21 December 2009

பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு 10 மைல் தூரம்.

போன வெள்ளிக்கிழமை, மாகாபலிபுரம் அருகில் இருக்கும் டெம்பிள் பே ரிசார்டுக்கு, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக போனோம்.சிமெண்ட் தளம், டென்னிஸ் பால் மற்றும் பேட்டை பார்த்ததும், கிரிக்கெட் ஆசை வந்தது. வார நாட்களில் உடற்பயிற்சி செய்ய முடியாததால், இந்த மாதிரி விளையாண்டு, கொஞ்சம் சுறு சுறுப்பாக இருப்பது என் திட்டம்.

முதல் இரண்டு ஓவர்களில் 20, 16 ரன்கள் கொடுக்க, மூணாவது ஓவர் நான் போடுறேன் என்றேன்.உடம்பின் எடை பாஸ்ட் பவுலிங்  போட ஒத்துழைக்காததால், 4 மீட்டர் ஓடுவதற்குள் வேட்டை நாய்க்கு இரைப்பது போல மூச்சு இரைத்ததால், ஆஃப் ஸ்பின் போடலாம் என்று முடிவு செய்தேன்.கிரீஸ்க்கு ரெண்டு அடி பின்னால் இருந்து ஓடி வந்து,கிரீஸ்க்கு முன்னால் வலது காலை வைத்து, வேகத்தை என் கைகளில் கூட்டி பந்தை போட்ட போது, பந்து சுழலுவதற்கு முன், எனக்கு பூமி சுற்றத்தொடங்கியது. வலது காலை வைத்த உடன் வழுக்கி விட, தடுமாறி முன் விழுந்தேன். விழும்போது, இடது காலை, சிமெண்ட் தரையில் இடது கை வைத்து காப்பாற்றினேன். வலது காலுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. முட்டி, சிமெண்ட் தரையில் முட்டி, சுளீர் என்று வலி. 2 செகண்டுக்கு தலை சுற்ற, வலது கால் பேண்டை நீக்கி பார்த்தேன்.நல்ல வேளை ரத்தம் வரவில்லை. அதற்குள் என்னை சுற்றி வந்த நண்பர்களிடம்,
“முட்டிகிட்ட வலிக்குதே” என்றேன்.
“முதல்ல எழுந்து நில்லுங்க. நிக்க முடிஞ்சுதுன்னா எலும்பு எதுவும் ஒடஞ்சுருக்காது. நிக்க முடியுதே !. பயப்படாதீங்க” என்றார்கள்.
வலி அதற்குள் அதிகமாக, “ஆனா முட்டிகிட்ட நல்லா வலிக்குது,எதாவது லிகமெண்ட் பிஞ்சுருக்குமா  ?” என்றேன்.
“கால கொஞ்சம் தூக்குங்க. அப்படியே நிறுத்தி, பாதத்த முன்னாடி, பின்னாடி ஆட்டுங்க. பாருங்க, உங்களால இத செய்ய முடியுது. லிகமெண்ட் பிஞ்சுருக்காது” என்றனர், பல கிரிக்கெட் விபத்துக்களை பார்த்த நண்பர்கள்.

இப்படியாக எனது முதல் ஓவர் பேபி ஓவராக, மைதானத்திலிருந்து விலகி உட்கார்ந்து கொண்டேன்.நேரம் போகப் போக வலி அதிகமானது. ஒரு மணி நேரம் கழித்து, வலது காலை தரையில் வைக்க முடியாத அளவுக்கு வலி. முட்டிக்கு அருகில், சிறிய பந்து போல வீக்கம் அதிகமாக, பயம் அதிகமாக ஆரம்பித்தது. அடுத்த 2 மணி நேரத்தில், 2 பேர் அருகிலிருந்தால் மட்டுமே நடக்கமுடியும் என்ற நிலை.

தட்டுத்தடுமாறி, வலியைக் கட்டுப்படுத்த, வலியில்லாத பல்லைக்கடித்தபடி வீட்டுக்கு வந்தேன். தள்ளாடியபடி வீட்டுக்கு வந்த என்னை முதலில் கோபத்துடன் (தண்ணி ??) பார்த்தாலும், பிறகு உண்மையை உணர்ந்து, மூவ், சுடுதண்ணி ஒத்தடத்துடன் என் மனைவி முயன்றும் வலி குறையவில்லை.

