(வரலாற்று பிழை இருக்கலாம். மன்னியுங்கள்)
கி.பி 626 வருடத்தில் ஒரு நாள்.
வணிகர்கள் நடமாடும் அந்த சிறிய புகழ் வாய்ந்த துறைமுக நகரான மகாபலிபுரத்தில், வழக்கத்திற்கு மாறாக, பல்லவ அரசின் சின்னத்தை ஏந்திய காவல் வீரர்கள் குதிரையில் வந்தார்கள்.
அதோ வருவது மகேந்திரவர்ம பல்லவன். கடற்கரை எழிலை ரசித்துக் கொண்டிருக்கும் போது, அடிவானத்தை தொடும் அவசரத்துடன் ஓடிய மேகத்தை பார்த்தவனுக்கு ஒரே ஆச்சர்யம்.
“அமைச்சரே ! அங்கே பாருங்கள், அந்த மேகக்கூட்டம் ஒரு சிங்கத்தை ஒத்திருக்கிறது”
“ஆம் அரசே ! இது சிறு பிள்ளைகள் விளையாட்டாயிற்றே. அவர்கள் மேகக் கூட்டத்தினை பல்வேறு விதமான உருவங்களாக நினைத்து பார்த்து ரசிப்பார்கள்”
“இல்லை அமைச்சரே ! எனக்கு இங்கு இருக்கும் பாறையில், இந்த மிருகங்களை மற்றும் கோவில்களை வடித்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகிறது. நாம் ஏற்கனவே திருமயம் மற்றும் நாமக்கல்லில் கட்டிய கோவில்களை போன்றே, மரம், உலோகம், சுண்ணாம்பு இல்லாமல், வெறும் பாறைகளை வெட்டி இக்கோவில்களும் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம்”
”ஆகட்டும் அரசே ! தங்களின் விருப்பப்படியே நடக்கட்டும்”
அங்கிருந்த பல பாறைகள், அழகிய கோவில்கள் மற்றும் சிற்பங்களாக உருமாறிக்கொண்டிருந்தது.
கி.பி 640 வருடத்தில் ஒரு நாள்.
மகாபலிபுரத்தில் நரசிம்மவர்ம பல்லவன், தன் தந்தை ஆர்வம் கொண்டு உருவாக்கிய சிற்பங்களை பார்த்த படி நடந்து வந்தான். அவனது கனவு, அர்ஜீனன் தவம், பஞ்ச பாண்டவர் ரதங்கள், குடவறை கோவில்கள் கட்ட வேண்டும்.
சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை, வந்த செய்தி ஆத்திரமூட்டியது. இரண்டாம் புலிகேசி, தன் தந்தையை வீழ்த்தியவன், மறுபடியும் எல்லையில் தொல்லை தர ஆரம்பித்துவிட்டான்.
கி.பி 642 வருடத்தில் ஒரு நாள்.
”மன்னா ! நீங்கள் போரிலே பல வருடங்களை கழித்துவிட்டீர்கள். நீங்கள் வாதாபியை தீக்கிரையாக்கி, புலிகேசியை வென்றதை கொண்டாடும் விதமாக, 2 வருடங்களுக்கு முன்பு நீங்கள் விருப்ப பட்டபடி, கடற்கரை சிற்பங்களை செதுக்க சொல்லட்டுமா ?”
”வேண்டாம் அமைச்சரே ! அந்த ஆசை போய்விட்டது. என் தந்தை கட்டிய அந்த கோவில்களே போதும்”
கி.பி 1300 வருடத்தில் ஒரு நாள்.
மகாபலிபுரத்தில், அமைதியாக இருக்கும் கடல் அன்று சற்று உள்வாங்கியது. சிறு மணித்துளிகளில், ஆழிப்பேரலை வந்து, மகேந்திரவர்மன் கடலையொட்டி கட்டிய கோவில்களை கடலுக்குள் கொண்டு சென்றது. எஞ்சியது ஒரு கோவில் தான்.
கி.பி 2004, டிசம்பர் 30.
சுனாமியால் மகாபலிபுரத்தில், கடல் உள் வாங்கியது. அப்போது பல சிற்பங்கள் கண்ணில் பட்டதாக பார்த்தவர்கள் கூறினார்கள். இப்பொழுது அந்த சிற்பங்கள் மறுபடியும் கடல் நீருக்கு அடியில் சென்று விட்டது. இதனை ஆராய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அச்சிற்பங்கள் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தை சேர்ந்தது எனவும், கி.பி 620ஆம் ஆண்டுகளில், கடல் இப்பொழுது இருந்ததை விட தொலைவில் இருந்ததாகவும், அதனால், அப்பொழுது கடற்கரைக்கு அருகில் கட்டப்பட்ட கோவில்கள், கால மாற்றத்தினால், கடலுக்குள் சென்றிருக்கலாம் எனவும் கூறினார்கள்.
கி.பி 2009. ஒரு ஞாயிற்றுக்கிழமை.
”மகாபலிபுரம் போய்ட்டு அப்படியே பாண்டிச்சேரி போகலாம் வர்றியா ?”
”மகாபலிபுரத்துல பார்க்குறத்துக்கு ஒரு கோவில தவிர வேற என்னடா இருக்கு? அது தான் அங்கு இருந்த சிற்பங்கள் எல்லாம் கடலுக்குள்ள போய்டுச்சாமில்ல. நேரா பாண்டிச்சேரி போய்ட்டு வந்திடலாம்”
9 பின்னூட்டங்கள்:
கல்கியின் சிவகாமியின் சபதத்தில் படித்த வரிகள்..... அக்கதையவே ஒரு நிமிடம் நினைவு படுத்தியது.
பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தில் மட்டும் இல்லை. தமிழ் நாட்டில் பல ஊர்களிலும் அவர்களின் சிற்பக் கலை செதுக்கி உள்ளனர்.
திருச்சி மலைக்கோட்டையில் கூட பல்லவர்கள் காலத்தில் கட்டப் பட்ட இரண்டு குகைகளை நாம் பார்க்கலாம்.
நம் கண்களுக்கு பாறையாக தெரிந்தவை அவர்கள் கண்களுக்கு இறைவனாகவும், விலங்காகவும், நல்ல ஓவியமாகவும், ராஜா தந்திரத்திற்காக பயன் படும் இடமாகவும் தெரிந்துள்ளது. நல்ல பதிவு.
நல்ல பதிவு... 2009 ல் ஒரு நாளள்- கலக்கல்.
இடுகைகளுள் நல்லதொரு முயற்சி...
அழகாக கதை சொல்லும் பாணியில் ஒரு சரித்திர நிகழ்வையும் காலத்தால் அந்த நிகழ்வு எப்படி? மருவியது என்பதையும் சொன்னீர்கள்.
உள்ளே எவ்வளவு தகவல்களை போகிற போக்கில் சொல்லீருக்கிறீர்கள்.அருமை,ஓட்டுக்கள் போட்டாச்சு
அருமைங்க.
பழமையான கோவிகளில் நிற்கும் போது (முக்கியமாக கல்கியின் கதைகளில் வருபவர்கள் கட்டியவை), இதே இடத்தில் தானே அந்த அரசர்கள், மக்கள் நின்று இருப்பார்கள் என்று நினைக்கும் போது உற்ச்சாகமாகத்தான் இருக்கும். Nice Post
நல்ல பதிவு , சிவகாமியின் சபதம்..அப்படியே நினைவுக்கு வருகிறது. நன்றிகள்.
தொடரட்டும் உங்கள் பயனுள்ள பணி.
good one
நல்ல பதிவு, நல்ல தகவல்
Post a Comment