15 August 2012

October Sky (அக்டோபர் ஸ்கை)

ஒரு சினிமாவைப் பார்த்தவுடன் பிடித்துப் போக அந்த சினிமாவில் எதோ நாம் முன்பு பார்த்த அல்லது பார்க்காத, ஆனால் பிடித்த விஷயம் இருக்கவேண்டும். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், சிலருக்கு தன்னம்பிக்கையும் கொடுத்தால் அந்த சினிமாக்கள் காலத்தை வென்றவையாக க்ளாசிக் வரிசையில் இடம் பிடிக்கிறது. அந்த வரிசையில், நான் பார்த்து ரசித்த படம் இது.

October Sky - 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம். மிகவும் எளிமையான கதை. 1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன், ஸ்புட்னிக் என்ற செயற்கைகோள் விண்ணில் செலுத்தியது. அந்த செய்தி கேட்ட பிறகு, பலருக்கு (சிறுவர்களுக்கு) வானவியலில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது. அமெரிக்காவில்   உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் இந்தப் படத்தின் கதாநாயகனுக்கு சிறிய ராக்கெட் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்ற பெரிய ஆர்வம். அவனது அப்பா, அந்த கிராமத்திலிருக்கும் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களில் ஒருவர். வழக்கம் போல தன் மகனின் இந்த ஆசையை பெரிதாக விரும்பாதவர்.

ராக்கெட் மேல் அவன் கொண்ட ஆர்வத்தை பலர் கேலி செய்ய, சில நண்பர்களுடன் சேர்ந்து அவன் எப்படி ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கிறான் என்பதே கதை.

இந்தப் படத்தில் என்னைக் கவர்ந்த விஷயங்கள்:

1957 ஆம் வருடம் நடக்கும் கதை. ஒரு நிலக்கரி சுரங்கள்; அதனையொட்டி இருக்கும் சிறு குடியிருப்பு என நம்மை 1957ஆம் வருடத்திற்கே அழைத்துச் செல்கிறார்கள்.

ஒரு சின்ன அறிவியல் விஷயத்தை நிஜமாக்க அவன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்.

சிறிது சிறிதாக அவர்கள் செய்யும் ஆராய்ச்சிகள்; அவர்கள் தயாரிக்கும் முதல் ராக்கெட்டுக்கும், படத்தின் இறுதியில் வரும் ராக்கெட்டுக்கும் இடையில் இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி.

அவர்கள் அதைச் செய்ய தரும் விலை; யாரெல்லாம் அவனுக்கு உதவுகிறார்கள்; நேரிடும் தடங்கல்கள் என்ன ?;

விளையாட்டாய் அவர்கள் விண்ணில் செலுத்தும் ராக்கெட்டால் ஏற்படும் விளைவுகள்;  சோகங்கள், சிரிப்புகள், சந்தோஷ தருணங்கள் ; தன்னம்பிக்கைகள்  என இந்தப் படம் கற்றுத்தரும் பாடம் நிறைய.

சிறியவர்களும், பெரியவர்களும், அறிவியலில் ஆர்வம் கொண்டவர்களும், தன்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல சோர்வில்லாமல் தன் கனவுகளைத் தேடிச் சொல்லும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் இது.

1 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

Welcome back pinnoki...keep writing...:)