அடுத்த நாள் எக்ஸ்-ரே எடுத்தேன். எலும்பு முறிவு இல்லை என்ற முதல் சந்தோஷ செய்தி. பரிசோதித்த டாக்டர், காலை சேர் மேலே வைக்க சொல்லிவிட்டு, கம்பியூட்டரில், காலில் இருந்த தசை நார்களின் படத்தைக் காண்பித்து, உடனே, என் காலில், அந்த இடம் எங்கே இருக்கிறது என்று காண்பித்தார். அடேங்கப்பா !! என்ன ஒரு சிக்கலான வடிவமைப்பு. படத்தை பார்த்துவிட்டு காலைப் பார்க்கவே பயமாக இருந்தது. அப்பொழுது காலை என்னால் மடக்கவே முடியவில்லை.

”அசோக் நகர்ல எங்க இருக்கீங்க ?” கேட்டார் டாக்டர்.
”18வது அவென்யூ டாக்டர்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் என் முட்டியின் மேல் கையை வைத்து ஒரு அமுக் அமுக்கினார் பாருங்கள், அய்யோ !!.அப்புறம் தான் தெரிஞ்சுது, என் வீடு எங்க இருக்குன்னு கேட்டு, என் கவனத்தை திசைதிருப்பியது அந்த எதிர்பாராத அமுக்குக்காக என்று.


”பாருங்க மேடம். இவரு கால மடக்க முடியலை. முட்டிய அழுத்துனா வலிக்குது. அதுனால உள்ளே இருக்குற தசை நார், அடி பட்டதுல வெளியே வந்து, ரெண்டு எலும்புக்கு நடுவில மாட்டிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். நாம MRI ஸ்கேன் பார்த்துடுவோம்” என்றார் டாக்டர்.

வாழ்க்கையில CT ஸ்கேன் பார்த்தாச்சு. இப்ப MRI. ஸ்கேன் சென் டரில், அவர்கள் குடுத்த யூனிபார்ம் போட்டு, வாய் திறந்து காத்திருந்த பெரிய மிஷின் உள்ளே அனுப்பப்பட்டேன்.
“சார்.. காலை நல்லா அழுத்தி வைங்க. அப்பதான் ஸ்கேன் ஒழுங்கா வரும்”
“கால மடக்க முடியாததால தாங்க ஸ்கேனுக்கு வந்திருக்கேன்” என்று சொல்லியும், இன்னொரு அமுக். இன்னொரு அய்யோ !
“இந்த பம்ப் கையில வெச்சுக்கோங்க”
“எதுக்கு ?”
“ஸ்கேன் ஆரம்பிச்சு நடுவுல உங்களுக்கு எதாவது கஷ்டமா இருந்தா, இத அழுத்துங்க, நாங்க மிஷின்ல இருந்து வெளியே உங்கள எடுத்துடுவோம். அப்புறம், வித்தியாசமா சவுண்ட் வரும். பயப்படாதீங்க. காலை அசைச்சுடாதீங்க”
முன்னாடி அந்த அமுக்கில், வலியில் நரம்பு துடிக்க, நான் சொல்லாமலேயே என் கால் ஆட ஆரம்பித்திருந்தது.


அடுத்த 20 நிமிஷத்துக்கு “டபக்..டப்..டபக்..டப்...ஸ்ப்..சப்..ஸ்ப்..சப்..டொங்..டிங்..டொங்..டிங்” சத்தம். கிட்டதட்ட ஹிப்னாட்டிசம் பண்ணின மாதிரி இருந்தது.

வீட்டுக்கு வந்து தூங்க, அடுத்த 3 மணி நேரம் கழித்து, MRI ஸ்கேன் ரிப்போர்ட் வாங்கிவிட்டு, என் மனைவியும், அண்ணன் மட்டும் டாக்டரை போய் பார்த்தார்கள்.
பந்துகிண்ண மூட்டில் சிறிய கிராக். தசை நார்கள் கிழியவில்லை ஆனால் அடிபட்டதில் உள்ளே ரத்தம் வந்து குளம் போல தேங்கியிருக்கிறது அதனால் வீக்கம்.

“நாளைக்கு அவரை அழைச்சுட்டு வாங்க. ஊசி குத்தி தேங்கியிருக்கிற ரத்தத்த எடுத்துட்டு, மாவு கட்டு போட்டுடுவோம். மூணு வாரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” என்றார் டாக்டர்.

