27 December 2009

இது எங்க சாமி

சந்தோஷமான அல்லது துக்கமான சில தருணங்களில், அந்த நிகழ்வின் போது நமக்கு “இது மாதிரி நடக்கும்னு எனக்கு தோணுச்சு” என்ற உள் உணர்வு வரும். கால் பிசகி ஒரு வாரத்துக்கு முன் வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி சொன்ன முதல் விஷயம் “இன்னைக்கு காலைல இருந்து எனக்கு மனசே சரியில்லை. நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்துடணும்னே தோணிக்கிட்டு இருந்துச்சு”. இந்த உணர்வுகள் வருவதற்கு காரணம், காக்கும் தேவதைகளாக இருக்கும் நாம் வணங்கும் குல தெய்வங்கள் என்று நம்புகிறேன். நம்மைப் பாதுகாக்கும் முதல் நிலைக் கடவுள்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முன்னோர்களில் சிலரை குல தெய்வங்களாக வணங்கி வருகிறோம்.

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் நுழைவாயிலில் உள்ள வாசகம் “பெருமாளை வழிபடுவதற்கு முன், உங்களின் குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபடுங்கள்




திருச்சியிலிருந்து, 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது துறையூர். துறையூர் பஸ்ஸ்டாண்டிலிருந்து, பெருமாள் மலை அடிவாரம் போகும் வழியில், இடது பக்கம் திரும்பி, 300 மீட்டர் தூரம் போனால், வயல்கள் சூழ்ந்த இயற்கை சூழ்நிலையில் இருக்கிறது எங்கள் குல தெய்வம் கோவில் “பிச்சாயி அம்மன்”.



பெரிய கோபுரங்கள் எதுவும் இல்லை. திறந்த வெளியில் ஒரு அடி உயர இரண்டு சிலைகள். நிழலுக்கு பெரிய அரச மரம். சின்ன காம்பவுண்ட் சுவர். அருகில் விவசாயத்திற்கு உதவும் பம்ப் செட்டுடன் கூடிய மிகப்பெரிய குளம் போல கிணறு. வழிபட வருபவர்கள் தங்களை ஆசுவாச படுத்திக்கொள்ள உதவியாக 4 அறைகள் கூடிய மண்டபம். கோவிலிலிருந்து அருகிலிருக்கும் பெருமாள் மலை உச்சியிலிருக்கும் கோவிலை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒவ்வொரு வருடமும், ஆகஸ்டு-அக்டோபர் மாதங்களில், இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்வது எங்கள் வழக்கம்.வெயில் குறைவான அக்காலங்களில், அமைதியான கிராம சூழ்நிலை மன அமைதியை தரும்.




கையில் குழந்தையுடன் இருக்கும் பிச்சாயி அம்மன் சிலை. அருகில் கணவர் வீரய்யா. இவர்கள் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். வீரய்யா ஒரு நாள் வயலில் வேலை செய்துவிட்டு மதிய உணவுக்காக காத்திருந்தார். நிறைமாத கர்ப்பிணியான பிச்சாயி அம்மன், அன்று மதிய உணவு எடுத்துவருவதற்கு கால தாமதமாகிவிட்டது. பசியினால் மிகுந்த கோபத்துடனிருந்தார் வீரய்யா. உணவு உண்ணும் முன், உடலை சுத்தம் செய்து, நெற்றியில் நாமக்கட்டியால் நாமம் போட்டு, அருகிலிருக்கும் பெருமாள் மலையிலிருக்கும் பெருமாள் கோவிலைப் பார்த்து வணங்குவது அவர் வழக்கம். அன்று பிச்சாயி அம்மன், நாமக்கட்டியை எடுத்து வர மறந்துவிட, கோபத்தின் மிகுதியால், வயலில் கட்டியாக இருக்கும் மண் உருண்டையை எடுத்து, மனைவி நோக்கி வீச, அது பிச்சாயி அம்மன் தலையில் பட்டு அவர் மரணமடைய, அதைக் கண்டு வருந்தி, வீரப்ப சாமியும் அங்கேயே இறந்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே, கையில் குழந்தையுடன் பிச்சாயி அம்மன் காட்சியளிப்பதாக கூறுகிறார்கள். இந்த வரலாறு, கல்வெட்டுகளில் பொறிக்கப்படாமல், செவி வழி கதையாகவே இருக்கிறது.





