அவரு தொடர்ந்தாரு “ஏன்டா ! 8 அடி தோசைன்னா இவ்வளவு பெரிசு இருக்குமா ?”
ன்னு தரையில போட்டிருந்த டைல்ஸ் அளவ வெச்சு கேட்டார். அதுக்கு நான், ஒரு 20 நார்மல் சைஸ் தோசை அளவுக்கு இருக்கும்னேன். அவ்வளவு தானா ? நான் நிறைய தடவை 25 தோசை சாப்பிட்டிருக்கேன். இது பெரிய மேட்டர் இல்லைன்னாரு. என்ன 2 வாளி சாம்பார் குடுத்து அது முழுசா குடிக்கனும்னு தோசை சாப்பிடும் போது சொல்ல மாட்டாங்கள்ள ? ன்னு கேட்டு பீதிய கிளப்புனாரு.
அப்புறம் அவர் தன்னோட சாப்பாட்டு பராக்கிரமங்களை சொல்ல ஆரம்பிச்சாரு. நீங்களே படிச்சு பாருங்க.
- நான் காலேஜ்ல படிக்கும் போது, கொஞ்சம் லேட்டா மெஸ்க்கு போனேன். அப்ப இருந்த பிரியாணி எல்லாத்தயும், என் தட்டுல போட்டுட்டு சாப்பிட ரெடியா இருந்தேன். அங்க வந்த பிரண்டு என் தட்ட பார்த்துட்டு அதுல தான் பிரியாணி வைச்சுருக்காங்க, எடுத்துப் போட்டு சாப்பிடனும்னு நினைச்சு “மச்சி, அந்த பிரியாணி தட்ட என்கிட்ட தள்ளு..நான் கொஞ்சம் போட்டுக்குறேன்னான்”. அதுக்கு நான், “டேய்..இது என் தட்டுடா..நான் சாப்டுறதுக்கு வெச்சுருக்கேன்னு” சொன்னேன். அப்ப அவன் முகத்த பார்க்கனுமே..என்ன ஒரு அதிர்ச்சி ? !!
- கொஞ்சம் வருசம் முன்னே சென்னையில, பாட்டம் லெஸ் கோக்ன்னு ஒரு கான்செப்ட் பீட்ஸா கார்னர்ல இருந்துச்சு. 25ரூபாய் கொடுத்து வாங்கிட்டா, டம்ளர் காலியாக ஆக, கோக் ஊத்திகிட்டே இருப்பாங்க. நார்மலா நான் ஒரு 12 டம்ளர் குடிப்பேன். அடிக்கடி அந்த கடைக்கு போறதால, என்னைப் பத்தி அங்க இருக்குறவங்களுக்கு தெரியும். ஒரு தடவை போய் கேட்கும் போது, “சார் ! கோக் விலையேத்திட்டோம். இப்ப 40 ரூபாய்”.அதுக்கு நான் “ஒரு டீல் போட்டுக்குவோம். எனக்கு பழைய விலையான 25 ரூபாய்க்கு குடு, நான் ஒரு 4 டம்ளரோட நிறுத்திக்கிறேன்”. “இல்ல சார், கம்பெனி ரூல் அதுக்கு ஒத்துக்காது. 40 ரூபாய்க்கே வாங்குங்க”. நான் சரின்னு சொல்லிட்டு ஆர்டர் பண்ணி ஒரு 18 கிளாஸ் குடிச்சேன். எனக்கு சர்வ் பண்றவன். “சார்..இந்த மாதிரி எல்லாம் இருந்தா எங்களுக்கு கட்டுபிடியாகாது”. அதுக்கு நான் “ஆரம்பத்துலயே உங்ககிட்ட சொன்னேன்..நீங்க கேட்கலை. நான் என்ன பண்றது ?” கொஞ்சம் நாள் கழிச்சு அந்த பாட்டம்லஸ் கோக் நிறுத்திட்டானுங்க.
- சங்கீதா ரெஸ்டாரண்ட் பக்கத்துல இருந்த தோசா கார்னர்ல அன்லிமிடெட் தோசை 125 ரூபாய்ன்னாங்க. வழக்கம் போல போய் ஒரு 18 தோசை தின்னேன். மேனேஜர், எனக்கு சர்வ் பண்றவங்களை கூப்பிட்டு “அவரு..தோசைய சாப்பிடுறாரா ? இல்ல வேஸ்ட் பண்றாரான்னு பாருங்கன்னாரு”. அதுக்கு சர்வர் “சார் !இவரு வேஸ்ட் எல்லாம் பண்றது இல்லை. முழுசா சாப்பிடுறார்ரு”ன்னு நொந்துபோய் சொன்னான.
- இதே மாதிரி சென்னையில ரொம்ப நாள் முன்னாடி அன்லிமிடட் பீஸான்னு சொல்லியிருந்தானுங்க. நானும் என் பிரண்ட்ஸ்சும் போனோம்.ஆரம்பிக்கறத்துக்கு முன்னாடி, சர்வர் கோக் வெச்சுட்டு “சார் ! முதல்லயே கோக் குடிச்சுடாதிங்க, வயிறு நிரம்பிடும், பீட்ஸா சாப்பிட முடியாது”. “நாங்க அத பாத்துக்குறோம், நீ பீட்ஸா கொண்டுவாங்க”. சொன்னா நம்ப மாட்ட, 12.30 க்கு ஆரம்பிச்சோம், 2.45 சுமாருக்கு வந்து “சார் ! கிச்சன் மூட போறோம். நீங்க கடைசியா எதாவது ஆர்டர் பண்ணனும்னா பண்ணுங்க” “3 லார்ஜ் பீஸா”ன்னு சொன்னதும், அவன் தலையில அடிச்சுக்கிட்டு போய் கொண்டுவந்தான்.