09 December 2009

இரண்டு சக்கர ரதம்

சைக்கிள் வாங்கிய கதை

26 வருடங்களுக்கு முன், ஆயுத பூஜை நாளில் என் 2வது அண்ணனுக்காக அப்பா ஒரு சைக்கிள் வாங்கிகொடுத்தார். பச்சை நிற B.S.A. முன் பின் கேரியர் போன்ற எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லாமல்,சட்டையில்லாமல் வெறும் டவுசர் மட்டும் போட்ட பையனைப் போல இருந்தது.


பூ, பொட்டு வைத்து, சந்தனம் தெளித்து, வீட்டிற்கு வெளியே நிற்க வைக்க மனம் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே நிறுத்தினோம். அன்று சைக்கிள் ஓட்டக் கூடாது, அடுத்த நாள் நல்ல நேரம் பார்த்து தான் எடுத்து ஓட்டவேண்டுமென்று கட்டளை.

அன்று இரவு, பாதி தூக்கத்தில் வந்து லைட்டை போட்டு வண்டியைப் பார்க்க, அதற்கு முன்னால் என் 2வது அண்ணன் சைக்கிளைப் பார்த்தபடி அங்கு நிற்க, அசடு வழிய ஒருத்தரை, ஒருத்தர் பார்த்துவிட்டு, தூங்கி, அடுத்த நாள் காலையில் முதல் வேளையாக சைக்கிளின் மூஞ்சியில் விழித்து, எப்பொழுது நல்ல நேரம் எனப்பார்த்து, காத்திருந்து, வெளியே எடுத்து போனோம்.

அருகில் இருந்த கடையில் நிறுத்தி, ”அண்ணே !! நல்லா புது பார்ட்ஸ்ஸா போடுங்கண்ணே !!” என்று சொல்லி, எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் வாங்கி பொருத்தி, முன் கம்பியில் நான், பின் பக்கம் என் 3 வது அண்ணன் ஏறிக்கொள்ள, 2வதுஅண்ணன் ஓட்ட, ஒரு முதல் சைக்கிள் பயணம் தொடங்கியது.


இங்கு எக்ஸ்ட்ர பிட்டிங்ஸ் பற்றி சொல்ல வேண்டும். சீட்டுக் கவர், முன்னால் புத்தகம் வைக்கும் அளவுக்கு சின்ன கேரியர், பின்னால் பெரிய கேரியர், கைப்பிடிக்கு முள்ளு முள்ளாக இருக்கும் கவர், பிரேக்குக்கு பல வண்ணத்தில் உறை, முன் மற்றும் பின் சக்கரத்தில், சக்கரத்துடன் சேர்ந்து சுழலக்கூடிய, வட்ட வடிவ உறை. டிங் டிங் என்று அடிக்கும் பெல்லுக்கு பதிலாக கிர்ர்ர்ர்ரிரிங்ங் என்று அடிக்கும் பெல் என நாங்கள் போட்டிருந்த ஆடைகளை விட சைக்கிள் அதிக பிட்டிங் போட்டிருந்தது. முக்கியமாக சைக்கிள் லைட்டுக்காக இருக்கும் டைனமோ. பின் சக்கரத்தில் அது பதிந்து, சுற்றும் போது, விரல் நகத்தை வைத்தால், சொர்ர்ர் என்ற சத்தத்துடன் சீர் செய்துவிடும்.


நாமக்கல். பள்ளிக்கு விடுமுறை நாட்களில் ஊருக்கு சற்று தொலைவில் இருந்த M.G.M தியேட்டரில் போடப்படும் அனைத்து ஆங்கிலப் படங்களையும் (சூப்பர் மேன், மெல்ட்டிங் மேன்) பார்க்க சைக்கிளில் போவோம்.2 வது அண்ணன் தான் சைக்கிளுக்கு ஓனர். அவர் போடும் கண்டிஷன்கள் பலப் பல. படம் முடிந்து வரும் வழியிலிருந்த சிறிய குளத்தில் வண்டி நிறுத்தப்படும்.நான் முன் சக்கரம், 3 வது அண்ணன் பின் சக்கரத்தை கழுவி விட வேண்டும்.

