11 September 2009

சிட்டு குருவி பிடிப்பது எப்படி ? – 4 எளிய முறைகள்

(இது கொஞ்சம் பெரிய பதிவு. அதனால பொறுமையா படிங்க. குருவி புடிக்குறத்துக்கு எருமை பொறுமை வேணும்ங்க)


காக்கா புடிக்குறது எல்லாருக்கும் தெரியும். ஆனா குருவி புடிக்க (புடிச்சு, சிட்டு குருவி லேகியம் பண்றதுக்காக இல்லை. அத வளர்க்க ஆர்வம்) சின்ன வயசுல இருந்து நான் பண்ண முயற்சியெல்லாம் உங்களுக்கும் சொல்லி தர்றேன். இதெல்லாம் நான் உண்மையாலுமே செஞ்ச முயற்சி. காப்புரிமை எதுவும் இல்லை. அதுனால நீங்க, உங்க குழந்தைகள் ஃபாலோ பண்ணிக்கலாம்.
எனக்கு அப்ப 4 வயசு. நான் இருந்த வீட்டு கொல்லைப்புறத்துல துணி துவைக்க ஒரு கல்லு போட்டுருந்தாங்க. ஒரு நாள் எனக்கு யோசனை வந்துச்சு. நெல்லு கொஞ்சம் எடுத்து, அதோட சின்ன சின்ன கல்ல மிக்ஸ் பண்ணி, துணி துவைக்கற கல்லுல மேல வெச்சுட்டு, பள்ளிகூடத்துக்குப் போய்ட்டேன். குருவி நெல்ல சாப்பிடும் போது தெரியாம சின்ன கல்லயும் சாப்பிட்டு, அதோட தொண்டயில மாட்டிக்கும். அதுக்கு, நாம மீன் சாப்பிடும் போது முள்ளு தொண்டையில மாட்டுனா, அம்மா எதாவது பண்ணி எடுத்துவிடுவாங்களே, அதுமாதிரி குருவிக்கு தான் அம்மா அப்பா கிடையாதே, அதுனால குருவி அந்த இடத்துலயிருந்து பறக்க முடியாம மயங்கி கிடக்கும். நான் பள்ளிகூடத்துக்குப் போய்ட்டு வந்து அத எடுத்து வளர்க்கலாம்னு ஒரு ஆசை.

ஆனா ஒவ்வொரு நாளும் நான் வந்து பார்க்கும் போது, குருவி நெல்ல சாப்டுட்டு கல்ல மட்டும் மிச்சம் வைச்சுட்டு போயிருக்கும். இப்படியாக என்னோட முதல் குருவி புடிக்குற முயற்சி தோல்வியில் முடிந்தது .





சற்றும் மனம் தளரா விக்கிரமாதித்தன் மாதிரி அடுத்த முயற்சியில இறங்கினேன். இந்த தடவை சிம்பிளா குருவிய ஏமாத்த முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டு, சில கருவிகள் துணையோட குருவி (கருவி..குருவி...இதுவே ஒரு கவிதை மாதிரி இருக்குல்ல...அடுத்த பதிவுல யூஸ் பண்ணிக்குறேன்) புடிக்க பிளான் போட்டேன்.

குப்பைய எடுத்துப் போட என் அம்மா ஒரு அலுமினிய முறம் யூஸ் பண்ணுவாங்க. அத கடன் வாங்கி, அதோட வளையத்துல ஒரு நூல் கட்டிட்டேன். முறம் விழம இருக்க ஒரு விளக்குமாத்துக் குச்சிய ஆதாரமா வெச்சேன். அதே கல்லுல, முறத்த நிறுத்தி, அதுக்கு அடியில நெல் போட்டு, நூலை புடிச்சுக்கிட்டு, ஒரு செடி மறைவில் வெயிட் பண்ணுனேன். குருவி வந்தது, நெல்ல சாப்டுச்சு, டபக்னு நூலை இழுத்தேன். குருவி என்னை ஒரு மாதிரி பார்த்துக்கிட்டே, "உன் வேகம் என் வேகத்துக்கு மேட்ச் ஆகலை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லாம சொல்லி பறந்து போச்சு." எவ்வளவு நேரம் தான் குருவிக்கிட்ட தோத்துக்கிட்டே இருக்கறது சொல்லுங்க ?. அம்மா முறத்தை தேட என் இரண்டாம் முயற்சி தோல்வியடைந்தது.




