04 October 2009

பச்சை நிற விஷம் - துப்பறியலாம் வாங்க


ஜூன் 1986 ஆம் வருடம், வீட்டில் உட்கார்ந்திருந்த புரூஸ், மயங்கி கீழே விழுந்தார். மனைவி ஸ்டெல்லா, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தும் பயனில்லாமல் இறந்துபோனார்.

போலீசிடம்,  புரூஸ் இறப்பதற்கு முன் எக்ஸ்டிரின் எனப்படும் வலி முறிவு மருந்து எடுத்துக் கொண்டதாக, ஸ்டெல்லா கூறினார். போஸ்ட்மார்டத்தின் முடிவில், நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சினையினால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என முடிவானது.

இது நடந்து 6 நாட்கள் கழித்து, ஸ்னோ என்ற 40 வயது பெண்மணி, தன் குளியலறையில் மயங்கி விழுந்து இறந்தார்.போஸ்ட்மார்டத்தில் சயனைட் என்ற விஷம் தான் இறப்புக்கு காரணமென கண்டுபிடித்தனர். ஆனால், அவர் எப்படி உட்கொண்டார் ?. விசாரணையில் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாம் !! ஸ்னோ, இறப்பதற்கு முன் எக்ஸ்டிரின் மாத்திரை எடுத்துக் கொண்டார் எனத் தெரிந்தது. அந்த மருந்தை சோதித்துப் பார்த்த போது, அதில், சயனைட் சேர்க்கப்பட்டிருந்தது தெரிந்தது.

எப்படி இது சாத்தியம் ?. எக்ஸ்டிரின் மாத்திரை தயாரிப்பிலேயே தவறு இருக்கிறதா ?. அமெரிக்கா முழுவதும் இருந்த லட்சக்கணக்கான மாத்திரைகள் திருப்பி அழைக்கப்பட்டது. அந்த மாத்திரை தயாரித்த நிறுவனம் உடனடியாக தயாரிப்பை நிறுத்தியது. இந்த செய்தியை படித்த ஸ்டெல்லாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை, புரூஸ் இறந்ததும் சயனைடால் தானா ?.

உடனடியாக, தன் வீட்டில் இருந்த 2 பாட்டில்களை எடுத்துக் கொண்டு, போலீசிடம் போனார். பரிசோதனையில், ஸ்டெல்லாவின் சந்தேகம் உறுதியானது. ஆமாம் !! அந்த 2 பாட்டிலிலும் சயனைட் இருந்தது.

எக்ஸ்டிரின் என்ற மருந்து குரோசின் போல, மருத்துவர் அனுமதியில்லாமல், எளிதாக, கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணி. உடனடியாக, சுமார் 15,000 பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் மொத்தம் 5 பாட்டில்களில் சயனைட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2 பாட்டில் ஸ்டெல்லாவிடம், 1 பாட்டில் இறந்து போன ஸ்னோவிடம், 1 பாட்டில் இன்னொரு கடையில் இருந்தது.

மக்களிடையே பெரிய பயத்தை ஏற்படுத்திய இந்த வழக்கு F.B.I  யிடம் ஒப்படைக்கப்பட்டது. மருந்து தயாரிப்பில் இந்த சயனைட் சேர்க்கப்படவில்லை. இறந்த புரூஸ்க்கும் ஸ்னோக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது கூட கிடையாது.பொது எதிரி யாரும் இல்லை.

ஸ்டெல்லாவிடம் விசாரித்ததில் அந்த 2 பாட்டில்களையும் வெவ்வேறு கடைகளில், வெவ்வேறு காலங்களில் வாங்கியதாக கூறினார்.

முதல் சந்தேகம், ஸ்னோவின் கணவர் மேல் திரும்பியது. அவர் விசாரணை செய்யப்பட்டார். உண்மையறியும் சோதனை (lie detector) யின் முடிவில் அவர் குற்றமற்றவர் என முடிவானது.


