09 November 2009

இப்படியும் சிலர்

(இது கதையில்லை)

நான் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பைக் கட்டும் போது, கட்டுமான பொருட்களை பாதுகாக்கும் பணியிலிருந்த தம்பதிகளையே, எங்கள் வீட்டு காவலர்களாக நியமித்தோம்.

அந்த தம்பதியினர், எங்கள் கார்களை வைக்கும் இடத்தில் இருந்த ஒரு காலியான இடத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஒரு பையன். சுமார் 20 வயது அவனுக்கு. கடினமாக படித்து, போரூருக்கு அருகிலிருந்த ஒரு தொழிற்சாலையில் வேலை. வாரத்திற்கு ஒரு முறை இவர்களை வந்து பார்ப்பான்.

ஒரு நாள் லிப்ட்காக காத்திருக்கும் போது
“வாங்க சார் ! சாப்பிட்டு போகலாம்” என்ற குரல் கேட்டு திரும்பினேன். அந்த பையன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அருகில் அவனின் பெற்றோர்கள். அப்பொழுதுதான் முதல் முறையாக அந்த பையனைப் பார்த்தேன்.
“பரவாயில்லை ! நீங்க சாப்பிடுங்க” என்று சொல்லி விட்டு லிப்ட்டில் ஏறினேன்.

சிறிது நாட்கள் கழித்து, வழக்கம் போல சென்னையில் பேய் மழை. நான்கு நாட்கள் கழித்து மழை சற்று ஒயவே, அலுவலகத்திற்கு சென்று விட்டு வந்தேன். காரை நிறுத்தி விட்டு லிப்ட்டுக்கு அருகில் வரும் போது, எங்கள் குடியிருப்பை சேர்ந்த சிலர் அங்கு கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்கு நடுவில் அழுதுகொண்டே அந்த அம்மா.

”என்னாச்சுங்க. எதாவது பிரச்சினையா ?” - நான்
“இவங்க பையன் வேலை முடிஞ்சு, கம்பெனி கதவ சாத்தி சாவி எடுத்துட்டு, மழை அதிகமா இருந்தனால, இங்க வரலாம்னு கிளம்பியிருக்கான். வழியில இருந்த சின்ன வாய்க்கால்ல நிறைய தண்ணி ஓடிக்கிட்டிருந்திருக்கு. பிரிட்ஜ் மேல ஏறாம, அடியிலயே நடந்து போய்டலாம்னு போகும் போது, சாவிய தவற விட்டுட்டான். குனிஞ்சு அத எடுக்கும் போது, தண்ணி அடிச்சுகிட்டு போய்டுச்சு” என்றார் ஒருவர்.

இரண்டு நாட்கள் கழித்து அவன் உடலை கண்டுபிடித்தனர். நாங்கள் அரசாங்கம் அறிவித்திருந்த உதவித்தொகையை வாங்க விண்ணப்பம் பூர்த்தி செய்து, எங்கள் குடியிருப்பின் சார்பாக ஒரு தொகை அளித்தோம்.

அடுத்த ஒரு மாதம், அந்த பையனின் சரிவர பார்க்காத முகத்தின் நியாபகம் வந்து கொண்டேயிருந்தது.

மகனை இழந்த சோகத்தில், எங்கள் குடியிருப்பு வேலை வேண்டாம் என்று சொல்லி, சொந்த ஊருக்கு போய்விட்டார்கள். அவர்களின் சில பொருட்கள் இங்கு இருந்தது.

ஒரு மாதம் கழித்து அவர்கள் வந்து, பொருட்களை எடுத்து போக வண்டி எடுத்துவந்திருந்தனர்.

அப்பொழுது தான் கவனித்தோம் அந்த அம்மாவின் கழுத்திலிருந்த புதிய தங்கச்சங்கிலியையும், காதிலிருந்த புதிய தோட்டையும்.

”அரசாங்கம் அறிவித்திருந்த இழப்பீட்டுப்  பணம் வந்துடுச்சு போலயிருக்கு சார்” - என்றார் அருகிலிருந்தவர்.

23 பின்னூட்டங்கள்:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அன்பரே, இப்படியும் பலர் இருக்கிறார்கள் தான்.. :(

ஜெட்லி... said...

