08 October 2009

வயதை கண்டுபிடிக்கும் முறை

மனிதன், விலங்குகள், மரம் மற்றும் உயிரற்ற கல், மண் போன்றவற்றின் வயதைக் கண்டுபிடிப்பது கடினமான விஷயம்.

கொஞ்சம் யோசித்து பார்த்தால், அயல் நாட்டவரின் உருவ அமைப்பை பார்த்து நாம் கணிக்கும் வயது பெரும்பாலும் தவறாகவே இருக்கும் என்பது புரியும். விலங்குகள் என்றால் மிகவும் கடினம். அது சரி யார் விலங்குகளின் வயதை ஆராய்ச்சி செய்யப் போகிறார்கள் ??. மரத்தின் வயது ? அதை எப்படி கண்டுபிடிப்பது ? கண்டுபிடிப்பது சாத்தியமா ?. சாத்தியமே !!.

கார்பன் டேட்டிங் என்ற முறைப்படி மரத்தின் வயதை கண்டுபிடிக்கலாம். ஆனால், அதற்கு பரிசோதனை கூடம் தேவைப்படும். அதை விடுத்து எளிதான முறை ஒன்று உண்டு. அது அந்த மரத்தையே கேட்டு விடுவது தான். நடிகைகள் போல மரம் தன் வயதை குறைத்து/மறைத்து சொல்லாது.
 
 மனிதன் தன் வாழ்நாளில் நடந்த நிகழ்வுகளை, அவன் மூளை பதிவு செய்வது போல, மரங்களும், தன் வாழ்நாளை பற்றிய குறிப்புக்களை, மற்றவர்கள் பார்ப்பதற்காக சேகரித்துவைக்கிறது.

ஒரு மரம் வெட்டப்பட்ட உடன், அதன் அடிப்பாகத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை பாருங்கள். வயதான மனிதனின் முகத்தை போல பல வட்ட வடிவமான வரிகள் காணப்படும். ஒவ்வொரு வட்டமும் ஒரு வருடத்தை அல்லது வளர்ச்சி பருவத்தை குறிக்கிறது. மொத்த வட்டங்களின் எண்ணிக்கை, அதன் வயதை குறிக்கிறது. கீழே உள்ள படத்தைப் பார்ப்போம்.


படத்தில் அம்புகுறி (C), இந்த மரம் வளர தொடங்கிய ஆண்டை குறிக்கிறது.

(B) ஒரு வளையத்துக்கும் அடுத்த வளையத்துக்கும் நடுவில் உள்ள இடைவெளி, ஒரு வருடத்தில் இந்த மரம் எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. இந்த இடைவெளி ஒரே மாதிரி இல்லாதது, ஒவ்வொரு ஆண்டும் அதன் வளர்ச்சியில் இருந்த மாற்றங்கள், ஏற்ற தாழ்வுகளை குறிக்கிறது.

(A) இந்த கருவளையம், அந்த ஆண்டில் காட்டுத்தீ அல்லது கடும் பஞ்சம் ஏற்பட்டதை குறிக்கிறது.

கணக்கின் படி இந்த மரம் சுமார் 42 வயதுடையது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உயிரோடு இருக்கும் மரங்களில், சிறு துளையிட்டு, அதன் மூலம் கிடைக்கிற மர வளையங்களை வைத்து வயதைக் கண்டறிவார்கள்.

கீழே உள்ள படம் அமெரிக்கா, கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள மரம். இதன் வயது 1392 வருடங்கள். இந்த மரம் பார்த்த (??) வரலாற்று நிகழ்வுகளை குறித்து வைத்திருக்கிறார்கள்.
 


விக்கி (wiki) தகவல் படி, உலகிலேயே மிக அதிக வயதான இன்னும் உயிரோடு இருக்கும் மரத்தின் வயது சுமார் 4844 வருடங்கள். இலங்கையில் உள்ள ஒரு ஆலமரத்தின் வயது 2293 வருடங்கள். இதுவே மனிதனால் நடப்பட்ட (கி.மு 288-ல் நடப்பட்டது), மிக பழமையான மரம்.

இதே போல ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகளில் காணப்படும் படிவங்கள் (layer) வைத்து பல கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த தட்ப வெட்ப நிலை பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள்.

கனடா நாட்டில், குழந்தைகளின் பாடத்திட்டத்தில் இந்த செயல்முறை கூடிய பயிற்சி இருக்கிறது. நமது வீட்டுக்கு அருகிலுள்ள மரங்களின் வயதை கண்டுபிடிப்போம்; குழந்தைகளுக்கு இதனை கற்றுக்கொடுப்போம்.

                               மரங்கள் மனிதனுக்கு கிடைத்த வரங்கள்.


10 பின்னூட்டங்கள்:

நர்சிம் said...

மிக சுவாரஸ்யமாய் இருந்தது.

//(A) இந்த கருவளையம், அந்த ஆண்டில் காட்டுத்தீ அல்லது கடும் பஞ்சம் ஏற்பட்டதை குறிக்கிறது.
//

ஆச்சர்யமான தகவல்.

ஜீவன் said...

நல்ல பதிவு ..!
இந்த வளையங்களுக்கு பெயர் ''ஆண்டுவளையங்கள்'' என படித்ததாக நியாபகம்..!

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

எத்தனை எளிதான சுருக்கத்தில். வியப்பின் உச்சம்.

Is it possible E mail options? Pls. add Mail subcr. tools.

Bavan said...

ஆச்சரியமான தகவல்கள்,,,:)

பின்னோக்கி said...

Bavan - நன்றி தங்கள் வருகைக்கு.

Thirumathi Jaya Seelan said...

புது தகவல் நன்றி

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமையான பயனுள்ள கட்டுரை

ரகுநாதன் said...

உங்கள மாதிரி உருப்படியா பதிவு போடணும் பாஸ் :)

பின்னோக்கி said...

ரகுநாதன் - நன்றி - விரைவில் நிறைய மொக்கை பதிவுகளை எதிர்பாருங்கள். சரக்கு தீர்ந்துவிட்டது :)
நன்றி கார்த்திக் தவறாமல் பதிவுகளை படிப்பதற்கு
Thirumathi Jaya Seelan - தங்கள் வருகைக்கு நன்றி

யாசவி said...

informative

kalakkal