வேறு யாரை சந்தேகப்படுவது ?. ஸ்டெல்லா ?. புரூஸ் பெயரில் 1 லட்சம் டாலருக்கு இன்ஸீரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இப்பொழுது அந்த பணம் ஸ்டெல்லாவுக்கு கிடைக்கும். புரூஸ் இன்ஸீரன்ஸை சோதித்ததில், இறப்பு ஒரு விபத்து எனில் இன்னும் ஒரு லட்சம் டாலர் கூடுதலாக கிடைக்கும் என்பது போன்ற ஷரத்துகள் காணப்பட்டது. ஸ்டெல்லாவின் வீடு சோதனை செய்யப்பட்டது. ஸ்டெல்லா, மீன் வளர்ப்பு தொழில் செய்துவந்தார். அவருக்கு 20 வயது மகள். விசாரணையில் வேறென்றும் தெரியவில்லை/கிடைக்கவில்லை.

மருந்து கம்பெனிகள் சங்கம், இந்த வழக்கில் துப்புக் கொடுப்பவர்களுக்கு 3 லட்சம் டாலர்களை பரிசுத்தொகையாக அறிவித்தது. (பின்னே என்ன ! இந்த பிரச்சினையினால் மக்கள் மாத்திரைகளை சாப்பிடுவதற்கே பயப்படும் நிலை ஏற்பட்டது. அவர்கள் வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. உங்களுக்கு தெரியும், உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிக அளவு மருந்துகள் விற்பனையாகிறது. பல பில்லியன் டாலர் மதிப்புள்ளது அங்குள்ள மருந்து கம்பெனிகள்)

இதற்கிடையில், மாத்திரைகளை பரிசோதனை செய்த ஆய்வுக்கூடம் ஒன்றை கண்டுபிடித்தது. அது ! மாத்திரைகளில் தடவப்பட்டிருந்த சயனைடில், பச்சை நிற சிறு சிறு துகள்கள் இருந்தன. சயனைட் பச்சை நிறத்திலிருக்காது. அப்படியென்றால் என்ன அது ? பரிசோதனையில், அது, பாசிகளை நீக்கும் ஒரு பொருள் என்றார்கள்.

இத்தகவலைக் கேள்விப்பட்ட F.B.I , நேராக ஸ்டெல்லா வீட்டுக்குச் சென்றார்கள். முன்பு விசாரணையின் போது, அந்த பச்சை நிற, பாசி நீக்கும் ஒரு பொருளை, ஸ்டெல்லா, மீன் தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்காக வைத்திருந்ததை பார்த்திருந்தார்கள்.

வீட்டில், அந்த பொருள் மற்றும், அதை அரைக்க வைத்திருந்த சின்ன கிண்ணம் போன்ற பொருளையும் கைப்பற்றினார்கள். ஸ்டெல்லாவை, உண்மையறியும் பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். முடிவு ? ஆமாம் !! ஸ்டெல்லா அந்த சோதனையில் தோல்வியடைந்தார். இத்தகவலைக் கேள்விப்பட்ட ஸ்டெல்லாவின் மகள், தன் அம்மாவைப் பற்றி போலீசிடம் சொன்னது.
என் அம்மா, பல வருடங்களாக கொலை செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காக, விஷங்கள் பற்றி நிறைய புத்தகம் படித்தார்”. இந்த வாக்குமூலம், ஸ்டெல்லாவைக் கைது செய்ய உதவியாக இருந்தது.

