22 October 2009

போய்விடு அம்மா என் நினைவிலிருந்து


 (1949 - 1999)
யாருக்குத்தான் பிடிக்காது ?. உயிருடன் இருக்கையில் பாசத்துடன், இறந்தவுடன் அழுகையுடன் நினைவுகூற அம்மா.

“ஏம்மா !! அவன் வயித்துல இருக்கும் போது குங்குமப்பூ சாப்டியாம். ஏன் நான் வயித்துல இருக்கும் போது சாப்பிடல ? பாரு !! அதனால தான் நான் கருப்பா இருக்கேன்’ எனச் சிணுங்கியபோது, ”அப்பா கலர்டா நீ” என சொல்லி அணைத்துக்கொண்டவள்.

சிறுவயதில், எங்களை கண்டிக்க கைக்கு கிடைத்ததை வைத்து அடிக்க, நாங்கள் அழ, பிற்காலத்தில் நீ அழுது எங்களை கண்டித்தாய்.

நான்கு ஆண் பிள்ளைகளுடன் ஐந்தாவதாய் அப்பாவையும் பார்த்துக் கொண்டவள் நீ.

”சே !! எங்க பார்த்தாலும் ஆண்கள் கூட்டம். உடல் உபாதைகளை சொல்லக்கூட ஒரு பெண் பிள்ளை இல்லை” என அடிக்கடி நீ சலித்துக்கொண்டது, அப்பொழுது சிரிப்பை  வரவழைத்தாலும், மணமாகி மனைவி வந்தவுடன், உன் சலிப்பின் அர்த்தம் புரிகிறது.

உன் வயது அம்மாக்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க, உன் வாழ்க்கை எங்களுக்காக என வாழ்ந்தவள் நீ.

8 வது வரை மட்டுமே படித்த நீ, உலக அறிவை கடைசி வரை கற்றுக் கொண்டவள், கொடுத்தவள்.

எனக்கு முதலில் உயிர் கொடுத்து, பல முறை என் உயிரைக் காப்பாற்றியது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை, 2 நாள் காய்ச்சல் சரியான நிலையில், ஒரு மாலைப் பொழுது சூரியனை நான் பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில், என் கண்களை பார்த்து, மஞ்சளாக இருக்க, அடுத்த 20 நாட்கள் நீ என் உயிரைக் காப்பாற்ற எடுத்த போராட்டத்தை என்னவென்று சொல்வது ?. கணவனை எமனிடமிருந்து காப்பாற்றியவள் சாவித்திரி என்றால், மகனை எமனிடமிருந்து காப்பாற்றியவளுக்கு பெயர் என்ன ? நீ !!.

6 மாதத்திற்கு  ஒரு முறை அலுவலக காரணங்களுக்காக அப்பாவிற்கு பணிமாற்றம் வர, இடமாற்றம் அலுப்பில்லாமல் செய்தவள் நீ. வீடு மாறுவதிலுள்ள கடினம் இப்பொழுது புரிகிறது எனக்கு. மலைப்பு  ! எப்படி நீ அத்தனை மாற்றங்களை எதிர்கொண்டு குடும்பத்தை நடத்தினாய் என்று.

5 வயது குழந்தைகளிடம் உன்னால் அவர்கள் பாஷையில் பேசமுடிந்தது. அடுத்த சில மணிகளில் 18 வயது  இளையவர்களிடம், சற்று நேரம் கழித்து 60 வயதானவர்களிடம். பேச தெரிந்த ஒரு மொழியை பல அலைவரிசைகளில்  உபயோகித்தவள் நீ. இதனால் தான் நீ போன நாளில் “பாட்டி !!!! ஆண்டீ !!! அம்மா !!” என பல கதறல்கள் கேட்டது.

உன் அண்ணனுடனான சண்டையில், நாங்கள் மரியாதை இல்லா சில வார்த்தைகளால் உன் அண்ணனை நாங்கள் குறிப்பிட “என்ன கெட்ட பழக்கம் இது ?. பெரியவங்களுக்குள்ள பிரச்சினையில் நீங்க தலையிடக்கூடாது, மரியாதையில்லாமல் பேசக்கூடாது” என அந்த நேரத்தில் எங்களை கண்டித்தது, எங்களுக்கு இன்றும் உறவுகளை பராமரிப்பதில் உதவியாக இருக்கிறது.


