31 December 2009

2009லிருந்து பாஸ் ஆகி 2010க்கு

இன்னும் சில மணி நேரங்களில் 2010. ஆண்டுகள் ஒரு குறியீடு என்றாலும், கொண்டாட்டங்களுக்கு என்று பண்டிகைகளும், சிறப்பு தினங்களும்.


2009 ஐ நியாபகப்படுத்தி பார்ப்பது மிகக் கடினமான செயலாகப் படுகிறது. கணினித்துறையில் வேலை பார்ப்பவர்களிடம் பெரும்பாலும் என்ன தேதி என்று கேட்டால், தவறாகவே பதில் வரும். வேலை என்ற சக்கரம் பெரிய வட்டமாக சுழல, கடந்து போன நாட்கள் மறுபடியும் மாற்றமில்லாமல் வந்து, நாட்களையும் தேதிகளையும் பெரிய மாற்றங்கள் இல்லாமல் மறக்க அடிக்கச் செய்கிறது.
 • வழக்கம் போல ஆண்டு ஆரம்பம் புத்தகக்கண்காட்சியில் தொடங்கியது. இன்னமும் போன புத்தகக்கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிப்பதற்குள் அடுத்தது வந்துவிட்டது. மொகரம் பண்டிகை போல, இந்த வருடம் இரண்டு புத்தகக்கண் காட்சிகள்.

 • என் மகனை புதிய பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன். புதிய சீருடை என்ற சந்தோஷத்துடன் அடம்பிடிக்காமல் பள்ளிக்குச் சென்றான். புதிய வார்த்தைகள், பாடங்கள் மற்றும் நண்பர்கள் (பல நண்பிகள்) அவனுக்கு.

 • ஜீலை மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடும் போது, தலையில் இருந்த வெள்ளை முடிகளில் சில, கன்னத்திற்க்கும் வந்திருப்பது தெரிந்தது.

 • என் மகனுக்கு இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது என்று தெரியாது. ஆனால் ஆகஸ்ட் 15ஆம் தேதி, பள்ளிக்கூடத்தில், சுதந்திரப் போராட்டம் பற்றி தமிழில் ஒரு கட்டுரை பிரிண்ட் அவுட் எடுத்து வரச் சொன்னார்கள். விக்கிப்பீடியாவில் தேடிய போது ஆங்கிலத்தில் தகவல்கள் கிடைத்தது. வேறு வழியில்லாமல் தமிழில் மொழி பெயர்த்து, NHM Writer மென் பொருளை நிறுவி, தட்டுத்தடுமாறி இரண்டு நாட்களில், இரண்டு பக்கங்கள் அடித்துக் கொடுத்தேன். அப்பொழுது தோன்றியது இந்த ப்ளாக். அதற்குப் பின் நடந்தது சரித்திரம் (???!!!). அது அனைவரும் அறிந்ததே. ஆரம்ப நாட்களில் எழுத நிறைய விஷயங்கள் இருக்க ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகளைப் போட்டு, இப்பொழுது எதைப் பற்றி பதிவு எழுத எனத் தெரியாமல், இது போல பதிவுகள் போட்டுக் கொண்டிருக்கிறேன். ”இந்த அளவுக்கு உனக்கு எழுதத் தெரியுமா” என்று பலருக்கு ஆச்சரியம். எனக்கும். டைரி எழுதும் பழக்கமில்லாத எனக்கு ப்ளாக் நல்ல டைரியாக இருக்கிறது.

 • 2008 ஆம் ஆண்டு அளவுக்கு இல்லாமல், மழைக் காலங்கள் நிம்மதியாக கழிந்தது.

 • உலகளாவிய பொருளாதார நெருக்கடி மனதில் கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியது.

 • நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்தேன். பாலகுமாரனின் “இரும்புக் குதிரைகள்”. அகதா கிறிஸ்டியின் சில துப்பறியும் நாவல்கள், லயன், முத்து காமிக்ஸ், ஆங்கிலத்தில் வெளிவந்த லக்கிலூக் காமிக்ஸ் தவிர வேறு எதுவும் இந்த ஆண்டு படிக்கவில்லை.

 • டிசம்பர் மாத இறுதியில் என் மாமா (அம்மாவின் தம்பி) மறைந்து போனார். அடுத்த சில நாட்களில், காலை உடைத்துக் கொண்டதால், பார்க்க வேண்டிய “அவதார்” திரைப்படமும், போய்வர விரும்பிய “புத்தகக் கண்காட்சி” யையும் தவற விட்டேன், விடுகிறேன்.
2010-ஆம் ஆண்டு அனைவருக்கும் நல்ல ஒரு ஆண்டாக அமைய இறைவனை வேண்டி

                                  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

28 December 2009

யார் அந்த ரமேஷ் ?


”ஹலோ ! ரமேஷா ?”
“இல்லைங்க நான் பின்னோக்கி”
“அப்ப ரமேஷ் இல்லையா ?”
“ஹலோ ! இது என் நம்பர். ரமேஷ்னு யாரும் இல்லைங்க”

(-----)

“ஹலோ ! ரமேஷ் இருக்காரா ? ”
“ஏங்க இப்பத்தானே கால் பண்ணுனீங்க”
“சாரிங்க”

(------)

“ஹலோ ! ரமேஷ் இருக்காரா”
“.........” (கடுப்பாகி பதில் எதுவும் பேசாமல் இருந்தேன்)
(யாரோ குழந்தை சவுண்ட் கேக்குது. ஆனா பேச மாட்டேங்கிறாங்க)


(-------)

“ரமேஷ் வீடு தானே”
“ஏங்க உங்களுக்கு எந்த நம்பர் வேணும் ?”
“98..........”
“நீங்க சொல்ற நம்பர் கரெக்ட்தான். ஆனா, நான் 7 வருஷமா இந்த நம்பர் யூஸ் பண்றேன். 7 வருஷத்துக்கு முன்னாடி இந்த நம்பர் ரமேஷ்கிட்ட இருந்திருக்கலாம். இல்லைன்னா, அவரு தப்பா இந்த நம்பர குடுத்திருக்கலாம்.”


(-------)

“ஹலோ ! ரமேஷ் ?”
“7 வருஷமா இந்த நம்பர் .....................”
“சாரிங்க”

ரமேஷ் - நீ யார் பெத்த புள்ளையோ. மவராசா ! எதுக்குப்பா என் நம்பர குடுத்த ? தப்பா குடுத்தியா ? இல்லை வேணும்னே குடுத்தியான்னு தெரியலை. நீ யாருக்காவது கடன் பாக்கி வெச்சுருந்தா தயவு செய்து செட்டில் பண்ணிடு. ஆனா ஒண்ணுப்பா, எனக்கு கால் பண்றவங்க ரொம்ப நல்லவங்க. நைட்டு நேரத்துல கால் பண்றது இல்லை. ஆனா ஒவ்வொரு தடவயும் அவங்க ஒவ்வொரு நம்பர்லயிருந்து கால் பண்றாங்க. அதுனால அந்த நம்பர ப்ளாக்டு லிஸ்ட்ல போட முடியலை. காப்பாத்துப்பா !!

