12 October 2009

தீப்பிழம்பு - துப்பறியலாம் வாங்க

உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் குற்றங்களை போலீசார் கண்டுபிடிப்பது சுலபம். ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், குற்றவாளி, போலீசாருக்கு மறைமுகமாக விடுக்கும் சவால். எவ்வளவு நுணுக்கமாக திட்டமிட்டாலும், சிறிய தவறுகள் இருக்கும். அதனை கண்டுபிடிக்க பல துறையை சேர்ந்த வல்லுனர்களின் உதவி தேவைப்படும். அப்படிப்பட்ட ஒரு வழக்குதான் இது.

*****

1996 வருடம், அமெரிக்காவிலுள்ள போர்ட்லேண்ட். இது ஒரு மரங்களடர்ந்த அமைதியான பிரதேசம்.

ஒரு நாள் மதியம் 2 மணியளவில், வீடு ஒன்று பற்றி எரிவதைப் பார்த்த மக்கள், திகைத்து போனார்கள். தீயணைப்புப் படையினர் வந்து சேரும் போது, தீ வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது. தீயை அணைக்க முயற்சி செய்தபோது, ஜான் அலறி அடித்துக் கொண்டு அங்கு வந்தார். அப்பொழுதுதான் அந்த வீட்டினுள் யாரோ மாட்டிக் கொண்டுள்ளார்கள் எனப் புரிந்தது. ஆனால் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீயை அணைக்க முடிந்தது.

ஜான் பயந்தபடியே, வீட்டினுள், கருகிய நிலையில், மேரி பிணமாக இருந்தார். உடல் முற்றிலுமாக கருகியதால் அது, மேரிதான் என உறுதி செய்ய முடியவில்லை. உடலுக்கு அருகில் அவரது கைத்துப்பாக்கி இருந்தது.

ஜான், மேரி இருவரும் கம்பியூட்டர் வல்லுனர்கள். வேலை பளு காரணமாக, அவர்கள் வாழ அமைதியான இடம் தேவைப்பட்டது. அதனால் போர்ட்லாண்டிற்கு இடம் பெயர்ந்தனர். மேரி, பொழுதுபோக்குக்காக குதிரை வளர்த்தார். அவர்கள் அங்கு ஒரு இடம் வாங்கி வீடு கட்டத் தொடங்கினர். 90 சதவிகித வீடு கட்டிமுடியும் தருவாயில் இந்த கோர தீ விபத்து.

ஜானிடம் போலீஸ் விசாரணை செய்தபோது  
”நான் வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக 2 மணி நேரத்திற்கு முன் கடைக்கு போயிருந்தேன். கிளம்பும் முன், துணிகளை காயவைக்க பயன்படும் டிரையர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த டிரையர், ப்ரோபனால் (Propanol) எனப்படும் இரசாயனப் பொருளால் இயங்கும். ஒரு வேளை தீ அதன் மூலம் ஏற்பட்டிருக்கலாம்”.

“உங்கள் முகத்தில் என்ன காயம் ?”

“இன்று காலை, வீட்டிற்கு அருகில் இருந்த முட்புதர்களை அகற்றும் போது இந்த காயம் ஏற்பட்டது”

“நீங்கள் அணிந்திருக்கும் டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் விசாரணைக்கு தேவைப்படுகிறது”. (இப்படி வாங்குவது  விசாரணையின் வழக்கமான ஒரு அம்சம்)

போலீசார், ஜான் வாங்கிய பொருட்களின் பில்களை பார்த்து, தீ விபத்து நடந்த நேரம், அவர், கடையினில் இருந்ததை உறுதி செய்தனர்.

மேரியின் எலும்பை உபயோகித்து டி.என்.ஏ பரிசோதனை செய்ததில், இறந்தது மேரி தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவர் எப்படி இறந்தார் ? தீ விபத்தினாலா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? எப்படி கண்டுபிடிப்பது ?.

போஸ்ட்மார்டம் அறிக்கையில் இருந்த விபரங்கள் இவை
  • மேரியின் ரத்தத்தில் கார்பன் மோனாக்ஸைடு காணப்படவில்லை (அவர் மூச்சுவிடுவதை நிறுத்திய பிறகு அதாவது  இறந்தபிறகு தான் வீடு தீப்பிடித்திருக்கிறது).
  • மேரியின் உடல் முற்றிலும் எரிந்து போனதால் உடலில் துப்பாக்கிச்சூடு காயங்கள் இருந்ததா என கண்டுபிடிக்கமுடியவில்லை.
  • மேரியின் மூச்சு குழாயில் ரத்தம் இருந்தது. (மேரி கடைசி முறையாக மூச்சை உள்ளிழுக்கும் போது காற்றோடு ரத்தமும் இருந்திருக்கிறது. அதற்கு ஒரே வாய்ப்பு, பலமாக தாக்கப்பட்டதால், உடலின் உள் உறுப்புகளிலிருந்து வந்த ரத்தம்)
இந்த காரணங்களை வைத்து மேரி இறந்தது தற்கொலையில்லை, கொலை என ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டது.