முதல் நாள் போனில் பேசி, மறுநாள் யாருடனும் பேசாமல் உலகை விட்டு அப்பா சென்ற நாளில் நீ  “18 வயசுல அவர் கூட வந்தேன். இன்னைக்கு வரை என் உலகம் அவரு தான், என்ன செய்ய நான் இனி” எனக் கதற நாங்கள் அன்று உனக்காக மட்டுமே அழுதது அதிகம்.

அண்ணன்களுக்கு மணமாகி அண்ணிகள் வந்த உடன், உன் மகன்களை, அவர்களின் கணவர்களாக மாற்றி, அவர்களிடம் நீ சேர்ப்பித்த விதத்தில், உன், மற்றவர்களின் மனதை படிக்கும் திறன் தெரிந்தது. மகன்களை விடிவித்து, அண்ணிகளை, மகள்களாக மாற்றியவிதம் உனக்கே உரிய திறமை.

உனக்கு இன்னும் சில மாதங்கள் என மருத்துவர் நாள் குறித்த அறையிலிருந்து வெளிவந்து, “பசிக்குதும்மா ! சாப்பிட எதாவது வெச்சுருக்கியா ?” எனக் கேட்ட நாளில் உன் மன உறுதி.

நோயின் பிடியில் சிக்கி, காலையிலிருந்து 50 தடவை வயிற்றுப் போக்காகி, ”என்னால முடியலப்பா ! ரொம்ப கஷ்டமா இருக்குப்பா” என போனில் நீ கூறிய வார்த்தைக் கேட்டு நான் அழுத அழுகை.

கடைசி தருணங்களில் “ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணிவெச்சுட்டேன். உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போறேன். உடனே யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்கடா..பார்த்துட்டு போய்டுறேன்” என நீ சொன்ன அந்த வார்த்தைகள் தான், பிற்காலத்தில், எங்கள் மண நாளில், மணமகனின் அழுகையை பிறர் ஆச்சரியத்துடன் பார்ப்பதற்கு காரணமானது.

நாளை தான் முடிவு எனத் தெரியாமல் முதல் நாள் உன்னை கட்டியணைத்து கட்டிலிலிருந்து, கைத்தாங்களாக எழுப்பி உட்கார வைத்து “போயிட்டு வர்றேன்மா” எனக் கூறி, மறு நாளே உன்னை பார்க்க ஓடி வந்த போது நீ இல்லை.

பல மாத எங்கள் அழுகை வற்றிப் போக, நீ போன நாளில் எங்களிடம் வெற்று மவுனம் மட்டுமே மிஞ்சியிருந்தது.

சிறுவயதில் நீ இல்லாத தருணங்களில், உன் புடவையின் அரவணைப்பில் தூங்கிய நாட்கள். இப்போது புடவையும் இல்லை, நீயும் !.

உன் மேல் உள்ள எனக்கான ஒரே கோபம், நீ எங்களை இளகிய மனம் படைத்தவர்களாகவே வளர்த்தது. இந்த உலகை எதிர்கொள்ளும் போது பல நேரங்களில் இப்பொழுது எங்களுக்கு கடினமாக இருக்கிறது.

இப்பொழுது, உன் நினைவுகள் வந்தால், புறந்தள்ளி பிற காரியங்களில் ஈடுபடுகிறேன். உன் புகைப்படத்தை பார்க்க தவிர்க்கிறேன்.

நீ இறந்த நாளில் அழாத என் அழுகையின் மிச்சம், இன்னும் என்னுள் உன் நினைவாக இருக்க, அதை வெளியிட்டு உன்னை என்னிலிருந்து வெளியேற்ற விருப்பமில்லை.

அம்மா என்ற நினைவுகள் வரிசைப் படுத்த முடியாதது. அதனால் தானோ, இப்பொழுது இதை கோர்வையாக எனக்கு எழுத வரவில்லை.