27 December 2009

இது எங்க சாமி

சந்தோஷமான அல்லது துக்கமான சில தருணங்களில், அந்த நிகழ்வின் போது நமக்கு “இது மாதிரி நடக்கும்னு எனக்கு தோணுச்சு” என்ற உள் உணர்வு வரும். கால் பிசகி ஒரு வாரத்துக்கு முன் வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி சொன்ன முதல் விஷயம் “இன்னைக்கு காலைல இருந்து எனக்கு மனசே சரியில்லை. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்துடணும்னே தோணிக்கிட்டு இருந்துச்சு”. இந்த உணர்வுகள் வருவதற்கு காரணம், காக்கும் தேவதைகளாக இருக்கும் நாம் வணங்கும் குல தெய்வங்கள் என்று நம்புகிறேன். நம்மைப் பாதுகாக்கும் முதல் நிலைக் கடவுள்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முன்னோர்களில் சிலரை குல தெய்வங்களாக வணங்கி வருகிறோம்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் நுழைவாயிலில் உள்ள வாசகம் “பெருமாளை வழிபடுவதற்கு முன், உங்களின் குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபடுங்கள்
திருச்சியிலிருந்து, 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது துறையூர். துறையூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து, பெருமாள் மலை அடிவாரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பி, 300 மீட்டர் தூரம் போனால், வயல்கள் சூழ்ந்த இயற்கை சூழ்நிலையில் இருக்கிறது எங்கள் குல தெய்வம் கோவில் “பிச்சாயி அம்மன்”.பெரிய கோபுரங்கள் எதுவும் இல்லை. திறந்த வெளியில் ஒரு அடி உயர இரண்டு சிலைகள். நிழலுக்கு பெரிய அரச மரம். சின்ன காம்பவுண்ட் சுவர். அருகில் விவசாயத்திற்கு உதவும் பம்ப் செட்டுடன் கூடிய மிகப்பெரிய குளம் போல கிணறு. வழிபட வருபவர்கள் தங்களை ஆசுவாச படுத்திக்கொள்ள உதவியாக 4 அறைகள் கூடிய மண்டபம். கோவிலிலிருந்து அருகிலிருக்கும் பெருமாள் மலை உச்சியிலிருக்கும் கோவிலை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒவ்வொரு வருடமும், ஆகஸ்டு-அக்டோபர் மாதங்களில், இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்வது எங்கள் வழக்கம்.வெயில் குறைவான அக்காலங்களில், அமைதியான கிராம சூழ்நிலை மன அமைதியை தரும்.
கையில் குழந்தையுடன் இருக்கும் பிச்சாயி அம்மன் சிலை. அருகில் கணவர் வீரய்யா. இவர்கள் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். வீரய்யா ஒரு நாள் வயலில் வேலை செய்துவிட்டு மதிய உணவுக்காக காத்திருந்தார். நிறைமாத கர்ப்பிணியான பிச்சாயி அம்மன், அன்று மதிய உணவு எடுத்துவருவதற்கு கால தாமதமாகிவிட்டது. பசியினால் மிகுந்த கோபத்துடனிருந்தார் வீரய்யா. உணவு உண்ணும் முன், உடலை சுத்தம் செய்து, நெற்றியில் நாமக்கட்டியால் நாமம் போட்டு, அருகிலிருக்கும் பெருமாள் மலையிலிருக்கும் பெருமாள் கோவிலைப் பார்த்து வணங்குவது அவர் வழக்கம். அன்று பிச்சாயி அம்மன், நாமக்கட்டியை எடுத்து வர மறந்துவிட, கோபத்தின் மிகுதியால், வயலில் கட்டியாக இருக்கும் மண் உருண்டையை எடுத்து, மனைவி நோக்கி வீச, அது பிச்சாயி அம்மன் தலையில் பட்டு அவர் மரணமடைய, அதைக் கண்டு வருந்தி, வீரப்ப சாமியும் அங்கேயே இறந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, கையில் குழந்தையுடன் பிச்சாயி அம்மன் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள். இந்த வரலாறு, கல்வெட்டுகளில் பொறிக்கப்படாமல், செவி வழி கதையாகவே இருக்கிறது.

கடந்த முறை போனபோது, 50 வருடங்கள் கழித்து தற்போது கும்பாபிஷேகம் நடந்ததாக கூறினார்கள். அந்த சின்ன சிலைகளை மூடி (முதல் படம்), அதற்கு மேல அதே போல பெரிய அளவு சிலைகளை (அருகிலிருக்கும் படம்) வைத்து, சிமெண்ட் தளம் போட்டு அந்த இடத்தையே உயர்த்தி, சிறிய நகர கோவில்கள் போல மாற்றியிருந்தார்கள். கோவிலுக்கு முன் இரண்டு பெரிய குதிரை சிலைகள் இருக்கிறது. அந்த மாற்றங்கள் எங்களுக்கு புதிதாக இருந்தது. பழமையான இடங்களை மாற்றுவதில் உடன்பாடு இல்லாததால் இந்த மாற்றங்கள் எனக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. பழைய சிலைகள் எங்கே என்று திரும்ப திரும்ப பூசாரியிடம் கேட்டுக்கொண்டே இருந்தோம்.


மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. கடந்த 80 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த கோவில் சந்தித்திருக்கிறது என்ற நிலையில் 1000 வருட பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் எவ்வளவு மாற்றங்களை சந்தித்திருக்கும் என்ற நினைப்பே மலைப்பை தருகிறது.

25 December 2009

(எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் - 25.12.2009

துணுக்ஸ் எழுத வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை. பேர் வைக்குறத்துக்காக ரொம்ப யோசிச்சேன். எல்லா பேரையும் ஏற்கனவே வெச்சுட்டாங்க. நானும் எவ்வளவு நாளா யோசிக்கிட்டேயிருக்குறது ?  சொல்லுங்க. இந்த தலைப்பில யாராவது எழுதிட்டு இருந்தா வேற தலைப்பு யோசிக்கிறேன்.

[-^-^]

என் அண்ணனின் பொண்ணுக்கு பிறந்த நாள். ஹோட்டலுக்கு போன போது மெனு கார்டைப் பார்த்துவிட்டு,
“டாடி, லாம்ப் கறின்னா என்ன ?” என்றாள்
“ஆட்டுக்கறி” என்றார் என் அண்ணன்.
அடுத்தது “தாய் லாம்ப் கறி” ன்னு போட்டிருந்ததை பார்த்துவிட்டு, “ஓ! முன்னாடி இருக்குற ஆட்டோட அம்மா கறியா ?” என்று கேட்டாள்.

[-^-^]

”கால்சியம் மாத்திரை சாப்பிடு.”

”புடலங்காய் தினமும் சாப்பாட்டுல சேர்த்துக்கோ.”

”ஆப்ரேஷன் வரை போகலைல்ல சந்தோஷப்படு.”

”வெயிட்ட குறைக்கணும். கால் சரியான உடனே தினமும் உடற்பயிற்சி செய்.”

“காலை அசைக்காம வெச்சுருந்தா, கட்ட பிரிச்ச உடனே, நடக்குறத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். மூளை அந்த கால் இல்லைன்னு நினைச்சுக்கும்”

“Aspiration done" அப்படி ரிப்போர்ட்ல போட்டிருக்காங்க. கூகிள்ள என்னனு பாருங்க.

“ஆபிஸ்ல இந்த தசை நார் பிரச்சினைக்கு இவ்வளவு பெரிய கட்டு போடணுமான்னு கேட்கிறாங்க. நீ பார்த்த டாக்டர் நல்ல டாக்டர் தானே ?”

“என்னடா !!!  7 வருஷத்துக்கு அப்புறம் இன்னொரு கால் கட்டா ?”