தீ விபத்துக்களில் முக்கியமாக தெரியவேண்டியது, எந்த இடத்திலிருந்து தீ உருவானது ? தீ ஆரம்பிக்க உதவிய பொருள் எது ? விபத்தா அல்லது மனிதனால் எழுப்பப்பட்ட தீயா ?. போலீசார் இதைக் கண்டுபிடிக்க முயன்றார்கள்.

ஜான் சொன்னபடி, ப்ரோபனால் வாயுவால் இயங்கும் துணி டிரையர் அல்லது மேரியின் காரில் இருந்த பேட்டரி இதில் ஏதோ ஒன்று தான் தீக்கு காரணம். ஆனால், பேட்டரியின் வயர்கள் இணைக்கப்படவில்லை. அதனால் தீ அங்கிருந்து உருவாகியிருக்க வாய்ப்பில்லை. அடுத்து டிரையர். அதை ஆராய்ந்த போது ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

ஆமாம் ! ஜான் சொன்னது போல டிரையர் ஓடிக்கொண்டிருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ப்ரோபனால் வாயுக்குழாய், டிரையருடன் இணைந்திருக்கவில்லை.  

ஜான் சொன்னது பொய் ???. ம்ம்.ம்ம்..அப்படியும் சொல்ல முடியாது. தீயணைப்பு படையினர் ஒருவேளை குழாயை எடுத்துவிட்டிருக்கலாமில்லையா ? இருக்கலாம் ! ஏனென்றால், அவர்களது ஒரே நோக்கம், தீயை அணைப்பது மற்றும் யாராவது சிக்கியிருந்தால் அவர்களை மீட்பது. அவர்கள், சம்பவம் நடந்த இடத்தில் எதையும் மாற்ற/தொடக்கூடாது என்றெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்.

ஜான் சொன்னது நிஜமா ? அல்லது தீயணைப்பு படையினர் அதை கழட்டிவிட்டார்களா ?. அந்த குழாய் தடயவியல் நிபுணரிடம் அளிக்கப்பட்டது. ஆராய்ந்த போது 2 விஷயங்களை கண்டுபிடித்தார்

1. குழாய், டிரையரோடு இணையும் இடத்தில் ஆக்ஸிடேஷன் எனப்படுகிற ரசாயன மாற்றம் நிகழ்ந்திருந்தது. அதாவது, தீ எரியும் போது, குழாய் டிரையரோடு இணைந்திருக்கவில்லை.(மேலே உள்ள படத்தில் கருப்பாக இருக்கும் குழாய் ஆக்ஸிடேஷன் ஆனது. அருகிலிருக்கும் மற்றொன்று, தீ ஏற்படும்போது குழாய் இணைக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி, தீயால் பாதிக்கப்படாமல் வெள்ளையாக இருந்திருக்கும்)



2. குழாய் இணையும் இடத்தில்  ஒரு துளி உலோகம் ஒட்டியிருந்தது. அந்த உலோகம், குழாயோடதில்லை. அது குழாய்க்கு மேலே இருந்த ப்ரோப்பனாலின் அளவை ஒழுங்குபடுத்தும் குமிழின் ஒரு பகுதி. இதன் மூலம் தீ அந்த இடத்தில் ஆரம்பித்திருக்கிறது. அப்போது ஏற்பட்ட அதிக வெப்பத்தால், அந்த குமிழ் உருகி, கீழேயிருந்த குழாயின் மேலே விழுந்திருக்கிறது (படத்தில் வட்டமிடப்பட்ட இடத்திலுள்ள மஞ்சள் நிற சிறு துளியை பாருங்கள்).

இந்த 2 ஆதாரங்களை வைத்து ஜான் சொன்னது பொய் என்பதை நிரூபித்தார்கள். மேலும், ஜானின் ஜீன்ஸில் இருந்த சின்ன கறை, ரத்தக் கறை, அதுவும் மேரியின் ரத்தமென்பதை டி.என்.ஏ சோதனை உறுதி செய்தது.

என்ன நடந்தது ?
ஜான், இன்டெல் நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவனது வேலை, போர்ட்லேண்டிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்திற்கு மாற்றப்பட்டது. மேரியும் தன்னுடன் வரவேண்டுமென நினைத்தான். ஆனால் மேரிக்கு போர்ட்லேண்டை விட்டு வர மனமில்லை. மேலும், மேரி, குதிரை வளர்ப்புக்காக அதிக செலவு செய்திருக்கிறார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை நடந்திருக்கிறது. அந்த சம்பவம் நடந்த நாளில், வாக்கு வாதம் முற்றி, மேரியை ஜான் தாக்க, அப்பொழுது ஏற்பட்ட சண்டையில் ஜானின் முகத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது, அந்த சண்டையின் முடிவில் மேரி இறந்துபோயிருக்கிறார். இதனை விபத்தாக மாற்ற முடிவு செய்த ஜான், வீட்டிற்கு வெளியே இருந்த ப்ரோபனால் சிலிண்டரை மூடிவிட்டு, வீட்டுக்குள் வந்து வாயுக்குழாய் இணைப்பை துண்டித்துவிட்டு, தீயை மூட்டிவிட்டு, பிறகு வீட்டுக்கு வெளியே வந்து ப்ரோபனால் சிலிண்டரை திறந்து விட்டிருக்கிறான். அப்பொழுது ஏற்பட்ட அதிக வெப்பத்தால் உலோகம் உருகி, குழாயின் மேல் பட்டிருக்கிறது.

ஜூரிகள், ஜான் குற்றவாளி என முடிவு செய்தனர். மனைவியைத் தாக்கியது (கொலை செய்தான் என ஜூரிகள் நம்ப மறுத்துவிட்டனர்) மற்றும் தீ மூட்டியது, இந்த 2 குற்றங்களுக்காக தண்டனை பெற்றான்.

ஜான் எவ்வளவோ திட்டமிட்டு, செய்த குற்றத்தை மறைக்க நினைத்தாலும், அறிவியல் வளர்ச்சியின் உதவியால், அவன் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

15 பின்னூட்டங்கள்:

கலையரசன் said...

மம்ம்ம்ம்?

சென்ஷி said...

மற்றுமொரு விறுவிறு இடுகை!

Prapa said...

எனக்கு ரொம்ப பிடிச்ச விடயம்....
தொடர்ந்து இது போல நிறைய வரட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

ஈரோடு கதிர் said...

அடேங்கப்பா....
என்னமா யோசிக்கிறாய்ங்க

ஆ.ஞானசேகரன் said...

நண்பா... அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள்

பின்னோக்கி said...

நன்றி சென்ஷி (தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்), பிரபா, கதிர், ஆ.ஞானசெகரன்.

Eswari said...

//கதிர் - ஈரோடு said...
அடேங்கப்பா....
என்னமா யோசிக்கிறாய்ங்க//

repeatu..

பின்னோக்கி said...

கதிர், ஈஸ்வரி - ரொம்ப பயங்கரமான மாஸ்டர் பிளான் போட்டெல்லாம் கொலை செஞ்சுருக்காங்க. ஆனா போலீஸ் கண்டுபிடிச்சுட்டாங்க. நீங்க Medical Detectives முழுவதும் பார்த்தீங்கன்னா இன்னமும் நிறைய கேஸ் பத்தி சொல்லிருக்காங்க.

ரவி said...

சூப்பரா இருந்தது...!!!

அற்புதமான நடை...

ஓட்டு போட்டுட்டேன்..!!!

rajan said...

கருத்துரைகளை மொத்தமாக குத்தகை எடுத்துக் கொண்ட பின்னோக்கி அவர்களே மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள்!

நானும் blog ஆரம்பிச்ச நாளிலிருந்து தேடுகிறேன் follwers gadget மட்டும் இணைக்க முடியவில்லை. இது ஒரு சோதனை முயற்சி என்ற தகவல் மட்டுமே உள்ளது. என்ன செய்யலாம்?

RAGUNATHAN said...

டிடக்டிவ் பின்னோக்கி....எப்பூ...டி :)

ஓட்டும் போட்டாச்சு....

Saamuraai said...

இப்படி ஒவொரு நாளும் எழுதினால் நல்ல இருக்கும்!!
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!!

யாசவி said...

interesting :)

geethappriyan said...

மற்றுமொரு விறுவிறு இடுகை!
you are really rocking!

cheena (சீனா) said...

அன்பின் பின்னோக்கி

நல்ல கதை - விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. நல்வாழ்த்துகள்

ஆமாம் - பல இடுகைகளில் நான் இட்ட மறுமொழிகள் கன்ணில் பட்ட மாதிரியே தெரியவில்லையே - காரணம் அறியலாமா