“பாரு அவன் உன்னை விட சூப்பரா துடைக்கிறான். பின் சக்கரம் தான் பள பளப்பா இருக்கு”

இது என்னை உசுப்பேத்த எனத் தெரியாமல், அப்படியான்னு ரோஷத்துடன், இன்னும் அழுத்தி துடைத்து பள பளப்பாக்குவேன். வாரத்துக்கு ஒரு தடவை, ரிம்மில் இருக்கும் துருவை அகற்ற, மண்ணெண்ணை வைத்து துடைப்போம். நீண்ட ஊசி போல மூக்கு இருக்கும் ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, டபக் டபக் சத்தத்துடன், வண்டியின் பூட்டு, வீல் ஜாயிண்டுகளில் விடுவோம்.


வேட்டை ஆரம்பம்.


தாத்தா இருந்த ஊரான கரூருக்கு விடுமுறைக்கு போகும் போது, என் 2 வது அண்ணனும், மாமாவின் பையனும் வேட்டைக்கு கிளம்புவார்கள். என்ன வேட்டையா ?. என் மாமாவின் பையன், காய்கறி வாங்கும் போது, கடைக்காரன் பார்க்காத போது, 2 தக்காளியை, அவ்வளவு நாசுக்காக பையில் போடுவான். மளிகைக் கடையிலும் அவன் கைவரிசையை காண்பிப்பான். அவனது வீரதீர செயல்களால் கவரப்பட்டு, வேட்டைக்கு அவன் தான் சரியான ஆள் என தேர்ந்தெடுத்தோம்.

அனாமத்தாக தெருவில் நின்று கொண்டிருக்கும் B.S.A வண்டியில், சைடு கம்பியில் ஒட்டியிருக்கும், பள பளப்பான ஸ்டிக்கரை அபேஸ் பண்ணும் செயலே எங்கள் பாஷையில் வேட்டை. B.S.A என்ற ஒவ்வொரு எழுத்துக்கும் நடுவில் பட்டையாக அந்த ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் அழகே தனிதான். அப்படி எடுக்கப்படும் ஸ்டிக்கர்கள், பிளாஸ்டிக் காகிதத்தில் ஒட்டப்பட்டு, பெரியவர்கள் யாரும் பார்க்காத மாதிரி, பேக்குகளில் வைக்கப்படும். நாமக்கல் திரும்பிய பின், எங்கள் வண்டியின் ஸ்டிக்கர் பிய்ந்து போனதும், அபேஸ் பண்ணுன ஸ்டிக்கர ஒட்டும் போது தான் ஒரு உண்மை தெரிஞ்சது. பேக்டரியில ஒரு தடவை ஒட்டுனா ஒட்டுனது தான். அப்புறம் நாம என்னதான் அந்த ஸ்டிக்கர கோந்து போட்டு ஒட்டுனாலும் சரியா ஒட்டாது அப்புறம், ஸ்டிக்கர் பளபளப்பும் இருக்காது. காரணம், அபேஸ் பண்ணும் போது பெரும்பாலன பசை, சைக்கிள்ளேயே ஒட்டிக்கும். இந்த தோல்வியை அடுத்து, அபேஸ் திட்டம், சோகத்துடன் கைவிடப்பட்டது.