“கட்டுக்குள்ள எறும்பு எதுவும் போகாம பார்த்துக்கோ. போச்சுன்னா, அதுங்க ப்ரெண்ட்ஸ் எல்லாத்தயும் கூட்டிக்கிட்டு வந்து கும்மாளம் போட ஆரம்பிச்சிடும்”

இதெல்லாம் என்னை, என் காலை பார்க்க வந்தவர்களின் கமெண்ட். இன்றுடன் 5 நாள் ஆச்சு கட்டு போட்டு. கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருப்பதால், சில நேரம் கட்டு போட்டிருப்பதை மறந்து (அய்யயோ !! மூளை மறந்துடுச்சா ? கடவுளே இது என்ன சோதனை ?) காலை எடுத்து மேலே போட முயற்சி செய்கிறேன்.

விடுமுறை நாட்களில் வெளியே போகும், மிகவும் சுறுசுறுப்பான, ஓரிடத்தில் கொஞ்ச நேரத்துக்கு மேலே இருக்க முடியாத ஆளாக இல்லாததால் எளிதாக இருக்கிறது.


[-^-^]

“அப்பா ! பாவம். கால் வலிக்குதா ?” என்று என் மகன் கேட்டு, காலை தடவிக் கொடுத்த போது, நெகிழ்ச்சியாக இருந்தது.
“ஆமாம் செல்லம்”
இரண்டு நிமிடம் கழித்து, காலில் “டம்..டம்” என்று அடித்துவிட்டு “அப்பா ! கால் வலிக்குதா ?” என்று கேட்டான்.

இவன் நல்லவனா ? கெட்டவனா ? தெரியலையே !!


[-^-^]

ஹே ! இவன் தான் ஜெயில்ல இருக்கானே ? எப்ப வெளிய வந்தான் ?
அது “அத்திப்பூக்கள்” சீரியல்ல. இது “செந்தூரப்பூவே”

24 December 2009

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

இங்கிலீஷ்காரர்கள் பங்குகொள்ளும் தமிழ் மாநாடு.

நன்றி - டைம்ஸ் ஆஃப் இந்தியா

காட் ஃபாதரும் நாயகனும்

22 வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்க வேண்டிய பதிவு, சற்று கால தாமதத்துடன் .....

சின்ன வயதில் மிகப் பெரிய ரஜினி ரசிகனான என்னை, கமல் ரசிகனாகவும் மாற்றிய படம் “நாயகன்”. எத்தனை முறை இந்த படத்தை பார்த்தேன் என்பது நினைவிலில்லை. தியேட்டரில் முதல் நாள், முதல் ஷோ பார்த்த ஒரே படம் இது. பல வருடங்கள் கழித்து, நாயகன் படம், God Father என்ற ஆங்கிலப் படத்தில் மார்லன் பிராண்டோ என்பவர் செய்த கதாப்பாத்திரம் போலவே இருந்தது என கேள்வி பட்டிருக்கிறேன் (இத்தனை வருஷம் ஆச்சா இதைக் கண்டுபிடிக்க எனக் கேட்காதீர்கள்.).
இரண்டு படங்களும், தாதாக்களைப் பற்றிய படம் என்ற அளவிலே மட்டுமே ஒற்றுமை என்று இன்று வரை (மதியம் 2 மணி வரை) நினைத்திருந்தேன். God Father படத்தின் முதல் காட்சியைப் பார்த்ததும், இது நாயகன் படத்தில் வரும் காட்சி போலவே இருக்கிறதே என்று நினைத்தேன். பல ஆச்சரியங்களை கொடுத்தது. இரண்டு படங்களுக்குமான சில ஒற்றுமைகள் இதோ.


நாயகன் - உயர் போலீஸ் அதிகாரி, தன் மகளை சீரழித்த பெரிய வீட்டு பசங்களை பழிவாங்க உதவி கேட்பார். God Father-ன் முதல் காட்சி இது. அதே காரணம். அதே போல பழி வாங்க உதவி கோருகிறார்.


நாயகன் - கமலை ஏமாற்றி வீட்டுக்கு வெளியே வரவழைத்து, மனைவி சரண்யாவை வில்லன்கள் கொன்று விடுவார்கள். God Father-ல் அல் பேசினோவின் மனைவியை, கூட இருக்கும் ஒருவனே வில்லனுக்கு உதவி செய்து, காரில் பாம் வைத்து கொன்றுவிடுகிறார்கள்.


நாயகன் - மகன் இறந்தது தெரியாமல் எழுந்து வரும் கமல், தன் மகன் உடலைப் பார்த்துவிட்டு அழுவார். God Father-ல் இதே காட்சி அப்படியே இருக்கிறது.

 
 

நாயகன் - தன் மனைவி இறந்தவுடன் அஸ்தியைக் கரைக்கும் போது, வில்லன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொல்லப்படுவதைக் காட்டுவார்கள். God Father-ல் தன் அப்பா இறந்தவுடன் அல் பேசினோ, சர்ச்சில் குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் இருக்கும் போது, வில்லன்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுவார்கள். அந்த வில்லன்கள் இறக்கும் விதம், அப்படியே நாயகனில் வில்லன்கள் இறக்கும் விதத்தைப் போலவே இருக்கும்.
 
 • போலீஸ்காரருடன் கமல் சுத்தியல் வைத்து சண்டை போடும் போது, தண்ணீர் பம்ப் உடைந்து, தண்ணீர் நீரூற்றைப் போல வெளியியே வரும் காட்சி.

 • ஜனகராஜ் மேற்பார்வையில் ஒரு இளைஞன் காரில் வைத்துக் கொல்லப்படும் போது, கார் கண்ணாடியில் அவனது கால் பட்டு கண்ணாடி உடையும் காட்சி

 • திருவிழாவில், 5 தாதாக்கள் உட்கார்ந்திருக்க, கமல் அவர்களுடன் பேசும் காட்சி.

 • மகள் காரை வேகமாக ஓட்டும் போது, கமல் பதறுவது போன்ற காட்சி.

 • நாசரின் தலைமையில் போலீசார், கமலின் அனைத்து தொழில்களையும் முடக்கும் காட்சி.

வயதான கமல், மார்லன் பிராண்டோவின் மேனரிசங்களையும், இளைய வயது கமல், அல் பேசினோ மேனரிசங்களையும் செய்வதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. ஏன் திரைக்கதையை மணிரத்தினம் மாற்றவில்லை ?. கமல் ஏன் அவர்களைப் போலவே நடித்தார் ? என்ற கேள்விகள் தோன்றியது. மணிரத்தினம் + கமல் கூட்டணியிலிருந்து இதை எதிர்பார்க்கவேயில்லை. இவையாவும் இருந்தாலும் கமலைத் தவிர வேறு யாராலும் நாயகனில் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. இளையராஜாவின் இசையையும் மறக்க முடியாது.

ஆங்கிலப்படத்தின் கதையை, நம் டைரக்டர்கள், வேறுவிதமான திரைக்கதையுடன் எடுத்தால் கூட நன்றாக இருக்கும். புரிந்துகொள்வார்களா ?.

23 December 2009

மௌனம்


புறாவும்,
தூதுவனும்,
தோழியும்,
அஞ்சலட்டையும்,
தொலைபேசியும்,
மின்னஞ்சலும்,
பயனில்லை
மௌனம் பேச
முடிவு செய்தால்.

வெற்றிடத்தில் பரவுவதில்லை
ஒலி
உன் மௌனம்
என்னை வந்தடைவது
எப்படி ?

21 December 2009

பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு 10 மைல் தூரம்.