இதைக் கேட்டதும், ரத்தம் எடுக்கும் போது மயக்க மருந்து எதாவது குடுப்பேன்னு சொன்னாங்களா ? என்ற என் கேள்விக்கு "இல்லை" என்ற பதிலால், அன்று இரவு திகிலுடன் கழிந்தது.
அடுத்த நாள் நொண்டியடித்து போய், ஆபரேஷன் டேபிளில் படுக்க, ஊசியை வைத்து ஒரு குத்து. பீச்சி அடித்தது ரத்தம், உடனே என் மனைவியை உள்ளே வரச் சொல்லி “இங்க பாருங்கம்மா ! இப்ப உள்ளே இருந்த ரத்தம் எல்லாம் எடுத்தாச்சு. இனிமே வலி இருக்காது” என்றார் டாக்டர்.
ஊசி குத்திய வலியை விட, 2 நாட்களாக முட்டியிலிருந்த வலி உடனேபோனது சந்தோஷமாக இருந்தது. மாவு கட்டுக்கு துணியை சுற்றியபடியே
“எங்கே இருக்கீங்க” என்றார் டாக்டர்
“18வது அவென்யூ அசோக் நகர் டாக்டர்” பயந்தபடியே நான். இதே கேள்வி நேற்று, அப்புறம் அந்த அமுக்.
”டாக்டர் ! நேத்து மாதிரியே அமுக்க போறீங்களா ?”
“எதுக்கு அமுக்கணும் ? “
”இல்ல டாக்டர் ! நேத்து இதே மாதிரி தான் கேட்டுட்டு கால அமுக்குனீங்க. அதுதான் பயமா இருந்துச்சு”
ஒரு சிரிப்புடன், “ஓ.கே. இன்னும் அரை மணி நேரம் கழிச்சு கட்டு காய்ஞ்சதும், வீட்டுக்கு போங்க. நாளைக்கு வந்து பாருங்க”.

இன்ச்..இன்ச்சாக வீட்டுக்குள் நகருவது, நரக வேதனை. இந்த வேகத்தில், இனி 3 வாரத்துக்கு என் வீட்டு பெட்ரூமில் இருந்து 10 மீட்டர் தூரத்திலிருக்கும் ஹால், 10 கி.மீட்டர் தூரம் போன மாதிரி இருக்கிறது. டி.வி பார்த்தால், அதில் வருபவர்களின் காலை மட்டுமே என் கண்கள் பார்க்கிறது. டான்ஸ் ஆடுபவர்களை பார்க்கும் போது என் கால் வலிக்கிறது.இத்தனை நாளாக, கால் என்ற உறுப்பு இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் இருந்துவிட்டு, இப்பொழுது, உடலில் கால் மட்டுமே இருப்பதாக உணர்வு. உடலில் எதாவது ஒரு பாகம் இருப்பது போல உணர்ந்தால், அந்த பாகத்தில் பிரச்சினை என்று அர்த்தம் என்று முன்பு கேள்வி பட்டிருக்கிறேன். உணர்கிறேன் இப்பொழுது.

சனிப் பெயர்ச்சி பலன்கள் புத்தகத்தில் மீன ராசி பலனில், அடுத்த 3 வாரத்துக்கு ஆஸ்பத்திரியிலிருக்க நேரிடலாம் என்று இருப்பதைக் கோடிட்டு என் அண்ணா காண்பித்தார்.

”இந்த வயசுல எதுக்குடா கிரிக்கெட் ?. எல்லாம் கெட்ட நேரம் தான். நாடி ஜோதிட கேசட் திருப்பி ஒரு தடவ கேளு. இதப்பத்தி எதாவது சொல்லியிருக்கான்னு பார்க்கலாம்” - இன்னொரு அண்ணா

"உடம்பு ஓவரா வெயிட் போட்டுட்ட. அதுனால தான் இந்த சின்ன அடிகூட இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகிடுச்சு. வெயிட் குறைக்கணும்னு உனக்கு தோணவே மாட்டேங்குது" - இன்னொரு அண்ணா. எப்படி சொல்ல ?, கிரிக்கெட் விளையாடி உடம்பு குறைக்கலாம் என்ற ஞானோதயம் ஏற்பட்டதின் பலன் தான் இது என்று ?

“ஏங்க. வீட்டுக்கு வந்தா, தேமேன்னு உட்கார்ந்திருப்பீங்களே ? நடக்க கூட யோசிப்பீங்க. நீங்க எதுக்கு கிரிக்கெட் விளையாடுனீங்க “ - என் மாமியார்.