கோர்ட்டில், ஸ்டெல்லாவின் வழக்கு இவ்வாறாக விவரிக்கப்பட்டது.
ஸ்டெல்லா, தன் கணவரைக் கொல்ல சயனைட் என்ற விஷத்தை உபயோகித்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது, கணவர் இறந்தபின் அதன் மூலம் கிடைக்கும் 2 லட்சம் டாலர் கொண்டு தன் தொழிலை விரிவுபடுத்தலாம் என்பதாகும். ஆனால், அவர் நினைத்ததற்கு மாறாக, புரூஸ் இறந்தது இயற்கை காரணங்களால் என முடிவானதால், 2 லட்சத்திற்கு பதிலாக, 1 லட்சம் டாலர் தான் கிடைத்தது. அதனால் ஏமாற்றமடைந்த ஸ்டெல்லா, புரூஸ் இறந்தது விபத்து தான் என நிரூபிக்கும் பொருட்டு சயனைட் கலந்த மாத்திரைகளை கடைகளில் வைத்துவிட்டார். அவர் எதிர்பார்த்த மாதிரி ஸ்னோ இறந்த பிறகு, போலீசை அணுகி, தன் கணவரும் இந்த மாதிரி விஷத்தினால் இறந்ததாக மாற்ற நினைத்தார். அதன் மூலம் மேலும் 1 லட்சம் டாலர் கிடைக்கும் என நம்பினார். அவர் செய்த தவறு, பாசி நீக்கும் பொருளை அரைத்த அதே கிண்ணத்தில், சயனைடையும் அரைத்தது தான்”.

ஆதாரங்கள்:
1. முன்பே சொன்ன மாதிரி பச்சை நிற சிறு சிறு துகள்கள். (இதை ஸ்டெல்லா கடையில் வாங்கியதை, கடைக்காரர் உறுதிசெய்தார்).

2. ஸ்டெல்லா, நூலகத்தில் விஷங்கள் பற்றி படித்தது. அந்த புத்தகங்களில் இருந்த ஸ்டெல்லாவின் கைரேகை.(”புரூஸ் விஷத்தால் இறந்ததால், விஷத்தைப் பற்றிய புத்தகங்களைப் படித்தேன்” - ஸ்டெல்லா)

3. 15000 பாட்டில்களை சோதித்ததில் 5 பாட்டிலில் விஷம் இருந்தது. அதில் 2 பாட்டில்கள், ஸ்டெல்லாவிடம் இருந்தது நம்பும்படி இல்லை. மேலும் அவர் அந்த மருந்துகளை 2 வார இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வாங்கியிருக்கிறார். இந்த அளவுக்கு தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை.

4. உண்மையறியும் பரிசோதனையில் ஸ்டெல்லாவின் தோல்வி.

5.மகளின் வாக்குமூலம். (”அவள் மருந்து கம்பெனிகள் அறிவித்திருந்த பரிசுப் பணத்திற்காக பொய் சொல்கிறாள்” - ஸ்டெல்லா)

6. இன்ஸீரன்ஸ் பாலிசியில் புரூஸின் கையெழுத்துக்கும் அவரின் மற்ற கையெழுத்துக்கும் இருந்த வித்தியாசம்.

கோர்ட்டில் ஸ்டெல்லா குற்றத்தை ஒப்புக்கொள்ளவேயில்லை.
90 வருடம் ஜெயில் தண்டனை. 2017 ஆம் வருடம், ஸ்டெல்லா பரோல் என்ற முறைப்படி சிறையிலிருந்து வெளியே வரலாம். ஸ்டெல்லாவின் பேராசை பெரும் நஷ்டமானது.

இந்த வழக்குக்குப் பிறகு, மருந்து பாட்டில்கள் பேக் பண்ணப்படும் விதங்களை கம்பெனிகள் மாற்றியது.

ஒரு விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டேன். இவ்வளவு ஆதாரங்கள் கோர்ட்டில் தரப்பட்டும், ஸ்டெல்லா, இப்பொழுது ஜெயிலில் இருப்பது, கொலைக் குற்றத்திற்காக இல்லை. பிறகு என்ன குற்றத்திற்காக ???
1983 ஆம் வருடம் FDA நிறைவேற்றிய “Anti-Tampering Law" வின் படி, ஸ்டெல்லா, மருந்து பொருட்களில் மாற்றங்கள் (சயனைட் கலந்தது) செய்த குற்றத்திற்காக 90 வருட தண்டனை. 2017 ஆம் வருடம் ஸ்டெல்லா பரோலில் வந்தால், அவர் மேல் கொலை வழக்கு தொடரப்படலாம்.