சேந்தமங்கலம் டிரிப்

உள்ளூரில் ஓட்டி பழகிய பின் என் அண்ணனின் நண்பர்களுடன் சேர்ந்து வீட்டுக்குத் தெரியாமல் ஒரு சாகசப் பயணம் ஏற்பாடு செய்தோம். நாமக்கலுக்கு அருகில் இருக்கும் சேந்தமங்கலத்துக்கு போய்விட்டு உடனே வீடு திரும்புவது. இருபுறமும் மரங்கள் சூழ, ஆள் நடமாட்டமில்லாத, மெயின் ரோட்டில், கும்பலாக சைக்கிளில் போனது ஒரு சுவாரசியமான அனுபவம். விபத்தில்லாத பயணமா ? பின் பக்கமாக, இரண்டு கால் போட்டு உட்கார்ந்திருந்த நான், என் அண்ணன், சீட்டை விட்டு எழுந்து வேகமாக அழுத்தி ஓட்ட பார்க்கும் போது, நான் அந்த அதிக வேகத்துக்கு  ஈடு கொடுக்க முடியாமல், கையை விட்டு, அப்படியே மல்லாக்க ரோடில்  விழுந்தேன். பின் தலையில் நல்ல அடி. ரத்தம் வரவில்லை. நான் அழ  ஆரம்பிக்க, எல்லாருக்கும் பீதி கிளம்பியது. ஊருக்கு போனதும், 10 ரவுண்டு சைக்கிளில் அடிக்கிறேன் என்ற என் அண்ணனின் வாக்குறுதியையடுத்து என் அழுகை நின்றது. இந்த விபத்துக்கு அப்புறம், எனக்கு ராஜ மரியாதை. வழியில் ஒருவரின் வீட்டில் நின்று கருப்பட்டி போட்ட பால் சேர்க்காத வரக் காப்பியைக் குடித்து விட்டு, ஒரு வழியாக சேந்தமங்கலம் போய் சேர்ந்தோம்.அங்கிருந்த கோயிலில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்த பிறகு நாமக்கல் திரும்பினோம். “டேய், நீ கீழ விழுந்தத வீட்டுல யாருக்கிட்டயும் சொல்லாதடா !!” என்ற என் அண்ணன்களின் கெஞ்சல் என்னை வி.ஐ.பி ரேஞ்சுக்கு உயர்த்தியது. இன்றும், தலைவலி வந்தால், ஒரு வேளை,  அந்த விபத்தில், தலையில் ரத்தம் உறைந்து எதாவது ஆகியிருக்குமோ என்ற பீதி கிளம்பும்.


பரம்பரை சொத்து, வழி வழியாக வருவது போல, 2வது அண்ணனிடமிருந்து, 3 வது அண்ணனுக்கு சைக்கிள் வந்தது. தூத்துக்குடியில் இருந்த பொழுது குரங்குப் பெடலில் (குரங்குக்கும் சைக்கிளுக்கும் என்ன சம்பந்தம் ?) ஆரம்பித்து, காலில் சில விழுப்புண்களுடன் சைக்கிள் ஓட்டக்கற்றுக் கொண்டேன். இன்றும், அந்த ஒரு பெடலில் அழுத்து அழுத்தி, வண்டி நகர ஆரம்பிக்கும் போது அடுத்த காலை சீட்டுக்கு மேலே போட்டு ஏறும் கலையை கற்றுக்கொள்ள முடியவில்லை. வண்டியை நிறுத்தி, சீட்டுக்கு மேல் ஏறி, வண்டியைக் கிளப்பவே என்னால் முடி(ந்த)(கிற)து.

2வது அண்ணன் உபயோகித்து முடிந்தவுடன் கடைசியாக என்னிடம் வந்து (கடைசி பையனாக பிறந்தால் உள்ள அசொளகரியங்களில் இதுவும் ஒன்று), சென்னையில் பல இடங்களில் மேய உதவியது. அந்த சைக்கிள் என்ன ஆனது என்று நினைவில் இல்லை. சூரியவம்சம் பட சரத்குமார் போல, டி.வி.எஸ் 50, பஜாஜ் சி.டி.100 என்று படிப்படியாக முன்னேறி இன்று மாருதி 800 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

15 பின்னூட்டங்கள்:

அமுதா said...

/*குரங்குக்கும் சைக்கிளிக்கும் என்ன சம்பந்தம் ?) */
அதானே!!! குரங்குக்கும் சைக்கிள் ஓட்டுபவருக்கும் தானே சம்பந்தம் இருக்க முடியும் :-)

எல்லாருடைய இனிய சைக்கிள் நினைவுகளையும் தூண்டி விட்டிருப்பீங்க. அடியே படாமல் சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டேன். அதனால் தான் இப்பவும் என்னால் எந்த வாகனத்தையும் பயமில்லாமல் ஓட்ட முடியறது இல்ல (சைக்கிள் உட்பட)

பின்னோக்கி said...