கடந்த முறை போனபோது, 50 வருடங்கள் கழித்து தற்போது கும்பாபிஷேகம் நடந்ததாக கூறினார்கள். அந்த சின்ன சிலைகளை மூடி (முதல் படம்), அதற்கு மேல அதே போல பெரிய அளவு சிலைகளை (அருகிலிருக்கும் படம்) வைத்து, சிமெண்ட் தளம் போட்டு அந்த இடத்தையே உயர்த்தி, சிறிய நகர கோவில்கள் போல மாற்றியிருந்தார்கள். கோவிலுக்கு முன் இரண்டு பெரிய குதிரை சிலைகள் இருக்கிறது. அந்த மாற்றங்கள் எங்களுக்கு புதிதாக இருந்தது. பழமையான இடங்களை மாற்றுவதில் உடன்பாடு இல்லாததால் இந்த மாற்றங்கள் எனக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது. பழைய சிலைகள் எங்கே என்று திரும்ப திரும்ப பூசாரியிடம் கேட்டுக்கொண்டே இருந்தோம்.


மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. கடந்த 80 வருடங்களில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த கோவில் சந்தித்திருக்கிறது என்ற நிலையில் 1000 வருட பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் எவ்வளவு மாற்றங்களை சந்தித்திருக்கும் என்ற நினைப்பே மலைப்பை தருகிறது.

15 பின்னூட்டங்கள்:

Prathap Kumar S. said...

நல்ல பகிர்வு...

//1000 வருட பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் எவ்வளவு மாற்றங்களை சந்தித்திருக்கும் என்ற நினைப்பே மலைப்பை தருகிறது. //

ஆயிரம் வருடங்களில் ஆயிரம் மாற்றங்கள் அடைந்தாலும் இன்னும் அசையாமல் இருக்கும் கோபுரம் மட்டுமே போதும் ராஜராஜனின் பெருமையைசொல்ல... ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி அவ்ளோ பெரிய கோவிலை எப்படித்தான் கட்டினாய்ங்களோ.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//சந்தோஷமான அல்லது துக்கமான சில தருணங்களில், அந்த நிகழ்வின் போது நமக்கு “இது மாதிரி நடக்கும்னு எனக்கு தோணுச்சு” என்ற உள் உணர்வு வரும்//

என‌க்கும்

ஸ்ரீராம். said...

நான் கூட எங்க ஊருக்குப் போய் ரொம்ப வருஷம் ஆச்சு..

சங்கர் said...

எப்போ ஊருக்கு போனீங்க? நான் கூட போகணும், நாளாச்சி

vasu balaji said...

நல்ல பகிர்வு.

Rettaival's Blog said...

எந்தக் காலத்திலும் வைதீகக் கோயில்கள் பெரிதாக மாற்றம் அடைந்து விடுவதில்லை பின்னோக்கி சார்! நாட்டார் தெய்வங்களே உருமாறி பின்னர் ஆசாரங்களுக்கு உட்படுத்தப் படும். இதன் அரசியல் சாதாரணமானது இல்லை.அடுத்த சில தலைமுறைகளுக்குப் பின் உங்கள் பிச்சாயி அம்மனும் வீரய்யாவும் வாசலில் வைக்கப் பட்டு அங்கே பெருமாளோ சிவனோ கர்ப்பக் கிருகத்தில் இருப்பார்கள். இதை லேசான வலியோடு தான் சொல்கிறேன். கொடுமையைப் பார்த்தீங்களா! தெய்வத்தையெல்லாம் கூடக் காப்பாத்த வேண்டியிருக்கு !

பா.ராஜாராம் said...

ஊர் நினைவு வந்திருச்சு பின்னோக்கி.மண்மணம்!

வினோத் கெளதம் said...

ஆஹா..எங்க குலதெய்வ கோவில் நியாபகம் வந்த்ருச்சு..ஆனா என்ன கோவில் இருப்பது முட்லூர் அருகில் (சிதம்பரம் தாலுக்கா)..
அழகா எழுதி இருக்கீங்க..

geethappriyan said...