------இது வரை, Medical Detectives -ல் ஒளிபரப்பானது-----
 
இந்த பதிவை எழுதும் முன்பு, இணைய தளங்களில் தகவல் தேடிய போது சில வித்தியாசமான விஷயங்கள் கிடைத்தது.

2001 ஆம் வருடம், இரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், இந்த வழக்கில் சில தவறுகள் இருக்கிறது எனக் கண்டுபிடித்தனர்.

1. ஸ்டெல்லா விஷம் வைத்திருந்தால், எதற்காக, 2 பாட்டிலை வீட்டில் வைத்திருக்க வேண்டும் ? எதற்காக 2 பாட்டிலையும் போலீசாரிடம் தரவேண்டும் ?

2. F.B.I யின் 1000 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கைப் பற்றிய ஆவணங்களில், ஸ்னோ வாங்கிய பாட்டிலில் இருந்த சில சந்தேகப்படக் கூடிய கைரேகைகள் இருந்ததை கண்டுகொள்ளவில்லை. அந்த கைரேகைகள் யாருடையது என்று போலீசாரால் கண்டுபிடிக்கவில்லை.

3.ஸ்டெல்லாவின் நண்பர் ரைடர் என்பவள், ஸ்டெல்லா இந்த மருந்துகளை கடையில் வாங்கும் போது கூடவே இருந்திருக்கிறார். ஆனால், அவரது வாக்குமூலத்தை, இந்த வழக்கில் சேர்க்கவில்லை.

4. ஸ்டெல்லா, அந்த 2 பாட்டில்களை எப்பொழுது வாங்கியது என்று நியாபகம் இல்லை எனக் கூறியிருக்கிறார். ஆனால், போலீசார், அதை சில கால இடைவெளிகளில், வெவ்வேறு கடைகளில் வாங்கியதாக பதிவு செய்திருக்கிறார்கள். இது தவறு.ரைடர் வாக்குமூலம், அந்த 2 பாட்டில்களையும், ஒரே கடையிலிருந்து ஒரே நேரத்தில் வாங்கியதை நிரூபித்திருக்கும். இது நடந்திருந்தால், 15000 பாட்டில்களில், எப்படி 2 பாட்டில், வெவ்வேறு காலங்களில் வாங்கியதில் விஷமிருந்திருக்கிறது என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைத்திருக்கும்.

5. ஸ்டெல்லா, பாசி நீக்கும் பொருளை வாங்கியதாக சொன்ன கடைக்காரர், இந்த வழக்கின் மூலம், 15000 டாலர் பரிசு பணம் பெற்றிருக்கிறார்.இதனால், அவர் பொய் சொல்ல வாய்ப்பிருந்திருக்கிறது. மேலும், ஸ்டெல்லா, அந்த பொருள்களை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் போலீசிடம் இல்லை.

6. இந்த வழக்கு விரைவில் முடிய வேண்டுமென மிகப் பெரிய மருந்து கம்பெனிகள் முயன்றிருக்கின்றன. அதிக அளவு பணம் இந்த வழக்கில் நடமாடியிருக்கிறது.

7. ஸ்டெல்லா விஷச்செடிகளைப் பற்றி நூலகத்தில் படித்திருக்கிறார். தன் பிள்ளைகளுக்கும், வளர்ப்பு பிராணிகளுக்கும், தன் வீட்டு தோட்டத்திலிருக்கும் செடிகளினால் எதாவது பாதிப்பு ஏற்படுமா, எனத் தெரிந்து கொள்ளவே அந்த புத்தகங்களைப் படித்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார்.

சட்டத்தில் உண்மையறியும், தப்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றும் அமைப்பு, இந்த வழக்கை மறுபடியும் விசாரணை செய்ய வேண்டுமெனெ நடவடிக்கை எடுத்துவருகிறது.

