ஜீலை, 2000 வது வருடம், ஜான் மற்றும் ரெட் மீன் பிடிப்பதற்காக, லூசியானவில் உள்ள கடலுக்கு சென்றார்கள். ஜான், ரெட்டிடம் வேலை பார்த்து வந்தான்.அன்று வீசிய புயலில் சிக்கி, அவர்கள் பயணம் செய்த போட் கவிழ்ந்ததில் ரெட் இறந்து போனார். போட் கவிழ்ந்து 15 மணி நேரம் கழித்து, ஜானை, ஒரு கப்பல் காப்பாற்றியது. கடந்த 15 மணி நேரங்களாக, மூழ்கிய படகின், மிச்சங்களை பிடித்தபடி மிதந்ததால் மிகவும் சோர்வுற்றிருந்தான்.
பிறகு போலீஸ் என்ன நடந்தது எனக் கேட்டபோது,
“நானும், ரெட்டும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நாங்கள் எதிர்பாராத வகையில் படகு, சூறாவளியில் மாட்டிக் கொண்டது. ரெட்டின் கால்களில், நாங்கள் வீசிய வலை மாட்டிக்கொண்டது. நான், அவரது கால்களை விடுவிக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன்.ஆனால், ரெட்டால் தப்பிக்க முடியவில்லை. படகு மூழ்கிவிட்டது. நான் படகின் பாகத்தைப் பிடித்தவாறு தப்பித்தேன்”.
போலீசார் உடனே ரெட்டை கடலில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மூன்று நாட்கள் கழித்து, ரெட்டின் உடல் நீரில் மிதந்தது. அதனை போஸ்மார்டம் செய்த டாக்டர்,
“ரெட்டின் கையில் 5 இடங்களில் சிராய்ப்பு இருக்கிறது. அது கத்தியினால் தாக்கப்பட்ட போது, தற்காத்துக் கொள்ளும் போது ஏற்பட்ட காயம் போல இருக்கிறது. மேலும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரெட் இறந்தது, இயற்கையான மரணம் கிடையாது”.
இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதும், ஜான், மேலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டான். அவன் மேல் அனைவருக்கும் சந்தேகம் வழுத்தது. ஒரு வேளை, ஜான் கொலை செய்திருப்பானோ ?.
ஜானை முதல் நாள் தொடர்ந்து 5 மணி நேரம் விசாரணை செய்தார்கள். அவன் சொன்னதையே திருப்பி, திருப்பி சொன்னான். நடந்தது ஒரு விபத்து. நான் கொல்லவில்லை.
அடுத்த நாள் 3 மணி நேரம் தொடர்ந்த விசாரணையின் முடிவில், ஜான், ரெட்டை கொன்றதாக ஒத்துக்கொண்டான். அந்த சிறு நகரத்தில் இருந்த அனைவரும் கொண்ட சந்தேகம் சரி என முடிவானது. ஆனால், என்ன நடந்தது ? எதற்காக கொன்றான் ?.
“படகு, புயலில் மாட்டி, மூழ்கும் நிலையில் இருந்தது. ஒரே ஒரு லைப்சேவிங் டியூப் தான் படகில் இருந்தது. நான் முதலில் அதை எடுக்க முயற்சித்தேன். அப்போது, ரெட்டும், தனக்கு வேண்டும் என்று சொல்லி என்னருகில் வந்தார். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் என்னிடம் இருந்த கத்தியால் அவரை தாக்கினேன். அப்படியும், தொடர்ந்து சண்டை போட்டதால் பக்கத்தில் இருந்த இரும்பு கழியால், அவரை தலையில் தாக்கினேன்” என போலீஸ் விசாரணையில் சொன்னான்.
ஜான் கைது செய்யப்பட்டான். அவன் சார்பில் வாதாட வந்த வக்கீல், ஒரு சந்தேகம் கொண்டார். லைப்சேவிங் டியூப் க்காக, அவன் கொலை செய்தான் என வைத்துக் கொண்டால், அவனைக் காப்பாற்றும் போது, அவன் லைப்சேவிங் டியூப் அணியவில்லை என்பது தெரிந்தது.அவனிடம் உண்மையைக் கூறுமாறு கேட்ட போது, அவன் “நான் கொலை செய்யவில்லை” என்றான்.