போன வெள்ளிக்கிழமை, மாகாபலிபுரம் அருகில் இருக்கும் டெம்பிள் பே ரிசார்டுக்கு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக போனோம்.சிமெண்ட் தளம், டென்னிஸ் பால் மற்றும் பேட்டை பார்த்ததும், கிரிக்கெட் ஆசை வந்தது. வார நாட்களில் உடற்பயிற்சி செய்ய முடியாததால், இந்த மாதிரி விளையாண்டு, கொஞ்சம் சுறு சுறுப்பாக இருப்பது என் திட்டம்.

முதல் இரண்டு ஓவர்களில் 20, 16 ரன்கள் கொடுக்க, மூணாவது ஓவர் நான் போடுறேன் என்றேன்.உடம்பின் எடை பாஸ்ட் பவுலிங்  போட ஒத்துழைக்காததால், 4 மீட்டர் ஓடுவதற்குள் வேட்டை நாய்க்கு இரைப்பது போல மூச்சு இரைத்ததால், ஆஃப் ஸ்பின் போடலாம் என்று முடிவு செய்தேன்.கிரீஸ்க்கு ரெண்டு அடி பின்னால் இருந்து ஓடி வந்து,கிரீஸ்க்கு முன்னால் வலது காலை வைத்து, வேகத்தை என் கைகளில் கூட்டி பந்தை போட்ட போது, பந்து சுழலுவதற்கு முன், எனக்கு பூமி சுற்றத்தொடங்கியது. வலது காலை வைத்த உடன் வழுக்கி விட, தடுமாறி முன் விழுந்தேன். விழும்போது, இடது காலை, சிமெண்ட் தரையில் இடது கை வைத்து காப்பாற்றினேன். வலது காலுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. முட்டி, சிமெண்ட் தரையில் முட்டி, சுளீர் என்று வலி. 2 செகண்டுக்கு தலை சுற்ற, வலது கால் பேண்டை நீக்கி பார்த்தேன்.நல்ல வேளை ரத்தம் வரவில்லை. அதற்குள் என்னை சுற்றி வந்த நண்பர்களிடம்,
“முட்டிகிட்ட வலிக்குதே” என்றேன்.
“முதல்ல எழுந்து நில்லுங்க. நிக்க முடிஞ்சுதுன்னா எலும்பு எதுவும் ஒடஞ்சுருக்காது. நிக்க முடியுதே !. பயப்படாதீங்க” என்றார்கள்.
வலி அதற்குள் அதிகமாக, “ஆனா முட்டிகிட்ட நல்லா வலிக்குது,எதாவது லிகமெண்ட் பிஞ்சுருக்குமா  ?” என்றேன்.
“கால கொஞ்சம் தூக்குங்க. அப்படியே நிறுத்தி, பாதத்த முன்னாடி, பின்னாடி ஆட்டுங்க. பாருங்க, உங்களால இத செய்ய முடியுது. லிகமெண்ட் பிஞ்சுருக்காது” என்றனர், பல கிரிக்கெட் விபத்துக்களை பார்த்த நண்பர்கள்.

இப்படியாக எனது முதல் ஓவர் பேபி ஓவராக, மைதானத்திலிருந்து விலகி உட்கார்ந்து கொண்டேன்.நேரம் போகப் போக வலி அதிகமானது. ஒரு மணி நேரம் கழித்து, வலது காலை தரையில் வைக்க முடியாத அளவுக்கு வலி. முட்டிக்கு அருகில், சிறிய பந்து போல வீக்கம் அதிகமாக, பயம் அதிகமாக ஆரம்பித்தது. அடுத்த 2 மணி நேரத்தில், 2 பேர் அருகிலிருந்தால் மட்டுமே நடக்கமுடியும் என்ற நிலை.

தட்டுத்தடுமாறி, வலியைக் கட்டுப்படுத்த, வலியில்லாத பல்லைக்கடித்தபடி வீட்டுக்கு வந்தேன். தள்ளாடியபடி வீட்டுக்கு வந்த என்னை முதலில் கோபத்துடன் (தண்ணி ??) பார்த்தாலும், பிறகு உண்மையை உணர்ந்து, மூவ், சுடுதண்ணி ஒத்தடத்துடன் என் மனைவி முயன்றும் வலி குறையவில்லை.

அடுத்த நாள் எக்ஸ்-ரே எடுத்தேன். எலும்பு முறிவு இல்லை என்ற முதல் சந்தோஷ செய்தி. பரிசோதித்த டாக்டர், காலை சேர் மேலே வைக்க சொல்லிவிட்டு, கம்பியூட்டரில், காலில் இருந்த தசை நார்களின் படத்தைக் காண்பித்து, உடனே, என் காலில், அந்த இடம் எங்கே இருக்கிறது என்று காண்பித்தார். அடேங்கப்பா !! என்ன ஒரு சிக்கலான வடிவமைப்பு. படத்தை பார்த்துவிட்டு காலைப் பார்க்கவே பயமாக இருந்தது. அப்பொழுது காலை என்னால் மடக்கவே முடியவில்லை.

”அசோக் நகர்ல எங்க இருக்கீங்க ?” கேட்டார் டாக்டர்.
”18வது அவென்யூ டாக்டர்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் என் முட்டியின் மேல் கையை வைத்து ஒரு அமுக் அமுக்கினார் பாருங்கள், அய்யோ !!.அப்புறம் தான் தெரிஞ்சுது, என் வீடு எங்க இருக்குன்னு கேட்டு, என் கவனத்தை திசைதிருப்பியது அந்த எதிர்பாராத அமுக்குக்காக என்று.


”பாருங்க மேடம். இவரு கால மடக்க முடியலை. முட்டிய அழுத்துனா வலிக்குது. அதுனால உள்ளே இருக்குற தசை நார், அடி பட்டதுல வெளியே வந்து, ரெண்டு எலும்புக்கு நடுவில மாட்டிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். நாம MRI ஸ்கேன் பார்த்துடுவோம்” என்றார் டாக்டர்.

வாழ்க்கையில CT ஸ்கேன் பார்த்தாச்சு. இப்ப MRI. ஸ்கேன் சென் டரில், அவர்கள் குடுத்த யூனிபார்ம் போட்டு, வாய் திறந்து காத்திருந்த பெரிய மிஷின் உள்ளே அனுப்பப்பட்டேன்.
“சார்.. காலை நல்லா அழுத்தி வைங்க. அப்பதான் ஸ்கேன் ஒழுங்கா வரும்”
“கால மடக்க முடியாததால தாங்க ஸ்கேனுக்கு வந்திருக்கேன்” என்று சொல்லியும், இன்னொரு அமுக். இன்னொரு அய்யோ !
“இந்த பம்ப் கையில வெச்சுக்கோங்க”
“எதுக்கு ?”
“ஸ்கேன் ஆரம்பிச்சு நடுவுல உங்களுக்கு எதாவது கஷ்டமா இருந்தா, இத அழுத்துங்க, நாங்க மிஷின்ல இருந்து வெளியே உங்கள எடுத்துடுவோம். அப்புறம், வித்தியாசமா சவுண்ட் வரும். பயப்படாதீங்க. காலை அசைச்சுடாதீங்க”
முன்னாடி அந்த அமுக்கில், வலியில் நரம்பு துடிக்க, நான் சொல்லாமலேயே என் கால் ஆட ஆரம்பித்திருந்தது.


அடுத்த 20 நிமிஷத்துக்கு “டபக்..டப்..டபக்..டப்...ஸ்ப்..சப்..ஸ்ப்..சப்..டொங்..டிங்..டொங்..டிங்” சத்தம். கிட்டதட்ட ஹிப்னாட்டிசம் பண்ணின மாதிரி இருந்தது.