40 பின்னூட்டங்கள்:

RAGUNATHAN said...

:( :( :(

சாந்தி நேசக்கரம் said...

அம்மாவின் ஞாபகங்களின் பகிர்வு உங்கள் எழுத்தின் ஊடாக ஆறாத துயராக மிஞ்சுகிறது கண்ணீர்.
சாந்தி

ஈரோடு கதிர் said...

வாசித்தவுடன்
அம்மாவின் அருமையை
இன்னும் அதிகமாய்
உணர்கிறேன்

சூர்யா ௧ண்ணன் said...

உங்கள் துக்கத்தில் நானும் பங்கு கொண்டேன்

க.பாலாசி said...

அம்மா எனும் அன்பிற்கு என்றுமே அழிவில்லை. விட்டகலாத தெய்வமவள்....

உங்களின் தாய்க்கான இடுகை எல்லோரின் உணர்வுகளையும் தூண்டிவிடும்....

பின்னோக்கி said...

நன்றி ரகு,முல்லைமண்,கதிர்,சூர்யா,க.பாலாசி. ஒவ்வொருவருக்கு, அவர்களுடைய அம்மாவின் நினைவு இருக்கும். அவர்கள் இருக்கும் போதே அவர்களை பேணிக்காக்க வேண்டும்.

வரதராஜலு .பூ said...

பதிவை அலுவலகத்தில் படித்ததால் மனதிற்குள்தான் அழமுடிந்தது. எனது தாயின் நினைவுகளை கிளறிவிட்டீர்கள்

வரதராஜலு .பூ said...

//உன் மேல் உள்ள எனக்கான ஒரே கோபம், நீ எங்களை இளகிய மனம் படைத்தவர்களாகவே வளர்த்தது. இந்த உலகை எதிர்கொள்ளும் போது பல நேரங்களில் இப்பொழுது எங்களுக்கு கடினமாக இருக்கிறது.//

என்ன செய்வது? எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

geethappriyan said...

நண்பர் பின்னோக்கி,
உங்கள் அம்மாவை கை எடுத்து கும்பிடுகிறேன்.
மனம் கனத்தது, மிகவும் உருகி எழுதியுள்ளீர்கள்.
அம்மாவின் அருமை இருக்கும் போதே எல்லோரும் உணர வேண்டும்.
அன்னையரைப் போற்றுவோம்.

பின்னோக்கி said...

நன்றி கார்த்தி, வரதராஜலு. ஒவ்வொருவரும் தன் அம்மாவைப்பற்றி எழுதவேண்டும்.

கார்க்கிபவா said...

:((((

கிருபாநந்தினி said...

அம்மா என்பவள் யாவர்க்கும் பொதுவானவள் - கடவுள் போல! நெஞ்சை நெகிழ்த்திக் கண்ணீரை வரவழைத்தது தங்களின் இந்தப் பதிவு!

வெண்ணிற இரவுகள்....! said...

//இப்பொழுது, உன் நினைவுகள் வந்தால், புறந்தள்ளி பிற காரியங்களில் ஈடுபடுகிறேன். உன் புகைப்படத்தை பார்க்க தவிர்க்கிறேன்.

நீ இறந்த நாளில் அழாத என் அழுகையின் மிச்சம், இன்னும் என்னுள் உன் நினைவாக இருக்க, அதை வெளியிட்டு உன்னை என்னிலிருந்து வெளியேற்ற விருப்பமில்லை.

//

vasu balaji said...

இருக்கும் போது அம்மா என்ற வார்த்தையை விட அவள் இறந்த பிறகு நினைவில் வரும் அம்மா என்ற வார்த்தை மனதிலிருந்து வருவதால், சுகமும்,சுமையும் வலியும் அதிகம். அம்மா அம்மாதான்.

PRABHU RAJADURAI said...

ஐந்து வருடங்களுக்கு முன்னர் என் அம்மா மரணத்தின் பொழுது எனக்குள் பொங்கிய உணர்ச்சிகளின் வடிவமாக இந்தப் பதிவினைப் பார்க்கிறேன்...