என்ன இவன் போலீசிடம் ஒத்துக் கொண்டான், இப்பொழுது இல்லை என்கிறான். இதில் எதோ பெரிய குழப்பம் இருக்கிறது. 8 மணி நேரம் போலீஸ் அவனை விசாரணை செய்த வீடியோ டேப், மன நல மருந்துவரிடம் அனுப்பப்பட்டது. ஏன் இவன் மாற்றி, மாற்றி சொல்கிறான் ?. டேப்பை பார்த்த டாக்டர் அதிர்ச்சி அடைந்தார். முதல் 5 மணி நேர விசாரணையில் அவன், தான் ரெட்டை கொல்லவில்லை என்று கூறினான். அதற்குள் போலீசார், போஸ்மார்டம் அறிக்கையை நம்பி, அவனை குற்றத்தை ஒப்புக் கொள்ள சொல்லி மிரட்டினார்கள். அவன் மிகவும் பயந்து போனது டேப்பில் தெரிந்தது. அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டால் விசாரணை முடிவுக்கு வந்துவிடும் என போலீசார் சொன்னதும், அடுத்த 3 மணி நேரத்தில், அவன் போலீஸ் என்ன சொன்னாலும் அதனை ஒத்துக்கொள்ளும் மன நிலை அடைந்தான்.
போலீஸ்: “போஸ்மார்டத்தில் ரெட் கத்தியால் குத்தப்பட்டு மரணம் அடைந்ததாக இருக்கு. உண்மையை சொல்லிவிடு”
ஜான் : “ஆமாம் நான் தான் கொன்றேன்”
போலீஸ்: “தலையில் பெரிய காயம் இருக்கிறது. நீ தானே அடித்தாய் ?”
ஜான் : “ஆமாம், அங்கு இருந்த இரும்புக்குழாயால் அடித்தேன்”
(படகில் அவன் கூறிய மாதிரி இரும்புக் குழாயே இருக்கவில்லை என பிறகு விசாரணையில் தெரிந்தது)
மேலும் மனநல மருத்துவர், ஜானைப் பற்றி பார்க்கையில், அவனது I.Q 70, அதாவது சராசரிக்கும் குறைவானது. அவனது நியாபகம் வைத்திருக்கும் திறன் குறைவு என கண்டறிந்தனர். போலீஸ், விசாரணை என்ற பெயரில் கொடுத்த டார்ச்சரில் இருந்து தப்பிக்க அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். இந்த மாதிரி விசாரணைக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்வது நடக்க கூடியது என இன்னொரு கேஸில் இருந்து அறிந்து கொண்டார்கள். மேலும், அமெரிக்க குற்றவியல் சட்டப்படி, பாதி விசாரணை நடக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையில் இருந்து வெளி நடப்பு செய்யலாம். ஆனால், ஜானுக்கு இந்த மாதிரி இருக்கும் சட்டம் பற்றி தெரியவிலலை. டாக்டர், ஜானிடம் நடத்தப்பட்ட விசாரணை முறையே தவறு என தன் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டார். ஒரு குற்றம் சாட்டப்பட்டவரை, என்ன நடந்தது என அறியும் வகையில் போலீஸ் விசாரணை நடக்க வேண்டும். ஆனால், போலீஸ், குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே விசாரணை செய்தது தவறு.(They expected a confession from him and not what happened there).
நீதிபதி மற்றும் ஜுரிகள், ஜானை நிரபராதி எனக் கூறி வழக்கிலிருந்து விடுவித்தனர்.
எல்லாம் சரி, ஆனால் அந்த போஸ்மார்டம் ரிப்போர்ட். அதை என்ன செய்வது ?
ரெட்டின் உடல் தண்ணீரில் மிதக்கும் போது, அதை கவனிக்காத சிறிய படகு, உடல் மேல் மோதியிருக்கலாம். கையில் இருந்த சிராய்ப்பு, உடலை தண்ணீரில் இருந்து மீட்கும் குழுவினரால் ஏற்பட்டிருக்கலாம். உடலை தண்ணீரில் இருந்து எடுத்த மீட்பு படகினர் இதை உறுதி செய்தனர். மேலும், ரெட்டின் உடலில் இருந்த காயங்கள், கடலில் விபத்தினால் உயிரிழப்பவர்களின், உடலில் ஏற்பட கூடிய பொதுவான காயங்கள் என கண்டுபிடித்தார்கள். மேலும் போஸ்மார்டம் செய்த டாக்டர், தடயவியலில், பயிற்சி பெற்றவர் இல்லை. அவர், கத்தியினால் உடலில் ஏற்பட்ட காயம்தானா என உறுதி செய்ய எந்த முயற்சியும் எடுக்காமல் மேலோட்டமாக ரிப்போர்ட் கொடுத்திருப்பது அறியப்பட்டது.
ஒரு நிரபராதி தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டான். இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது, தடயவியல் பயிற்சி பெற்ற மன நல மருத்துவர்கள்.
5 பின்னூட்டங்கள்:
நல்ல பகிர்வு நண்பரே! உண்மையில் தெரியப்படாத பல தகவல்களை அறிய முடிகிறது. மிக்க நன்றி. தொடரவும்!
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சென்ஷி.
நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்!!
very interesting....
கலக்குரீங்கப்பா......
Post a Comment