உண்மை
ஸ்டெல்லாவும் கடவுளும் மட்டுமே அறிந்தது.

17 பின்னூட்டங்கள்:

யாத்ரீகன் said...

Medical Detectives.. செம சுவாரசியமான நிகழ்ச்சி.. நீங்க சொன்ன மாதிரி நிறைய கொலைகளில்.. உண்மையாவே கொலை செய்தவருக்கு மட்டும்தான் உண்மை தெரியும் போலருக்கு

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க. நீங்க எழுதின விதத்தையும், அதைப் பற்றி மேலதிக விபரம் தேடிக் கொடுத்ததையும் பாராட்டவே இந்த பின்னூட்டம். வாழ்த்துகள்.

geethappriyan said...

ரொம்ப நல்லா எழுதியிருகீங்க,செம ஸ்டைலான் விவரிப்பு.
கண்டிப்பா புக்கா வெளியிடுங்க.
இப்போவே காபிரைட் அறிவிப்பை போட்டுடுங்க பாஸ்
ஓட்டு போட்டாச்சு

Anonymous said...

யப்பா, சூப்பரா விவரிச்சிருக்கீங்க. அவங்கவங்க மனசாட்சி தான் குற்றங்களுக்கு தண்டனை தரணும்.

யாசவி said...

nice and interesting

ஈரோடு கதிர் said...

பின்னோக்கி..

சூப்பரா எழுதியிருக்கீங்க

கலக்கல்

சென்ஷி said...

அசத்தல்!

பின்னோக்கி said...

நன்றி யாத்ரீகன்,கெக்கே பிக்குணி:), கார்த்திக், சின்ன அம்மிணி, யாசவி.
கார்த்திக் - புக்கா ? அவ்வளவு தான் டிஸ்கவரி சேனல் என் மேல கேஸ் போட்டுவாங்க. எல்லாம் இணையதளங்களில் இருக்கும் விஷயங்கள், தொகுத்து தந்திருக்கிறேன். அவ்வளவே.

பின்னோக்கி said...

சென்ஷி படித்ததற்கு நன்றி.

geethappriyan said...

என்னங்க இப்படி சொல்லிட்டிங்க?
நீங்க புக்கா போடாட்டியும் யாராவது பதிவை
திருடி வேறு தளத்தில் போட்டு விடுவர்.
கேட்டால் ஈமெயிலில் வந்தது என்பார்.
உதாரணம்:‍
என் பதிவின் சுட்டி
http://geethappriyan.blogspot.com/2009/08/blog-post_3247.html
காபி செய்யப்பட்ட பதிவின் சுட்டி:
http://seidhigal.wordpress.com/2009/08/14/driving-licence/

Eswari said...

நா சொல்ல நினைச்சதை
யாத்ரீகன்,கெக்கே பிக்குணி, கார்த்திக், சின்ன அம்மிணி, யாசவி, சென்ஷி இவங்க எல்லாம் சொல்லிட்டாங்க.

பின்னோக்கி said...

கார்த்திக் - அடப்பாவமே.அப்படியே உங்கள் பதிவைக் காப்பி அடித்திருக்கிறார்கள். நான் விக்கி காப்பி அடிப்பதோடு சரி :).
நன்றி ஈஸ்வரி

Rekha raghavan said...

துப்பறிதல் என்றாலே விறுவிறுப்புதான். அது உங்கள் பதிவில் நன்றாகவே வந்துள்ளது. அருமையான பதிவு.

ரேகா ராகவன்.

கனவுகளின் காதலன் said...

நல்ல தேடலுடனும், அழகான நடையுடனும் சிறப்பாக இருக்கிற்து பதிவு நண்பரே.

Prathap Kumar S. said...

so cute... very very interesting...

sangeetha said...

Its very interesting to read ur crime stories!!!

Karthik Somalinga said...

உங்களுடைய சில துப்பறியும் பதிவுகள் இன்று பதித்தேன்! மிகவும் வித்தியாசமான பதிவுகள்! மீண்டும் தொடருங்கள்!