பணம்னா பொணம் கூட
வாய திறக்கும்

vasu balaji said...

ஏழைங்க வேற என்னங்க பண்ணுவாங்க. வங்கியில் போடுவதோ வேறெதுவுமோ தெரியாதுங்க. இதுன்னா ஆத்திர அவசரத்துக்கு மார்வாடிகிட்ட போய்ட்டு வந்துட்டிருக்கும். ஒரு முறை மூக்குத்தி கேட்டாரென்று வீதியோர குடித்தனத்தில் ஒரு அம்மணியை அவள் புருஷன் மிதிக்க, குடிக்க காசில்லாட்டி வந்து அடிப்பியே, அதுக்குதானேய்யா கேக்கிறேன்னு அழுததை ரொம்ப நாள் மறக்க முடியலங்க.

Deepan Mahendran said...

எனக்கு இது தான் ஞாபகம் வருது....
"சில நேரங்களில் சில மனிதர்கள்"....

geethappriyan said...

அருமை நண்பர் பின்னோக்கி,
படித்துக்கொண்டே வந்து அந்த மகன் இறந்தது கேட்டு மனதை இறுக்க மேலும் படித்தால் சீ என ஆனது. ஆனால் வானம்பாடிகள் ஐயாவின் கருத்தும் யோசிக்கவே வைத்தது. என்ன? நகை வாங்கியிருந்தாலும் அதை மகன் துக்கம் மறைவதற்குள் அணிந்திருக்க வேண்டாம். அந்த முகம் தெரியா இளைஞனுக்கு ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்தனைகள். கொடுமைங்க இளமையில் மரணம்

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்ம்..என்ன செய்வாங்க பாவம்?

பின்னோக்கி said...

வானம்பாடி அவர்கள் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். ஆனால் அந்த அம்மாவின் முகத்தை நேரில் பார்த்த போது இந்த நகைகளுடன் வித்தியாசமாக இருந்தது. ஏழைகள் மரணத்தை எளிதாக எடுத்துக்கொள்கிறார்களோ என்ற உணர்வு. நான் 10 வது படிக்கும் போது என் நண்பன் வீட்டுக்கு போவேன். அவன் இருந்தது குடிசை வீடு. அங்கு ஒருவனை அடிக்கடி பார்த்து பேசுவேன். சில மாதம் கழித்து அங்கு போன போது அவன் அங்கில்லாததைக் கண்டு என் நண்பனிடம் விசாரித்த போது “போன மாசம் விஷம் குடிச்சுட்டான்” என்று ரொம்ப அலட்சியமாக சொன்னான். எனக்குத்தான் 1 வாரமாக அவனின் நினைப்பு. என் பார்வையில் வித்தியாசமாக தெரிந்தவை இந்த இரண்டு நிகழ்வுகள்

Anonymous said...

I really don’t understand the indent of this blog!!! Atrocious, what would have you expected from the poor people to do with compensations; to build glamorous grave yard for the lost one ; can your association give her money if request to buy jewels ; think about the humiliation on those folks from so called high tech ppl ; the mentality need to be revamped on the way we are looking at these kind of people.

We are in the society where high-tech people having uncontrollable debt thru loans and credit cards expects poor people to do better wealth management ;

உங்கள் தோழி கிருத்திகா said...

ஆமாம்...அவர்களாலும் வேற என்ன செய்யமுடியும்...
எனக்கு முன்னால் எழுதிய அனானி அவர்களே....ஏன் ஏன் இவ்வளவு கடுப்பு????

பின்னோக்கி said...

அனானி அவர்களே உங்களின் கருத்துக்கு நன்றி. இந்த பதிவின் மூலம் அவர்கள் அரக்கர்கள் என்று பறைசாற்றுவது என் எண்ணம் இல்லை. எனக்கு அவர்களை பார்த்த போது தோன்றிய உணர்வு. அவ்வளவே.
நன்றி தோழி கிருத்திகா.

Jackiesekar said...

என்ன செய்வது இப்படியும் ஈருக்கத்தான் செய்கின்றார்கள்.. பின்னோக்கி.. நல்ல எழுத்துநடை நன்றி

Anonymous said...

