*--*---*----*
இது ஒரு தொடரில்லாத தொடர் பதிவு. இதன் மற்ற பாகங்களை இங்கு படிக்கலாம்.
*--*---*----*
கி.பி 1013ஆம் வருடம், ஒரு நாள் நள்ளிரவில், ராஜ ராஜ சோழன் உப்பரிகையிலிருந்து, வானத்தைப் பார்த்தான். நட்சத்திரக் கூட்டங்கள் வித விதமான வடிவங்களில், பளிச்சிட்டுக் கொண்டிருந்தது. அவன் பார்த்த வானம் இதோ !!
ஆச்சரியமான விஷயம், ராஜ ராஜ சோழன் பார்த்த அதே நட்சத்திரக்கூட்டத்தை, நாமும் இன்று இரவு பார்க்கலாம். மனிதன் வாழ்வில் 1000 ஆண்டுகள் என்பது கற்பனை செய்ய முடியாத பெரிய காலம். ஆனால், பிரபஞ்சத்தில், 1000 ஆண்டுகள் என்பது சில விநாடிப் பொழுது போன்றது.
ஜனவரியிலிருந்து ஏப்ரல் மாதம் வரையிருக்கும் குளிர்காலம் முடிந்து, வெயில் ஏற்படுத்தும் கசகசப்பு, புத்தகம் படிக்கும் பழக்கத்தை சற்றே நிறுத்த செய்யும். ஆற்காட்டார் புண்ணியத்தில் மொட்டை மாடி எங்கிருக்கிறது என்று நாம் தேடும் மே முதல் ஜீலை வரையிலான இந்த மூன்று மாதங்கள், வானத்தைப் பார்க்க சரியான காலம். மேகங்கள் அற்ற தெளிவான வானம் மற்றும் கோடைக் காலத்தில் எளிதில் பார்க்கக் கூடிய வியாழன் (Jupiter) மற்றும் அதன் துணைக்கோள்கள், சனி (Saturn), செவ்வாய் (Mars) மற்றும் அந்தி சாயும் வேளை மட்டுமே பார்க்கக்கூடிய வெள்ளி (Venus) போன்ற கிரகங்கள் தெளிவாகத் தெரிவது ஒரு காரணம்.
5 வருடங்களுக்கு முன், வெறும் கண்களால் விண்வெளியில் உலவும், ISS (International Space Station) மற்றும் இரிடியம் செயற்கைக்கோள்களை பார்க்க முடியும் என்று தெரிந்தது.
கண்ணடிக்கும் வானத்து தேவதை என்ற பதிவில் அதைப் பற்றி எழுதியிருக்கிறேன். அன்று தொடங்கி வானவியலில் ஒரு ஈடுபாடு.
வெறும் கண்களை விடுத்து, பைனாகுலர் மூலம் நட்சத்திரக் கூட்டங்களையும், நிலவின் மேற்பரப்பையும் நன்றாக பார்க்கமுடியும் என்பதால் Celestron நிறுவனத்தின் 10x50 பைனாகுலர் வாங்கினேன். சிறிது நாட்கள் உபயோகித்த பிறகு, சுற்றுலா செல்லும் போது தொலைவிலுள்ளவற்றைப் பார்ப்பதற்கு மட்டுமே இந்த பைனாக்குலர் உதவும் என்பதை உணர்ந்தேன்.
கண்ணுக்குத் தெரியும், சூரியக்குடும்பத்திலுள்ள கோள்களைப் பார்க்க, தொலைநோக்கி கண்டிப்பாக வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்கு இணையதளங்கள் பலவற்றைப் படித்து, தொலைநோக்கிகளைப் பற்றி அறிந்து கொண்டேன். வெளிநாடுகளில் கிடைக்கும் Celestron நிறுவனத்தின் தொலைநோக்கிகள் பல அருமையானவை. ஆனால், அங்கிருந்து வாங்கிவரும் வசதியில்லாததால், இந்தியாவில் எங்கே கிடைக்கும் என்று தேடினேன். கடைசியாக, மும்பாயில் ஒரு நிறுவனத்திலிருந்து, இந்தத் தொலைநோக்கியை வாங்கினேன்.
இதைப் பார்த்தவர்கள் நிறைய பேர் சொன்னது
“அடுத்த வீட்டு மொட்டை மாடிய பார்க்குறத்துக்கு எதுக்கு இவ்வளவு பெரிய டெலஸ்கோப் ?”. ”இல்லைங்க, அதுக்கு இல்லைங்க” என்று சொல்லி, சொல்லி சோர்ந்து போனேன்.

வாங்கிக் கொஞ்ச நாளிலேயே, ஒன்று தெரிந்து போனது. வாங்குவது எளிது. அதனை உபயோகிப்பது கடினம் என்று. அப்பொழுது ஆபத்பாந்தவனாய் வந்தவர், பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீராம். எப்படி உபயோகிக்க வேண்டும், எந்த நேரத்தில் எந்த கோள்களைப் பார்க்க வேண்டும், Deep Sky Objects எனப்படும், தொலைதூர கேலக்ஸிகளை எப்படி பார்ப்பது என்று சொல்லிக்குடுத்தார்.முதன் முதலில், பார்ப்பதற்கு எளிதான, சந்திரன். அருகில்..மிக அருகில் அதன் பிரம்மாண்டம் அசர வைத்தது. எல்லாரும் நினைப்பது போல பெளர்ணமி அன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது. அன்று வெளிச்சம் மிக அதிகமாக இருப்பதால், அதன் மேற்பரப்பு சரியாகத்தெரியாது. அமாவாசை முடிந்து அடுத்த 6வது நாளில் இருந்து 12ஆம் நாள் வரை பார்ப்பது எளிது. நான் எடுத்த ஒரு போட்டோ.
சென்னை போன்ற நகரத்தில் உள்ள பிரச்சினை - வெளிச்சம். மொட்டை மாடியில் சென்று பார்த்தால், அடிவானத்திலிருந்து 30 டிகிரி வரை வெளிச்சமே வியாப்பித்திருக்கும். நட்சத்திரங்கள், அந்த வெளிச்சத்துடன் போட்டியிட முடியாமல் மறைந்திருக்கும்.
வெளிநாடுகளில் வானவியலில் ஆர்வமுடையவர்களின் நலன் கருதி, ஒரு குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்படுகிறது (மேலும் விபரங்களுக்கு
http://www.darkskiesawareness.org/ ). மற்ற நாட்களில், அவர்கள், நகரத்திலிருந்து தொலைதூரம் சென்று, வெளிச்சம் சிறிதுமற்ற இடங்களில் இரவு முழுவதும்,
Messier's Deep Sky Objects எனப்படுகிற 110, வெறும் கண்களால் பார்க்க இயலாத கேலக்ஸிகள், நெபுலாக்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கிறார்கள். இதனை ஒரு போட்டியாகவும் நடத்துகிறார்கள். அந்த Messier's Objects ல் சில இதோ
(நன்றி: celestiamotherlode.net).இரவு நேரத்தில், கடற்கரையில் நின்று, வானத்தைப் பார்த்தால், வெளிச்சமற்ற அந்த நேரத்தில், வழக்கமான நாட்களை விட எவ்வளவு நட்சத்திரங்களை நம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று பாருங்கள். நாம் வசிக்கும் பால்வீதி (MilkyWay Galaxy), வெளிச்சமற்ற இரவுகளில் மட்டுமே காண முடியும்.
நான் பார்த்த கோள்கள் மற்றும் கேலக்ஸிகளைப் பற்றி வரும் பதிவுகளில் ...