ஹீ..ஹீ..இத எதிர்பார்க்கல அமுதா :) இந்த கேள்வியக் கேட்டு, எனக்கே ஆப்பு வெச்சுக்கிட்டேன் :)

Jackiesekar said...

அற்புதமா எழுதி இருக்கிங்க .. பின்னோக்கி உங்க கூட டிராவல் பண்ணாப்பல இருக்கு... நான் இன்னும் சிடி100லதான் இருக்கேன்..

என் நடை பாதையில்(ராம்) said...

ஐந்தாவது படிக்கையில் நானும் என் தோழியும் ஒரே நேரத்தில் சைக்கிள் ஓட்டி பழகினோம். இப்போது அவள் உயிருடன் இல்லை. நீங்கள் அந்த நாட்களை ஞாபகப் படுத்திவிட்டீர்கள்.

உங்கள் தோழி கிருத்திகா said...

ஆகா...அது ஒரு அழகிய நிலாக்காலம்...:)

Mohan said...

அருமையான எழுத்து நடை பின்னோக்கி. காலச் சக்கரத்தில்,சைக்கிள் சக்கரம் உருண்ட நினைவுகளை அசை போட்டது அருமையாக இருந்தது.

Chitra said...

//பரம்பரை சொத்து, வழி வழியாக வருவது போல, 2வது அண்ணனிடமிருந்து, 3 வது அண்ணனுக்கு சைக்கிள் வந்தது.//ச
//ூரியவம்சம் பட சரத்குமார் போல, டி.வி.எஸ் 50, பஜாஜ் சி.டி.100 என்று படிப்படியாக முன்னேறி இன்று மாருதி 800 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.//
.........சில சமயங்களில் மற்ற சொத்துக்களை விட அந்த பழைய சைக்கிள் மாதிரி உள்ள சொத்துக்கள்தான் பொக்கிஷம்போல உள்ள நினைவுகளை தருகின்றன. மாருதி 800 - நிச்சயமாக பொக்கிஷம் ஆகாது.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உங்கள் பின்னோக்கிய பார்வை நன்றாக, சுவாரசியமாக இருக்கிறது. பெயர் ஏன் இப்படி வைத்தீர்கள் என்று இப்போ புரிகிறது.

Romeoboy said...

ஓரம் போ ஓரம் போ பின்னோக்கி வண்டி வருது ..

அருமையான சைக்கிள் பயணம் தல ..

Vidhya Chandrasekaran said...

பழைய நினைவுகளை அசை போட வைத்த பதிவு.

Unknown said...

பல நினைவுகளைத் தட்டி எழுப்பிட்டிங்க..

Prathap Kumar S. said...

ஹஹஹ அப்படியே ஒரு 18 வரும் பின்னாடி போகவச்சுட்டீங்க..

//2வது அண்ணன் உபயோகித்து முடிந்தவுடன் கடைசியாக என்னிடம் வந்து (கடைசி பையனாக பிறந்தால் உள்ள அசொளகரியங்களில் இதுவும் ஒன்று)//


ஹஹஹ சத்தியமாக உண்மை... எனக்கும் நிறைய இந்த மாதிரி. இரண்டு அண்ணன்களுக்கு கடைசி தம்பி நான். எல்லாத்தையும் அவர்கள் டெஸ்ட் பார்த்த அப்புறம் தான் நம்மகிட்ட வரும். சூப்பர் பதிவு பின்னோக்கி...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பதிவு. ஞாபகம் வருதேன்னு பழசையெல்லாம் நினைக்க வைச்சுட்டீங்க..

ஸ்ரீராம். said...

அருமையாக அசை போட்டிருக்கிறீர்கள். இன்னொரு முதல் சாகசமும் அதில்...இரண்டு மூன்று பேராக பேசிக் கொண்டே நடக்கையில் சைக்கிளை ஒருகையால் ஹேண்டில் பார் பிடித்து பேலன்ஸ் செய்து கொண்டே நடக்கும் ஸ்டைல்...

பா.ராஜாராம் said...

எவ்வளவு ஆத்மார்த்தமான பதிவு!