அப்ப எனக்கு 9 வயசு. எங்க வீட்டு ஜன்னல் பக்கத்துல ஒரு அரிசி மூட்டை இருந்தது. அடிக்கடி ஒரு குருவி அந்த மூட்டைல இருந்த சின்ன ஓட்டை வழியா அரிசிய லவட்டிகிட்டுருந்துச்சு. நாம என்ன ரேஷன் கடையா நடத்துறோம், இலவச அரிசி போட ?. அடி மனசுல தூங்கிக்கிட்டு இருந்த குருவி புடிக்கிற ஆசை, கொட்டாவி விட்டுகிட்டே எழுந்தது.

ஒரு மாஸ்டர் பிளான் ரெடி. அதாவது, போர்வை ஒன்னு போத்திக்கிட்டு, அரிசி மூட்டைப்பக்கத்துல உட்கார வேண்டியது. எப்படி கொசு நம்மல கடிக்கும் போது கொஞ்சம் பொறுத்துக்கிட்டு, அடிப்பமோ அப்படியே, குருவிய 1 அல்லது 2 தடவை அரிசிய சாப்பிடவிட்டு, 3 வது தடவை, போர்வைய அதுமேல போட்டு லபக் பண்ணவேண்டியது. அப்படி நான் போர்வையால முக்காடு போட்டுகிட்டு அரிசி மூட்டைப்பக்கத்துல உட்கார்ந்து இருக்கும் போது, என் அண்ணன், அந்த ரூம் க்கு வந்து என்ன பார்த்து மிரள, நான் அவன்கிட்ட என் பிளான சொல்லி அப்ரூவல் வாங்குனேன்.

கிட்டத்தட்ட 1/2 மணி நேரம் கழிச்சு குருவி வந்துச்சு, தின்னுச்சு. நான் போர்வைய அதுக்கிட்ட கொண்டு போக, சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆகிடுச்சு. இந்த பிளானும் அம்பேல். 2, 3 தடவை ட்ரை பண்ணுனதுல எனக்கு மூச்சு முட்டுனதுதான் மிச்சம். அதுவும் இல்லாம டைமிங் சரியா வரலை. ஒரு விசிட்டுக்கும் அடுத்த விசிட்டுக்கும் குருவி ரொம்ப டைம் எடுத்து என் பொறுமைய சோதிச்சுது.



காந்தீய வழிமுறை எதுவும் வேலைக்காகலை !. சுபாஸ் சந்திரபோஸ் முறைய கையில எடுத்தேன். இவ்வளவு நாளா குருவிய கஷ்டப்படுத்தாம புடிக்கனும்னு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதைக் காயப்படுத்திதான் புடிக்கணும் போல இருக்கு. அதுக்கு நான் தேர்ந்தெடுத்த வெப்பன் பேரு “கவட்டை(உண்டிவில்/catapult)”.இதைப்பற்றி தெரிந்தவர்கள் அடுத்த பாராவுக்கு தாவலாம்.


கவட்டை என்பது “v" ஷேப்ல இருக்குற கட்டைய எடுத்து, அதோட இரு முனைகளையும் சேர்ப்பது போல சைக்கிள் டியூப் கட்டி செய்யப்படும் கருவி. சின்ன கல்ல எடுத்து நடுவுல வெச்சு, இழுத்து, “v" ஷேப் நடுவுல நாம அடிக்க நினைக்கிற பொருள் இருக்குற மாதிரி வைச்சு குறி பார்த்து விடனும். அவ்வளவுதான். இந்த கருவிய நாமளா செய்யறது கஷ்டம். அதுனால நரி குறவர்கள் இதை தயாரித்து 1 ரூபாய்க்கு விற்பார்கள்.அவங்ககிட்ட இருந்து வாங்கிக்கலாம்.

