13 September 2009

“ஹாய்” என்றாள் அவள்.




லால்பாக் எக்ஸ்பிரஸ் தனது அடுத்த பயணத்தை தொடங்க தயாராக இருந்தது. ரயில் நிலையம் ஒரு தனி உலகம். பல தரப்பட்ட மக்கள். ஒரே தூரத்தை, ஒரே நேரத்தில் கடக்க 10 மடங்கு அதிக பணம் குடுக்கும் சிலர். 5 மணி நேரப்பயணத்திற்கு 90 நாட்களுக்கு முன்பதிவு செய்து, 1 மணி நேரத்திற்கு முன் வந்து காத்திருக்கும் சிலர். 5 நிமிடத்திற்கு முன் வந்து 100 பேர் நிற்கும் வரிசையில் நின்று, டிக்கெட் வாங்கி, முன்பதிவு செய்யப்படாத கோச்சில், பேப்பர் விரித்து தரையில் உட்கார்ந்து பயணிக்கும் சிலர். 2 நிமிடத்திற்கு ஒரு முறை டிக்கெட்டை எடுத்து, நாம் உட்கார்ந்திருக்கும் ரயில், கோச் சரியா எனப் பார்க்கும் பலர். டிக்கெட் பரிசோதகர் வந்து கேட்கும் வரை, டிக்கெட் ஒன்றை தேடாத சிலர். நான் ஒரு கலவை இதில். 90 நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்து, 5 நிமிடத்திற்கு முன் ரயில் நிலையம் அடையும், சிலரில் ஒருவன்.

வழக்கம் போல 5 நிமிடத்திற்கு முன் வந்து, அந்த வார குமுதம் மற்றும் ஜூனியர் விகடனை வாங்கிக் கொண்டு, என் s6 கோச் எங்கிருக்கிறது என தேடத் தொடங்கினேன். "கோச் எங்க இருக்குன்னு தேடுங்க ! இதுக்குத்தான் சீக்கிரம் கிளம்பளாம்னு சொன்னேன். அப்படி என்ன தான் இருக்கோ தெரியலை. கிளம்புற நேரம் வரை நியூஸ் பார்த்துகிட்டு, இப்ப அவசர அவசரமா ஓட வேண்டி இருக்கு. கார்த்திக் கையா புடிச்சுக் கூட்டிக்கிட்டு வாங்க.
நீ மேக் அப் பண்ண 1 மணி நேரம் எடுத்துக்கிட்டு, இப்ப என்னய குறை சொல்லு. நான் எத்தனை பேக் எடுத்துக்கிட்டு, அவனையும் என்னால புடிக்க முடியாது, நீ அவன் கைய புடிச்சுக்கோ. கார்த்திக் !! அம்மா கைய புடிச்சுக்க !! டேய் காமிக்ஸ் வண்டியில போய் உட்கார்ந்த பின்னாடி வாங்கி தர்றேன்டா !! " என்ற டி என்னைத்தாண்டி ஒரு குடும்பம் அவசரமாக ஓடிக்கொண்டிருந்தது.

பெரும்பாலும் ரயில் பயணங்கள், பத்திரிக்கை படிப்பதில் போய் விடும். இந்த பிஸ்கட் திருடர்கள் கைவரிசை காட்டத்தொடங்கியதிலிருந்து, சினேகமான புன்னகைகள் குறைந்து போயிருந்தது. இவன், அவர்களில் ஒருவனோ? என்ற பார்வைகளை, குமுதத்தில் தலை நுழைத்து தவிர்த்து வந்தேன்.

ஹும்..இந்த தடவையும் ஜன்னலோர சீட் கிடைக்கவில்லை. ஓர சீட்டில் உள்ள பிரச்சினை, அடிக்கடி எழுந்து மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும். சிலர் நம் கால்மேல் நடப்பார்கள்.

ஏம்பா, கொஞ்சம் காலை எடுத்துக்கிட்டா, அந்த பக்கம் போக வசதியா இருக்கும் என்ற கோரிக்கைகள், சற்று கண்ணயரும் போது வந்து, தூக்கத்தைக் கெடுக்கும்.