பின்னோக்கி said...

கிருபாஆனந்தி,வெண்ணிற இரவுகள், வானம்பாடிகள், பிரபு ராஜதுரை நன்றி. அம்மா பற்றி நீங்கள் எழுதிய பின்னூட்டங்கள் நெகிழ்ச்சியூட்டியது.

Jackiesekar said...

நோயின் பிடியில் சிக்கி, காலையிலிருந்து 50 தடவை வயிற்றுப் போக்காகி, ”என்னால முடியலப்பா ! ரொம்ப கஷ்டமா இருக்குப்பா” என போனில் நீ கூறிய வார்த்தைக் கேட்டு நான் அழுத அழுகை.//

கண் கலங்குகின்றது.. பின்னோக்கி.. உன் அம்மாவுக்கு எனது அனுதாபங்கள்..

Jackiesekar said...

கடைசி தருணங்களில் “ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணிவெச்சுட்டேன். உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போறேன். உடனே யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்கடா..பார்த்துட்டு போய்டுறேன்” என நீ சொன்ன அந்த வார்த்தைகள் தான், பிற்காலத்தில், எங்கள் மண நாளில், மணமகனின் அழுகையை பிறர் ஆச்சரியத்துடன் பார்ப்பதற்கு காரணமானது.//

எப்படி கண்களில் கண்ணீர் வராமல் இருக்கும்...

Jackiesekar said...

அண்ணன்களுக்கு மணமாகி அண்ணிகள் வந்த உடன், உன் மகன்களை, அவர்களின் கணவர்களாக மாற்றி, அவர்களிடம் நீ சேர்ப்பித்த விதத்தில், உன், மற்றவர்களின் மனதை படிக்கும் திறன் தெரிந்தது. மகன்களை விடிவித்து, அண்ணிகளை, மகள்களாக மாற்றியவிதம் உனக்கே உரிய திறமை.//
ரொம்ப பெரிய மனசு இருந்தாதான் இப்படி எல்லாம் செய்ய முடியும்.. அதைவிட உலகை புரிந்தவர்களால் இது சாத்தியம்...

Jackiesekar said...

நாளை தான் முடிவு எனத் தெரியாமல் முதல் நாள் உன்னை கட்டியணைத்து கட்டிலிலிருந்து, கைத்தாங்களாக எழுப்பி உட்கார வைத்து “போயிட்டு வர்றேன்மா” எனக் கூறி, மறு நாளே உன்னை பார்க்க ஓடி வந்த போது நீ இல்லை.//
என் அம்மாவும் இப்படித்தான் சட்டென எங்களை விட்டு போனால்...

பெசொவி said...

பெற்ற தாயை இதை விட பெருமை படுத்த முடியாது.

ஒவ்வொரு வரியும் அம்மாவின் பெருமையையும் ஒரு மகனின் நிஜமான உணர்வுகளையும் கூறுகிறது.

hats off!

இப்படிப் பட்ட தாய் இவ்வளவு சீக்கிரம் போய் இருக்க வேண்டாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

சிவாஜி சங்கர் said...

அழ வைச்சுட்டீங்களே..,அண்ணா..

Vidhya Chandrasekaran said...

:(((

சிவாஜி சங்கர் said...

மன்னிக்கவும் பாஸ்., என்னால அழுகைய அடக்க முடியல..,
தலைப்பை பார்த்து பாதிக்கு மேல தொடர முடியல..
நான் ஊனமுற்ற குழந்தையா இருக்கும் போதே எங்க அம்மா ...
என்ன அப்படி பாத்துகிட்டாங்க...அம்மா..
வேணாம் சார்..

Eswari said...

உங்க அம்மா ரொம்ப அழகா இருக்காங்க
போட்டோவில்

அம்மாக்கள் எல்லாரும் ரொம்ப அழகா இருக்காங்க
உங்க எழுத்தில்

ஆ.ஞானசேகரன் said...