“டி.வி. லேப்டாப். ப்ளாக். 3 வாரம் உங்களுக்கு ஈஸியா பொழுது போய்டும். இதுக்கு முன்னாடியும் இதயே தான் பண்ணிக்கிட்டு இருந்தீங்க. அதுனால உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்காது”  - என் மனைவி.

”????!!!@@@@$$$%%%%^^^^&&*******”
- நான்.

26 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

என்னங்க ரொம்ப நாளா ஆளையேக் காணோம்... இதான் ரீஸனா??? இப்ப எப்படியிருக்கு?

உங்க அண்ணன்லேருந்து மாமியார் வரைக்கும் இதான் சாக்குன்னு வரிசையா உங்களை ஆளாளுக்கு ஓட்டனது கலக்கல்.. அதுல உங்க மாமியார் கமெண்டு ரொம்ப டாப்பு...

அப்ப இனி மூணு வாரத்துக்கு நிறைய பதிவுகைள எதிர்பார்க்கலாம்...ரைட்டு அந்த துப்பறியலாம் வாங்க எழுதுங்க...
ஹஹஹ... நம்ம பங்குக்கும் ஒட்டியாச்சு..

சந்தனமுல்லை said...

:-(

விரைவில் கால் குணமாகட்டும், பின்னோக்கி!

Unknown said...

எனக்குக் கை உங்களுக்குக் கால். விரைவில் குணமாகட்டும்.

Vidhya Chandrasekaran said...

விரைவில் மீண்டு(ம்) கிரிக்கெட் விளையாட வாழ்த்துகள்.

Romeoboy said...

அண்ணே சீரியஸ் மேட்டர் கூட இவ்வளவு தமாசா எழுதி அசத்திடிங்க .. வயசான காலத்துல எதுக்கு அண்ணே இந்த மாதிரியான விஷப்பரிச்சை?? அதான் கம்ப்யூட்டர் இருக்குல பேசாம அதுலேயே விளையாடுங்க .. கலக்கல் பதிவு .. 3 வாரத்துல நாங்க உங்கள் பதிவ அதிகம் படிக்கலாம்ன்னு சொல்லுங்க .

Chitra said...

“டி.வி. லேப்டாப். ப்ளாக். 3 வாரம் உங்களுக்கு ஈஸியா பொழுது போய்டும். இதுக்கு முன்னாடியும் இதயே தான் பண்ணிக்கிட்டு இருந்தீங்க. அதுனால உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்காது” - என் மனைவி.

”????!!!@@@@$$$%%%%^^^^&&*******” - நான்.
..............ஐயோ பாவம். ஆனால் சிரிக்காம இருக்க முடியவில்லை.

பா.ராஜாராம் said...

உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள் பின்நோக்கி..

அப்பா மாதிரி ஆள் போல நீங்க.வலியில் இருந்துதான்,சிரிப்பு எடுத்து வீசுவார்.

பத்ரம் மக்கா.தலைப்பு மிகுந்த வலியே..ஆனால் அருமை!

Unknown said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

ப்ரியமுடன் வசந்த் said...

சரியாயிடும் சீக்கிரம் கவலைப்படாதீங்க சார்...!

Anonymous said...

இதுதான் சாக்குன்னு எல்லாரும் உங்களை கலாய்ச்சுட்டாங்களா :)
சீக்கிரமே நலம் பெற வாழ்த்துக்கள்

செல்வசுந்தரம் said...

//“எங்கே இருக்கீங்க” என்றார் டாக்டர்
“18வது அவென்யூ அசோக் நகர் டாக்டர்” பயந்தபடியே நான். இதே கேள்வி நேற்று, அப்புறம் அந்த அமுக்.
”டாக்டர் ! நேத்து மாதிரியே அமுக்க போறீங்களா ?”
“எதுக்கு அமுக்கணும் ? “
”இல்ல டாக்டர் ! நேத்து இதே மாதிரி தான் கேட்டுட்டு கால அமுக்குனீங்க. அதுதான் பயமா இருந்துச்சு”
//

Sema Comedy!!!

Mohan said...

விரைவில் நலம் பெற வாழ்த்துகள்!

அமுதா said...

விரைவில் குணமாகி வாருங்கள்

Thenammai Lakshmanan said...