வீட்டுக்கு வந்து தூங்க, அடுத்த 3 மணி நேரம் கழித்து, MRI ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிவிட்டு, என் மனைவியும், அண்ணன் மட்டும் டாக்டரை போய் பார்த்தார்கள்.
பந்துகிண்ண மூட்டில் சிறிய கிராக். தசை நார்கள் கிழியவில்லை ஆனால் அடிபட்டதில் உள்ளே ரத்தம் வந்து குளம் போல தேங்கியிருக்கிறது அதனால் வீக்கம்.

“நாளைக்கு அவரை அழைச்சுட்டு வாங்க. ஊசி குத்தி தேங்கியிருக்கிற ரத்தத்த எடுத்துட்டு, மாவு கட்டு போட்டுடுவோம். மூணு வாரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்றார் டாக்டர்.

இதைக் கேட்டதும், ரத்தம் எடுக்கும் போது மயக்க மருந்து எதாவது குடுப்பேன்னு சொன்னாங்களா ? என்ற என் கேள்விக்கு "இல்லை" என்ற பதிலால், அன்று இரவு திகிலுடன் கழிந்தது.
அடுத்த நாள் நொண்டியடித்து போய், ஆபரேஷன் டேபிளில் படுக்க, ஊசியை வைத்து ஒரு குத்து. பீச்சி அடித்தது ரத்தம், உடனே என் மனைவியை உள்ளே வரச் சொல்லி “இங்க பாருங்கம்மா ! இப்ப உள்ளே இருந்த ரத்தம் எல்லாம் எடுத்தாச்சு. இனிமே வலி இருக்காது” என்றார் டாக்டர்.
ஊசி குத்திய வலியை விட, 2 நாட்களாக முட்டியிலிருந்த வலி உடனேபோனது சந்தோஷமாக இருந்தது. மாவு கட்டுக்கு துணியை சுற்றியபடியே
“எங்கே இருக்கீங்க” என்றார் டாக்டர்
“18வது அவென்யூ அசோக் நகர் டாக்டர்” பயந்தபடியே நான். இதே கேள்வி நேற்று, அப்புறம் அந்த அமுக்.
”டாக்டர் ! நேத்து மாதிரியே அமுக்க போறீங்களா ?”
“எதுக்கு அமுக்கணும் ? “
”இல்ல டாக்டர் ! நேத்து இதே மாதிரி தான் கேட்டுட்டு கால அமுக்குனீங்க. அதுதான் பயமா இருந்துச்சு”
ஒரு சிரிப்புடன், “ஓ.கே. இன்னும் அரை மணி நேரம் கழிச்சு கட்டு காய்ஞ்சதும், வீட்டுக்கு போங்க. நாளைக்கு வந்து பாருங்க”.

இன்ச்..இன்ச்சாக வீட்டுக்குள் நகருவது, நரக வேதனை. இந்த வேகத்தில், இனி 3 வாரத்துக்கு என் வீட்டு பெட்ரூமில் இருந்து 10 மீட்டர் தூரத்திலிருக்கும் ஹால், 10 கி.மீட்டர் தூரம் போன மாதிரி இருக்கிறது. டி.வி பார்த்தால், அதில் வருபவர்களின் காலை மட்டுமே என் கண்கள் பார்க்கிறது. டான்ஸ் ஆடுபவர்களை பார்க்கும் போது என் கால் வலிக்கிறது.இத்தனை நாளாக, கால் என்ற உறுப்பு இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் இருந்துவிட்டு, இப்பொழுது, உடலில் கால் மட்டுமே இருப்பதாக உணர்வு. உடலில் எதாவது ஒரு பாகம் இருப்பது போல உணர்ந்தால், அந்த பாகத்தில் பிரச்சினை என்று அர்த்தம் என்று முன்பு கேள்வி பட்டிருக்கிறேன். உணர்கிறேன் இப்பொழுது.

சனிப் பெயர்ச்சி பலன்கள் புத்தகத்தில் மீன ராசி பலனில், அடுத்த 3 வாரத்துக்கு ஆஸ்பத்திரியிலிருக்க நேரிடலாம் என்று இருப்பதைக் கோடிட்டு என் அண்ணா காண்பித்தார்.

”இந்த வயசுல எதுக்குடா கிரிக்கெட் ?. எல்லாம் கெட்ட நேரம் தான். நாடி ஜோதிட கேசட் திருப்பி ஒரு தடவ கேளு. இதப்பத்தி எதாவது சொல்லியிருக்கான்னு பார்க்கலாம்” - இன்னொரு அண்ணா

"உடம்பு ஓவரா வெயிட் போட்டுட்ட. அதுனால தான் இந்த சின்ன அடிகூட இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகிடுச்சு. வெயிட் குறைக்கணும்னு உனக்கு தோணவே மாட்டேங்குது" - இன்னொரு அண்ணா. எப்படி சொல்ல ?, கிரிக்கெட் விளையாடி உடம்பு குறைக்கலாம் என்ற ஞானோதயம் ஏற்பட்டதின் பலன் தான் இது என்று ?

“ஏங்க. வீட்டுக்கு வந்தா, தேமேன்னு உட்கார்ந்திருப்பீங்களே ? நடக்க கூட யோசிப்பீங்க. நீங்க எதுக்கு கிரிக்கெட் விளையாடுனீங்க “ - என் மாமியார்.

“டி.வி. லேப்டாப். ப்ளாக். 3 வாரம் உங்களுக்கு ஈஸியா பொழுது போய்டும். இதுக்கு முன்னாடியும் இதயே தான் பண்ணிக்கிட்டு இருந்தீங்க. அதுனால உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்காது”  - என் மனைவி.

”????!!!@@@@$$$%%%%^^^^&&*******”
- நான்.

09 December 2009

இரண்டு சக்கர ரதம்

சைக்கிள் வாங்கிய கதை

26 வருடங்களுக்கு முன், ஆயுத பூஜை நாளில் என் 2வது அண்ணனுக்காக அப்பா ஒரு சைக்கிள் வாங்கிகொடுத்தார். பச்சை நிற B.S.A. முன் பின் கேரியர் போன்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாமல்,சட்டையில்லாமல் வெறும் டவுசர் மட்டும் போட்ட பையனைப் போல இருந்தது.


பூ, பொட்டு வைத்து, சந்தனம் தெளித்து, வீட்டிற்கு வெளியே நிற்க வைக்க மனம் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே நிறுத்தினோம். அன்று சைக்கிள் ஓட்டக் கூடாது, அடுத்த நாள் நல்ல நேரம் பார்த்து தான் எடுத்து ஓட்டவேண்டுமென்று கட்டளை.

அன்று இரவு, பாதி தூக்கத்தில் வந்து லைட்டை போட்டு வண்டியைப் பார்க்க, அதற்கு முன்னால் என் 2வது அண்ணன் சைக்கிளைப் பார்த்தபடி அங்கு நிற்க, அசடு வழிய ஒருத்தரை, ஒருத்தர் பார்த்துவிட்டு, தூங்கி, அடுத்த நாள் காலையில் முதல் வேளையாக சைக்கிளின் மூஞ்சியில் விழித்து, எப்பொழுது நல்ல நேரம் எனப்பார்த்து, காத்திருந்து, வெளியே எடுத்து போனோம்.