சார், பிளீஸ், இந்த டீய அவங்ககிட்ட கொடுங்க என்ற குரலுக்கு செவி சாய்த்து, சூடான டீயை, சின்ன கப்பில், நடுங்கும் கைகளால், அதனிடத்தில் சேர்க்க வேண்டும்.

இந்த பிரச்சினைகளினால் பெரும்பாலும், பயணத்தில் பாதி கதவோரம் நின்று கொண்டே கழியும். வேற வழியில்லை, இன்றைக்கும், கதவோரம் போய் நிற் வேண்டியதுதான்.

ரயில் வேகமெடுக்கத் தொடங்கியிருந்தது. காற்று முழுவேகத்தில் முகத்தில் அறைந்தது. நாளை, சனிக்கிழமையாதலால், எல்லா சீட்டும் நிறைந்திருந்தது. சூடான பஜ்ஜி விற்க தொடங்கியிருந்தார்கள். கேண்டீன் போய் 2 பஜ்ஜியை உள்ளே தள்ளிவிட்டு (சாதரண நாட்களை விட பயணம் செய்யும் போது பசி அதிகரிப்பது ஏன் எனத்தெரியவில்லை), கதவோரம் வந்து நின்றேன். எல்லா சீட்டுகளில் உள்ளவர்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த 4 வது வரிசையில், என்னைப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த பெண்ணின் மேல் பார்வை நின்றது. 20 வயது இருக்கும்.
 
காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்த முடிகளை விலக்கும் போது, அவள் போட்டிருந்த வட்டமான காதணி நன்கு தெரிந்தது. அது என்னவோ தெரியவில்லை, அந்த வட்ட வடிவமான, பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளான, காதணி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த நீளமான முகத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தது. தோள் வரை நீண்டிருந்த, பின்னலிடாத முடி, அவளை மேலும் அழகாக்கியது. ரோஸ் கலர் சுடிதார் அவள் கலருடன் போட்டி போட்டது.

மெலிதான மையிட்ட அலைபாயும் கண்கள், தனக்கு முன் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் அடிக்கடிப் பேசி சிரிக்கும் போது, அந்த பல் வரிசை, அந்த கன்னத்தில் விழும் சிறு குழி, அந்த சிரிப்பை அழகாக்கியது. அவளையே வெறித்தபடி பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அது நன்றாகவும் இருக்காது. சிறு இடைவெளி விட்டு விட்டு, எல்லோரையும் பொதுவாக பார்ப்பது போல பார்க்க வேண்டியிருந்தது. இரண்டொரு முறை, அவளும் என்னைப் பார்த்தாள். அது பொதுவான பார்வை மாதிரிதான் இருந்தது.

ரயில் அரக்கோணம் சந்திப்பில் நின்றது. கதவருகில் நின்றதால், இறங்கினேன். அவளும் இறங்குவாளா ?. ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அந்த பக்கமாக போவதைப் போல போய் அவளை அருகில் பார்த்திருக்கலாம். இந்த யுக்தி தோன்றாமல் போய்விட்டது. பரவாயில்லை, இன்னமும் 3 மணி நேர பயணம் மீதி இருக்கிறது. ஒரு வேளை, அவள் பாதியில் இறங்கிவிட்டால் ?.


அவள் இறங்குமிடம், பயணிகளின் பட்டியல் பார்த்தால் தெரிந்துவிடும். சீக்கிரம் பார்க்க வேண்டும் இல்லையென்றால் மற்றவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள். அவசர அவசரமாக பட்டியலில் வயதுகளை பார்த்தவாறே தேடத்தொடங்கினேன். இதோ இருக்கிறது, s6 - 56, வயது நான் நினைத்ததை விட 1 அதிகம், 21. பேர் ஆர்த்தி. ஆர்த்தி அழகான பெயர். ரயில் மறுபடியும் புறப்பட, ஏறிக்கொண்டேன்.