கவட்டைக்கு ஏற்ற கல் (துப்பாக்கிக்கு தோட்டா மாதிரி) சேர்த்து, டவுசர் பையில போட்டுகிட்டு, நான் குறி பார்க்காத பொருள்களே இல்லை (கொடுக்காப்பள்ளி, மரமேறும் ஒணான் - தரையில இருக்குற ஒணான விட, மரத்து மேல எற்ற ஒணான அடிக்குறது சுலபம், கரண்டு கம்பியில ஒட்கார்ந்திருக்கிற ரெட்டை வால் குருவி..இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்).

என் குறி எப்படின்ன, 2 அடி தூரத்துல யானைய நிக்க வெச்சு அடிக்க சொன்னா கூட குறி தவறும். இந்த லட்சணத்துல நான் எப்படி சிட்டு குருவிய அடிக்க முடியும்னு சொல்லுங்க. ரொம்ப நாள் முயற்சி பண்ணி தோல்விய என் அண்ணன்கிட்ட ஒத்துக்க வேண்டிய நிலை வந்தது. கடைசியா என் மானத்த காப்பாத்த ஒரு முடிவு பண்ணுனேன். அதுதான் பொய் சொல்றது. ஒரு கதை ரெடி பண்ணுனேன். அதாவது, நான் ஒரு குருவிய கவட்டைய வெச்சு தூரத்துல இருந்து அடிச்சுட்டேன். குருவியும் கீழே விழுந்தது. அதை எடுக்கப் போறத்துக்குள்ள, மணி வந்து கவ்வி எடுத்துகிட்டு போய்டுச்சு. மணி யாருன்னு கேட்குறவங்களுக்காக - அது நாங்க (தெரு) வளர்த்த நாய். இதுல கொடுமை என்னன்னா, எங்க வீட்டு மணி, வெறும் தயிர் சோறு மட்டும் தான் சாப்பிடும்.

ஒரு சுபயோக சுப தினத்துல இந்த கதைய என் அண்ணன்கிட்ட சொன்னேன். என் குறி வைக்கிற திறமை, அவன் அறியாததா என்ன ?. அதுனால சந்தேகப்பட்டு, சம்பவம் நடந்த இடத்த பார்வையிட்டான். மணி நாய் காலடித்தடம் மிஸ்ஸிங் !. குருவி ரத்தம் மிஸ்ஸிங் !. இந்த ரெண்டு ஆதாரத்த வெச்சு உண்மைய கண்டுபிடிச்சுட்டான். நான் உண்மையா ஒத்துக்கவே இல்லை. அப்புறம் என்ன கிண்டல் பண்ண இந்த ஒரு விஷயத்தையே எடுத்துக்கிட்டான். அது கூட பரவாயில்லை, மணி நாய் அதுக்கு அப்புறம் என்ன பார்த்த பார்வை இருக்கே !! தாங்கலை. “ஏன்டா !! நீ ஹீரோ ஆக நான் தான் கிடைச்சேனா ?”

இப்படியாக என் குருவி வேட்டை முடிவுக்கு வந்தது.

பிறகு வந்த நாட்களில், மின்விசிறியில் அடிபட்ட குருவி ஒன்று; என் நண்பன் குடுத்த, மரத்துல இருந்து கீழே விழுந்த குருவி ஒன்று, என இரண்டு குருவிகள் வளர்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. சோகம் என்னன்னா, குருவிங்க மேக்ஸிமம் ஒரு வாரத்துல, அது பட்ட காயத்தால செத்துப்போச்சு.
இப்பல்லாம் குருவிகளைப் பார்க்குறதே அபூர்வமா இருக்கு. இராசயன மருந்து கலந்த உணவு, நகரமயமாக்கல் மற்றும் செல் போன் அலைவரிசை, இதுனால எல்லாம், அதோட எண்ணிக்கை குறைந்து போயிடுச்சு.
கூண்டில் அடைப்பதை விட அவைகள் சுதந்திரமாக பறப்பதைப் பார்ப்பது தான் இன்பம். இப்பொழுதுதான் இது புரிகிறது.

