸ் பண்ற கடைங்களே இந்த மாதிரி ஆளு வெச்சு பண்ணுதுன்னு. எனக்கு அத நம்புறதா இல்லையான்னு தெரியலை.

எப்ப என் கார் அல்லது பைக் டயர் பஞ்சர் ஆச்சுன்னாலும், ஒரு 500 மீட்டர் தூரத்துலயே ஒரு பஞ்சர் கடை இருக்குறத பார்த்துருக்கேன். ரோடுல நிறைய தடவ சின்ன சின்ன ஆணி கிடக்குறதையும் பார்த்துருக்கேன். ஒரு வேளை நம்ப ஊருல 1 கி.மீக்கு ஒரு பஞ்சர் கடை இருக்குறதால, இது தற்செயலா நடந்ததாக் கூட இருக்கலாம். ஒன்னும் புரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க. சரி இதுல திக்.திக்.பக்.பக் எங்கன்னு கேட்குறவங்களுக்கு. என்னோட ரொம்ப காஸ்ட்லியான கார் (மாருதி 800)ல கோடு போட்டுடக்கூடாதுல்ல. அதுக்கு தான் இந்த திக்.திக்.பக்.பக்.

நன்றி (படங்களுக்கு):saferoutestoschool.ca,iwebie.com

01 November 2009

தேசாந்திரியிலிருந்து சில துளிகள்

 இன்று காலையில் எழுந்த போதே சென்னை மேக மூட்டத்துடன் ரம்யமாக இருந்தது. சோம்பலுடன், ஜன்னலை திறந்த உடன் முகத்தில் பட்ட சில்லென்ற காற்று உற்சாகத்தை தந்தது. இந்த வானிலையில் பயணம் மேற்கொள்வது இனிய அனுபவமாக இருக்கும். ஆனால் சோம்பல், வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்காத போது, பயணத்தின் இனிமையை அனுபவிக்க ஒரே வழி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய தேசாந்திரி. ஜன்னல் வழியே வழிந்த சிறிய வெளிச்சத்தில், மெத்தென்ற படுக்கையில், அமைதியான சூழ்நிலையில் புத்தகத்தில் மூழ்கினேன். பல முறை படித்திருந்த போதும், ஒவ்வொருமுறை படிக்கும் போது பயணத்தின் சுகானுபவம். இவருக்கு மட்டும் வித்தியாசமான கண்கள். சாதாரணமான விஷயங்களை இவர் எழுத்தின் வழியே படிக்கும் போது, “அட ஆமாம் !!.எப்படி நாம் இதை ரசிக்காமல் விட்டோம் அல்லது நாம் ரசித்தவற்றை இவர் எப்படி அறிந்தார் ?” என வியப்பாக இருக்கிறது. இவரின் பல புத்தகங்களை படித்திருந்தாலும், தேசாந்திரி - என் மனதுக்கு நெருக்கமான புத்தகம். புதியதாக இந்த புத்தகத்தை படிக்க விழைபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். சப்தங்கள் மிக குறைந்த, இடையூறுகள் இல்லாத நேரத்தில், அமைதியான மன நிலையில் படியுங்கள்.

இங்கு நான் குறிப்பிட்டிருப்பது, தேசாந்திரி புத்தகத்தின் சில துளிகள்..அதுவும் தேன் துளிகள். ரசித்தவற்றை எழுதவேண்டுமென்றால், புத்தகம் முழுவதையும் எழுதவேண்டும்.பலர் பல பதிவுகளில் இப்புத்தகத்தைப் பற்றி எழுதியிருந்தாலும், எனக்கு பிடித்த சில வரிகள் இவை.


இனி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் விழி வழியே இவ்வுலகம்.

-------------


2 - சாரநாத்தில் ஒரு நாள்
இந்தச் சாலைகள் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. சாரநாத்தில் இன்று நான் காணும் ஆகாயமும் காற்றும் நட்சத்திரங்களும் கெளதம புத்தரும் கண்டவை. சாரநாத்தின் காற்றில் புத்தரின் குரல் கரைந்துதானே இருக்கிறது!

-------------
4 - லோனாவாலாவில் பார்த்த மழை
மழை பெய்யத் துவங்கியதும் மனித சுபாவம் மாறத் துவங்கிவிடுகிறது. யாரும் குரலை உயர்த்திப் பேசிக்கொள்வதிலை. மாறாக, மழை பெய்யும்போது யார் யாரைப் பார்த்தாலும், முகத்தில் மெல்லிய சிரிப்பு கரை தட்டி நிற்பதை உணர முடிகிறது. மழை ஒரு தியானத்தைப் போல மெள்ள நம்மை அதற்குள்ளாக அமிழ்ந்து போகச் செய்கிறது.

------------
5 - பாடப் புத்தகங்களுக்கு வெளியே...!
சரித்திரம் நம் உடையில், உணவில், பேச்சில், அன்றாட நடவடிக்கைகளில் தினமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் அணியும் சட்டையில் உள்ள பொத்தான்கள், பெர்சீயாவில் இருந்து வந்ததையும், நாம் சாப்பிடும் உருளைக்கிழங்கு வெள்ளைக்காரர்கள் நமக்கு அறிமுகம் செய்தது என்பதையும் நாம் சரித்திரம் என்று உணர்வதில்லை.

லண்டனில் ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைப் பார்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். ஆனால், பாரதியார் பிறந்த இடத்தை எத்தனை பேர் நேரில் சென்று பார்த்திருக்கிறீர்கள் ?

--------
6 - கண்ணால் வரைந்த கோடு
மலையின் மீது நடக்கத் துவங்கியதும் நகரம் நம் காலடியில் நழுவிப்போகத் துவங்குகிறது. உயரம் ஒரு அதிசயம் என்பதை, மனது மெல்ல உணரத் துவங்குகிறது. தரையில் இருந்து காணும் பொருட்கள், ஏன் உயரத்துக்குப் போனதும் இத்தனை ஆச்சர்யமாக மாறிவிடுகின்றன என்று வியப்பாக இருக்கிறது.
(தினமும் என் அலுவலகத்தின் ஜன்னல் வெளியே தெரியும் புனித தாமஸ் மலை (செயின்ட் தாமஸ் மவுண்டை) இவர் பார்வையில் பார்க்கும் போது, 20 வருடங்களாக சென்னையிலிருந்தும் இந்த இடத்தை பார்க்கவில்லையென வெட்கமாக இருக்கிறது)

---------

7 - நிலமெங்கும் பூக்கள்
பனிக்காலத்தில் புதரில் படர்ந்துள்ள பசிய கொடிகளையுடைய அவரைச் செடியின் பூவானது கிளியின் அலகு போலத் தோன்றுவதாகவும், முல்லைப் பூக்கள் காட்டுப் பூனையின் பற்கள் போன்ற உருவத்தைக்கொண்டு இருப்பதாகவும் குறுந்தொகையில் 240 பாடல்களாக இடம்பெற்றுள்ள கொல்லன் அழிசியின் முல்லைப் பாடல் விவரிக்கிறது.

நெடுஞ்சாலையோரமாகவே ஒரு முறை நடந்து பாருங்கள்.... எத்தனைவிதமான மலர்கள்...! பூமி தன்னை ஒவ்வொரு நாளும் பூக்களால் ஒப்பனை செய்துகொண்டு, ஆகாசத்தில் முகம் பார்த்துக்கொள்கிறது போலும் !.

---------

10 - அருவியாடல்
குற்றாலம் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதே அருவியின் சப்தமும், ஈர வாடையும், குரங்குகளும் நினைவில் எழுந்துவிடுகின்றன.

அருவியைப் பார்த்துச் சிரிக்காதவ்ர் எவரும் இருக்கிறார்களா என்ன ? அருவியின் முன்னே வயது கலைந்து போய்விடுகிறது. அருவியின் முன்னே நம் பேச்சுக்கள் யாவும் ஒடுங்கிவிடுகின்றன. அருவி மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறது.