அருகில் இருந்த கடையில் நிறுத்தி, ”அண்ணே !! நல்லா புது பார்ட்ஸ்ஸா போடுங்கண்ணே !!” என்று சொல்லி, எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் வாங்கி பொருத்தி, முன் கம்பியில் நான், பின் பக்கம் என் 3 வது அண்ணன் ஏறிக்கொள்ள, 2வதுஅண்ணன் ஓட்ட, ஒரு முதல் சைக்கிள் பயணம் தொடங்கியது.


இங்கு எக்ஸ்ட்ர பிட்டிங்ஸ் பற்றி சொல்ல வேண்டும். சீட்டுக் கவர், முன்னால் புத்தகம் வைக்கும் அளவுக்கு சின்ன கேரியர், பின்னால் பெரிய கேரியர், கைப்பிடிக்கு முள்ளு முள்ளாக இருக்கும் கவர், பிரேக்குக்கு பல வண்ணத்தில் உறை, முன் மற்றும் பின் சக்கரத்தில், சக்கரத்துடன் சேர்ந்து சுழலக்கூடிய, வட்ட வடிவ உறை. டிங் டிங் என்று அடிக்கும் பெல்லுக்கு பதிலாக கிர்ர்ர்ர்ரிரிங்ங் என்று அடிக்கும் பெல் என நாங்கள் போட்டிருந்த ஆடைகளை விட சைக்கிள் அதிக பிட்டிங் போட்டிருந்தது. முக்கியமாக சைக்கிள் லைட்டுக்காக இருக்கும் டைனமோ. பின் சக்கரத்தில் அது பதிந்து, சுற்றும் போது, விரல் நகத்தை வைத்தால், சொர்ர்ர் என்ற சத்தத்துடன் சீர் செய்துவிடும்.


நாமக்கல். பள்ளிக்கு விடுமுறை நாட்களில் ஊருக்கு சற்று தொலைவில் இருந்த M.G.M தியேட்டரில் போடப்படும் அனைத்து ஆங்கிலப் படங்களையும் (சூப்பர் மேன், மெல்ட்டிங் மேன்) பார்க்க சைக்கிளில் போவோம்.2 வது அண்ணன் தான் சைக்கிளுக்கு ஓனர். அவர் போடும் கண்டிஷன்கள் பலப் பல. படம் முடிந்து வரும் வழியிலிருந்த சிறிய குளத்தில் வண்டி நிறுத்தப்படும்.நான் முன் சக்கரம், 3 வது அண்ணன் பின் சக்கரத்தை கழுவி விட வேண்டும்.

“பாரு அவன் உன்னை விட சூப்பரா துடைக்கிறான். பின் சக்கரம் தான் பள பளப்பா இருக்கு”

இது என்னை உசுப்பேத்த எனத் தெரியாமல், அப்படியான்னு ரோஷத்துடன், இன்னும் அழுத்தி துடைத்து பள பளப்பாக்குவேன். வாரத்துக்கு ஒரு தடவை, ரிம்மில் இருக்கும் துருவை அகற்ற, மண்ணெண்ணை வைத்து துடைப்போம். நீண்ட ஊசி போல மூக்கு இருக்கும் ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, டபக் டபக் சத்தத்துடன், வண்டியின் பூட்டு, வீல் ஜாயிண்டுகளில் விடுவோம்.


வேட்டை ஆரம்பம்.


தாத்தா இருந்த ஊரான கரூருக்கு விடுமுறைக்கு போகும் போது, என் 2 வது அண்ணனும், மாமாவின் பையனும் வேட்டைக்கு கிளம்புவார்கள். என்ன வேட்டையா ?. என் மாமாவின் பையன், காய்கறி வாங்கும் போது, கடைக்காரன் பார்க்காத போது, 2 தக்காளியை, அவ்வளவு நாசுக்காக பையில் போடுவான். மளிகைக் கடையிலும் அவன் கைவரிசையை காண்பிப்பான். அவனது வீரதீர செயல்களால் கவரப்பட்டு, வேட்டைக்கு அவன் தான் சரியான ஆள் என தேர்ந்தெடுத்தோம்.

அனாமத்தாக தெருவில் நின்று கொண்டிருக்கும் B.S.A வண்டியில், சைடு கம்பியில் ஒட்டியிருக்கும், பள பளப்பான ஸ்டிக்கரை அபேஸ் பண்ணும் செயலே எங்கள் பாஷையில் வேட்டை. B.S.A என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் நடுவில் பட்டையாக அந்த ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் அழகே தனிதான். அப்படி எடுக்கப்படும் ஸ்டிக்கர்கள், பிளாஸ்டிக் காகிதத்தில் ஒட்டப்பட்டு, பெரியவர்கள் யாரும் பார்க்காத மாதிரி, பேக்குகளில் வைக்கப்படும். நாமக்கல் திரும்பிய பின், எங்கள் வண்டியின் ஸ்டிக்கர் பிய்ந்து போனதும், அபேஸ் பண்ணுன ஸ்டிக்கர ஒட்டும் போது தான் ஒரு உண்மை தெரிஞ்சது. பேக்டரியில ஒரு தடவை ஒட்டுனா ஒட்டுனது தான். அப்புறம் நாம என்னதான் அந்த ஸ்டிக்கர கோந்து போட்டு ஒட்டுனாலும் சரியா ஒட்டாது அப்புறம், ஸ்டிக்கர் பளபளப்பும் இருக்காது. காரணம், அபேஸ் பண்ணும் போது பெரும்பாலன பசை, சைக்கிள்ளேயே ஒட்டிக்கும். இந்த தோல்வியை அடுத்து, அபேஸ் திட்டம், சோகத்துடன் கைவிடப்பட்டது.


சேந்தமங்கலம் டிரிப்

உள்ளூரில் ஓட்டி பழகிய பின் என் அண்ணனின் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுக்குத் தெரியாமல் ஒரு சாகசப் பயணம் ஏற்பாடு செய்தோம். நாமக்கலுக்கு அருகில் இருக்கும் சேந்தமங்கலத்துக்கு போய்விட்டு உடனே வீடு திரும்புவது. இருபுறமும் மரங்கள் சூழ, ஆள் நடமாட்டமில்லாத, மெயின் ரோட்டில், கும்பலாக சைக்கிளில் போனது ஒரு சுவாரசியமான அனுபவம். விபத்தில்லாத பயணமா ? பின் பக்கமாக, இரண்டு கால் போட்டு உட்கார்ந்திருந்த நான், என் அண்ணன், சீட்டை விட்டு எழுந்து வேகமாக அழுத்தி ஓட்ட பார்க்கும் போது, நான் அந்த அதிக வேகத்துக்கு  ஈடு கொடுக்க முடியாமல், கையை விட்டு, அப்படியே மல்லாக்க ரோடில்  விழுந்தேன். பின் தலையில் நல்ல அடி. ரத்தம் வரவில்லை. நான் அழ  ஆரம்பிக்க, எல்லாருக்கும் பீதி கிளம்பியது. ஊருக்கு போனதும், 10 ரவுண்டு சைக்கிளில் அடிக்கிறேன் என்ற என் அண்ணனின் வாக்குறுதியையடுத்து என் அழுகை நின்றது. இந்த விபத்துக்கு அப்புறம், எனக்கு ராஜ மரியாதை. வழியில் ஒருவரின் வீட்டில் நின்று கருப்பட்டி போட்ட பால் சேர்க்காத வரக் காப்பியைக் குடித்து விட்டு, ஒரு வழியாக சேந்தமங்கலம் போய் சேர்ந்தோம்.அங்கிருந்த கோயிலில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்த பிறகு நாமக்கல் திரும்பினோம். “டேய், நீ கீழ விழுந்தத வீட்டுல யாருக்கிட்டயும் சொல்லாதடா !!” என்ற என் அண்ணன்களின் கெஞ்சல் என்னை வி.ஐ.பி ரேஞ்சுக்கு உயர்த்தியது. இன்றும், தலைவலி வந்தால், ஒரு வேளை,  அந்த விபத்தில், தலையில் ரத்தம் உறைந்து எதாவது ஆகியிருக்குமோ என்ற பீதி கிளம்பும்.