12 பின்னூட்டங்கள்:

Jay said...

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இந்தச் சிட்டுக் குருவிகள் வீட்டில் கூடுகட்டி குடும்பமாக இருந்தன. முட்டை பொரிக்கும் காலத்தில் வீட்டிற்கு வரும். சில வேளைகளில் முந்திக்கொண்டு வெளியே குதிக்கும் குஞ்சுகளை தூக்கு கூட்டில் மறுபடி இட்ட ஞாபகங்களும் இருக்கு.

ஹி..ஹி... அடுத்த பதிவென்ன??? எருமை பிடிப்பது எப்படி??? ;)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

சிட்டு குருவி லேகியம் பண்றதுக்காக இல்லை. அத வளர்க்க ஆர்வம்
///
டபக்னு நூலை இழுத்தேன். குருவி என்னை ஒரு மாதிரி பார்த்துக்கிட்டே
///
சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆகிடுச்சு. இந்த பிளானும் அம்பேல்.
///
மணி நாய் அதுக்கு அப்புறம் என்ன பார்த்த பார்வை இருக்கே !! தாங்கலை. “ஏன்டா !! நீ ஹீரோ ஆக நான் தான் கிடைச்சேனா ?”
///

ரொம்ப ரசித்து படித்தேன்

Nathanjagk said...

நல்ல ந​கைச்சு​வை! சிட்டுக்குருவி ​லேகியம் வ​ரைக்கும் கூட ​போயிருக்கலாம்!! ஆனால் நீளம் ​கொஞ்சம் அதிக​மோ??

cheena (சீனா) said...

குருவி பிடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தாலும் விடா முயற்சி பாராட்டத்தக்கது. சுதந்திரப் பறவைகளைப் பார்க்கும் இன்பம் நீடிக்க நல்வாழ்த்துகள் - நல்ல நடை - அசைபோட்டு அனுபவித்து எழுதிய பதிவு சிட்டுக்குருவி பிடிப்பது எப்படி - அழகிய பதிவு

யாசவி said...

idear 2 is successful for me

Idea 4 success for few others.

Always Idea 2 success but u should be carefull to catch from Muram.

nice

:-)

பின்னோக்கி said...

Mayooresan நல்ல idea குடுத்தீர்கள் :-)

பின்னோக்கி said...

ஜெகநாதன் நான் நினைத்த அனைத்தையும் பதிவு செய்ய முயன்றதால் நீளமாகி விட்டது. இனி வரும் பதிவுகளை சிறியதாக்க முயல்கிறேன்.

பின்னோக்கி said...

யாசவி நன்று. நீங்களாவது பிடித்தீர்களே. ஆமாம் முறத்தினால் குருவிக்கு அடி பட வாய்ப்புகள் அதிகம். சிறு வயது. அதிகம் யோசிக்கவில்லை :-)

பின்னோக்கி said...

cheena (சீனா) தங்கள் பின்னோட்டங்கள் அனைத்திற்கும் நன்றி.

Eswari said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. படிக்க ஸ்வாரசியமாக இருந்துச்சு.

ஆனால் என்ன, சிட்டு குருவியை புடிக்கிற வழின்னு தலைப்பை போட்டுட்டு, எங்களை போலவே புடிக்க முடியாமல் உட்கார்ந்து இருக்கீங்க?

geethappriyan said...

நல்ல நடை , ரொம்ப் சுவாரஸ்யம் பாஸ்.

Anonymous said...

வயிறு வலிக்க சிரிப்பு...கடந்தகால நிகழ்வுகளும் கடந்த காலங்களையும் என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது