******
ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு அழகான இடம். அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் முதுமைக் காலத்தை அமைதியாக கழிப்பவர்கள். டாஸ்மேனியாவிலுள்ள ஒரு சிறு நகரத்தில் சுமார் 40 முதல் 50 பேர் இருந்தார்கள்.
ஒரு நாள் காலை சுமார் 7 மணியளவில், ஜான், பீட்டரின் வீட்டிற்கு வந்து, தன் பெற்றோரை பார்பதற்காக, பீட்டர் தன்னை பக்கத்து ஊருக்கு அவன் காரில் அழைத்து செல்ல முடியுமா ? எனக் கேட்டான். பீட்டர் அதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் போது, ஜான், பீட்டரின் நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
சிறிது தூரம் சென்ற பிறகு அவன் கண்ட காட்சி நெஞ்சை உறைய வைத்தது. வயதான ஒருவர், தன் வீட்டு தோட்டத்தில் விழுந்து கிடந்தார். போலீசார் வந்து சேர்ந்த போது, 72 வயதான, தனியாக வசித்துக் கொண்டிருந்த கிறிஸ், இறந்து போனது முடிவானது.
போஸ்ட்மார்டத்தில், கிறிஸ் ஒரு பெரிய ஆயுதத்தால் கழுத்தில் தாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அதிக ரத்த இழப்பு காரணமாக அவர் இறந்திருக்கிறார். இறந்தது சுமார் விடியற்காலை 3 மணியிலிருந்து 7.30 மணிக்குள் என முடிவானது. எப்படி டாக்டர்கள் ஒருவர் இறந்த நேரத்தை கண்டுபிடிப்பார்கள் ?
ஒருவர் இறந்த உடன் ரத்தம் ஓட்டம் நிற்பதால், உடலின் வெப்பம் குறைய ஆரம்பிக்கும். அப்படி குறையக்கூடிய வேகம் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒரு கட்டத்தில், உடலின் வெப்பம், வெளிப்புற வெப்பத்திற்கு சமமாக மாறும். இப்படி வெப்பம் குறையக்கூடிய வேகத்தை வைத்து, இறந்து எவ்வளவு நேரம் ஆனது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த முறை அவ்வளவு துல்லியமானது கிடையாது.
.
வீட்டு தோட்டத்தை ஆராய்ந்த போது, ரத்தக் கறை ஒரு இடத்தில் இருந்தது. அந்த இடத்தில் லூமினால் (luminol) திரவம் தெளிக்கப்பட்டது. (இந்த லூமினால் என்ற ரசாயன பொருள், மனித ரத்ததுடன் கலக்கும் போது ஒளிரும் தன்மை கொண்டது. ரத்தத்தை நன்றாக துடைத்திருந்தாலும் அல்லது பல நாட்களாகியிருந்தாலும் கூட, மிகச்சிறிய அளவில் ரத்தம் இருந்தால் கூட கண்டுபிடிக்கக்கூடியது லூமினால். அருகிலுள்ள படத்தில், சாதாரணமாக தோற்றமளிக்க கூடிய ஒரு இடம் லூமினால் தெளிக்கப்பட்டவுடன் அங்குள்ள ரத்தத்தை எப்படி எடுத்து காட்டுகிறது பாருங்கள்). இரவில் வெளிச்சமில்லாத நேரத்தில் ஆராய்ந்த போது, அந்த ரத்தக் கறை ஒரு சிறிய கோடாலி வடிவிலிருந்தது. போலீசார், கிறிஸ தாக்கப்பட்டது கோடாலியால் என உறுதி செய்தனர்.
யார் கொன்றது ? ஏன் கொன்றார்கள் ?.
அந்த பகுதியில் வாழ்ந்த வயதானவர்கள், நிறைய பணத்தை வீட்டில் வைத்திருக்கும் பழக்கமுடையவர்கள். கிறிஸ் வீட்டிலிருந்த பணம் காணாமல் போயிருந்தது. ஆனால் வீட்டினுள் எந்த விதமான சண்டை நடந்த அறிகுறியில்லை. அதனால், கிறிஸ் தாக்கப்பட்டதற்கு பிறகு கொலையாளி பணத்தை திருடியிருக்கலாம்.
இவ்வளவு நடந்த போது அருகிலுள்ள வீட்டிலிருப்பவர்களுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லையா ?. கேட்டிருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சுமார் 4 மணியளவில், நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டதாகவும், ஆனால் அந்த பகுதியில் கங்காருக்கள் நடமாடுவதால், நாய்கள் குரைத்ததை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லையென்றார்கள்.
அடுத்து போஸ்ட்மார்டம் செய்த டாக்டர், கிறிஸ், இதய நோய் உள்ளவர் என்றும், அதற்காக “பேஸ் மேக்கர்” என்ற இதயத்துடிப்பை சீராக்கக் கூடிய கருவி பொருத்தியிருந்தார் எனச் சொன்னார். பேஸ் மேக்கர் என்பது ஒரு 2 இன்ச் அகலமுள்ள மிகச்சிறிய எலக்ட்ரானிக் கருவி. இதை உடலின் உள்ளே, தோள்பட்டைக்கு அருகில் வைத்து தைத்துவிடுவார்கள். இது, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில், சுமார் 2 முதல் 5 வோல்ட் மின்சாரத்தை இதயத்தில் செலுத்தும். இதன் மூலம் இதயம் சீராக துடிப்பதை உறுதி செய்யும். அதே நேரம், அது இதயத்துடிப்பை பற்றிய தகவல்களையும் சேமித்து வைக்கும். இத்தகவல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அழிக்கப்பட்டு மீண்டும் எழுதப்படும். போஸ்ட்மார்டம் செய்யப்பட்டது, கிறிஸ் இறந்து சுமார் 30 மணி நேரம் கழித்து. அதனால் உடனடியாக அக் கருவியில் இருந்த தகவல்களை, கம்பியூட்டர் உதவியுடன் சேகரித்தனர். இன்னும் 2 மணி நேரம் தாமதித்திருந்தால் அனைத்து தகவல்களும் அழிந்து போயிருக்கும்.
பேஸ்மேக்கர் கருவியில் இருந்து கிடைத்த தகவல்
இரவு 10.05
கிறிஸ் தூங்கியிருக்கிறார்
அதிகாலை 4.46
தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறார்
அதிகாலை 4.54
இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 100க்கு மேல் போனது. இது கிறிஸ் எழுந்து வேகமாக நடந்த்திருக்கிறார் என்பதைக்காட்டுகிறது.
அதிகாலை 5.34
இதயத் துடிப்பு நின்றது.
கிறிஸ் இறந்தது அதிகாலை 5.34 நிமிடங்கள்.
போலீசார் காலை மணி 5-6 யார் யார் எங்கிருந்தார்கள் என்பதை கண்டறிய முற்பட்டனர்.
முதலில் பீட்டர் (கிறிஸ் வீட்டுக்கு அருகில் வசித்தவன்)
காலை 5 முதல் 6 மணி வரை எங்கு இருந்தீர்கள் ?
இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை நான் தூங்கிக்கொண்டிருந்தேன்.
அதற்கு ஆதாரம் இருக்கிறதா ?
நான் தனியாக வசிப்பவன் எந்த ஆதாரமும் இல்லை.
உங்களிடம் கோடாலி இருக்கிறதா ?
இருக்கிறது. ஆனால் அதை இரண்டு நாட்களாக காணவில்லை.
வேறு யார் மீதாவது சந்தேகமிருக்கிறதா ?
எனக்கு ஜான் மீது சிறிது சந்தேகமாக இருக்கிறது.
ஏன்?
அன்று காலை சுமார் 7 மணியளவில் என் வீட்டிற்கு வந்து, அவனை காரில், அடுத்த ஊருக்கு கூட்டிபோக முடியுமா எனக் கேட்டான். அது மாதிரி அவன் கேட்டது இல்லை. மேலும், அவ்வளவு காலை என் வீட்டிற்கு இது வரை அவன் வந்தது இல்லை.மேரி (ஜானின் சகோதரி, கிறிஸ் வீட்டிலிருந்து 10 வீடு தள்ளி வசித்தவள்)
காலை 5 முதல் 6 மணி ஜான் எங்கிருந்தான் ?
இரவு 11 மணியிலிருந்து அவன் வீட்டிலிருந்தான். அதிகாலை சுமார் 3 மணியளவில் என்னிடம் சிகரெட் கேட்டான். சுமார் 6 மணியளவில் அவன் குளிக்கும் சத்தம் கேட்டது.ஜானின் வீட்டை ஆராய்ந்தபோது கருப்பு நிற டார்ச் லைட் கிடைத்தது. அது ஜான், மேரி, பீட்டருடையது இல்லை. எந்த வித கைரேகையும் அதிலில்லை. பரிசோதனையில், டார்ச் லைட்டை ஆன்/ஆஃப் ஸ்விட்ச்சில் சில இறந்த தோல் செல்கள் இருப்பதை கண்டுபிடித்தார்கள். டி.என்.ஏ பரிசோதனையில் அது கிறிஸ்சினுடையது எனத் தெரிந்தது. ஜான் கைது செய்யப்பட்டான்.
நடந்தது என்ன ?
கிறிஸ் வீட்டிற்கு எதிரிலிருந்த, நண்பர் வெளியூர் செல்லும் போது வீடடை பார்த்துக் கொள்ளும் படி கிறிஸ்ஸிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த ஜான், கொள்ளையடிக்கும் நோக்கில், பீட்டரின் வீட்டிலிருந்த கோடாலியை எடுத்துக் கொண்டு, வீட்டினுள் செல்ல முயன்றிருக்கிறான். அந்த நேரம் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த கிறிஸ், டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, ஜான், தனது நண்பர் வீட்டினருகில் நின்றிருப்பதை பார்த்து கிறிஸ் சந்தேகம் கொண்டு விசாரிக்க, பயந்து போன ஜான், கிறிஸ்ஸை கோடாலியால் தாக்கியிருக்கிறான். பிறகு, கிறிஸ் வீட்டினுள் புகுந்து அவரது பர்ஸ், டார்ச்லைட் மற்றும் கோடாலியை எடுத்துச் சென்று, பர்ஸ் மற்றும் கோடாலியை யாரும் பார்க்காத இடத்தில் மறைத்திருக்கிறான். ஆனால் என்ன காரணத்தினாலோ டார்ச் லைட்டை வீட்டிற்கு எடுத்துச்சென்றிருக்கிறான். காலை 6 மணியளவில் தான் வீட்டிலிருந்தது போல காண்பிப்பதற்காக, மேரி கேட்குமாறு குளித்திருக்கிறான். பிறகு 7 மணியளவில் பீட்டரின் வீட்டிற்கு வந்து, கிறிஸ் பிணத்தை தான் முதலில் பார்ப்பது போல நடித்திருக்கிறான். இதன் மூலம் போலீசார் தன்னை சந்தேகப்படமாட்டார்கள் என நினைத்திருக்கிறான்.
இந்த கொலை வழக்கில், பேஸ் மேக்கர் உதவிகொண்டு கிறிஸ் இறந்த நேரத்தை துல்லியமாக கண்டுபிடித்ததால், ஜானை குற்றவாளி என போலீசார் கோர்ட்டில் நிரூபிக்க முடிந்தது. இல்லையேல், அதை சாதகமாக பயன்படுத்தி ஜான் தப்பித்திருப்பான்.
மேலும் அவன் செய்த இரண்டு தவறுகள்
1. டார்ச் லைட்டை வீட்டுக்கு எடுத்துச்சென்றது.
2. 7.15 ம்ணியளவில் கிறிஸ் இறந்து கிடந்ததை பார்த்தது போல நடித்தது. இன்னும் 2 மணி நேரம் அவன் தாமதித்திருந்தால், பேஸ்மேக்கர் தகவல்கள் அழிந்து போயிருக்கும்.
வாழும் போது கிறிஸ்சுக்கு உதவிய பேஸ்மேக்கர், இறப்புக்கு காரணமானவனை சட்டத்தின் முன் நிறுத்த உதவியாயிருந்தது.
13 பின்னூட்டங்கள்:
பல புதிய தகவல்கள்!
நன்றி சென்ஷி தொடர் வாசிப்பிற்கு
நண்பா,
எத்தனை தகவல்கள் ஒரு இடுகைக்குள்? அருமை. நிறைய எழுதுங்கள், தெரிந்து கொள்கிறோம்..
பிரபாகர்.
நன்றி பிரபாகர். வாய்ப்பு கிடைத்தால் மெடிக்கல் டிடக்டிவ்ஸ் பாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அருமையான தகவல்கள் நண்பா ! தொடர்ந்து எழுதுங்கள் , வந்து வாசிக்கிறேன் .
நன்றி
ரொம்ப நன்றி தல!
மிக முக்கியமான தகவல்களை அறிந்து கொண்டேன்!
good one. thank you
keep rocking pinnokki
:)
நல்ல தகவல்கள்.நன்றி நண்பா....
பேஸ்மேக்கர் உடம்பின் உள் வைக்கும் கருவியா அல்லது வெளியே வைக்கும் கருவியா?
ஈஸ்வரி இது உடலின் உள்ளே, நெஞ்சுக்கு அருகே, வைத்து தைக்கப்படும் கருவி. நன்றி இதை சுட்டிக்காட்டியதற்கு. மாற்றி விடுகிறேன்.
அருமை நண்பர் பின்னோக்கி,
இந்த தொடரும் மிக விறுவிருப்பு,சுவாரஸ்யமாக இருந்தது, இந்த தொடரின் லேபில்கள் ஒரே பெயரில் வைக்கவும். நாங்கள் லேபிலை க்ளிக்கியவுடன் சரம் போல வரும்.
தளம் வடிவமைப்பும் மிக அழகு,
அடுத்த மாதம் சென்னை வரும்போது சந்திக்க நினைக்கிறேன்.என் இமெயில் ஐடி
karthoo2k@gmail.com
உங்கள் சென்னை எண்ணை அதில் அனுப்பவும்,
Post a Comment