29 November 2009

தொடராதே - துப்பறியலாம் வாங்க

துப்பறிதல் என்பது பெரிய புதிர் கட்டத்தைப் போன்றது. சின்ன சின்ன க்ளூக்களை சேகரித்து, அதனதன் இடத்தில் சரியாக பொருத்தினால் புதிரை விடுவிக்கலாம். அந்த மாதிரி சின்ன சின்ன தடயங்களை அதனதன் இடத்தில் பொருத்தி குற்றவாளியைக் கண்டுபிடித்த ஒரு வழக்கு தான் இது.

----
48 வயதான மேரிக்கு ஒரு நாள் வந்த கடிதத்தில், அவரின் புகைப்படம் மற்றும் மிரட்டல் கடிதம் வந்தது.இந்த வயதில் அப்படி ஒரு புகைப்படம் யாருக்கு எப்படி கிடைத்தது என்று அதிர்ச்சி.

“உன்னால் என் மனைவிக்கும் எனக்கும் பிரச்சினை. அதற்கு காரணமானவள் நீ. உயிருடன் இருக்கத் தகுதியில்லாதவள்”

பயந்து போன மேரி, கணவர் ஜானுடன், போலீசுக்கு சென்று, தனக்கு பாதுகாப்புக் கோரினார். பாதுகாப்பு கொடுத்த காலத்தில் எந்த மிரட்டல் கடிதமும் வரவில்லை.

மேரியும், தனக்கு ஏன் அந்த மாதிரி கடிதம் வந்தது என்று தெரியவில்லை என ஜானிடம் கூறினார். இந்நிலையில் வந்த இன்னொரு கடிதத்தில்

“போலீசால் உனக்கு பிரயோஜனம் இல்லை. உன் வீட்டு பாதுகாப்பு அலாரத்தின் சீக்ரெட் கோட் 7805. உனது பிள்ளைகளின் நடவடிக்கை கூட எனக்குத் தெரியும்.”

இவ்வளவு தகவல் ஒருவனுக்கு தெரிந்திருக்கிறது என்றதும், ஜானுக்கும் மேரிக்கும் இடையில் சிறிய பிரச்சினை ஆரம்பித்தது. ஒரு நாள் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் வீட்டை விட்டு வெளியேறிய மேரி, பிறகு வீடு திரும்பவே இல்லை.

ஒரு நாள் கழித்து மேரியின் கார், சூப்பர் மார்கெட் பார்க்கிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. கார் மட்டுமல்ல, உயிரற்ற மேரியும். போஸ்மார்டத்தில் தெரிந்த தகவல்கள்.
- கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம்.
- மேரியின் பேண்ட் முன் பக்கம் பின் பக்கமாக தவறாக போடப்பட்டுள்ளது.
- மேரியின் பேண்ட்டில் இருந்த ஈரம், காரில் இல்லை. அதனால் காரில் அவர் கொல்லப்படவில்லை
- மேரி, மரணமடைந்த பிறகு, உடல் நகர்த்தப்பட்டிருக்கிறது. உடலில் இருந்த சிராய்ப்பின் தன்மை இதனை உறுதி செய்தது.

மேரியின் காரை சூப்பர் மார்க்கெட்டில் நிறுத்தியது கொலையாளிதான். சூப்பர் மார்கெட்டில் காரை நிறுத்தி விட்டு அப்படியே கொலையாளி சென்றிருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் அப்படி சென்றிருந்தால் அது பார்ப்பவர்க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனால், கொலையாளி, சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. கடையிலிருந்த வீடியோ காமிராவை ஆராய்ந்ததில், தொப்பி, கருப்பு நிற ஜெர்க்கின் அணிந்த ஒருவன் மேல் சந்தேகம் வந்தது. காலை 6 மணிக்கு வந்த அவன் வாங்கியது நாய் பிஸ்கெட் மட்டுமே. மேலும், காமிராவில் தன் உருவம் விழக்கூடாது என்பதற்காக பதுங்கி பதுங்கி நடந்திருப்பது தெரிந்தது.

அந்த உருவத்தை அடையாளம் காண மேற்கண்ட முயற்சி வெற்றியடையவில்லை. காரணம், வீடியோ குவாலிட்டி நன்றாக இல்லை. முகமும் தெளிவாக பதிவாக வில்லை. போட்டோகிராமெட்ரி எனப்படுகிற 2D போட்டாவை வைத்து 3Dயாக மாற்றக்கூடிய நிபுணர்கள், வீடியோவை ஆராய்ந்தார்கள்.