எங்க குலதெய்வம் பாலாஜி கிட்டயே நெருங்கமுடியாத படி மாற்றம் கண்டுவிட்டது, மூணு நாளு முன்னயே போய் பதிவு செய்து போட்டொ எடுத்தால் தான் பாக்கவே முடியுது,
--------------
அம்மாவின் குலதெய்வமான கோச்சடை நாக நாதர் கோவிலுக்கு போய்விட்டு வைகையில் குதித்து ஆடிய நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கு.
அருமையான இடுகை

வெளியூர்காரன் said...

என் குலதெய்வம் வேதாரண்யம் பக்கத்துல ஒரு கிராமத்துல இருக்கற அங்காளம்மன்...ரெண்டு தடவ போயிருக்கேன்...அம்மாவோட அம்மாவை பார்க்கற மாதிரி ஒரு பீல் வரும்...அத பக்தின்னு கண்டிப்பா சொல்லமாட்டேன்..ஏன்னா நான் நாத்திகன்...எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்ல...ஆனா என் தாத்தாவும் அவங்க பாட்டியும் இங்க வந்துருக்காங்க,..நான் நிக்கற எடத்ல நின்னுருகாங்கனு நெனைக்கரபோ.....நல்ல அனுபவம் வாத்யாரே அது..எல்லாரும் வாய்ப்பு கெடைக்கறபல்லாம் போங்க...ஏன்னா, நம்ப குலதெய்வத்த நம்பதான் பார்த்துக்கணும்..நீங்க போனீங்கன்னா ரொம்ப சந்தோசப்படும்...அந்த சிலைகள்...நம்ப மாரிமுத்து மவன் என்னமா வளந்து நிக்கறான் பாருன்னு பக்கத்துக்கு சிலைகிட்ட பேசிக்கும்..உங்க கடவுளுக்கு உயிர் இருக்குன்னா என்னோட குலதெய்வ கல்லுக்கும் உயிர் கண்டிப்பா இருக்கு...என்ன சிங்கபூர்லேர்ந்து வேதாரண்யத்துக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துட்டீங்க......நல்ல பதிவு தலைவரே..... :)

பின்னோக்கி said...

எல்லாருடைய குலதெய்வத்தை நியாகப்படுத்த இந்த பதிவு உதவியிருப்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி.

வெளியூர்காரன் - நீங்கள் சொன்னது போல குலதெய்வத்தை கடவுளாக பார்க்காமல், நம் முன்னோர்களில் சிறந்த மனிதர்கள் என்ற அளவில் அவர்களை நாம் நியாபகம் வைத்திருக்க வேண்டும்.

கார்த்தி - உங்களின் குல தெய்வத்தைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி.

ரெட்டைவால்ஸ் - நீங்கள் சொல்வதை கேட்டதும் சற்று பயமாகவே இருக்கிறது. நீங்கள் சொன்னது மாதிரி மாறாமல் இருந்தால் சந்தோஷமே. பார்ப்போம்.

வினோத் கௌதம் - உங்கள் குலதெய்வத்தைப் பற்றி அறிவதில் மகிழ்ச்சி.

நன்றி

பா.ரா
நாஞ்சில்
வானம்பாடிகள் - வலைச்சரத்தில் கலக்குங்கள் சார்.
கரிசல்காரன் - உங்களுக்கும் அந்த உள் உணர்வு கண்டு மகிழ்ச்சி
ஸ்ரீராம்
சங்கர்

கிருபாநந்தினி said...

பக்திப் பரவசத்துல என்னை மூழ்கி முங்க வெச்சுட்டீங்களே பின்னோக்கி!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வணக்கம் நண்பரே!,

குலதெய்வங்களைப் பற்றிய வரலாறுகளை திரட்டிக் கொண்டிருக்கிறேன். அதற்கு உங்களின் இந்தப் பதிவை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கிடைக்குமா!.

பின்னோக்கி said...

ஜெகதீஸ்வரன் - நண்பரே.. நல்ல விஷயம். கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நன்றி

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தேன் நண்பரே!. கோவிலின் அமைப்பு அருமையாக இருந்தது. உங்கலால் எனக்கு ஒரு முன்னோரின் கதை கிடைத்தது நன்றி!.

http://sagotharan.wordpress.com/2010/09/01/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/