//ஏழைங்க வேற என்னங்க பண்ணுவாங்க. வங்கியில் போடுவதோ வேறெதுவுமோ தெரியாதுங்க. இதுன்னா ஆத்திர அவசரத்துக்கு மார்வாடிகிட்ட போய்ட்டு வந்துட்டிருக்கும்//

but

//நகை வாங்கியிருந்தாலும் அதை மகன் துக்கம் மறைவதற்குள் அணிந்திருக்க வேண்டாம்//

யாசவி said...

Dear Pinnoki,

I don't find anything wrong in this.

Just change money into gold.

wearing gold is doesn't mean that they are not loving their son.

May be Just a diversion for relieve from the incident.

What is the expectation we all looking for? Crying for a decade?

Let them recover fast :)

எண்ணங்கள் 13189034291840215795 said...

வருத்தமாக இருந்தது மேலும் நகை பற்றி குறிப்பிட்டுருக்கவே கூடாது.. ஒருத்தருக்கு சொக்கம் என்றால் அதில் இருந்து மீளவே கூடாதா உடனடியா?

பின்னோக்கி said...

யாசவி, புன்னகை தேசம் - இது நான் பார்த்த ஒரு நிகழ்வு அவ்வளவே. சமூகம் இந்த மாதிரி நேரங்களில் என்ன எதிர்பார்க்கிறது அல்லது ஒரு சராசரி மனிதன் என்ன எதிர்பார்க்கிறான் என்பதைப் பற்றியே ஒரு பதிவு. நானும் சராசரியாக யோசிக்கும் ஒருவன் தான்.

பின்னோக்கி said...

தங்கம் அணிவது என்னை பொருத்த வரை ஒரு ஆடம்பரம் என்ற அளவிலேயே என் பார்வை இருக்கிறது. அதனால், அவர்களை பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. மற்றபடி, எதுவுமே சரி/தவறு என்று சொல்ல முடியாது. எனக்கு தவறு என்று பட்டது, பலருக்கு சரி என்று தோன்றியிருக்கிறதல்லவா ?

ஆ.ஞானசேகரன் said...

என்னத்த சொல்ல

Anonymous said...

அந்த அம்மா பாவம் பின்னோக்கி,அந்த அம்மா தங்க சங்கிலி மகனின் நினைவுக்காக கூடப்போட்டிருக்கலாம்.

க.பாலாசி said...

இந்த இடுகை சம்பந்தமா என்னோட கருத்தை அய்யா வானம்பாடிகளே சொல்லிட்டார். இதையும் தாண்டி சிலர் நீங்கள் சொல்வதுபோலவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பின்னோக்கி said...

நன்றி ஞானசேகரன், திருமதி ஜெயசீலன், பாலாசி.

ஸ்ரீராம். said...

துக்கங்களை உதறி சந்தோஷ வாழ்வைத் தொடருவது தவறில்லை என்று தோன்றுகிறது. தங்க நகை போட்டாலும் மகனின் நினைவை மறக்க முடியுமா அவர்களால்?

அமுதா said...

எந்த இழப்பிலும் வாழ்க்கை நிற்பதில்லை... ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. எவ்வளவு நேரம் இழப்பின் உறைவில் இருக்கிறோம் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம்.

ஜோதிஜி said...

படித்து முடித்தவுடன் ஒரு நிமிடம் திகைத்து விட்டேன் என்பது உண்மை. ஆனால் பின்னால் உள்ள அத்தனை விமர்சனங்களையும் பார்த்து என்னால் ஒன்றுமே எழுத தோன்றவில்லை. எதிர்மறை நியாயங்கள்.

ஆனால் உங்கள் கூற்று மறுப்பதற்கு இல்லை.

ஏழையாகவே கடைசி வரையிலும் வாழப் பிறந்தவர்கள் வாழ்க்கையில் எல்லாமே எதார்த்தம் தான். பிறப்பு, சாவு.

ஐசிஎப் சாலை வழியாக வில்லிவாக்கம் போகும் போது பார்த்து நெகிழ்ந்த பல காட்சிகள், உள்ளே பல நினைவுகள் வந்து போகின்றது.