வீடியோ காமிராவை நிலையான இடத்தில் பொருத்தியிருந்ததால் அவர்களின் வேலை எளிதானது. முதல் படத்தில் தெரிபவன் தான் கொலையாளி (இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனினும் இப்போதைக்கு இவனை நாம் சந்தேகப்படுவோம்). அவன் பின் புறம் இருக்கும் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ்சின் அளவுகளை கண்டறிந்தனர். அதே இடத்தில் உயரத்தை அளக்கும் கருவி ஒன்றை நிறுவி அதைப் புகைப்படம் எடுத்து ஆராய்ந்ததில் அவனது உயரம் 5 அடி 6 அங்குலம் என முடிவானது.

மேரியின் பேண்டில் ஒட்டியிருந்த மண் துகள்களை ஆராய்ந்ததில், கார்பரண்டம், மேக்னடைட் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் காணப்பட்டது. மேரியின் வீடு மற்றும் 5 இடங்களில் எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில், மேரியின் வீட்டு வாசலில் எடுக்கப்பட்ட மண், பேண்டிலிருந்த மண்ணுடன் ஒத்துப்போனது. இப்பொழுது போலீசுக்குத் தெரிந்த இரண்டு தகவல்கள் 1. மேரி கொல்லப்பட்டது அவரின் வீட்டு வாசலில் 2. கொலையாளி 5 அடி 6 அங்குல உயரமானவன்.

மேரியின் வீட்டை ஆராய சர்ச் வாரண்ட் வாங்கப்பட்டது. வீட்டை ஆராய்ந்த போது, நாயைக் கட்டிப் போடும், நைலான் கயிற்றில் காணப்பட்ட குமிழ் போன்ற அமைப்பு, மேரியின் கழுத்தில் காணப்பட்ட காயத்தின் அடையாளத்துடன் ஒத்துப் போனது. ஜானை விசாரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதை போலீசார் உணர்ந்தனர்.

போலீஸ்: கடைசியாக உங்கள் மனைவியை எப்பொழுது பார்த்தீர்கள் ?
ஜான் : இரவு 10 மணி, பிள்ளைகள் வெளியே போயிருந்தனர். எனக்கும் மேரிக்கும் சிறிய வாக்குவாதம். அதில் கோபமடைந்து மேரி வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள்.
போலீஸ்: உங்கள் மனைவி கொல்லப்பட்டது, நாயைக் கட்டி போடும் நைலான் கயிற்றினால் எனக் கண்டுபிடித்திருக்கிறோம். இதற்கு என்ன சொல்கிறீர்கள்.
ஜான்: உண்மையை சொல்லி விடுகிறேன். மேரியைக் கொன்றது நான் இல்லை. எனது மூத்த மகன் டேவிட். மேரியுடன் சண்டையிடும் போது, கொன்று விட்டான்.

போலீஸ் இதனை நம்பத் தயாராகயில்லை. விசாரித்த வரை, மேரியின் மூன்று பிள்ளைகளும் அவருடன் மிகவும் பாசமாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள்.

இந்நிலையில் போலீசுக்கு இன்னொரு கடிதம் வந்தது. அதில்
“பாவம் ஜானை சந்தேகப்படுகிறீர்கள். மேரியைக் கொன்றது நான் தான். அவள் எனது உறவை முறிக்க விரும்பினாள், நான் அவளது கழுத்தை முறித்து விட்டேன். இவளோடு சேர்த்து 5 பெண்களைக் கொன்றிருக்கிறேன். கொலை செய்வதில் நல்லத் தேர்ச்சி வந்துவிட்டது எனக்கு”

இக்கடிதத்தை ஆராய லிங்குவிஸ்ட்டிக் நிபுணரிடம் கொடுத்தனர். அவர் இதுவரை வந்த மூன்று கடிதங்களையும் ஆராய்ந்து முடிவில் தனது அறிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார்.

“ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் வேவ்வேறு பொருள் படும் படி எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக “she BREAK my relationship, i BROKE her neck". இது கடைசிக் கடிதத்தில் காணப்பட்டது. இதே போல மற்ற இரண்டு கடிதங்களிலும் இருக்கிறது”

“நேர்மறை வார்த்தைகளையும் எதிர் மறை வார்த்தைகளையும் வித்தியாசமாக எழுதும் பழக்கம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ”she is there. i have been following her" போன்ற நேர்மறைக் கருத்துக்களை எழுதியவன் எதிர் மறைக்கருத்துக்களை ”she isn't there. i don't know" போன்று சுருக்கி எழுதி இருக்கிறான்”

ஜான் எழுதிய சில கடிதங்களை ஆராய்ந்த போது இதே மாதிரியான வார்த்தைப் பிரயோகங்களை கண்டுபிடித்தனர்.