அருமை பின்னோக்கி அருமை முழங்கால்ல பின்னீட்டீங்க போங்க நினைச்சாலே வலிக்குது

சங்கர் said...

விரைவில் குணமாகி வாங்க, ஒரு மேட்ச் விளையாடலாம்

ஸ்ரீராம். said...

வலிகளை நகைச்சுவையாகக் கொடுத்திருக்கிறீர்கள்... எங்களுக்கு சிரிப்பு வந்தாலும் உங்கள் வேதனை சீக்கிரம் குறைய வாழ்த்துக்கள்.

Bavan said...

கலக்கல் பதிவு...
விழுந்ததைப்பற்றி இப்படியும் எழுதலாமா?

உங்கள் தோழி கிருத்திகா said...

ஏனுங்க உங்களுக்கு இப்படி ஒரு கொல வெறி??
இப்போ பரவால்லயா??வீட்டுல இருந்து உடம்ப தேத்துங்க....ஐ மீன் காலை...நீங்க சொன்னத வெச்சு உடம்ப தேத்த அவசியமில்லன்னு நெனைக்குரேன் :)
கிரிக்கெட் எல்லாம் சின்ன பசங்க விளயாடுரதுங்க..நாம பாக்கரதோட நிறுத்திக்கனும்...

vasu balaji said...

விரைவில் குணமாகட்டும்.

ungalrasigan.blogspot.com said...

\\”அசோக் நகர்ல எங்க இருக்கீங்க ?” கேட்டார் டாக்டர்.
”18வது அவென்யூ டாக்டர்”// அட, நான் 16-வது அவென்யூல இருக்கேன்!
தலைப்பே சுவாரசியம்! தவிர, ஓர் உடல் உபாதையை இந்த அளவு நகைச்சுவையாக எழுதியது இன்னும் சுவாரசியம். தங்கள் கால் சீக்கிரம் குணமாக வாழ்த்துக்கள்!

geethappriyan said...

விரைவில் குணமாகி வாருங்கள், நல்ல ஓய்வை எடுங்கள்,குடும்பத்துடன் நேரம் செலவிடுங்கள்.

சிவாஜி சங்கர் said...

பூரண குணமடைய தம்பியின் பிராத்தனைகள்..

ஹுஸைனம்மா said...

உங்க மாமியார் கமெண்ட்தான் சூப்பர். காத்திருந்தாங்க போல சந்தர்ப்பத்துக்கு. உங்க மனைவி சொன்னதும் உண்மை.

//கிரிக்கெட் எல்லாம் சின்ன பசங்க விளயாடுரதுங்க..நாம பாக்கரதோட நிறுத்திக்கனும்...//

அதானே...

பின்னோக்கி said...

நன்றி - நாஞ்சில், பா.ரா, முல்லை.
நன்றி - வித்யா, ரோமியோ பாய், சித்ரா, வசந்த்
நன்றி - முகிலன் - இதை எழுதும் போது உங்கள் நியாபகம் தான் வந்தது.
நன்றி - சின்ன அம்மிணி, அமுதா, கார்த்திக்
நன்றி - ரவிபிரகாஷ் - சார், ரொம்ப பக்கத்துலதான் இருக்கீங்க :)
நன்றி - ஸ்ரீராம், சிவாஜி ஷங்கர், வானம்பாடிகள், கிருத்திகா, பவன், தேனம்மைலக்‌ஷமணன்
நன்றி - சங்கர், மோகன், செல்வசுந்தரம்
நன்றி - ஹுஸைனம்மா

உங்களின் பிரார்த்தனை என்னை விரைவில் குணமாக்கும். நன்றிகள் அனைவருக்கும்.

ramp said...

பிள்ளைங்க விளையாடுவதை ரசிக்கிற வயசிலே நமக்கு எதுக்கு ச்ரிக்கெட்??
Anyways.... மீண்டும் விரைவில் குணமடைய என் ப்ரார்த்தனைகள் ...

P.S: மிகவும் ரசிக்கும்படி எழுதுகிரீர்கள் !!

கிருஷ்ணா வ வெ said...

உங்க பதிவ பாத்து விழுந்து விழுந்து சிருச்சதுல எனக்கு நல்லவேளை அடி படல.
உங்களுக்காக வருத்தப்பட விடவே இல்லை.

கடைசி கமெண்டுகள் அனைத்தும் அருமை.
எதுக்கும் அந்த நாடி ஜோசிய கேசட் கேக்க மறக்காதீங்க..:(