பரம்பரை சொத்து, வழி வழியாக வருவது போல, 2வது அண்ணனிடமிருந்து, 3 வது அண்ணனுக்கு சைக்கிள் வந்தது. தூத்துக்குடியில் இருந்த பொழுது குரங்குப் பெடலில் (குரங்குக்கும் சைக்கிளுக்கும் என்ன சம்பந்தம் ?) ஆரம்பித்து, காலில் சில விழுப்புண்களுடன் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொண்டேன். இன்றும், அந்த ஒரு பெடலில் அழுத்து அழுத்தி, வண்டி நகர ஆரம்பிக்கும் போது அடுத்த காலை சீட்டுக்கு மேலே போட்டு ஏறும் கலையை கற்றுக்கொள்ள முடியவில்லை. வண்டியை நிறுத்தி, சீட்டுக்கு மேல் ஏறி, வண்டியைக் கிளப்பவே என்னால் முடி(ந்த)(கிற)து.

2வது அண்ணன் உபயோகித்து முடிந்தவுடன் கடைசியாக என்னிடம் வந்து (கடைசி பையனாக பிறந்தால் உள்ள அசொளகரியங்களில் இதுவும் ஒன்று), சென்னையில் பல இடங்களில் மேய உதவியது. அந்த சைக்கிள் என்ன ஆனது என்று நினைவில் இல்லை. சூரியவம்சம் பட சரத்குமார் போல, டி.வி.எஸ் 50, பஜாஜ் சி.டி.100 என்று படிப்படியாக முன்னேறி இன்று மாருதி 800 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

06 December 2009

நிஜமான கதை - துப்பறியலாம் வாங்க

1981 வருடம், ப்ளோரிடா மாகாணம். ஜான், வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி விட்டு, தன் காரை நெருங்கும் போது,

”சார்.. நான் ரயில்வே ஸ்டேஷன் வரை போகணும், லிப்ட் தருவீங்களா?” என்ற குரல் கேட்டுத் திரும்பினார். 25 வயது மதிக்கத்தக்க கருப்பு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
”நான் அவ்வளவு தூரம் போக மாட்டேன். ஆனால் வழியிலே உங்களை இறக்கி விடுகிறேன்” என்றார் ஜான்.

“சரி சார். தேங்க்ஸ்”என்றான் அவன்.

3 கிலோ மீட்டர் வந்தவுடன், ஜான், அவனை அங்கே இறங்கச் சொன்னார். தன் வீடு வரை வெளியாள் ஒருவனை அழைத்துச் செல்ல வேண்டாம் என்ற பாதுகாப்புணர்ச்சியினால், மெயின் ரோட்டிலேயே வண்டியை நிறுத்தினார்.

அது வரை அமைதியாக வந்தவன் ஜானுடன் சண்டை போட ஆரம்பித்தான். சண்டை வலுக்கவே, வண்டியிலிருந்த ஸ்க்ரூ டிரைவரை எடுத்து ஜானை தாக்க ஆரம்பித்தான்.அவனிடமிருந்து தப்பிக்க வண்டியை விட்டு கீழே இறங்கிய ஜான்,  ஓட எத்தனிக்கும் பொழுது, அவன் எட்டிப் பிடித்தான். இனி தப்பிக்க முடியாது என்ற நிலையில், ஜான், அவனை வண்டியில் ஏற சொன்னார். அவன் ஏறுவதற்கு முன், வண்டியை ஸ்டார்ட் செய்து, மிக வேகமாக ஓட்டினார். அவன் பார்வையிலிருந்து மறைந்த பிறகும் பயம் குறையவில்லை. அந்த இடத்திலிருந்து 1 கி.மீ தூரத்திலிருக்கும் தன் வீட்டுக்கு உடனே சென்றால், அவன் வீட்டைக் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயத்தில், 20 நிமிடம் வண்டியை வெவ்வேறு திசையில் செலுத்திவிட்டு பிறகு வீட்டை நோக்கி வந்தார்.

வீட்டுக்கு சற்று தொலைவில் வரும் பொழுது, வீட்டு ஜன்னலருகில் ஒருவன் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவன் வேறு யாருமில்லை, சற்று முன் ஜானைத் தாக்கியவன். எப்படி அவன் வீட்டைக் கண்டுபிடித்தான் என்று ஜானுக்கு புரியவில்லை. உடனே போலீசுக்கு போன் செய்தார்.


போலீஸ் வந்து பார்க்கும் போது, வீட்டின் அருகில் யாருமில்லை. வீட்டுக்கு உள்ளே சென்று பார்க்கும் போது, ஜானின் 70 வயதான அம்மா,மேரி, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது தெரிந்தது.

போஸ்ட்மார்ட அறிக்கையில், மேரி, 28 முறை ஸ்குரூ டிரைவர் போன்ற கூர்மையான ஒரு பொருளினால் தாக்கப்பட்டதால் மரணமடைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணையில், ஜான் சொன்னதை போலீசார் நம்ப மறுத்துவிட்டனர். 1 கி.மீக்கு முன் இறக்கிவிடப்பட்டவன், எப்படி மிகச்சரியாக ஜான் வீட்டைக் கண்டுபிடித்திருக்க முடியும் ?. ஜான் உண்மையறியும் சோதனைக்கு (lie detector test) ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் விசாரணையில், ஜானுக்கு பண நெருக்கடி இருப்பதையும், மேரி இறப்பதற்கு முன், அவர் பேரில் இன்ஸீரன்ஸ் எடுக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். இது ஜானின் மேல் சந்தேகத்தை அதிகரித்தது.


கொலை செய்தவன், மேரியின் வயதைக் கூட பொருட்படுத்தாமல், மிக அதிகமான வன்முறையைக் கையாண்டிருக்கிறான். இதன் மூலம், இது முன் விரோதத்தினால் நடந்த கொலையாக இருக்கலாம் என சந்தேகித்தனர். போலீசாருக்கு கிடைத்த இரண்டு தடயங்களில் ஒன்று, மாடிப் படிக்கட்டின் கைப்பிடியில் இருந்த, கொலையாளியின் ரத்தம் படிந்த, உள்ளங்கை பதிவு. இன்னொன்று, ஸ்விட்ச் போர்டில் இருந்த கொலையாளியின் ரத்தக் கறை.ஜானின் கைரேகை ஒத்துப் போகவில்லை.ஸ்விட்ச் போர்டில் இருந்தது, ஜானின் ரத்தமில்லை. ஜான், ஆள் வைத்துக் கொலை செய்திருப்பானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அதை நிரூபிக்க முடியவில்லை. ஒரு வேளை ஜான் சொன்ன கதை உண்மையா ?. ஜான் சொன்ன அடையாளங்களை வைத்து கொலையாளியின் உருவம் வரையப்பட்டது. சில குற்றவாளிகளின் புகைப்படங்களை காட்டிய போது, ஜான் ஒருவனை அடையாளம் காட்டினான்.சூப்பர் மார்க்கெட்டில் அந்த நேரத்திலிருந்தவர்களிடம் விசாரித்த போது, அன்று ஒருவன் லிப்ட் கேட்டது உண்மைதான் என்றும் மேலும், அவர்கள் ஜான் அடையாளம் காட்டிய ஒருவனின் புகைப்படத்தைதான் அவர்களும் காட்டினார்கள். அவனை விசாரணை செய்த போது, கொலை நடந்த நேரத்தில் அவன் அந்த ஊரிலேயே இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.
 
