ஒரு நாள் காலை, தாம்சனுக்கு வயிற்றில் நெருப்பு எரிவது போல் இருந்தது. திடகாத்திரமான 32 வயது இளைஞன், இவ்வளவு நோய்வாய்ப்பட்டு யாரும் பார்த்ததில்லை. வயிற்றைத் தாக்கும் ஒரு வைரஸ் நோய்க்கு மருந்து சாப்பிட்டதில் உடல் நிலை தேறினார். இரண்டு நாள் கழித்து, மனைவி, லின் செய்து தந்த ஸ்வீட் டீ மற்றும் சாண்ட்விச்சை சாப்பிட்டு விட்டு, ஓய்வு எடுக்கப்போனவர், கொஞ்ச நேரத்தில் போய் சேர்ந்துவிட்டார்.
தாம்சனின் அகால மரணம் அனைவரையும் உலுக்கிவிட்டது. என்ன ஆயிற்று அவருக்கு?. மருத்துவ ரிப்போர்ட்டில், இருதயக்கோளாறு தான் மரணத்திற்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அளவுக்கு அதிகமாக இருதயம் வீங்கியிருந்தது. தாம்சனின் அம்மாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. தாம்சனுக்கு இருதயக்கோளாறு எதுவும் இல்லை.

2 வாரம் கழித்து, தாம்சனின் அம்மாவிற்கு, அடுத்த ஊரிலிருந்து ஒரு கடிதம் வந்தது.
6 வருடங்களுக்கு முன் ஜான் முதலில் வயிற்று வலியால் அவதிப்பட்டு, பின் சரியாகி, அடுத்த 2ஆம் நாள் மரணமடைந்தார். போஸ்ட்மார்டத்தில், தாறுமாறான இருதயத்துடிப்புதான் காரணம் என்று சொல்லப்பட்டது. ஜானின் அம்மாவுக்கு சந்தேகம் இருந்தாலும், போலீசார், மேற்கொண்டு விசாரணை செய்யவில்லை.

லின்னின் இரண்டு கணவர்களின் திடீர் மரணம் தற்செயலான ஒன்று என நம்பமுடியவில்லை. சிறு பொறியாக இருந்த சந்தேகம் லின்னைப் பற்றித் தெரிந்ததும், பற்றி எரியத்தொடங்கியது. தாம்சன் மற்றும் ஜானின் போஸ்ட்மார்டத்தில் கண்டறியப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு விஷயம்; இருவரது கிட்னியிலும் இருந்த “கால்சியம் ஆக்ஸலேட்” என்று வஸ்து. ஆனால், இருவரது உடலிலும் எந்த ஒரு விஷமும் கண்டறியப்படவில்லை.
கால்சியம் ஆக்ஸலேட் உடலில் வருவதற்கு, எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol) என்ற ரசாயனப் பொருள் காரணம். தாம்சனின் பரிசோதனையில், எத்திலின் க்ளைக்காலின் அளவைப் பரிசோதிக்கையில் கணக்கில் சிறிய தவறு நேர்ந்திருந்தது. அதனை சரிசெய்தபின், தாம்சனின் உடலில் இருந்த 10 மடங்கு அதிக எத்திலின் க்ளைக்கால்தான், மரணத்திற்கு காரணம் என்று உறுதிசெய்ய்யப்பட்டது.
எத்திலின் கிளைக்கால் என்பது, குளிரினால் வாகன எரிபொருள் உறையாமல் தடுக்க கலக்கப்படும் ஆண்டி ஃப்ரீஸ் என்ற ஒரு பொருள். புதைக்கப்பட்ட ஜானின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு செய்யப்பட்ட பரிசோதனையில், உடலில், எத்திலின் க்ளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லின்னைப் பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிந்த உண்மைகள்:
தாம்சன் புதைக்கப்படும் நேரத்தில், இன்சூரன்ஸ் கம்பெனிக்கு, தன் செல்போன் மூலம் மூன்று முறை தொடர்புகொண்டு, பாலிசி பணம் விரைவில் கிடைக்குமாறு லின் கேட்டிருக்கிறாள்.
தாம்சன் இறப்பதற்கு சில நாள் முன், பிராணிகள் காப்பகத்திற்குச் சென்று, பூனைகளைச் சாகடிக்க எந்த விஷத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்று லின் கேட்டிருக்கிறாள். சந்தேகம் கொண்டு, அந்தக் காப்பகத்தின் உரிமையாளர், விஷத்தின் பெயரைக் கூற மறுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, லின்னுக்கு வேறு வழியில்லாமல் போனது. ஜானை சாகடிக்க பயன்படுத்திய அதே “ஆண்டி ஃப்ரீஸ்”சையே உபயோக்கிக்க முடிவு செய்தாள்.
லின்னின் பேங்க் மேனேஜர், லின் கிட்டத்தட்ட 35,000 டாலர் கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்திலிருந்ததைத் தெரிவித்தார். தாம்சன் இறப்பதற்கு 2 வாரங்களுக்கு முன், லின் பேங்க்கிற்கு வந்து, கடனை 2 வாரங்களின் அடைப்பதாக உறுதியளித்திருந்தாள்.
லின்னின் கடன் வாங்கும் மற்றும் பணம் செலவழிக்கும் வேகம், இந்தியா, உலகவங்கியின் கடன் வாங்கும் வேகத்தைக் காட்டிலும் அதிகமானது. ஜான் இறப்பதற்கு முன், தன் நண்பர்களிடம், லின் செலவழிக்கும் வேகத்தைப் பற்றி புலம்பியிருக்கிறார்.
ஜான் இறந்ததும், இன்சூரன்ஸ் பணம் 1,50,000 டாலர் + மாதாந்திர பென்ஷன் தொகை 750 டாலர், லின்னுக்குக் கிடைத்திருக்கிறது. தாம்சன் இறப்பதற்கு முன் லின் மேல் சந்தேகமடைந்ததாலேயே, தன் 2 லட்சம் டாலர் பாலிசிக்கு தவணைக்கட்டாமல் இருந்திருக்கிறார். இது லின்னுக்குத் தெரியாமல் போனது, லின்னின் துரதிருஷ்டமே.
விசாரணையில் தெரியவந்த இன்னொன்று, தாம்சனை, லின் திருமணம் செய்யாமலே சேர்ந்துவாழ்ந்தது. அதற்குக் காரணம், தாம்சனை திருமணம் செய்துகொண்டால், ஜானின் பென்ஷன் தொகைக் கிடைக்காது என்பது.
எத்திலின் க்ளைகால் போன்ற ஒரு ரசாயனம் உணவில் கலந்திருந்தால், உண்பவருக்கு சுவை தெரியாமல் இருந்திருக்குமா ?. எத்திலின் க்ளைகாலை, எதாவது இனிப்பு உணவுடன் சேர்க்கும்போது, அதன் ரசாயன நாற்றம் தெரியாமல் போய்விடும். இந்த வழக்கு முடிந்த உடன், அரசாங்கம், எத்திலின் க்ளைகாலில் கசப்புச் சுவையை சேர்க்கச் சொல்லி உத்தரவிட்டது. (நம் ரேஷன் கடையில் வினியோகிக்கப்படும் மண்ணென்ணையில், நீல நிறம் கலப்பது போல).