ஜானின் உயரம் 5 அடி 6 அங்குலம். அவன் வீட்டில் கருப்பு நிற ஜெர்க்கின் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், நாய் பிஸ்கெட் வாங்கியதற்கான ரசீது இருந்தது. இந்த ஆதாரங்களை வைத்து ஜானைக் குற்றவாளி எனக் கோர்ட்டில் நிறுத்தினார்கள்.

என்ன நடந்தது ?
ஜானுக்கும் மேரிக்கும் திருமண வாழ்வில் பிரச்சினை. மேரி, ஜானை விட்டு பிரிய தயாராக இருந்தார். அந்த நிலையில் மிரட்டல் கடிதம் வந்தால், மேரியைக் காப்பாற்றும் ஹீரோ போல செயல்பட்டு, அவரிடம் நல்ல பெயர் வாங்கலாம். அதன் மூலம் மண வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் இருக்கும் என ஜான் நினைத்தான். அதனால் தான் அந்த மிரட்டல் கடிதங்களை எழுதினான். அன்று இரவு ஏற்பட்ட சண்டையில், ஜான் ஆத்திரமடைந்து, அருகில் இருந்த நாயைக் கட்டிப்போடும் நைலான் கயிற்றை வைத்து மேரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். மேரிக்கு பேண்ட் அணிவிக்கும் போது தவறுதலாக முன், பின் பக்கங்களை மாற்றி அணிவித்து, உடலை வீட்டு வாசலில் இழுத்து வந்து காரில் ஏற்றி, வீட்டுக்கு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் காரை நிறுத்தி விட்டு, சந்தேகத்தை தடுக்க, சூப்பர் மார்க்கெட் உள் சென்று வந்திருக்கிறான்.

இந்த வழக்கில் மூன்று விதமான தடய நிபுணர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு ஜானுக்கு ஆயுள் தண்டணை கிடைக்க உதவியாக இருந்தார்கள்.

11 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

நல்ல விறுவிறுப்பு... கலக்கல்

vasu balaji said...

செக்யூரிடி அலார்ம் கோட் நம்பர் படிச்சதுமே நான் ஜான் தான் பண்ணப்போறான்னு நினைச்சிட்டேனே. சே. நான் இங்க இருக்க வேண்டியவனே இல்லை. :))

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்.... இன்னும் கலக்குங்கோ

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம்.

Romeoboy said...

டிஸ்கவேரி சேனல்ல இந்த மாதிரியான கண்டுபுடிக்க முடியாத பல கொலை வழக்குகள் எப்படி தீவிரமா ஆரஞ்சு கொலையாளி கண்டு பிடிக்கிறாங்க என்பதை ரொம்ப அருமையா சொல்லுவாங்க. அதே மாதிரி இருக்கு இந்த பதிவு.

பின்னோக்கி said...

நன்றி - நாஞ்சில் பிரதாப்
நன்றி - வானம்பாடிகள் - கரெக்ட் நீங்க வேற இடத்துல இருக்க வேண்டியவர் :)
நன்றி - ஆ.ஞான செகரன்
நன்றி - ராமலஷ்மி
நன்றி - ரோமியோபாய் - இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான Medical Detectives தொடரின் ஒரு வழக்குதான் இது. நான் பார்த்ததை எழுத்து வடிவில் இங்கு பிறர் படிக்க.

அமுதா said...

சுவாரசியமாக் சொல்லி இருக்கீங்க

ஸ்ரீராம். said...

க்ளூ கொடுத்து கேள்வியை வாசகர்களைக் கேள்வி கேட்பீர்கள் என்று பார்த்தேன்..நன்று

கிருபாநந்தினி said...

ஆரம்பத்துலேயே எனக்குத் தெரிஞ்சுபோச்சு, அந்த ராஸ்கல் ஜான்தான் கொலை பண்ணியிருப்பான்னு. ஆனா, இந்த வழக்கை நீங்க விவரிச்ச விதம் படு த்ரில்லிங்! எங்கேருந்துங்ணா இதையெல்லாம் புடிக்கிறீங்க? போட்டோ வேற!

பின்னோக்கி said...

நன்றி கிருபாநந்தினி - இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான Medical Detectives தொடரின் ஒரு வழக்குதான் இது. நான் பார்த்ததை எழுத்து வடிவில் இங்கு பிறர் படிக்க.

rooto said...

good way of writing!! u can translate some stories from the television series BONES which is absolutely thrilling and not like other murders!!! hav a check!!!