கொலை செய்தவன் யார் ?. அவன் எப்படி ஜானின் வீட்டைக் கண்டுபிடித்தான் ?.
 
10 வருடங்களுக்குப் பிறகு ....
 
1981 வருடம் டி.என்.ஏ டெஸ்டிங் வசதியில்லை. 1984-1987ஆம் வருடங்களில் டி.என்.ஏ பரிசோதனையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக, குற்றவாளிகளை கண்டறிவதற்கு இந்த பரிசோதனையை போலீசார் பயன்படுத்த தொடங்கினர். 1990ஆம் வருடம், அமெரிக்க அரசாங்கம் CODIS (COmbined DNA Index System) எனப்படுகிற, குற்றவாளிகளின் டி.என்.ஏ விபரங்களை சேமித்துவைக்கும் திட்டத்தை தொடங்கினர்.மேரியின் கொலை வழக்கில், ஸ்விட்ச் போர்டில் எடுக்கப்பட்ட குற்றவாளியின் ரத்தத்திலிருந்து டி.என்.ஏவை எடுத்து, அதை CODIS உதவியுடன், ஏதாவது குற்றவாளியின் டி.என்.ஏவுடன் பொருந்துகிறதா எனப் பார்த்தார்கள். 2 நாட்களுக்கு பிறகு, பீட்டர் என்ற ஒருவனின் டி.என்.ஏவுடன் பொருந்தியது. விசாரணையில், 10 வருடங்களுக்கு முன் பீட்டர், ஜான் வசித்த அதே ஊரில் இருந்ததையும் மேரியைக் கொன்றதையும் ஒத்துக்கொண்டான்.

நடந்தது என்ன ?

பீட்டருக்கு போதை பழக்கம் இருந்தது. அன்று ஜானிடம் லிப்ட் கேட்டு, பாதி வழியில் ஜானை தாக்கி, பிறகு ஜான், அவனை விட்டு சென்றவுடன், போதை மயக்கத்தில், அன்று இரவு எதாவது பூட்டியிருக்கும் வீட்டினுள் நுழைந்து ஓய்வு எடுப்பதற்காக வீடு எதாவது இருக்கிறதா என்று தேடியிருக்கிறான். சில வீடுகளில் விளக்கு வெளிச்சம் இருந்ததால், வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருந்த மேரியின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறான். யாரும் இல்லை என நினைத்தவன், சத்தம் கேட்டு எழுந்த மேரியை பார்த்து பயந்து போய், ஜானின் வண்டியிலிருந்து எடுத்த ஸ்க்ரூ டிரைவரால் மேரியை தாக்கி கொன்று விட்டு தப்பியிருக்கிறான். ஜான், பீட்டரை பார்த்த உடன் பயந்து போய் போலீசைக் கூப்பிடாமல், வீட்டிற்கு சென்றிருந்தால், மேரியைக் காப்பாற்றியிருக்கலாம். மேலும் விசாரணையில், ஜானுக்கும், பீட்டருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என முடிவானது.

யாரும் நம்ப முடியாத அளவுக்கு தற்செயலாக நடந்த இந்த சம்பவத்தை, CODIS என்கிற மென்பொருளின் உதவியினால் போலீசார் குற்றவாளியைக் கண்டுபிடித்தனர்.

01 December 2009

பரிட்சைக்கு நேரமாச்சு

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில், டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவி, புற்றுநோயால் அவதிப்பட்டதால், வகுப்புக்களுக்கு வர இயலாமல், போதிய வருகை நாட்கள் இல்லாததால், அந்தப் பெண் வரும் மாத பரீட்சை எழுத அனுமதிக்க கிடைக்கவில்லை என செய்தி வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பெண் மருத்துவ ஆதாரங்கள் (புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தாலே போதும். என்ன ஆதாரம் வேண்டும் ?) கல்லூரியில் தந்தும் பரீட்சை எழுத இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இப்பொழுது நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் அந்தப் பெண்.

அந்தப் பெண்ணின் தவறு
1. ப்ராக்ஸி அட்டெனன்ஸ் எனப்படும் ஒன்றை பயன்படுத்தி வருகையை பொய்யாக 70 சதவிகிதத்திற்கு கொண்டுவராதது.
2. பிரின்ஸிபால் அல்லது கல்லூரி வாட்ச்மேனின் சித்தப்பாவின் ஒன்று விட்ட பெரியப்பாவின் தூரத்து சொந்தமாக இல்லாதது

சட்டங்களில் பல ஷரத்துக்களில் முடிவு எடுக்கும் உரிமையை அதிகாரிகளுக்கு வழங்குயிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, வருமான வரி அதிகாரிக்கு சட்டத்தை மீறி சில விதி விலக்குகளை, நன்கு ஆராய்ந்த பிறகு அளிக்க சட்டத்தில் இடம் உள்ளது.  இப்படி அந்தப் பெண்ணை அலையவிடாமல், சில விதிவிலக்குகளின் அடிப்படையில் கல்லூரியின் பிரின்ஸிபால் அல்லது பல்கலைக்கழக்த்தின் உயர் அதிகாரிகள் அந்தப் பெண்ணை பரீட்சை எழுத அனுமதித்திருக்கலாம்,
இதே மாதிரி நான் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, என் தந்தையின் திடீர் மரணத்தினால், 12 நாட்கள் விடுப்பு எடுக்க, அதனால் 70 சதவிகித வருகைப் பதிவு கிடைக்கவில்லை. அதற்காக என் கல்லூரி பிரின்ஸிபாலிடம் Undertaking எனப்படும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து விட்டு, அந்த செமஸ்டரில் பின்பகுதியில் வகுப்புகளுக்குத் தவறாமல் போய் 70 சதவிகிதம் பெற்றபின் பரீட்சை எழுத அனுமதி கிடைத்தது.

இத்தனைக்கும் என் நிலையை, எனது கணினித்துறை தலைமையாளரிடம் மற்றும் பிரின்ஸிபாலிடம் விவரித்தும், Undertaking கடிதம் தர என்னை அலைய விட்டார்கள். அப்பொழுது என் மனநிலை, அப்பாவை இழந்த சோகம் ஒரு புறம், மற்றொரு புறம் வகுப்புகளில் முதல் 2 ரேங்க் எடுத்து பல்கலைக்கழக ரேங்கில் இருந்தும், கடிதம் கொடுக்க வைக்கிறார்களே என்ற அவமானம் ஒருபுறம் (பிரின்ஸிபால் அறைக்கு செல்வதை அவமானமாகக் கருதி கல்லூரிப்படிப்பை படித்த ஒரு அப்பாவி மாணவன் நான்).

இதில் வகுப்புக்களுக்கு சாதாரணமாகவே வராமல் இருக்கும் சிலர், கடிதமும் கொடுக்காமல், பரீட்சைக்கு முதல் நாள் வேறு வழியின்றி அவர்களை கல்லூரி கடைசி நேரத்தில் பரீட்சை எழுத அனுமதித்த போது எனக்குத் தோன்றியது

“போங்கப்பா !! நீங்களும் உங்க சட்டமும்”