//அம்மா என்ற நினைவுகள் வரிசைப் படுத்த முடியாதது. அதனால் தானோ, இப்பொழுது இதை கோர்வையாக எனக்கு எழுத வரவில்லை. //

மிக அழகு

பின்னோக்கி said...

jackiesekar - அம்மாவின் பிரிவு உணரவே சில வருடங்கள் தேவைப்படும். நமக்கு பிள்ளை பிறந்து வளர்க்கும் போது பெற்றோரின் அருமை நமக்கு புரியும். உங்கள் அம்மாவும் சட்டனெ இறந்ததாக கூறியிருக்கிறீர்கள். வருத்தமாக இருக்கிறது.

நன்றி - வித்யா
பெயர்சொல்லவிருப்பமில்லை
ஆ.ஞானசேகரன்
உங்களின் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு

சிவாஜி சங்கர் - வருந்துகிறேன். அம்மாக்கள் பிள்ளைகளிடம் பேதம் பார்ப்பதில்லை. உங்களை வளர்க்க கஷ்டப்பட்டது, நீங்கள் அவரை நினைவுகூறுவதிலேயே தெரிகிறது.


ஈஸ்வரி - நீங்கள் சொன்ன மாதிரி அம்மாக்கள் எல்லாரும் அழகுதான்.

Nilofer Anbarasu said...

உணர்வுகள் சற்றும் சிதறாமல் எழுதியுள்ளீர்கள். உங்கள் மனதின் வலியும் ஈரமும் புரிகிறது.

Anonymous said...

வாசித்த பிறகு நீண்ட நேரம் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அழகாய் எழுதியிருக்கிறீர்கள். மனதைத்தொடும் பதிவு.

வல்லிசிம்ஹன் said...

50 வயதுதானா அம்மாவுக்கு.!
அதற்குள் இத்தனை அனுபவைத்து விட்டார்களா.
இதே போல ஒரு வெள்ளிக்கிழமை, துவண்ட வாழைத்தண்டாக இருந்த அம்மாவைப் பார்த்து நான் வெறித்தது,என் இயலாமையை நொந்தது,

எல்லாவற்றையும் எண்ண வைத்துவிட்டீர்கள்.அம்மாவுக்கு விடைகொடுக்கத் தெரியாமல் உடைகிறேன்.

தமிழ் அமுதன் said...

;;((

நர்சிம் said...

வருத்தங்கள்.

Mohan said...

"நல்லாயிருக்கு' என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாக இருப்பதில்லை சில பதிவுகளுக்கு.

விண்மீன் said...

அம்மா இல்லாத ஒரு வாழ்க்கை என்னால கற்பனை செய்துகூட பார்க்கமுடியல.
மனது பாரமா இருக்கு. என்னையும் அறியாமல் கண்ணு கலாங்க்கிடுச்சு.

பின்னோக்கி said...

நன்றி சின்ன அம்மிணி,வல்லிசிம்ஹன்,ஜீவன்,நர்சிம்,மோகன்,ஷமீர்.
நன்றி அனைவரின் வருகைக்கும், மனப்பகிர்தலுக்கும். உயிருடன் இருக்கும் போதே அம்மாவை போற்ற வேண்டும். அதை செய்த திருப்தி எப்பொழுதுமே உண்டு.

மதார் said...

when i reading this tears comes out from my eyes without my control, atleast ur mom studied 8th but my mom uneducated but she only made me and my brother now an Engineers in our village , Nanum en amma selai vasam ariven inrum amma madiyil padukka avlo pidikkum , ipoluthum enakkana nalla thozhi en amma mattume.

Anonymous said...

அம்மா enRa vaarththai oru EvvaLavu punithamaanahtu,ithai uNarvukaLaal thaan veLippadiththamudium.

Prathap Kumar S. said...

உண்மையில் அழுதுவிட்டேன்...

ஜெயசீலன் said...
This comment has been removed by the author.
ஜெயசீலன் said...

அம்மா!!!
ரொம்பவே உணர்ச்சி வசப்படுத்திட்டீங்க!!!
என்னிடம் வார்த்தையில்லை....