--------
15 - அறிந்த ஊர்
பின்னிரவில் எல்லா ஊர்களும் ஒன்று போலத்தான் இருக்கின்றன. அதிலும் பேருந்து நிலையங்களும் அதைச் சுற்றிலும் உள்ள சிறு கடைகளில் எரியும் டியூப் லைட்டுகள் மற்றும் பாதி உறக்கம் பீடித்த பெட்டிக்கடைகள், காலியான நாற்காலிகளுடன் பால் கொதிக்கும் டீக்கடைகள், உறக்கத்தின் பிடியில் சுருண்டுகிடக்கும் வயதானவர்கள், கால்கள் மட்டும் வெளியே தெரிய உறங்கும் ஆட்டோக்காரர்கள்.

--------
25 - ஒரு கோயில்.. சில காட்சிகள்!
முன்பு எல்லா ஊர்களின் ரயில் நிலையத்தின் முன்பாகவும், குதிரை வண்டிக்காரர்கள் நிற்பார்கள். வண்டிக்குள் வைக்கோல் பரப்பி, அதன் மீது சமுக்காளம் விரித்திருப்பார்கள். குதிரை வண்டிகளின் இடத்தை இன்று ஆட்டோக்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.

--------
35- ஒளிரும் எண்கள்
கும்பகோணதில் உள்ள கணித மேதை ராமனுஜத்தின் நினைவு இல்லத்தில் குனிந்து செல்ல வேண்டிய அளவு தாழ்வான கூரை அமைப்பு. வீட்டில் யாரும் இல்லை. ராமானுஜத்தின் மூச்சுக் காற்றும் விரல் ரேகைகளும் மட்டுமே மீதம் இருக்கின்றன. இந்த அறையில் ராமானுஜம் படித்துக்கொண்டு இருந்திருப்பார் என்கிற காட்சி மனதில் கடந்து போனது.


--------

36 - உறங்கும் கடல்
தனுஷ்கோடியில் கடல் உறங்கிக்கொண்டு இருக்கிறது. நிஜம்தான் அது! ஒரு நகரையே விழுங்கிவிட்டு, இன்று சலனமற்று இருக்கிறது. ஒரு காலத்தில் ரயிலோடிய தண்டவாளங்கள் இன்று தண்ணீருக்குள் மூழ்கிக் கிடக்கின்றன. அழிவின் வாசனை எங்கும் அடிக்கிறது. மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கடல் கொண்டபின்னும் நினைவுகளாக கொப்பளித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

டிசம்பர் மாதத்து இரவுகள் மிக அற்புதமானவை. வசந்த காலத்தில் பூமியெங்கும் பூக்கள் நிரம்புவது போல டிசம்பர் மாதத்து இரவுகளில் நட்சத்திரங்கள் பூத்துக் சொரிகின்றன.

--------

41 - நோக்கும் திசையெல்லாம்
பின்வாங்கியோடும் அலையைப் போல இரவு, தன் இருப்பிடம் திரும்பத் துவங்கி இருந்தது. உலகில் ஒவ்வொரு நாளும் இதே போலத்தான் இரவு விடைபெறுகிறது. சில நிமிடங்களில் வெளிச்சம் உலகின் மீது தன் நிறத்தைத் தீட்டத் துவங்கியது. பனி படர்ந்த இமயமலை கண்ணில் படத் துவங்கியது. இதே சூரியனைத்தான் இத்தனை வருடங்களாகக் காண்கிறேனா ? ஏன் இந்தப் பிரமாண்டம், வசீகரம் என் ஜன்னலைத் திறந்து பார்க்கும் போது கிடைக்கவே இல்லை. எத்தனை ஆயிரம் வருடங்கள், எத்தனை கோடி மனிதர்கள் கண்ட காட்சி என்றாலும், இன்றும் அலுக்காத அதிசயம் சூரியோதயம்.

 -----------
புத்தகம்     : தேசாந்திரி
வெளியீடு: ஆனந்தவிகடன்
விலை       :ரூபாய் 110.
நன்றி(படங்களுக்காக): examiner.com,ramasundaram.sulekha.com,bloggersbase.com,moxhafinearts.com,pacificbulbsociety.org