அவள் இப்போது எதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள். சே ! அந்த பக்கம் போகலாம் எனப்பார்த்தால், அரக்கோணத்தில் ஏறியவர்கள், பலர் வழியில் நின்று கொண்டிருந்தார்கள். ரிசர்வேசன் கோச்சில் எப்படி இவ்வளவு பேர் ஏறினார்கள் என ஆச்சர்யமாக இருந்தது. சரி கொஞ்சம் நேரம் போகட்டும். பக்கத்திலிருந்து பார்த்து என்னாகப் போகிறது ?. என் சீட்டில் போய் உட்காரலாம் என்றால், அங்கிருந்து பார்க்க முடியாது. அதனால், ஏங்க என் சீட்டுல நீங்க உட்காருங்க என சீட்டைத் தாரை வார்த்து விட்டு மறுபடியும் கதவருகில் நின்றேன்.

இருள் சூழ ஆரம்பித்திருந்தது. அவள் சற்றே கண்ணயர்ந்திருந்தாள். அப்பொழுது, லேசாக அடித்த சாரல் தோய்ந்த ஈரக்காற்று, முகத்தில் பட, நின்று கொண்டிருந்த எனக்குப் பக்கத்தில், சூர்யா நின்று கொண்டு நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடுவது போல இருந்தது. இந்த பயணம், தொடர்ந்து கொண்டே இருக்காதா ?, அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க மாட்டோமா ? என்ற எண்ணம் ஏற்பட்டது.

ரயில் பெங்களுரை நெருங்கிக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அவள் இறங்கிச் சென்று விடுவாள் என்று ஏக்கமாக இருந்தது. இது என்ன பைத்தியக்காரத்தனமான சிந்தனைகள் ?. இன்னம் 10 நிமிடத்தில், நான் யாரோ, அவள் யாரோ. அவளை மறுமுறை தன் வாழ்நாளில் பார்ப்பது கூட உசிதமில்லை. அப்படி இருக்க, ஏன் இந்த மாதிரி மெல்லிய சோகம் மனதைக் கவ்வுகிறது ?. சரி இனியும் பொருப்பது சரியில்லை. கடைசி முறை அவளை அருகில் இருந்து பார்த்துவிட வேண்டும். என் பேக்கை எடுத்துக் கொண்டு, மெதுவாக அவளை நோக்கி நடந்தேன். நெருங்க நெருங்க இதயம் படபடக்கத் தொடங்கியது. 5 மணி நேரமாக பார்த்தவளை, இன்னமும் சில நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடியும். அவளும், தனது பேக்கை எடுத்துக் கொண்டிருந்தாள். அவளருகே வந்தாயிற்று.

என்னை யாரே தொடுவது போல இருந்தது. திருமப எத்தனிக்கும் போது, டேய்!! அருண் நீயும் இந்த ட்ரெயின்ல தான் வர்றியா ? இவ்வளவு நேரம் பார்க்கவேயில்லை எனக் குரல் கேட்டது. அட பெரியம்மா !! ”ஆஹா !! அவளுக்கு எதிர்த்தார்ப் போல உட்கார்ந்திருந்தது பெரியம்மாவா ? 5 மணி நேரம் வேஸ்டாப் போச்சே !!”.

இங்க உட்காருடா !! என்னடா இப்படி இளைச்சுப் போய்ட்ட ? இவள பார்த்திருக்கியா ? இவ ஆர்த்தி, நம்ம விமலா இருக்கா இல்ல ? என்னடா இப்படி முழிக்குற, விமலா நம்ம தூரத்து சொந்தம்டா உனக்கு சித்தியாகனும், இவ அவளோட பொண்ணு

ஆர்த்தி என்னைப்பார்த்துஹாய்என்றாள்.

4 பின்னூட்டங்கள்:

Krishna said...

ஆஹா !! அவளுக்கு எதிர்த்தார்ப் போல உட்கார்ந்திருந்தது பெரியம்மாவா ? 5 மணி நேரம் வேஸ்டாப் போச்சே !!”.

Many times it may happens

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க! பூங்கொத்து!

சந்தனமுல்லை said...

ஹஹ்ஹா!! நல்லாருயிருந்தது...நல்ல ஃப்ளோ!!

பின்னோக்கி said...

நன்றி Krishna, அன்புடன் அருணா (பூங்கொத்து க்கு நன்றி), சந்தனமுல்லை (ஃப்ளோ - உங்கள் பதிவுகளைப் படித்துக் கற்றுக்கொண்டது. உங்களுக்கு நன்றி)